​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 24 June 2021

சித்தன் அருள் - 1009 - கருடபகவானுக்கு நாராயணர் உரைத்த உண்மைகள்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

ஒருமுறை நாடியில் அகத்தியப்பெருமானிடம் ஒரு அடியவரால் கேள்வி ஒன்று கேட்கப்பட்டது.

"கருடபுராணத்தை வீட்டில் வாசிக்கலாமா? பொதுவாக இதை இறந்தவர் இல்லத்திலும், ஒரு சில கோவில்களில் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் வாசிக்கிறார்களே! ஏன் இதை வீட்டில் சாதாரணமாக வாசித்து, பிறருக்கும் சொல்லக்கூடாது?"

இதற்கு பதிலளித்த நம் குருநாதர்,

"கருடபுராணம் என்பது, ஒரு மனிதன் தன் வாழ்நாளில், வாழும்போது செய்யக்கூடாத செயல்கள், குற்றங்கள் அப்படி செய்தால் அதற்கான தண்டனைகள் எது என தெளிவாக உரைக்கின்ற ஒரு நூல். இதை ஸ்ரீமன் நாராயணன், கருட பகவானுக்கு உரைத்து, கருட பகவானிடம், வியாசர் போன்ற மகரிஷிகள், முனிவர்கள் வழி இப்பூவுலகுக்கு, மனிதர்களுக்கு கிடைக்க வழி வகுத்தார். இதை ஒரு மனிதன் வாழும்போது படித்து, தன் குற்றங்களை திருத்திக் கொண்டு, நேர்மையாக வாழ்ந்து, தன் கர்மாவை குறைத்துக் கொள்ள வேண்டும். இருக்கும் பொழுது, அத்தனை தவறுகளையும் செய்து பாபத்தை சேர்த்துக் கொண்டவன் போனபின் இதை படித்து என்ன புண்ணியம்? ஆகவே, தாராளமாக, "கருடபுராணத்தை" யார் வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் வாசிக்கலாம்" என்று உரைத்தார்.

இதை கேட்டது முதல், கருட புராணத்தில் உள்ள உண்மைகளை தொகுத்து, "அகத்திய பெருமானின் சித்தன் அருளில்" வழங்க வேண்டும் என்ற அவா வந்தது. பல தேடல்கள், பெரியவர்கள் பலரிடம் பேசி கிடைத்த தகவல்கள் போன்றவற்றின் தொகுப்பாக இந்த தொடரை எழுதலாம் என்று எண்ணம்.

கடந்த ஒரு வருடமாக, அந்த கிருமி பரவலின் காரணமாக, மனித குலமே பல கேள்விக்குறியை சுமந்து எங்கெங்கோ அலைவதை நாம் காண்கிறோம். ஊரு விட்டு ஊரு வந்து, பிழைப்புக்காக வந்தவர்கள், தன் இடம் சேர சிரமப்பட்டதையும், உணவின்றி, வருமானமின்றி, இருந்த வேலையையும் இழந்து தவித்து, ஒரு தேசம் விட்டு ஒரு தேசம் செல்ல தடை விதிக்கப்பட்டு, அனைத்து புண்ணிய செயல்களும் தடுத்து நிறுத்தப்பட்டு, வியாதியால் ஒரு பக்கம் மனிதர்கள் தனிமைப்படுத்தப்பட, அந்த கிருமியால் இறந்து போனவர்கள், குடும்பத்தார் இன்றி, முறையாக சடங்குகள் செய்யப்படாமல், அனாதையாக தகனம் செய்யப்பட்டு, இரண்டு நாட்களுக்கு பின் பத்து ரூபாய் மண்கலத்தில், கால் கலம் எலும்பும் சாம்பலும், வீட்டுக்கு, அரசாங்கத்தால் கொண்டு தரப்பட்டு, "இனி உங்கள் சம்பிரதாயப்படி என்ன சடங்கு உண்டோ அதை மிக குறைந்த ஆட்கள் இருக்க, நடத்திக்கொள்ளுங்கள்" என்ற கட்டளையுடன், ஒரு மனிதனின் வாழ்க்கை நொடியில் தலை கீழாக மாறியதை,

நீங்கள் எத்தனை பேர் கண்டு உணர்ந்தீர்கள் என தெரியாது.

அடியேனுக்கு, அப்படிப்பட்ட அனுபவத்தையும், இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியாத நிலையில் ஒரு மூலையில் பிடித்து அமர்த்தி வேடிக்கை பார்க்க சொன்ன நிலையும் அமைந்தது.

அகத்தியப்பெருமானின் நாடியில் கேட்ட பொழுது, "மனிதன் சம்பாதித்த பாபத்தின் அளவு அணை உயரம் கடந்த பொழுது, கோபமுற்ற இறைவன்தான் அழிப்பதற்கே முடிவு செய்தான். பிரார்த்தனை இன்றி, வேறு ஒன்றினாலும் இனி இதை தடுப்பது கடினம்" என்று குருநாதர் உத்தரவளித்தார். அவர் விரிவாக கூறியதில் சில விஷயங்கள் புரிந்தது. சிலவற்றை பொறுத்திருந்து கவனிக்கச் சொன்னார். பார்த்த பொழுது புரிந்த ஒரு விஷயம்,

"மனிதத்திற்கு தன்னுயிரைப் போல் பிற உயிர்களை நினைக்கத் தெரியவில்லை. தான் வாழ எவ்வுயிரையும் கொல்வதும், தின்பதும், தன் மகிழ்ச்சிக்காக துன்புறுத்துவதும், எதையும் செய்வதும், சொந்த பாபக்கணக்கு எவ்வளவு வேகமாக ஏறுகிறது என்கிற யோசனை இன்மையும்தான் காரணம்" என புரிந்தது.

இன்னும் மனிதம் திருந்தவில்லை என்பதும் தெளிவாயிற்று.

சித்தர்களை குருநாதர் என்று அழைக்கின்றவர்கள் கூட, பிற ஜீவன்களை துன்புறுத்துவதையும், மனதையும் செயல்களையும் சுத்தமாக வைத்துக்கொள்ளாமல் வாழ்வதையும் காண முடிந்தது, கேட்க முடிந்தது. இதைப்பற்றி, ஏற்கனவே, இந்த வலை தொகுப்பில், "தவறாக வாழ்கிறவர்கள், ஜீவ காருண்யம் இல்லாதவர்கள் தயவு செய்து, சித்த மார்கத்துக்குள் வராதீர்கள்" என பெரியவர்களே வேண்டுதலை வைத்தது ஞாபகம் இருக்கும் என நினைக்கிறேன்.

ஆகவே,

இது நேரம், நல்லதை உரைத்துவிடுவோம், புரிந்து கொள்பவர்கள் ஏற்றுக்கொள்ளட்டும், திருந்தட்டும்.  இவ்வுலகுக்கு செய்ய வேண்டிய நம் கடமையை முடித்துவிடுவோம், என தீர்மானித்தேன்.

ஆகவே, இறைவன் தன் வாயால் உரைத்த "நல்லவை/கெட்டவைகள்" எது, அதன் விளைவு என்ன, என்ன தண்டனை எதனால் வழங்கப்படும் என்பதை சுருக்கமாக, அகத்தியப் பெருமானின் உத்தரவின் பேரில், அவர் அனுமதியுடன் தொகுத்து வழங்குகிறேன்.

அனைத்தும், ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.............தொடரும்!

Saturday, 19 June 2021

சித்தன் அருள் - 1008 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - 17/06/2021


ஆதி சித்தனை மனதில் எண்ணி, உரைக்கின்றேன் அகத்தியன். இனி நாளும், ஒவ்வொரு பிரச்சினையும், ஒவ்வொரு குடும்பத்தில் நேரும் என்பேன். இதனால், இறைவனை பாடிப்பாடி தொழுதால் மட்டுமே, விடிவுகாலம் உண்டு என்பேன். வரும் காலங்களில், பல குற்றங்கள் நடைபெறும் என்பேன். என்பேன், இதற்கும் சமமான, ஒழுக்கம் இல்லாத வாழ்க்கை வாழ்வார்கள். வாழ்வார்கள், பின் மழையும் நிந்தித்து, ரத்த வெள்ளமாக போகும். போகும் அதனால், மன நிலை மாறும், இறை நம்பிக்கை சற்று குறையும், என்பேன். வரும் காலங்களில், ஆங்காங்கே, சில சில பூகம்பங்களும் ஏற்படும் என்பேன். மறைமுகமாக இன்னும் சில தீய வினைகள். ஆனாலும், இறைவனை வணங்கினால் மட்டுமே, விடிவுகாலம் உண்டு. மற்றவை எல்லாம் ஆகாது என்பேன். ஆகாது என்பேன், வரும் காலங்களில், நெருப்பு மழையும் பொழியும் என்பேன். மனிதர்களின் குணங்கள் மாறும் என்பேன். ஒழுக்கம் இல்லாத வாழ்க்கை வாழ்வார்கள். ஆனால், தன் இனத்திற்கு தகுந்தாற்போல் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாமல், நாடோடியாக திரிவார்கள். திரிவார்கள் என்பேன், மனிதர்கள், சில சில சமயங்களில், உண்மை இல்லாமல் வாழ்வார்கள். ஆனாலும், இறைவன் நம்பிக்கை குறைந்து விடும். இறைவன் மீதுள்ள அன்பும் குறைந்து விடும். பின் அப்படி இறைவன் மீது நம்பி, அன்பு கொண்டாலும், மன மாற்றங்கள்.

மனமாற்றங்கள் வேண்டாம் அப்பனே! அப்பனே, மனதுள், இறைவன் இருக்கின்றான் என்று பலமாக பிடியுங்கள். இறைவன் இருக்கின்றான் என்று பிடித்தால் மட்டுமே, வரும் காலங்களில் தப்பித்துக் கொள்ளமுடியும். இப்பொழுதும் கூட ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு பிரச்சினையாக இருந்து கொண்டு இருக்கின்றது. சொல்லத் தெரியாமலே, மனிதர்கள் தவிக்கின்றனர். பரிகாரமாக, அதை செய்வோமா, இதை செய்வோமா என்று. ஆனால், எவ்வித பரிகாரமும் செயல் படவில்லை. செயல் படவில்லை என்பேன். சில சில நேரங்களிலும், அவதார புருஷர்கள் வருவார்கள், இவ்வுலகில், காப்பாற்ற. காப்பாற்ற அதி விரைவில் வருவார்கள்.  முறையாக நடந்தாலும், முறையற்றதாக நடந்து போகும் கலியுகத்தில். கலியுகத்தில், இன்னும் பல பெரியோர்களை மதிக்க மாட்டார்கள் என்பேன். பின் குருவை நிந்திப்பார்கள் என்பேன். குருவருள் இல்லாமல் திருவருள் கிடையாது என்பது போல், குரு என்று சொல்லியெல்லாம் ஏமாற்றி விடுவார்கள். ஏமாற்றிவிடுவார்கள், குருவையே. பின் நல் முறையாய் நட்புக்கள் வைத்திருந்தாலும், நட்பில் பிரிவு ஏற்படும். அதனால், பாவங்கள் கூடிக்கொண்டே இருக்கும்.

எனவேதான், இறை நம்பிக்கை இருந்தால் மட்டுமே, பிழைக்க முடியும் என்பேன். ஆனாலும், இறை என்று கெளரவத்துக்காக பிடிப்பார்கள். பிடிப்பார்கள், வீணான வாழ்க்கையை. வீணான வாழ்க்கை உண்டு நிச்சயம். ஆனாலும் இறைவன் அனைவரையும் காப்பாற்றுவான். ஆனாலும் மற்றவைகள் எல்லாம் இறைவனை நோக்கி இல்லாத போது, பின் கீழ் நோக்கி விழுதலே ஆகும். ஆனாலும், அவை போன்று செயல்பட விடாதீர்கள் என்பேன். என்றாலும், மனதைரியத்துடன், எது நடக்குமோ, அது நன்றாக நடக்கும் என்று இரு. அனைத்தும் நன்மைக்கே. எதை இங்கு கொண்டு வந்தாய், கடைசியில் எதை கொண்டு போகிறாய் என்று நினைத்தாலே, முக்தி நீ பெறுவாய். இதனுள்ளே வாழ்க்கையை நன்றாக வாழ வேண்டும். வாழ வேண்டும், அதோடு நற்பண்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நற்பண்புகள் ஏற்படுத்தி, சில தீய வினைகள் அகல வேண்டும்.

அப்பனே! ஒன்றை மட்டும் தெரிவிக்கின்றேன். நற்பண்பு, கருணை, இவை இருந்தால் மட்டுமே, இவ்வுலகத்தில் இனி வாழ முடியும். பின் பொய், களவு, திருட்டு, பின் மனதை பல வழிகளில் செலுத்தி விட்டீர்களானால், அழிந்து விடுவீர்கள். மனிதனை அழிப்பதற்கு இங்கு யாரும் இல்லை. மனிதனை, மனிதன்தான் அழித்துக் கொண்டிருக்கின்றான். இதுதான் உண்மை. ஆனாலும், நல்முறையாய், எதனை என்று தீர்மானிப்பதற்கு, இங்கு பல சித்தர்களும், தவம் செய்து கொண்டிருக்கின்றார்கள், உலகத்தை காப்பாற்ற. காப்பாற்ற தோன்றுவார்கள், அங்கங்கே.  ஆங்காங்கே தோன்றி, மற்ற பொய்யான குருக்களை கொண்டு வருவார்கள், வெளியே. எச்சரிக்கின்றேன், இப்பொழுது கூட. நிச்சயமாய் மாறுங்கள், மாறுங்கள், மாறுங்கள் என்று சொல்லிக் கொண்டேதான் இருக்கின்றேன். அதனால், இப்பொழுதே மாறிக் கொள்ளுங்கள். பின் சித்தர்கள் வருவார்கள். சித்தர்களே, பின் பொய்யான வழிகளை செய்துகொண்டிருக்கும் மனிதர்களைப் பார்த்து, பின் அவர்களே, சித்தர்களே, வெளிக் கொண்டு வருவார்கள். அப்பொழுது. தேவை இல்லாமல், நீங்களே தலை குனிந்து நிற்காதீர்கள். இப்பொழுதே சொல்லுகின்றேன். ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள், எதனை என்று. எதனை என்று பார்த்தால், பூலோகத்தில் இருந்து, திரிந்து, திரிந்து கொண்டுதான் இருக்கின்றேன். ஆனால், தற்பெருமைக்காக சிலர், சிலர் எதனையும் செய்யாமலே இருக்கின்றனர். எல்லாம், பொய்யானதே. பொய்யானதே! எந்தனுக்கும் கோபம் கூட வருகின்றது. ஆனால், அகத்தியன்! அகத்தியனே! அகத்தியர் அப்பா! என்று மனமார கூறுகின்றனர். ஆனால் இவ்வாறு கூறிய பொழுதே என் கருணை தாங்கவில்லை. ஆனால் செய்வதோ தவறுகள். வேண்டாமப்பா! அத்தவறுகள் பின் தண்டித்தால், ஒன்றை மட்டும் கூறுகின்றேன். நீ செய்யும் தவறுகள் சிறிது தூரம் செல்லக்கூடும். ஆனால் அங்கே ஒரு பள்ளம், அதில் விழுந்து விட்டால், யாரும் காப்பாற்ற முடியாது. இறைவனும் காப்பாற்ற முடியாது. சித்தர்கள், யாங்களும் காப்பாற்ற முடியாது. சொல்கின்றேன். ஏன் என்றால், தவறுமேல் தவறு செய்யாதே என்று எச்சரித்துக் கொண்டேதான் இருக்கின்றேன்.

நான் ஒன்றும் எங்கும் இல்லை. இவ்வுலகத்தில் சுற்றிக் கொண்டேதான் இருக்கின்றேன். இப்பொழுது கூட சொல்கின்றேன். ஒழுக்கமாக வாழ கற்றுக் கொள்ளுங்கள். கற்றுக் கொள்ளுங்கள். ஏதும் தேவை இல்லை. இறைவனை அன்பால் வணங்குங்கள். போதுமானது. இன்னும் வருவார்கள் திருடர்கள். அதை செய்கின்றேன், இதை செய்கின்றேன் என. இதை எல்லாம் செய்வேன் என்று ஏமாற்றி பிழைப்பார்கள். இப்பொழுது கூட பிழைத்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். அதை யான் கண்ணால் பார்த்துக்கொண்டேதான் இருக்கின்றேன். ஆனால் நிச்சயம், அவர்களுக்கு, அடி, உதை பலமாக இருக்கும் என்பேன். எச்சரிக்கிறேன். எப்பொழுதோ, முன்பே எச்சரித்து விட்டேன். ஆனாலும், இப்பொழுது கூட எச்சரிக்கின்றேன். பொறுமை காத்திருங்கள். அன்பு, கருணையோடு, பகைமை இல்லாமல் இறைவனை வணங்குங்கள். எல்லாமே நீதானப்பா இன்று இறைவனை நோக்கி வணங்குங்கள். போதுமானது. அதை விட்டு விட்டு, அதை செய்தால் இது நடக்கும், இதை செய்தால் அவை எல்லாம் நடக்கும், இப்பரிகாரத்தின் மூலம் அவை எல்லாம் நடக்கும் என்றெல்லாம் இயங்கிக் கொண்டிருந்தால், நிச்சயம் விடிவுகாலம் வராது, வராது என்பேன். இதனால் அன்போடு அலையுங்கள். உங்களுக்கு தேவை எது என்று கூட எங்களுக்குத் தெரியும். நற்பண்புகளோடு இருந்தாலே போதுமானது. நாங்கள் ஓடோடி வருவோமப்பா. சித்தர்கள், யாங்கள், நல் மனிதர்கள் யாராவது இருக்கின்றார்களா என்று பார்த்துக்கொண்டேதான் இருக்கின்றோம். ஆனாலும், அப்பனே, ஏமாற்று வேலைகள் மிஞ்சுகிறது. மிஞ்சுகிறது, எதைப்போட்டாலும் சரியாக வரவில்லையே அப்பா. அப்பனே தெளிந்து கொள், அன்பால் யான் கூறுகின்றேன். பொய், பித்தலாட்டம் வேண்டாம் அப்பா. பித்தலாட்டம் செய்தால், பித்தலாட்டமே உன்னை அழித்துவிடும். அப்பனே! யானும் பூலோகத்தில் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றேன். தான் வாழ்வதற்காக, என்னென்னவோ செய்கின்றார்கள். வேண்டாம் அய்யனே, வேண்டாம் அய்யனே! என்றுதான் இப்பொழுது கூட தாபத்தோடு சொல்கின்றேன்.

அனைவருக்கும்! வேண்டாம்! இன்னும் சில காலங்கள் ஆனால் கட்டங்கள் வரும். கெட்டதை செய்து கொண்டிருக்கின்றீர்கள். யான் பார்த்துக் கொண்டேதான் இருக்கின்றேன். ஆனாலும் அவை வந்துவிட்டால், யான் கூட காப்பாற்ற மாட்டேன். இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். அனைத்தும் கூட. ஏன்? ஒன்றை தெரிவிக்கின்றேன் உங்களுக்கு.  அதை செய்கின்றேன், இதை செய்கின்றேன் என்று சொல்கிறீர்களே, நீங்கள் ஏன் செய்கின்றீர்கள். எங்களுக்கு தெரியாதா. யாங்கள் செய்வதற்கு,  சரியானதாக. கருணையோடு சொல்கின்றேன். அப்பா அகத்தீசா! எங்களுக்கு ஒன்றும் தெரியாது. நீதான் அழைத்து செல்ல வேண்டும் என்று. அன்போடு வார்த்தை கூறும் யான், யான் இருக்கின்றேன். அதை விட்டுவிட்டு, பின் காசுக்காக எதை எதையோ செய்துவிட்டால், அப்பனே! நான் சொல்ல மாட்டேன், செய்துவிடுவேன். இப்பொழுது கூட சொல்கின்றேன். யார் யார் எப்படி அழியப்போகிறீர்கள் இக்கலியுகத்தில் என்று விளக்கமாக சொல்ல முடியும். கருணையோடு சொல்கின்றேன். பொய், பித்தலாட்டம் வேண்டாமப்பா! பொய் பித்தலாட்டமே அழிந்து விடும். ஏன்? உன்னை மட்டும் அழிக்காது, பரம்பரையையை அழித்துவிட்டு போகும். தெரிந்து கொள்ளுங்கள்.

மீண்டும் வந்து உரைக்கின்றேன் வாக்குகளை, பலமாக!

ஓம் ஸ்ரீ லோபா முத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.............தொடரும்!

Thursday, 17 June 2021

சித்தன் அருள் - 1007 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு!



ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்...........தொடரும்!

Thursday, 10 June 2021

சித்தன் அருள் - 1006 - அன்புடன் அகத்தியர் - ராமேஸ்வரத்தில் சிவபெருமான் வாக்கு!


நமச்சிவாயம் யான் இயம்புகின்றேன். பின் பின் மறைமுகமான பல இன்னல்களும் இவ்வுலகத்தில் வரும் என்பேன். மனிதரிடையே புத்தி நிரந்தரமாக நின்று விட்டது. அதனால் ஒரு சோதனை கொடுக்கலாம் என்றேன். நீங்களே பார்த்து விட்டீர்கள். யானும் வருடங்களாக இங்கு இருந்து இருந்து, பின் அனைவரையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றேன். அவரவர் இஷ்டத்துக்கு ஏற்ப பணத்தைத்தான் மதிக்கின்றனர். ஆனாலும் நேரடியாக யான் வந்து நின்றாலும் அவன்தான் என்னையும் கண்டுகொள்வதே இல்லை.  இதற்குப் பெயர்தான் பக்தியா? பக்தி செலுத்த கோபங்கள், தாபங்கள் விலக்க வேண்டும். என்றால்தான் என்னை அடையலாம்.

யான் நல்முறையாய் செய்வேன் என்று உணர்ந்து அகத்தியனும் பூமியில் சுற்றிக் கொண்டிருக்கின்றான், என்பேன். ஆனாலும் அகத்தியனை வழிபடு என்று சொல்லியெல்லாம், பொய், பித்தலாட்டங்கள். யான் ஏற்கனவே அகத்தியனுக்கு சொல்லிவிட்டேன். ஆனால் அகத்தியனோ, பார்ப்போம், என் பக்தர்கள் மெய்யானவர்கள், இவ்வுலகில் உண்டு என்றான். ஆனாலும் ஒவ்வொரு இடத்திலும் பார்த்தால், "ஐயோ" என்கிற நிலைமை அவன்தனுக்கு தோன்றுகின்றது. சிவனே, அப்பனே என்றெல்லாம் என்னை பூ உலகிலிருந்து அழைக்கின்றான். ஆனாலும் பார்ப்போம் என்றுதான் உலா வந்து கொண்டிருக்கின்றான், அகத்தியனும். ஆனாலும், எவை என்றும், எதனை என்றும், மனிதனே, தன் இனத்தை, கீழ்ப்படுத்துவான் என்பேன். மனிதனின் புத்திகள் மாறும் இனி மேலும். ஆனாலும் ஒழுங்காக செயல்படமாட்டான். மனிதரும் இவை, எவை என்று தெரியாமல் வாழ்வார்கள். இதனை கண்டு யான் எத்தனை நாட்கள் பொறுத்திருப்பது. என் இடத்திலே வந்து கூட சில கேள்விகள் கேட்கின்றனர். ஆனாலும் ஒருவர் கூட என்னை வேண்டும் என்று கேட்பதில்லை. ஒரு இல்லோன் கூட இங்கு வந்து நிம்மதியாக வழிபட அனுமதிப்பதில்லை. அன்பை அன்றி வேறு ஒன்றை யாங்கள் எதிர் பார்ப்பதில்லை.

அப்பனே, இவ்வுலகில் உண்மையான பக்தியை விட பொய்யான பக்தியே நிலவுகின்றது. இத்தனையும் யான் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன். எவை என்று கூற, நிச்சயம் தண்டனை உண்டு என்பேன். இப்பிறவியிலேயே செய்த தவறுகளுக்கு தண்டனையை இப்பிறவியிலேயே அனுபவிக்க வேண்டும் என்று விதி. யான் கட்டளை இட்டுவிட்டேன் நவகிரகங்களுக்கு. நவகிரகங்கள் விடாது என்பேன். ஒவ்வொருவரும் மனசாட்சிப்படி நடக்க நடக்க நன்மைகள் விளையும். தவறு செய்தால், அவன்தனுக்கு அப்பொழுதே தண்டனையை யானே கொடுப்பேன் என்றேன்.

பல கோடி ஞானியர்களும் திரிந்து கொண்டுதான் இருக்கின்றனர் இங்கே. இங்கு நிச்சயமாய் சித்தர்கள் ஆட்சி வரும். இங்கேயே பல ஞானியர்களும் தவம் செய்து கொண்டுதான் இருக்கின்றனர்.

இதனையும் (ராமேஸ்வரம்) பிடித்தமான ஸ்தலம் என்பதால், யானே தான் அமைத்துக் கொண்டேன். இதன் சரித்திரத்தை யாரும் சரியாக கணிக்கவில்லை என்பேன். எப்பொழுது ராமனும் சீதையும் இங்கு வருவார்கள் என்பதும் எந்தனுக்கு தெரியும். சித்திரை மாதத்தில் ராமனும், சீதையும் வந்து வணங்கி, பின் நல்முறையாய், இங்கே உறைவார்கள். ராமனுக்கு விடிவுகாலம் இங்கிருந்துதான் ஏற்பட்டது என்பேன்.

எமது ஆசிகள் அனைவருக்கும் உண்டு!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..............தொடரும்!

Thursday, 3 June 2021

சித்தன் அருள் - 1005 - அன்புடன் அகத்தியர் - போகர் பெருமான் வாக்கு!

உலகை ஆளும் நமசிவாயத்தை பணிந்து, என் பாச பிள்ளை கந்தனை வணங்கி

ஈரேழு உலகத்தையும் தன் பாச கருணையினால் கட்டி அணைத்து என்குரு நாதனையும் வணங்கி உரைக்கின்றேன் போகன் அவன். நிச்சயமாய் எளிதில் மாற்றம் நிகழ்வது கடினம் என்பேன்

குரு போன்று நன்மை தீமைகளையும் ஆராய்ந்து இப்பூவுலகில் பின் பல யுகங்கள் வாழ்ந்து வரும் என் குரு அகத்தியர் நல் முறையாக சுற்றித்திரிந்து எவ்வாறு மனிதர்களுக்கு நல் முகமாய் ஆசிகள்  வழங்கினால் தப்பித்துக் கொள்வார்கள் என்று நினைத்து உபதேசம் செய்து கொண்டிருக்கிறார் ஆனால் மனிதனோ மாயையில் சிக்கி வழி மாறிச் சென்று கொண்டிருக்கின்றான்.

பூலோகத்தில் அகத்தியரும் வலம் வந்து கொண்டு ஒவ்வொருவரையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்.

இனிமேலும் மனிதன் தவறு செய்து கொண்டிருந்தால் பார்த்துக் கொண்டு பொறுப்பதில்லை.

மனிதனைப் பார்த்து பாவம் மனிதன் என்றுதான் அகத்தியரும் கருணையோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்.

சித்தர்கள் நல்லது செய்ய நினைத்தாலும் கூட மனிதன் மாய வலையில் சிக்கி தவறு மேல் தவறு செய்து கொண்டிருக்கிறான்.

இனிமேலும் மனிதன் தவறான வழியில் செல்வது ஒரு உயிரை கொன்று உண்ணுவது.

இவ்வாறான பாவ காரியங்கள் செய்துகொண்டிருந்தால் இனிமேலும் கஷ்டத்தில் இருந்து தப்பிக்க முடியாது.

மனிதர்களின் கஷ்டத்திற்கு மனிதர்களே காரணம். யோசித்துப்பார் மனிதனே அகத்தியர் நல்முறையாக வாக்குகள் வழங்கிக் கொண்டிருக்கிறார்.

இன்னும் வரும் காலங்களில் பலவிதமான நோய்கள் வரும் என்ன விதமான நோய் என்று தெரியாமலே போகும் அதற்கு  போகன் ஆகிய மருந்துகள் உரைக்கின்றேன்.

அதன் பயன்படுத்தி நோயின் பிடியில் இருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்.

  • கீழாநெல்லி
  • அக்கரகாரம்
  • மாசிக்காய்
  • ஜாதிபத்திரி

இவற்றை நெய்யில் இட்டு ஐந்து கடுகளவு தினமும் உண்ண வேண்டும்.

  • மலை நெருஞ்சி இலை
  • முருங்கை இலை
  • துளசி இலை
  • புதினா இலை
  • கறிவேப்பிலை
  • காட்டுக் கொடித்தோடை
  • குப்பைமேனி இலை
  • கண்டங்கத்திரி இலை
  • வில்வ இலை

இவற்றை இடித்து பொடித்து பனை வெல்லத்துடன் சேர்த்து உண்டு வர வேண்டும்.

வாரம் ஒருமுறை மிளகு வெள்ளைப்பூண்டு உண்ண வேண்டும்.

இன்னும் ஏராளமான மூலிகைகளை என்னால் உரைக்க முடியும் அவற்றைப் பயன்படுத்த குருமந்திரம் தேவை ஆனால் அந்த குரு மந்திரம் சொல்லி விட்டால் மனிதன் அதை பயன்படுத்தி காசு ஈட்டுவான்.

பொருள் சம்பாதிப்பதற்கு இதனை தவறான வழியில் பயன்படுத்துவான்.

இதனை தயார் செய்து வைத்திருந்தால் அவருக்கு குரு மந்திரம் தந்து   உபதேசம் செய்வேன்.

இப்பொழுது குரு மந்திரம்  கூறி விட்டால் அதனை பயன்படுத்தி மனிதன் காசாக்குவான்.

இவற்றை நல்ல முறையில் அகத்தியர் பக்தர்கள் தயாரித்தால் அவர்களுக்கு குரு மந்திரம் உபதேசம் செய்வேன். இந்த மருந்துகளை சேகரித்து பயன்படுத்துவதற்கும் குருவின் திருவருள் தேவை குருவின் அருள் இல்லாமல் இதனை செய்ய முடியாது நல் முறையாக செய்பவர்களுக்கு என்னுடைய குரு மந்திர உபதேசம் கொடுப்பேன்.

மனிதர்களை நீங்கள் நேர்வழியில் நடப்பதுதான் உங்களுக்கு பலன் தரும் . மாயையில் சிக்கி தவறு மேல் தவறு செய்யும் மனிதர்களுக்கு இனிவரும் காலம் கஷ்ட காலம் தான்.

மீண்டும் வந்து சில மூலிகைகளை உரைக்கின்றேன்.

திரு போகர் சித்தர் உரைத்த பொது வாக்கு!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.............. தொடரும்!