​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 30 July 2015

சித்தன் அருள் - 230 - "பெருமாளும் அடியேனும் - 14 - பெருமாளின் விளக்கம்!


மேலும் பெருமாள் தொடர்ந்து கூறலானார். அனைவரும் மிக ஆச்சரியமாக கவனிக்கத் தொடங்கினர்.

"கலிபுருஷனின் அவதாரங்கள் துர்தேவதைகளாக மாறி பெரும் படையோடு என்னிடம் மோதும். அப்போதுதான், யான் "கல்கி" அவதாரம் எடுப்பேன்." என்றார்.

"அப்படியென்றால், இன்னும் எத்தனையோ ஆண்டுகள் ஆகும் அல்லவா?" என்றார் அகத்தியப் பெருமான்.

"சொல்ல முடியாது. நான் கல்கி அவதாரம் எடுப்பதும், எடுக்காமலிருப்பதும் கலிபுருஷன் கையில்தான் இருக்கிறது" என்று வேங்கடவன் கூறிவிட்டு அமைதியானார்.

அகஸ்தியர் பவ்யமாக ஒரு கேள்வியை திருமலயானிடம் கேட்டார்.

"எல்லாரையும் விட்டுவிட்டு வராஹரை மட்டும் ஏன் உங்கள் பக்கத்தில் வைத்துக் கொண்டீர்கள்?

"இன்னொன்று, ஆதிசேஷனின் மற்ற தலைகள் எல்லாம் எப்படி பாதுகாப்பாக இம்மலையைச் சுற்றி அமர்ந்திருக்கின்றன? என்பதை தங்கள் திருவாய் மூலம் தெரிந்து கொள்ள விருப்பமாக இருக்கிறது" என்றார் அகத்தியர்.

திருமால் கருணையுடன் பார்த்துவிட்டு "அகஸ்தியருக்கு எல்லாம் தெரியும். இருந்தாலும் ஒன்றும் தெரியாத மாதிரி கேட்கிறார். இந்த பதில் அகஸ்தியருக்கு மட்டுமில்லை, எல்லோருக்கும்தான்" என்று ஆரம்பித்துச் சொல்லலானார்.

"எங்கு ஞானம் இருக்கிறதோ அங்கு பக்தி இருக்கும். பக்தி இருக்கும் இடத்தில் பண்பு, பாசம், இறக்கம், கருணை இவை எல்லாம் குடிவரும். இப்படிப்பட்ட இடத்தில் தான் தெய்வ ஒளி வீசும். திருமலையில் என்னைத் தேடி வருபவர்களுக்கு பக்தி மட்டும் இருந்தால் போதும் என்றில்லாமல், அவர்களுக்கு ஞானமும் வேண்டும்."

"அந்த "ஞானம்" வராஹரிடமிருந்து கிடைக்கட்டும் என்பதற்காகத்தான் வராஹரை என்பக்கம் நிறுத்தி வைத்துக் கொண்டேன்.  வேகத்திற்கு குதிரை ஒரு உதாரணம். சிறுத்தையைக் கூட வேகத்திற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஆனால், அது ஒரு கொடிய மிருகம். அதைப் பார்க்க ஆசைப்படலாம். ஆனால், அதனோடு பழக முடியாது. அது அப்படிப்பட்ட குணம் கொண்டது. அதே சமயம் "வராஹர்" குதிரை முகத்தோடு கூடிய அவதாரம். எதையும் வேகமாக புத்தியில் பற்றிக் கொள்ள வேண்டும், என்பதற்காகத்தான், குதிரை முகத்தோடு கூடிய வராஹரை ஞான சொரூபமாக பக்கத்தில் வைத்துக் கொண்டேன்."

"கலி புருஷன் தொந்தரவு  இல்லாமல் வாழ வேண்டும் என்றால், அவர்கள் என்னைத் தஞ்சமடைந்தால் போதும். இதற்கு "பக்தி" மாத்திரம் இருந்தால் போதும். அவர்களை நான் காப்பேன். பக்தியோடு ஞானமும் பெற்றவர்கள் யாராலும், எத்தகைய சூழ்நிலையினாலும் பாதிக்கப்பட மாட்டார்கள். எனவே பக்திக்கும், ஞானத்திற்கும் அடையாளம்தான் இந்த திருமலை தரிசனம்" என்று விளக்கம் கொடுத்தார் வேங்கடவன்.

"இதுவரை தெரிந்து கொண்டதை விட இனிமேல்தான் நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்." என்று மேலும் தொடரலானார் பெருமாள்.

"இந்த அற்புதமான இயற்கை எழில் நிறைந்த பூலோகத்தில், திருமலையாக நிற்கின்ற ஆதிசேஷனின் தலைப் பகுதியைத்தான் நான் இருப்பிடமாகக் கொண்டிருக்கிறேன். ஆதிசேஷனின் உடல் அளவு மிகவும் பெரிது. அதனை இங்கேயே சுருட்டிக் கொண்டிருக்க இயலாது. அதன் உடல் தான் இங்கிருந்து காத தூரத்தில் காணப்படும் ஸ்ரீசைலம் என்னும் புனித இடத்தில் காணப்படுகிறது.

முந்தய அவதாரத்தில் ஹிரண்ய கசிபுவைக் கொன்ற "அஹோபிலம்" என்னும் இடத்தைத்தான் ஆதிசேஷனது  வால் பகுதியெனக் கொள்க. யாரொருவர் அஹோபிலம் நோக்கிச் சென்று அங்குள்ள நரசிம்மமூர்த்தியை தரிசனம் செய்தாலும், ஸ்ரீசைலத்திற்குச் சென்று அங்குள்ள இறைவனை மனதாரப் பிரார்த்தனை செய்தாலும், அத்தனையும் எனக்குச் செய்ததாகவே ஏற்றுக் கொண்டு அவர்களின் பிரார்த்தனைகளுக்கு உயிர் கொடுத்துக் காப்பாற்றுவோம். திருமலைக்கு வர இயலாதவர்கள் ஆங்கங்கே தரிசனம் செய்து, பிரார்த்தனை செய்து கொண்டால் அவர்களின் பிரார்த்தனைகளுக்கும் யாம் அருளுவோம்" என்று திருவாய் மலர்ந்து அருளினார்.

"அப்படியென்றால் என் பிரார்த்தனைக்கும் பலன் கிட்டுமா?" என்று திடீரென்று ஒரு குரல் கேட்டது.

யார் இத்தனை தைரியமாக பெருமாள் பேசும் பொழுது மரியாதை இன்றி குறுக்கிட்டது என்று அனைவரும் திரும்பி பார்த்தால்......................

பார்த்தவர்கள் அனைவரும் ஒரு வினாடியில் அங்கு கண்ட காட்சியில், அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

அங்கே ....................  கலிபுருஷன் நின்று கொண்டிருந்தான்.

சித்தன் அருள்....................... தொடரும்!

1 comment: