​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 1 November 2018

சித்தன் அருள் - 776 - கோடகநல்லூர் - அந்தநாள்>>இந்த வருட நிகழ்ச்சிகள் - 2

[ ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!]

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

எப்பொழுதும் போல, வியாழக்கிழமை அதிகாலையிலேயே தொகுப்பை வழங்குவது போல் இன்றைய சூழ்நிலை அமையவில்லை. காரணம், நேற்று அஷ்டமி. பைரவர் பூஜையில் கலந்து கொண்டு வீடு வந்து சேர்ந்ததும், அதிகாலை மணி 6.15 ஆகிவிட்டது. எதுவுமே தட்டச்சு செய்யவில்லை. ஆதலால், வியாழக்கிழமையாக இருந்தும், இன்றைய தினம் மாலையில் தட்டச்சு செய்யலாம் என்று தீர்மானித்து, இந்த தொகுப்பை வழங்குகிறேன்.

தொடரும் முன், ஒரு சிறு தகவல்.

நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ள கோவிலில், அகத்தியப் பெருமானும், லோபாமுத்திரை தாயும் ஒரு சேர இருந்து, அனைவருக்கும் அருள் பாலிக்கிறார்கள். அந்த கோவிலில், 10/11/2018 அன்று, அகத்தியருக்கும் லோபாமுத்திரை தாய்க்கும், திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் அங்கு சென்று குருநாதரின், லோபாமுத்திரை தாயின் அருளை பெறலாம். இந்த நடக்கப்போகிற நிகழ்ச்சிக்கும், நடந்து முடிந்த கோடகநல்லூர் அந்தநாள், இந்தவருடம் நிகழ்ச்சிக்கும் ஒரு விதத்தில் தொடர்பு உள்ளது. அதை விவரிக்கிறேன்.  

அடியேன் ஒன்று நினைக்க, அந்த நினைப்பை, அகத்தியப் பெருமானும், ஓதியப்பரும் வேறு விதமாக திருப்பி விடுவார்கள். நாம் அந்த ஓட்டத்தில் இழுத்து செல்லப்படுவோம். இது அடியேனுக்கு ஏற்பட்ட பல அனுபவங்களில் ஒன்று. எப்படியாயினும், அவர்களுக்கு அடியேனாக இருந்து, அவர்கள் இடும் கட்டளைகளை நிறைவேற்றுவதில் கிடைக்கும் இன்பம் அலாதிதான்.

கோடகநல்லூர் அந்தநாள், இந்தவருடம் 2018க்கு இரண்டு மாதங்களுக்கு முன், ஒரு நாள் அமைதியாக இருந்து, கோடகநல்லூர் பூசைக்கு என்னென்ன ஏற்பாடுகள் செய்யவேண்டும், என யோசித்து, குறிப்பெடுக்க, அன்று அங்கு வரும் அகத்தியர் அடியவர்களுக்கு, ஏதேனும் ஒரு அரிய பரிசை வழங்க வேண்டும், என தோன்றியது. என்ன வழங்குவது என தெரியாமல், குழம்பி அமர்ந்திருக்க, திடீரென முருகர் அடியேனுக்கு கிரௌஞ்சகிரியில் தந்த, அந்த அற்புத பரிசு, நினைவுக்கு வந்தது. பின்னர் எதை பற்றியும் யோசிக்காமல், ஓதியப்பரிடம் (முருகரை அடியேன் அப்படித்தான் அழைப்பேன்), விண்ணப்பித்தேன்.

"ஓதியப்பா! இந்தவருடம் கோடகநல்லூரில், அகத்தியப்பெருமான், பெருமாளுக்கு நடத்தப்போகும் பூஜையில் கலந்து கொள்ள வரும் அகத்தியர் அடியவர்கள் அனைவருக்கும், உன் பிரசாதத்தை அளிக்க விரும்புகிறேன். நீ இருக்கும் இடமோ, அடியேன் வசிக்கும் இடத்திலிருந்து சுமார் 1500 கி.மீ தூரத்தில் உள்ளது. அடியேனால், அவ்வளவு தூரம் பயணம் செய்து அங்கு வந்து வாங்கி வர முடியாது. நீயே பார்த்து யாரேனும் ஒருவரை ஏற்பாடு செய்து, அங்கு வரவழைத்து, உன் பிரசாதத்தை கொடுத்துவிடேன்!" என்றேன். பின்னர் பொறுமையாக காத்திருந்தேன். நிச்சயம் ஓதியப்பர் அடியேன் வேண்டுதலுக்கு தலை சாய்ப்பார், என்ற நம்பிக்கை உள்ளே வலுவாக இருந்தது. பின்னர் இதை பற்றி மறந்து விட்டேன்.

சரி! கிரௌஞ்சகிரியில் அப்படியென்ன விசேஷம் இருக்கிறது?

கிரௌஞ்சன் என்கிற அரக்கனை அழித்து, அந்த மலையில் முருகர் குடி கொண்டார். முருகன் இப்படி ஒவ்வொரு அரக்கர்களையும் வென்று, அனைத்து இடங்களிலும் இறை சக்தியை விதைத்து சென்று கொண்டிருப்பதை கண்டு, முருகனுக்கு மனையாளாக, தெய்வயானையை தேர்நதெடுத்து, முருகனின் சம்மதத்தை கேட்க வேண்டி, கிரௌஞ்சகிரி ஏகினார். ஆனால் முருகரோ, "தன்னுள் இருக்கும், ஞானம், ஓரளவுக்கேனும், இப்பூவுலக மனிதர்களுக்கு கிடைக்க என்ன செய்யலாம்" என்று யோசித்துக் கொண்டிருந்த நேரம். இப்படிப்பட்ட நேரத்தில், பார்வதி தேவியானவள் முருகர் இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தார். இதுதான் சமயம் என தீர்மானித்து முருகர் ஒரு நாடகத்தை அரங்கேற்ற முடிவு செய்தார்.

ஒருவருக்கொருவர் நலத்தை விசாரித்தபின், முருகரிடம், அவருக்கான மணப்பெண்ணாக தெய்வயானையை தான் தெரிவு செய்திருப்பதாக அறிவித்தார். கூடவே, இதுவரை யுத்தம் செய்ததெல்லாம் போதும், இப்படியே சென்றுகொண்டிருந்தால் சரியாகாது என சிவபெருமானும் கூறியதாக தெரிவித்தார்.

அமைதியாக பார்வதி தேவி கூறுவதை கேட்டுக்கொண்டிருந்த முருகர், ஒரே ஒரு கேள்வியை கேட்டார்.

"எனக்கு திருமணம் முடிக்க, நினைத்திருக்கும் அந்த பெண் எப்படி இருப்பாள்?" என்றார்.

"என்னைப்போல் இருப்பாள்" என சட்டென பார்வதி தேவி கூறினாள்.

"உன்னைப்போல் இருப்பாள் என்றால், இந்த கல்யாணம் எனக்கு வேண்டாம். ஏனெனில், அவளை மனைவியாக பார்க்கத்தோன்றாது, அதற்கு பதிலாக தாயாக, உன்னை பார்ப்பது போல் பார்க்கத் தோன்றும். ஆகவே அனைத்து ஏற்பாடுகளையும் நிறுத்திவிடுங்கள் தாயே!" எனக்கூறி, அங்கிருந்து விலகத்தொடங்கினார்.

முருகரை பின் தொடர்ந்து வந்த பார்வதி தேவியானவள், "அதெப்படி, ஒரு பெண் என்னைப்போல் இருக்கிறாள் என்பதற்காக நீ மறுதலிக்கலாம்? என்னை விலக்கி வைத்து உன்னால் வாழ முடியுமா? ஏன் உன் உடல் வளர்ச்சிக்கு காரணமே உனக்குள்ளே ஓடும் தாய்ப்பால், நான் கொடுத்தது தானே! எங்கே அதை விலக்கிவை பார்க்கலாம்? சக்தியாக நான் இன்றி, நீ ஏது? எனப் பார்க்கலாம்" என மிகுந்த கோபத்துடன் கூறினாள்.

பொறுமையாக இருந்த முருகர், கிரௌஞ்சகிரியில் ஒரு சமதளமான இடத்துக்கு பார்வதி தேவியை அழைத்துச் சென்று, தன் உடலுக்குள் இருந்த, தன் தாயிடம் குடித்த அத்தனை பாலையும் "கக்கிவிட்டார்". அத்தனை பாலும் சேர்ந்து, ஒரு மலையாக உருவெடுத்தது.    இந்தப் பால் பிரசாதத்தை, கோடகநல்லூர் வந்த அகத்தியர் அடியவர்கள், அனைவருக்கும் "முருகர் பிரசாதம்" என்று கூறி கொடுக்க வைத்தார், ஓதியப்பரும், அகத்தியப் பெருமானும். இப்படி உயர்ந்த அரிய பரிசை எப்படியேனும் கைவரப்பெற்று உங்கள் அனைவருக்கும் தரவேண்டும் என்பதே அடியேனின் பிரார்த்தனையாக இருந்தது. அது நடந்தது.

ஏதோ ஒரு முருகரின், கோவில் பிரசாதம் என அன்று நினைத்திருப்பீர்கள். ஆனால் இது சக்தியின் அம்சமும், ஓதியப்பரின் ஞானமும் ஒன்று சேர்ந்த உயரிய பொருள் என எத்தனை பேர் உணர்ந்தார்கள் என தெரியவில்லை.

வடசேரி அகத்தியர்கோவில் நிர்வாகியிடம், இந்த பரிசை கொடுத்து, இதைப்பற்றி கூறியவுடன், அவரே கூறினார்,

"அய்யா! இது இன்னும் இருந்தால் கொடுங்களேன். அகத்தியர் லோபாமுத்திரா கல்யாணத்துக்கு, இங்குள்ள ஒவ்வொருவரும் சீர் கொண்டு வருவார்கள்.  நாங்கள் மாப்பிள்ளை வீட்டு மரியாதையாக எதிர் சீர் செய்ய வேண்டும். நீங்கள் கொடுத்தால், இதையே ஊர் மக்களுக்கு கொடுக்கிறோம்" என்றார்.

காலபைரவர் பூசைக்காக நேற்று சென்ற பொழுது, ஒரு பை நிறைய பால் கட்டியை அவரிடம் (நிர்வாகியிடம்) சேர்த்துவிட்டு வந்துள்ளேன்.

10/11/2018 அன்று வடசேரியில் உள்ள அகத்தியர் கோவிலுக்கு சென்றால், கிடைக்காதவர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

அந்த பால்கட்டியிலிருந்து ஒரு சிறு அளவு எடுத்து, நாக்கில் வைத்து சற்று நேரம் நெருடினால் முதலில் "விபூதி" வாசனை வரும். மேலும் சற்று நேரம் நெருட "பால்" வாசனை வரும்! இதை விட மிகச்சிறந்த பரிசும், சிறந்த அனுபவமும், இவ்வுலகில் அடியேன் உங்களுக்கு கொடுப்பதற்கில்லை.

இதை பெற முடியாமல் போனவர்களுக்கு, எப்படி கொண்டு சேர்ப்பது என்ற யோசனையும் உள்ளது.

சரி! இது (பால் கட்டி) அடியேன் கைக்கு எப்படி வந்து சேர்ந்தது, என்பதை, அடுத்த தொகுப்பில் கூறுகிறேன்.

சித்தன் அருள்................. தொடரும்!

8 comments:

  1. அய்யா, மிக உயர்ந்த பிரசாதம் கிடைக்கும் பாக்கியம் பெற்றோம்.. இறை அருள் பெற வழி காட்டிய உங்களுக்கு நன்றிகள் கோடி...

    ReplyDelete
  2. ஓம் அகத்தியர் பாதகமழங்கள் போற்றி போற்றி போற்றி

    ReplyDelete
  3. ஐயா மிகவும் வருத்தமாக இருக்கிறது என்னால் எங்கேயும் செல்ல முடியாத சூழ்நிலை...



    ஓம் அருள்மிகு ஓதியப்பர் போற்றி போற்றி போற்றி

    ReplyDelete
  4. அந்த பால்கட்டியிலிருந்து ஒரு சிறு அளவு எடுத்து, நாக்கில் வைத்து சற்று நேரம் நெருடினால் முதலில் "விபூதி" வாசனை வரும். மேலும் சற்று நேரம் நெருட "பால்" வாசனை வரும்!

    என்று கிடைக்குமோ இந்த அருள்!!! எல்லாம் ஏக இறைவனின் அருள்

    ReplyDelete
  5. ஐயா
    என்னைப் போல நேரில் வந்து பெற முடியாதவர்கள் பிரசாதம் பெற வழி காட்டுங்கள்...

    ReplyDelete
  6. என்னைப் போல நேரில் வராமல் பெற முடியாதவர்கள் பிரசாதம் பெற வழி காட்டுங்கள்...

    ReplyDelete
  7. ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி!!.

    எங்களுக்கும் இந்த அருட்பிரசாதம் கிடைக்க அருள் செய்யுங்கள் தாயே.

    ReplyDelete
  8. மிகவும் அருமை நாகர் கோவில் செல்ல இறையருளால் பெற முடிந்தது பல அடியவர்களுடன் பகிர்ந்தோம்

    ReplyDelete