​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 6 August 2015

சித்தன் அருள் - 231 - "பெருமாளும் அடியேனும் - 15 - கலிபுருஷனின் சவால்!


"என்னைச் சரணடைந்தால் அவர்களைக் கடைசிவரை காப்பாற்றுவேன்" என்பது ஸ்ரீமன் நாராயணனின் அருள்வாக்கு!

இதனால் எல்லோருமே பெருமாளை நித்தம் நித்தம் சரண் அடைந்தனர். அவர்கள் அத்தனை பேருக்கும் வேங்கடவன் அடைக்கலம் தந்து கொண்டிருந்தார்.

"என்னுடைய பிரார்த்தனைக்கும் பலன் கிட்டுமா?" என்று கலிபுருஷனே பகவானிடம் கேட்டபொழுது, அங்கிருந்த எல்லோருக்கும் அதிர்ச்சி.

ஆனால், வேங்கடவன் மட்டும் மௌனமாக அதே சமயம் அர்த்தபுஷ்டியோடு சிரித்தார்.

"உன்னுடைய பிரார்த்தனை நல்லபடியாக இருந்தால் நிச்சயம் பலன் கிட்டும்" என்றார்.

"எது நல்லது, எது கெட்டது என்பதை எதிர்காலம்தான் முடிவு செய்யவேண்டும். இப்போது என் பிரார்த்தனை  என்பது இந்த "கலியுகம்" வெகு விரைவாக விருட்சம் போல் வளரவேண்டும். ஆத்திகம் அழிந்து நாத்திகம் செழிக்கவேண்டும்".

"பிறகு?"

"இந்த நாத்திகம் பூலோகம் எங்கும் பரவி வியாபித்து ஓங்கி வளர வேண்டும். அது மட்டுமல்ல என் ஆதிக்கம், இன்னும் பத்தாயிரம் ஆண்டுகளாக இருக்க வேண்டும். அதற்கு எந்த விதமான இடையூறும் இல்லாமல் தாங்கள்தான் அருள்பாலிக்க வேண்டும்" என்றான் கலிபுருஷன்.

பகவான் இதைக்கேட்டு தனக்குள் சிரித்துக் கொண்டார்.

"கலிபுருஷா! இதை உன்னைப் படைத்த பிரம்மாவிடம் கேட்கலாமே! எதற்காக என்னை நோக்கி வந்தாய்?" என்றார் பெருமாள்.

"தாங்கள் தானே கூறினீர்கள்! தங்களைச் சரண் அடைந்தால் கடைசிவரை காப்பாற்றுவதாக,  அதனால்தான் கேட்டேன்" என்றான்.

"நியாயம்! ஆனால் இது உன்னைத்தவிர மற்ற அனைவருக்கும் தான் பொருந்தும். இது உனக்கே தெரியுமே?" என்றார் பெருமாள்.

"தாங்கள் பகவான், அதுவும் என்னை அழிப்பதற்கென்றே புதிய அவதாரம் எடுத்திருக்கிறீர்கள். அப்படியானால் என்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டாமா?" என்றான் கலிபுருஷன்.

"ஓ! அப்படி சொல்கிறாயா? அப்படியானால் நல்ல எண்ணத்தோடு என்னை நோக்கியோ அல்லது பிரம்மாவை நோக்கியோ அல்லது சிவபெருமானை நோக்கியோ, கடுந்தவம் புரிந்திருக்க வேண்டும். அப்படியொன்றும் செய்யாமல் "வரம்" போல் கேட்கிறாயே, இது என்ன அநியாயம்?" என்றார் வேங்கடவன்.

"நியாயம், அநியாயத்தைப் பற்றிப் பேச வரவில்லை. தங்களிடம் என் வேண்டுகோளை வைத்துவிட்டேன்.  அவ்வளவுதான்!" என்றான் கலிபுருஷன்.

"கலிபுருஷா! நீ உன் கடமையை நல்லவிதமாக செய்தால் அதற்கேற்ற பலனை தருவேன். கெட்டவிதமாக நடந்து கொண்டால் அதன் பலனை பெறுவாய். இதற்குப் போய் என்னிடம் வருவானேன்?" என்றார்.

"வேங்கடநாதா! நான் கேட்டதற்கு சரியான பதிலைத் தரவில்லை. ஆகவே, நீங்கள் சொலவதொன்று, செய்வதொன்று எனத் தெரிந்து கொண்டேன். என் பலம் பற்றி நானே என் வாயால் கூறவேண்டாம். தாங்களே தெரிந்து கொண்டிருப்பீர்கள்" என்றான் கலிபுருஷன்.

"ஒ! மிக நன்றாகத் தெரியுமே! இதுவரை நான் எடுத்த ஒன்பது அவதாரங்களிலும் எனக்கு எதிராகச் செயல்பட்ட அசுரன் நீதான்." என்றார் பெருமாள்.

"இங்கேதான் தாங்கள் என்னைத் தவறாக எடை போட்டுவிடீர்கள்! தாங்கள் எடுத்த அவதாரங்கள் எல்லாம் அசுர ரூபத்தைக் கொண்ட என்னை வதம் செய்யத்தான் என்றாலும், இப்பொழுது நான் எடுத்திருக்கும் இந்தக் கலிபுருஷ அவதாரம் அந்த ஒன்பது அசுர பலத்தையும் கொண்டுதான் என்பதைத் தாங்கள் புரிந்து கொண்டீர்களோ என்னவே?" என்று மீசையை முறுக்கி, தோளில் தட்டி அலட்சியமாகச் சொன்னான், கலிபுருஷன்.

"அதற்கென்ன இப்போ?" என்றார் பெருமாள்.

"நான் ஒன்பது அசுர பலத்தைப் பெற்றிருக்கிறேன். ஆனால் தாங்கள் அந்த ஒன்பது அவதாரங்களையும் கொண்டு ஒரே அவதாரமாக இல்லை, இன்னும் சொல்லப் போனால்........"

"சொல்" என்றார் பெருமாள்.

"இப்பொழுது எடுத்த அவதாரம் கலி அவதாரம். மற்ற அவதாரத்திலாவது மிகப் பெரும் சக்தி இருந்தது. இப்பொழுது "வெறுங்கல்" அவதாரம்தான். ஒன்பது அவதாரங்களின் மொத்த சக்தியாக விளங்கவில்லை" என்று சொல்லி நகைத்தான் கலிபுருஷன்.

"கலிபுருஷா! உன்னால் தூண்டிவிடப்பட்ட ஹயக்ரீவர் இப்பொழுது வராஹமித்ரராக எம் பாதத்தில் பணிபுரிகிறார். இதுபோல் தான் உன்னால் வக்கிரமாக தூண்டிவிடப்பட்ட அத்தனை பேருமே என் காலடியில் தான் விழப் போகிறார்கள். கடைசியில் நீயும்தான் என் பாதத்தில் விழப்போகிறாய். ஏன் அவ்வளவு தூரத்திற்குப் போவானேன்? இப்பொழுதே என்னிடம் கருணை மனு போட்டு என் முன்னே நிற்கிறாய், வேறு என்ன வேண்டும்? இதைத்தவிர?" என்றார் வேங்கடவன்.

இதைக் கேட்டு வாய்விட்டு அட்டகாசமாகச் சிரித்தான் கலிபுருஷன்.

"தங்களை சோதிப்பதற்காகவே நான் இந்த நாடகமாடினேன். இனிமேல் பாருங்கள் என் விளையாட்டுகளை. அதில் ஜெயிக்கப் போவது நான்தான்" என்று ஆவேசத்துடன் சொன்ன கலிபுருஷன் அங்கிருந்து நகர்ந்தான்.

அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றனர்.

பெருமாளும், அகத்தியப் பெருமானும் அமைதியாக நின்றனர்.

"அனைத்தையும் அறிந்தவருக்கு கலக்கமேது" என்றபடி, பெருமாள் மட்டும் ஒரு புன்னகையுடன் கல் அவதாரமாக நின்றுகொண்டிருந்தார்.

சித்தன் அருள்................. தொடரும்!

3 comments:

 1. Om Agatheesaya Namaha: Om Sairam, Om Namo Narayana:

  Eagerly waiting for each week's post, Thanks to Ayya Karthikeyan and Ayya Aginilingam Arunachalam,

  ReplyDelete
 2. நன்றி பெருமாளே ....... ஓம் லோபமுத்ரா அகத்தீசாய நம:

  ReplyDelete
 3. நமஸ்காரம்

  திருப்பதியை பற்றி நிறைய தெரியாத விஷயங்கள் - நன்றி

  திருப்பதி சென்றால் கண்டிப்பாக மொட்டை போடா வேண்டுமா? பெருமாள் கோயில்களில் இவொன்றில் மட்டும் தான் மொட்டை போடுகிறோம்!!

  ஆழ்வார் தீர்த்தம், புஷ்கரணி தீர்த்தம், பாபநாசம் - இவைகளை பற்றி ஏதேனும் குறிப்புகள்?

  ReplyDelete