​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 6 December 2012

சித்தன் அருள் - 102


தன் மகளை வெளிநாட்டிற்கு அனுப்பி பல ஆயிரக்கணக்கான ரூபாயைச் செலவழித்துப் பல்வேறு அறுவைச் சிகிர்ச்சைகளைக் கையாண்டும் பலன் தராமல் போன வருத்தம் அந்த மில் அதிபருக்கு இருந்தது.

இதனால் ஏராளமான சொத்துக்கு வாரிசாகப் பிறந்த அந்தப் பெண் திருமணம் செய்து கொள்ள முடியாமல் போய் விடுமோ என்ற கவலையும் அச்சமும் அவரை வாட்டி எடுத்ததோடு சொத்துக்கு ஆசைப்பட்டு அவருடைய உறவினர் பலர் அதர்வண வேத பிரயோகம் செய்யவும் தயாராக இருந்தனர்.

பிரார்த்தனைகள் மீது மட்டும் நம்பிக்கையை வைத்திருந்த அந்த மில் அதிபர் இருக்கிற சொத்துக்களை எல்லாம் தர்மத்திற்கு எழுதிவிட்டு குடும்பத்தோடு தற்கொலை செய்து விடலாம் என்று முடிவெடுத்தார்.

அதற்கு முன்பு திருப்பதி பெருமாளை ஒரு முறை தரிசனம் செய்துவிட்டு வருவோம்.  தனக்கு வந்திருக்கும் எலும்பு சம்பந்தமான புற்றுநோய் இப்போது ஆரம்பக் கட்டம் என்றாலும் இதனால் தன் கால் ஒரு வேளை துண்டிக்கவும் படலாம்.  அப்படியிருக்கும் பட்சத்தில் தானும் தன குடும்பம் ஏன் உயிர் வாழ வேண்டும் என்ற வெறுப்பின் உச்சகட்டத்தில் இருக்கும் பொழுதுதான் திருமலையில் நான் சந்தித்திருக்கிறேன்.

இது ஒரு புறமிருக்க அந்த மில் அதிபரின் பெண் வீட்டில் யாருமில்லாத சமயத்தில் எடுத்த முடிவும் அது எப்படி நன்மையில் முடிந்தது என்பதும் வியப்புதானே!

எது எப்படியோ.....

கோயம்பத்தூர் போய்ச் சேர்ந்ததிற்கு ஒரு இனிப்பான செய்தி கிடைத்துவிட்டது.  அகஸ்தியர் என்னைக் கை விடவில்லை.  கெட்ட பெயர் ஏற்படாமல் தப்பித்தேன்.  டாக்டர்கள் ஆணித் தரமாக உறுதிபடச் சொல்லி விட்டதால் அந்தப் பெண்ணிற்கு இல்லற வாழ்க்கை அமைய இறைவன் கருணை காட்டிவிட்டான்.  அந்த மில் அதிபர் குடும்பம் எப்படிப்பட்ட மகிழ்ச்சியில் இருக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

தன காலில் ஏற்பட்ட நோயைப் பற்றியோ அல்லது வேறு எந்த விஷயத்தைப் பற்றியோ சிறிதும் கவலைப்படாமல் அந்த மில் அதிபர் அடைந்த மகிழ்வுக்கு அகஸ்தியரின் ஜீவநாடியும் ஒரு காரணமாக இருந்ததால் ஒரு பெருமை எனக்கும் இருந்தது.

ஒரு சாதாரண செடியின் தன்மையானது ஒரு குடும்பத்திற்கே விளக்கேற்றி விட்டது நம்பமுடியாத செய்தியாகத் தான் இருக்கும்.

இந்த செய்தியை நம்பாதவர்கள் நிறைய பேர்,  இது பற்றி கூட அகஸ்தியரிடம் நான் நாடியில் கேட்டேன்.

நம்புகிறவர்கள் நம்பட்டும்.  நம்பாமல் போனால் உனக்கு நல்லது.  காரணம் அரை குறை நம்பிக்கயுடயவர்கள் யாரும் உன்னைத் தேடி வரமாட்டார்கள்.  படபடப்பு இல்லாமல், தினமும் நான்கு மணி நேர பிரார்த்தனை செய்யாமல் அமைதியாகப் பொழுதைக் கழிக்கலாம் என்று பதில் உரைத்தார்.

மேலும் அவர் சொல்லித்தந்தது எல்லாம் "தெய்வ ரகசியங்கள்" என்கிற நிலையில் இருந்ததால் நிறைய விஷயங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள முடிவதில்லை.

நாடி படிக்க வருபவர்கள், அவர்கள் எதிர்பார்த்த காரியம் நடந்தால் நம்புவார்கள்.  இல்லையேல் விலகிவிடுவார்கள்.  அதோடு காரியம் நடக்காத ஆத்திரத்தில் "எழுதுவது/சொல்வது எல்லாம் பொய்" என்று ஒரு முத்திரையும் குத்திவிடுவார்கள்.

என்னிடம் நாடி பலன் கேட்க வருகிறவர்களுக்கு மிகவும் மரியாதையை கொடுப்பேன்.  அவர்களுக்காக நான் பிரார்த்தனை செய்து கொள்வதும் உண்டு.  "பகவானே வந்திருக்கும் அனைவருக்கும் எத்தனையோ பிரச்சினைகள், இது இப்போது தீரும் என்று முழு நம்பிக்கையோடு வந்திருக்கிறார்கள்.  அவர்கள் நம்பிக்கைத் தயவுசெய்து வீணாகி விடாதீர்கள்.  இதனால் நாடிபடித்து பலன் சொல்லும் நானும் கேவலப்படுவேன்.  அகஸ்தியர் ஜீவநாடிக்கும் மதிப்பு இருக்காது" என்று பங்கிகரமாகவே சொல்லிவிட்டுத் தான் ஓலைக்கட்டைத் தூக்குவேன்.  "நாடியினால் எந்தப் பலனும் கிடைக்காத பட்சத்தில் நான் மற்றவர்களுக்கு நாடி பார்ப்பதில் துளியும் பலனில்லை.  அதைவிட யாரிடமாவது இந்த ஜீவநாடியைக் கொடுத்துவிட்டு அமைதியாக உட்கார்ந்து விடுவேன்.  எனக்கெதற்கு வீண் வம்பு?  அப்படியொரு பிழைப்பு எனக்குத் தேவை இல்லை! என்று பலமுறை அகஸ்தியரிடம் போராடியிருக்கிறேன்.  அப்பொழுதெல்லாம் எனக்குக் கிடைத்த பதில் ஒன்றுதான்.  "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு.  அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா" என்பது தான் அது.

"நான் ஊருக்கு கிளம்புகிறேன்" என்று பலமுறை சொல்லிப் பார்த்தும் அந்த மில் அதிபர் என்னை விடுவதாக இல்லை.

"அகஸ்தியர் அருளால் என் பெண்ணுக்கு நல்ல வாழ்க்கை ஆரம்பித்துவிட்டது.  டாக்டர்களும் இதனை உறுதியாகவே சொல்லிவிட்டனர்.  இன்னும் ஆறு மாதத்தில் அவளுக்குத் திருமணம் செய்துவிடுவேன்.  என்னைப் பற்றிக் கவலை இல்லை" என்றவர் பின்னர் அரை குறை மனதோடு சென்னைக்கு அனுப்பி வைத்தார்.

எல்லோருக்கும் நன்றி சொல்லி அந்த மில் அதிபர் வீட்டிலிருந்து நான் கிளம்பும் போது மில் அதிபர் என் காதில் ஒரு செய்தியைச் சொன்னார்.  செய்தியா அது! இல்லை அணுகுண்டு!

அதைக் கேட்டதும் எனக்கு கையும் ஓடவில்லை.  காலும் ஓடவில்லை.  எவ்வளவுக் எவ்வளவு நான் நிம்மதியாக இருந்தேனோ அந்த நிம்மதி போய் விட்டது.  அதோடு போனாலும் பரவாயில்லை.  நான் ஒழுங்காக ஊர்ப் போய்ச் சேருவேனா என்ற திகிலும் ஏற்பட்டது.

"உங்களையும் உங்கள் கையில் இருக்கும் அகஸ்தியர் நாடியையும் கண் வைத்து ஒரு கூட்டம் சுற்றிக் கொண்டிருக்கிறது.  எனவே உங்களைப் பாதுகாப்பாக அனுப்பி வைக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.  இதற்கு நீங்களும் முழு மனதோடு ஒத்துழைக்க வேண்டும்" என்றார் அவர்.

"நான் என்ன தப்பு பண்ணினேன்".

"அகஸ்தியர் நாடியை வைத்துப் பலன் சொன்னீர்கள். அது பலித்துவிட்டது.  சொத்துக்கள் கைவிட்டுப் போய்விட்டதே என்ற ஆத்திரத்தில் எனது பங்காளிகள் சிலர் உங்கள் மீது கடும் கோபத்திலும் ஆத்திரத்திலும் இருக்கிறார்கள். அவர்களுக்கு இப்போது எங்கள் மீது கோபமில்லை.  என் மகள் மீது கோபமில்லை.  உங்கள் மீது திரும்பியிருக்கிறது.  அந்த ஆத்திரம் தீர எதை வேண்டுமானாலும் செய்வார்கள்".

இது எப்படி உங்களுக்கு தெரியும்?

தகவல் கிடைத்தது.  அதனால் நான் ஒரு புதிய ஏற்பாடு செய்திருக்கிறேன்.  இப்போது நீலகிரி எக்ஸ்ப்ரஸில் உங்களுக்காக இடம் வாங்கியிருக்கிறேன்.  அந்த கோட்சில் ஏறி பயணம் செய்யுங்கள்.  வண்டி திருப்பூர் ஸ்டேஷனில் நிற்கும்.  சட்டென்று இறங்கிவிடுங்கள்".

"அய்யய்யோ! இதென்ன கூத்து?"

"அவசரப்பட்டு எதுவும் பேசாதீர்கள்.  இங்கு இருக்கும் எல்லோருக்கும் இரட்டைக்காது.  ஜாக்கிரதை!"

"என்ன சார் இது!  துப்பறியும் கதையில் வருவது போல் இருக்கிறது.  நான் ஒரு ஜோதிடன் சார், மந்திரவாதி இல்லை சார். ஏதோ நன்மை செய்யப்போய், இப்படி வலுக்கட்டாயமாக மாட்டி வைக்கிறீர்களே.  என்ன சார் குடும்பம் உங்க குடும்பம்!" என்று எரிந்து விழுந்தேன்.

அதே சமயம் உள்ளூர எனக்கு உதறல் தான்.  இவரை விட்டால் வேறு கதியே எனக்கு இல்லை.

"கொஞ்சம் பொறுமை.  நான் சொல்வதை நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள்.  திருப்பூரில் இறங்கியதும், இதோ இந்த டிரைவரும், அவர் நண்பரும் ரயில்வே ஸ்டேஷனில் உங்களைச் சந்திப்பார்கள்.  அவர்கள் கூடவே இறங்கி காரில் போங்கள்.  பத்திரமாக உங்களை சென்னையில் சேர்த்துவிடுவார்கள்" என்று ஒரு பயங்கரமான திட்டத்தை மில் அதிபர் என்னிடம் சொன்ன போது நான் நானாக இல்லை.

"சரியாக மாட்டிக் கொண்டிருக்கிறோம்.  தப்பித்துச் செல்வது தம்பிரான் புண்ணியம்" என்றுதான் தோன்றியது.

அப்போது எனக்கிருந்த கோபத்தில் அகஸ்தியர் ஜீவநாடியை எல்லோர் கண் முன்னாலேயும் தூக்கி எறிந்துவிட்டு திரும்பிக் கூடப் பார்க்காமல் திருட்டு ரயில் ஏறியாவது சென்னைக்கு வந்திருப்பேன்.

பெரியோர்களது வார்த்தைகளை மதிப்பு கொடுத்துக் கேட்டிருந்தால், நாடியைப் பார்த்து அலைய வேண்டிய வேலை ஏற்பட்டிருக்காது.  இல்லை, என்னைத் தன மகனாக பாவிக்கும் அகத்தியராவது இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலை ஏற்படாதவாறு காப்பாற்றி இருக்க வேண்டும்.  அப்படி எதுவும் செய்யவில்லை.

என்னதான் நடக்கும் என்பதை அகஸ்தியரிடம் கேட்கலாம் என்றால் அன்றைக்கு "அஷ்டமி".  நிச்சயம் அகஸ்தியரிடமிருந்து பதில் வராது!

இப்படித்தான் மாட்டிக் கொண்டு நான் கேவலப் பட வேண்டும் என்று இருந்தால் அதை அனுபவித்துத்தான் தீர வேண்டும்.  இதற்கு யாரைச் சொல்லி என்ன லாபம்? என மனம் நொந்து போனேன்.

எனது முகம் ரத்த ஓட்டமில்லாமல் வெளிறிக் கொண்டிருப்பதைக் கண்டு தட்டிக் கொடுத்து உற்சாகமான வார்த்தைகளைச் சொல்லி காரில் ஏற்றி அனுப்பினார் அந்த மில் அதிபர்.

வியர்த்து விறு விறுத்து "ஆமாம் சாமி" போல் தலையை ஆட்டி அவர்களிடமிருந்து விடைபெற்று சென்னைக்குச் செல்லும் அந்த நீலகிரி ரயில் பெட்டியில் ஏறி அமர்ந்தேன்.

திருப்பதிக்குச் சென்றுவிட்டு அப்படியே வீடு திரும்பியிருக்க வேண்டும்.  பொல்லாத ஓசி பயணம் - கார் - இதற்கு இடம் கொடுத்ததால் ஏற்பட்ட விளைவு இப்போது எங்கே கொண்டு விட்டிருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கும் பொழுது என்னையே நான் வெறுத்தேன்.

இனிமேல் நாடி படிக்கவோ பார்க்கவோ கூடாது என்று முடிவெடுத்தேன்.  யார் எப்படிப் போனால் எனகென்ன!  நாமும் இனிமேல் சுயநலமாக இருக்க வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டேன்.  அப்படியானால் கையிலிருக்கும் இந்த நாடியை என்ன செய்வது? என்ற யோசனை பிறந்தது.

பேசாமல் ரயிலிலேயே விட்டுவிட்டு ஓசைப்படாமல் இறங்கிவிடலாம்.  அல்லது ஊருக்குப் போனதும் பாண்டிபஜாரில் இருக்கும் அகஸ்தியர் கோயிலில் சொல்லாமல் கொள்ளாமல் வைத்துவிட்டு ஓடி வந்து விடலாம் என்று முடிவெடுத்தேன்.

எல்லோரும் நாடிப்பார்த்து நன்மை அடையவேண்டும் என்று ஆசைப்பட்ட என்க்குத் தொடர்ந்து பல்வேறு மிரட்டல்கள் சோதனைகள் வருகிறதென்றால் பின் எனக்கெதற்கு அகஸ்தியர் தயவு? என்ற கசப்பான எண்ணம் மீண்டும் மீண்டும் தோன்றவே நிலை கொள்ளாமல் தவித்தேன்.

ஏதோ சினிமாவிலே வர மாதிரி இடம் விட்டு இடம் மாறி பதறி பதறி ஊர்ப் போய்ச் சேரவேண்டிய அவசியம் எனக்கு எதற்கு? என்று அடிவயிறு எரிந்தது.

யாரவர்கள்? எதற்காக என்னையும் அகஸ்தியர் நாடியையும் குறிவைத்து பின் தொடர வேண்டும்.  என்னாலோ இந்த ஓலைச் சுவடியினாலோ அவர்களுக்கு என்ன லாபம்? கேட்டால் சந்தோஷமாக அந்த நாடியைக் கொடுத்துவிட்டுப் போகிறேன்.  அதை விட்டு விட்டு இப்படியோரு, பயந்து பயந்து மாற்று ஏற்பாடு செய்ய வேண்டிய அவசியம் இல்லையே என்று பொருமிற்று என் உள்ளம்.  அப்படியே கண் அயர்ந்தும் போனேன்.

சரியாக உண்ணாமல் எதையோ நினைத்து நான் புண்பட்டுக் கொண்டிருந்தாலும் ஜன்னலோரம் அமர்ந்த நான், சட்டென்று கண் விழித்துப் பார்த்தபொழுது - திருப்பூரைத்தாண்டி ஈரோட்டை நோக்கி நீலகிரி எக்ஸ்பிரஸ், கன வேகமாகச் சென்று கொண்டிருந்தது.  பதறிப்போன நான், என்னுடன் கொண்டுவந்த பெட்டியைப் பார்த்தேன்.  நல்லவேளை பத்திரமாக இருந்தது.  அதே சமயம்........

நாடி வைத்திருந்த பையைப் பார்த்தேன்.  பை இருந்தது.  ஆனால் அகஸ்தியரின் அந்த ஜீவநாடிக் கட்டை காணவில்லை.

"அப்பாடி விட்டதடி ஆசை விளாம் பழத்தோடு" என்று பொன் மொழிக்கேற்ப எப்படியோ ஒரு பெரிய தொல்லை விட்டுவிட்டது என்று மனதைச் சமாதானப் படுத்திக் கொண்டேன்.

ஆனால் - விதி வேறு விதமாக விளையாட ஆரம்பித்து விட்டது என்று அப்போது எனக்குத் தெரியவில்லை.

சித்தன் அருள் .................. தொடரும்!

1 comment:

  1. _/\_ஓம் சிவசிவ ஓம்_/\_
    ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!

    சோதிப்பது, சோதனையை தருவது எல்லாம் அவனே என்று நமக்கு புரிவதில்லை. நம் பூரண நம்பிக்கையை விட்டு விடுகிறோம்.
    நல்லவர்களும் சில சமயம் நம்பிக்கையை கை விட்டு விடுகிறோம். அவன் திருவடிதன் நமக்கு சரணம்!

    _/\_ஓம் சிவசிவ ஓம்_/\_
    ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!

    ReplyDelete