இந்த ஜாதகங்கள் இரண்டும் பொருத்தமாக இருக்கிறதா? என்று பாருங்கள் என ஒருத்தர் என்னிடம் அதனைக் கொடுத்தார்.
‘அகத்தியர் நாடி மூலம் பார்த்துச் சொல்கிறேன்’ என்று அந்த ஜாதகங்களை பிரித்துப் பார்க்காமல் வைத்து விட்டேன்.
சட்டெனறு அவர் என் கையைப் பிடித்து ‘சார், தயவு செய்து ஜாதகத்தைப் பார்த்துச் சொன்னால் போதும், நாடி பார்த்துச் சொல்ல வேண்டியதில்லை’ என்று மடக்கினார்.
‘ஏன் நாடியின் மீது நம்பிக்கை இல்லையா?’ என்று கேட்டேன்.
‘நிறைய நாடி பார்த்து அலுத்து விட்டேன். நீங்களே கண்க்கிட்டு பார்த்து சொல்லுங்களேன்’ என்று அவர் சொன்னதால் அகத்தியரிடம் உத்தரவு கேட்டேன்.
‘நிந்தன் நாக்கில் நான் இருக்கிறேன். கூறுபோட்டு பார்த்து சொல்லிவிடு’, என்று எனக்கு உத்தரவு இட்டதால், நாடிக்கட்டை கீழே வைத்து விட்டேன்.
அவர் கொடுத்த ஜாதகங்களை அலசிப் பார்த்தேன்.
சில குறைபாடுகளை அவரிடம் சொல்லி ‘இப்போது திருமணம் செய்ய வேண்டாம். ஆறு மாதம் கழித்து திருமணம் செய்து கொள்வது நல்லது’, என்று முடித்தேன்.
‘இப்போது செய்தால் என்ன ஆகும்?’ என எதிர் கேள்வி கேட்டார் அவர்.
‘திருமணம் நடக்கும். ஆனால் சேர்ந்து வாழ இயலாத அளவு ஆறுமாதம் தனித்து இருக்க வேண்டியிருக்கும். பிறகு தான் உண்மையான திருமண வாழ்க்கை ஆரம்பமாகும்’ என்றேன்.
‘இதற்கு பரிகாரங்கள் இருந்தால் சொல்லுங்களேன். அதைச் செய்து விட்டால் இந்த திருமணம் இப்போது நடைபெற்றாலும் பிரிவு இருக்காது அல்லவா?’ என்றார் அதற்கும் அடுத்தபடியாக.
மனுஷன் பெரிய கில்லாடி போலிருக்கிறாரே! வேறு எங்கேயோ இந்த ஜாதகங்களை அலசிப் பார்த்துவிட்டுத் தான் இங்கு வந்திருக்க வேண்டும். இல்லையென்றால், எதைப் பற்றியும் கவலைப்படாமல் ‘சட்சட்’ என்று அடுத்த கேள்விகளை கேட்பாரா?’ என்று எண்ணிக் கொண்டேன்.
எனக்குத் தெரிந்த சில வழிமுறைகளைச் சொல்லி, ‘என்ன தான் பரிகாரம் செய்தாலும். திருமண வாழ்க்கை என்பது இன்னும் ஆறுமாதத்திற்குப் பிறகுதான்’, என்பதை உறுதி செய்தேன்.
மேற்கொண்டு யோசிக்கவில்லை. நான் சொன்ன பரிகாரங்களைப் பற்றி நினைவிற் கொண்டதாகவும் தெரியவில்லை. கிளம்பிவிட்டார் அவர்.
ஒண்ணறை மாதம் கழிந்திருக்கும்.
ஒரு பெரிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணி என்னிடம் வந்தார். தன்னுடைய மகளைப் பற்றிச் சொன்னாள். நல்ல படிப்பு படித்து அமெரிக்காவில் பணிபுரிவதாகவும், அவளது திருமணத்தைப் பற்றியும் கேட்டார்.
அகத்தியர் ஜீவநாடியைப் பற்றிக் கேட்டார்.
எதிரே அமர்ந்திருக்கும் பெண்மணியின் மகள் மிலேச்சன் நாட்டில் இருக்கிறாள். காதலித்து ஒருவனை மணந்து கொண்டு விட்டாள். இருந்தாலும் இன்றுவரை இந்த தாயாருக்கோ, மற்றவர்களுக்கோ அது தெரியாது. இதை அகத்தியனது மைந்தனான நீயும் வெளிக்காட்டிக் கொள்ள வேண்டாம்.’
திருமணம் இன்னும் நான்கரை மாதங்களுக்குப் பின் நடக்கும் அதுதான் இந்தப் பெண்ணின் மகளுக்கு ஏற்றது என்று சொல்லிவிடு.’ என்று அகத்தியர் கூறிவிட்டார்.
தெய்வரகசியம் என்பதால், எதிரே இருக்கும் பெண்மணியிடம், ‘அமெரிக்காவில் இருக்கும் உங்கள் மகளுக்கு இன்னும் நான்கரை மாதத்தில் திருமணம் நடக்கும். அது ஒரு விசித்திரமான முறையில் அமையும்’ என்று ஒரு ‘பொடி’ வைத்து சொன்னேன்.
‘அது என்ன விசித்திரமான முறையில் திருமணம்?’ என்று கேட்டார்.
நான் நேரிடையாக எதையும் சொல்லாமல், சிரித்து மழுப்பி விட்டேன். வநத அந்த பெண்மணி, ஏதோ ஒரு குழப்பத்தில் சென்று விட்டார்.
எனக்குக் கூட நாம் தவறு செய்து விட்டோமோ, அந்த தாயாரிடம் உண்மையைச் சொல்லி இருக்கலாமோ என்று பின்பு தோன்றியது.
ஆனால் அகத்தியர் இட்ட கட்டளையாயிற்றே. அப்படியே மவுனம் காத்தேன்.
நான்கு மாதம் கழிந்தது.
அன்று காலையில் நாளிதழில் வந்த செய்தி எல்லோரையும் கதி கலங்க வைத்துவிட்டது.
அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட விமானம் குண்டு வெடித்து நடுக்கடலில் மூழ்கி விட்டது. ஏறக்குறைய நானூறு பயணிகள் பலியானார்கள் என்ற செய்தி தான் இது.
அத்தனை பயணிகளுக்கும் அகத்தியர் மோட்ச தீபம் ஏற்றச் சொன்னார்.
அகத்தியர் இட்ட கட்டளையை ஏற்று அத்தனை பேர்களுக்கும் மோட்ச தீபம் ஏற்றி விட்டு வந்த போது முதலில் குறிப்பிட்டேனே ஒரு நபர். இரண்டு ஜாதகங்களைக் கொடுத்து பொருத்தம் பார்க்கச் சொன்னாரே, அவர் மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் முகத்தில் களையிழந்து நின்று கொண்டிருந்தார்.
‘என்ன விஷயம்?’
‘உங்களிடம் ஐந்து நிமிடம் தனியாக பேசவேண்டும்’, என்றவர் என்னை வலுக்கட்டாயமாக ஓரிடத்திற்கு அழைத்துச் சென்றார்.
‘சில நாட்களுக்கு முன்பு இரண்டு ஜாதகங்களை கொடுத்துப் பொருத்தம் பார்க்கச் சொன்னேன். நாடி பார்க்க வேண்டாம். நீங்களே பார்த்துச் சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டேனே ஞாபகமிருக்கா’, என்றார் அவர்.
‘ஞாபகம் இருக்கிறது. அதற்கென்ன சொல்லுங்கள்.’
‘நீங்கள் கூட சொன்னீர்கள். 6 மாதம் பொறுத்திருந்து திருமணம் வையுங்கள் என்று,.’
‘பீடிகை போடாமல் நேரிடையாக விஷயத்திற்கு வாருங்கள்.’
‘என்ன பையன் ஜாதகம் தான் அது. நான் உங்களிடம் காட்டும் பொழுது, அவன் ஒரு பெண்ணை மணந்து கொண்டு விட்டான். இதை நான் மறைத்து உங்களிடம் ஜாதகத்தைக் காட்டினேன். அவன் மணந்து கொண்ட அந்த பெண் ஒரு பயிற்சியை முடித்துக் கொண்டு அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் பொழுது, விமான விபத்தில் சிக்கி, நேற்றைக்கு உயிரிழந்து விட்டாள்,’ என்றார்.
அழுதுகொண்டே அவர் இதை சொன்ன போது லேசான அதிர்ச்சி எனக்கு.
‘அந்த ஆத்மா சாந்தி அடைய மோட்ச தீபம் ஏற்றுங்கள்,’ என்றேன் ஆறுதலாக.
அவரைச் சமாதானப்படுத்த சில நிமிடங்கள் ஆயிற்று.
புறப்படும் முன்பு, ‘இப்போது அகத்தியர் ஜீவநாடியைப் பார்க்க முடியுமா?’ என்றார்.
‘இன்னொரு நாள் வாருங்கள். இப்பொழுது உங்களுக்கு தீட்டு இருக்கிறது. படிக்க இயலாது,’ என்று சமாதானப்படுத்தி அனுப்பினேன்.
பத்து நாட்கள் கழித்து….
முன்பு என்னிடம் நாடி பார்த்த பெரிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணி வந்தார்.
‘ஐயா, உங்களிடம் சில மாதங்களுக்கு முன்பு என் பெண் திருமணத்தைப் பற்றிக் கேட்டிருந்தேனே, ஞாபகமிருக்கா?’ என்றார்.
நினைவுபடுத்திக் கொண்டு சொன்னேன்.
‘நன்றாக ஞாபகமிருக்கிறது. அமெரிக்காவில் இருக்கும் உங்கள் பெண்ணுக்கு நாலரை மாதம் கழித்து திருமணம் நடத்தவும். இப்பொழுது வேண்டாம் என்று சொன்னது ஞாபகமிருக்கிறது’ என்றேன்.
‘அந்த பெண் பற்றி அகத்தியர் ஏதாவது சொன்னாரா?’ என்று சந்தேகத்துடன் கேட்டார்.
‘ஏன்?’
‘ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அது உண்மையா? பொய்யா? என்று தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காக வந்திருக்கிறேன்.
இந்த அம்மாவின் பெண்ணைப்பற்றி அன்றைக்கே அகத்தியர் என்னிடம் தெய்வரகசியமாக சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. இனியும் மறைப்பதில் பயனில்லை என்று நினைத்தேன்.
‘அம்மா, அமெரிக்காவில் இருக்கும் உங்கள் பெண் அவசரப்பட்டு திருமணம் செய்து கொண்டாள். இதை அவள் உங்களிடம் சொல்லவே இல்லை. திருமணம் செய்து கொண்டாலும் அவளது இல்லற வாழ்க்கை என்பது நான்கரை மாதம் கழிந்த பின்பு தான்’ என்று அகத்தியர் சொன்னார்.
‘தெய்வ ரகசியம்’ என்று சொன்னதால் முற்பகுதியைச் சொல்லாமல் நாடியின் பிற்பகுதியை மாத்திரம் உங்களிடம் சொன்னேன்’ என்றேன்.
‘நீங்கள் கூட இதை என்னிடம் மறைத்து விட்டீர்களே. இது என்ன நியாயம். உங்களை மனப்பூர்வமாக நம்பித்தானே நான் வந்தேன்.’ என்றார் அந்த பெண்மணி.
இந்த பெண்மணி கேட்டதில் நியாயம் இருந்தது. ஆனால் அகத்தியர் கூறிய தெய்வ ரகசியத்தை நான் எப்படி சொல்ல முடியும்?
‘உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமோ, எந்த நபரை, என் மகள் அமெரிக்காவில் திருமணம் செய்து கொண்டாளோ, அந்த நபர் என்னைப் பார்க்க விமானத்தில வந்து கொண்டிருக்கும் போது விமான விபத்தில் உயிரிழந்து விட்டார். என் மகள் இப்பொழுதுதான் தகவல் சொன்னாள். இது எதனால் என்பதை நாடி மூலம் அகத்தியரை கேட்க முடியுமா?’ என்றார் அந்தப் பெண்மணி.
நான் ஒன்றும் சொல்லாமல் அகத்தியரிடம் விட்டுவிட்டேன்.
அவர் சொன்னார்.
‘இவளுடைய மகள் ஆசைப்பட்டு வீட்டிற்கு தெரியாமல் அமெரிக்காவில் மணந்து கொண்டாள். அவளுக்கும், இறந்து போன அவளது கணவனுக்கும் தாம்பத்ய வாழ்க்கை நீடித்து நிற்காது. அவளுக்கு ஆறு மாதம் கழித்து மறுமணம் நடக்கும் என்பதை விசித்திரமாக அவளது திருமணம் நடக்கும் என்று நாசூக்காக சொன்னேன். சற்று பொறுத்திரு’ என்று சட்டென்று முடித்துக் கொண்டார்.
அந்த அம்மாவுக்கு என்ன தோன்றியதோ, அப்புறம் வருகிறேன் என்று சட்டென்று சொல்லிவிட்டு எழுந்துவிட்டார்.
விமான விபத்தில் இரண்டு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஒருவர், தன் மனைவியை இழந்திருக்கிறார். இன்னொரு பெண் தன் கணவனை குறுகிய காலத்திற்குள் இழந்திருக்கிறாள். இந்த இரண்டு பேர்களும் தனித்தனியாக அகத்தியர் ஜீவநாடியை என்னிடம் பார்த்து விட்டுச் சென்றிருக்கிறார்கள்.
இது எதற்காக? என்று எனக்குப் புரியவில்லை. வெகு நாட்களாக இந்தக் கேள்வி என்னைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது.
சில மாதங்கள் கழிந்தது.
ஒரு நாள் மாலை . மனைவியை விபத்தில் இழந்த அந்த கணவனும், கணவனை இழந்த அமெரிக்காவில் பணியுரியும் இளம் பெண்ணும், தம்தம் பெற்றோருடன் என்னைச் சந்திக்க வந்தனர்.
விஷயத்தைக் கேட்டபொழுது-
ஏர்போர்டில் அவர்கள் தற்செயலாக சந்தித்துள்ளனர். அப்போது, இருவரும் தங்கள் இழப்புகளைப் பற்றிப் பேசி, அது நட்பு என்று விரிந்து, காதலாக மாறி, அவரவர்கள் பெற்றோர் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டு விட்டு, வாழ்த்து வாங்குவதற்காக குடும்பத்தோடு என்னைப் பார்க்க வந்திருக்கின்றனர் எனத் தெரிந்தது.
இதைத்தான் அகத்தியர் தன் அருள்வாக்கில் ‘ஆறு மாதம் காத்திருக்க வேண்டும் என்றும், விசித்திர திருமணமாக அது இருக்கும்’ என்றும் சொன்னாரோ என்றே நினைக்கிறேன்.
எப்படியோ நல்ல காரியம் நடந்து விட்டது. மகிழ்ச்சி தான்.
tharpoluthu intha murayil viyabara nookam indri koorum anbargal ullanara enil avaragal thodarpu mugavari therivikkauvum.
ReplyDeletegmvishnusanth03@gmail.com