​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 28 March 2013

சித்தன் அருள் - 117


சித்தர்களின் அருள் பார்வை நம்மை சுற்றி எப்போதும் நிறைந்திருக்கிறது.  ஆனால் நாம் தான் அதை உணருவதில்லை.  கண் முன் நடக்கும் நிகழ்ச்சிகளில் கவனத்தை திருப்பி அதன் வழியில் சென்று எங்கெல்லாமோ அலைகிறோம்.  அவர்களும் பொறுமையாக இவன் அல்லது இவள் எப்போது இதை உணரப்போகிறார்கள் என்று நாம் நடிக்கும் வாழ்க்கை  நாடகத்தை கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள்.  என் நண்பர் அடிக்கடி சொல்வார்.  இந்த உலகத்தை சித்தர்கள், இறைவன் உத்தரவால் கட்டிக்காக்கிறார்கள்.  அதனால் தான் இன்றும் தர்மம் நிலைத்து நிற்க, நாம் எத்தனை மிகப் பெரிய தவறு செய்திருந்தாலும் மன்னித்தருளி, நம்மை நல் வழியில் நடத்தி செல்கிறார்கள்.  உலகத்தில் தர்மத்தின் பலம் கூடக் கூட, சுபிக்ஷம் என்றும் நிலத்து நிற்கும்.  நம்மிடம் உண்மையான எதிர்பார்ப்பில்லாத சரணடைந்த அன்பு இருந்தால் போதும்,  எந்த சூழ்நிலையிலும் நம்மை சுற்றி அவர்களின் ஒரு வளையம் நின்று காக்கும்.  இனி உண்மையாக நடந்த ஒரு நிகழ்ச்சியை பார்ப்போம்.

அது ஒரு ஏழ்மையான குடும்பம்.  கணவன் மனைவி, அவர்களின் மகன், அவன் மனைவி,  மகனும் அவன் மனைவியும் வேலைக்கு சென்று வருபவர்கள்.  இவர்களுக்கு இரு குழந்தைகள்.  குடும்பத்தலைவியான அந்த  அம்மையார் சித்தர்கள் மீது மிகுந்த பக்தி உடையவர்  கோவில்களுக்கு செல்வதில்லை.  ஆனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வீட்டிலேயே, தெரிந்தவர்கள் கொண்டு தந்த சித்தர்கள் படத்தை வைத்து பூசை செய்வார்.  அவருக்கு சித்தர்களை பிரித்து பார்க்கும் நோக்கு கூட தெரியாது.  அவரை பொருத்தவரை எல்லா சித்தரும் ஒருவரே 

தினமும் விடியற்காலையில் எழுந்து விளக்கேற்றி த்யானத்தில் அமருவார்.  த்யானத்தின் மிகுந்த நேரமும் "அசைவில்லா மௌனமே"  மந்திரமாயிற்று. நாள் விடிந்து வீட்டில் தேவைகளுக்கான அவசர வேலைகள் அழைக்கும் போது பூசையை முடித்துக்கொண்டு சமையலறைக்குள் புகுந்துவிடுவார்.

சில நாட்களில் ஆழ்ந்த த்யானத்தில் இருந்து விடவே, கணவர் வந்து அவரை உணர்த்த வேண்டிய சூழ்நிலைகளும் உருவாகும்.  ஒன்று இரண்டு நாட்கள் பொறுத்துப் பார்த்த கணவர் மெதுவாக எரிச்சலடைய தொடங்கினார்.

"வீட்டுக்கு வீடு வாசற்படி" என்பதற்கிணங்க அவர்கள் வீட்டிலும் பிரச்சினைகள் இருந்தது.  அவர்கள் பேரக் குழந்தைகளில் ஒன்று வாய் ஊமை.  எத்தனையோ விதமான மருத்துவ சிகிற்சை செய்தும், எல்லா மருத்துவர்களும் கை விரித்துவிட்டனர்.  ஆனால் குழந்தையின் உடலில் ஊமையாக போனதற்கான எந்த குறையும் காணப்படவில்லை.  தொண்டை குழாய், அதை சூழ்ந்திருக்கும் தசைகள், நரம்புகள் எல்லாம் சரியாக இருந்தும் "அம்மா" என்று ஒரு வார்த்தை கூட அந்தக் குழந்தை பேசி அவர்கள் கேட்டதில்லை.

அந்த அம்மையார், குடும்பத்தை சூழ்ந்து நிற்கும் இந்த பிரச்சினைக்கு விடை கேட்டு பிரார்த்தனை செய்யாத நாள் ஒன்று கூட இல்லை, எனலாம்.  சித்தர்கள் இருக்கிறார்கள், அவர்கள் அருள் நமக்குண்டு.  இருந்தாலும் இந்த பிரச்சினையை நாம் தான் அவர்களிடம் கொண்டு சென்று "ஏதேனும் ஒரு வழிகாட்டக் கூடாதா" என்று வேண்டிக் கொள்ளத்தான் வேண்டும் என்று ஆணித்தரமாக நம்புகிறவர் 

எதற்கும் ஒரு காலம் உண்டு.  சிலவேளை ஒரு நாடகத்தை சித்தர்கள் நடத்திய பின்னரே அருளுவார்கள்.

ஒரு நாள், பொறுமை இழந்த அவரது கணவர் அந்த அம்மையாரிடம் 

"நீயும் தினமும் பூசை செய்கிறாய்.  என்ன பலன்! நம் வீட்டுக் குழந்தையின் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்க மாட்டேன் என்கிறது.  அது என்ன பாபம் செய்ததோ! இங்கு வந்து இப்படி பிறந்து தானும் கஷ்டப்பட்டு பிறரையும் வேதனைக்கு உள்ளாக்குகிறது.  நீ பிரார்த்தனை செய்கிற சித்தர்கள் எல்லோரும் கண் மூடிக் கொண்டிருக்கிறார்களா? என்று நமக்கு விடிவுகாலம் பிறக்கும்?  இதற்கு விடை தேடாமல், சும்மா கண் மூடி "த்யானம்" என்று நேரத்தை கடத்துகிறாய்.  இதை எல்லாம் விட்டுவிட்டு, வீட்டு வேலையை கவனிக்கிற வழியை பார்.  போதும் நீ செய்கிற பூசை" என்று சற்றே கோபத்துடன் பேசினார்.

தன் புருஷன் சொன்னதை கவனிக்காமல் அவர் தான் செய்கிற பூசை, த்யானத்தில் ஒன்றிப்போய் இருந்தார்.  அவருக்குள் ஏதோ ஒரு வைராக்கியம் பிறந்தது.  "அவன் சொல்வதை புறக்கணித்துவிடு" என்று யாரோ சொல்வது போல் உணர்ந்தார்.

"சரி இப்போது கவனிக்கவில்லை. பிறகு பார்த்துக்கொள்ளலாம்" என்று வெளியே போய் பத்து நிமிடம் கழிந்து வந்து பார்த்த அவள் கணவர், அப்பொழுதும் அந்த அம்மையார் த்யானத்தில் அமர்ந்திருப்பதை பார்த்து,

"எத்தனை முறை உன்னிடம் சொல்லியாயிற்று, அப்படி உனக்கு எப்படி என் வார்த்தையை மீறுகிற தைரியம் வந்தது" என்று கேட்டுக் கொண்டே அந்த அம்மையாரை உதைத்து தள்ளினார்.

திடீர் தாக்குதலில் நிலை குலைந்த அவர் எழுந்து 

"என்னங்க! இப்படி பண்ணறீங்க.  என்ன தப்பு நடந்துவிட்டது?" என்று விசாரித்தார்.

"என்ன தப்பு நடந்ததா?  இங்க ஒருத்தன் நாய் மாதிரி நின்று கத்திக்கொண்டிருக்கிறேன், நீ பாட்டுக்கு எப்போதும் த்யானம் பூசை என்று உட்கார்ந்து விடுகிறாய்.  நீ இத்தனை செய்தும் ஒரு புண்ணியமும் இல்லை.  நம் பேரக் குழந்தைக்காகத்தான் என்று சொல்கிறாய்.  இன்றுவரை நீ பூசை செய்யும் சித்தர்கள் நமக்கு என்ன செய்து விட்டார்கள்? " 

என்று கூறி பூசை அறையில் இருந்த சித்தர்கள் படங்களை எடுத்து தூக்கி வீசினார்.

இதைக் கண்டு அரண்டு போன அம்மையார் 

"என்னங்க இப்படி பண்ணாதீங்க!   இது ரொம்ப பாவம்.  செய்யக்கூடாத தவறை செய்யறீங்க.  இதன் பலன் எப்படி வேண்டுமானாலும் நம் குடும்பத்தை தாக்கும்!  வேண்டாங்க!" என்று கண்ணீர் மல்க கீழே கிடந்த படங்களை எடுத்து பழயபடி அதன் இடத்தில் வைக்க தொடங்கினார்.

இதைக் கண்ட கணவர் 

"இந்த படங்கள் இருந்தால் தானே பூசை செய்வாய். .  இனிமேல் நீ இங்கு பூசையே செய்யக்கூடாது" என்று கூறி ஒவ்வொரு படத்தையும் இரண்டாக கிழித்துப் போடத் தொடங்கினார்.

இதைக் கண்ட அந்த அம்மையார் கதறி அழத்தொடங்கினார்.

கிழிந்ததையும் விட்டு வைத்தால் எடுத்து ஒட்டி பூசை அறையில் வைத்து மறுபடியும் பூசை செய்வார் என்று உணர்ந்து , அத்தனை படங்களையும் அந்த அறையில் ஒரே இடத்தில் குவித்து  வைத்து தீ மூட்டினார்.  தீ மள மளவென படங்களில் பரவ தொடங்கியது.

இதைக் கண்ட அம்மையார் அப்படியே மூர்ச்சையானார், அப்படியே தரையில் நினைவின்றி வீழ்ந்தார்.

புத்தியிழந்து மேலும் மேலும் தவறை செய்த கணவர், அந்த அம்மையார் நினைவிழந்ததை கூட ஒரு நாடகமாக நினைத்து அவரை கவனிக்காமல் வீட்டை விட்டு வெளியே சென்றார்.

ஒரு பக்கத்தில் தீ எரிந்து கொண்டிருக்க, அதன் அருகில் அந்த அம்மையார் நினைவிழந்து கிடக்க, வேறு யாரும் இல்லாத நேரத்தில், அந்தக் குழந்தை மெதுவாக நடந்து வந்து அந்த அம்மையாரின் மார்பின் மீதேறி படுத்துக்கொண்டது.  சற்று நேரத்தில் விரல் சூப்பிக்கொண்டே உறங்கிப்போனது.

எங்கிருந்தோ வீசிய காற்றில் அந்த அம்மையார் உடுத்தியிருக்கும் புடவையின் முந்தானை மெதுவாக விலகி தீ ஜ்வாலையில் பட நெருப்பு அவரின் முந்தானையில் பிடிக்கத் தொடங்கியது.

சித்தர்களின் படத்தை எரித்ததையும் விட, மிகப் பெரிய தவறாக அந்த அம்மையாரை நினைவு இன்றியும், வாய் பேசாத குழந்தையை தனியாக விட்டு வந்ததையும், எல்லாவற்றுக்கும் மேலாக தீயை ஆபத்தான பரவும் நிலையில் விட்டு வந்ததையும் உணர்ந்த அவள் கணவர், வேகமாக வீட்டுக்குள் ஓடினார்.

அவர் சென்று பார்த்த காட்சியில்  இருதயமே ஒரு நிமிடம் நின்று போனது.  நினைவிழந்த மனைவி, மார்பில் உறங்கும் பேரக் குழந்தை, நீண்ட முந்தானையில் தீ பிடித்து தோளை நோக்கிய அக்னியின் பயணம்.

சரேலென்று ஓடிச் சென்று குழந்தையை தூக்கியவர், அருகில் ஒரு பாத்திரத்தில் இருந்த தண்ணீரை எடுத்து அந்த அம்மையாரின் கழுத்தை நோக்கி சத்தம் போட்டுக்கொண்டே வீசினார்.

வீசிய அவசரத்தில் தண்ணீர் எங்கேயோ போய் விழுந்தது.  தீ அணையவில்லை.  இதற்குள் தீயின் திசை வேறு பக்கமாக பரவி பக்கத்தில் இருந்த திரைசீலையில் படர, இவர் போட்ட சப்ததத்தில் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடிவந்து தீயை அணைக்க, அந்த அம்மையாரை உடனடியாக தூக்கி வெளி அறைக்கு கொண்டுவந்து தண்ணீர் தெளித்து எழுப்பினார்.

நடந்தது ஏதுமறியாத அந்த அம்மையார் தன உடலில் துணி கருகிய வாசனை வர என்னவென்று பார்த்தார்.

முந்தானையின் பெரும்பாகம் கருகிப்போய் இருந்தது.

தன கணவரை நிமிர்ந்து பார்க்க, குற்ற உணர்வினால் அவர் தலை குனிந்து நின்றார்.

மெதுவாக எழுந்தவர், அவர் அறைக்குள் சென்று பார்க்க அத்தனை படமும் தீயில் சாம்பலாகியிருந்தது.

வருத்தத்துடன் அறைக்குள் சென்றவர் பின், கணவரும் சென்றார்.

உள்ளே சென்ற அம்மையார், உடை மாற்ற நினைத்து தன பெட்டியை திறக்க,

அதனுள் தீயில் அழிந்துபோன அத்தனை சித்தர் படமும் புது பொலிவுடன் இருந்தது.  இதை கண்ட கணவர் அரண்டு போய் தீ போட்ட அறைக்குள் சென்று பார்க்க 

அங்கே எரிந்து போன சாம்பல் கூட தடமின்றி மறைந்து போயிருந்தது.

அதிர்ச்சியுடன் அத்தனையையும் கவனித்துக் கொண்டிருக்கும்போது 

வாசலிலிருந்து யாரோ கூப்பிடும் சப்தம் கேட்டது.

வாசலுக்கு சென்ற கணவர் யாரோ ஒரு சாது நிற்பதை கண்டு எரிச்சலுடன் 

"என்னய்யா வேண்டும்?" என்று குரல் உயர்த்தி கேட்டார்.

"ரொம்ப தாகமாக இருக்கிறது! குடிக்க தண்ணீர் வேண்டுமே!" என்று சாவதானமாக கேட்டார்.

"கொஞ்சம் பொறுங்கள்" என்று கூறி உள்ளே சென்று தண்ணீருடன் வெளியே வந்து பார்த்த போது 

அவரை காணவில்லை.

ஒரு ஓலைச் சுவடி வாசற் படியில் இருந்தது.

கையிலிருந்த தண்ணீர் டம்ளரை கீழே வைத்துவிட்டு. அந்த ஓலையில் என்ன இருக்கிறது என்று பார்க்கலாம் என்று கை நடுக்கத்துடன் எடுத்தார்.

அதில் கீழ்வருமாறு எழுதியிருந்தது.

"மூடனே! இறை பக்தியுடன் இருந்து சொந்தமாக எதுவும் செய்யாத உன்னை, உன் மனைவியின் வேண்டுதலால் இத்தனை நாட்களாக காப்பாற்றி வந்தோம்.  எத்தனை தவறுகளை செய்வாய்.  சுயமாக நல்ல சிந்தனை செய்யாவிடிலும், அடுத்தவர் நம்பிக்கையை அழிக்க உனக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்?  உன் பேரக் குழந்தை பேச முடியாமல் போனது நீ உன் வாலிப பருவத்தில் எத்தனை மகான்களை தவறாக பேசினாய், திட்டினாய்.  அவர்களை தவறாக பேசிய சாபம் தான் குழந்தை வழியாக உன்னை இத்தனை நாட்களாக வருத்தியது.  இருக்கும் வாழ்க்கையில் நல்லது செய்யாவிடினும், நல்லதே பேசாவிடினும், பிறருக்கு தீங்கு விளைவிக்கவோ, பிறரை தவறாக பேசாமல் மட்டும் இருந்தால் போதுமானது.  அத்தனை தவறையும் மனம் போனபடி ஏற்று செய்துவிட்டு இன்று எங்களை குறை கூறுகிறாயே.  உனக்கு இதுவே கடைசி வாய்ப்பு!  முடிந்தால் பிறர் நம்பிக்கையை போற்று.  இல்லையேல் விலகி நில், பிறரை அவர் நம்பிக்கை படி வாழவிடு.  இன்னும் சில மாதங்களில் உன் பேரக்  குழந்தை பேச ஆரம்பித்துவிடும்." 

அத்தனைக்கும் கீழே ஒரு பெயர் இருந்தது.  அது "கருவூரார்" என்றிருந்தது.

அதிர்ந்து போன அவர், அந்த ஓலைச்சுவடியை கொண்டு போய் தன மனைவியிடம் கொடுத்துவிட்டு அமைதியாக நின்றார்.

அதில் எழுதியிருந்ததை படித்த அந்த அம்மையார் ஆனந்தக் கண்ணீர் விட்டார்.

"நான் நம்பிய சித்தர்கள் என்னை கைவிடவில்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறது" என்று கூறி அந்த ஓலைச்சுவடியை கண்ணில் ஒற்றிக்கொண்டார்.

உடனேயே அந்த ஓலைச் சுவடியை கொண்டு போய் பூசை அறையில் உள்ள கருவூறாரின் படத்தின் கீழ் வைத்து பணிவுடன் நமஸ்காரம் செய்தார்.

மறுநாள் விடியற்காலை, எப்போதும் போல எழுந்து குளித்து பூசை அறைக்கு சென்ற அம்மையாருக்கு ஆச்சரியம் காத்திருந்தது.

அங்கே விளக்கேற்றி வைக்கப்பட்டிருந்தது.  சாம்பிராணி, ஊதுபத்தி போன்றவையின் நறுமணம்.  

ஒரு ஓரமாக,........

இவருக்கு முன்னே எழுந்து அமைதியாக த்யானத்தில் அமர்ந்திருந்தார் அந்த கணவர்.  அவர்கள் வாழ்வில் அன்று ஒரு புது அத்யாயம் தொடங்கப்பட்டது.

சித்தர் அருளியது போல் சில மாதங்களில் அவர்கள் பேரக் குழந்தை மற்ற குழந்தைகளை போல் பேசத்தொடங்கி அந்த குடும்பத்தில் சந்தோஷம் மறுபடியும் தாண்டவமாடத் தொடங்கியது.

இன்று 

அந்த தம்பதியர்கள் சித்தர்களின் அடியவர்களாகவே மாறிவிட்டனர்.

சித்தர்கள் நம்முடன் எப்போதும் இருக்கிறார்கள்.  நம்மை சுற்றி நின்று நாம் செய்வதை பார்த்துக் கொண்டு நாம் வழுகும் காலங்களில், கை தூக்கிவிட்டுக்கொண்டு..............   நாம் தான் உணருவதில்லை, ஏன் என்றால் நடப்பதை உன்னிப்பாக கவனிப்பதில்லை.  திட நம்பிக்கையை மனதில் விதைத்து வளரவிட்டால் அவர்கள் அருள் நமக்கு எப்போதும் கிடைக்கும்.

சித்தன் அருள்............. தொடரும்!

அகத்தியர் நமெக்கென அருளியவை:-

சித்தன் அருள் - 16 - பாபத்திற்கான பரிசு நிச்சயம் 

பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தச் சமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது.  சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்".

சித்தன் அருள் - 19 - போகரை அடையாளம் காண 

அன்றைக்கு மாடசாமியின் முன் தோன்றி மருந்து கொடுத்த அந்த சித்த மருத்துவர் யார்? என்ற கேள்வியை அகத்தியரிடம் பின்பு ஒரு நாள் கேட்டேன்.

"என் அருமை சீடன் போகன்தான் அவன்.  அகத்தியனின் வேண்டுகோளுக்கு இணங்க அவனே நேரில் வந்து கொடுத்த மருந்துதான் அது.  இது அவர்கள் செய்த புண்ணியம்" என்றார் அகத்தியர்.

அப்படி என்றால் எல்லோருக்கும் இந்த பாக்கியம் கிடைக்குமா?

"கிடைக்கும்.  போகன் இன்றும் கொல்லிமலையில் உலாவிக் கொண்டிருக்கிறான்.  உண்மையில் போகனை வணங்கிக்கொண்டு போனால் ஏதாவது வைத்தியர் வேடத்தில் போகன் வந்து மருந்து கொடுத்து அவர்களது உயிரைக் காப்பாற்றுவான்".

"அப்படி என்றால், எப்படி போகரை அடையாளம் கண்டு கொள்வது.  எல்லா வைத்தியர்களும் போகரைப் போன்றே காணப்படுவார்களே!  யார் உண்மையான வைத்தியன்? விளக்க வேண்டும்" என்றேன்.

"கண்களில் ஒளிவட்டம் பளிச்சென்று தென்படும்.  துளசி மணம் யாரிடத்தில் தோன்றுகிறதோ அல்லது ஜவ்வாது கலந்த விபூதியின் வாசனை யாரிடத்தில் தோன்றுகிறதோ அவன் தான் போகன்"

மற்ற வைத்தியர்கள் எல்லாம்?

"போகனின் சிஷ்யர்களாக இருந்து, இளம் வயது முதல் சித்த வைத்தியத்தில் கரை கண்டவர்கள்.  அவர்கள் தினமும் போகனை வணங்கியே வைத்தியம் செய்வதால், அந்த சித்த வைத்தியர்களுடைய மருத்துவமும் பலிக்கும்" என்றார் அகத்தியர்.

9 comments:

 1. எல்லாம் வல்ல சித்தர்களின் கருணையை நாம் எல்லோரும் எப்போது பெற போகிறோம்...

  ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி...

  ReplyDelete
  Replies
  1. மிக எளிது. மிக நேர்மையாக திட வைராக்யத்துடன் அவர்கள் திரு பாதத்தை த்யானித்து இருந்தால் கண்டிப்பாக அவர்கள் அருள் எல்லா விஷயத்திலும் கிடைக்கும். ஒரு எளிய வழியை சொல்கிறேன். காலையில் எழுந்ததும், அவர்களை நினைத்து வேண்டிக்கொள்ளுங்கள்.

   "இன்றைய ஒவ்வொரு வினாடியும் உங்கள் அருளுடன் தான் என்னிடம் வரவேண்டும். உங்கள் ஆசிர்வாதத்தால் என்னிடம் எது சேர வேண்டுமோ அதுவே வரவேண்டும். எதை நீங்கள் விலக்கி வைக்க தீர்மானிக்கிறீர்களோ அது விலகியே இருக்கவேண்டும்".

   இதை தினமும் கூறி உங்கள் தினத்தை தொடங்கி பாருங்கள். அப்புறம் சொல்லுங்கள்.

   Delete
  2. நன்றி அண்ணா... இதை படிக்கும் போது கண்களில் கண்ணீர் வருகிறது...

   இந்த வாக்கியங்கள் கூட அவர்களின் அருளால் தான் வந்ததோ!?

   இனி இதை கண்டிப்பாக பின்பற்றுவேன்(வோம்)..

   ஓம் அகத்தீசாய நமஹ
   ஓம் எண்ணிலா கோடி சித்தரிஷி கணங்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி

   Delete
  3. "மிக நேர்மையாக திட வைராக்யத்துடன் அவர்கள் திரு பாதத்தை த்யானித்து இருந்தால் கண்டிப்பாக அவர்கள் அருள் எல்லா விஷயத்திலும் கிடைக்கும்" - இப்படிப்பட்ட மன நிலை வாய்க்கவும் “அவர்” அருள் வேண்டும். அதையும் அவரிடமே வேண்டி நிற்போம்.

   Delete
 2. மற்றவர்களின் நம்பிக்கை சில பேர்களுக்கு எரிச்சலைகொடுப்பது உன்மை தான்!வீடுக்கு வீடு வாசப்படி!சரியாக சொல்லிருக்கிறார்!!

  ReplyDelete
 3. Sir i had tears in my eyes when i completed reading,the love and concern which siddhars have on us cannot be measured, this message give me a strong hope in my life...thank u so much for filling our lives with such good spiritual thoughts and messages...thank u once again sir.

  ReplyDelete
 4. சித்தர்களின் அருளும் ஆசியும் தீர்வும் நாடி மூலமாக மட்டுமல்ல, மற்ற வழிகளிலும் கிடைக்கும் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒர் உதாரணம். நமக்கு வேண்டுவதெல்லம் ”உண்மையான எதிர்பார்ப்பில்லாத சரணடைந்த அன்பு” மட்டுமே.

  ReplyDelete
 5. Sir i have lot of problem facing in my life and now also. The problem is Husband and Wife. So i need your help. Pls contact my number 9962748076 or give me your contact Number.

  ReplyDelete
 6. படிக்க மெய் சிலிர்க்கிறது
  அகத்திய பெருமானை போல்
  கருணை உள்ளம் கொண்டவன்
  இந்த அண்டத்தில் உண்டோ!
  உள்ளும் புறமும் நிறைந்து
  தன் அடியவர்களை
  அல்லும் பகலும்
  ஆதரித்து காப்பவன்.
  ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி.

  ReplyDelete