அந்த ஓலைச்சுவடி கிடைக்குமா, கிடைக்காதான்னு ஒரு ஜோசியர் கிட்டே நாலணா கொடுத்து கேட்டா சொல்வான். அதை விட்டுட்டு இங்கே வந்து "கம்ப்ளைன்ட்" கொடுக்க வராங்களாம் போங்கயா, போங்க என்று எங்களை கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாக அந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சொன்னதால் நொந்து போன எனக்கு "இதைவிடப் பெரிய கேவலம் இனி இல்லை" என்று தோன்றியது.
ஆனால் --
யோசித்துப் பார்த்த எனக்குச் சமீபகாலமாக நிறைய தவறுகளைச் செய்து வருவதாகவே தெரிந்தது. நான் செய்த தவறுக்கு அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது ஆத்திரப்படுவது எந்த விதத்தில் நியாயம்? என்று என் உள் மனம் குத்திக்காட்டியது.
முன்பெல்லாம் நாடி பார்க்கும் முன்பு, ஒரு வித பயம் இருந்தது. சில ஒழுக்க முறைகளைக் கண்டிப்பாகக் கடை பிடித்தேன். சமீப காலத்தில் அதைச் சரியாகக் கடை பிடிப்பதில்லை. யார் கேட்டாலும், சட்டென்று ஓலைச் சுவடியை எடுத்துப் படிப்பது, அகஸ்தியர் என்னோடு இருக்கிறார் என்ற மமதை அல்லது என்னையும் அறியாமல் ஏற்பட்ட அகம் பாவமும் இருந்தது. சில சமயம் மற்றவர் பாராட்டும் புகழ் மழையில் என்னை நானே அகஸ்தியராகவே எண்ணிக் கொண்டது, சில முக்கிய நபர்களுக்காக முறையான பக்தி, மரியாதை இல்லாமல், அவர்களுடைய பதவிக்கும், பண வசதிக்கும் மரியாதை கொடுத்து "நாடியை" அவர்கள் இடத்திற்கே வலியக் கொண்டு சென்று அவர்களுடைய நம்பிக்கையைப் பெற வேண்டும் என்ற ஆசையில் அவர்களுடைய இடசுத்தம் - மன சுத்தம் பற்றிக் கவலைப்படாமல் படித்ததிற்கு ஒட்டு மொத்தமான தண்டனைதான் இது என்று நினைத்துக் கொண்டேன்.
"ச்சே! இனிமேல் இந்த மாதிரி ஏர்போர்டில் செய்த தவறை மறுபடியும் செய்யக் கூடாது. முன்பு போல் முறையோடு பிரார்த்தனை செய்து படிக்க வேண்டும்" என்று சபதம் எடுத்துக்கொண்டேன்.
என்ன பிரயோஜனம். கையில் நாடி இல்லாத போதுதான் பிரசவ வைராக்கியம் போல் இப்படிப்பட்ட ஞானம் ஏற்படுகிறது.
ஒரு பொருள் கையில் இருக்கும் போது இப்படிப்பட்ட வைராக்கியம் ஏற்படுவதில்லை. கை விட்டு போன பின்புதான் எல்லாத் தத்துவங்களும் ஞாபகத்திற்கு வருகிறது.
இனிமேல் அந்த ஓலைச்சுவடி என் கைக்கு வரும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. இந்த சமாச்சாரத்தைக் கேட்டால் என் தந்தையை விட மகிழ்ச்சி அடைபவர் வேறு யாரும் இருக்க முடியாது. "என் தாயாரோ, இனிமேல் என் மகன் ஒழுங்காக வீட்டில் இருப்பான். ஊர் சுத்த மாட்டான். குடும்பப் பொறுப்பை ஏற்பான். நான்கு பேர் தினமும் வீட்டிற்கு வந்து பிரச்சினைகளைச் சொல்லிக் கழுத்தறுக்க மாட்டார்கள். அவர்களுக்கு "காப்பி போட்டுக் கொடுக்கிற வேலை மிச்சம்" என்று தனக்குத்தானே ஆறுதல் பட்டுக் கொள்வார்.
இப்படிச் ச்சம்பந்தமில்லாத கற்பனைகள், யார் யார் எப்படியெல்லாம் பேசுவார்கள் என்ற விசித்திரமான சிந்தனை என்னைக் கூனி குறுக வைத்தன.
போலீஸ் நிலையத்திலிருந்து அவமானத்தைத் தாங்கிக் கொண்டு நாங்கள் நால்வரும் மௌனமாக மெயின் ரோடிற்கு வந்து கொண்டிருக்கும் பொழுது, ஒரு பன்னிரண்டு வயதுச் சிறுவன் எங்கள் எதிரே வந்தான்.
அவனது வலது கால் ஊனம். தொடைக்கு கீழே ஒரு குச்சி போல் கால் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. ஒரு நீண்ட மூங்கில் கம்பின் உதவியோடு மூச்சு வாங்காமல், ஓட்டமும் நடையுமாக வந்து கொண்டிருந்தான்.
அரைக்கால் நிஜார். இடுப்பிலிருந்து கீழே நழுவாமல் இருக்க அந்த நிஜாரின் மீது அரையணா கயிற்றால் ஒரு பல்பத்தை ஸ்க்ரூ போல் இறுகக் கட்டியிருந்தான். காலில் செருப்பு இல்லை. மேல் சட்டையும் இல்லை. கருத்த தோல். தலையில் பரட்டை. முடி வெட்டி பல மாதமாக இருக்கும் போல் தோன்றியது. அதுமட்டுமல்ல அவன் தலைமுடி எண்ணை பார்த்துப் பல வருஷமாகியிருக்கும்.
வேகமாக வந்து கொண்டிருந்ததினால் அவனுக்கு மூச்சு இறைத்தது. உடல் முழுவதும் முத்து முத்தாய் வியர்வைத் துளிகள் இத்தனையும் தாண்டி அவன் கண்களில் மட்டும் ஒரு அபூர்வமான ஓளி பிரகாசித்துக் கொண்டிருந்தது.
எதிரில் வந்த எங்களைக் கண்டதும் மரியாதைக்காக ஒதுங்கி நின்றாலும் அவன் எதையோ எங்களுக்கு சொல்ல வருவதுபோல் தோன்றியது. அவனை உற்றுப் பார்க்கும் பொழுது அவன் சாதாரணச் சிறுவனாக என் மனதிற்குத் தோன்றவில்லை. தயங்கி தயங்கி நின்றதைப் பார்த்ததும் "என்ன?" என்று கேட்டேன்.
"சார். பல்லாவரம் ரோட்ல ஒரு விபத்து சார். ஒரு கார் மரத்திலே மோதி அப்படியே நிக்குது. ஆனா......... கார்ல யாருமே இல்லை சார்" என்றான்.
"தினம் தான் நிறைய விபத்து அந்த ரோட்ல நடக்குது. மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு தாம்பரம் வழியா வரவங்க அவசரமாக காரை ஓட்டும் போது இப்படிப்பட்ட விபத்து நடக்கறதில் ஆச்சரியம் ஒண்ணுமில்லை. இதுக்கு போய் இந்தப் பையன் ஏன் அலட்டிக்கிறான்" என்று தான் நானும் என் நண்பர்களும் எண்ணினோம்.
"சரிதான்பா. அதுக்குத்தான் டிராபிக் போலீஸ் இருக்காங்க. அவங்க பார்த்துப்பாங்க. நீ ஏன் கவலைப்படறே" என்றேன்.
"இல்லை சார், அந்த காருக்குள்ளே ஓலைச்சுவடி மாதிரி ஏதோ ஒன்னு கிடக்குது. கண்ணாடி ஜன்னல் வழியே பார்த்தேன். அது ஏது என்னனு புரியவில்லை. நீங்க போற வழியிலே அதோ அந்த கண்ணுக்கு எட்டிய தூரத்துலே இருக்கு சார். போய் பாருங்க சார்" என்றான் நிதானமாக.
இதுவரை அலட்சியமாக அந்தப் பையன் சொலவதைக் கேட்டிருந்த நான் "என்னது..... ஓலைச் சுவடியா?" என்று என்னையும் அறியாமல் கத்தினேன்.
"ஆமாம் சார். நீள நீளமாக ஏதோ ஓலைச்சுவடி மாதிரி கிடக்கு சார்" என்றான். மறுபடியும் அழுத்தி அழுத்திச் சொன்னதால் அந்தப் பையனை அப்படியே விட்டு விட்டு அந்த இடத்தை நோக்கி ஓடினோம்.
"பகவானே! செய்த தவறை மன்னித்துவிடு! மறுபடியும் என் கைக்கு அந்த ஓலைச்சுவடியைத் தந்துவிடு" என்று வேண்டிக் கொண்டே அந்தச் சிறுவன் சொன்ன இடத்தை நோக்கிப் போன பொழுது -
எங்கள் கண்ணுக்கு எட்டியவரை எந்த காரும் மரத்தில் மோதி நிற்கவில்லை. விசாரித்துப் பார்த்ததில் அப்படி எதுவும் நடந்ததாக யாரும் பார்க்கவில்லை என்பது தெரிந்தது.
எனக்கு வந்த ஆத்திரத்தில் அந்த பையனை அறைந்து நாலு சாத்து சாத்த வேண்டும் போல் தோன்றிற்று. பற்களை நற நறவென்று கடித்துக் கொண்டேன். இன்னும் சொல்லப் போனால் போலீஸ் நிலையத்தில் பட்ட அவமானத்தைக் காட்டிலும் இந்தப் பையனால் ஏற்பட்ட ஏமாற்றம் மிக அதிகமாகப்பட்டது.
சோதனை காலம் ஆரம்பித்துவிட்டது. இனிமேல் ஒளியாவது சுவடியாவது எல்லாவற்றையும் விட்டுவிட்டு உருப்படுவதற்கு வழியைத் தேடிக் கொள்ள வேண்டியதுதான் என்று என்னை நானே தேற்றிக் கொண்டிருக்கும் பொழுது என் கண்ணில் பாதையோரத்தில் காணாமல் போன என்னால் பலகாலம் படிக்கப்பட்ட அந்த அகஸ்தியர் ஜீவநாடி புற்களின் மீது கிடந்தது.
ஓடிப்போய் எடுத்தேன். அப்படியே ரோடு என்றும் பார்க்காமல் அதற்கு நீண்ட நமஸ்காரமும் பண்ணினேன்.
என்னுடன் வந்த நண்பர்களுக்கு ஏதோ ஒரு சினிமாவில் நடக்கின்ற கதைப் போல் தோன்றியதேத் தவிர வேறு எதுவும் தோன்றவில்லை.
விமான நிலையத்திலிருந்து காரைக் கிளப்பிய அவர்களுக்குக் கொஞ்ச தூரம் சென்றபிறகு காரில் நாடி இருப்பதைப் பார்த்திருப்பார்கள். இது எதற்கு நமக்கு? என்றெண்ணி போகும் பொழுது தூக்கி எறிந்திருப்பார்கள்" என்றான் என் நண்பன்.
"அதெல்லாம் இருக்காது. ஒரு வேளை இந்த நாடியே நம்மைக் காட்டிக் கொடுத்துவிடும் என்று பயந்து தூக்கி எறிந்திருப்பார்கள்" என்றான் இன்னொருவன்.
"ஏது எப்படியோ! கைவிட்டு போன நாடி எனக்கு திரும்பி வந்து விட்டது. அது போதும்" என்று சந்தோஷமாக சொன்னேன் நான்.
"அது சரி, அந்தப் பையன் யார்? எதற்காக நம்மைப் பார்த்து கார் விபத்து, ஓலைச்சுவடின்னு சொன்னான்" என்று நண்பர்கள் எல்லோரும் ஒரே குரலில் கேட்டனர்.
"எனக்கும் அது ஏன்? என்று தெரியவில்லை. பிரார்த்தனை செய்து அகஸ்தியரிடம் இது பற்றிக் கேட்டுவிடலாமே" என்றேன்.
"அது தான் முடியாதே! ஆறு மாதம் நாடியைப் படிக்க முடியாதுன்னு சொல்லிவிட்டதாக நீ தானே என்னிடம் சொன்னாய்" என்று எனக்கு ஞாபகப் படுத்தினான் இன்னொரு நண்பன்.
நான் வாய் மூடி மௌனியானேன்.
"சரி. இனிமேல் என்ன செய்யப் போவதாக உத்தேசம்?" நண்பன் கேட்டான்.
"ஆறு மாத காலம் அகஸ்தியர் எனக்குக் கொடுத்த தண்டனையை ஏற்கத்தான் வேண்டும், யாருக்கும் நாடி படிக்கவும் மாட்டேன்" என்றேன்.
"பின்பு?"
அகஸ்தியர் கருணை காட்டினால் மீண்டும் படிப்பேன். இல்லை அவர் யாருக்கு இந்த நாடியைக் கொடுக்கச் சொல்கிறாரோ அவரிடமே கொடுத்துவிட வேண்டியதுதான்" என்றேன் நிதானமாக.
"எப்படி சொல்கிறாய்?"
"எனக்கு எப்படி இந்த ஓலைச் சுவடி கைக்கு வந்ததோ, அதே போல் "அகஸ்தியர்" வேறொருவருக்கு கொடுக்கச் சொல்வார். நானும் கொடுத்துவிடுவேன் அவ்வளவுதான்" என்று நான் சொல்லி முடிப்பதற்குள், எதிர் புறத்திலிருந்து அந்தப் பையன் விந்தி விந்தி வந்து கொண்டிருந்தான்.
"சார்... அந்த காரை பார்த்தீர்களா சார்" என்றான்.
"இல்லை. நீ சொல்றப்போலே இங்கு எதுவும் விபத்து நடக்கவில்லை என்று அக்கம்பக்கத்திலே சொல்றாங்களே"
"இல்லை சார் என் ரெண்டு கண்ணாலே பார்த்தேன் சார். அதுக்குள்ளே எப்படி காணாமப் போச்சுன்னு தெரியவில்லை சார்"
"சரி... வேறு ஏதோ ஓலைச்சுவடி காருக்குள்ளே இருந்ததுன்னு சொன்னாயே. அது இது தானான்னு பார்த்துச் சொல்" என்றேன்.
"ஆமாம் சார். காருக்கு பின் சீட்லே இருந்தது சார். இது எப்படி உங்களுக்குக் கிடைச்சது?" என்று ஆச்சரியப்பட்டு கேட்டான்.
"இந்தப் புல் மேலே கிடந்தது" என்று சுட்டிக் காட்டினேன்.
"சார் அந்த மரத்துக்குப் பக்க வாட்டிலே தான் அந்த கார் மோதி நின்னிட்டு இருந்தது" என்றான் மறுபடியும்.
"சரி. விட்டுத்தள்ளு. அவ்வளவு சீக்கிரம் அந்த காரை யார் எடுத்துப் போயிருப்பாங்க. விபத்தும் ஆகியிருக்காது. யாரோ பெயருக்கு காரை நிறுத்திட்டு அப்புறமா எடுத்துப் போயிருப்பாங்க"
"அப்படின்னா எப்படி இந்த ஓலைச்சுவடி இங்கே வந்தது?"
"யோசிக்க வேண்டிய விஷயம். மரத்துக்குப் பக்கத்திலே அந்த காரை நிருத்தியிருப்பதை இந்தப் பையன் தப்ப புரிஞ்சிருப்பான். சரி. எது எப்படிப் போனா என்ன நமக்கு. காணாம போன அகஸ்தியர் ஜீவநாடி திரும்ப எனக்குக் கிடைச்சாச்சு" என்றேன்.
"இல்லை. இதுல ஏதோ ஒரு சூட்சுமம் இருப்பதாகத் தோணுது! சரி. அதைப் பத்தி பின்னால பார்த்துப்போம். இப்போ அவங்க அவங்க வீட்டுக்கு ஒழுங்கா போய்ச் சேர்ந்தா போதும்" என்று என் நண்பன் சொல்ல அனைவரும் இந்த விமானப் பயணத்தின் புதிய அனுபவத்தைப் பற்றி பேசியபடியே வீட்டிற்கு கிளம்பினோம்.
கிளம்பும் வரை எங்கள் பின்னாலேயே வந்து கொண்டிருந்த அந்த ஊனமுற்றச் சிறுவனுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் போல் எனக்குத் தோன்றியது.
கையிலிருந்த பணத்தில் கொஞ்சம் எடுத்து அவனிடம் கொடுத்த போது அவன் அதை வாங்க மறுத்தான்.
"இந்தாப்பா. காப்பியாவது சாப்பிடு" என்று என் நண்பர் தன் பையிலிருந்து பணம் எடுத்துக் கொடுத்தார். முதலில் கொடுத்த பணம் மிகவும் குறைவாக இருக்கிறது என்பதற்காக பணத்தை வாங்க தயங்குகிறானோ என்பது அவரது எண்ணம்.
"வேண்டாங்க" என்று மேலும் தயங்கினான்.
"பின் என்னதான் வேணும் என்கிறே" என்றேன் நான்.
"தப்பாக நெனைக்க மாட்டீங்களே" என்று கேட்டு விட்டு திரு திரு என்று முழித்தான்.
"தப்பாக நினைக்க மாட்டோம் என்ன வேண்டும்?" என்று கேட்டோம்.
"எனக்கு படிக்கணம்னு ஆசை. யாரும் பள்ளிக் கூடத்திலே சேர்க்க மாட்டேங்கிறாங்க. ஆகையினாலே நானே தனிய படிக்கணும்னு ஆசை. உங்கள் கையில இருக்கிற இந்த ஓலைச்சுவடியை என்கிட்டே கொடுத்தீங்கன்னா நாலு பேர்கிட்டே காட்டி படிக்க ஆரம்பிப்பேன். எனக்கு இதை தரீங்களா?" என்றான் அவன்.
இதை கொஞ்சம் கூட நாங்கள் யாரும் எதிர் பார்க்கவே இல்லை. அவனது படிப்புதாகம் புரிந்தது. அவனது வறுமை நிலையும் தெரிந்தது. ஆனால் எதுவும் செய்ய இயலாத நிலை.
இருந்தாலும் எங்களுக்கு இழந்து போன அகஸ்தியர் ஜீவ நாடியைக் கண்டு பிடித்துக் கொடுக்க பேருதவியாக இருந்தவன் என்பதால் அவனுக்கு இந்த நாடியைப் பற்றி மேலெழுந்தவாராக எடுத்துச் சொல்லிவிட்டு இரண்டு நாளில் அங்கு வந்து அவன் கல்வி கற்க வேண்டிய வசதிகளைச் செய்து தருவதாகச் சொன்னோம். உறுதி மொழியும் கொடுத்தோம்.
அப்போது அவன் கேட்டான்.
"சார். எனக்கு இந்த ஒலைச் சுவடியைப் படித்து நான் நன்றாக இருப்பேனா. மத்தவங்க போல ஸ்கூலுக்கு போவேனா என்று கேட்டுச் சொல்லுங்க சார்" என்றான்.
அவனது எதிர்பார்ப்பை நினைத்து ஆச்சரியப்பட்டுப் போனேன். இவ்வளவு சாமர்த்தியமாகப் பேசும் இவன் மிகவும் வறுமையுள்ள குடும்பத்தில் பிறந்திருக்க முடியாது என்று மட்டும் என் பொறியில் தட்டியது.
"ஆறு மாதத்திற்கு நான் வரமாட்டேன்" என்று அகஸ்தியர் சொன்ன பிறகு இந்தச் சிறுவனது வேண்டுகோளை எப்படி நிறைவேற்றுவது என்ற கவலை ஏற்பட்டது.
நல்லதோ, கெட்டதோ ஒரே ஒரு முறை இந்தச் சிறுவனுக்காக முயற்சித்துப் பார்ப்போமே என்று மனப்பூர்வமாக அகஸ்தியரை வேண்டினேன்.
"இந்தச் சிறுவனின் வேண்டு கோளுக்குத் தாங்கள் நாடியில் வரவேண்டும். பிறகு ஆறும் மாதம் தாங்கள் கட்டளைப்படியே காத்திருக்கிறேன்" என்று கெஞ்சினேன்.
அந்தச் சிறுவனுக்கு அதிர்ஷ்டம் இருந்தது. அகஸ்தியர் நாடியில் தோன்றினார். அதே சமயம் அந்தச் சிறுவனைப் பற்றிச் சொன்ன செய்திகள் எங்கள் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது.
மிகப் பெரிய தொழிலதிபர் ஒருவருக்கு முதல் மனைவி மூலம் பிள்ளை இல்லை. எனவே மனைவியின் சம்மதத்தோடு இரண்டாவது திருமணம் செய்தார். அந்த இரண்டாம் மனைவிக்குப் பிறந்தவன் இந்த ஊனமுற்ற சிறுவன். தங்களது கோடிக்கணக்கான கம்பனியின் சொத்து எல்லாம் இந்த ஊனமுற்றச் சிறுவனுக்குப் போய் சேர்ந்து விட்டால் தன் கதி என்னாகுமோ என்ற பயத்தில் அந்தக் கோடீஸ்வரரின் முதல் மனைவி அடியாட்கள் மூலம் இந்த ஊனமுற்றக் குழந்தையை எடுத்துக் கூவத்தில் தூக்கி வீச ஏற்பாடு செய்தார். குழந்தையும் கூவமஅருகே நள்ளிரவு நேரத்தில் கடத்திக் கொண்டு செல்லப்பட்டது.
சித்தன் அருள் ........ தொடரும்!