நாடி பார்க்க வருகிறவர்கள் எல்லோரும் பொறுமையாக இருப்பதில்லை. எல்லோரையும் ஒதுக்கி விட்டு தனக்குத்தான் முதலில் நாடி படிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதையும் பார்த்திருக்கிறேன்.
இன்னும் சிலர் ‘நான் அரசு உயர் அதிகாரி. எனக்கு முதலில் முன்னுரிமை கொடுக்க வேண்டும்’ என்று நாடியையும் பார்த்துவிட்டு அடுத்து இன்னொருவருக்கும் நாடி பார்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து விட்டுச் செல்வார்கள்.
‘நான் போலீஸ் துறையைச் சேர்ந்தவன். என்னைப் போன்றவர்களுக்கு உடனே ‘நாடி’ பார்க்க வேண்டும்’ என்று அன்புக் கட்ளை இடுபவர்களும் உண்டு.
செல்வாக்கைப் பயன்படுத்தி முதலில் வந்து கேட்கும் நபர்களுக்கும், பொறுத்திருந்து நாடி பார்க்கும் நபர்களுக்கும் வித்தியாசம் உண்டு. அகத்தியர் அருள் இருந்தால் தான் எல்லாம் நல்லபடியாக நடக்கும். இல்லையெனில் அந்த செல்வாக்குக்கு எந்தவித பலனும் இல்லாமல் போய்விடும்.
அவரவர்கள் செய்த கர்ம வினைக்கு ஏற்ப அகத்தியர் அருள்வாக்கு தருகிறாரே தவிர செல்வாக்குக்காக அல்ல என்பதை உணர்ந்து கொண்டால் போதும்.
இப்படித்தான் ஒரு நாள் மிகப் பிரபலமான நபர் ஒருவர் கட்டாயச் செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டு ஐம்பத்திரணடு வயதுடைய நபர் ஒருவர் நாடி பார்க்க என்னிடம் வந்தார்.
‘சார், என் மனைவி சமீபத்தில் இறந்து போனாள். வயதுக்கு வந்த பெண் குழந்தைகள் இரண்டு பேர் இருக்கிறார்கள். மூத்த பெண்ணை ஒருவருக்கு கட்டிக் கொடுத்து விட்டேன். அவள் இப்பொழுது ஆறு மாத கர்ப்பிணி. இது முதல் பிரசவம் என்பதால் நான் தான் பார்த்தாக வேண்டும்….’ என்று விஷயத்துக்கு வராமல் பேசினார்.
இடைமறித்த நான், ‘சரி, இதற்கும் இப்போது நீங்கள் நாடி பார்க்க வந்துள்ளதற்கும் என்ன தொடர்பு? நான் என்ன செய் வேண்டும்?’
‘எனக்கு இரண்டாம் தாரம் இருக்கிறதா? என்பதை அகத்தியரிடம் கேட்டுச் சொல்ல வேண்டும்.’
‘வயதுக்கு வந்த இரண்டு பெண்கள் இருக்கிறார்கள். வயதும் ஐம்பத்திரண்டுக்கு மேல் இருக்கும். இந்த சமயத்தில் மூத்த பெண் தலைப் பிரசவத்திற்கு வரப் போகிறாள். எதற்காக இவருக்கு இரண்டாம் தாரம் மீது ஆசை?’ என்று என் மனதிற்குள் கேட்டுக் கொண்டேன்.
இருந்தாலும் இதையெல்லாம் வெளியில் சொல்லக் கூடாது. விருப்பு, வெறுப்பின்றி நாடியைப் படிக்க வேண்டும் என்பதால் அகத்தியர் நாடியை புரட்டினேன்.
எத்தனை முறை புரட்டினாலும் அகத்தியர் எந்த வாக்கும் தரவே இல்லை. ஏதோ ஒரு தப்பு நடந்திருக்கிறது என்பது மட்டும் புரிந்தது. சில மணி நேரம் காத்திருந்து பின்பு படிப்போம் என்று முடிவெடுத்தேன்.
இதற்கிடையில் அவரோடு பேச்சு கொடுத்தேன்.
ஊரில் நிலபுலன்கள் நிறைய இருப்பதாகவும் திடீரென்று மனைவி இறந்து விட்டதால் வயதுக்கு வந்த இரண்டு பெண்களுக்கும் திருமணம் செய்துவைக்க முடியாதபடி தடை வந்துவிட்டதாகவும் சொன்னார்.
‘தான் இரண்டாவது மணம் செய்து கொண்டால், தன் மூத்த மகளுக்கு பிரசவம் பார்க்க முடியும். அடுத்தடுத்து உள்ள பெண்களுக்கு நல்ல இடமாக திருமணம் செய்து வைக்கவும் முடியும்’ என்று அடிக்கடி புலம்பியவர், திடீரென்று எனக்கு இரண்டாம் தார வாழ்க்கை பிடிக்கவில்லை. இந்தக் குழந்தைகளுக்காக திருமணம் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது’ என்று வேண்டா வெறுப்பாக முகத்தைத் தூக்கிக் கொண்டு பேசினார்.
இடையில் இறந்து போன தன் மனைவியை நினைத்து கண்ணீர் விடவும் செய்தார். இதை நினைத்து நானே வியந்து போனேன்.
‘சம்பந்திக்கு உங்கள் நிலை தெரியுமே, அவரிடம் நீங்கள் வேண்டினால் உங்கள் மகளுக்கு மாமியாரே பிரசவம் பார்க்கலாமே’ என்று ஆதங்கமாக கேட்டேன்.
‘இல்லை சார், சம்பிரதாய முறைப்படி நான் தான் என் மகளுக்கு பிரசவம் பார்க்கணும். இதெல்லாம் விட்டுக் கொடுக்க முடியாதுங்க. அதற்காகத்தான் ரெண்டாம் கல்யாணம் அவசியமாகத் தோணுது’ என்றார் அவர்.
மீண்டும் அகத்தியர் நாடியைப் படித்த வோது ‘சட்டென்று ஏகட்டும். திருவிடைமருதூர் நோக்கி. அங்கு சென்று சிவன் கோவிலில் ஒன்பது நாட்களுக்கு மோட்ச தீபம் ஒன்றை உடனே ஏற்றுக என்று அகத்தியர் உத்தரவிட்டார். வேறு எந்த பதிலும் சொல்லவே இல்லை.
இதைக் கேட்டதும் வந்தவருக்கு ஒரு மாதிரியாக ஆகிவிட்டது. எத்தனை தடவை கேட்டாலும் அகத்தியர் இதே பதிலைத்தான் சொன்னதால் அவர் வெறுத்துப் போனார்.
‘இரண்டாம் தாரத்தைப் பற்றி ஒண்ணுமே சொல்லவில்லையா?’ என்று மிகுந்த ஏக்கத்துடன் கேட்டார்.
‘இல்லை’ என்று உதட்டைப் பிதுக்கினேன்.
‘அகத்தியர் என்ன சொன்னாலும் அதற்கு ஒரு காரணம் இருக்கும். முதலில் சொன்னதை செய்து விட்டு மீண்டும் வரட்டும். மேற் கொண்டு உரைக்கிறேன்’ என்று சட்டென்று மூஞ்சியில் அடித்தது போல் அகத்தியர் சொன்னது எனக்கே ஒரு மாதிரியாகி விட்டது.
அகத்தியர் பெரும்பாலும் சட்டென்று கோபமாக சொல்ல மாட்டார். ஆனால் இன்றைக்கு சொன்னது ஒருவித கலக்கத்தை உண்டு பண்ணியது.
இதறகுள் வந்தவருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. என்னங்க நாடி படிக்கிறீங்க, கேட்ட கேள்விக்கு சரியா பதில் சொல்ல மாட்டேங்கறீங்க. அங்கே போ, இங்கே போ’ன்னு சொல்றீங்க. என்னங்க இது? எனக்கு ஒரு சந்தேகம். இதை நீங்களே சொல்றீங்களா? இல்லை அகத்தியரே இப்படிச் சொல்றாரா?’ என்று நையாண்டி வேறு செய்தார் அவர்.
முதலில் ஒண்ணும் தெரியாத பூனை மாதிரி இருந்தவர் இப்படி பேசியதும் எனக்கு அதிர்ச்சியாயிற்று. இன்னும் என்ன சொல்லணும்னு நினைக்கிறாரோ அதையெல்லாம் சொல்லட்டும். பின்பு அகத்தியரிடம் இவரைப் பற்றிக் கேட்டுக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.
‘நான் எதுக்குங்க மோட்ச தீபம் ஏத்தணும்?’ என்று ஒன்றும் தெரியாதபடி கேட்பார்.
‘முன்னோர் தோஷம் எதுவும் இருக்கும். அதற்காகச் சொல்லியிருப்பார்’ என்றேன்.
‘இதெல்லாம் சும்மா கதைங்க. எங்க அப்பா, தாத்தா எல்லோரும் ஏகப்பட்ட கோவிலுக்கு தானம் பண்ணியிருக்காங்க. நிறைய கும்பாபிஷேகம் செய்திருக்காங்க. எனக்குத் தெரிஞ்சு எந்த பாவமும் பண்ணல்லீங்க.’
‘உங்க வீட்டில் அகால மரணம் ஏதாவது நடந்திருக்கும். அதற்காகவும் கூட அகத்தியர் சொல்லியிருக்கலாம்.’
‘அப்படியேதும் நடக்கலைங்க. எனக்கு நிச்சயமாகத் தெரியும்’ என்றார்.
‘சரி ரொம்ப நல்லது. எதுக்கும் இதைப் பற்றி அகத்தியர் கிட்டே மறுபடியும் கேட்டுப் பார்க்கிறேன்’ என்றேன்.
சில நிமிடங்களில் மறுபடியும் நாடியைப் பிரித்தேன்.
‘இவன் அகத்தியனையே சோதிக்கிறானடா. இவன் சொன்னது அத்தனையும் பொய். இவனது தாத்தா பாட்டியெல்லாம் அகால மரணம் அடைந்தவர்கள். வீட்டுக் கிணற்றிலே குதித்து தற்கொலை செய்து கொண்டார்கள். இவனது தந்தையோ ஜாதிப் பிரச்சினை காரணமாக எதிரிகளால் நடு ரோட்டிலே வெட்டிக் கொல்லப்பட்டவன். இவனுக்கோ இவனுடைய தந்தை, தாத்தாவுக்கோ எந்தவித சொத்தும் கிடையாது. நிலமும் கிடையாது. ஏன் இதை அகத்தியனிடம் மறைக்க வேண்டும்?’ என்று அகத்தியர் சொன்னதை நான் சொல்லச் சொல்ல வந்தவரின் முகம் பேயறைந்தாற் போல் ஆகிவிட்டது. மவுனமாக தலை குனிந்தார்.
நான் மேற்கொண்டு சப்தம் போட்டு படிக்க ஆரம்பித்தேன்.
‘இப்போது கூட இவன் வீட்டில் ஓர் அகால மரணம் நடந்தது. இல்லையென்று அகத்தியனிடம் மறுக்க முடியுமா?’ எனக் கேட்டார்.
குனிந்தவர் மெல்ல தலை நிமிர்ந்து பார்த்தார். தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன்.
‘இன்னவன் இரண்டாம் தாரத்திற்கு அலைவதே ஊரை ஏமாற்றத்தானே. இல்லையெனில் புற்று நோயினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த இவனது மனைவிக்கு போதிய சிகிச்சை அளிக்காமல் அவளுக்கு விஷ ஊசியை போட்டுக் கொன்றவன் தானே இவன்.
‘இரண்டாம் தாரமாக இவன் மணம் முடிக்க ஆசைப்படுபவள் இவன் வீட்டிலிருக்கும் வேலைக்காரியைத்தான். அவளுக்கும் இவனுக்கும் ஏற்கனவே பல மாதங்களாக நெருங்கிய தொர்புண்டு. இப்போது அந்த வேலைக்காரி இரண்டு மாத கர்ப்பம். இது உண்மையா? இல்லையா? என்று அவனே சொல்லட்டும்’ என்று ஒரு கேள்வியைக் கேட்டு முடித்தார்.
இதைக் கேட்டது தான் தாமதம் அந்த மனிதர் நடுநடுங்கிப் போய் விட்டார்.
சட்டென்று என் காலில் விழுந்தார்.
சார் இதை வெளியிலே யாருகிட்டேயும் சொல்லாதீங்க சார். அகத்தியர் சொன்னது அத்தனையும் உண்மை. என் மனைவி கேன்சர் நோயாலே கஷ்டப்பட்டதைப் பார்த்து, அவ பிழைக்க மாட்டாள் என்று நினைத்து நான்தான் அவளை விஷ ஊசி போட்டுக் கொன்றேன்.
அதே சமயம் எனக்கும், என் மனைவிக்காக உதவி செய்ய வந்த வேலைக்காரிக்கும் தொடர்பு ஏற்பட்டது. இதை அறிந்த என் மனைவி தன்னை கொன்று விட்டு அவளை மணந்து கொள்ளும்படி சொன்னாள்.
அவள் எதை வைத்து இதைச் சொன்னாளோ தெரியாது. நான் கொன்று விட்டேன்.
வேலைக்காரியை எனது இரண்டாவது மனைவியாக்க நான் விரும்பினாலும், என் மகள்கள் அந்த வேலைக்காரியை சித்தியாக ஏற்க முன்வரவில்லை.
அகத்தியர் அருள்வாக்கை வைத்து என் மகள்களை பணிய வைக்கலாம் என்று நினைத்து இங்கு வந்தேன். இதுதான் உண்மை’ என்று துயரத்தோடு சொன்னார்.
‘எப்படியோ ஒரு நோய்வாய்ப்பட்ட மனைவியைக் கொன்றதால் அந்த ஆத்மா சாந்தியடையவில்லை. மோட்ச தீபம் ஏற்றி விட்டு வா என்று அப்போது சொன்னதிற்கு அர்த்தம் இது தானடா’ என்ற அகத்தியர், ‘நீ நினைக்கிற மாதிரி உன்னை கணவனாக ஏற்க அந்த வேலைக்காரி முன்வர மாட்டாள். காரணம் நீ மனம் மாறினால் இவளையும் கொன்று விட்டு, வேறொரு பெண்ணை நாடிச் சென்றாலும் செல்வாய் என்று ஊரைவிட்டே ஓடிக் கொண்டிருக்கிறாள்’ என்று சட்டென்று முடித்துக் கொண்டார்.
மனைவியை விட்டுவிட்டு வேலைக்காரியை கை பிடிக்கலாம் என்ற பேராசை அவருக்கு இருந்தது. இப்பொழுது இரண்டையும் இழந்து விட்டார்.
மனைவியின் ஆத்மா சாந்தி அடைய அகத்தியர் சொன்னபடி மோட்ச தீபத்தை ஏற்றியவர், தற்போது மனைவி பெயரால் முதியோர் இல்லமொன்றைத் துவக்கி ஏழைகளுக்கு சமுதாயத தொண்டாற்றி வருகிறார். இரண்டாம் திருமண எண்ணத்தை அறவே மறந்து போனார்.
அவரை, பொதிகை மலை உச்சிக்கு சென்றால் சாமியார் கோலத்தில் காணலாம்.