​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 27 June 2014

சித்தன் அருள் - கஞ்சமலை பற்றிய வரலாற்று தகவல்!


அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம்!

கஞ்சமலை பற்றி சித்தன் அருள்-180வது பதிவு வந்தவுடன், அதைப்பற்றிய நிறைய தகவல்களை வாசகர்கள் கேட்டிருந்தனர். எனக்கு தெரிந்தவரையில் பதில் கூறினாலும், சித்தன் அருளை வாசிக்கும் ஒரு அடியவர், திரு.இரா.சாமிராஜன் என்பவர், சேலத்துக்காரர், சற்று விரிவான தகவலுடன் ஈமெயில் அனுப்பினார். அதை, நீங்கள் எல்லோரும் அறிந்து கொள்வதற்காக, கீழே தருகிறேன். நன்றியை சாமிராஜனுக்கு தெரிவிக்கவும்.

கார்த்திகேயன்!

கஞ்சமலை (எ) சித்ரகோயிலின்  தலவரலாறு

அருள்மிகு கஞ்சமலை சித்தேஸ்வரர் திருக்கோயில்

காலங்கி சித்தர் என்பவர் பழநியில் நவபாஷாண முருகன் சிலையை பிரதிஷ்டை செய்த போகரின் குரு ஆவார். திருமந்திரம் எழுதிய திருமூலரின் மரபில் வந்தவர். கூடுவிட்டு கூடு பாய்வது உள்ளிட்ட அஷ்டமாசித்திகளை அறிந்தவர். ஏழு மடங்களை ஸ்தாபித்தவர்.

"கஞ்சம்' என்றால் "தாமரை' எனப் பொருள். மேலிருந்து பார்த்தால் தாமரை போன்ற தோற்றமுடையதால் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம். அனுமான் சஞ்சீவி மலையுடன், தென் இலங்கைக்கு செல்லும் வழியில், அதன் ஒரு பகுதி மிகமிக குறைந்த அளவில் கீழே விழுந்ததாகவும், அதுவே கஞ்சமலை ஆயிற்று என்றும் சொல்வர். குறைந்து விழுந்ததால் "கஞ்சம்' என்ற பொருளிலும் இந்த மலைக்கு பெயர் வந்திருக்கலாம்.

சித்தர் வந்த கதை : காலாங்கி சித்தரும், அவருடைய குரு திருமூலரும் மலைப்பகுதிகளில் மூலிகை தேடி அலைந்தனர்.அவ்வாறு மூலிகை தேடி அலையும் போது கஞ்சமலைக்கும் வந்தனர். திருமூலர், தன் சிஷ்யன் காலாங்கியை சமைக்கச் சொல்லி விட்டு, மூலிகை தேடி காட்டுக்குள் போய்விட்டார். அரிசி வெந்து கொண்டிருந்த போது, அதைக் கிளறுவதற்கு அகப்பை ஏதும் இல்லாததால், அருகிலுள்ள ஒரு செடியிலிருந்து ஒரு குச்சியை ஒடித்துக் கிளறினார். அவ்வளவு தான் சோறு கருப்பாகி விட்டது.

""ஐயையோ! குரு வந்தால் கோபிப்பாரே,'' என்ற பயம் ஏற்பட்டது காலாங்கிக்கு. உடனே, அவர் சமைத்த சோறு முழுவதையும் சாப்பிட்டு விட்டார். சிறிது நேரத்தில் அவரது உடலில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. நடுத்தர வயதில் இருந்த காலாங்கி, வாலிபனைப் போல் மாறி விட்டார். தன்னைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். எல்லாம், அந்த மூலிகைக்கம்பு படுத்திய பாடு தான். காட்டுக்குச் சென்ற திருமூலர் திரும்பி வந்தார். சீடனைக் காண வில்லை. யாரோ ஒரு இளைஞர் நின்று கொண்டிருந்தார்.

""அடேய்! இங்கே என் சீடன் ஒருவன் இருந்தான் பார்த்தாயா? பசிக்கிறது. சாப்பாடு போடாமல் எங்கே போய் விட்டான்?'' என்றார்.

இளைஞர் திருமூலரின் காலில் விழுந்தார். ""குருவே! நான் தான் காலாங்கி,'' என்றவர் நடந்ததை எல்லாம் சொன்னார்.

திருமூலருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. இருந்தாலும், அதை மறைத்துக் கொண்டு, ""அடேய்! நான் வருவதற்குள் சாப்பிட்டு விட்டாயே. இதற்கு பரிகாரத்தை நீயே செய்து கொள்,'' என்றார். காலாங்கி வேறு வழியின்றி கை விரலைக் தொண்டைக்குழிக்குள் வைத்து சாப்பிட்டதை எல்லாம் வாந்தி எடுத்து விட்டார். திருமூலர் அவர் வாந்தி எடுத்ததை எடுத்துச் சாப்பிட்டார். அதன் பின் அவரும் இளைஞராகி விட்டார்.

இருவரும் இளைஞர்களான இடம், தற்போது கூட உள்ளது. இந்த ஊருக்கு பெயரே "இளம் பிள்ளை'. கஞ்சமலை அருகில் இந்த ஊர் இருக்கிறது. பின்னர் காலங்கிக்கு சித்தர் என்ற அந்தஸ்தை அளித்து, அங்கு வரும் மக்களின் நோய்க்கு தருந்தபடி தகுந்த சிகிச்சையளிக்க உத்தரவிட்டார். காலங்கியும் அங்கேயே தங்கி விட்டார். மக்கள் அவரை "காலாங்கி சித்தர்' என் அழைத்தனர். ஒரு கால கட்டத்தில் அவர் இரும்புக்கல் தாதுவாக மாறி அப்படியே அமர்ந்து விட்டார். இவர் சிவனை நினைத்து ஆயிரம் ஆண்டுகள் தவமிருந்ததாகவும், இவரது தவத்திற்கு இரங்கிய சிவன், இவருக்கு ஈஸ்வரபட்டம் கொடுத்து "சித்தேஸ்வரர்" என பெயர் மாற்றியதாகவும் தல வரலாறு கூறுகிறது. இதனால் லிங்கவடிவிலேயே சித்தரின் சன்னதி தற்போது இருக்கிறது.

பின் குறிப்பு:

என் குடும்பத்தாரிடம் சொல்கிறேன், இந்த வாரம் கோவிலுக்கு போக சொல்லி படம் மற்றும் கோவில் சுற்றியிருக்கும் படம் எடுத்து அனுப்புகிறேன். எனது சொந்த ஊர் சேலம். இவ்வளவு சிறப்பு வாய்ந்த ஊரில் நானும் பிறந்ததை நினைக்கும் பொழுது மிகவும் சந்தோசமாக இருக்கிறது.கஞ்சமலைன்னு சொல்லுறது விட சித்தர்கோவில் மருவி சித்ரகோயில் என்று இப்போ பேச்சுவழக்கில் உள்ளது. 

மிக்க நன்றி அய்யா,
இரா.சாமிராஜன் 

Thursday, 26 June 2014

சித்தன் அருள் - 180 - கஞ்சமலை - முருகரின் தரிசனம் பெற!

அவ்வளவு சிறப்பு மிக்க இடம் இது. மயிலை முருகப் பெருமான் தனக்கு வாகனமாக அல்ல, தோழனாக ஏற்றெடுத்த இடம் இது. மயிலுக்கு மிகப்பெரிய மூக்கு. மயில் வந்து என்ன செய்யும். பாம்புகளை தீண்டும். ஆனால், எத்தனை பாம்புகள் அதை தீண்டினாலும், கொத்தினாலும், அதன் உடம்பில் விஷம் ஏறாது. அத்தகைய உடல் வாகை உள்ளடக்கியது அது. விஷத்தை தன்னோடு வைத்துக் கொண்டிருக்கிறான், எதற்கென்றால், அவனை விஷம் தீண்டக் கூடாது, அது போல் அவன், யார் விஷம் தீண்டினாலும், நம் முருகன் மயிலை விட்டு விஷத்தை எடுத்து விடுவான். கீறிப் பிள்ளைக்கு பாம்பை பிடிக்கிற, கொல்கிற தைரியம் இருக்கிறது. இருப்பினும் அது பாம்புகளை கொன்று இரையாக்கிய பின் அது பக்கத்தில் மூலிகையை, தர்ப்பையை தின்று விஷத்தை முறித்துக் கொள்ளும். புல்லுக்கு விஷத்தை எடுக்கும் சக்தி உண்டடா. தர்ப்பைபுல் விஷத்தை எடுக்கும்.  அதைத்தான் மறைமதி நாள் அன்றோ, அதாவது அமாவாசை நாளன்றோ, கிரகணத்தின் நாளன்றோ, எதற்காக கிரகணத்தைச் சொன்னேன் என்றால் இன்னும் இரண்டு நாளில் கிரகணம் வரப் போகிறது, அதையும் கணக்கில் வைத்துத்தான் சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது. கிரகணத்தின் அன்று பூமியில் விஷத்தின் தன்மை அதிகமாக இருக்கும் என்பதினால், தர்ப்பையை தூக்கி உணவிலே போடுவார்கள், வீட்டிலே வைப்பார்கள். இந்த தர்ப்பைப் புல் எங்கிருக்கிறதோ, அதற்கு விஷத்தை எடுக்கும் சக்தி உண்டு. மூலிகையிலே எத்தனையோ விஷத்தை எடுக்கும் மூலிகைகள் உண்டு. எந்த மூலிகை விஷத்தை எடுக்கிறதோ இல்லையோ, தர்ப்பைப்புல் விஷத்தை தடுக்கும். தர்ப்பை புல்லை நன்றாக அரைத்து, தேன் கலந்து உட்கொண்டால், உங்களை பாம்பு தீண்டினாலும், பாம்பு இறக்குமே தவிர, நீங்கள் இறக்க மாட்டீர்கள். விஷம் உங்கள் ரத்தத்தில் ஒரு போதும் கலக்காது. இதையே, எந்த காலத்திலும், காலையிலும், மாலையிலும் அல்லது மூன்று வேளை உட்கொண்டால் போதும், உங்களுக்கு ஆயுள் பலம் அதிகரிக்கும், இருதயம் நன்றாக செயல் படும், உடல் கலங்கினாலும், கலங்கியது விஷத்தால் ஆனாலும், விஷம் வெளியேறிவிடும். எத்தனை வியாதிகள் உங்கள் உடலில் இருந்தாலும், அதோடு, தேன் கலந்து, கடுக்காய் தோல் கலந்து உட்கொண்டால் போதும். தோல் வியாதிகள் அத்தனையும் பறந்து போகும். தர்ப்பைப் புல்லோடு, நீங்கள் பால், தேன், பன்னீர் கலந்து, பௌர்ணமியிலோ, அமாவாசையிலோ உட்கொண்டு வந்தால் போதும். மூளை சம்பந்தப்பட்ட, நரம்பு சம்பந்தப் பட்ட அத்தனை நோய்களும் விலகிவிடும்.

கீரி வந்து பாம்பின் தலையைத்தான் கவ்வும்.  கீரி, பாம்பு சண்டையை நீங்கள் பார்த்தீர்களோ இல்லையோ, நான் சொல்லுகிறேன், கீரி பாம்பின் தலையை நோக்கித்தான் கவ்வுமே தவிர, மத்தியத்தை நோக்கி தாக்காது. அதன் தலையை கடித்து அப்படியே தூக்கி எறிந்துவிடும், ஏன் என்றால், அதற்கு விஷம் எங்கு இருக்கிறது என்று தெரியும். அந்த விஷத்தன்மையை முறிக்கும் தன்மை அந்த கீறி பல்லுக்கு உண்டு. ஆனால் மயிலுக்கோ, பாம்பு அதன் உடலில் எத்தனை முறை கொத்தினாலும், விஷம் மயிலுக்கு ஏறாது. அப்படிப்பட்ட அருமையான மயிலை, நமது முருகப் பெருமான், இந்த இடத்தில் தனது 7வது வயதிலே தேர்ந்தெடுத்தான். அந்த மயிலின் வாரிசுகள் கூட இன்றைக்கு இங்கு நடமாடிக் கொண்டிருக்கிறது.

அது மட்டுமல்ல, இந்த 29 மலைகளை பற்றி எல்லாம் சொன்னேன். இங்கு முருகப் பெருமான் அமர்ந்திருக்கும் பொழுதுதான், ராமப்பெருமான் இங்கு வந்து அமர்ந்தான். முருகப் பெருமான் ராமப்பெருமானை தரிசிக்க ஆசைப்பட்டு அந்த ராமர் கோயிலுக்கு நடந்து சென்ற வழியிலே, ராமனே, எதிர்க்க வந்து கட்டி அணைத்து, கொஞ்சி குலாவி, ஆனந்தப் பட்டு, பரவசபட்ட, அந்த இடம் கூட இதே இடம் தான். ஆக, முருகன் ஆசைப்பட்டு, பிரியமாக ராமனை சந்திக்கப் போனதும், ராமன் தன் குடும்பத்தோடு வந்து, எம்பெருமான் முருகனை கட்டித் தழுவி, முத்தமிட்டு, அவன் பாடுகின்ற தமிழை எல்லாம் கேட்டு ஆனந்தப் பட்ட இடம் கூட இதே இடம்தான்.  இந்த புனிதமான இடத்திலே விஷங்களை எடுக்க கூடிய சக்தி இருக்கிறது. இந்த இடத்துக்கு வந்து, ஒருமுறை உலா வந்துவிட்டால் போதும் அல்லது அமாவாசை அன்றோ, பௌர்ணமி அன்றோ, அஷ்டமி, நவமி அன்றோ இங்கு வரலாம்.  அஷ்டமி என்பது பொதுவாக சுப காரியத்துக்கு ஏற்புடையது அல்ல என்று சொல்கிறார்கள்.  ஆனால் அஷ்டமி, நவமி அன்று தான், இங்கு யார் யாருக்கு எந்தெந்த சுப காரியம் நடக்கிறது என்றும், மற்ற நல்ல நாட்களில் செய்யாத புண்ணியங்கள் எல்லாம், இந்த அஷ்டமி நவமியில் வந்து இங்கு பிரார்த்தனை செய்து கொண்டால் போதும். அத்தனையும் நடக்கும். சிலருக்கு நல்ல காலங்கள் ஏற்புடையதல்ல. சிலருக்கு நல்ல விஷயங்கள் பிடிக்காதது போல, சிலருக்கு கெடுதல் விஷயங்கள்தான் நன்றாக நடக்கும். ஆக, வாழ்க்கையிலே கெடுதலையே சந்தித்திவிட்டு நொந்து போனவர்கள் எல்லாம், எத்தனை ஆண்டுகளாக இருந்தாலும், எத்தனை ஜென்மங்கள் இருந்தாலும், அவர்களுடைய தோஷங்கள் அத்தனையும் விலகவேண்டும் என்றால், அஷ்டமி அன்று இங்கு வந்து முருகப் பெருமானை தரிசித்து, ஆனந்தமாக அமர்ந்து, கந்த சஷ்டி கவசத்தையோ, அல்லது சுப்பிரமணிய புஜங்கத்தையோ, தவறாது மூன்று முறை சொல்லிவிட்டு போனால் போதும். உங்கள் உடம்பில் உள்ள எல்லா நோய்களும் சிக்கென பறந்துவிடும்.

குறிப்பாக விஷத்தன்மை, பேச்சிலே விஷம், பார்வையிலே விஷம், உடம்பிலே விஷம், நடத்தையிலே விஷம், போக, விஷங்கள் தான் இப்பொழுது நாட்டையே ஆண்டு கொண்டிருக்கிறது. ஆக, கலிபுருஷனின் அட்டகாசம் அதிகமாகி கொண்டிருக்கிற காலம் இது. ஆக, எல்லார் மனதிலும் விஷங்கள். எப்படி வருகிறது, ஏது வருகிறது என்று தெரியாது. ஆனால், விஷம் ரத்தத்தில் கலந்துவிட்டால், மூளையை பாதித்து, உடம்பை பாதித்து, குடும்பத்தையே பாதிக்கும். விஷம் என்றால், வார்த்தைகளிலே விஷம் என்று சொன்னேன். பார்வையில் விஷம் என்று சொன்னேன். நடத்தையில் விஷம் என்று சொன்னேன். அந்த விஷம் நிறைய யார் யாருக்கெல்லாமோ,  உங்களை சுற்றி இருக்கலாம். பொறாமை உங்களை சுற்றி இருக்கலாம். உங்கள் வளர்ச்சியை கண்டு பொறாமை பட்டு, உங்களை கீழே தள்ள நினைக்கலாம்.  உங்களுக்கு ஏதேனும் ஒரு இடைஞ்சல் கொடுக்க வேண்டும் என்று எங்கிருந்தும் ஏதேனும் ஒருவர் வந்து சேரலாம்.  அவர்கள் கலிபுருஷனின் அவதாரங்களாக செயல்படுபவர்கள். அந்த கலிபுருஷனின் அவதாரங்களாக செயல் படுகின்றவர்களை எல்லாம், இந்த முருகப்பெருமான் தன் மயில் வாகனத்தில் அமர்ந்து கொண்டு, ஆனந்தமாக யோசித்துப்பார், பிரார்த்தனை செய்துபார், அவன் இங்கிருந்தே மயிலை அனுப்பி, அந்த விஷத்தை எடுத்துவிடுவான். மயில் இறகு பட்டாலே போதும், அந்த விஷத்தன்மை இறங்கி போய்விடும்.

ஆக, முருகப் பெருமான் நடந்து விளையாடிய இடம் மட்டுமல்ல, அவன் கொஞ்சி விளையாடி, அவன் பாதங்கள் இந்த 29 மலைகளிலே பட்டு நடமாடியிருக்கிறான். பொற்பாதங்களும் இன்றைக்கும் அங்கே இருக்கிறது.  அங்கே முருகப் பெருமானின் சிரிப்பொலியையும் கேட்கலாம்.

முருகனை நேரடியாக சந்திக்க முடியாதவர்கள், முருகனின் பொற்பாதத்தை நினைத்து வேண்டுகிறவர்கள்,  முருகனை நேரடியாக சந்தித்து சண்டை போடவேண்டும் என்று உரிமையுடன் போராடிக் கொண்டிருப்பவர்கள், முருகப் பெருமான் அடியார்கள் அத்தனை பேரும், இந்த மலையிலோ,  நதியிலோ உட்கார்ந்து ஒரு செவ்வாய் கிழமை அன்று இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள், ஆனந்தமாக மேற்கு திசை நோக்கி அமர்ந்து "முருகா" என்று கூப்பிட்டால், அவன் நேராக வந்து காட்சி அளிப்பான்; என்று அருளாசி.

[அகத்தியர் அடியவர்களே, இத்துடன் அந்த ஒலிநாடா நின்று போனது. எனக்கு தெரிந்த என்னெனவோ செய்து பார்த்தேன். ஒன்றும் முடியவில்லை. சில அகத்தியர் அடியவர்கள் கணிப்பொறி துறையில் வல்லவர்களிடம் கொடுத்து சோதிக்கச் சொன்னேன். ஒரு பதில்தான் எல்லோரும் சொன்னார்கள். அதில் சப்தம் பதியப்படவில்லை என்று. சரி! நமக்கு விதிக்கப்பட்டது அவ்வளவு தான் என்று நினைத்து, கிடைத்ததை தந்திருக்கிறேன். ஏற்றுக்கொள்ளுங்கள்.]

இந்த மலையை பற்றி துழாவிய போது கிடைத்த சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
  1. இந்த மலையில் பௌர்ணமி, அமாவாசை தினங்களில் கிரிவலம் செல்கிறார்கள். 18 கிமீ நடக்க வேண்டுமாம். ஒருமுறை கிரிவலம் சென்று வந்தாலே நம் உடலில் உள்ள விஷங்கள், வியாதிகள் போன்றவை இந்த வனத்தில் உள்ள மூலிகை காற்றால் நம் உடல் தழுவப்பட்டாலே, விலகிவிடுமாம்.
  2. இந்த மலைக்கு பக்கத்தில் சுமார் 20 கிமீ தூரத்தில், அயோத்தியப் பட்டினம் என்ற ஒரு ஊர் உள்ளது. அங்கு ஒரு கோதண்ட ராமர் கோவிலும் உள்ளது. மிகச் சிறப்பு வாய்ந்த ஒரு கோவில். ராமருக்கு முடி சூட்டிய (பட்டாபிஷேகம்) இடம். நல்ல நேரம் போய்கொண்டிருக்க, அதை தவற விடாமல் இருக்க, இங்கு முதலில் பட்டாபிஷேகம் செய்யப்பட்டதாம். பின்னர் அயோத்தி சென்று இன்னொருமுறை பட்டாபிஷேகம் செய்து கொண்டாராம். அதிலும் மிக முக்கியமான விஷயம் என்ன வென்றால், ராமர் அமர்ந்து ஒரு காலை மடக்கிய நிலையில் ஆசிர்வதிக்க, அருகில் சீதாபிராட்டியார், லக்ஷ்மணன், ஆஞ்சநேயர்,  சுக்ரீவன், விபீஷணன் நின்ற கோலத்தில் இருக்கிறார்கள்.
  3. அயோத்திக்கு வந்து என்னை தரிசிக்க வேண்டும் என்று இல்லை. இந்த அயோத்தியப் பட்டினத்தில் வந்து தரிசித்தாலே, அனைத்து அருளும் கிடைக்கும் என்று ராமரே கூறியதாக சொல்கிறார்கள்.
சித்தன் அருள்..................தொடரும்!

Tuesday, 24 June 2014

சித்தன் அருள் - ஒரு செய்தி!


[புகைப்பட நன்றி: திரு பால சந்திரன் அவர்கள்]

முருகரின் அடியவர்கள், பக்தர்கள்
அவர் தரிசனம்
கிடைக்கவில்லையே என்று ஏங்குபவர்கள்,
எளிதாக அதை பெறுவதற்கு
அகத்தியப் பெருமான்
கூறும் வழி முறையை அறிந்திட
இந்த வார
சித்தன் அருள் 180வது தொகுப்பை பாருங்கள்!


ஓம் லோபாமுத்திரா சமேத அகதீசாய நமஹா!

Thursday, 19 June 2014

சித்தன் அருள் - 179 - கஞ்சமலை - முருகர் மயில் வாகனத்தை அமைத்துக் கொண்ட படலம்!


ஒருநாள், பூசை முடித்து, பலருக்கும் நாடி வாசித்து அகத்தியர் அருள் வாக்கை சொல்லி, இன்று இத்துடன் முடித்துக் கொள்ளலாம் என்று நினைத்த பொழுது, அகத்தியரிடமிருந்து,  உத்தரவு  பிறந்தது.

"உடனேயே நண்பர்களுடன் "கஞ்சமலைக்கு" சென்று முருகர் அருள் பெற்று அங்கே அமருக. யாம் அங்கு வந்து வாக்குரைப்போம்." என்று கூறினார்.

என்ன இது, இந்த நேரத்தில் எப்படி செல்ல முடியும்? என்று யோசித்து, அகத்தியர் சொன்னால் ஏதேனும் விஷயம் இருக்கும் என்று உணர்ந்து, நண்பர்களை அழைத்து, அவர்களுடன் புறப்பட்டேன்.

அடுத்த நாள் காலை கஞ்சமலையில் முருகர் தரிசனம் பெற்று, அகத்தியர் சொற்படி, ஒரு நல்ல இடமாக தேர்ந்தெடுத்து, அமர்ந்து, நாடியை பிரித்தேன்.

பிரித்த வேகத்திலே அகியத்தியரின் அருள் வாக்கு வந்தது.  
"நவ நாகரீக சொற்படி, சிறிது இடைவேளைக்குப் பிறகு அகத்தியன் தொடர்கிறேன். இங்கு ஒரு அதிசயத்தை நீ பார்த்தாயா? இங்கிருந்து மேற்குப்புரம் இருக்கிற என் உருவத்துக்கு தொந்தியை அதிகமாக்கி, என்னை வயதான கிழவன் போல் ஆளாக்கிவிட்டீர்கள். லோபாமுத்திராவை, 18 வயது இளம் பெண்ணாக காட்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். மனிதர்கள் எப்படிப் பட்டவர்கள் என்று யோசித்துப் பார்த்தேன்.  என்னையே கேலி செய்கிறான். எனக்கு வயது எழுபதாம், அவளுக்கு 18ஆம். அந்த உருவத்தில் தான் உருவச்சிலை அமைந்திருக்கிறது.  அதை விட்டுவிடு. நீ உட்கார்ந்த இடத்தில் அகத்தியன் வாக்கு உரைக்கப் போகிறேனே, இடத்துக்கு மேலே அகத்தியன் சிலையும் இருக்கிறது. அதைப் பார். அதை 90 வயது கிழவனாக காட்டியிருக்கிறார்கள். எப்படியடா இந்த வித்யாசம். ஆக, அகத்தியன் சொல்வதை யாருமே நம்ப மறுக்கிறார்கள் என்பதைத்தான் சொல்லிக் காட்டினேன்.  நான் அப்படிப் பட்டவனல்ல என்று என்னை நானே, சுய புராணம் போட்டு உங்களிடம் அடிக்கடி ஞாபகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நானே இருக்கிறேன் என்று சொல்லத்தான் இதை ஆரம்பித்தேன்.  ஆகவே, மனிதர்கள், நினைத்தால், கடவுள்களை, எப்படிவேண்டுமானாலும் மாற்றுவார்கள் போலும். ஆகவே, கடவுள் இதை எல்லாம் தாண்டி நிலையாக இருப்பவன். இதெல்லாம் தாண்டி இருப்பவன், ஆசைக்கு அப்பாற்பட்டவன் என்றாலும் கூட, மனிதர்கள் எப்படியெல்லாம் தங்கள் ஆசைக்கு, ஒரு உருவம் வரைந்து, தெய்வங்களை மறு பரிசீலனை செய்வது போல, இதை எல்லாம் மாற்றி அமைத்திருக்கிறார்கள் என்று லேசாக எடுத்துக் காட்டினேன். அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இந்த புனிதமான இடத்தைப் பற்றி, ஏதாவது செய்தியை சொல்லித்தான் ஆகவேண்டும். யாருக்கும் தெரியாது தெய்வ ரகசியங்கள் என்று பல நேரங்களில் சொல்லியிருக்கிறேன். தெய்வ ரகசியங்களை எல்லாம் அகத்தியர் மைந்தனுக்கு அவப்போது உரைத்திருக்கிறேன். எந்தவித காரணம் கொண்டும், இதை வெளியே சொல்லக் கூடாது என்று சொல்லியிருக்கிறேன். அப்படி எதற்காக சொல்கிறாய் என்று கேட்ப்பான். அவனுக்கு தெரிய வேண்டும், காலத்துக்கு முன்னாலே, உங்களுக்கெல்லாம் பின்னாலேதெரிய வரும். பெரும்பாலும் இருப்பவர்கள் எல்லாம் அவசரக் குடுக்கைகள். சந்தோஷத்தை கட்டுப் படுத்த முடியாமல், ஆன்மீகத்தில் பரவசம் அடைந்து, தங்களை, தாங்களே என்ன செய்கிறோம் என்று தெரியாமல் அப்படியே எல்லோரிடமும் சொல்லிவிடுவதால், நல்லதை விட கெடுதலே அதிகம் நடக்கிறது. சில சமயம் நடக்காமலே போய் விடுகிறது. மனதை அடக்க பழக வேண்டும் என்பதற்காகவும், வாழ்க்கை துணையாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், துக்கமும் வாழ்க்கையும், இரண்டும் கலந்தது என்றுதான், மனம் எப்படியெல்லாம் துடிக்கிறது, வாழ்கிறது என்று சொல்லத்தான், சில சூட்ச்சுமா ரகசியங்கள் எல்லாம் சொல்ல வேண்டும். அகத்தியன் உங்களுக்கெல்லாம் ஆன்மீக பாடங்களை நடத்த வரவில்லை. சில அதிசயமான செய்திகளைச் சொல்லி, இந்த பழம் பெரும் தமிழ்நாட்டில், எப்படி எல்லாம் சித்தர்கள் வாழ்ந்தார்கள் என்று சொல்லி, என்ன மாதிரி எல்லாம் உலகத்தை ஆட்டி வைக்கிறார்கள் என்பதெல்லாம் சொல்லி, இவற்றை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும், ஏன் என்றால் நீங்கள் சித்த நிலையை நோக்கி வந்து கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு சரியான முறையில் பாடம் கற்பிக்காவிட்டால், நீங்கள் திசை மாறி போய்விடக் கூடும். அதற்காகத்தான் அவ்வப்போது ஒரு சில பாடங்களை  சொல்லுகிறேனே தவிர, நான் உனக்கு ஞானத்தை போற்றும் .குருவாக அல்ல. ஏன் என்றால், ஞானம் என்பது அவ்வளவு எளிதில் கிடைக்காது. அனுபவம் கிடைக்காததெல்லாம் தந்திருக்கிறேன் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஏன் என்றால், இந்த ஆன்மீக பயணம் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த செய்திகள் சித்திக்கும். ஆன்மீக பயணம் இல்லாமல் அவசரக் குடுக்கைகள், எத்தனையோஆசைகளை மனதில் வைத்துக் கொண்டு செல்பவர்களுக்கெல்லாம் இந்த அகத்தியன் சொல்கிற வார்த்தைகள் ஏறாது. அகத்தியனை நம்புகிறார்கள், அது வேறு கதை. அகத்தியன் சொல்கிற வார்த்தைகளில் சூட்ச்சுமம் இருக்கிறது என்று சொல்ல, என்னை நானே கட்டாயப் படுத்திக் கொள்ள தலைப் பட்டிருக்கிறேன். காரணம், தெய்வ ரகசியங்கள் எல்லாம் மிக அற்புதமானது. இது போன்ற ரகசியங்கள் எல்லாம் இந்த பூமியில் இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிறது. ஆக, இதெல்லாம் அகத்தியன் உட்பட அத்தனை சித்தர்களும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு, இந்த மாந்தர்க்கு தெரிவித்தால் நன்றாக இருக்குமே என்ற பரந்த மனப்பான்மையுடன், அது வேறு விதமாக திசை மாறிவிடக் கூடாது என்பதற்காகத்தான், எங்களை நாங்களே வார்த்தைகளை கட்டுப் படுத்திக் கொண்டு, மனதை சுத்தப் படுத்திக் கொண்டு, சிறிதாக, ஆனால் சுருக்கமாக, சூட்ச்சுமா ரூபத்திலே நாங்கள் சில வார்த்தைகளை சொல்ல வேண்டி இருக்கிறது.

கந்த ஆஸ்ரமம் என்று இதற்கு பெயர் வைத்திருக்கிறது. இதற்கு முன்பு, முருகப் பெருமான், சிறு வயது முதலே, இங்கு தான் நடமாடியிருக்கிறான், விளையாடி இருக்கிறான். சிறுவனாக தவழ்ந்து, மலர்ந்த இடம் என்று சொன்னால், நிறைய பேருக்கு தெரியாது. அது வேறு ஒரு இடமாயிற்றே, அதெப்படி முருகன் இங்கு வந்தான் என்று கேள்வி கேட்ப்பார்கள். ஏன் என்றால், இங்கு தான் முருகப் பெருமான் காலில் மணி ஓசை ஓட, இடைப்பட்ட மேகலா ஆபரணம் ஆட, கழுத்தில் மணி தொங்க, பூத்து, கண்ணில் அறிஒளி பொங்க, குடு குடுவென்று ஓடி வந்த இடமடா இது. பாலமுருகனை நீங்கள் பார்த்ததில்லை. அகத்தியன் பார்த்திருக்கிறேன். அந்த பால முருகன் எப்படி எல்லாம் விளையாடினான் தெரியுமா? அவன் அருமையான கன்னங்களில் இருந்து வருகின்ற சிரிப்பொலி எல்லாம், இந்த மலைப்புரத்தில் ஒரு காலத்தில் எதிரொலித்தது. 29 மலைகள் இங்கிருக்கிறது என்று சொன்னேன். இந்த 29 மலைகளிலும், பால முருகன் தன் பிஞ்சு விரல்களால் நடமாடியிருக்கிறான்.  சிறுவனாக ஓடியிருக்கிறான்.  தேடிப்பிடிக்க முடியாமல் பெண்மணிகள் எல்லாம் காணாமல் திகைத்திருக்கிரார்கள். செல்லுவான், அங்கு வருவான். இப்படி 29 மலைகளிலும். பிறகு தான் தெரிந்தது, 29 மலைகளிலும் எத்தனை ரகசியங்கள் இருக்கிறது என்று.  எல்லோருக்கும் காட்டவே, இந்த பால முருகன் பல அதிசயங்களை செய்து காட்டினான் என்று, அந்த கார்த்திகை பெண்களுக்குத் முதலிலே தெரியாது.  அதையும் தாண்டி வருகிறேன். பாலனை பற்றி சொல்லிக் கொண்டு போனால், நேரம் அதிகமாகும். 

முருகன் பார்த்தான். தனக்கு ஒரு அதிகார நந்தியாக ஒரு வாகனத்தை ஏற்படுத்திக் கொடு என்று அப்பனை கேட்டான். அம்மன் ஆனா தாயைப் பார்த்தான், அவளோ, சிம்ஹ சொருபிணியாக இருக்கிறாள். ஒருவர் சிம்மம், ஒருவர் காளை என்று முரட்டுத்தனமாக போய் கொண்டிருப்பது சரியாகத் தோன்றவில்லை. இதெல்லாம் எனக்குப் பிடிக்காது. எனக்கு மென்மையான வாகனம் வேண்டும் என்று கேட்ட பொழுது தான், இங்கே தான் முருகன் தன் வாகனமான மயிலை தேர்ந்தெடுத்த இடம்.

சித்தன் அருள்................ தொடரும்

Friday, 13 June 2014

அகத்தியப் பெருமான் தங்கி வழிபட்ட கோவில்கள் - சென்னை!


அகத்தியப் பெருமான் தங்கி வழிபட்ட கோவில்கள், இவ்வுலகில் பலப்பல. ஒவ்வொரு முறையும் அப்படிப்பட்ட கோவில்களுக்கு செல்லும் பொழுது ஏதோ ஒரு அதீதமான சக்தி என்னை ஆட்கொள்வதை உணர்ந்திருக்கிறேன். ஒரு நண்பர் சென்னையில்  அகத்தியப் பெருமான் வழிபட்ட கோவில்கள் பற்றி அனுப்பித்தந்தார்.  அகத்தியர் அடியவர்கள் அனைவரும் தெரிந்து கொள்வதற்காக அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.  இந்த தகவல் முழுமை பெற்றது என்று சொல்ல வரவில்லை. இதில் சொல்லப்படாத கோவில்களும் இருக்கலாம். அப்படி உங்களுக்கு தெரிந்த கோவில்கள் இருந்தால் நீங்களும் தெரிவியுங்கள். எல்லோரும் அறிந்து கொள்வோம்.

  • அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோவில் -காஞ்சிபுரம்
  • அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோவில் -திருவொற்றியூர், சென்னை
  • அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோவில்-தண்டையார்பேட்டை, சென்னை
  • அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோவில்-நல்லூர் கிராமம், சென்னை
  • அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோவில்-சோழி பாளையம், சென்னை
  • அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோவில்-கொளத்தூர், சென்னை
  • அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோவில்-நுங்கம்பாக்கம், சென்னை
  • அருள்மிகு அகத்திஸ்வரர்,திருவேள்வீசுவரர் திருக்கோவில்-வளசரவாக்கம், சென்னை
  • அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோவில்-வேலப்பன் சாவடி, சென்னை
  • அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோவில்-சித்தாலபாக்கம், சென்னை
  • அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோவில்-வேங்கடமங்கலம், சென்னை
  • அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோவில்-வில்லிவாக்கம், சென்னை
  • அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோவில்-மிட்டனமல்லி,ஆவடி, சென்னை
  • அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோவில்-பொழிச்சலுர், சென்னை
  • அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோவில்-பூந்தன்டலம், சென்னை
  • அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோவில்-கொளப்பாக்கம், சென்னை
  • அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோவில்-பவுஞ்சூர், சென்னை
  • அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோவில்-அணைக் கட்டு சேரி, சென்னை
  • அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோவில்-குரோம்பேட்டை, சென்னை
  • அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோவில்-பழைய பெருங்களத்தூர், சென்னை
  • அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோவில்-நெடுங்குன்றம், சென்னை
  • அருள்மிகு அகத்திஸ்வரர் திருக்கோவில்-சோனலூர்,மாம்பாக்கம், சென்னை.
  • அருள்மிகு மருந்தீசுவரர் திருக்கோவில்-திருவான்மியூர், சென்னை.

ஓம் லோபமுத்திரா சமேத அகத்தீசாய நமஹா!

Thursday, 12 June 2014

சித்தன் அருள் - 178 - சுகம் தரும் சுந்தரகாண்டம்!

[புகைப்பட நன்றி:திரு.சரவணன்]

அகத்தியப் பெருமானின் "ஜீவநாடி" என்னிடம் வந்து சேர்ந்தபின், என் வாழ்க்கையில் நிறைய ஆச்சரியப்படுகிற அளவுக்கு நல்லது நடந்தது என்பதே உண்மை. என் தாயார் கோடிக்கணக்கில் "ஸ்ரீராமஜெயம்" எழுதியதால் இந்த அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்று பின்னர் அகத்தியரால் சொல்லப்பட்ட பொழுது, நான் மிகவும் அகமகிழ்ந்து போனேன். ஆம் அனைவருக்குமே எல்லாமும் கிடைக்க ஊன்றுகோலாய் இருப்பதே அவரவர் பெற்றோர்கள்தானே. ஜீவநாடியால், ராமர், சீதா, லக்ஷ்மணர், ஆஞ்சநேயர், ராகவேந்திரர், நரசிம்ஹர், வேங்கடவர், சிவபெருமான், முருகர், பிரம்மா, சரஸ்வதி போன்ற தெய்வங்களின் காட்ச்சியும், அருளும் எனக்கு கிடைக்க காரணமாக அகத்தியர் இருந்தார். அந்த காட்சி கிடைத்த நிமிடங்கள் என்பது வாழ்வில் மறக்க முடியாத தருணங்கள்.

ஒரு நாள் ஆஞ்சநேயரை வேண்டிக்கொண்டு த்யானத்தில் அமர்ந்த பொழுது ஒரு வேண்டுகோளை அவர் முன்னே வைத்தேன்.

"எல்லோரும் சுந்தர காண்டம் எழுதியிருக்கிறார்கள். அதுபோல் நானும் உங்கள் புகழை எழுதவேண்டும். அதற்கு அருளவேண்டும்!" என்றேன்.

"தலையாய சித்தராம் அகத்தியன் தானிருக்க - அன்னவரே உனக்கு வழி காட்டுவார்" என்று காட்சி தந்து அருளி மறைந்தார்.

ஒரு நாள், அகத்தியர் நாடியில் அனுமன் காட்சி தந்து அசரீரியாக சொன்னதை சொல்லி கேட்ட பொழுது, 

"பொறுத்திரு தயரதன் மைந்தா - பூலோகப்புண்ணியன், சாரதா தேவியின் மைந்தன் அவன் தரிசனத்தால் - அஞ்சனை மைந்தனின் அவதாரம் நும்மால் எழுதவரும்.  யானும் துணை இருப்பேன். என அருளாசி" என்று அகத்திய மாமுனி வாழ்த்தினார்.

20 வருடங்கள் உருண்டோடியது. நானும் சாரதா தேவியின் மைந்தன் என்று யாராவது ஒருவர் பத்திரிகை ஆரம்பிப்பார், அதில் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருந்தேன்.

ஆனால் மகா ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மகா சந்நிதானப் பெரியவர் சிருங்கேரி சுவாமிகள் அனுக்ரகத்துடன் "அம்மன் தரிசனம்" என்னும் பக்தி நூல் மாதா மாதம் வரும் என்பதும், இதைத்தான் புண்ணியன் சாரதா தேவியின் அம்மன் தரிசனம் என்று அகத்தியர் உரைத்தார் என்பதும் எனக்கு அப்போது தெரியவில்லை. அம்மன் தரிசனம் நூலில் பல கட்டுரைகள் எழுதி வந்தாலும், சுந்தரகாண்டம் பற்றிய நினைப்பு வரவே இல்லை. இடையில் ஏதோ ஒரு காரணத்தால், தொடர்ந்து எழுதுவது முடியாமல் போனது.

மறுபடியும் அந்த பத்திரிகையிலிருந்து அழைப்பு வரவே, அகத்தியர் நாடியில் அதை பற்றி கேட்ட பொழுது,

"அன்றே சொன்னோம் அகத்தியன் யாமும், முற்றிலும் மறந்தனை. மூலத் திருமைந்தன் விந்தைமிகு அனுமன் காண்டம் வெளிவர, மூன்றாம் பிறவி எடுத்த மூதாதைக் கவிஞர் முருகன் பெயருடைய தாசனிவன் - சாரதா அன்னையவள் அரும் பெயரால் - ஆற்றிவரும் தரிசனத்தில் தொடரட்டும் அனுமன் வலம்" என்று உத்தரவு கொடுத்தார்.

அனுமன் அனுகிரகத்தோடு இருபது ஆண்டுகளுக்கு முன் அகத்தியர் வாழ்த்துக்களோடு வந்த சொல்படி பின்னர் "சுகம் தரும் சுந்தரகாண்டம்" என்னும் தலைப்பில் வால்மீகி ராமாயணத்தை, நம் தமிழ் பெரும் கவி சக்ரவத்தி கம்பன் பெருமானுடன் ஒப்பிட்டு அந்த தொகுப்பை வெளியிட்டேன். 

அதில் ஆச்சரியம் என்னவென்றால், இன்ன தசா புக்திக்கு இந்த சுலோகம் வாசிக்கவும் என்று அகத்தியர் இடையில் நுழைந்து வாக்கு தந்தார்.

உண்மையை சொல்வதானால், இதை நான் எழுதவில்லை. அனுமனும், அகத்தியரும் சேர்ந்து எழுத்து உருவில் கொண்டு வந்தார்கள் என்பதே உண்மை. ஆதலால், இந்த "சுகம் தரும் சுந்தர காண்டம்" எல்லாருடைய வாழ்க்கையிலும் ஆனந்தத்தை தரும் என்றால், அந்த பெருமை அவர்கள் இருவரையுமே சாரும். 

இந்த தொகுப்பில், என்னென்ன தசைகள் நடந்தால் என்னென்ன பிரச்சினைகள் வந்தால் சுந்தர காண்டத்திலுள்ள எந்த ஸ்லோகத்தைச் சொன்னால் நற்பலன் கிடைக்கும் என்பது குறிப்பிட்டுள்ளது. இந்த சுந்தரகாண்டத்தை கையில் வைத்திருந்தாலே, "கெடுதல்" என்பது ஒரு போதும் ஏற்படாது என்பது திண்ணம், ஏன் என்றால் இதில் உள்ள வார்த்தைகள், அனுமன் ஆசிர்வாதத்துடன், அகத்தியர் உபதேசத்துடன் வெளிவந்தது.

இந்த தொகுப்பில் அகத்தியப் பெருமான் காட்டிக் கொடுத்த ஸ்லோகங்களை வாசித்து தம் வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகளை விலக்கிகொண்ட பலரும் எனக்கு நன்றி தெரிவித்த பொழுது, அனுமனுக்கும், அகத்தியருக்கும் நான் நன்றி சொன்னேன்.

அகத்தியர் அடியவர்களே!  

​மேற்சொன்ன விஷயங்களை அறிந்தவுடன், நான் யாரேனும் அந்த தொகுப்பை புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்களா என்று தேடினேன். என் நண்பரிடமும் கூறினேன். ஒரு நாள் செய்தி வந்தது. புத்தகம் வாங்கிவிட்டதாகவும் உடனேயே அனுப்பி வைப்பதாகவும் சொன்னார். அந்த புத்தகம் வந்து சேர்ந்து வாசித்த பொழுது, எத்தனையோ பிரச்சனைகள் என்னை விட்டு விலகியது. நினைத்தது நடந்தேறியது. எல்லாம் அகத்தியரின் கை வண்ணம்.

யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக என்கிற நோக்கத்தில், அது எங்கு கிடைக்கும் என்கிற நோக்கில் விவரங்களை கீழே தருகிறேன். நம்பிக்கை உள்ளவர், விருப்பம் உள்ளவர் அதை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள், தினமும் வாசித்து வாருங்கள். நல்ல பலனை அடைவீர்கள். புத்தக வெளியிட்டாளர்களுக்கு வியாபாரம் ஆகவேண்டும் என்கிற நோக்கில் இதை இங்கு தெரிவிக்கவில்லை. இதில் வியாபார உத்தியே கிடையாது. நீங்கள் எல்லோரும் நல்லபடியாக, அகத்தியர் அருளால் வாழவேண்டும் என்கிற நோக்கில் கூறுகிறேன். அத்தனை பெருமையும் அகத்தியர் பாதங்களுக்கே.

புத்தகத்தின் பெயர் : "சுகம் தரும் சுந்தரகாண்டம்"

கிடைக்கும் இடம்:-

அருள் மிகு அம்மன் பதிப்பகம்
16/116, T.P.கோயில் தெரு,
திருமலா ப்ளாட்ஸ்,
(ஸ்ரீ ராகவேந்திரா மடம் எதிரில்)
திருவல்லிக்கேணி, சென்னை - 600 005
தொலைபேசி: 42663546, 42663545
ஈமெயில்:arulmiguammanpathippagam@yahoo.com
​சித்தன் அருள் .............. தொடரும்!​

Thursday, 5 June 2014

சித்தன் அருள் - 177 - ஆதிசேஷன் தரிசனம்!

[புகைப்பட நன்றி: திரு சரவணன், மலேஷியா]

ஆனால் அதற்காக அவர்களை குறை சொல்ல மாட்டேன். அவர்களுக்கு வேறுவழியில் அகத்தியன் தரிசனம் கிடைக்கும். அதுமட்டுமல்ல, எப்போதும் அனைவருக்குமே தரிசனம் காட்டவேண்டும் என்று, சித்தர்கள் ஒளி வடிவில் உலா வருவார்கள். அன்றைய தினம் 18 சித்தர்கள் ஒளிவடிவமாக காணவில்லையா? 18 சித்தர்களும் ஒன்றாக சேர்ந்து கண்ணீர் விட்டார்களே! இல்லை என்று சொல்ல முடியுமா? இன்னொன்று சொல்கிறேன். ஒரு சித்தனே மனித உருவமாக வந்து பாறையில் படுத்துக் கிடந்தானே. சற்று தவறி விழுந்திருந்தால், 2000 அடி பள்ளத்தில் விழுந்திருப்பானே. ஏன் நிகழவில்லை. அவன் சித்தனடா! அந்த சித்தனை தரிசனம் செய்தீர்களே. இத்தனை அரிய காட்சிகள் எல்லாம் யாருக்கு கிடைக்கும்? 

அன்றாடம் சதுரகிரி மலையில் ஆயிரமாயிரம் இந்த சித்துக்கள் நடந்து கொண்டிருக்கிறது. அதை அகத்தியன் மட்டும் அறிவேன். அகத்தியன் மைந்தனுக்கும் சொல்லிக் கொடுக்கிறேன். அவன் விருப்பபட்டு, ஓலைச்சுவடியில் காணவேண்டும் என்றால், அவன் கண்ணுக்கு மட்டும் காட்சி கிடைக்க அதிகாரம் கொடுத்திருக்கிறேன். அந்த பாறையில் படுத்துக் கிடந்தானே ஒருவன்; பதறிப் போனார்களே இவர்கள். சற்று விலகியிருந்தால் அவன் 2000 அடி பள்ளத்தில் விழுந்து இறந்திருப்பான். விழுந்திட, அவன் சித்தனடா. எப்படியடா விழுவான். அவன் தான் அந்தரத்தில் தொங்கிக் கொண்டே தூங்கிக் கொண்டிருக்கிறானே. அவன் எப்படி விழுவான்? சித்தனையே காட்டியிருக்கிறேன் மனிதர்களுக்கு. ஏன் என்றால் பலருக்கும் சித்தன் கண்ணுக்கு தென்படுவாரா? ஒளிவடிவாகத்தான் தென்படுவாரா என்ற கேள்வி. ஒளிவடிவமாக சித்தர்கள் காட்சி தந்தாலும், முழுவடிவில் சித்தர்கள் நடமாடுவதை காட்டியிருக்கிறேன். அந்த காட்சிகள் யாருக்கு கிடைக்கிறதோ அவர்கள் பாக்கியசாலிகள்.  எத்தனையோ பாபங்கள் இருந்தாலும், தெரிந்தோ தெரியாமலோ, காலத்தின் கட்டாயத்தால் செய்திருந்தாலும், அவர்கள் மனிதர்கள். நான் குறை சொல்ல மாட்டேன். அவர்கள் கட்டாயம் அந்த பாபத்தை செய்தாகவேண்டும். செய்தால் தாண்டா புண்ணியம் வரும். ஆனால் சில பாபங்களை அளவுக்கு மீறி செய்யக் கூடாது. செய்த பாபத்தை நினைத்து வருந்தினால், மோக்ஷம் கிடைக்கும். இவைகள் எல்லாம் விதிகளில் எழுதப்பட்டிருக்கிறது. ஆக, தெரிந்தோ, தெரியாமலோ, பிழைப்புக்காக, குடும்பத்துக்காக, உலகியல் வாழ்க்கைக்காக, சில தவறுகளை செய்யவேண்டிவரும். அந்த தவறுகள் இறைவன் படைப்பு. ஆக, அந்த இறைவன் படைத்த விதியை, அகத்தியன் எதிர்த்து போராடமாட்டேன். அவர்கள் வாழ்க்கையிலும் நல்லதை செய்வதற்காகத்தான், எத்தனையோ அதிசயங்களை செய்து வருகிறேன். என்னடா இது சம்பந்தம் இல்லாமல் எங்கெங்கோ நுழைகிறானே, என்றெல்லாம் எண்ணம் வருகிறதா. ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் இருக்கிறது. எவன் ஒருவன், அகத்தியன் பால், சரணாகதி என்று விழுந்துவிட்டானோ, அவனுக்கு எந்த வித குறையும் இல்லாமல் பார்க்க வேண்டியது அகத்தியன் கடமை. அகத்தியன் அவர்களையும் காப்பாற்றுவேன், என்ற மங்களமான வார்த்தையை சொல்லி, 18 சித்தர்களையும் ஒளிவடிவமாக, காட்டியிருக்கிறேன். முக்கண்ணனையும் காட்டியிருக்கிறேன். முத்தேவர்களையும் காட்டியிருக்கிறேன். அகத்தியன் செய்த அந்த யாகத்தின் வாசனையை நுகர வைத்திருக்கிறேன். சித்தர்கள் வழி நடத்தி, இறங்கி, பத்திரமாக கொண்டு சேர்ப்பது வரை காட்டியிருக்கிறேன்.

பைரவசித்தர், வந்தாரே தெரியுமா? அந்த பைரவ சித்தர் அங்கு வந்து, நோட்டம் கொடுத்து, தலையை சாய்த்து, சித்தர்களோடு நடந்து பின் நோக்கி போன காட்ச்சியை கண்டீர்களே. ஏன் வந்தார் தெரியுமா? மிகப் பெரிய சர்ப்பம், ஆதி சேஷன் அங்கு தான் அமர்ந்திருந்தான். அன்னவனும் அகத்தியன் நடத்துகின்ற யாகத்தை கண்டு களிக்க அமர்ந்த இடம் அது. அவனுக்கு எப்போதும் இருட்டு தேவை. பாம்பென்றால் இருக்க குழி தேவை. அங்கிருந்து மூச்சுவிட்டு, அகத்தியன் செய்த யாகத்தை கண்டான். யாரும் நடந்திருந்தால், அவன் மூச்சு பட்டிருந்தால், மயக்கம் போட்டு விழுந்திருப்பார்கள். விஷம், ஆலகால விஷம் அங்கிருந்தது. அந்த கார்க்கோடகனே அங்கு வந்து அமர்ந்ததையும், பைரவர் அதை எடுத்துக் காட்டி நடந்ததையும் யோசித்துப் பார். ஒருமுறை தலை சாய்த்து, மறுபடியும் தலை சாய்த்து, ஆதிசேஷனை வணங்கி, அவன் உத்தரவையும் வாங்கி, பைரவ சித்தர் தலை குனிந்து நடந்ததையும் தொடர்பு படுத்திப் பார். தப்பித்தவறி, அந்த விஷம் பட்டிருந்தால், அந்த விஷக் காற்று பட்டிருந்தால்; ஆதி சேஷன் யாருக்கும் கெடுதல் செய்ய மாட்டான். கார்க்கோடகன்தான் அவன். ஆனால், சீறமாட்டான். அன்றைக்கு அவன் வந்திருந்ததெல்லாம், அமர்ந்திருந்தது எல்லாம், கண் மூடி அகத்தியன் செய்கிற யாகத்தை நோக்கியே இருந்தது. அவன் கண் திறந்திருந்தால் நிலைமை வேறு. அவன் த்யானத்தில் இருக்கும் போது தான் இவன் உள்ளே சென்றிருக்கிறான். த்யானத்தில் இருக்கும் பொழுது, த்யானம் கலைக்க கூடாது என்று, யாரையும் போக விடவில்லை. தவசிகள், முனிவர்கள், முனி புங்கவர்கள் அத்தனை பேர்களுமே அங்கு அமர்ந்திருந்த காலம். அவர்கள் த்யானம் கெடக் கூடாது என்பதற்காகத்தான், யாரையுமே அங்கு செல்லாமல் தடுத்தாட்கொண்டார். அது யாரென்று யாம் அறியேன்!

இத்தகைய வாக்குகளை முன் கூட்டியே எச்சரிக்கை செய்த காரணம், அவனது வாக்கில் சித்தர்களே வாயிருந்து தடுத்ததுதான். அதை அவனாகச் சொல்லவில்லை. சமயத்தில் சொல்ல வைத்தோம். யாகம் செய்கிறபொழுது, தொந்தரவு செய்யக் கூடாது. யாகத்தில் கலந்து கொண்டவர்கள் அவன் கோபத்துக்கு ஆளாக வேண்டிவரும். ஆக! எவ்வளவு ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும் தெரியுமா? மலை மேல் ஏறிவிட்டால் மகானை தரிசனம் செய்துவிடுவோம் என்று எண்ணிவிடக்கூடாது. மகான்களின் தரிசனம் கிடைப்பது அவ்வளவு எளிதல்லவே. ஆக பல பிரளயங்களுக்கு பிறகு நடந்த ஒரு யாகத்தைத்தான் இவர்கள் கண்டிருக்கிறார்கள். 18 சித்தர்கள் மட்டுமல்ல, வழி எங்கும் சித்தர்களை நடமாட விட்டேன், பாதுகாப்புக்காக.  யாருக்கும் எந்த வித அசம்பாவிதமும் நடக்காமல், அன்றைய தினம் பத்திரமாக  வேண்டும். அன்று யாருக்குமே எந்த வித அசம்பாவிதமும் நடக்கவில்லை. ஆனால் அன்றைக்கு மறுநாளைக்கு, அங்கிருந்த இரு பசுக்கள், புலியால் கொல்லப்பட்டு இருக்கிறது. அந்த அடர்ந்த வனத்துக்கு எட்டு காத தூரம் தள்ளித்தான் புலிகள் உலாவும். புலியின் உறுமலும், கரடியின் கர்ஜனையும் பலருக்கும் காதில் விழுந்திருக்கும். எதற்காகச் சொன்னேன் என்றால், அது வேற கதை. தவறான இடம் நோக்கிச் சென்றதால், அந்த பசுமாடுகள், அங்கு போகக்கூடாத இடங்கள் சில உண்டு. அதை மீறி சென்றதால், அந்த பசுமாடுகள் கொல்லப்பட்டது. அது விதி, உயிர் கொலை அல்ல. ஒரு சித்தன் தான் அந்த புலியாய் இருந்து அந்த பசுமாடுகளை மோக்ஷத்துக்கு அனுப்பிவைத்தான். இதைத்தான் சொன்னேன், பல அதிசயங்களும் சதுரகிரியில் அன்றாடம் நடக்கிறது. எதற்காகச் சொல்லுகிறேன் என்றால், இதுபோல அதிசயங்கள், 11247 அதிசயங்கள் சதுரகிரியில் நடந்து இருக்கிறது. அது ஒவ்வொன்றும் சொல்லவேண்டும் என்றால் யுகம் காணாது. அகத்தியன் சொல்வதை வேகமாக உங்களால் குறித்துக் கொள்ள முடியாது. அந்த கதைகளை பேச வேண்டிய நேரம் இது இல்லை. அஸ்வினி நட்சத்திரம் மறைந்து, பரணி நட்சத்திரம் உதயமாகிக்கொண்டு இருக்கிற நேரம் இது. இதுவரை சதுரகிரி சென்றதெல்லாம், கண்டதெல்லாம், அகத்தியன் சொன்னபடி நடந்ததெல்லாம் அத்தனையும் பக்குவமாய் இருந்தது. அகத்தியனே மனம் மகிழ்ந்து போனேன். யார் யாருக்கு இந்த பாக்கியங்கள் எல்லாம் கிடைக்கவேண்டுமோ கிடைத்தது. யார் யார் செய்த புண்ணியங்கள் எல்லாம் பிரிந்தது, கழிந்தது. செய்த தவறுகளுக்கும் பிராயச்சித்தமாகவே, இங்கு வரச் சொல்லியிருக்கிறேன். உங்கள் அத்தனை பேருக்கும் அந்த பாக்கியம் கிடைத்தது. இப்பொழுது யான் பொதிகை நோக்கி செல்லுகின்றோம். ஆங்கே சிவபெருமான் அமர்ந்து கொண்டிருக்கிறான். அவனுக்கு கால் பிடித்து விடவேண்டிய பொறுப்பு ஒன்று இருக்கிறது. அனைவருக்கும் அகத்தியனின் அருளாசி.

[அகத்தியர் அடியவர்களே, சித்தன் அருளில் சதுரகிரி பயணம் இத்துடன் நிறைவு பெற்றது. அகத்தியர் அருளால், எதேச்சையாக சதுரகிரி மகாலிங்கத்தை பார்க்கவேண்டும் என்று சென்ற எனக்கும், என் நண்பர்களுக்கும் அந்த யாகத்தில் பங்கு பெறுகிற பாக்கியம் கிடைத்தது என்பது, அளவிட முடியாத ஒரு சுகானுபவம். எங்கள் வாழ்க்கையும் அன்றே இனிதாக நிறைவு பெற்றது என்பதில் ஒரு சந்தோஷம். எல்லாம் அவர் செயல்.]

சர்வம் லோபமுத்திரா சமேத அகஸ்தியர் சித்தருக்கே சமர்ப்பணம்!

சித்தன் அருள்............. தொடரும்!