மனித மனம் மிக விசித்திரமானது. யோசித்து முடிவெடுக்கும் உரிமையை இறைவன் ஒவ்வொரு மனிதருக்கும் கொடுத்திருக்கிறார் என்றாலும், சில வேளை பேராசை, அதை அடைய அவர்கள் எடுக்கும் குறுக்கு வழி முறைகள், சூழ்நிலை, தெளிவில்லாய்மை போன்றவை பல நேரங்களில், அவனை அல்லது அவளை அதள பாதாளத்தில் தள்ளிவிடும். அப்படி மாட்டிக் கொண்ட சூழ்நிலையில், சித்தர் பெருமானை நாடி சென்றால், அப்படிப்பட்ட சூழ்நிலையிலும், அவர்கள் கர்மாவை, எதிர்காலத்தை பார்த்து ஒரு சில வழிகளை காட்டி, நல்வழியில் திருப்பி விடுவார். அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியை இன்று பார்ப்போம்.
ஒரு நாள் நாடி வாசித்துக் கொண்டிருக்கும் பொழுது, ஒரு 24 வயது மதிக்கத்தக்க வாலிபன் வந்து அமர்ந்தான். எல்லோருக்கும் நாடி வாசித்தபின், அவன் முறை வந்ததும் அருகில் அழைத்தேன்.
"என்ன வேண்டும்?" என்று வினவினேன்.
"எனக்கு நாடி வாசிக்க வேண்டும்" என்றான்.
"எதை பற்றி அகத்தியப் பெருமானிடம் கேட்கவேண்டும்?" என்றேன்.
"நான் 25 லட்சம் கடன் பட்டிருக்கிறேன். எனது மாத சம்பள ம் வட்டிக்கு மட்டும் சரியாக இருக்கிறது. நீங்கள் தான் அகத்தியரிடம் சொல்லி, என் கடனை தீர்க்க வழி பெற்று தர வேண்டும்" என்று கூறினான்.
அதை கேட்டதும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
இந்த சின்ன வயதில் 24 லட்சம் ரூபாய் கடனா? என்று அந்த பையனை மேலும் கீழும் பார்த்தபோது அவனே தலைகுனிந்து கொண்டான்.
"எப்படி கடன் பட்டிருப்பான்?" என்று நான் யோசிக்கும்போதே அவனே தன் வாய் திறந்து சொன்னான்.
"எனக்கு சின்ன வயதில் இருந்தே நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை. கார், பங்களா வாங்கவேண்டும் என்று ஆசை. இது பின்னர் பேராசையாக மாறி விட்டது. என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் போனதால் சரியாக மாடிக் கொண்டேன்" என்றான்.
"எப்படி?"
"வெளிநாட்டுக் கம்பனி ஒன்று எனக்கு ஒன்றே கால் கோடி பரிசு விழுந்திருப்பதாகவும், இதற்காக அந்தக் கம்பனியிலிருந்து இருவர் வந்து என்னைச் சந்திக்கப் போவதாகவும் திடீர் செய்தி ஒன்று வந்தது. இதை கண்டு ஆச்சரியமடைந்து போனேன். அதே சமயம், இந்த விஷயம் வெளியே தெரிந்து விட்டால் எல்லோரும் போரமைப்படுவார்கள், அந்த பொறாமை காரணமாக யாராவது ஏதாவது மொட்டைக் கடிதாசி எழுதி எனக்கு வர வேண்டிய பணத்தை வரவிடாமல் தடுத்து விடுவார்கள் என்ற பயம் ஏற்பட்டது. அதனால் இந்த விவரத்தை பற்றி வேறு யாரிடமும் மூச்சு விடவே இல்லை" என்றவனிடம்
"வீட்டில் உள்ளவர்களுக்குக் கூட சொல்லவில்லையா?" என்று நான் கேட்டேன்.
"அப்பா, அம்மா உடன்பிறந்த சகோதரன் உள்பட யாரிடமும் இதைச் சொல்லவே இல்லை. அந்தப் பரிசுப் பணம் கிடைத்த பிறகு திடீரென்று அது பற்றி சொல்லி அவர்களை ஆச்சரியத்தில் திக்கு முக்காட வைக்கலாம் என்று நினைத்து மறைத்து விட்டேன்".
"பிறகு என்னாவாயிற்று?"
"ஒரு நாள் அந்தக் கம்பனி நிர்வாகிகள் என்று சொல்லிக் கொண்டு ஒருவரும், ஒரு இளம் பெண்ணும் என்னைப் பார்க்க வந்தனர். ஒன்றேகால் கோடி "செக்கை" காட்டி, இது உங்களுக்கான செக். முதலில் நீங்கள் 25 லட்சம் தரவேண்டும். அதையும் உங்களுக்கே திருப்பித் தந்து விடுவோம்" என்று ஆசை காட்டினார்கள்."
"ஒன்றேகால் கோடி ரூபாய் செக்கில் என் பெயர் இருந்ததைக் கண்டதும் எனக்கு தலை கால் புரியவில்லை. எனவே, 25 லட்சம் ரூபாய் கொடுப்பதில் தவறில்லை என்று எனக்குத் தோன்றிற்று" என்று முடித்தான்.
"எதற்காக 25 லட்சம் ரூபாய் கேட்கிறீர்கள் என்று கேட்கவில்லையா?" என்று கேட்டேன்.
"கேட்கவில்லை" என்றான்.
"சரி... பின்னே என்ன செய்தீர்கள்?"
"இந்த விஷயத்தை, இதற்குப் பிறகு தான் அப்பா, அம்மா தம்பியிடம் சொன்னேன். அவர்கள் முதலில் நம்பவில்லை, அவர்களது வாயை அடக்கி, இருக்கிற நகைகளை விற்றேன். நிலமொன்று இருந்தது.அதையும் விற்றேன். அப்படியும் பணம் போதவில்லை என்பதால் எனது தந்தைக்குச் சொந்தமான வீட்டையும் விற்றேன். அலுவகத்தில் வெளியில் என்று கடன் வாங்கினேன். கந்து வட்டிக்கும் கடன் வாங்கினேன். இன்னும் ஒரு வாரத்திற்குள் 25 லட்சம் பணமாகக் கொடுக்கவில்லை என்றால், ஒன்றேகால் கோடி பரிசுப் பணம் கிடைக்காது என்று வந்தவர்கள் கெடுவிதித்ததால் பயந்து, பயந்து அத்தனை ஏற்பாடுகளையும் செய்து, அந்த 25 லட்சம் ரூபாயை பணமாக அந்த நபர்களிடம் கொடுத்தேன்".
"அதுவரை அவர்கள் உங்களுடன் தான் இருந்தார்களா?'.
"இல்லை, மும்பை, டெல்லிக்குப் போவதாக சொன்னார்கள். ஒரு வாரம் கழித்து மீண்டும் வந்தார்கள். "பணம் ரெடி ஆயிற்றா?" என்றார்கள். பணம் ரெடி ஆகவில்லை என்றதும், மேலும் பத்து நாட்கள் அவகாசம் தருவதாகச் சொல்லி இருக்கிற பணத்தை வாங்கிக் கொண்டார்கள்."
"அப்புறம்?"
"அப்புறம் என்ன; எனக்கு பணம் புரட்ட ஒரு மாதமாயிற்று. அவர்கள் கேட்ட அத்தனை பணத்தையும் கொடுத்தேன். அவர்களும் அந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்டு, அந்த ஒன்றேகால் கோடி ரூபாய்க்கான செக்கை என்னிடம் கொடுத்துவிட்டுச் சென்றார்கள்."
"சாதாரண சம்பளக்காரனாக இருந்த நான், ஒரே மாதத்தில் கோடீஸ்வரனாக மாறி விட்டேன் என்ற சந்தோஷத்தில் மிதந்தேன். ஒரு நல்ல நாள் அன்று அந்த "செக்கை" எனது வங்கி கணக்கில் போடலாம் என்று வீட்டில் வைத்திருந்தேன். பின்னர் பார்த்தால் அது போலியான "செக்" என்பதும், அப்படிப்பட்ட நிறுவனம் எதுவும் கிடையாது என்பதும் தெரிந்தது. நன்றாக ஏமாந்து போனேன்" என்றான்.
"என்ன படித்திருகிறீர்கள்?"
"எம்.டெக். ஒரு சாப்ட்வயர் நிறுவனத்தில் பணிபுரிகிறேன்".
இதைக்கேட்டதும் என் கண்கள் வியப்பில் அப்படியே நின்றன.
"நான் வாழ்வதா? சாவதா? என்று தெரியவே இல்லை. இருமுறை தற்கொலைக்கு முயன்றேன். ஏதோ தப்பிப் பிழைத்தேன். எப்படி என் கடன் அடையும்? என் எதிர்காலம் என்ன? அகத்தியர்தான் கூறவேண்டும்!" என்று கண்கலங்க கூறினான், அந்த சாப்ட்வயர் எஞ்சினியர்.
அகத்தியரிடம் அவனது வேண்டுகோளைச் சொல்லி "வழிகாட்ட" வேண்டினேன்.
"குறுக்கு வழியில் பெரும் பணக்காரனாக ஆசைப்பட்டு தவறான பாதையில் சென்றவன் இவன். அப்போது யாரிடமாவது இந்த விஷயத்தைச் சொல்லி, தகுந்த ஆலோசனை கேட்டிருக்க வேண்டும். சுயநலம் இவன் கண்ணை மறைத்ததால் இப்போது பெரும் பள்ளத்தில் வீழ்ந்திருக்கிறான்.
இதை "விதி" என்று சொல்லி ஏற்க மாட்டேன். இவனது பேராசை இவன் கண்ணை மறைத்ததோடு மட்டுமின்றி, இவனது குடும்பத்தையும் கெடுத்தது. அவமானம் தாங்காமல், அண்ணனுக்கு தான் பட்ட கடனுக்காக இவனது தம்பி வீட்டை விட்டேன் ஓடிப் போனான். இன்னும் வீடிற்கு திரும்பி வரவில்லை. அவனோ தற்கொலை செய்து கொண்டதாக ஊரில் பேச்சு. இல்லையா?" என்று அகத்தியர் சொன்னதும், மிரண்டு போனான் அந்த வாலிபன்.
"இருப்பினும், ஈன்றிட்ட இவனது பேற்றோர்கள கடன் தொல்லை தாளாமல் இன்னும் சில நாட்களில் அல்லது சில மாதங்களில் தற்கொலை செய்து கொள்ளக் கூடும். இவன் செய்த பிழைக்கு இவனது பெற்றோர் பலியாகக் கூடாது என்பதை அகத்தியன் கருத்தில் கொண்டு, அந்த பெற்றோர்களைக் காப்பாற்றவும், இவன் பட்ட கடன் தொல்லையிலிருந்து விடுபடவும் ஒரு அருமையான வழியைக் காட்டுகிறேன்.
அதற்கு முன்பு இவன், தன் பெற்றோருடன் அறுபடை முருகப் பெருமான் கோவிலுக்குச் சென்று வரட்டும். பக்தியுடன் இவன் பயணம் மேற்கொண்டால் ஒரு சிலிர்க்க வைக்கும் சம்பவம் நடக்கும். பிறகு அகத்தியரை நோக்கி வரட்டும்" என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.
"முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுக்கு செல்ல தேவையான பணம் என் கையில் இப்போது இல்லையே!" என்று கையைப் பிசைந்தான் அவன்.
"அகத்தியரை நம்பி முயற்சி செய். யாராவது ஒருவர் அகத்தியரால் அடையாளம் காட்டப்படுவார்" என்றேன் நான்.
ஏதோ ஒரு தைரியத்தில் கண்ணீர் மல்க விடை பெற்றான் அந்த பையன்.
இரண்டும் மாதம் கழிந்திருக்கும். வாசலில் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.
எழுந்து சென்று எட்டிப் பார்த்த பொழுது அந்த பையன் வாசலில் நின்று கொண்டிருந்தான். உள்ளே வந்த அவனை நினைவிற் கொண்டு, "என்ன அறுபடை வீடு சென்று வந்தாயிற்றா?" என்று கேட்டேன்.
"நேற்று தான் அறுபடை வீடுகளுக்கு சென்று திரும்பி வந்தேன். ஒரு சந்தோஷச் செய்தியை உங்களிடம் சொல்லி விட்டுப் போக வந்திருக்கிறேன்" என்றான்.
"என்ன........ கடன் அடைய வழி கிடைத்து விட்டதா?"
"ஆமாம்" என்றான்.
"எப்படி?" என்றேன்.
"அகத்தியர் சொன்னபடி அறுபடை வீடு செல்ல சில ஆயிரம் ரூபாய் தேவைப்பட்டது. பல இடங்களில் கேட்டுப் பார்த்தேன். கிடைக்கவில்லை. சென்னை வடபழனி முருகன் கோவிலி ல் ஒரு வெள்ளிக்கிழமை, முருகனை நினைத்துக் கண்ணீர் விட்டு அழுதபோது சுவற்றோரம் சாய்ந்து, மயக்கமடைந்து சாய்ந்து விட்டேன்.
எத்தனை நிமிடம் நான் மயக்கமுற்ற நிலையில் இருந்தேன் என்பது எனக்கு தெரியாது. கண் விழித்துப் பார்த்த பொழுது என் அருகில் சிவப்பு நிற துணிப்பை ஒன்று கிடந்தது. யாருமே அதனை உரிமை கொண்டாடவில்லை என்பதைத் தெரிந்ததும், பைக்குள் என்ன இருக்கிறது என்று எடுத்துப் பார்த்தேன்.
அதற்குள் 6 ஜோடி தங்க வளையல்கள் பத்திரமாக ஒரு பேப்பருக்குள் சுற்றி வைக்கப் பட்டிருந்தன. அதை யாருமே உரிமை கேட்டு வரவில்லை என்பதை அறிந்த நான், அறுபடை முருகன் கோவில்களை தரிசிக்க முருகப் பெருமானே எனக்கு அளித்த பரிசுதான் அது என்று எண்ணி அதை அடகு கடையில் அடமானம் வைத்தேன்.
நான் செய்தது தவறுதான் என்றாலும், ஏதாவது ஒரு காலகட்டத்தில் அந்த வளையல்களைத் திருப்பி முருகன் கோவில் உண்டியலில் போட்டு விடலாம் என்று நினைத்து பெற்றோருடன் அறுபடை வீடுகளுக்கு பயணத்தை மேற்கொண்டேன்.
யாரோ ஒருவருக்கு சொந்தமான வளையல்களை அடமானம் வைத்து, தரிசனம் செய்ய செல்கிறோமே, இது மிகப் பெரிய பாவம் இல்லையா? இப்படிச் செய்யலாமா? என்று என் மனசாட்ச்சி குத்தத்தான் செய்தது. ஆனால் , எனக்கு வேறு வழி தெரியவில்லை என்பதால் மனத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டேன்.
ஆறாவது படை வீடு சென்று முருகப் பெருமானை வணங்கிக் கொண்டிருக்கும் பொழுது முருகன் சந்நிதானத்தில் ஒரு மிகப் பெரிய பணக்காரர் குடும்பத்தைச் சந்திக்க நேரிட்டது. அவரது மகளுக்கு இளம்பிள்ளை வாதம் இருப்பதால் யாரும், அவளை மணந்து கொள்ள முன் வரவில்லை. இதனால் முருகன் கோவிலுக்கு வந்து கொண்டிருக்கிறார் என்று தெரிந்தது.
அவருக்கு என்னவோ என்னைப் பார்த்த உடன் பிடித்து விட்டது.
"என் மகளை உங்கள் மகன் மணந்து கொள்ள முடியுமா?" என்று அங்கிருந்த என் பெற்றோரிடம் கூச்சத்தோடு கேட்டிருக்கிறார்.
இரண்டு கால்களும் ஊனம், உடலும் பருமன், படிப்பும் இல்லை. என்றாலும் அந்தப் பெண்ணின் ஏக்கமான பார்வை என் மனதைத் தொட்டது. துணிந்து அந்தப் பெண்ணை மணப்பதாக சம்மதித்தேன்.
பணத்திற்காக இந்தப் பெண்ணை மணக்க முன் வந்திருக்கிறாயா? என்று என் பெற்றோர் என்னை சந்தேகப்பட்டுக் கேட்டார்கள்.
"இல்லை... அறுபடை வீடு தரிசனம் செய்து விட்டு வா. ஒரு சிலிர்க்க வைக்கும் சம்பவம் நடக்கும் என்று அகத்தியர் சொன்னாரே, அதற்காகத் தான் நான் இந்தப் பெண்ணை மணக்க முன் வந்தேன்" என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறேன்.
நான் எடுத்த முடிவு சரிதானே? என்பதை அகத்தியர் தான் சொல்ல செண்டும்" என்று, நடந்ததை எல்லாம் விளக்கமாகக் கூறி கேட்டான் அந்த பையன்.
அகத்தியப் பெருமான் இதற்கு பச்சைக் கொடி காட்டினார்.
அந்தப் பையன் நெகிழ்ந்து போனான்.
இப்போது அவன் வாங்கிய கடன்களை எல்லாம் அடைத்து, அருமையான மனைவியோடு இல்லற வாழ்க்கையை மேற் கொண்டு வருகிறான்.
வாழ்க்கையின் விளிம்புக்கு வந்துவிட்டோம் என்று நாம் தெரிந்து கொள்ளும் நிலைமையிலும், அகத்தியரை நம்பி, அவர் வார்த்தைகளை மதித்து நடந்து கொண்டால், மீண்டும் உச்சாணிக் கொம்பில் நம்மை அமர்த்துவார் என்பதற்கு, இந்த நிகழ்ச்சி ஒரு உதாரணம்.
அகத்தியர் அடியவர்களே, வாழ்க்கையின் தேவைகளுக்காக ஆசை படுவதில் தவறில்லை. ஆனால், அதுவே பேராசை ஆகி, நம்மையே விழுங்கி விடாமல் பார்த்துக் கொள்ளும் முடிவுகளை நீங்கள் எடுங்கள். நிச்சயமாக, அகத்தியர் அருள் உங்களை எல்லாம் எப்போதும் சூழ்ந்து நின்று காப்பாற்றும். பகவத் கீதையில் இறைவன் சொன்னது போல், தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும், தர்மம் வெல்லும் என்பது இந்த நிகழ்ச்சியில் தெளிவாகிறது. இங்கு சித்த தர்மம் தான் வென்றது. என்றுமே அதுதான் வெல்லும்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமக!
[வரும் சனிக்கிழமை குருபூர்ணிமா! அகத்தியருக்கு மரியாதை செய்யும் விதமாக அன்று ஒரு தொகுப்பை எதிர் பாருங்கள்!]
சித்தன் அருள் ............... தொடரும்