​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 16 July 2015

சித்தன் அருள் - 228 - "பெருமாளும் அடியேனும் - 12 - ஹயக்ரீவர் தெளிவு பெறுதல்!


ஹயக்ரீவர் வரும் வேகத்தை அறிந்து, சட்டென்று பூமிக்குள் தன்னை இழுத்துக் கொண்டார், பெருமாள்.

இதைச் சற்றும் எதிர்பார்க்காத ஹயக்ரீவர், எதிர்பாராத விதமாக மலை உச்சியிலிருந்து தலைக்குப்புற கோனேரி நதிப்ரவாகத்தில் விழுந்து கொண்டிருக்கும் பொழுதுதான், சில நாழிகை முன்பு கலைவாணி சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.

"எப்பொழுதுதாவது என் உதவி தேவைப்பட்டால் வராஹன் அழைக்கிறேன் என்று மூன்று முறை அழைத்தால் ஓடி வந்து உதவுகிறேன்" என்று சரஸ்வதி தேவி சொன்னது ஹயக்ரீவருக்கு நினைவுக்கு வரவே, "வராஹன் அழைக்கிறேன்! தேவி சரஸ்வதியே வருக" என்று மூன்று முறை அழைத்தார்.

அடுத்த நாழிகைக்குள்,

கோனேரிக்கரையின் நதியில் விழுந்து கால்கள் ஒடிந்து விழவேண்டிய ஹயக்ரீவரை சரஸ்வதிதேவி தாங்கிக் கொண்டாள். ஹயக்ரீவர் பெரும் ஆபத்திலிருந்து தப்பினார்.

நன்றாக வளர்ந்திருந்த பசும்புல் செடியில் ஹயக்ரீவர் மயக்க நிலையில் கண் துயின்று கொண்டிருக்க, அகஸ்தியர் வெண்சாமரத்தால் அவருக்கு வீச, சரஸ்வதிதேவி கருணை பொங்கும் உள்ளத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள். கலிபுருஷன், அங்கே காணப்படவில்லை.

சில நாழிகை கழிந்தது.

பட்சிகள் சப்தத்தினாலும் அருகிலிருக்கும் பாபநாசம் மலையிலிருந்து தெள்ளிய நீர் வீழ்ச்சி அமைதியாக பூமாதேவியின் பாதங்களை நோக்கி மகிழ்ச்சியோடு நீர்த்திவலைகளை அங்குமிங்கும் தெளித்துக் கொண்டு சென்றதால், அவற்றின் குளிர்ச்சி ஹயக்ரீவரின் முகத்தில் பட்டுச் சென்றது.

மயங்கி கிடந்த ஹயக்ரீவர் மெல்ல கண் திறந்தார்.

எதிரே, கருணை பொங்கும் குரு பகவான் ஸ்தானத்தில் அன்னை சரஸ்வதி தேவி அமர்ந்திருக்க, அகஸ்தியர் சாமரம் வீசுவதையும், சித்தர்கள், முனிவர்கள், ராஜ ரிஷிகள் சுற்றிலும் அமர்ந்து மந்திரங்களை மெல்லிய குரலில் தனக்காக ஜெபிப்பதையும் கேட்டு, துள்ளி எழுந்தார்.

"ஹயக்ரீவரே அவசரப்படாதீர்கள். அமைதியாக அமருங்கள். தங்களுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை" என்றாள் கலைவாணி.

ஹயக்ரீவருக்கு இப்பொழுதுதான் நடந்தது எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக ஞாபகத்திற்கு வந்தது.

கலிபுருஷன் பேச்சைக் கேட்டிருந்தால் தன் கதி என்ன? என்று யோசித்துப் பார்த்த ஹயக்ரீவருக்கு, அன்னை கலைவாணி மீதும், அகஸ்தியப் பெருமான் மீதும் அளவற்ற மரியாதை ஏற்பட்டது.

கலைவாணி தேவியிடம் கை கூப்பி நன்றி சொன்னார்.

"தாயே! எனக்கு அசுரபலம் வேகம் இருந்தாலும், ஆழ்ந்த கல்வி ஞானம் இல்லை. இருந்திருந்தால், கலிபுருஷனின் பேச்சைக் கேட்டு பாதாளத்தில் விழுந்திருக்கமாட்டேன். நான் தங்களிடம் தன்யனானேன். எனக்கு "ஞானத்தை" சொல்லிக் கொடுங்கள். அன்னை சரஸ்வதி தேவியே" என்றார் ஹயக்ரீவர்.

"ஹயக்ரீவரே! பிரம்மா சொன்னபடியேதான் எல்லாமும் நடக்கின்றன. தங்களுக்கு முனிவர்களால் முன் ஜென்மத்தில் கொடுத்த சாபம் இன்று முதல் விலகிவிட்டது. இனி தாங்கள் ஹயக்ரீவராக காட்ச்சியளித்தாலும், திருமலையில் இனி வராஹமித்ரர் என்ற திருநாமத்தோடு திருமலை வாசலுக்கு முன்பு அமர்ந்து வேங்கடவனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கும் அனுக்கிரகம் செய்வீர்கள்" என்றாள் கலைவாணி.

"ஒரு சின்ன விண்ணப்பம். எனக்கு எப்பொழுது ஞானப்பாடம் சொல்லித்தரப் போகிறீர்கள்?" என்றார் ஹயக்ரீவர்.

"வராஹ மித்ரரே! உங்களுக்கு இப்பொழுதே இந்த இடத்திலேயே அகஸ்தியர் முதலாக பதினெட்டு வகையான சித்தர்கள் முன்னிலையில் விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் பட்சிகளின் மங்களமான சப்தங்களுக்கு நடுவில் திருமலை வாசனின் அருட்கடாட்சத்தோடு புனிதமிகு கங்கை நதி நீரைத் தெளித்து "ஞானத்தை" தருகிறேன், ஏற்பாயாக!" என்றாள்.

அடுத்த வினாடியே விண்ணுலகத் தேவர்கள் மலர்மாலை தூவ ரிஷிகளும் முனிவர்களும் வேதகோஷத்தோடு வாழ்த்த சரஸ்வதிதேவி தன் அருட்கடாச்சத்தை ஹயக்ரீவருக்கு அளித்தாள்.

"வராஹமித்ரரே! இன்று முதல், இந்த திருமலையில் அவதாரம் எடுத்திருக்கும் வேங்கடவனைத் தரிசிக்க வரும் பக்தர்கள், ரிஷிகள், சித்தர்கள், ஞானிகள் அத்தனை பேரும் முதலில் தங்களை தரிசித்து அனுமதி பெற்ற பிறகுதான் வேங்கடவனைத் தரிசிப்பார்கள். தங்களை தரிசிக்காமல், வேங்கடவனைத் தரிசித்தால் அவர்களுக்கு எந்த புண்ணியமும் கிடையாது. இது திருமாலின் கட்டளை!" என்றார் அகத்தியர்.

"எதற்காக இப்படி ஒரு கட்டாயம்?" என்று கேள்வியை எழுப்பினார் ஹயக்ரீவர்.

"அதற்கு காரணம் உண்டு ஹயக்ரீவரே! என்ன இருந்தாலும் இந்த கோனேரிக்கரை, கானகம் எல்லாம் உங்கள் ராஜ்ஜியம் தானே? உங்களிடம் அனுமதி கேட்காமல் திருமால் இங்கு அவதாரம் எடுத்து விட்டார். ஒரு வேளை, பிற்காலத்தில் கலிபுருஷன் மறுபடியும் வந்து உங்கள் மனத்தைக் கெடுக்கலாம். நீங்களும் பெருமாளோடு சண்டைக்கும் கிளம்பலாம் அல்லவா. அதற்காகத்தான் இந்த முன்னேற்ப்பாடு" என்று சொல்லி கலைவாணி சிரித்தாள்.

"போங்கள் சரஸ்வதிதேவி, எனக்குத்தான் ஞானம் வந்துவிட்டதே. இனிமேல் கலிபுருஷன் மட்டுமல்ல, வேறு யார் வந்தாலும் என் புத்தியில் சஞ்சலம் ஏற்படாது" என்றார் ஹயக்ரீவரான வராஹமித்ரர்.

இப்படி அவர்கள் சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, மிகப் பயங்கரமான சப்தம் ஒன்று அங்கே கேட்டது.

எல்லோரும் திரும்பிப் பார்த்த பொழுது....................

முரட்டுத்தனமும் கூர்மையான கொம்புகளையும் கொண்டு, ஆக்ரோஷமாக நான்கு எருதுகள், நின்று கொண்டிருந்தன.

அவை இருக்கும் நிலையைப் பார்த்தால், எதிரில் இருக்கும் அத்தனை பேரையும் துவம்சம் பண்ணிவிடும் போலிருந்தது.

யாரால் இந்த எருதுகள் இங்கு அனுப்பப்பட்டன? எதற்காக இத்தனை ஆக்ரோஷத்தோடு பழிவாங்கும் எண்ணத்தோடு வேகமாக சப்தமிட்டபடி வந்திருக்கின்றன, என்பதை தெரிந்து கொள்ள சில வினாடிகள் அனைவருக்கும் தேவைப்பட்டது.

கலைவாணி, தன் கையைத் தூக்கிக் காட்ட, அடுத்த வினாடி அந்த நான்கு எருதுகளும் சப்தநாடியும் அடங்கியது போல் அடங்கி நின்றன.

ஹயக்ரீவர் இதைக் கண்டு ஆச்சரியப்பட்டு, கலைவாணியைப் பார்த்தார்.

"ஹயக்ரீவரே! இது கலிபுருஷனின் அடுத்த விளையாடல். உங்களைக் கொல்லக் கிளப்பிவிட்டிருக்கிறான். இனி அவனால் உங்கள் பக்கம் நெருங்க முடியாது என்பதை அவன் நன்கு அறிவான். இந்த நான்கு எருதுகளும் பொய்யானவை. நான்கு துர்குணங்கள் கொண்டவை. இப்படிப்பட்ட குணங்களைக் கொண்ட மனிதர்களும் இங்கு இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நீங்கள் தான் ஞானத்தைப் புகுத்தவேண்டும்." என்றாள் கலைவாணி.

சித்தன் அருள்.......................... தொடரும்!

5 comments:

  1. நன்றி அகத்தியரே ! எனக்கும் இன்று முதல் ஞானம் கிடைக்கும் என்று நம்புகிறேன். ஓம் லோபமுத்ரா சமேத அகத்தீசாய நம:

    ReplyDelete
  2. அற்புதம் ஐயா, மீண்டும் பதிவேற்ற ஆரம்பித்தமைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  3. Aum Agateesaya Namaha! Very interesting reading.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. இந்த பதிவை படிப்பதற்க்கான பாக்கியத்தை அருளிய இறைவனுக்கும், சித்தர் பெருமானுக்கும் , பதிவேற்றிய தங்களுக்கும் நன்றிகள். அனந்தகோடி நமஸ்காரங்கள்.

    ReplyDelete