​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 20 December 2012

சித்தன் அருள் - 104!


சுக்கிரனில் பிளவொன்று விரைவில் உருவாகப் போகிறது, இது பாரத தேசத்திற்கு நல்லதல்ல, அது தூம கேதுதான் என்று அகஸ்தியர் சொன்னது எனக்கு என்னவோ போலாயிற்று.

இதை வெளியே சொல்லலாமா கூடாதா என்று தெரியவில்லை.  இந்த வார்த்தையை முதலில் எத்தனை பேர்கள் நம்புவார்கள் என்பதும் கூட சந்தேகம் தான்.  அப்படியே வெளியே சொன்னாலும் அது பாரத தேசத்திற்கு எப்படிப்பட்ட சங்கடங்களை விளைவிக்கும் என்பதைப் பற்றியும் இதைத் தடுக்க என்ன பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதையும் அகஸ்தியர் சொல்லவில்லை.

மொட்டையாக இப்படி சொன்னதால் இதைப் பெரிது படுத்தாமல் அப்படியே விட்டுவிடலாம் என்று முடிவெடுத்தேன்.  அதே சமயம் தினமும் பல்வேறு பத்திரிகைகளையும் வாங்கிப் பார்த்தேன்.  பெங்களூர் வீ  ராமன்  வடநாட்டு விஞ்சானிகள் வெளிநாட்டு வானியல் நிபுணர்கள் ஏதேனும் இந்த தூம கேது பற்றி சொல்லி இருக்கிறார்களா என்று அன்றாடம் அலசிப் பார்த்தேன்.

என் கண்ணுக்கு எட்டிய தூரம் யாரும் தூம கேது பற்றிச் சொல்லவில்லை.  நண்பர்கள் சிலர் தினமும் என்னைச் சந்தித்து நாட்டின் எதிர் காலத்தைப் பற்றி அகஸ்தியரின் அருள் வாக்கைக் கேட்கத் துடித்தனர்.  ஆனால் இன்னும் ஆறு மாதத்திற்கு நான் நாடி படிக்கப் போவதில்லை என்றும் அந்த ஓலைக் கட்டு தற்சமயம் என்னிடம் இல்லை என்று சொல்லி சமாளித்தேன்.  ஓர் அமாவாசை காலை பதினோரு மணியிருக்கும்.  ஏதாவது நல்ல வார்த்தையை அகஸ்தியர் எனக்குச் சொல்லமாட்டாரா என்ற தாகத்தில் பூசை அறையில் மறைத்து வைத்திருந்த அந்த ஜீவநாடியை நான் எடுத்தேன்.

"விதிமறை சோதிட நுணுக்கம்தன்னை கற்றறிந்த தயரதன் மைந்தா
நிந்தன் நாவில் நானிருக்கிறேன் - பாரத தேசந்தன்னின்
குறிப்பேட்டினை வரைந்து கூறுபோட்டு பார்த்திடு - அகத்தியன்
குறிப்பிட்டது சரியா தவறாவென அறிவாய்"

என்று ஒரு நீண்ட வார்த்தை வெளியே வந்தது.

பாரத தேசத்தில் ஜாதகத்தைக் குறித்துப் பலனைப் பார்த்தால் அகஸ்தியர் அன்று சொன்ன "தூம கேதுவைப் பற்றிய தகவல் தெரியவரும்" என்ற பொருளில் இந்த வார்த்தை அமைந்திருந்தது.

பாரத தேசத்தின் ஜாதகத்தை எப்படிக் கணக்கிடுவது?  சுதந்திரம் அடைந்த தேதியில் இருந்தா? குடியரசு ஆனா தேதியில் இருந்தா? அப்படி  கணக்கிட்டாலும் எத்தனை மணி என்று கணக்கிடுவது? மணி தெரியாமல்  லக்னத்தை கணக்கிட முடியாதே! அப்படியே கணக்கிட்டாலும் அது எப்படி சரியான லக்னமாக இருக்கும் என்ற குழப்பம் தோன்றியது.

ஆகவே நான் பேசாமல் இருந்து விட்டேன்.

ஜீவநாடியை நான் பார்க்காமல் இருப்பதால் கூட்டம் படிப்படியாகக் குறைந்தது.  கேட்டுக் கேட்டும் நாடி படிக்காததால் பெரும்பாலோர்  என்னை விட்டு விலகி விடவே டென்ஷன் இல்லாமல் பிரார்த்தனையை மாத்திரம் செய்து கொண்டிருந்தேன்.

பையன் நல்லபடியாக மாறிவிட்டான்.  யாருக்கும் நாடி படிப்பதில்லை.  குடும்பப் பொறுப்பை நல்லபடியாக நிர்வகித்து வருகிறான் என்று பெருமிதத்தோடு என் வீட்டார் என் தங்கைக்குத் திருமணம் பார்க்க ஏற்பாடு செய்யலானார்கள். எத்தனையோ வரன்கள் நெருங்கி வந்தது.  ஆனால் கை கூடவில்லை.  பிரார்த்தனை பரிகாரங்கள் பலவற்றைப் பெற்றோரே செய்ய ஆரம்பித்தனர்.  மாதம் தள்ளிக் கொண்டே போனது தவிர எந்த வரனும் நிச்சயமாகவில்லை.

ஏன் திருமணம் நிச்சயமாகவில்லை என்று என் பெற்றோர் ஒரு நாளாவது வந்து என்னிடம் கேட்கவில்லை.  கேட்டால் அகத்தியர் நாடியைத் தான் நான் படிக்க வேண்டியிருக்கும்.

"அகத்தியர் நாடி நமகேதர்க்கு? பெருமாள் நமக்கு நல்ல வழியைக் காட்டுவார்.  ஊர் உலகமெல்லாம் அகத்தியர் நாடி படித்தா திருமணம் நடந்து கொண்டிருக்கிறது" என்ற வாதம் அவர்களுக்கு உண்டு.  எனவே கௌரவ பிரச்சினையாக எண்ணி, என் தங்கையைப் பற்றி எந்த கேள்வியும் கேட்கவில்லை.

ஆனால் என் உள்மனதில் தங்கையின் திருமணத்தைப் பற்றி கேட்க வேண்டும் என்று சட்டென்று தோன்றியது.  உடனே யாருக்கும் தெரியாமல் பூசை அறையில் மறைத்து வைத்திருந்த ஜீவநாடியை எடுத்துப் படித்தேன்.  "சட்டென்று  ஹிரண்ய கசிபுவைக் கொன்ற அஹோபில மலைக்குச் சென்று மூன்று நாட்கள் யாம் சொல்லும் திசையில் அமர்ந்து லக்ஷ்மி நரசிம்மனை நோக்கித் த்யானம் செய்க.  அன்னவனை நிழலாகக் காணும் பாக்கியமும் கிட்டும்.  அன்னவனால் உன் சோதரியின் திருமணமும் வேங்கடவன் சன்னதியிலேயே நடக்கும்" என்று அகஸ்தியர் திருவாய் மலர்ந்தருளினார்.

பலமுறை கண்ணைக் கசக்கிக் கொண்டு பார்த்தேன்.  ஜீவநாடியில் அதே வார்த்தைகளைத்தான் படிக்க நேரிட்டது.  உடனே அஹோபில மலைக்குப் போகச் சொல்கிறாரே அப்படிச் சென்றால் தான் என் தங்கைக்குத் திருமணம் நடக்கும்.  இது முன்பு வேங்கடமாலையில் அஹோபில மடத்து மேலாளரிடம் செய்து கொடுத்த சத்தியம் என்று எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாக நினைவுக்கு வந்தது.

திருமலையில் என்னுடைய ஜீவநாடி தொலைந்த போன போது "அது மீண்டும் திரும்பக் கிடைத்தால் என் தங்கைகளின் திருமணத்தைத் திருப்பதியில் நடத்துவகாகப் பிரார்த்தனை செய்து கொள் " என்று அஹோபில மேலாளர் என்னிடம் சொன்னது, நாடி கிடைத்தால் போதும் என்ற எண்ணத்தில் நான் அரைகுறை மனதோடு தலையாட்டியது இப்பொழுது முழுமையாகத் தெரிந்துவிட்டது.

நாடியை நான் பலமாதங்கள் தொடாமல் இருந்து வந்தேன்.  அதிலும் கோயம்பத்தூரில் அந்த மில் அதிபரிடம் மாட்டிக் கொண்டு படாத பாடு பட்டது, ரயில் பயணத்தின் போது தவறவிட்டுத் திண்டாடியது, பின்னர் அதே நாடி கைமாறி கடைசியில் பரதேசி உருவத்தில் அகஸ்தியரே என்னிடம் கொடுத்தது, இதெல்லாம் எண்ணி, குடும்பத்தினர் வேண்டுகோளுக்காக ஜீவநாடியை நான் படிக்காமல் பூசை அறையில் மறைத்து வைத்திருந்தது நல்லதா அல்லது கெட்டதா என்று புரியவில்லை.

எனக்கிருந்த ஆர்வமெல்லாம் அகஸ்தியர் சொன்ன அந்த தூம கேதுவை நேரில் பார்க்க வேண்டும் என்பதே.  அது எப்படி இருக்கும்? தூம கேது ஏன் நல்ல வால் நட்சத்திரமாக இருக்கக் கூடாது என்றெல்லாம் தேவையற்றச் சிந்தனை தினமும் இருந்தது.

அன்று சொன்னதற்குப் பின்பு அகஸ்தியர் தூம கேதுவைப் பற்றி பின்பு சொல்லவே இல்லை.  மீறிக் கேட்டதற்கு "உன் வாக்கில் நான் இருக்கிறேன்.  நீயே பாரத தேசத்தின் ஜாதகத்தைக் கணித்துப் பார்" என்று சொல்லி மறைந்துவிட்டார்.

அதற்குப் பிறகு என் தங்கைகளின் திருமணத்திற்கு அகஸ்தியரிடம் கெட்ட பொழுது "அஹோபிலம்" செல்க அங்கு வியத்தகு சம்பவங்கள் உனக்கு! இந்த அறிய வாய்ப்பைத் தருகிறேன்.  "உடனே கிளம்பு" என்று ஆணையிட்ட பிறகு என்னால் ஒரு நிமிடம் சும்மா இருக்க முடியவில்லை.

"அஹோபிலம்" சென்று விட்டு வருகிறேன்" என்று மாத்திரம் பெற்றோரிடம் கூறிவிட்டுக் கிளம்பும் போது என் தந்தை விருட்டென்று கோபப்பட்டார்.  "பழயபடி ஊர் சுற்றும் உன்னையும் திருத்த முடியாது.  நாய் வாலையும் நிமிர்த்த முடியாது" என்று ஆசிர்வாதம் வழங்கினார்.

தந்தைக்குத் தெரியாமல் அகஸ்தியர் ஜீவநாடியை எடுத்து மிகப் பத்திரமாகப் பெட்டிக்குள் வைத்தேன்.

அப்பொழுது அகஸ்தியரிடம் வேண்டிக் கொண்டது, இரண்டு தான்.  "பகவானே! திருப்பதியில் கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் என்னைப் பரிதவிக்க வைத்து ஆடிய நாடகத்தை அஹோபிலத்தில் காட்டாதே.  என்னால் தாங்க முடியாது.

இன்னொன்று பாரத தேசத்திற்கு ஆபத்து என்றீர்.  அந்த தூம கேதுவை நான், என் கண்ணால் காண வேண்டும்.  அதோடு தேசத்திற்கு எந்தவித ஆபத்தும் அந்தத் தூமகேதுவினால் வராமல் காப்பாற்ற என்ன பரிகாரம் என்ன பிரார்த்தனைகளைச் செய்ய வேண்டும் என்பதையும் எப்படியாவது கூறிவிடு.

இதைச் சொன்னால் போதும்.  நான் ஒரு போதும் யாருக்காகவும் வேறு எதற்காகவும் தங்களைத் தொந்தரவு செய்யமாட்டேன்.  யாருக்கும் நாடி படிக்கவும் மாட்டேன்" என்று வேண்டிக்கொண்டேன்.

ரயில் பயணத்தின் பொழுது வானத்தைப் பார்த்தேன்.  பௌர்ணமி முடிந்து ஒன்பதாம் நாள் நிலா வெளிச்சம் ஏறத்தாழ மறைந்து நட்சத்திரங்கள் வானத்தில் அடிக்கடி மின்னிக் கொண்டிருக்கின்றன.  பெரும்பாலானவர்கள் நன்றாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.  இரவு மணி இரண்டரை இருக்கும்.

திடீரென்று வானத்திலிருந்து பளிச்சென்று ஒரு பெரிய மின்னல் போன்ற ஒளி, கிழக்குப் பக்கம் தோன்றியது.  முதலில் மிகப் பிரம்மாண்டமாய் கண்ணைப் பறிக்கும் அந்த ஒளியை நான் பார்த்த பொழுது அரண்டு விட்டேன்.

ஒரு பெரிய தீ பிழம்பு தலை, உடல், காலோடு வானத்தில் தோன்றி இரண்டு நிமிட நேரம் மிகவேகமாகப் பூமியை நோக்கி வருவது போல் தோன்றி பின்னர் படிப்படியாகக் குறைந்து ஒரு சிறிய மின்னல் போல் குறுகி பின்னர் மறைந்துவிட்டது.

மழை பொழியும் பொழுது மின்னல் முதலில் தோன்றும்.  பின்பு இடி இடிக்கும்.  மழை பொழியும்.  அப்பொழுது அந்த மின்னலைக் கண்டாலே கண்ணை கூசும்.

கண் பார்வை பறிபோய் விடக்கூடாது என்பதற்காக இப்படிப்பட்ட "ஒளி" வீசும் மின்னலைக் கண்ட உடன் சட்டென்று நமது பார்வையை அருகிலுள்ள பச்சை மரத்தில் பார்க்க வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.

அதுதான் இப்பொழுது எனக்கு நினைவில் வந்தது.

வானத்தில் தோன்றிய இந்த அதிசயத்தை அன்றைக்கு எத்தனைப் பேர்கள் பார்த்தார்களோ எனக்குத் தெரியாது.  ஆனால் நான் கண்டு பயந்து போனதும் பின்னர் பரவசம் அடைந்ததும் உண்மை.

அப்பொழுதெல்லாம் "பறக்கும் தட்டு" பற்றி ஒரு கிலி இருந்தது.  வீட்டை விட்டு வெளியே வருகின்ற பலர், வானத்தில் பறக்கும் தட்டு தன தலை மீது விழுந்து விடக்கூடாது என்று பயந்து அடிக்கடி வானத்தைப் பார்த்துக் கொண்டே நடப்பார்கள்.  அதிலேயும் இரவு நேரத்தில் வீதியில் நடக்கிறவர்கள் ஏதாவது சப்தம் பலமாகக் கேட்டாலும் அந்தப் பறக்கும் தட்டுதான் தலை மீது விழுந்து விட்டதோ என்று கதிகலங்கி தலை தெறிக்க ஓடியதும் உண்டு.

என் மனதிலும் இதுதான் பட்டது.  ஆனால் இதை பறக்கும் தட்டு என்று எண்ண முடியவில்லை என்றாலும் வானத்தில் நடக்கும் அற்புதங்களில் இதுவும் ஒன்று என் எண்ணினேன்.

தூக்கம் வரவில்லை.  தலைக்கருகே காத்திருக்கும் பெட்டியைத் தடவிப் பார்த்தேன்.  அகத்தியர் ஜீவநாடி இருந்தது.  பத்திரமாக இருக்கிறது என்று சந்தோஷம்.

அஹோபிலத்தில் நிறைய ஆச்சரியமான சம்பவங்கள் நடக்கப் போகிறது என்று சொல்லியிருந்ததால் அது என்னவாக இருக்கும்? என்று யோசித்துக் கொண்டிருந்த எனக்கு, வானத்தில் தோன்றியது ஒரு வேளை தூம கேதுவாக இருக்குமோ என்று நினைக்க தோன்றியது.

அகத்தியர் நாடியிடம் இது பற்றிக் கேட்கலாம் என்றால் அது சரியான நேரம் இல்லை.

கை கால் சுத்தம் பண்ணிக் கொண்டு கேட்கலாம்.  ஆனால் நாடியை விட்டு விட்டுத் திரும்பி வருவதற்குள் "நாடி காணாமல் போய்விடுமோ" என்ற பயம்.

அதே சமயம் நாடியைத் தூக்கிக் கொண்டு பாத்ரூமுக்கும் செல்ல முடியாது.  ஆனாலும் வானத்தில் தோன்றி மறைந்த அந்த விசித்திரத்தைப் பற்றி உடனே தெரிந்து கொள்ளவும் ஆசை.

இப்படி மனப்போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது ஏதோ ஓர் உணர்வு உந்தித்தள்ள ஜீவநாடியில் கை வைத்த போது நூற்றி முப்பது வாட் எலெக்ட்ரிக் கம்பத்தில் கை வைத்தால் என்ன ஷாக் ஏற்பட்டிருக்குமோ அப்படி ஒரு ஷாக் எனக்கு அடித்தது.

எனக்கு இதுவரை இப்படியோரு அனுபவம் ஜீவ நாடியைத் தொட்டு ஏற்பட்டதில்லை.

உடனே அவசர அவசரமாக ஜீவ நாடியைப் பார்த்த பொழுது அகஸ்தியர் சொன்னார் "வானத்தில் வட கிழக்குத் திசையை அசையாது பார், தூம கேது தெரியும்".

சித்தன் அருள் ...................... தொடரும்! 

[அகத்தியர் அடியவர்களே! இரு வார இடைவேளைக்கு பின் சித்தன் அருளுடன் உங்களை சந்திக்கிறேன். நமஸ்காரம்!]

7 comments:

  1. _/\_ஓம் சிவசிவ ஓம்_/\_
    ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!

    அன்பரே! 2 வாரமா? இது என்ன சித்தன் அருள் அன்பர்களுக்கு வந்த சோதனை!!! பரவாயில்லை. நீங்கள் எடுத்தா காரியம் நல்லபடி முடியட்டும். வாழ்க வளமுடன்! வளர்க அருளுடன்! இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

    எல்லாம் ஈசனின் கருணை!

    _/\_ஓம் சிவசிவ ஓம்_/\_
    ஓம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!

    ReplyDelete
  2. ஏன் ஐயா 2 வாரம்... :-( :-( :-(

    ~ஓம்சிவசிவஓம்~
    #ஓம் க்லீம் சிவசக்தி யோக ஸ்வரூப தேவாய நமஹ#
    !! ஓம் அகத்திசாய நமஹ !!

    ReplyDelete
  3. வருடத்தில் ஒரு முறை இரு வாரங்கள் தனிமையில் (த்யானத்திர்க்காக) இருக்கும் பழக்கம் உண்டு. அதனால் தான். இம்முறை இப்போது!

    ReplyDelete
    Replies
    1. பாரதி அவர்கள் சொன்னது போல விறுவிறுப்பான கட்டமல விட்டுட்டு போறது வருத்தம் தான்...ஆனாலும்...மிக்க மகிழ்ச்சி.உங்கள நீங்களே புதுபிச்சுட்டு வரபோறேன்னு சொல்லுறீங்க....புதுப்பித்து வெற்றிகரமா வாருங்கள்....காத்துகொண்டு இருகின்றோம் அப்படியே எந்த ஊருக்கு போவீங்க அல்லது அது குறித்து செய்தியினை தந்தால் வழிகாட்டியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்...மன்னிக்கவும், உங்களுக்கு தொந்தரவாக இருந்தால் சொல்ல வேண்டாம்..... நன்றி சாமிராஜன்.

      Delete
  4. விறுவிறுப்பான தருணத்தில் விட்டு சென்று இரண்டு வாரம் காக்க வைத்துவிட்டீர்களே, புது வருட தகவல் ஒன்றும் இல்லையே என்று எண்ணிக்கொண்டு பதிவின் முன் வரியை பார்த்தால் கண்ணில் பட்டது அகஸ்தியர் அறிவுரை ! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா" புது வருட தகவல் இது தானோ! ஒரு நிமிடம் உங்கள் பதிவும் பேசுகிறது என்று தோன்றியது! உங்களின் இந்த இடைவெளி காலம் இனிதே கடக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. இன்றுதான் உங்களுடைய வலைப்பக்கத்தை பார்க்கும் அதிர்ஷ்டம் திரு N.R.வெங்கடேசன் அவர்கள் மூலமாக கிடைத்தது.... உங்கள் வலைபக்கத்தை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி ......

    --
    Regards,
    Saravanakumar.B
    http://spiritualcbe.blogspot.in/

    ReplyDelete
  6. eagerly waiting for your valuable post... God Bless you..

    ReplyDelete