​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 3 May 2012

சித்தன் அருள் - 70 - அனுமன் தரிசனம்!

"மலை மீது ஏறுகிறபோது தண்ணீர் பாட்டிலைக் கொண்டு வராமல் போனோமே! இடையில் தாகம் ஏற்பட்டால் என்ன செய்வது.  நான் சென்ற பாதையில் மருந்துக்குக் கூட தண்ணீரே இல்லையே! சரியாக மாட்டிக் கொண்டோமே" என்று தவித்துப்போனேன்.

மலை என்றால் சிறு சிறு அருவியிருக்கும்.  ஆங்காங்கே சல சல என்று நீரூற்று இருக்கும்.  பெரிய பெரிய சுனைகள் இருக்கும்.  பூமியில் கிடைக்காத சுத்தமான இனிப்பான தண்ணீர் கிடைக்கும் என்று படித்தது நினைவுக்கு வந்தது.

ரண மண்டலத்தில் மலைக்குச் சென்று வாருங்கள் என்று எனக்கு அசரீரியாக  சொன்ன ஸ்ரீ ரகவேந்திரராவது எனக்கு தண்ணீர் தாகம் எடுக்காமல் காப்பாற்றி இருக்கவேண்டும்.  அல்லது அகஸ்தியராவது தண்ணீர் இருக்கும் வழியைச் சொல்லியிருக்க வேண்டும்.  இப்படி எதுவும் இல்லாமல் காலை பத்தரை மணி வெய்யிலில் நடுமலையில், சுட்டெரிக்கும் சூரியனது உஷ்ணத்தால் தாகத்தால் திண்டாடி ஒரு நிமிடம் துடித்தே போய் விட்டேன்.

"என்ன செய்வியோ அகத்தியர் பெருமானே! எனக்கு தண்ணீர்த் தாகம் தீர்க்க உடனே வழிகாட்டு, இல்லை இந்த மலையில் தான் நான் தாகத்தால் துடித்து மலைக்கு மேலேயும் செல்ல முடியாமல் தண்ணீரைத் தேடி மலையிலிருந்து கீழேயும் இறங்க முடியாமல் அனாதையாக என் மூச்சு பிரிய வேண்டுமென்றால் உன் இஷ்டப்படி அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி ஒரு படி மேல் எடுத்து வைக்க முடியாமல், அப்படியே கீழே உட்கார்ந்து விட்டேன்.

கூப்பிட்ட குரலுக்கு ஒருவர் கூட வந்து உதவ முடியாத இடம்.  வெயிலோ நூறு டிகிரிக்கு மேல் இருக்கும்.  தாகமோ நெஞ்சை வரட்டுகிறது.  இதெல்லாம் எண்ணிப் பார்க்கும் பொழுது என்ன நாடி வேண்டி இருக்கிறது? இதனால் என்ன லாபம்? பேசாமல் தூக்கி எறிந்துவிட வேண்டியதுதான்! என்று இனம் புரியாமல் வெறுப்பு என்னையும் அறியாமல் ஏற்பட்ட பொழுது, சுமார் நூறடித் தொலைவில் யாரோ ஒருவர் தலையில் எதையோ சுமந்து கொண்டு போவது தெரிந்தது.

அது யாராக இருந்தாலும் பரவாயில்லை, என்னவாக இருந்தாலும் பரவாயில்லை, தாகத்திற்கு தண்ணீர் கிடைத்தால் போதும் என்றெண்ணி, என் இழந்த சக்தியை எல்லாம் ஒன்று திரட்டி "ஏய்! ஏய்!" என்று குரல் கொடுத்துக் கொண்டே அவன் இருந்த திக்கை நோக்கி மெதுவாக நகர்ந்தேன்.

அந்த மலையில் என் குரல் ஒன்றுதான் ஒலித்திருக்கும்.  முதலில் நான் கத்தியது அவன் காதில் விழவில்லை.  கொஞ்சம் வேகமாக நகர்ந்து நான் கத்தியதைக் கேட்டான்.

திரும்பிப் பார்த்தான்.  நான் அவனிடம் சைகை காட்டி அழைத்தேன்.,  அதை அவன் எப்படிப் புரிந்து கொண்டானோ, தெரியாது.

சட்டென்று வேகமாக ஓட ஆரம்பித்தான்.

என்னடா சங்கடம்.  இவனையும் கோட்டை விட்டு விட்டோமே என்ற வருத்தம், ஏக்கம் என்னை தாகத்தோடு வாட்டியது.

என்ன தான், நடப்பது நடக்கட்டுமே என்று எண்ணி, துணிவைத் துணைக்கு வைத்துக் கொண்டு ஓட்டமும் நடையுமாக அவனைத் துரத்தினேன்.

ஒரு குறிப்பிட்ட தூரம் சென்றதும், அவன் தன் தலைக்குமேல் வைத்திருந்த சுமையை பொத்தென்று கீழே வைத்துவிட்டு ஓடியே போனான்.

விடா பிடியாக அவனைத் தொடர்ந்து ஓடிய நான், அவன் கீழே வைத்த சுமைக்குப் பக்கத்தில் போனேன்.

அது ஒரு சாராயப் பானை!

பகவானே என்று வாய் விட்டுக் கத்திவிட்டு திரும்பிப் பார்த்த பொழுது, அந்தப் பானைக்கு இடது பக்கம் ஒரு சுனை.

"தவித்த வாய்க்கு தண்ணீர்" என்ற வார்த்தை எவ்வளவு புனிதமானது என்பதை அன்றைக்குத்தான் நான் உணர்ந்தேன்.  நாக்கெல்லாம் உலர்ந்து உதடுகளில் காய்ந்த நிலையில் சிறு வெடிப்பும் ஏற்பட்டு போதாக் குறைக்கு அந்த மனிதனைக் கண்டு - தண்ணீர் கேட்க அந்த மலைப் பாதையில் ஓட்டமும் நடையுமாகத் துரத்தியதால் மேலும் தாகம் அதிகரிக்க ஒரு வழியாக அவன் கீழே வைத்த பானையில் தண்ணீர் இருக்கும் என்று நம்பிப்போன எனக்கு அது சாராயப் பானையாக மாறி இருந்ததைக் கண்டு ஒரு நிமிடம் துடித்துதான் போனேன்.

அந்த சுனையைச் சுற்றிலும், இதுவரையில் காணப்படாத பச்சைப் பசேலென்ற செடி கொடிகள் கண்ணிற்கு சுகத்தைக் தந்தது.  அந்த சுனை நீர் அப்பழுக்கு இல்லாமல், மிகவும் பளிங்கு போல் காணப் பட்டது.

அப்பாடா! ஒருவழியாக பகவான் என்னைக் காப்பாற்றி விட்டார் என்று ஆயிரம் முறை தெய்வத்திற்கு நன்றி சொன்னேன்.  மெதுவாக இறங்கி - அந்த சுனை நீரை ஆசை தீரக் குடித்தேன்.

தண்ணீரின் அருமை எனக்கு அப்பொழுதான் தெரிந்தது.  இருந்தாலும் அகத்திய மாமுனி இப்படியொரு சோதனையை எனக்குத் தந்திருக்க வேண்டாமே என்றுதான் தோன்றியது!  உண்மையில் அப்போது அந்த சுனை மட்டும் என் கண்ணில் படாமலிருந்தால் - என் நிலை என்ன ஆகியிருக்குமோ என்று எனக்கே தெரியாது.

அகஸ்தியரை நிந்திததர்க்கு மானசீகமாக மன்னிப்புக் கேட்டு மேலே நடந்தேன்.

அரை மணி நேரம் நடந்த போது என் கண்ணில் அங்கொரு சிறுகோயில் தென்பட்டது.

ஓலைச்சுவடியில் அகஸ்தியர் கட்டிய "ராம்" என்பது இந்தக் கோயிலாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன்.

நெருங்கி சென்று பார்த்த பொழுது - அது ராமர் கோயில்தான் என்று உறுதி ஆயிற்று.  பழங்காலத்து கோயில்.  தெலுங்கில் எழுதப்பட்டிருந்த வாசகம் எனக்குப் புரியவில்லை.  சின்னக் கோயில் என்றாலும் தெய்வீக மணம் கமழ்ந்தது.  கோயிலைச் சுற்றி வந்தேன்.  ஒருத்தர் கூட காணவில்லை.  கடினமான மரக்கதவுகளால் நன்கு பூட்டுகள் போட்டு பூட்டப்பட்டிருந்த அந்த மரக்கதவு சாவித் துவாரம் வழியாக கர்ப்பக் கிரகத்தைப் பார்த்தேன்.  இருட்டில் விக்ரகம் இருப்பதுபோல் மங்கலாகத் தெரிந்தது.  கர்பக் கிரக விளக்கும் எரியவில்லை.  அந்தக் கோயில் எப்பொழுது திறக்கும், எப்பொழுது மூடப்படும் என்ற விவரமும் காணாததால் சில நிமிட நேரம் அங்குத் தங்கி என்னை ஆச்வாசப்படுத்தி - ராம பெருமானை வணங்கி - அனுமானைத் தரிசிக்க அங்குக் காணப்பட்ட ஒற்றையடிப் பாதை வழியாக மலைப் பயணத்தை தொடர்ந்தேன்.

இனிமேல் எனக்குத் தண்ணீர் தாகம் எடுத்தால் - எப்படி அந்த சுனையைத் தேடி வருவது என்பதையும் - அந்த ராமர் கோயிலின் அடையாளத்தையும் நன்றாக மனதில் குறித்துக்கொண்டேன்.

அகஸ்தியர் ஓலைச் சுவடியில் எனக்கு மலையேறும் வழியை ஓளி ரூபமாகக் காட்டியது, கோயிலைக் காட்டியது, சுனையைக் காட்டியது எல்லாம் மிகச் சரியாக இருந்தது.  நிதானமாகச் சென்று இருந்தால், ராமர் கோயிலுக்குப் பக்கத்தில் அந்தச் சுனை இருப்பதைக் கண்டு பிடித்து இருக்கலாம்.  இவ்வளவு டென்ஷன், பயம் தேவை இல்லை.  நான் தான் அகஸ்தியர் சொல்லைக் கேட்காமல் அவசரப்பட்டு ஓடியது தவறு என்று பின்புதான் தெரிந்து கொண்டேன்.

ராமர் கோயிலில் இருந்து மலை உச்சியை நான் அடையும் பொழுது அனேகமாக உச்சி வெயில் வந்து விட்டது.  பண்ணி ரெண்டு மணி அல்லது ஒரு மணி இருக்கும்.  கண்ணை நாலாபுறமும் சுழலவிட்டேன்.

ஆகா! ஆகா! என்ன ஆச்சரியம்! அந்த மலை மீது ஆஞ்சநேயப் பிரபு அற்புதமாக நின்றார்.  சுமார் ஆறடி உயரம் இருக்கும்.  விஸ்வ ரூப கோலமாக அந்தச் சிலையை வடித்திருக்க வேண்டும்.  அந்தச் சிலையைச் சுற்றி பெயருக்கு கடினமான கற்கள் சில இரும்புக் கம்பிகள் கொண்டு சிறு மேடையைக் கட்டியிருந்தார்கள்.  தலைக்கு மேல் எதுவும் இல்லை.
நட்ட நடுவில் வெட்ட வெளியில் கற் சிலையில் - முகத்தில் கருணை பொங்க அனுமன் ஆனந்தமாக நின்று கொண்டிருந்த அந்தக் காட்சி, அந்த உச்சி வெயிலிலும் ஆனந்தத்தைத் தந்தது.

அப்படியே அவரை சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தேன்.  ஆள் நடமாடாமே இல்லாத இந்த ரணமண்டல மலை மீது, ஆஞ்சநேயர் வெட்ட வெளியில் இப்படி நிற்கிறாரே, இவருக்குப் பூசை எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை.  இந்த அனுமனுக்கும் மற்ற அனுமனுக்கும் எந்த வித்யாசமும் இல்லை.  பின் எதற்காக அகஸ்தியர் என்னை இங்கு வரச் சொல்லி அனுமனைத் தரிசனம் செய்யச் சொல்கிறார்? என்று சிறு குழப்பம் என் மனதில் உதித்தது.

"எதற்கும் காரணமில்லாமல் இருக்காது என்று நினைத்து, சரி இந்த அனுமன் திருப்பாதத்தில் அமர்ந்து அகஸ்தியரைத் த்யாநிப்போம்.  அவர் என்னதான் சொல்கிறார் என்பதைப் பார்ப்போமே" என்று அனுமன் பாதத்தில் அமர்ந்தேன், ஜீவ நாடியை பிரித்தேன்!

"என்னுடைய மைந்தன் என்பதாலும் - முன் ஜென்மத்தில் செய்த புண்ணியத்தாலும் உனக்கு நல்ல வழிகாட்டி, மோட்சம் கிடைக்க ஏற்பாடு செய்து வரும் வேளையில் என்னையும் நிந்தித்தாய், கையிலிருக்கும் ஓலைச் சுவடியையும் தூக்கி எறிந்து விட எண்ணினாய், இது என்ன நியாயம்? - மற்றவர்களைப் போல் சாதாரண மனிதனாகவே நடந்து கொண்டாய்.  உன்னை எப்படி மன்னிப்பது?"

"பகவன் தரிசனம் என்பது எல்லா மனிதர்களுக்கும் அவ்வளவு எளிதில் கிடைப்பதல்ல. சிலமணி நேரம் தாகத்தை அடக்க முடியாத உனக்குப் போய், அனுமானைத் தரிசனம் காட்ட நினைத்தது கூட தவறுதான், இருப்பினும் அறியாத சிறுவன் என்பதால் மன்னித்தோம்" என்று எனக்கு சவுக்கால் அடிக்காத குறைதான்.

அத்தனையும் தாங்கிக்கொண்டேன்.

"இப்போது சொல்கிறேன் கேள்.  உன் அன்னை நாற்பது வருட காலம் தினமும் தொடர்ந்து ஸ்ரீராமனை பூசித்து - ராமஜெயம் எழுதியதாலும் - முன் ஜென்மத்தில் சதா சர்வ காலம் அனுமானை வணங்கியதாலும் உனக்கு இங்கு அனுமனைத் தரிசிக்க வர வழைத்தேன்.  அது மட்டுமல்ல, துங்க பத்ரா நதியில் பால ராகவேந்திரராக காட்சி தந்தவர் வேறு யாருமில்லை. சாட்சாத் பிரகலாதந்தான்.  அன்னவரின் மறு அவதாரம்தான் ஸ்ரீ ராகவேந்திரர் என்பது உனக்குத் தெரியுமா?" என்று ஒரு கேள்வி கேட்டு நிறுத்தினார்.

இதைக் கேட்டு ஆச்சரியத்தால் திடுக்கிட்டுப் போனேன்.

மகாப் பிரபு பிரகலாதனையா பகவான் எனக்கு மந்த்ராலயத்தில் தரிசனம் செய்ய வைத்தார்.  பகவான் லக்ஷ்மி நரசிம்ம அவதாரத்தை எடுக்க வைத்த புண்ணியம் பக்த பிரகலாதனுக்கு உண்டே - அந்த தெய்வத்தையா நான் கண்ணால் கண்டேன் என்பதை நினைக்கும் பொழுது எனக்கு உண்டான மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.  அவ்வளவு புண்ணியம் செய்தவனா? என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன்.  இப்படி எனக்கு அனுக்ரகம் தந்த அகஸ்தியப் பெருமானுக்கு நான் எவ்வளவு நன்றிக் கடன் பட்டிருக்க வேண்டும்? அதை விட்டு அந்த ஜீவ நாடியைத் தூக்கி எறிந்து விடலாமா? என்று எண்ணினேனே.  எவ்வளவு பெரிய முட்டாள்த்தனம் என்று நினைத்து எனக்குள் நானே வெட்கப்பட்டுக் கொண்டேன்.

அடுத்த நொடியில் பிரகலாதனை எனக்குத் தரிசனம் தரச் செய்த அகஸ்தியருக்கும், மந்திராலய மகானுக்கும், பிரகலாத மகா பிரபுவுக்கும் மானசீகமாக நன்றியைத் தெரிவித்துக் கொண்டேன்.  என் கண்ணில் அனந்த நீர் வடிந்தது.

பிறகு மிகவும் பவ்யமாக அகஸ்திய நாடியைப் படிக்க ஆரம்பித்தேன்.

"எனக்கு நன்றி சொல்வது இருக்கட்டும்.  உன் பெற்ற தாய்க்கு மானசீகமாக நன்றி சொல் என்று ஆரம்பித்து "ஸ்ரீ ராகவேந்திரர் உனக்கு மட்டுமல்ல - நிறைய பேர்களுக்கு அவ்வப்போது ஜீவ சமாதியிலிருந்து தரிசனம் கொடுத்துக் கொண்டு வருகிறார்.  முன்னூறு வருஷத்திற்குப் பின் நான் உயிர்த்தெழுவேன் என்று அன்று சொன்னது இப்போது நடக்கிறது" என்று முடித்தவர் - இந்த ரண மண்டல மலை எவ்வளவு புனிதமானது, தெரியுமா?  நீ அமர்ந்திருக்கும் இடத்தின் மகிமை உனக்குத் தெரியாது.  யாம் அறிவோம்" என்று அடுத்த ஆச்சரியத்தையும் விளக்க ஆரம்பித்தார்.

"இதோ, நீ அமர்ந்திருக்கிராயே இந்த இடத்திலிருந்து தான் அனுமன், விஸ்வரூபம் எடுத்து, சீதாதேவியைத் தேடி ஸ்ரீலங்காவுக்கு புறப்பட்ட இடம். முன் காலத்தில் இதற்குப் பெயர் மகோதர மலை.  இங்கு கொடிய விலங்குகள், அடர்த்தியான காடுகள் சுற்றி இருந்தன.  அனுமன் விஸ்வரூபம் எடுத்தவுடன், அத்தனை விலங்குகளும், மலைகளும், காடுகளும் வீழ்ந்து நொறுங்கின.  அந்தக் காட்ச்சியை அகத்தியன் யாமும் கண்டு மெய் சிலிர்த்துப் போனேன்.  அந்தப் புனித இடத்தில் நீ அமர வேண்டும் என்பதற்காக நான் உன்னை இங்கு வரவழைத்தேன்.  இதைப் புரிந்து கொள்ளாமல் என்னையே நிந்தித்து விட்டாயே" 

எனக்கு வேறு ஒன்றும் சொல்லத் தெரியவில்லை.  நெக்குருகி போனேன்.  வாயிலிருந்து வார்த்தைகளே வரவில்லை.

"சுந்தரகாண்டம் எழுத ஆரம்பித்த வால்மீகி இந்த மகோதர மலையைத்தான் தனது முதல் ஸ்லோகத்தில் குறிப்பிட்டிருக்கிறார் என்றால் இந்த மலை எவ்வளவு புனிதமானது" என்று எண்ணிப்பார் என்று சொன்னவர் "இன்றைக்கு இந்த மலைக்கு உன்னை வரவழைக்க எண்ணியதற்கு எத்தனையோ காரணம் உண்டு.  எனது மைந்தா! உன்னோடு நானும் சேர்ந்து அனுமனின் திவ்ய தரிசனத்தை இங்கு காணப் போகிறேன்.  அதுவரை கண்ணை மூடிக்கொண்டு ஸ்ரீராமநாம ஜெபத்தையும் - அனுமன் நாமத்தையும் தொடர்ந்து சொல்" என்று சொன்னவர், ஜீவ நாடியிலிருந்து மறைந்தார்.

நான் இந்த மண்ணுலகில் தான் இருக்கிறேனா இல்லை வேறு உலகிற்கு வந்து விட்டேனா? என்று எனக்கே தெரியவில்லை.  அப்படியொரு அதிசய சம்பவம் அந்த மலையுச்சியில் நட்ட நடு வெயிலில் நடந்தது.

மரம், செடி, கொடி ஏதுமில்லாத அந்த ரண மண்டல அனுமன் சிலைக்கருகில் உச்சி வெய்யில் மண்டையைப் பிளக்கிற பகல் ஒரு மணியளவில், திடீரென்று குளிர்ந்த காற்று வீசியது.  வெயில் மறைந்தது.

பரிமள புஷ்பங்கள், சந்தன மணம், மல்லிகை மணம், மருக்கொழுந்து மணம், ஜவ்வாது வாசனை எல்லாம் ஒன்று சேர்ந்து அங்கு வந்து அடைக்கலம் புகுந்தாற்போல் திவ்யமான மணம் வீசியது.

குளிர்ந்த சோலைகளுக்கு நடுவே நீர்வீழ்ச்சியின் சிதறல்கள் மேனியில் பட்டால் என்ன சுகம் கிடைக்குமோ - அந்த சுகம் கிடைத்தது.  "தென்றல்" இவ்வளவு நேரம் எங்கு மறைந்திருந்தது, என்று தெரியவில்லை.  இப்போது மெதுவாக வீச ஆரம்பித்தது.  என் மனம் மிகவும் பரபரப்பாக ஸ்ரீ ராமஜயத்தை சொல்ல அந்த இனிமையான நேரத்தில்

நான் தொட்டுக் கொண்டிருந்த அனுமன் பாதத்தில் - முதலில் காணப்பட்ட உஷ்ணம் மறைந்தது.  ஐஸ் கட்டியில் கை வைத்தாற்போல் உணர்வு, ஆச்சரியத்தில் கண் திறந்து பார்த்தேன்.  என் கண்ணெதிரே அனுமன் ஜீவனாகக் காட்ச்சியளிக்கிறார்.

நான் பற்றிய அவரது பாதத்தில் ஆயிரமாயிரம் மின்சார ஷாக் அடித்தார் போல் ஏதோ ஒரு உணர்வு.  அவர் பாதம் வழியே என்னுள் ஊர்ந்து சென்றது போல் இருந்தது.  நான் கண்டது அனுமன் சிலை அல்ல.

அனுமனின் பிரத்யட்சமான தோற்றம் விழிகள் என்னை நோக்கிப் பார்க்கின்றன.  கைகளில் ஆசிர்வாத தோற்றம்.  முகத்தில் காருண்யம்.  வைத்த விழி வாங்காமல் ஸ்ரீ அனுமனை மேல் நோக்கிப் பார்க்கிறேன்.  அவர் அமைதியாகப் பெருமூச்சு விடுவது தெரிகிறது.

இரண்டு நிமிடங்கள் தான், இந்த அறுபுதமான தரிசனம்.  அவரது பாதத்தை தொட்ட என் கைகள் வழியாக என் உடலுக்குள் உத்வேகமாக புகுந்த அந்தப் புதுவெள்ளம் என்னவாக இருக்கும்?  இன்று வரை அந்தப் புதிருக்கு விடை கிடைக்கவில்லை.

மறுபடியும் அனுமனின் பொற்பாதங்களை நான் தொட்ட பொழுது - அது கற் பாதமாகத்தான் இருந்தது.  அடுத்து ஐந்து நிமிடத்திற்குள் மறுபடியும் பழைய ரண மண்டலமலை வெயிலின் உக்கிரம்.  தென்றல் காற்றை காணவில்லை.

இது என்ன மந்திரமா? மாயமா? என்று என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.  சத்தியமாக எனக்கு இது ஆனந்தமான தெய்வதரிசனம்தான்.  ஆஹா! நான் எவ்வளவு கொடுத்து வைத்தவன் என்று நினைத்தேன்.

இதற்கெல்லாம் மூல காரணமான என் பெற்றோருக்கு - என் தாயாருக்கு நன்றியைச் சொன்னேன்.

அங்கிருந்து அனுமன் பொற் தாமரை அடியில் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து விட்டு அகத்தியரை வணங்கி மீண்டும் நாடியைப் பார்த்தேன்.

"அனுமனின் தரிசனம் காணுகின்ற பாக்கியத்தைப் பெற்றவனே! இன்று முதல் நீ அனுமன் தாசனாவாய்.  கிடைத்தற்கரிய இந்த தரிசனம் மூலம் வாழ்வில் பெறும் பயன் பெற்றாய்! இங்குள்ள பலருக்கும் - இந்த மலையைப் பற்றிச் சொன்னாலும் புரியாது.  எக்காலத்திலோ நடந்த செயலுக்கு இந்த மகோதர மலை தான் முக்கியக் காரணம் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்.  இது வேண்டுமென்றே கட்டிவிட்ட கதை, ஆதாரம் எது? என்றுதான் பேசுவார்கள், பேதை மைந்தர்கள்.  அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள்.  ஆனால் உனக்கு கிடைத்ததோ அனந்த தரிசனம்" என்று சிறுவிளக்கம் அளித்தார் அகஸ்தியர்.

எனக்கு அங்கிருந்து எழுந்து செல்ல மனமே இல்லை.  வாழ்நாள் முழுவதும் அங்கேயே தங்கிவிடலாமா - என்று கூட எண்ணம் தோன்றியது.  அனுமனின் தரிசனம் இந்த கலிகாலத்தில் கிடைப்பது என்பது உலக மகா அதிசயங்களுள் முதன்மையானது என்றுதான் சொல்ல வேண்டும்.  வாழ்க்கையில் எத்தனையோ பாவங்களைத் தெரிந்தோ தெரியாமலோ செய்திருந்தோம்.  அகஸ்தியர் எனக்கு அனுமன் தரிசனத்தை காட்டி விட்டார்.  இனி எனக்கு என்ன வேண்டும் என்ற மனநிறைவு ஏற்பட்டது.

எத்தனை மணி நேரம் நான் அந்த இன்ப நினைவில் இருந்திருப்பேனோ தெரியாது.  வெய்யில் தாழ ஆரம்பித்தது.  மிகவும் உருக்கமாக அனுமனைப் பார்த்துவிட்டு, அங்கிருந்து கிளம்ப நினைத்தேன்.

ஏதோ ஒன்று "பொறி" தட்டியது.

சட்டென்று என் பையிலிருந்து நூற்றி ஒரு ரூபாயை எடுத்து அந்த அனுமனின் காலடியில் வைத்து காற்றில் பறக்கத வண்ணம் அதன் மேல் கற்களை நாலாபுறமும் சுற்றி வைத்துவிட்டு - பிரார்த்தனை செய்துவிட்டு இறங்கினேன்.

மலையிலிருந்து கீழே இறங்கும் வரையில் எந்த மனிதனையும் நான் காணவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தேன்.  என் கண்ணுக்குத் தெரிந்து எந்த நடமாட்டத்தையும் காண முடியவில்லை.

கீழே இருக்கிற ஸ்ரீராமர் கோயிலுக்குச் சென்றேன்.  யாரும் வந்து போனதாகவோ கோயிலின் நடை திறந்து கர்ப்பக் கிரகத்திற்கு விளக்கேற்றி வைத்து நைவேத்தியம் செய்ததாகவோ தெரியவில்லை.

முதலில் எனக்கிருந்த தண்ணீர்த் தாகம் பசி எதுவும் இல்லை.  இரட்டிப்புத் தெம்போடு படுவேகமாக இறங்கிக் கொண்டிருந்தேன்.  கண்ணுக்குத் தெரிந்த "சுனை" பக்கம் சென்றேன்.

அந்த சாராயப் பானை அப்படியே இருந்தது.  யாரும் வந்து எடுத்துச் செல்ல வில்லை.  மறுபடியும் ஆசைதீர் அந்த சுனை நீரைக் குடித்தேன்.  தேவாமிர்தமாக இருந்தது.

மாலை ஆறு அல்லது ஆறரை மணிக்கு கீழே ரண மண்டலம் வந்து சேர்ந்தேன்.  எனக்கு ஒரு ஆவல் இருந்தது.  யாராவது ஒருவர் அந்த ரண மண்டல அனுமனைப் பற்றிப் பேசமாட்டார்களா? இன்னும் ஏதாவது செய்தி கிடைக்காதா என்று நான் தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தேன்.

எனக்கு இந்த அனுமன் தரிசனம் கிடைத்த பிறகு, என் உடலுக்குள் புகுந்த உத்வேகம் படு சுருசுர்ப்பாக மாறியது.  தெய்வ சங்கல்பத்தால் சிறப்பாக நடக்கும் என்று தோன்றியது.

நான் எங்கிருக்கிறேன் - என்ன செய்கிறேன் - என்ன செய்யப்போகிறேன் என்பது கூடத் தெரியவில்லை.

எப்படியோ ரயிலைப் பிடித்து ஊர் வந்து சேர்ந்தேன்.

வீட்டிற்கு வந்த பிறகு ஒரு மிகப்பெரிய இன்ப அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.

எனது தாய் ஒரு மணியார்டர் பெற்றுக் கொண்டதற்கான ரசீதை எனக்குக் காட்டினாள்.

அதில் எனது பெயர், வீட்டு முகவரியோடு அனுமனுக்காக நான் காணிக்கை செலுத்திய ரூபாய் நூற்றி ஒன்றுக்கு ரசீது போட்டு, தெலுங்கில் அனுப்பியிருந்தது - அதற்கு கீழே ஸ்ரீராம ஆஞ்சநேய கோவில், ரணமண்டலம் - என்று குறிப்பிட்டிருந்தது விந்தையிலும் விந்தை.

சித்தன் அருள் .......... தொடரும்!

13 comments:

  1. மேனி சிலிர்க்க, உளம் குளிர அனுமனை தரிசித்தோம். ராமாயணம், மகாபாரதம், போன்றவைகள் புனையப்பட்ட வெறும் கதைகள் அல்ல என்பதனை உறுதியாக புரிந்து கொண்டோம்.

    ReplyDelete
  2. உங்கள் எழுத்தில் ராம தூதுவனை, அஞ்சனை மைந்தனை நாங்களும் தரிசித்தோம்...நன்றி சாமிராஜன்

    ReplyDelete
  3. I am blessed to read this post.

    ReplyDelete
  4. ஸ்ரீராம ஆஞ்சநேய கோவில், ரணமண்டலம் விந்தையிலும் விந்தை தரிசனம் !

    ReplyDelete
  5. we r blessed to read ur blog.Thanks a lot for giving this Hanuman Darisanam .

    ReplyDelete
  6. I am really blessed to read this post....tears flowed down my eyes

    ReplyDelete
  7. இது போன்று ஒவ்வொருவர் வாழ்விலும் நிகழாதா என்ற ஏக்கம் ஏற்படுகின்றது-விழுப்புரம் ரவி,

    ReplyDelete
  8. Jai Sri ram Jai sri ram jai sri ram

    ReplyDelete
  9. குரு வாழ்க! குருவே துணை!!

    ReplyDelete
  10. உண்மையை உணர்ந்து கொண்டேன் அகஸ்தியர் அருளால்

    ReplyDelete