​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 13 December 2012

சித்தன் அருள் - 103


இன்பம் தனித்து வரும்.  துன்பம் துணையோடு வரும் என்பது பழமொழி.  இதனை நினைவுருத்துவதர்க்காகத்தான் எனக்கு இப்படிப்பட்ட சோதனைகள் நடக்கிறதோ என்று எண்ணிக் கொண்டேன்.

தூக்கம் அடியோடு போனதால் நிலை கொள்ளாமல் தவித்தேன்.

திருப்பூரில் என்னை ரயில்வே ஸ்டேஷனில் வந்து சந்திப்பதாகச் சொன்ன அந்த மில் அதிபரின் ஆட்கள் ஏன் வந்து சந்திக்கவில்லை.  ஒரு வேளை என்னைக் கண்டு பிடிக்க முடியாமல் திரும்பிப் போய் விட்டார்களா? என்று ஒரு சந்தேகம்.

ஒரு வேளை நான் ஜன்னலோரம் கவிழ்ந்து கண் அசந்திருந்ததால் என் முகம் அவர்களுக்குத் தெரியாமல் போய் விட்டதா? இல்லை அவர்களே சற்று தாமதமாக வந்து என் ரயிலைப் பிடிக்க முடியாமல் "கோட்டை" விட்டிருக்கலாமோ? என்று கூட எண்ணிக் கொண்டேன்.

இந்த சமயத்தில் தான் திடீரென்று ஒரு சந்தேகம் எனக்கு.  ரயில் டிக்கெட் திருப்பூர் வரையில் எடுத்திருக்கிறார்களா? இல்லை சென்னை வரையிலும் எடுத்திருக்கிறார்களா? என்பதுதான்.

நல்லவேளை ரயில் டிக்கெட்டில் சென்னை என்று இருந்தது.  அதன் பின்புறம் என் பெயரும் வயதும் தெளிவாக எழுதி இருந்தது.  தப்பித்தேன்,  இல்லையென்றால் என் நிலை கந்தல் நாராக மாறி இருக்கும்.  திருப்பூர் வருவதற்கு முன்பே என் டிக்கெட்டை டி டி ஆர் பரிசோதித்து விட்டதால் இனிமேல் டி டி ஆர் செக்கிங் இருக்காது.  காலையில் சென்னைக்குப் போய் பார்த்துக் கொள்ளலாம் என்று தைரியம் ஏற்பட்டது.

இத்தனை நடந்ததிற்கும் அகஸ்தியரின் ஜீவநாடி தொலைந்ததிற்கும்  ஏதோ ஒரு காரணம் இருந்திருக்கும் என்று மனதைத் தேற்றிக் கொண்டேன்.

ஈரோட்டில் ரயில் நின்றது.  ஒரு நப்பாசை, யாராவது ஜீவநாடியை எடுத்துக் கொண்டு போகிறார்களா, தப்பித்தவறி அதனை மீண்டும் என்னிடம் கொடுத்து விட மாட்டார்களா என்று ஒரு ஏக்கம் மனதில் உறுத்தியது.

பிளாட்பாரத்தில் இறங்கி அங்குமிங்கும் பார்த்தேன்.  யார் யார் என்ன என்ன லக்கேஜ் கொண்டு போகிறார்கள் என்பதிலே கண்ணும் கருத்துமாகப் பார்த்தேன்.

நேரம் ஆனது தவிர என் கண்ணில் அகஸ்தியர் ஜீவநாடி தென்படவே இல்லை.

நிறைய பேர்களுக்கு நாடி பார்த்துப் பலன் சொன்ன போது வியத்தகு அதிசயங்கள் நடந்திருக்கிறது.  என் விஷயத்தில் இது போல் நடக்காதா என்று கூட நினைத்தேன்.

யாராவது ஒருவர் "இந்தப்பா உன் அகஸ்தியர் ஜீவநாடி" என்று அந்த ஓலைக்கட்டை எடுத்துத் தரமாட்டார்களா என்று கூட நினைத்தேன்.  பலருக்கு பலவிதமான அதிசயங்களைச் செய்து வைத்த அகஸ்தியர் எனக்கு எதுவும் செய்யவில்லை.

இது வருத்தம் தான் என்றாலும் "நான் தான் இந்த நாடி கைவிட்டுப் போகட்டும் என்று சில மணி நேரத்திற்கு முன்பு நினைத்ததால் இழந்து போனதை நினைத்து வருத்தப்படக் கூடாது" என்று தேற்றிக் கொண்டேன்.

பிளாட்பாரதிலுள்ள மணி அடிக்கவே ரயிலில் ஏறிக் கொண்டேன்.  எல்லோருமே படுக்கையை விரித்து, ஜன்னலைச் சார்த்தி, வெளிச்சமான விளக்குகளை அணைத்து விட்டதால், நானும் என் பெட்டியைத் தலையணை மாதிரி வைத்துக் கொண்டு படுத்தேன்.

தூக்கம் வந்தால் தானே!

புரண்டு புரண்டு படுத்தேன்.  திருப்பதி சம்பவங்கள், லக்ஷ்மி நரசிம்மரின் வாசனைத் தரிசனம், கோயம்பத்தூர் மில் அதிபரின் தொடர்பு, அவரது விருந்தாளியாகத் தங்கியது எல்லாம் மீண்டும் என்னை முள் குத்துவது போல் குத்தியது.

எதற்காகப் பிறந்தேன், என்ன பண்ணப் போகிறேன், அகஸ்தியர் எதற்காக என்னிடம் வந்தார்? என் குடும்பப் பொறுப்பை விட்டு விட்டுத் தந்தையின் கோபத்திலிருந்து நாடி பார்ப்பதால் ஏற்ப்படுகின்ற நல்லதை விட ஏற்ப்படுகின்ற கெட்டது, அவமானம், கேவலமான பேச்சுக்கள் தொடர்ந்து மற்றவர்களைப் போல் வேலைக்கு செல்லாமல் பைத்தியம் பிடித்தவன் போல், ஊர் ஊராக அலைவது எல்லாமே வீண் தான் என்று இப்போதுதான் ஞானோதயம் ரயிலில் தோன்றியது.

நடந்தது நடந்துவிட்டது.  இனிமேலாவது மற்றவர்களைப் போல் பொறுப்புள்ள மனிதனாக நடந்து கொள்வோம்.  அகஸ்தியர் இதற்காகத்தான் என்னைவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டார்.  எல்லாம் நன்மைக்கே என்று என்னை நான் தேற்றிக் கொண்டேன்.  இனிமேல் நாடி பற்றிச் சிந்திக்க கூடாது என முடிவெடுத்தேன்.  சேலத்தில் ரயில் நின்றது.

தூக்கம் வராததினால் எழுந்து பிளாட்பாரத்தில் இறங்கினேன்.

மனது கேட்கவில்லை.  தப்பித்தவறி யாராவது அகஸ்தியர் நாடியைத் தூக்கிக் கொண்டு செல்கிறார்களா என்ற நப்பாசை மறுபடியும் தலையைத் தூக்கியது.

அப்படியே கண்ணோட்டம் விட்டேன்.  பசி லேசாக வயிற்றைக் கிள்ளியது.  ஒரு கப் பால் சாப்பிட்டுவிட்டு வருவோம் என்று கான்டீன் பக்கம் சென்றேன்.

அங்குதான் என் கண்கள் வியப்படைந்து நின்றன.

மேல்சட்டை எதுவுமின்றி, பரட்டைத்தலை, வெண்தாடி மீசையோடு தோளில் ஒரு துண்டை தூளி போல் கட்டி தொங்கவிட்டு கொண்டு காவி வேஷ்டியில் தீட்சண்யமான கண்களோடு தனியாக நின்று கொண்டிருந்தார் ஒரு வயதான பெரியவர்.

பெரும்பாலும் இப்படிப்பட்டவர்கள் பரதேசியாகத்தான் இருப்பார்கள்.  யாரும் இவர்களைக் கண்டு கொள்வதும் இல்லை.  அதேபோல் இந்தப் பரதேசிகளும் டி டி ஆரால் எந்த ஸ்டேஷனில் இறக்கிவிட்டாலும் அதைப் பெரிது படுத்துவதும் இல்லை.

நானும் அப்படித்தான் நினைத்தேன்.  அதனால் அந்தப் பெரியவரைப் பற்றி அதிகம் நினைக்கவில்லை.  வேறு பயணிகளில் யாரவது ஒலைக்  கட்டைத் தூகிக் கொண்டு இறங்குகிறார்களா என்பதிலேயே தான் என் முழுக்கவனமும் சென்றது.

பாலைக்குடித்துவிட்டு திரும்பியதும் அந்தப் பரதேசிப் பெரியவர் சட்டென்று தன தோளில் தொங்கிக் கொண்டிருந்த தூளி போன்ற துண்டிலிருந்து எதையோ ஒன்றை எடுத்து - பயணிகள் உட்காரும் பெஞ்சில் வைத்துவிட்டு விறு விறுவென்று வாசலைக் கடந்து வெகு வேகமாகச் சென்றுவிட்டார்.

அந்த இடத்தில் என்னையும் அவரையும் தவிர வேறு யாருமில்லை.  அந்தப் பரதேசிப் பெரியவர் வைத்தது என்ன என்று தெரிந்து கொள்ள எனக்கு ஆசையே இல்லை.

இருப்பினும் எனக்குள் இருந்த ஒரு உந்துதல் காரணமாகவும், ரயில் கிளம்ப இன்னும் பத்து நிமிஷம் ஆகும் என்பதாலும் அந்தப் பெஞ்சில் போய் உட்கார்ந்தேன்.

ஒரு சிறு சபலம்.  "பகவானே! அந்தப் பெஞ்சில் இருக்கும் பொருள் அகஸ்தியர் நாடியாக இருக்ககூடாதா?" என்று தோன்றியது.  மறு வினாடி ஒரு பயம்.

அவரோ ஒரு பரதேசி.  அவர் வைத்த அந்தப் பொருளைத் தொட்டுப் பார்ப்பது என்பது மிகவும் அசிங்கமான செயல்.  யாராவது அங்கிருந்தவாறு பார்த்தால் என்னை எவ்வளவு கேவலமாக நினைப்பார்கள் என்ற குற்ற உணர்ச்சி.  ஆனாலும், இத்தனையும் தாண்டி அந்தத் துண்டில் சுற்றி வைக்கப்பட்டதைப் பிரித்துப் பார்க்க வேண்டும் என்ற துடிப்பு இருந்தது.

நான் இன்னும் கொஞ்சம் அதனருகே போய் உட்கார்ந்தேன்.  இருபது அடிக்குத் தள்ளி, இரண்டு மூன்று இளைஞ்சர்கள் சிகரெட் பிடித்துக் கொண்டு பிளாட்பாரத்தில் இப்படியும் அப்படியும் நடந்து கொண்டிருந்தார்கள்.  சில சமயம் அவர்கள் என்பக்கம் வருவதும் போவதுமாக இருந்தார்கள்.

இதனால் எனக்கு ஒரு மானசீகமான பயம் ஏற்பட்டது.  என் இடது கைவிரல்கள் அந்தப் பொருளுக்கு மிக அருகில் சென்றதைச் சட்டென்று இழுத்துக் கொண்டேன்.  இந்த சமயத்தில் இன்னொரு பதற்றமும் தோன்றியது.

ஒரு வேளை அந்தப் பரதேசிப் பெரியவர் சென்று விட்டோ அல்லது இங்குமங்கும் சென்றுவிட்டோ மீண்டும் சட்டென்று திரும்பி அந்தப் பொருளை எடுக்க வந்துவிட்டால், பிச்சைக்காரனினும் கேடுகெட்டுப் போவேன்.  "ஏன் இந்த அவலம்?" என்று தான் தோன்றியது.  ஒரு முடிவு எடுத்தால் அதைக் கடைசிவரை நிறைவேற்ற வேண்டும்.  கைவிட்ட பொருள் போகட்டும் என்று தீர்மானமாக நினைக்க வேண்டும்.  சபலம் எவ்வளவு கொடுமையானது, எவ்வளவு கேவலத்தை உண்டு பண்ணுகிறது என்று நினைத்துப் பார்த்தேன்.  என் மீது எனக்கே வெறுப்பு உச்சகட்டத்தில் ஏற்பட்டது.

போர்டர் ஒருவர் என் பக்கத்தில் வந்தார்.

எந்த கூலியும் கிடைக்கவில்லை என்ற ஆத்திரம் அவருக்கு இருந்திருக்கிறது. வெறுப்புடன் யாரையோ நோக்கித் திட்டிக் கொண்டே அந்தக் கண்டீன்காரரிடம் ஒரு கப் பாலை வாங்கி, ஆற அமர நிதானமாகக் குடிக்க, நான் அமர்ந்து இருந்த பெஞ்சில் வந்தமர்ந்தார்.  எனக்கு இதைக் கண்டதும் கொஞ்ச நஞ்ச ஆசையும் போய்விட்டது.  அந்தப் பொருளைப் பார்க்காமல் அப்படி இங்குமங்கும் கண்களை ஓட்டினேன்.  இதற்குள் மணி அடிக்கவே, மனதிற்குள் அந்தப் போர்டரைத் திட்டிக் கொண்டேன் எழுந்தேன்.

ரயில் கதவைத் திறந்து கொண்டு உள்ளே ஏறும்பொழுது "ஏனுங்க......... இதை விட்டுட்டுப் போறீங்களே" என்று ஒரு குரல் கேட்டது.

திரும்பி பார்த்தேன்.

என் பக்கத்தில் சுவாரஸ்யமாகப் பால் குடிக்க வந்தமர்ந்த அந்தப் போர்டர் அந்தப் பரதேசிப் பெரியவர் வைத்துவிட்டுப் போன அந்தத் துண்டினால் சுற்றப்பட்டப் பொருளை என்னிடம் நீட்டினான்.

ஒரு பக்கம் சந்தோஷம்.  இன்னொரு பக்கம் பயம்.  இது என்னுடைய ஓலைச் சுவடியாக இல்லாவிட்டால் அதை என்ன செய்வது என்பதுதான்.  போர்டருக்கு நன்றி சொல்லி அதை வாங்கிக் கொண்டேன்.  இப்படிப்பட்ட நல்ல உள்ளத்தையா நான் திட்டினேன் என்று வெட்கம்,. அந்தப் போர்டருக்கு ஏதாவது உதவி செய்திருக்க வேண்டும்.  ஆனால் செய்ய முடியாத சூழ்நிலை என் மனம் ஒரு குற்றவாளியைப் போல் குறு குறுத்தது.

படுக்கைக்கு வந்து அதைப் பிரித்துப் பார்க்க மனது துடித்தது. மேலெழுந்தவாரியாகப் பார்க்கும் பொழுது அந்த துண்டிற்குள் இருந்த அமைப்பு நாடி ஓலைக் கட்டு போல் தோன்றியது.

இனியும் பொறுக்க முடியாமல் என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும் என்ற வேகத்தோடு பிரித்துப் பார்த்தேன்.

அது..........

சில மணி நேரத்திற்கு முன்பு திருப்பூரில் காணாமல் போன என்னுடைய அதே அகஸ்தியரின் ஜீவநாடிதான் என்று தெரிந்தது.

நான்கு மணி நேர இடைவேளைக்குள் எனக்கு ஏற்பட்ட இந்தச் சோதனை எதற்கு?

யார் அந்தப் பரதேசிப் பெரியவர்.  அகஸ்தியப் பெருமான் தானா?  எதற்காக ஓலைச்சுவடி காணாமல் போயிற்று?  அது எப்படி இந்தப் பரதேசியின் கையில் கிடைத்தது.  இவன் பரதேசியா இல்லை ரயில் பயணிகளின் பொருளைத் திருடும் திருடனா?

அப்படியே திருடினாலும் எதற்காக என் கண்பார்வையில் அந்த ஓலைச் சுவடியை வைத்துவிட்டுச் செல்ல வேண்டும்? அப்படியே வைத்துவிட்டுப் போனாலும் அந்தப் பொருளின் மீது எனக்கு ஏன் என் தகுதியையும் மீறி ஆசை வர வேண்டும்?

அந்தப் பொருள் என்னுடையது என எண்ணி ஏன் இந்தப் போர்டர் என்னிடம் ஓடி வந்து தரவேண்டும்? இப்படி நடப்பதெல்லாம் கனவா இல்லை நனவா? இல்லை தூக்கத்தில் நடக்கின்ற நாடகமா? என்ற கேள்விக்கு உடனடியாக விடை கிடைக்கவில்லை.

நான் பக்திமான் அல்ல, பகவானே நேரில் வந்து என்னச் சோதிப்பதற்கு! பலருக்கு வழிகாட்டிக் கொண்டிருந்தேன்.  இந்த ஓலைச்சுவடியை வைத்து எத்தனைப் பேர்கள் இந்த அகஸ்தியர் வழிப்படி நடந்து ஏமாந்து போனார்கள் என்பது தெரியாது.

ஒன்று மட்டும் நிச்சயம்.  ஏதோ ஒரு பந்தம் எனக்கும் அகஸ்தியப் பெருமானுக்கும் இருக்கிறது.  இல்லையென்றால் வேண்டாமென்று எண்ணினாலும் இந்த ஜீவநாடி மீண்டும் என்னிடமே வந்து சேர்ந்திருக்கிறது.  இதை அதிசயம் என்று சொல்வதா? இல்லை அகஸ்தியர் பொழுது போகாமல் என்னிடம் ஆடும் நாடகம் என்று எடுத்துக் கொள்வதா? அல்லது திரும்பவும் மற்றவர்களுக்குப் படிக்க அகஸ்தியர் உத்திரவு கொடுத்து விட்டார் என்று எண்ணிக் கொள்வதா? என்று நான் ஒருவித சந்தோஷத்தில் பயத்தில் குழம்பிக் கொண்டிருந்தேன்.  மீண்டும் இந்த ஓலைச்சுவடி என் கைக்கு வந்தது நல்லதா அல்லது ஏதேனும் விபரீதச் செயலுக்கு அஸ்திவாரமா, என்றும் உறுதியாகத் தெரியவில்லை.

அந்த நள்ளிரவு நேரத்திலும் நான் சுத்தமாக இல்லாத அந்தச் சூழ்நிலையிலும் அகஸ்தியர் என்னதான் சொல்கிறார் என்று துணித்து நாடியைப் படிக்க ஆரம்பித்தேன்.

அப்பொழுது அகஸ்தியர் சொன்ன சொற்கள் ஒவ்வொன்றும் என்னை ஆச்சரியப் பட வைத்தது.  அதிலொன்று "சுக்ரனில் பிளவொன்று விரைவில் உருவாகப்  போகிறது.  இது பாரத தேசத்திற்கு நல்லதல்ல" என்று உரைத்தார்.  அது "தூமகேது" என்று பின்னர் தெரிந்தது.

சித்தன் அருள்.................. தொடரும்!

4 comments:

  1. _/\_ஓம் சிவசிவ ஓம்_/\_
    ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!

    எல்லாம் திருவிளையாடல் போல் தெரிகிறது....
    இதை நிறைய அன்பர்கள், நம்ப மாட்டார்கள்.. அவனை தெரிந்து கொள்ள நினைப்பவர்களுக்கு இது திருவிளையாடல்தான்..
    எல்லாம் சிவன் மயம்,...

    அகத்திய சித்த பெருமானே எங்களுக்கும் நல்வழியை காட்டும்....

    _/\_ஓம் சிவசிவ ஓம்_/\_

    ReplyDelete
  2. they are explained தூமகேது.
    http://ponniyinselvan.in/book/kalki/ponniyin-selvan/part-5/chapter-12

    ReplyDelete
  3. இன்றுதான் உங்களுடைய வலைப்பக்கத்தை பார்க்கும் அதிர்ஷ்டம் திரு N.R.வெங்கடேசன் அவர்கள் மூலமாக கிடைத்தது.... உங்கள் வலைபக்கத்தை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி ......
    --
    Regards,
    Saravanakumar.B
    http://spiritualcbe.blogspot.in/

    ReplyDelete