​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 22 November 2018

சித்தன் அருள் - 779 - கோடகநல்லூர் - அந்தநாள்>>இந்த வருட நிகழ்ச்சிகள் - 4


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

[ஓதியப்பரின் "பால் கட்டி பிரசாதம்" வேண்டி நிறைய அகத்தியர் அடியவர்கள் கேட்டிருந்தார்கள். அதை எடுத்து, தபால் துறை வழி அவர்கள் விலாசத்துக்கு அனுப்புகிற வேலை அடியேனை ஆட்கொண்டது. அடியேனின் நண்பர்களும் இதற்கு உதவினார்கள். மேலும் இரண்டு முறை, வெளியூர் செல்ல வேண்டிய அவசியம் வந்ததாலும், இரு வாரங்களாக தொகுப்பை அளிக்க முடியவில்லை. இன்று கோடகநல்லூர் சம்பவங்களை தொடரலாம்.]

அக்டோபர், 20ம் தியதி இரவு 11 மணிக்கு நான்கு அகத்தியர் அடியவர்களுடன் கோடகநல்லூருக்கு பயணத்தை தொடங்கினோம். எப்பொழுதும், மிக உயர்ந்த விஷயங்களில் பங்குபெற செல்லும் முன் எங்கள் ஊரிலுள்ள, ஒரு பிள்ளையார் கோவில் சென்று அவரிடம் விண்ணப்பித்துவிட்டு, பயணத்தை தொடருவோம். கூடவே ஒரு தேங்காயை சதிர் வடலாக கொடுத்துவிட்டு நன்றி சொல்லுவதும் உண்டு. இந்த முறை, பிள்ளையாருக்கு தேங்காயை சமர்ப்பித்ததும், நிறைய தடங்கல்கள், காத்திருப்பதாக ஒரு உள்ளுணர்வு வந்தது.

இப்படி உணர்வு வந்ததும், கோவிலை திரும்பி பார்த்து, "எல்லாம் உன் செயல், அனைத்தையும் சரி பண்ணிக்கொடு" என்று வேண்டிக்கொண்டு யாத்திரையை தொடர்ந்தோம்.

அதிகாலை 3 மணிக்கு திருநெல்வேலி சென்றடைந்ததும், ஒரு தீர்மானம் எடுத்தேன். அனைவரையும் அழைத்துக்கொண்டு, ஒரு உறவினர் வீட்டில் சற்று ஓய்வெடுத்தபின், 9.30க்கு கோடகநல்லூர் வந்து சேர்ந்தோம்.

கோடகநல்லூர் சிவபெருமான் கோவில் சார்பாக தாமிரபரணி புஷ்கரம், நடந்து கொண்டிருந்ததால், நல்ல கூட்டம். அடியேனுக்கு தெரிந்த ஒரு அம்மாவின் வீட்டில் பூசைக்கு கொண்டு போன சாமான்களை வைத்துவிட்டு, நதிக்கரை சென்று ஸ்நானம் செய்தோம். மிக ஆனந்தமான ஸ்நானம். பின்னர், கோவில் சென்று சிவபெருமானை, அம்பாளை தரிசித்துவிட்டு, பெருமாள் கோவிலுக்கு வந்தோம், உழவாரப்பணி நிறைய காத்திருந்தது. புஷ்கரணிக்கு வந்த பக்தர்களால், கோவில் உள்-பிரகாரமும், சுவாமி சன்னதியும், நிறையவே சுத்தம் பண்ணவேண்டிய நிலையில் இருந்தது.

திரு.ஸ்வாமிநாதன், பாண்டிச்சேரி அடியேனின் நண்பர், தன்னுடன் ஒரு 9 அகத்தியர் அடியவர்கள் கொண்ட குழுவை உருவாக்கி,  உழவாரப்பணிக்காக அழைத்து வந்திருந்தார். அடியேனுடன் இருந்த நால்வரும், அவர்களுடன் சேர்ந்து உழவாரப்பணிக்காக தயாராயினர்.

முதலில் பெருமாளை தரிசித்து, அர்ச்சகரிடம், "வந்துவிட்டோம் நாங்கள், நாளைய பூசைக்காக" என்று கூறி, உழவாரப்பணியை தொடங்க அனுமதி வேண்டி நின்றேன்.

நிறைய நேரம் வேண்டி வரும் என்பதால், உடனேயே வேலையை தொடங்க தீர்மானித்தோம். முதலில் பிரகாரத்தில் உள்ள மண்டபம், நினைவில் வந்தது. சற்று அகலமாக இருக்கும். கீழிருந்துதான் சுத்தம் செய்ய வேண்டும். மேலே ஏறக்கூடாது என்று கூறிவிட்டேன்.

மண்டபத்தில் இருந்த வலை, தூசி போன்றவற்றை பெருக்கி சுத்தம் செய்தபின், அதன் நடுவில் சிந்தியிருந்த எண்ணை படிமானத்தை சுத்தம் செய்ய நிறையவே சிரமப்படவேண்டி வந்தது. இதற்கிடையில், ஒருவர், மேலே ஏறி செய்தால், எளிதாக இருக்கும் என்றார். அவருக்கு புரியவில்லையாததால், தெளிவிக்க வேண்டி வந்தது.

"அந்த மண்டபம் என்பது, பெருமாள் இந்த இடத்துக்கு வந்த பொழுது, அமர்ந்த இடம். இங்கேயேதான் இருப்பேன் என்று அவர் அடம்பிடித்தார். பின்னர் சித்தர்கள், குறிப்பாக, அகத்தியப்பெருமான், வேண்டிக் கொண்டதற்கு இணங்க, உள்ளே, இப்பொழுது சன்னதி இருக்கும் இடத்திற்கு, இடம் பெயர்ந்தார். இப்பொழுது புரிகிறதா? பெருமாள் அமர்ந்த அந்த இடத்தை, நாம் நம் கால்களால் மிதிக்கக்கூடாது என்பதாலேயே, கீழிருந்து சுத்தம் பண்ணுங்கள் என்றேன்" என விவரித்தேன்.

உணர்ந்த அகத்தியர் அடியவர்கள், இரு மடங்கு வேகத்தில் வேலை பார்க்கத் தொடங்கினார்கள். மண்டபத்தை நான்கு பக்கத்திலிருந்தும் நீர் விட்டு சுத்தம் பண்ணி, நீரை ஓடை வழியாக வெளியேறச்செய்து, பிரகாரத்தை, பெருக்கி கூட்டி, அங்கும் நீர் விட்டு சுத்தம் செய்தனர். அடியேன் ஏதேதோ சின்ன சின்ன வேலைகளை செய்து கொண்டிருந்தேன். மண்ணை பெருக்கி சுத்தம் செய்யலாம் என்றால், ஒருவர் ஓடி வந்து, "நான் செய்கிறேன். நீங்கள் விலகுங்கள்" என்று கூறி தொடப்பத்தை வாங்கி கொண்டு விடுவார். சற்று பொறுமையாக அவரிடம் அந்த வேலையை கொடுத்த பின், கூட்டம் சற்று குறைந்தது போல் இருந்ததால் அர்ச்சகரை பார்த்து என்னென்ன ஏற்பாடுகள் செய்திருக்கிறோம். பூசை எப்படி அமையவேண்டும் என்று பேசிவிடலாம் என்று, உள்ளே சென்றால், பெருமாள் முன் உள்ள அறை முழுவதும், திட்டுத்திட்டாக மண்ணும், நீரும் கெட்டி கிடந்தது.

"என்ன சுவாமி இது. இந்த இடம் இப்படி ஆகிவிட்டது?" என்றவுடன்,

"என்ன செய்ய! புஷ்கரத்துக்கு வந்து நீராடிவிட்டு, அந்த நனைந்த வஸ்திரத்துடனேயே உள்ளே வந்து ஸ்வாமியை தரிசனம் செய்பவர்கள் கொண்டு வந்து போட்டது. உங்கள் வேலையினூடே, இங்கும் சுத்தம் பண்ணி தாருங்களேன்" என்றார்.

"என்ன இப்படி கேட்டுவிட்டீர்கள்! நானே, இங்கு சுத்தம் பண்ணலாமா? அதற்கு அனுமதி உண்டா? எனக்கேட்கலாம் என்றுதான் வந்தேன்" என்றேன்.

"அதற்கு என்ன. இங்கும் சுத்தம் செய்துவிடுங்கள்" என்றார்.

"நீங்கள் வீட்டுக்கு போகும் பொழுது, உள் சன்னதியை பூட்டி, இந்த அறையை திறந்து வைத்து விட்டு போய் வாருங்கள்! மாலை வரும் பொழுது சுத்தமாக இருக்கும்" என்றேன்.

அவரும் உடனேயே, வீட்டுக்கு கிளம்பினார். முதலில், அடியேனே, தனியாக அல்லது ஒருவரை துணைக்கு அழைத்து செய்து விடலாம் என்று தீர்மானித்தாலும், விஷயத்தை சொன்னதும் வேறு மூன்று அடியவர்கள் நாங்கள் செய்கிறோம் என்று முன் வந்தார்கள்.

சரி, நீங்களே செய்துவிடுங்கள். அத்தனை மண்ணும், நீரும் இங்கிருந்து வெளியேற்றி விடவேண்டும். மாலை அர்ச்சகர் வரும் பொழுது, இதுதான் நாள் காலை பார்த்த இடமா? என்று கேட்கும்படி இருக்க வேண்டும், என்றேன்.

உள்ளே வேலைக்கு சென்று தொடங்கியபின்தான், அந்த வேலையின் கடினம் புரிந்தது. தண்ணீரை, ஒற்றி எடுத்து விடலாம். மண், ஆற்று படுக்கையில் கடினமாக கிடப்பதுபோல் அமர்ந்திருந்தது. எத்தனை முறை கழுவியும் அசையவே இல்லை.

ஒரு பரந்த தடியை கொன்டு வந்து, மண்ணை கிளறி விட்டு மேலும் நீர் விட, அனைத்தும் வரத்தொடங்கியது.  இடம் மிக மிக சுத்தமானது.

இதற்குள் கோவில் வெளி பிரகாரத்தில் உழவாரப்பணி நிறைவு பெற்றது. மாலை வந்து பார்த்த அர்ச்சகர், அசந்து போனார்.

"என்ன! ரொம்ப நன்றாக மாற்றிவிட்டிர்களே! பிரகாரமும், பெருமாள் இருக்கும் இடமும் மிக மிக சுத்தமாகி பளபளக்கிறதே! பெருமாள் சார்பாக உங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

"பெருமாளே! உன் குழந்தைகள் எல்லோரும், எவ்வளவு சீராக வேலை பார்த்திருக்கிறார்கள். அவர்களை சீரும் சிறப்புமாக வாழ ஆசிர்வாதம் பண்ணு" என்று கூறிக்கொண்டே உள்ளே சென்றார்.

அடியேன் திரும்பி அடியவர்களை பார்த்து "இது போதுமா! இல்லை பெருமாள் இறங்கி வந்து "தேங்க்ஸ்"னு சொல்லி கை குடுக்கணுமா" என்று கேட்டேன்.

"இதுவே அதிகம். பெருமாளை அங்கிருந்து இறங்கி வர வேண்டாம் என்று கூறிவிடுங்கள்" என்றனர் கிண்டலாக.

அகத்தியர் அடியவர்களால், கோவில் பிரகாரம் மிக மிக சுத்தமாக்கப்பட்டது.

உழவரப்பணியை இதற்கு முன் பல கோவில்களில் செய்திருந்தாலும், இங்கு செய்தது மிக நிறைவை தந்தது. அது அங்கு வந்திருந்த அகத்தியர் அடியவர்களின் முயற்சி. அடியேனின் முயற்சி என்று ஒன்றுமே இல்லை. உழவாரப்பணி என்பதை ஒருவன்/ஒருவள் செய்தாலும், அந்த நபர், தனக்கென அதை செய்வதில்லை. அதன் பலன் பிறருக்குத்தான் செல்கிறது. செய்தவர் வேண்டுமானால், அமர்ந்து, நடப்பவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கலாம். உழவாரப்பணி என்பது தன்னைவிட்டுவிட்டு, பிறருக்காக செய்கிற விஷயம் என்பதால், சித்தர்கள் என்றுமே அதை ஆசிர்வதித்தனர். அந்த நிலையில் நிரந்தரமாக, மனசாலோ, உடலாலோ அர்ப்பண மனோபாவத்துடன் செய்கிற ஒருவன்/ஒருவள், சித்த மார்கத்தினுடே, இறைவனை அடைய தகுதி உள்ளவர்களாக மாறுகின்றனர்.

ஞாயிறன்று, உழவாரப்பணி செய்த, திரு ஸ்வாமிநாதன், அவர் மனைவி சித்ரா, மனோ, உமா (போரூர்), ராகேஷ், ராகினி, ரஞ்சித், சங்கர், ராஜேஷ், மற்றும் அடியேனின் குழுவில் இருந்த அகத்தியர் அடியவர்களுக்கும், அகத்தியர் சார்பாகவும், பெருமாள் சார்பாகவும், "சீரும் சிறப்புமாக வாழ்க்கை" அமைய வேண்டிக்கொள்கிறேன். வாழ்க்கை எல்லாம் நிறைந்ததாக இருக்கும் எனவும் கூறுகிறேன்.

வேலை எல்லாம் முடிந்து நாளை பூசைக்கு வருவதாக கூறி ஒரு சிலர் கிளம்ப, சற்று ஓய்வெடுக்கலாம் என கோவில் திண்ணையில் அமர்ந்து அடியவர்களுடன் பேசிக்கொண்டிருக்க திடீரென்று ஒரு எண்ணம் உதித்தது.

இன்று ஞாயிற்று கிழமை ஆயினும், இத்தனை சுத்தமாக இருக்கும் பிரகாரத்தில் சுற்று விளக்கு போட்டால் நன்றாக இருக்குமே. ஒரு அரை மணி நேரத்தில் அதற்கான பொருட்களை கொண்டு வந்துவிடலாம், என நண்பரிடம் கூற, அவரும் போய் வாங்கி வரலாம் என்றார்.

"ஒரு ஐந்து நிமிடம் நில். நான் வெற்றிலை போட்டுக்கொண்டு வருகிறேன்" எனக்கூறி வெற்றிலையை எடுக்க, யாரோ வந்து என்னாவோ கேள்வி கேட்டார்கள். அவர்களிடம் ஏதோ பேசிக்கொண்டிருக்கும் பொழுது, ஒரு பெண்மணி நின்று "வணக்கம்" என்று கூறினார்கள்.

"வாங்க! வணக்கம்! என்ன விஷயம்?" என்றேன் அமைதியாக.

"நான் சென்னையிலிருந்து வருகிறேன். நீங்கள் சொன்னபடி விளக்கு போடலாமென்றிருக்கிறேன்!" என்றாரே பார்க்கலாம்.

"அட! நான் ஐந்து நிமிடத்தில் கிளம்பி போய் விளக்கு போட சாமான்களை வாங்கி வரலாம் என்று, இப்பொழுதுதான் நினைத்தேன். அது பெருமாளுக்கு கேட்டுவிட்டது போலும். பாருங்க உங்களை பேச வைத்து "விளக்கேற்றுகிற பாக்கியத்தை வேறு ஒருவருக்கு கொடுத்துள்ளேன்" என சொல்லாமல் சொல்கிறார். நல்லது நடக்கட்டும். யார் விளக்கு போட்டால் என்ன. அவர் மனம் கனிய வேண்டும். அவ்வளவுதான்" எனக்கூறி விலகி நின்றேன்.

திடீரென, ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த சமையல்காரரின் நினைப்பு வர, அவரை நினைவுபடுத்த கூப்பிட்டால், கிடைக்கவில்லை. பத்து முறை கூப்பிட்டும் எடுக்காததால், மனது சற்று கடினமானது. அகத்தியர் பூசைக்கான தினத்தில், சமையல்காரரின் பங்கு மிக முக்கியமானது. அவர் வராமல் போய்விட்டால் எனன செய்வது? என்ற எண்ணம் உதிக்கவே, உடனேயே ஒரு உறவினரை கூப்பிட்டு அவரை தொடர்பு கொண்டு நிலை என்ன என தெரிந்து சொல்லுங்கள், என்றேன்.

அடுத்த பதினைந்தாவது நிமிடம், பதில் வந்தது. சமையல்காரருக்கு உடல் நிலை சரி இல்லை! அவர் மருத்துவமனையில் உள்ளார் என்று.

கடுப்பாகிவிட்டது, அடியேனுக்கு! நேராக திறந்திருந்த சன்னதிக்குள் சென்றேன். பெருமாள் சிரித்துக் கொண்டு நிற்பது போல் தோற்றம்.

சற்று நேரம் அவரையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு மனதுள் "நேற்று கிளம்பும் பொழுதே பிள்ளையாரப்பன் காட்டி கொடுத்துவிட்டார், தடங்கல்கள் இருக்கிறதென்று. நீர் வைத்த முதல் தடங்கல் இதுதான் என புரிகிறது. இந்த மாலை வேளையில், இனி வேறு ஒரு சமையல்காரரை தேட முடியாது. நீ என்ன செய்வாய் எனத்தெரியாது. நாளைக்கு காலையில், அந்த சமையல்காரர் உடல் நிலை சரியாகி, இங்கிருக்க வேண்டும். இல்லையெனில், அடியேன் சமையல் வேலைக்கு இறங்க வேண்டிவரும். அது தேவையான்னு யோசிச்சுக்கோ" என சொல்லிவிட்டு வெளியே வரவும், மடப்பள்ளி வரை சென்றுவிட்டு அர்ச்சகர் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

அவரிடம் "சமையல்காரருக்கு உடம்பு சரியில்லை. ஆனா அவர் நாளைக்கு பெருமாளுக்கு நிவேதனம் செய்ய இங்கிருக்க வேண்டும். நீங்களும் பெருமாளிடம் கூறிவிடுங்கள்" எனக்கூறிவிட்டு பதிலை எதிர் பார்க்காமல், ஒரு சில விஷயங்களை வாங்க வேண்டியிருந்ததால், வண்டியில் திருநெல்வேலியை நோக்கி கிளம்பினோம். 

சித்தன் அருள்.................. தொடரும்!

9 comments:


 1. 15 /11/18
  சிங்கார திருத்தாண்டவம் புரியும் சிவ சிவா போற்றி

  சீர்மிகு உலகை படைத்த பரனே போற்றி

  உலகையாளும் என் அப்பன் ஈசனே போற்றி

  உமையாள் பாதம் தொழுது அகத்தியன் யானே என் தமிழுக்கு அருள்தனை உரைப்பேன் கேளடா !!!!

  இயற்கை சீற்றமது இன்னலும் தந்து விடுமோ என்று வீண் கவலை ஏதும் கொள்ளாதே மான் மகனே

  ஆங்காங்கே தமிழகத்தில் இயற்கை சீற்றமது நடக்குமப்பா

  யாம் அசூர ரூபமாக நவகோடி சித்தர்களின் கடல் பகுதியில் தோன்றி அந்த இயற்கை சீற்றமதை யாம் காப்போம்.

  தமிழகம் முதற்கொண்டு புதுவை சில இடங்களிலும் கடலூர் மற்றும் என் சிஷ்யனவன் கோரக்கன் இருக்கும் நாகப்பட்டினத்திலும் சிறு இடர்பாடுகள் இருக்குமே, படுமே

  இடர் நீக்கி வாழ வைக்க யாம் உரைக்கிறோம் பரிகாரம் அதை கவனமுடன் கேளாய் என் மகனே

  அவரவர் வீட்டிலே சரவணபவா என்னும் வட்ட கோலமிட்டு,

  வட்ட கோலம் தனிலே, மாவிலை ஐந்தை அங்கும் இங்கும் வைத்து,

  ஒவ்வொரு நல்லெண்ணெய் அகல் தன்னை ஏற்றி

  சரவணபவா என்னும் ப்ரணய மந்திரத்தை 31 முறை உச்சரித்து,

  நமசிவாய என்னும் ப்ரணய மந்திரத்தை 51 முறை உச்சரித்து,

  அகத்தீஸ்வரா என்னும் நாமமதை 16 முறை உச்சரித்து,

  நவ கோடி சித்தர்களே வருக அருள் தருக, அடியேன் உங்கள் திருப்பாதம் தொழுதேன் என்ற மந்திரத்தை உச்சரித்து

  அகல் தன்னை ஏற்றி

  மண்டியிட்டு தொழுதாலே

  இயற்கை சீற்றமது நிற்குமப்பா,

  இன்னலை யாம் குறைப்போம் மனம் தளராதே தூயவனே

  இயற்கை சீற்றமது அரங்கேறுமே

  சீற்றத்திலே இருந்து பலம் குறையவே சித்தர்களாகிய நாங்களே சீருடனே வந்து காப்போம்

  மனம் தளர வேண்டாம். எம் மக்கள்,

  தமிழ் வாழும்

  என் அப்பன் வேல் கொண்டு வினை தீர்ப்பான் வேலவனும்,

  ஆதி சக்தியின் அருளால் அன்னை காப்பாள்,

  அகிலம் காக்கும் என் அப்பன் காப்பான்

  வேலுண்டு வினையில்லை அய்யா

  வினைகள் அகலும் அய்யா

  மான் மகனே யாம் இருக்கிறோம் மக்களை காக்க

  மனம் தளர வேண்டாம்

  குருவடி சரணம் திருவடி சரணம்

  முற்றே முற்றே முற்றே


  தனிப்பெருங் கருணையுடன் உலகைக் காக்கும் அகத்தீசா போற்றி போற்றி ...

  ReplyDelete
  Replies
  1. ஓம் அகத்தியர் அய்யன் போற்றி போற்றி போற்றி

   Delete
 2. தங்களின் ஒவ்வொரு செயலும் இறைவன் செய்து முடிப்பதாகவே செய்கிறீர்கள்...அது தான் ரகசியம் போலும்... ம்ம்... அந்த உணர்வு எங்களுக்கும் கிடைக்கப் பெற ஆசீர்வதியுங்கள் ஐயா

  ReplyDelete
 3. Om Agathesaya Nama!

  Engalai Vali naduthum Perumane, um thiruvadi saranam Ayya

  ReplyDelete
 4. Om Agatheesaya Namaha !!!
  Om Agatheesaya Namaha !!!
  Om Agatheesaya Namaha !!!

  ReplyDelete
 5. இந்த பதிவை படிக்கும் பொழுது அடியேனால் உழவாரப் பணியில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் தானும் அங்கு இருந்ததைப் போன்ற உணர்வு எற்பட்டது. அருமை! எனது நண்பர் Gnd Dhana அவர்கள் நேரில் வர பல தடைகள் ஏற்பட்டதால் அவர் அடுத்த ஆண்டு எந்த த்டையுமின்றி வர குருநாதர் அருள் புரிய வேண்டும்.

  ReplyDelete
 6. Dear Sir,
  I have received the Prasadam yesterday. Thank You Very Much Sir.
  With lots of Namaskarams.
  P. Kalidoss

  ReplyDelete
 7. Appa Thantaye ungaloda arulum arugamaiyum engali Vali nadathatum.kappatatum.nin padame pottri.

  ReplyDelete