திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரெயில் பாதையில், ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் ஆழ்வார்திருநகரி அமைந்துள்ளது. திருநெல்வேலியில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இவ்வூருக்கு நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பேருந்துகள் அடிக்கடி செல்கின்றன.
‘கூழ் குடித்தாலும் குருகூரில் வசித்து திருவடி சேர்’ என்றொரு பழமொழி உண்டு. இந்த குருகூரின் மற்றொரு பெயர் ஆழ்வார் திருநகரி என்பதாகும். இது 108 திவ்ய தேசங்களில் ஒன்று.
இத்திருக்கோயில் சிற்பக்கலையிலும் சிறந்து விளங்குகிறது. இத்திருக்கோயிலில் சிற்பக் கலைக்கு மகுடம் வைத்தாற்போல் குழல் தூண்களும், கல் நாதஸ்வரமும், கல் படிமங்களும், இசைத் தூண்களும் உள்ளன. இங்குள்ள தூண்களில் இரண்டு துவாரங்கள் போடப்பட்டுள்ளன. இரு பக்கமும் இருவர் நின்று கொண்டு மாறி மாறி ஊதினால் சங்கின் ஒலியும், எக்காள ஒலியும் ஏற்படுகிறது. இத்திருக்கோயிலில் கல்லால் ஆன நாதஸ்வரம் ஒன்று உள்ளது. நாதஸ்வரத்தின் அடிபாகத்தில் பித்தளைப்பூண் போடப்பட்டுள்ளது. இந்த இசைக்கருவி சுமார் 400ஆண்டுகளுக்கு முன்னதாக கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் கோயிலுக்குக் கொடுக்கப் பட்டதாகத் தெரிகிறது
முதன் முதலில் பெருமாள் தோன்றி நின்ற தலம் என்பதால், ‘ஆதிநாதன்’ என்று அழைக்கப்பட்டார்.
பன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில், ஆழ்வார் பெயராலேயே வழங்கப்பெறும் திருத்தலம் இது ஒன்றுதான் என்றால் அது மிகையாகாது.
ஆதிசேஷனின் அவதாரமாகிய லட்சுமணன், திருப்புளியாழ்வாராக இங்கு அவதரித்தமையால் இத்தலம் ‘சேஷ ஷேத்ரம்’ எனப்படுகிறது.
நான்முகனிடம் உயிர்களைப் படைக்கும் பணியினை பரந்தாமன் அளித்திருந்தார். இருப்பினும் பிரம்மனுக்கு அது தொடர்பாக சிறிது ஐயம் ஏற்பட்ட காலத்தில் எல்லாம் திருமாலின் உதவியை நாடினார். ஒருமுறை திருமாலைச் சந்திக்க எண்ணி ஓராயிரம் வருடங்கள் கடும் தவம் புரிந்தார் பிரம்மதேவர். இதையடுத்து அவர் முன் விஷ்ணு தோன்றினார். பிரம்மாவின் வேண்டுகோளுக்கிணங்க அவரது படைப்புத் தொழிலுக்கு, எல்லா காலத்திலும் உறுதுணையாக இருப்பதாக வாக்களித்தார். இவ்வாறு பிரம்மதேவருக்கு அருள்புரிவதற்காக அவதரித்த தலமே குருகாசேத்திரம் என்று அழைக்கப்பட்ட இத்தலம் ஆகும்.
ஆதிசேஷனின் அவதாரமாகவும், ராமாயணத்தில் லட்சுமணனின் அவதாரமாக தோன்றியவர் திருப்புளியாழ்வார். இவர் நம்மாழ்வார் 16 ஆண்டுகள் பேசாத குழந்தையாக தவம் மேற்கொள்வதற்காக அங்கு நின்றார். அந்தப் புளிய மரப் பொந்தில் நம்மாழ்வார் இருந்தார். இந்த புளியமரத்தின் அடியில் நம்மாழ்வார் சன்னிதி அமைந்துள்ளது. புளிய மரத்திற்கும், சன்னிதிக்கும் பூஜை உண்டு. புளிய மரத்தின் அடியில் 36 திவ்ய தேசப் பெருமாள்களும் காட்சி தருகின்றனர். இந்தப் புளிய மரம் 5,100 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று சொல்லப்படுகிறது. இந்தப் புளிய மரம் பூக்கும், காய்க்கும். ஆனால் பழுக்காது. இரவில் இதன் இலைகள் உறங்குவதில்லை. நம்மாழ்வார் உற்சவ விக்கிரகம் உலோகம் கொண்டு செய்யப்பட்டதில்லை. தாமிர பரணித் தண்ணீரினை காய்ச்சக் காய்ச்ச முதலில் உடையவர் விக்கிரகமும், பின்னர் நம்மாழ்வார் விக்கிரகமும் வெளிவந்துள்ளது.
நம்மாழ்வார் வைகாசி விசாக நட்சத்திரத்தன்று அவதரித்தார். ஆதலால் இத்தலத்தில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா மிகக் கோலாகலமாக நடைபெறும். திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் பெரும் திருவிழாக்களில், ஆழ்வார்திருநகரி வைகாசி விசாகப் பெருந்திருவிழா குறிப்பிடத்தக்கது. வைகாசி விசாகத்தை இறுதி நாளாக வைத்து, கோவிலில் கொடியேற்றப்படும். இந்த திருவிழாவின் 5–ம் நாள் உற்சவம் முக்கியத்துவம் பெற்றது. அன்றைய விழாவில் ஆழ்வார் திருநகரியைச் சுற்றியுள்ள 8 திருப்பதிகளில் இருந்தும் எம்பெருமாள்கள், பல்லக்கில் ஆழ்வார் திருநகரி வந்தடைவார்கள். ஆதிநாதர் கோவில் முற்றத்தில் நவ திருப்பதி பெருமாள்களுக்கும் திருமஞ்சனம், திருவாராதனை செய்யப்படும். இரவு 11 மணி அளவில் இறைவன் கருட வாகனத்தில் எழுந்தருளி நம்மாழ்வாருக்கு காட்சி தருவார்.
தாமாகத் தோன்றிய பெரிய திருமேனி. மூலவரின் பாதங்கள் பூமிக்குள் இருப்பதாக ஐதீகம்.
திருத்தொலைவில்லிமங்கலம் அருகிலுள்ள சௌரமங்கலம் கிராமத்தில் அவதரித்த நம்மாழ்வாரை, அவரது பெற்றோர் குருகூருக்கு அழைத்து வந்து ஆதிநாதன் ஸந்நிதியில் விட்டனர். குழந்தை தவழ்ந்து சென்று அங்கிருந்த புளியமரப் பொந்தில் புகுந்து யோக முத்திரையுடன் பத்மாஸன யோகத்தில் அமர்ந்தது. மதுரகவி ஆழ்வார் இங்கு வந்து தமக்கு ஹிதோபதேசம் செய்யும்படி பிரார்த்திக்க, நம்மாழ்வார் திருவாய்மொழியை அருளிச் செய்ததாக ஸ்தல புராணம் கூறுகிறது. அதனால் 'ஆழ்வார் திருநகரி' என்று பெயர் பெற்றது.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்..........தொடரும்!