​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Monday, 28 May 2012

அகத்தியர் அருள்!


பல அன்பர்களும், பல இடங்களுக்கு சென்ற போது அப்படி நடந்தது, இப்படி ஆசீர்வாதம் கிடைத்தது என்று சொல்லும் போது, பல முறை வியந்திருக்கிறேன்.  ஹோ! அவர்கள் எத்தனை புண்ணியவான்கள் என்று!  ஆனால் நமக்கும் அதே போல கிடைக்காத என்று ஒரு முறை கூட நினைத்தது கிடையாது.  கிடைத்தால் நல்லது.  ஆனால் எது நடக்கவேண்டுமோ அது நடக்கும்.  என்ன! நாம் அதற்கான தகுதியை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்று நினைப்பவன்.  இறைவனும் என்னை பார்த்து பொறுமை இழந்து விட்டான் போல.  ஒரு திருவிளையாடலை நடத்த தீர்மானித்தான்.

அது நமது பொங்கல் தினம்.  விடுமுறை வேறு.  அதனால் எங்கும் கூட்டம் இல்லாத நிலை.  அன்று காலை முதல் ஏனோ மனம் நிலையில்லாமல் தவித்தது.  உண்ணும் உணவு மன நிலையை ஆட்சி செய்யும் என்று கேள்விபட்டிருக்கிறேன்.  முந்தயநாள் அப்படி என்ன சாப்பிட்டுவிட்டேன் என்று நினைவலைகளை துருவினேன்.  எளிய உணவு உண்டது தான் நினைவுக்கு வந்தது.  உணவு பிரச்சினை இல்லை.  சரி இன்று ஏதேனும் நடக்கலாம்.  எல்லாம் நல்லதற்கு தான் என்று என்னை நானே அமைதிப்படுத்திக்கொண்டேன்.

மதிய உணவுக்கு அமர்ந்த போது ஒரு எண்ணம்.  சற்று வித்யாசமாக சிந்தனை வந்தது.  முருகர், அகத்தியர் என்கிற இந்த இரண்டு பெயரும் மனதுக்குள் மீண்டும் மீண்டும் வட்டமிட்டது.  என்ன? எதற்காக இந்த சிந்தனை வளர்கிறது என்று ஆச்சரியப்பட்டேன்.  சரி என்று ஒரு முடிவுக்கு வந்து, கேட்டு பார்ப்போம் என்ன சொல்கிறார்கள் என்று தெரியுமே என்று நினைத்தேன்.

என் வீட்டிலிருந்து வெகு தூரத்தில் (சுமார் இரண்டு மணி நேரம் பயணம் செய்கிற தூரம்) ஒரு முருகர் கோயில் உள்ளது.  அங்கிருந்து ஒரு மணி நேரம் பயணித்தால் அகத்தியரின் ஒரு கோயில்.  இரண்டு கோயில்களுக்கும் சென்று வரலாமே என்று தோன்றியது.

மதியம் மணி இரண்டு.  உறவினர் ஒருவரை கேட்க,  அவரும் ஒப்புக்கொண்டார்.  பைக்கில் செல்ல தீர்மானித்தோம்.

இறங்கும் முன் எப்போதும்போல பூஜை அறையின் முன் நின்று "உங்கள் துணை வேண்டும்" என்று வேண்டிக்கொள்ள ஒரு புது வித சிந்தனை வந்தது.  "சரி! கேட்டு விடுவோம்.  என்ன வேண்டுமோ அவர்கள் பார்த்து படி அளக்கட்டும்" என்று நினைத்து,

முருகரை மனதில் த்யானித்து, அவர் முன்னே அமர்ந்திருக்கிறார் என்கிற உணர்வுடன் மனதுக்குள் பேச தொடங்கினேன்.

"முருகா! உன் துணை வேண்டும்! எந்த ஆபத்தும் பயணத்தில் வரக்கூடாது!  ஒரே ஒரு விஷயம்.  கேட்கிறேன்.  எனக்கு அந்த தகுதி இருந்தால், வாய்ப்பை கொடு.  இது தான் அது!

"உன் கழுத்தில் அணிவிக்கப்பட்ட ஒரு பூ மாலை எனக்கு வேண்டும்.  அது எனக்கு அல்ல.  உன்னை தரிசித்து ஆசிர்வாதம் பெற்ற பின் அகத்திய மாமுனிவரை தரிசிக்க செல்லலாம் என்று ஆசை படுகிறேன்.  நீ அந்த மாலையை கொடுத்தால், அதை உன் சிஷ்யரின் கழுத்தில் அணிவிக்க விரும்புகிறேன்.  நான் மாலையை கொடு என்று உனக்கு பூசை செய்யும் பூசாரியிடம் கேட்கப்போவதில்லை.  உனக்கு அதை தர விருப்பம் இருந்தால் தரவும். நீ அதை தரவில்லையானால், உன் கோயில் முன்பு இருக்கும் பூக்கடையில் இருந்து ஒரு மாலை வாங்கி அகத்தியருக்கு சார்த்துவேன்.  என்ன நடக்க வேண்டும் என்று நீயே முடிவு செய்துகொள்.  என் குருவுக்கு, உன் சிஷ்யனுக்கு நீ என்ன செய்வதாய் உத்தேசம்."

ஆயிற்று.  மன எண்ணங்களை கொட்டியாகிவிட்டது.  இனி அவன் செயல். 

மாலை நான்கு மணிக்கு புறப்பட்டோம்.  உண்மையிலேயே முருகரிடம் வேண்டிக்கொண்டது, புறப்படும் போது மறந்தே போச்சு.  பத்திரமாக சென்று தரிசனம் செய்து, திரும்பவேண்டும் என்பதே முதல் குறிக்கோளாக இருந்தது.  முருகரின் பூசைக்காக எதுவுமே வாங்கவில்லை.  இரண்டு மணி நேரம் பயணம் செய்து, கோவில் வாசல் படியை மிதிக்கும் போது தான் அதை உணர்ந்தேன்.  என்ன இப்படி பண்ணிவிட்டாய் முருகா! மொத்தமாக புத்தியை மழுங்கடித்துவிட்டாயே!  ச்சே! ஒரு சின்ன விஷயத்தை கூடவா இன்று நினைவில் வைக்க முடியவில்லை? என்று என்னை நானே திட்டிக்கொண்டு முருகர் சன்னதி முன்பு சென்று நின்றேன்!

முருகன்! பெயருக்கு ஏற்றாற்போல் அழகு தான்.  சிரித்தபடி நின்று கொண்டிருந்தார்.   வலது கை பக்கம் வேல் சார்த்தி இருக்க, அலங்கார ரூபனாய், மனம் என்னவெல்லாமோ கற்பனை செய்தது.  திடீர் என்று ஒரு சிந்தனை.  இவர் சிரித்தபடி நிற்பது கூட பெருமாளிடமிருந்து கற்றுக்கொண்டதோ.  அப்பன் சிவனோ எப்போதும் த்யானத்தில் இருப்பவர்.  அவரை எங்கேயும் சிரித்தபடி பார்த்ததே இல்லை.  பெருமாளோ எங்கும் அமைதியாக ஆனந்த ஸ்வரூபனாக சயனத்திலோ, இருந்த, நின்ற கோலத்தில் சிரித்தபடி இருப்பார்.  நாம் இறையை கூட நமது ரூபத்தில் தரிசிக்க விரும்புவதால், சிரித்தமுகமே பலருக்கும் பிடிக்கிறது.  இவரும் சிரித்த கோலத்தை பெருமாளிடம் கற்றுக்கொண்டாரோ என்று விநோதமாக சிந்தித்தது மனது.

உள்ளே இருந்து பூசாரி வந்து என்னை பார்த்தார்.  என்ன? என்பது போல ஒரு பார்வை.

"சுவாமி பேருக்கு ஒரு அர்ச்சனை பண்ண வேண்டும்" பூசாரியின் எதிர்பார்ப்பை புரிந்து கொண்டு என் பதில்.

அர்ச்சனை தொடங்கியது.  எதையும் கேட்க மனது விரும்பவில்லை.  முருகரின் முகத்தை பார்த்தபடியே நின்று கொண்டிருந்தேன். என்னவோ ஒரு வித உணர்வு.  நான் சின்ன குழந்தையாக இருக்கும் போது, தாயின் மடியில் அரவணைப்பை அனுபவித்த அந்த சுகம் உள்ளே பரவியது.

கண்ணை மூடி ஒரு சில நிமிடம் இருக்க,

"அர்ச்சனை பிரசாதம்" என்று சொன்ன பூசாரியின் குரல் என் த்யானத்தை கலைத்தது.

கையில் பிரசாதத்தை வாங்கி கொண்டு, தட்சிணை கொடுத்து, திறந்து பர்ர்க்க, ஒரு சில உதிரி பூக்களும், விபூதி, சந்தனம் மட்டும் தான்.

அமைதியாக கையில் பிரசாதத்துடன் முருகனை ஒரு முறை பார்த்துவிட்டு திரும்பினேன்.

"நில்லுங்கள்" ஒரு குரல்

அந்த குரலே அதிர்வாகத்தான் இருந்தது.  முருகரே அழைப்பதுபோல் தான் தோன்றியது.  எதிர்பார்ப்பே இல்லாமல், கிடைத்ததை கையில் வைத்துக்கொண்டு மெதுவாக திரும்பினேன்.

அழைத்தது பூசாரி தான்.  மெல்லிய புன்னகையுடன் அவர் முகத்தைப்பார்க்க 

"வண்டீல வந்தீங்களா?" என்றார்.

"ஆமாம்! வண்டீல தான் வந்திருக்கோம்!"

"காரா?"

"இல்லை.  பைக்கில்!"

"நில்லுங்கள்! ஒரு மாலை தருகிறேன்!"

அமைதியாக நடக்கிற நிகழ்ச்சிகளை கூர்ந்து கவனித்தேன்.

உள்ளே சென்ற பூசாரி, முருகனுக்கு சார்த்திய ஒரு மாலையை கொண்டு வந்து என் கையில் கொடுத்தார்.  நான் எதுவும் பேசவில்லை.  அமைதியாக அவர் முகத்தையும் பின்னர் அவருக்கு பின்னே நின்றுகொண்டு இருக்கும் முருகரையும் உற்று பார்த்தேன்.  ஒரு நிமிடம் கண்மூடி முருகருக்கு நன்றி சொன்னேன்.

மறுபடியும் உள்ளே சென்ற பூசாரி, அவர் வேலில் இருந்து ஒரு எலுமிச்சை பழத்தை கொண்டு வந்து தந்து,

"இந்தாருங்கள்! இது ஞானப்பழம்!" என்றார்.

சிரித்தேன்.

இதற்குள், முருகன் அருகில் அமர்ந்து மந்திரம் ஜெபித்துக்கொண்டிருந்த பூசாரி ஒருவர், அங்கிருந்தபடியே 

"அதை ஞானப்பழம் என்று சொல்லாதே! ஸ்கந்த பழம்னு சொல்லிக்குடு" என்றார்.

முதல் முறையாக அப்படி ஒரு வார்த்தை என் வாழ்வில் கேட்க்கிறேன்.  மனம் எங்கோ சொருகி அவன் பாதத்தை மட்டும் நினைத்தது.  எத்தனை நன்றி முருகனுக்கு சொல்வது?  எப்படி சொன்னால் இதற்கு ஈடாகும். எங்கேயோ ஒரு சாதாரண மனிதனாக பிறந்து, தெரிந்ததை பிறர் நோகாத படி செய்து வாழ்ந்து, இப்படி எளிய வாழ்க்கை வாழ்பவருக்கு அவன் உடனேயே அருள் புரிவானா? 

"சிந்தனையை அறுக்க வேண்டும்", யாரோ தலைக்குள் இருந்து உரைப்பதுபோல் உணர்ந்தேன்.  ஆம்! அலையும் மனதை அடக்கினால், இறைவன் அங்கே குடி கொள்வான்!  இப்படி என்னனவோ எண்ணங்கள் உபதேசமாக வந்தது.

விடை பெரும் நேரம் வந்தது.

கையில் இருந்த மாலையை, உறவினரிடம் கொடுத்து

"இதை பத்திரமாக வைத்துக்கொள்.  இது எனக்கு அல்ல.  ஒருவருக்கு கொடுக்க வேண்டியது" என்று கூற, அவரும் எதுவும் புரியாமல் கையில் வாங்கிக்கொண்டார்.

சிறிது நேரத்துக்கு பின் எதோ தோன்ற, நானே வாங்கி என் பையில் வைத்துக்கொண்டேன்.

வண்டியை கிளப்பி, அகத்தியர் தரிசனத்துக்காக பயணம் செய்தோம்.  நடந்த விஷயங்களை மனதில் அசை போட்டு வண்டியை ஓட்ட, மனம் உள்ளே ஒன்றுபட்டு எதோ ஒரு மந்திரத்துக்கு கட்டுப்பட்டது போல் இருந்தது.  ஒரு வினாடியில் ஒரு விபத்திலிருந்து தப்பித்தோம்.  பார்வை ரோட்டில் இருந்தாலும், நினைவு முருகரின் பாதத்தில் இருந்ததால், கடைசி நொடியில் நினைவுக்கு வந்து, குறுக்கே கடந்து சென்ற ஒரு தாயும், மகளும், அடிபட்டு விடாமல், வெட்டி விலகி சென்றோம்.  சென்ற வேகம் அதிகம்.  அதை சூட்சுமமாக, எந்த சேதமும் இல்லாமல் இறைவன் உணர்த்தினான்.

கூட அமர்ந்த உறவினர், அந்த இரண்டும் பேரையும் திட்ட முயற்ச்சிக்க

"வேண்டாம்! விட்டு விடு! என் மீது தவறு உள்ளது.  என் கவனம் உள்ளே மந்திரத்தில் அடங்கி விட்டது.  அவர்கள் மீது தவறு இல்லை. திட்டாதே!" என்று கூறி கடந்து சென்றோம்.  நான் சொன்னதை அந்த தாயும் கேட்டாள் போல.  அமைதியாக சிரித்தபடி சென்றனர். 

நன்றாக இருட்டிக்கொண்டு வந்தது.  மாலை ஆறு மணிக்கே இப்பொழுதெல்லாம் இருட்டி விடுகிறது.  வழி தெளிவு குறைய தொடங்கியது.  ஒரு வழியாக அகத்தியர் கோயிலை சென்றடைந்தோம்.

கோவில் திறந்திருந்தது.  பூசாரியை காணவில்லை.  என்ன செய்ய என்று நினைத்தபடி உள்ளே சென்றோம்.

அகத்தியர் கோயில் மிக அமைதியாக இருந்தது.   இரு புறமும் விளக்கு ஏற்றி வைத்திருக்க, ஜமந்திப்பூ மாலையுடன், வெள்ளி கவசம் சார்த்தி இருக்க, குரு அகத்தியர், லோபாமுத்திரையுடன் நின்றிருந்தார்.  கண் கொள்ளா காட்சி.  சன்னதியின் மிக அருகில் வலது புறமாக நின்று அந்த அழகை உள் வாங்கி, மௌனமாக குரு வந்தனம் செய்ய தொடங்கினேன்.  ஒரு விதமான உஷ்ணம் எங்களை சூழ்ந்தது.  அது என்ன என்று புரிவதற்குள், என் மனம் கொண்டு சென்ற மாலையை நினைத்தது.  பையிலிருந்து வெளியே எடுத்து, அவர் சன்னதியின் வாசல் படியில் வைத்துவிட்டு, நிமிர்ந்து நின்று, மனத்தால் அவரிடம் பேசினேன்.

"அய்யா! இன்று என்ன நடக்கிறது என்று புரியவில்லை.  ஆசை படுவதே தவறு.  ஏனோ மனம் ஒன்றை விரும்பிட, முருகரிடம் வேண்டினேன்.  அவரும் அணிந்த மாலையை தந்துவிட்டார்.  உங்களிடம் கொண்டு சேர்ப்பிக்க வேண்டும் என்ற ஆவலில் இத்தனை தூரம் வந்து சேர்த்துவிட்டேன்.  ஆனால், பூசாரியை தான் காணவில்லை.  உங்கள் கழுத்தில் இந்த மாலை சென்று சேர்வதை காணும் பாக்கியத்தை கொடுங்கள்.  இனிமேல் நடக்கவேண்டியது எல்லாம் உங்கள் பொறுப்பு!"

பெரியவரின் பாத்தில் அத்தனை எண்ணங்களையும் கொட்டிய பின் வணக்கம் சொல்லி அவர் சன்னதியை வலம் வர இடது பக்கமாக நடந்தேன்.  அவர் சன்னதிக்கு பின் புறம் ஒரு மரத்தடியில் விநாயகர் சன்னதி.  அவர் முன் சென்று, "அய்யா விநாயகனே! அத்தனை விக்னங்களையும் விலக்கித்தா!" என்று கை கூப்பி வணங்கிட, மனக்கண்ணில் அவரின் வலது கரம் உயர்ந்து அனுக்கிரகம் பண்ணுவது போல் தோன்றியது.  சரி! இனி எல்லாம் நல்ல படியாக நடக்கும்.  அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்கிற எண்ணத்துடன் மறுபடியும் அகத்தியர் சன்னதியின் முன் வந்து த்யானத்தில் அமர்ந்தேன்.  கண் மூடியது.  அகத்தியரின் பாதம் மட்டும் மனக்கண்ணில் நிலைக்க, எத்தனை நேரம் அப்படியே இருந்தேன் என்று தெரியாது.

யாரோ ஓடிவரும் சத்தம் கேட்டு த்யானம் கலைந்து, பார்த்தால் -  பூசாரி.

எங்கோ போய் விட்டு அவசரமாக ஓடி வந்தார்.  என்னை கண்டதும் "வாங்கோ! எப்பொழுது வந்தீர்கள்!" என்கிற விசாரிப்புடன்.

வந்தவர், நேரே சென்று மாலை நேர தீபாராதனைக்கான விஷயங்களை தயார் படுத்தினார்.

"அய்யா! பெரியவருக்கு ஒரு மாலை கொண்டு வந்திருக்கிறேன்! அங்கே அவர் சன்னதி முன் படியில் வைத்திருக்கிறேன்! எடுத்து கொள்ளுங்கள்!" என்றேன்.

"ஆமாம்! பார்த்தேன்! எடுத்துக்கொள்கிறேன்!" என்றார்.

பூசைக்காக உள்ளே போகும்போது அந்த மாலையையும் எடுத்துக்கொண்டு சென்றவர், அகத்தியரின் கழுத்தில் அணிவித்தார்.  சற்று தள்ளி நின்று கவனித்துக்கொண்டிருந்தேன்.  ஒரு வினாடியில், அந்த மாலை காணாமல் போனது.  சற்றே அதிர்ந்து போன நான் அருகில் என்று பார்க்க, முன்னர் இட்டிருந்த ஜமந்திப்பூ மாலையை தான் பார்க்க முடிந்தது.  இந்த மாலை அணிவித்ததர்க்கான அறிகுறியே அகத்தியர் விக்ரஹத்தில் இல்லை.  என்ன நடந்தது என்று புரியவில்லை.  தீபாராதனை முடிந்து, கற்பூர ஆரத்தி ஒற்றிக்கொண்டபின் மேலும் சற்று அருகில் சென்று பார்த்தேன். அந்த மாலையை பார்க்க முடியவில்லை.  சற்று நேரம் அகத்தியர் சிலையையே பார்த்துக்கொண்டு நின்ற எனக்கு அவர் புன்னகையுடன் வலது கரம் உயர்த்தி அருள் பாலிப்பது போல் தோன்றியது.

இனிமேலும் எத்தனை முறை பார்த்து நின்றாலும், காணப்போவதில்லை, என்று தோன்றியது.  சரி! வந்த வேலை முடிந்தது.  புறப்படுவோம் என்று நினைத்தவுடன், பூசாரி பிரசாதம் தந்தார்.  கொஞ்சம் சந்தானம், விபூதி ஒரு சில மலர்கள். பார்த்த போது முருகர் கோயிலில் பூசாரி தந்த அதே பிரசாதம் போல். 

அகத்தியருக்கு நன்றி சொல்லி விடை பெற்றேன்.  என்னவோ நினைத்தார்கள்! அதை நடத்தினார்கள்! நான் ஒரு தூதுவனாக மட்டும் தான் செயல் பட்டேன் என்று தோன்றியது.

எதற்காக நடத்தினார்கள்? யாருக்கு தெரியும்?  பதில் கிடைக்காத கேள்விகளுடன் வீடு வந்து சேர்ந்தேன்.

எனக்குள் தோன்றிய எண்ணம் ஒரு எண்ணமாக மட்டும் இருந்திருக்கலாம்.  ஆனால், நினைத்தபடி நடந்ததே.  யார் நடத்தினார்கள்.  அவர்கள் தான்.  அப்படினா?  "முருகர் அருள் என்றும் முன் நின்று வழி நடத்துகிறதோ?"  அவனுக்கே வெளிச்சம்!

வணக்கம் முருகர் திருவடிக்கு! குரு அகத்தியர் திருவடிக்கு!

(இந்த பதிவை வாசிக்கும் நீங்களும் இதுபோல் முயற்சி செய்யுங்களேன்.  ஏதேனும் அனுபவம் கிடைத்தால் எல்லோருடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்.)

3 comments: