​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 20 August 2015

சித்தன் அருள் - 233 - "பெருமாளும் அடியேனும் - 17 - நாரதரும் கலிபுருஷனும்!


ஒரு அப்பாவி முனிவர் மீது பெரும் பாறையை உருட்டி கலிபுருஷன் கொல்ல முயற்சி செய்வதைக் கண்டு, நாரதருக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை.

சதாசர்வகாலமும் ஸ்ரீமன்நாராயணனையே தியானித்துக் கொண்டிருக்கும் இந்த முனிவருக்கு கலிபுருஷன் எதற்காக இப்படியொரு தொல்லையைக் கொடுத்துப் பழிவாங்க வேண்டும் என்பதற்கான காரணமும் புரியவில்லை.  திருமால் இதையெல்லாம் பார்த்துக் கொண்டு அமைதியாக இருப்பதன் காரணத்தையும் நாரதர் தெரிந்து கொள்ள முடியாது போயிற்று.  இருப்பினும் தன் கண் முன் ஒரு கொடிய பாதகச் செயல் நடப்பதை எப்பாடு பட்டேனும் தடுத்தே ஆகவேண்டும், என்று எண்ணினார்.

உடனே தன்னுடைய தெய்வீக பலத்தால், மலையிலிருந்து வேகமாக வரும் பாறையை அப்படியே தடுத்து நிறுத்தினார்.  நாரதரின் தெய்வீக சக்தியால், ஒரு சிறு மலைபோல் காணப்பட்ட அந்தப் பெரும் பாறை விழாமல் அப்படியே அந்தரத்தில் அசையாமல் நின்றது.

இதைக் கண்டு கலிபுருஷனுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.

"யாரது இந்தச் செயலைச் செய்தது?" என்று ஆக்ரோஷத்தோடு, பெருங்கோபம் கொண்டு இங்கும் அங்கும் தேடினான்.

அப்போது, மறைந்த இடத்திலிருந்து நாரதர் வெளியே வந்தார்.

நாரதரைக் கண்டதும், "இவருக்கு இங்கென்ன வேலை? ஒரு வேளை வேங்கடவனே நாரதரை இங்கு அனுப்பி இப்படிப்பட்ட திருவிளையாடலை செய்யச் சொல்லி இருப்பாரோ?" என்று சந்தேகப்பட்டான் கலிபுருஷன்.

கலிபுருஷன் எப்படி இருப்பான் என்று நாரதர் எண்ணியிருந்தாரோ அதைவிடப் பன்மடங்கு அதர்மத்தின் மொத்த உருவமாக இருக்கிறான் என்று அவனைக் கண்டதும் நாரதர், புரிந்து கொண்டார்.

"இதெல்லாம், நாரதருக்கு எதற்கு?" என்று நேரடியாகவே கலிபுருஷன் நாரதரிடம் கேட்டான்.

"ஏன்? இது தர்மம்தானே?" என்றார் நாரதர்.

"எது தர்மம், எது அதர்மம் என்பது எனக்குத் தெரியும். என் விஷயத்தில் எப்படி நீங்கள் தலையிடலாம்?" என்றான் கலிபுருஷன்.

"எது உன் விஷயம்? ஓர் அப்பாவி முனிவரை தண்ணீரில் அமுக்கிக் கொல்ல முயன்றாய். அது முடியாத பொழுது பாறையை உருட்டிக் கொல்ல முயற்சிப்பது, இது உன் விஷயமாக இருந்தால், வேங்கடவனின் பக்தனைக் காப்பாற்றுவது என் பொறுப்பு" என்றார் நாரதர்.

"நாரதரின் இந்த செய்கை எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது?"என்றான் கலிபுருஷன்.

"ஏன்?" என்றார் நாரதர்.

"பொதுவாக, கலக்கம் ஏற்படுத்துவது என்பது நாரதருக்குக் கைவந்த கலை. அதைச் செய்து கொண்டிருக்கும் நாரதர், முதன் முறையாக தன் தெய்வீக சக்தியால் ஓர் உயிரைக் காப்பாற்றுகிறார்............ என்றால் அது இதுதான் முதல் முறை என்று எண்ணுகிறேன். இல்லையா நாரதரே!" என்றான் கலிபுருஷன் கிண்டலாக.

"நீ சொன்னதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் ஒன்றை மட்டும் மறந்துவிட்டாய். நான் கலக்கம் செய்தாலும் அது நன்மையில்தான் முடியும் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. அது உனக்கு மட்டும் தெரியாமல் போனதுதான் எனக்கு ஆச்சரியம்" என்று பதில் சொன்னார் நாரதர்.

"ம்ம்! இன்னும் என்ன நடக்கப் போகிறதோ! யார் அறிவார்?" என்றான் கலிபுருஷன்.

"ஆமாம்........... ஆமாம், இது உன்னுடைய சாம்ராஜ்ய காலம், ஏன் அதை கலிகாலம் என்று கூடச்சொல்லலாம். நீ என்னென்ன அநீதிகளை செய்ய நினைக்கிறாயோ, அத்தனைக்கும் கலி உருவாக அவதாரம் எடுத்திருக்கும் வேங்கடவன் தக்க பதிலடி கொடுக்கப் போகிறார், என்பதை மட்டும் மறந்து விடாதே கலிபுருஷா" என்று எச்சரிக்கை விடுத்தார் நாரதர்.

"அதிருக்கட்டும் நாரதரே! இப்போது அந்தரத்தில் தொங்கும் பாறாங்கல்லை என் அசுரபலத்தால், அந்த முனிவரின் தலை மீது விழச்செய்யப் போகிறேன், முடிந்தால் தடுத்துப் பாரும்" என்று சவால் விட்டான் கலிபுருஷன்.

"வேண்டாம்! கலிபுருஷா! அந்த முனிவரால் உனக்கென்ன கெடுதல்?" என்றார் நாரதர்.

"நிறையச் சொல்லலாம். அவர் சதா சர்வகாலமும் ஸ்ரீமன்நாராயணனைத் தியானம் செய்து கொண்டிருக்கிறார்!" என்றான் கலிபுருஷன்.

"இதில் என்ன தவறு இருக்கிறது?" என்றார் நாரதர்.

"கூடாது. இந்த முனிவர் இப்படிச் செய்வதால் இவரைத் தலைமையாகக் கொண்டு பல ஆயிரக்கணக்கான முனிவர்கள் இங்கு வந்து ஜபிக்கிறார்கள்."

"நல்லதுதானே! இந்த பூமி புண்ணிய பூமியாக மாறுகிறது என்பது சந்தோஷம்தானே!" என்றார் நாரதர்.

"இல்லை எனக்கு இதில் உடன்பாடு இல்லை. இதுவரை "துதி" செய்து வந்தது போதும். இனிமேல் இந்த பூலோகம் என்னுடைய பூமி. நான்தான் சர்வாதிகாரி. என் சொற்படிதான் இங்குள்ள அனைவரும் நடக்கவேண்டும். இதற்கு முதலாவதாக யாரும் "பக்தியோடு" இருக்கக் கூடாது. அப்படி யார் பக்தியோடு தினம் தியானம் செய்கிறார்களோ, அவர்கள் உயிரை எடுப்பேன்" என்றான் கலிபுருஷன்.

"இது பாபமில்லையா?" என்றார் நாரதர்.

"நாரதரரே! இனிமேல் நான் செய்யும் ஒவ்வொரு செயலும் உங்கள் கண்ணுக்குப் பாபமாகத் தெரியும். இந்த முனிவரை பாறையால் கொல்வதைப் பார்த்து இங்குள்ள மற்ற முனிவர்களும் பயந்து நடுங்க வேண்டும். அதோடு பக்தியை அறவே மறந்து முனிவர்கள் ரிஷிகள் பொதுமக்கள் உட்பட, அனைவரும் பகுத்தறிவுவாதிகளாக மாற வேண்டும்" என்றான் கலிபுருஷன்.

"பகுத்தறிவுவாதி என்றால் எப்படி?"

"நாரதரே! உமக்கு தெரியாததா? இருந்தாலும் சொல்கிறேன். கேளும். யாரும் இறைவழிபாடு செய்யக் கூடாது. கோயிலுக்குச் செல்லக்கூடாது. தர்மம், சாஸ்திரம், நியாயம், நேர்மை, உண்மை என்று சொல்லுகிற பாதையை அறவே மறந்து அவரவர்கள் தங்கள் இஷ்டப்படி சுதந்திரமாகச் செயல்பட வேண்டும்."

"இதென்ன அநியாயமாக இருக்கிறதே!" என்றார் நாரதர்.

"என்ன அதற்குள் வாயைப் பிளக்கிறீர்? இன்னும் நிறைய இருக்கிறது. அதையும் சொல்லிவிடுவேன். ஆனால்...."

"என்ன ஆனால்..?" என்றார் நாரதர்.

"அதை நீங்கள் எல்லோரிடமும் சொல்லி எழுச்சியை உண்டாக்கி என் திட்டத்தைக் கெடுத்துவிடுவீர்" என்றான் கலிபுருஷன்.

"நாராயணா! நாராயணா! எனக்கெதற்கு வீண் பழி? நீ என்னை நம்பி தாராளமாகச் சொல்லலாம்" என்றார் நாரதர்.

"நாரதரே! உம்மை நான் அவ்வளவு எளிதில் நம்பி விடுவேனா? என்ன இருந்தாலும், நீரோ நாராயணன் பக்தர். அதுமட்டுமல்ல. எனக்கெதிராக சதியும் செய்திருக்கிறீர், உங்களை எப்படி நம்புவேன்?" என்றான் கலிபுருஷன்.

"கலிபுருஷா இன்னும் பல ஆயிரம் வருஷங்கள் இந்த பூலோகம் உன் கையால் சிதறி பக்தியை மறந்து அநியாயங்களின் வடிவமாகத் திகழப் போகிறது. உன்னை அசைக்க யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் முன் வர மாட்டார்கள் என்பதும் எனக்கு இப்போது கொஞ்சம் கொஞ்சமாகத் தெரியவருகிறது. அப்படியிருக்க நீ என்னென்ன திட்டங்கள் வைத்திருக்கிறாயோ. யாரையெல்லாம் எப்படி மனசால், புத்தியால், செய்கையால் கெடுக்கப் போகிறாயோ, நானறியேன். ஆனாலும் இதையெல்லாம் தெரிந்த திருமால் உன்னை அந்த அளவுக்கு விட்டு வைப்பாரா? என்பதுதான் எனக்கேற்பட்ட சந்தேகம்" என்றார் நாரதர்.

சித்தன் அருள்............... தொடரும்!

No comments:

Post a Comment