​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 4 April 2013

சித்தன் அருள் - 118


ஓம் ஸ்ரீ கணேசாய நமஹ!

சித்தர்களின் திருவிளையாடலை பல நேரங்களில் புரிந்து கொள்வது என்பது மிக கடினம்.  ஏன்? எதற்கு இப்படி செய்கிறார்கள், இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று புரிந்துகொள்ள முயற்சிக்கும் முன்பே பல நிகழ்ச்சிகள் நடந்து நமது கவனத்தை திசை திருப்பிவிடும்.  கடைசியில், அவர்களுக்கே இது வெளிச்சம் என்று தீர்மானித்து, விட்டுவிடுவோம்.  சித்தர்களின் முறையை ஓரளவேனும் உணர்ந்தவர்கள் அவர்கள் அருகாமையை விரும்புவார்கள்.  அவர்கள் அருள் எப்போதும் கிடைக்காதா என்று ஏங்குவார்கள்.  நாம் அறியாமலே அவர்கள் அருள் பார்வை நம்மை சுற்றி அரணாக நின்று காக்கும் என்பதே உண்மை.  அதே சித்தர் அவருக்கு மட்டும் தெரிந்த ஒரு சில காரணங்களால் நம் குடும்பத்தில் ஒருவராக வந்து பிறந்தால் நம் மனநிலை எப்படி இருக்கும்?  பிறந்து வந்திருப்பது ஒரு சித்த சக்தி என்று புரியாதவரை, சாதாரண நிலை, புரிந்து விட்டால், ஆச்சரியத்துடன் அதிர்ந்து போய் இன்பத்தில் நிற்கும் நிலை தான் உருவாகும்.  அப்படிப்பட்ட ஒரு  நிகழ்ச்சியை இன்று பார்ப்போம்.

அது ஒரு மிக ஏழ்மையான, ஆனால் மிகக் குறைந்த நபர்களை கொண்ட குடும்பம்.  கணவன், மனைவி ஒரு ஆண் குழந்தை.  அவர்களுக்கு சொந்தமாக ஒரு காணி நிலம் கூட இல்லாத நிலையில், பிறரின் விவசாய நிலத்தில் நாற்று நட்டு, அறுவடை செய்து உழைத்து வாழ்ந்த வந்த குடும்பம்.

ஒரு காலத்தில், இயற்கை ஏமாற்றியதால் மழை பொய்த்தது. மழையின்றி, நீர் நிலைகள் வற்ற ஆரம்பித்தது; பூமியும் வறண்டு போக தொடங்கியது.  விவசாயம் பாதிக்கப்பட செய்து வந்த வேலையும் இல்லை என்று ஆகிற நிலை.  அந்தக் குடும்பத்தினர்,  உழைக்க வழியின்றி,  உண்ண உணவுக்கும் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.  பெரியவர்கள் தண்ணீரை குடித்து எப்படியேனும் காலம் தள்ளலாம்.  பதினெட்டே மாதம் நிரம்பிய குழந்தைக்கு ஒரு நாள் ஆறு முறையேனும் உணவளித்தால் தான் அதன் பசியை ஆற்ற முடியும்.  ஆனால், அந்தக் குழந்தையோ, பசியினால் அழாமல், ஏதேனும் தன தாய் அளித்தால் மட்டும் உண்டு மற்ற நேரங்களில் அமைதியாக படுத்தபடி கிடக்கும். 

ஒரு வாரமாக அவர்களுக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை.  உணவுக்கும் பஞ்சம் ஏற்படத் தொடங்கியது.  எத்தனை முறை தான் அக்கம்பக்கத்தினரிடம் கை நீட்ட முடியும்.  குழந்தைக்கு கொடுக்க கூட எதுவும் கிடைக்கவில்லையே என்று மன வேதனையுடன் அந்த தாய், அதை பார்க்கும் போது விரல் சூப்பிக் கொண்டிருந்த அந்த குழந்தை, விரலை எடுத்துவிட்டு அவளை பார்த்து சிரிக்க தொடங்கியது.  அந்த தாய்க்கே ஆச்சரியம்.  இந்தக் குழந்தை பசி எடுத்து ஒரு போதும் அழுததை பார்த்ததில்லை.  ஏதேனும் கொடுத்தால் கனிவுடன் சாப்பிட்டுவிட்டு அமைதியாக உறங்கிவிடும்.  சாதாரண குழந்தைகளுக்கு இருக்கும் குணங்கள் எதுவும் அந்த குழந்தையிடம் இல்லாததை கண்ட தாய் மிக விசனப்பட்டாள்.   இந்தக் குழந்தைக்கு உடல் ரீதியாக ஏதேனும் குறை  இருக்குமோ?  அப்படி ஏதேனும் இருந்தால் மருத்துவ சிகிற்சைக்கு என்ன செய்வது?

வரட்சி உச்சத்தை அடைய, பல குடும்பங்களும் கிராமத்தை விட்டு வெளியேறின.  போக்கிடம் இல்லாத இந்தக் குடும்பம் என்ன செய்வதென்றறியாமல் தவித்தது.  வேறு ஏதேனும் ஒரு கிராமத்துக்கு சென்றால் ஏதாவது வேலை பார்த்து குடும்பத்தை நடத்தலாம் என்ற நினைவு கூட வராமல், தன குழந்தைக்கு ஒரு நேரம் கூட பால் கொடுக்க முடியாத நிலையை நினைத்து வருந்தி, அந்த தாய் ஒரு முடிவுக்கு வந்தாள்.

அன்று நள்ளிரவு முடிந்து முதல் ஜாமம் தொடங்கும் நேரம்.  உறங்கி கிடந்த குழந்தையை எடுத்துக்கொண்டு தன கணவருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியே வந்து,  ஊரின் எல்லையில் இருக்கும் குளத்தை நோக்கி நடந்தாள்.  வறுமையில் போராடி இந்த குழந்தை கஷ்டப்படுவதைவிட இதை கொன்றுவிடுவதே மேல் என்று தீர்மானித்திருந்தாள்.

தெளிவான நிலா வெளிச்சம் எங்கும் பரவி நிற்க, மெதுவாக சப்தம் எழுப்பாமல் நடந்தவள், சன்னமாக யாரோ "அம்மா! அம்மா!" என்று தன்னை அழைப்பதுபோல் உணர்ந்தாள்.

சுற்று முற்றும் பார்த்தவள் யாரும் இல்லாததை கண்டு ஏதோ ஒரு உணர்வால் தன குழந்தையை நெஞ்சோடு அணைத்துக்கொள்ள, மேலும் "அம்மா!" என்று தெளிவாக ஆனால், சன்னமாக  கூப்பிடுவது அந்த தாய்க்கு கேட்டது.

நடந்து சென்றுகொண்டிருந்த அந்த தாய் அப்படியே வழியில் நின்றாள். மேலும் ஒருமுறை சப்தம் கேட்கிறதா என உன்னிப்பாக கவனித்தாள்.

மறுபடியும் "அம்மா!" என்று கேட்டவுடன் அவள் அதிர்ந்து போனாள்.  அது மார்போடு அணைத்து கொண்டிருக்கும் குழந்தையை சுற்றியிருக்கும் வெள்ளை துணிக்கு உள்ளிருந்துதான் கேட்டது.

மெதுவாக துணியை விலக்கி பார்க்க, உறங்கி கிடந்த அந்த குழந்தை விழித்திருந்தது.  அவள் பார்வை பட்டதும் சிரித்துக்கொண்டே கையை அசைத்தது.

"பதினெட்டே மாதம் நிரம்பிய இந்தக் குழந்தையா "அம்மா!" என்று கூப்பிட்டிருக்கும். இருக்காது எனக்குத்தான் சித்தப்ரம்மை பிடித்திருக்கிறது" என்று நினைத்து குழந்தையை தூக்கி முகத்தருகே கொண்டு வந்து உச்சி முகர்ந்து முத்தம் கொடுக்க நினைத்தவளுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது 

"ஆமாம் அம்மா! நான் தான் உன்னை கூப்பிட்டேன்!" என்று அந்த குழந்தை மிகத் தெளிவாக பேசியது.

ஒரு நிமிடம் அதிர்ந்து போன அந்தத் தாய் திகைப்பில், குழந்தையை நிலா வெளிச்சத்தில் தூக்கி பிடித்து உன்னிப்பாக கவனிக்க, அதன் உடல் எங்கும் ஒருவித தேஜஸ் வெளிப்படுத்துகிற ஒளி சூழ்ந்திருப்பதை கண்டாள்.

தனக்குப் பிறந்திருப்பது ஒரு சாதாரணக் குழந்தை அல்ல என்று அவள் உள்மனம் சொன்னது.

அந்தக் குழந்தை மேலும் பேசியது.

"ஏன்மா? என்னை குளத்தில் முக்கி கொன்றுவிட்டால் உன் வறுமை தீர்ந்துவிடுமா?"

அந்தச் சின்னக் குழந்தையின் இந்தக் கேள்வி அவளை அறைந்ததுபோல் உணர்ந்தாள்.

செய்வதறியாது, குழந்தையை ஒரு மரத்தடியில் கிடத்திவிட்டு, தான் செய்ய இருந்த பாபச் செயலின் வீர்யத்தை நினைத்து அழத்தொடங்கினாள்.

அழுது தீரட்டும் என்று காத்திருந்ததுபோல், மறுபடியும் அவள் குழந்தையை வாரி எடுத்து வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கிய உடன் அந்த குழந்தை பேசத் தொடங்கியது.

"நான் யார் என்று ஆராய்வதை பிறகு செய்து கொள்ளலாம்.  முதலில் நான் சொல்வதை போல் உடனடியாக செய்யவேண்டும்.  ஊருக்குள் இருக்கும் அம்மன் கோவிலுக்கு செல்.  அங்கே அம்மன் கோவிலுக்கு பின் பாகத்தில் இடதுபுறமாக ஒரு பாம்பு புற்று இருக்கும்.  அதில் ஒரு நாகம் வாழ்ந்து வருகிறது.  சூரிய உதயத்துக்கு இன்னும் இரண்டு நாழிகை இருக்கிறது.  இரவில் வேட்டைக்கு சென்ற நாகம் சூரியன் உதிக்கும் ஒரு நிமிடத்திற்குள் அந்த புற்றுக்கு திரும்பி வந்துவிடும்.  அதற்குள் நீ சென்று அந்த புற்றுக்குள் கையை விட்டு துழாவிப்பார்.  உனக்கு வேண்டிய நிதி கிடைக்கும்.  அது கிடைத்ததும் நீயும், தகப்பனாரும் என்னை தூக்கிக்கொண்டு பக்கத்தில் இருக்கும் பாக்கம் என்கிற கிராமத்துக்கு சென்று விடுங்கள்.  அதன் பிறகு நீங்கள் கடைசி வரை நிம்மதியாக வாழலாம்!" என்றது.

என்ன இது.  ஒரு குழந்தை என்னென்னவோ பேசுகிறது.  எப்படி இது சொன்னதின் பேரில் ஒரு பாம்பு புற்றுக்குள் கை விட முடியும்?  அதனுள் இந்தக் குழந்தை சொன்னதற்கு எதிராக நாகம் இருந்து கை விட்டவுடன் கடித்துவிட்டால்?...................... என்கிற சிந்தனைகள் அவள் மனதுக்குள் யோசனையை உருவாக்கியது.

"என்ன! நான் சொன்னதை நீ நம்பவில்லையா! சரி கோவிலுக்கு போய் பார். நான் சொன்ன இடத்தில் மூன்று துவாரம் உள்ள பாம்பு புற்று இருக்கிறதா என்று பார்.  அது உண்மையானால், நடுவிலுள்ள ஓட்டைக்குள் கையை விடு.  அது போதும்.  உன்கைக்கு ஒரு சின்ன துணி மூட்டை தட்டுப்படும்.  அதை எடுத்துக்கொள்.  மேலும் துழாவினால் இன்னும் இரண்டு சிறிய துணி மூட்டைகளும் கிடக்கும்.  எல்லாவற்றையும் எடுத்துக்கொள்.  ஆனால் சீக்கிரம் போ!  காலம் தாழ்த்தாதே.  உதயமாகப் போகிறது" என்று மறுபடியும் எச்சரித்தது அந்தக் குழந்தை. 

தான் கேட்டதை நம்ப முடியாமல், இருந்தும் முயற்சி செய்து தான் பார்ப்போமே என்று, குடும்பத்தின் வறுமை நிலை அவளை பிடித்து தள்ள, வேக வேகமாக சந்தக் குழந்தையுடன் கோவில் வாசலை அடைந்தாள்.

திடீர் என்று என்ன தோன்றியதோ, பாம்பு இருந்து ஏதேனும் விபரீதம் நடந்தாலும், தான் இறந்தாலும் பரவாயில்லை, குழந்தை காப்பாற்றப் படவேண்டும் என்ற எண்ணத்தில் அதை கோவில் திண்ணையில் படுக்க வைத்துவிட்டு, தான் மட்டும் அந்த குழந்தை சொன்ன கோவிலின் பின்புறத்தை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

கோவிலின் பின் புறத்தில் அந்த குழந்தை சொன்னது போலவே ஒரு பாம்பு புற்று இருந்தது.  அந்த புற்றின் உச்சியில் மூன்று ஓட்டைகள் காணப்பட்டது.  அதை கண்டவள், "என் குழந்தை சொன்னதெல்லாம் சரியாக இருக்கிறதே! அப்படியானால் கண்டிப்பாக இதில் ஏதோ ஒரு உண்மை இருக்கும்.  பார்த்து விடுவோம்" என்று திடமான எண்ணத்துடன் அந்த நடு ஓட்டைக்குள் கையை விட்டு துழாவினாள்.  ஒரு சிறிய துணியின் நுனி, விரலில் பட்டதை உணர்ந்தாள்.  எல்லா விரல்களையும் மடக்கி கொத்தாக அந்த நுனியை பிடித்து இழுக்க  புற்றை லேசாக உடைத்துக்கொண்டு ஒரு சின்ன மூட்டை வெளியே வந்தது.  அதை திறந்து பார்க்க, மூட்டைக்குள் தங்க நாணயங்கள் இருந்தது.  குழந்தை சொன்னது ஞாபகத்துக்கு வர மேலும் சற்று ஆழத்தில் துழாவ இரு சிறு மூட்டைகளும் கிடைத்தது.  அதிலும் தங்க நாணயங்கள்.

பொழுது விடியத் தொடங்க சட்டென்று கோவில் வாசலை நோக்கி நடக்கத் தொடங்கியவள்  "சர சர" வென ஏதோ ஓடும் சத்தம் கேட்டு திரும்பி பார்க்க, ஒரு மிகப் பெரிய நாகப் பாம்பு இவளை பார்த்துவிட்டு அந்த புற்றுக்குள் நுழைந்து மறைந்தது.

"இனி ஒன்றும் யோசிப்பதர்க்கில்லை" என்று உணர்ந்து, அந்தக் குழந்தை சொன்னபடியே கணவரை அழைத்துக் கொண்டு பக்கத்தில் இருக்கும் பாக்கம் என்கிற கிராமத்துக்கு சென்று குடி பெயர்ந்தனர்.  அந்த குழந்தை சொன்னபடி அவர்கள் வாழ்க்கை மிக சிறந்ததாக அமைந்தது.  பின்னர் ஒரு போதும் இன்னொருவரிடம் கை நீட்டி சேவகம் செய்கிற நிலை அவர்களுக்கு ஏற்படவே இல்லை.

அந்தக் குழந்தைக்கு "பரமானந்தன்" என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். பரமானந்தான் பள்ளிக்கு செல்வதை விரும்பவில்லை.  நேரம் கிடைக்கும் போதெல்லாம் யோகாசனம், த்யானம், மருத்துவம் போன்றவையில் நிறைய கவனம் செலுத்தினான்.  தனிமையை அதிகம் விரும்பினான்.  நோயினால் வருந்தும் மனிதர்களை கண்டால் வலிய சென்று அவர்களுக்கு மருத்துவ உதவி செய்வான்.  மற்ற மருத்துவர்களிடம் சென்று குணமாகாத எப்படிப்பட்ட நோயும் "பரமானந்தன்" ஒரு முறை மருந்து கொடுத்து உண்டால், விலகியது.  மெதுவாக பரமானந்தனின் புகழ் பரவத் தொடங்கியது.  அதே நேரத்தில் அவனுக்கு எதிர்ப்பும் வலுக்கத் தொடங்கியது.  முறையாக வைத்தியத்தை படிக்காமல் சிகிர்ச்சை செய்கிறான் என்கிற குற்ற சாட்டை, மற்ற மருத்துவர்கள் கூறி வர, அனைத்தையும் பதில் பேசாமல் கேட்டுக் கொண்டான்.  இருப்பினும் மிகக் கொடிய விஷம் ஏறிய நிலையில் இருந்த ஒருவரை "பரமானன்தனை" தவிர வேறு யாராலும் காப்பாற்ற முடியவில்லை.  இதுவே அவனை எதிர்த்த மற்ற வைத்தியர்களை வாய் அடைக்க செய்தது.

ஒருநாள் பரமானந்தன் யாரிடமும் சொல்லாமல், கொள்ளாமல் எங்கோ சென்று விட்டான்.  அவன் பெற்றோர் எங்கு தேடியும் கிடைக்காமல் போகவே, இனி அவனை நாம் சந்திக்கப்போவதில்லை என்று நினைத்து வருந்தினர்.

புண்ணிய ஸ்தல யாத்திரை மேற்கொண்ட ஒருவர் பழனியில் தாம் ஒரு இளம் துறவியை சந்தித்ததாக கூறி அங்க அடையாளங்களை கூற, அந்த தாய் "இவர் சொல்வதெல்லாம் நம் மகனுக்கு பொருந்துகிறதே" என்று உணர்ந்து பழனிக்கு சென்று பார்க்க, அந்த துறவி மிகப் பெரிய ஜடாமுடியுடன், தீர்க்கமான கண்களுடன், அமைதியாக தேஜசுடன் இருப்பதை கண்டார்.  கண்ட நொடி பொழுதில் அது தன் மகன் பரமானந்தன் தான் என்று உணர்ந்து பாசம் பொங்க "மகனே" என்று அழைத்து அருகில் சென்றார்.  ஒரு அளவுக்கு மேல் அந்த தாயால் அவர் அருகில் செல்ல முடியவில்லை.  எதுவோ ஒன்று அவரை சுற்றி நின்று அனைவரையும் அகற்றி நிறுத்தியது.  வந்திருப்பது தன்னை பெற்ற தாய் என்று அறிந்தும் அந்த சாதுவின் மனது எந்த வித சலனமும் இன்றி இருந்தது.  "தன் மகன் இனி தனக்கிலான்"  என்றுணர்ந்த அந்த தாய் வெறும் கையுடன் வீடு திரும்பவேண்டி வந்தது.  தன கணவரின் மறைவுக்குப் பின் "பரமானன்தனை" நோக்கி வந்த தாய், அவனுடனே பழனியில் தன் இறுதி காலம் வரை தங்கி இருந்தார்.

தாயின் மறைவுக்குப் பின் பல இடங்களுக்கும் அலைந்து நடந்த பரமானந்தன் பலரின் வாழ்விலும் நோய் விலகி அமைதி வரவும், ஆன்மீக சக்தி பெருகவும் பலவிதமான செயல்களை செய்து வர, பழனியில் அவரை சந்திக்க பெரும் கூட்டமே எப்போதும் காத்திருக்கும்.  எல்லோரையும் பார்த்துக் கொண்டே பக்கத்திலிருக்கும் தூணுக்கு பின் மறைந்து விலக, சற்று நேரமாகியும் அவர் வராததை கண்டு எட்டிப் பார்த்தால் அங்கே அவர் இருக்கமாட்டார்.  இப்படி சித்து விளையாட்டையும் தொடங்கிய பரமானந்தன் கடைசியில் ஒருநாள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்க தன் உடலை காற்றோடு காற்றாக கரைத்து நிரந்தரமாக மறைந்து போனார்.

இன்றும் அவரை வேண்டிக்கொண்டு பழனி சென்றால், மருத்துவத்தில் எந்த உதவியையும் ரூபமாகவோ அரூபமாகவோ வந்து அவர் செய்வதாக பலரும் கூறுகின்றனர்.

இந்த தொகுப்பை படித்து முடித்தவுடன், ஆங்காங்கே ஒரு தொடர்பில்லாமல், நூலிழைகள் விட்டுப்போனது போல் தோன்றும்.  =ஒருமுறை நண்பரிடமே நேரடியாக இதை பற்றி கேட்டவுடன் புன் சிரிப்புடன் "அது தான் சித்தன் போக்கு சிவன் போக்கு என்று சொல்வார்கள்.  இன்னும் தெளிவாக சொல்வதென்றால் வருவார்கள், செய்வார்கள், செல்வார்கள். புரிஞ்சுதா?" என்று திருப்பி ஒரு கேள்வியை போட்டு மாட்டினார்.

எனக்குள் சில கேள்விகள்.

1. சித்தன் கருவில் ஊறி பிறவி எடுக்க வாசனை காரணமா? சோதனை காரணமா?
2.  உதவ வேண்டும் என்றால், சித்தனுக்கே அதற்காக ஒரு பிறவி தேவையா?
3.  ஏன் இந்த நாடகம்?

இன்றுவரை பதில் கிடைக்கவில்லை.  காத்திருக்கிறேன்! பொறுமையுடன்.

சித்தன் அருள்................... தொடரும்!

அகத்தியர் நமக்கென அருளியவை:-

சித்தன் அருள் - 20 - பத்ராசலத்தில் ராமர் தரிசனம்!

"ராம பக்தர் ராமதாஸ் பற்றி அறிந்து இருப்பாய்.  அரசாங்க கஜானாவைக் கொள்ளைஅடித்து ராமபிரானுக்கு, ராமதாஸ் கட்டிய கோவில் இது.  இதனால் ராமதாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  அவர் செய்தது தவறு என்பதால் அதற்குரிய தண்டனையைப் பெற்றாலும், அவர், தன் மீது கொண்ட பக்தியைக் கண்டு மெச்சினார் ராமர்.  ராமதாஸ் இருந்த சிறைக்கு ராமர் வந்து மங்களகரமாக காட்சி கொடுத்த நாள் இன்று தான்."

ராமார் காட்சி கொடுத்த அந்த புனித நாளன்றும் கோதாவரியில் வெள்ளம் வெகுண்டோடியது.  அதே போல் இன்றும் எதிர்பாராத விதமாக வெள்ளம் ஓடுகிறது.  ராமதாசுக்கு காட்சி கொடுத்த பின்னர், சீதா, லட்சுமணன், அனுமன் சகிதம் அவர் இந்தக் கோவிலுக்கு வந்ததும் இதே தினத்தில் தான்.  அந்த புனிதமான நாளன்று உனக்கும் அந்த பாக்கியம் கிடைக்கட்டும் என்று தான் இங்கு வரவழைத்தேன்."

இன்னும் ஒன்றை நாழிகையில் இங்குள்ள கர்ப்ப கிரகத்திற்குள் ராமார் அரூபமாக வருவதால், கண்ணை மூடிக் கொண்டு த்யானம் செய்.  எந்த விதக் காரணம் கொண்டும் கண்ணைத் திறக்காமல் ராமரையே நினைத்திரு.  உன் நினைவலையில் ராமார் வருவதைக் காணலாம்.

ஒரு நாழிகையே அவரது தரிசனம் இங்கு கிடைக்கும், பின்பு, படி வழியாக இறங்கும் ராமர், கோதாவரி தாய்க்கு பூக்களால் நமஸ்காரம் செய்வார்.  தீப ஆரத்தியும் கட்டுவார்.  அதையும் உன் த்யானத்தில் பார்க்கலாம்.  அந்த தீப வழிபாடு முடிந்த பின்னர், கோதாவரி அன்னையின் ஆவேசம் தணியும். நான்கு மணி நேரத்தில் வெள்ளமும் வடியும்.  பிறகு, நீ இறங்கிச் செல்லலாம்.

சித்தன் அருள் - 21 - தவறு செய்திருந்தாலும் மன்னித்தருளும் சித்தர்!

"உயர் குலத்தில் பிறந்து உன்னதமான ஆன்மீகப் பணி செய்யவே இவனுக்கு இந்த ஜென்மம் தரப்பட்டது. செய்கின்றத் தவறைச் சுட்டிக்காட்டி, இவனது எதிர்காலம் நல்லபடியாக மாற, வழியும், வாய்ப்பையும் காட்டினோம். ஆனால், எதையும் அலட்சியம் செய்யும் நோக்கிலேயே இவன் செயல்படுகிறான்.  ரத்தம் நன்றாக இருக்கும் வரையில் தான் எல்லாம் பேசலாம், நடக்கலாம். அது சுண்டிவிட்டால் அடுத்த வினாடி அவன் கதி என்ன? என்பதை இவனுக்கு உணர்த்த இப்படி நடந்துள்ளது. இந்த படிப்பினையை தந்தவர் இப்போது இங்கு வந்து சென்ற ராமர் தான். இன்னும் நாற்பது நிமிட நேரத்துக்குள் இவன் மறுபடியும் இயல்பான நிலைக்கு வந்துவிடுவான்.

அதற்குள், இவன் ஒரு காரியம் செய்ய வேண்டும். அதாவது, ஒரு பக்தர், ராமருக்கு சில நகைகளைக் கொடுத்துள்ளார். அதை இவன் கோவிலில் சேர்க்காமல் தனது அறையில் உள்ள பீரோவில் வைத்துள்ளான். அதை எடுத்து உடனே கோவில் உண்டியலில் போட வேண்டும். அப்படி செய்தால் எல்லாம் சரியாகிவிடும்" என்று முடித்தார் அகத்தியர்.

7 comments:

 1. Om Agatheesaya Namaha
  Om Agatheesaya Namaha
  Om Agatheesaya Namaha
  Om Agatheesaya Namaha
  Om Agatheesaya Namaha

  ReplyDelete
 2. ஓம் அகத்தீசாய நமஹ..

  நம்மை சுற்றிலும் தினமும் இதுபோல் சம்பவம் ஏதாவது ஒரு வகையில் நம் வாழ்க்கையிலும் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதை புரிந்து கொள்ளும் ஆற்றல் இல்லாமல் இருக்கிறோம்...

  எல்லாம் நம் கர்ம வினையே காரணம் என்று சிலர் நினைக்கின்றனர். ஆனால் ஒருசிலரோ இதை தெரிந்து கொள்ள போரடுகின்றனர். ஏன் இவ்வளவு சஞ்சலங்கள் நம் வாழ்க்கையில் என்று போராட துவங்கும் போது மேலும் பல பாவ சுமைகளை சேர்த்து கொள்கிறோம்... இதை எல்லாம் சித்த பெருமக்கள்தான் நமக்கு உணர்த்த வேண்டும்... அந்த மனவலிமையை கூட பெற அவர்களை நாம் எல்லோரும் பிராத்தனை செய்வோம்...

  ஆனால் இந்த கலியுக வாழ்க்கையில் அனைத்தையும் சுலபமான முறையில் வேகமாக பெற வேண்டும் நினைக்கின்றோம்... மன உறுதியோடு போராட எல்லாம் வல்ல சித்த பெருமக்கள் கண்டிப்பாக நம்மை அரவணைப்பர்...

  ReplyDelete
 3. பிரசன்னா குமார் அவர்களே!

  கலியுகத்தில் "உண்மையான/நிலையான விஷயத்தை" தாங்கிக்கொள்கிற தகுதியை மனிதன் இன்னும் பெறவில்லை என்பதே என் கருத்து. வேகமான வாகனங்களை அடைந்துவிட்டால், நொடி பொழுதில் செய்தியை பூமியின் ஒரு நுனியிலிருந்து எதிர் கோடிக்கு சேர்த்துவிடுவதை (தற்கால விஞ்ஜானம்) மிகப் பெரிய சாதனையாக நினைக்கும் மனிதன். அதற்க்கு மேல் அப்பாற்ப்பட்ட விஷயங்கள் இருக்கிறது என்பதை உணராத ஜனங்கள். என்ன செய்ய முடியும்?

  அதனால் தான் சித்தப் பெருமக்கள் எல்லா விஷயத்திலும் பொறுமையை கையாளச் சொல்கிறார்கள். திட வைராக்கியத்துடன் இருக்கவேண்டும் என்கிறார்கள். நாம் நம் இந்த வாழ்க்கை முடியும் முன் அனைத்தையும் அடைந்துவிடவேண்டும் என்று எண்ணுகிறோம். இந்த வாழ்க்கை என்பது நம் பயணத்தில் ஒரு அத்யாயம் என்று உணருவதில்லை. அங்கு தான் தவறு இருக்கிறது.

  நம்பிக்கையுடன் இருந்தால் நம்மை சுற்றி கனிவான ஒரு அரண் இருப்பதை உணரலாம்.

  கார்த்திகேயன்

  ReplyDelete
 4. நன்றி அண்ணா...

  //கலியுகத்தில் "உண்மையான/நிலையான விஷயத்தை" தாங்கிக்கொள்கிற தகுதியை மனிதன் இன்னும் பெறவில்லை என்பதே என் கருத்து.

  உண்மையாக அண்ணா... நம்பிக்கையுடன் பொறுமையாக இருக்க வேண்டும்...

  மு. பிரசன்ன குமார்

  ReplyDelete
 5. தங்களது கேள்விகளுக்கு மனோரஞ்சித பூவை முகர்வோருக்கு கிடைக்கும் பல வாசனையைப்போல ஒவ்வொருவர் ஒரு பதில் கூற இயலும். அவ்வகையில் பிரபன்ஜ சக்தியின் அருளால் கிடைக்கும் ஓர் பதில் கீழே

  1. குரு பரமானந்தன் எந்த ஒரு வாசனையையும் உணர்ந்தோ அனுபாவித்ததாகவோ தங்கள் பதிவில் எழுதப்படவில்லை. ஆகவே பிறப்பிற்கு வாசனைமட்டும் காரணமாக இருக்காது

  2."நினைத்தபோது வரவும் நினைத்தபோது செல்லவும் உடைய நிலையை அடைவதுதான் ஆன்ம விடுதலையின் இறுதி நிலை" என்று பகவான் ராமகிருஷ்ணர் கூறியுள்ளார். அதைத்தானே குரு பரமானந்தன் செய்து காட்டி இருக்கிறார். சித்தர்களுக்கு சேவை செய்ய உள்ள பல உபாயங்களில் பிறவியும் ஒன்றாகும். சூட்சம சரிரத்தை மட்டுமே சார்திருக்கும் ஆன்ம ஞானம் உள்ள அவர்களுக்கு சோதனை ஏது கருச்சிறை
  ஏது ?

  3. நாடகம் நம்மைகேட்டு நடப்பதுமில்லை, முடிவதுமில்லை . இது நாடகம் என அறியவே பல பிறவிகள் தேவைப்படுகிறது. நாமே நடிகனாகவும், பார்ப்பவராகவும் ஒரே நேரத்தில் உள்ளோம் என அறியும்முன் இன்னும் பல பிறவிகள் உருண்டோடிவிடுகிறது . பொய்தான் மெய் மெய்தான் பொய் . இதுதான் நிதர்சனம்.

  ReplyDelete
 6. ஸ்ரீ அகஸ்திய மகா யாகம்
  http://www.livingextra.com/2013/04/blog-post_6.html

  இந்த லிங்கில் ஸ்ரீ மகா குரு அகத்தியருக்கு மஹா யாகம் நடைபெற உள்ளது . இந்த தகவலையும் சித்தனருள் - இல் பதிவிட்டால் நிறைய பேருக்கு பயனாக இருக்கும் . நன்றி

  ReplyDelete
 7. குரு வாழ்க! குருவே துணை!!

  ReplyDelete