"நாரதரே! இப்பொழுதே உம் கலகத்தை ஆரம்பித்து விட்டீர்களே! இனி நீர் என்ன சொன்னாலும் என் காதில் விழாது. அதே சமயம் என்னை வெற்றி பெற யார் வந்தாலும் நடக்காது" என்ற கலிபுருஷன்
"அந்தரத்தில் நிறுத்திய அந்தப் பாறையை நான் இப்போது கீழே தள்ளப்போகிறேன். உங்களது சக்தியால் முடிந்தால் அந்த முனிவரைக் காப்பாற்றிக் கொள்ளும்" என்றான்.
"முனிவரே! முனிவரே! என் பக்கத்தில் வாரும்" என்று அங்கே ஜபம் செய்து கொண்டிருந்த முனிவரை நாரதர் அழைத்தார். ஆனால் அவரோ "கோவிந்தா! கோவிந்தா!" என்று த்யானித்துக் கொண்டிருந்தாரே தவிர நாரத முனியின் குரலுக்குச் செவி சாய்த்துக் கண் திறக்கவும் இல்லை, பதைபதைத்துப் எழுந்திருக்கவும் இல்லை.
கலிபுருஷன் அட்டகாசமாகச் சிரித்தான்.
கடுமையான முயற்சியின் பேரில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த பாறையை அந்த முனிவரை நோக்கி உருட்டிவிட்டான், கலிபுருஷன்.
மிகப் பயங்கரமான சப்தத்தோடு அந்தப் பாறாங்கல் கோனேரிக் கரையில் விழுந்து நொறுங்கியது. அப்போது கிளம்பிய புழுதி கோனேரிக் கரையையே மறைத்தது. இதனால் கோனேரிக் கரையெல்லாம் நீர் பொங்கி எழுந்து, நதிக்கரையோரம் அமைந்திருந்த பர்ணசாலைகள், குடிசைகள், நந்தவனங்கள், அத்தனையும் அழிந்தது, தூள் தூளானது.
இதைக் கண்டு அங்கு தபசு செய்து கொண்டிருந்த அத்தனை முனிவர்களும் ஏதோ ஒரு பெரும் பிரளயம்தான் வந்துவிட்டதோ என்று நடுங்கி, பதறியடித்துக் கொண்டு அங்குமிங்கும் ஓடினார்கள்.
சில நாழிகையில் எல்லாம் அடங்கியது.
ஒருவருக்கொருவர் என்ன நடந்தது என்று தெரியாமல், சைகையால் பேசிக்கொண்ட பொழுது அவர்கள் எல்லோரும் கேட்கும் வண்ணம் கலிபுருஷன் கர்ணகடூரமாகச் சொன்னான்.
"முனிபுங்கவர்களே! இப்போது நடந்தது கண்டே மிரண்டு போயிருக்கிறீர்களே! இது என்னுடைய ஆரம்ப விளையாட்டு. என் மொத்த விளையாட்டும் காண இன்னும் பல ஆயிர வருஷங்கள் ஆகும். நீங்கள் அத்தனை பேரும் இங்கிருந்து ஓடிப்போங்கள்! இனிமேல் யாரும் இங்கிருந்து தவம் புரிய அனுமதிக்கமாட்டேன். அப்படி இங்கு இருக்க விரும்பினால், இனிமேல் "கலிபுருஷாய நமஹ!" என்றுதான் த்யானம் செய்து என்னை ஜபிக்கவேண்டும். இதைத் தவிர வேறு எந்த இறை த்யானத்தை ஜெபித்தாலும் அவர்கள் அனைவருக்கும், அதோ அந்த வட்டப்பாறையில், பல நூறு ஆண்டுகளாகத் தினம் திருமலையில் ஜபித்துக் கொண்டிருந்தானே, உங்கள் ரிஷிகளின் தலைவன், அவனுக்கு நேர்ந்த கதிதான் உங்களுக்கும். இது என்னுடைய முதல் எச்சரிக்கை" என்று முழங்கினான்.
அந்த வட்டப்பாறையில் மௌனமாக அமர்ந்திருந்த தலையாய முனிவரைக் காணவில்லை. வட்டப்பாறையும் நொருங்கிக் கிடந்தது. இதைக் கண்டு நாரதர் உட்பட அத்தனை முனிவர்களும் பீதி அடைந்தனர்.
அப்பொழுது.........
நாரதருக்கு ஒரு நாழிகை ஒன்றுமே ஓடவில்லை. பயந்து நடுங்கியபடி நாராயணனை வேண்டி, பின்பு தன் கண்ணை மெல்லத் திறந்தார். எதிரே கலிபுருஷன் ஏகப்பட்ட திமிர் கலந்த சிரிப்போடு கேட்டான்.
"என்ன நாரதரே! எங்கே உங்கள் முனிவர்?"
நாரதர் இதற்கு பதில் சொல்லவில்லை.
"அநியாயமாக இவன் ஒரு உயிரை கொன்றிருக்கிறான். இவனை என்ன செய்வது?" என்று மனமும், உடலும் வெம்பிப்போய் வெறுத்துப் போனார்.
"என்ன நாரதரே! என் பலத்தைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. பாவம் அந்த முனிவரின் உயிரை நீங்களாவது காப்பாற்றி இருக்கலாம். ம்ம். உங்களுக்கு அந்த சக்தி இல்லை போலும். சரி, விட்டுத் தள்ளுங்கள். நீங்கள் எல்லாம் தெய்வம் என்று சொல்கிறீர்களே, அந்த வேங்கடவனாவது சட்டென்று வந்து தன் பக்தனை காப்பாற்றி இருக்கலாம். பாவம் அவர்தான் கல்லாக இருக்கிறாரே. பின் அவர் எப்படி வந்து காப்பாற்ற முடியும்?" என்று கொக்கரித்தான்.
"கலிபுருஷா! நீ செய்தது மகா பிரம்மஹத்தி தோஷம் தெரியுமா?" என்றார் நாரதர்.
"எப்படி? எப்படி? எப்படி?" என்றான்.
"அநியாயமாக ஒரு தவசீலரின் உயிரை கொன்றிருக்கிறாய். இறக்கும் பொழுது அவர் என்ன சாபம் இட்டாலும் அது உன்னை அடியோடு நசுக்கி விடும் தெரியுமா?"
"அப்படியா! கேட்கவே ரொம்ப சுவாரசியமாக இருக்கிறதே! இன்னொருமுறை சொல்லும். அதாவது அந்த பூலோக தபசி, பாறை விழுந்து நசுங்கி உயிரை விடும் பொழுது எனக்கு சாபம் இடுவாராம். அந்த சாபம் என்னை அடியோடு நசுக்கி விடுமாம். பேஷ்! பேஷ்! அது சரி! அவர் தான் நசுங்கி, ஜாலத்தோடு ஜலமாய் காணாமல் போய்விட்டாரே! இதற்கு, என்ன பதிலை சொல்லப் போகிறீர்!" என்றான் கலிபுருஷன்.
"கலிபுருஷா! அநியாயம் செய்பவனை கொல்வது நல்லது. தர்மத்தை கொன்றவனுக்கு தெய்வம் தண்டனை கொடுத்திருக்கிறது. போயும் போயும் ஒரு அப்பாவி தவசியிடமா உன் வீரத்தை காட்ட வேண்டும்? இது உனக்கே கேவலமாக இல்லை?" என்றார் நாரதர்.
"இனிமேல், என் வேலையே இதுதானே. அப்பாவிகளைத்தான் நான் கொல்லுவேன். குறிப்பாக யார் யார் வேங்கடவனை நித்தம் நித்தம் தொழுகிறார்களோ, அவர்களை, அவர்கள் குடும்பத்தினரை, வம்சத்தை, வாரிசுகளை, சுக்கு நூறாக்குவேன். வேண்டுமெனில் திருமால் வந்து அவர்களை காப்பாற்றட்டுமே. நானா குறுக்கே நிற்கிறேன்?" என்று மீண்டும் முழங்கினான்.
பின்னர் சிறிது நேரம் கழித்து " உயிர் போனாலும் உடலாவது மிஞ்சும் என்று பார்த்தேன். உடலும் கிடைக்கவில்லை. என் பலத்தை இப்பொழுதாவது புரிந்து கொண்டீர்களா நாரதரே!" என்று அட்டகாசமாக சிரித்துச் சொன்னான்.
"இது பலமல்ல கலிபுருஷா! பிரம்மஹத்தி தோஷத்தின் முதல் பகுதி. அநியாயமாக ஒரு தவசீலரை கொன்றுவிட்டாய். இந்த பாபம் உன்னை சும்மாவிடாது" என்றார் நாரதர்.
"என்ன நாரதரே! எனக்கே சாபமிடுகிறீர்! ஏன் உங்கள் தெய்வீக சக்தியால் அந்த முனிவரை காப்பாற்றி இருக்கலாமே!" என்றான்.
"என்னுடைய சக்தி அவரை காப்பாற்றவில்லை என்றாலும், அவருடைய கடும்தவம் முனிவரை காப்பாற்றி இருக்கும். உண்மையிலேயே முனிவர் மரணமடைந்திருந்தால், அவரது பூத உடல் இங்கிருந்திருக்கும். இப்போது உடலும் இல்லை என்பதால், அவர் உயிரோடுதான் இருக்கிறார் என்று அர்த்தம்" என்ற நாரதர் தொடர்ந்து கூறினார்.
"இனிமேல் உன்னோடு எனகென்ன பேச்சு? என்னை இங்கு அனுப்பிய வேங்கடவனிடமே நேரிடையாக சென்று உனது அக்ரமமான செயலைச் சொல்லிவிடுகிறேன். அப்புறம் உன் பாடு, பெருமாள் பாடு. எனக்கு எதற்கு பொல்லாப்பு" என்று முடித்துவிட்டு திருமலைக்கு ஏகினார்.
நாரதர் போனதை வேடிக்கை பார்த்த கலிபுருஷன், அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தான்.
சித்தன் அருள்................ தொடரும்!
Sitthan Arul Oviyar Saravanan Palanisamy avargalin blog parkavum http://arulgnanajyothi.blogspot.com/2015/08/masters-path.html
ReplyDeleteOm Agastheesaya Namaha !!!
ReplyDeleteOm Agastheesaya Namaha !!!
Om Agastheesaya Namaha !!!