​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 19 July 2018

சித்தன் அருள் - 762 - சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்!


[அனைத்து அகத்தியர் அடியவர்களுக்கும் வணக்கம். குருநாதனை இழந்த நேரத்தில் ஆறுதலாக வார்த்தைகளை கூறி மனதை ஒன்று படுத்த உதவியமைக்கு கரம் கூப்பி, சிரம் தாழ்த்தி அடியேனுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் பிரிவால் வந்த வெறுமை மட்டுமல்ல, பிறகு வந்த சடங்குகளில் பங்கு கொண்டு, கடமைகளை நிறைவேற்ற வேண்டி வந்ததால், நேரமின்மை ஏற்பட்டது. அவரது ஆத்மாவை வழிஅனுப்புகிற 10வது நாள் அன்று நமஸ்காரம் செய்து, லோகம் க்ஷேமமாக இருக்க எப்போதும் போல் அருகில் இருந்து வழி நடத்துங்கள், என மட்டும் வேண்டிக்கொண்டேன். அடியேனின் பிரார்த்தனை நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்று நம்புகிறேன். இனி "எளிய அறிவுரைகளுக்கு" செல்வோம்.]

"இந்த கலந்துரையாடலை, இங்கே நிறுத்திக்கொள்வோம். மீண்டும் நாளை தொடரலாம். ரொம்பவே இருட்டிவிட்டது. உனக்கான எளிய உணவு வழங்கப்படும். உண்டுவிட்டு, சற்று சயனித்திரு!" என்று கூறி நிறுத்தினார்.

அதுவே, அவர்களுடனேயே இரவு தங்குவதற்கான, அனுமதியாக எடுத்துக்கொண்டு, அவர்களுடன் அமர்ந்து உணவை உண்ணலாம் என்றால், ஆச்சரியம் காத்திருந்தது. அடியேனுக்கு மட்டும் உணவு பரிமாறப்பட்டது. அவர்கள், ஒரு டீயை பருகி முடித்துக் கொண்டனர். ஏன் இப்படி? என்ற கேள்வியை எழுப்ப மனம் வரவில்லை. எதோ ஒரு உணவு முறையை கடைப்பிடித்து, தவத்தில் ஆழ்பவர்கள் இருக்கிறார்கள். எது அவர்களுக்கு நல்லது என்று தெரியும், என்பதால், வேறு எதுவும் கேட்காமல், அமைதியாக எனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தலை சாய்த்தேன். மனதுள், அன்றைய தினம் நடந்த கலந்துரையாடலின் சத்தான விஷயங்களை அசைபோட்டு, அடுக்கத் தொடங்கினேன். சற்று நேரத்தில் உறங்கிப்போனேன்.

காலை கண் விழித்த பொழுது மணி 7 ஆகிவிட்டது. மிக அமைதியான உறக்கம் கிடைத்தது என உடல் உரைத்தது. எங்கே அனைவரும் என்று வெளியே வந்து பார்க்க, அனைவரும் வாசி யோகத்தின் பயிற்சியில் இருந்தனர். பெரியவர் மட்டும் த்யானத்தில் அமர்ந்திருந்தார்.

மெதுவாக அருகில் சென்று நிற்க, கண் திறந்தார்.

"நமஸ்காரம்" என்றேன்.

"திருச்சிற்றம்பலம்" என்றார்.

"நீ போய் காலை கடன் கழித்து, குளித்துவிட்டு வா!" என்று வழி காட்டினார்.

கிணற்று நீர்! அப்படி சில்லென்று இருந்தது. பாதத்தில் தொடங்கி தலை வரை விட்டதும், மிகுந்த புத்துணர்வு!

குளித்து முடித்து அவர் முன் வந்ததும், ஒரு சிறு துணிப் பையை தந்து, "இதில் விபூதி உள்ளது. நெற்றிக்கு பூசிக்கொள்ளும் பழக்கம் இருந்தால் எடுத்துக்கொள்!" என்றார்.

சிறிது விபூதியை எடுத்து இடது கையில் வைத்துக் கொண்டு, பையை அவரிடம் கொடுத்துவிட்டு, மறுபடியும் கிணற்றின்கரை வந்து, நீர் விட்டு குழைத்து, நெற்றியிலும், உடலிலும் பூசிக்கொண்டேன். மிகுந்த மணம் பரவியது. இது ஏதோ ஒரு கோவிலில் ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்த விபூதியாகத்தான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.

"எம் குருநாதன் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்த விபூதி அது! உனக்கும் அவர் அருள் இருக்கிறது என்று பொருள்!" என்று கூறி, "அதெப்படி, விபூதியை தந்ததும், நீரில் குழைத்து பூசிக்கொள்ளத்தோன்றியது?" என்றார்.

"அய்யா! முதலிலிருந்தே, குளித்தவுடன், நெற்றிக்கு இட்டுக்கொள்வதென்றால், நீரில் குழைத்துத்தான் பழக்கம்! பலரும், அப்படியே இட்டுக்கொள்வதை பார்த்திருக்கிறேன். நீரில் கரைத்து இட்டுக்கொண்டால், நீண்ட நேரம் அழியாமல் இருக்கும் என்று தோன்றுவது உண்டு" என்றேன்.

மற்ற மூவரும், இதற்குள் பயிற்சியை முடித்து வர, அதில் இளையவரை நோக்கி பெரியவர் "போய்வா" என்பது போல் தலையசைத்தார். அவரும் எங்கோ இறங்கிப்போனார்.

"பொதுவாக, சித்த மார்கத்தில் நடந்து செல்பவர்கள், திருநீறை குழைத்துத்தான் இட்டுக் கொள்வார்கள். உனக்கு இது யார் வழியினும் தீக்ஷையாக கிடைத்ததோ, எனத் தெரிந்து கொள்ளத்தான் கேட்டேன்" என்றார்.

"தினமும் நெற்றிக்கு பூசிக்கொள்ளும் பொழுது, மனதுள் ஓம் நமச்சிவாயா! என்றுரைத்து, நான் இதுவாகத்தான் போகிறேன், என் அகந்தையை அழித்துவிடு, உள்ளே நீ குடியிரு! உணரவை!" என்று வேண்டிக்கொள்" என்றார்.

 "மிக்க நன்றிங்க! தினமும் செய்கிறேன்!" என்றேன்.

"சற்று நேரம் இங்கேயே இரு. ஒரு நாழிகைக்குள் வருகிறேன்" என்று கூறி மற்ற இருவரையும் அழைத்துக் கொண்டு எங்கோ வெளியில் சென்றார்.

அமைதியாக இருந்த சூழ்நிலையை மனம் உற்று நோக்கத் தொடங்கியது! நகரத்தின் இரைச்சலான சப்தத்தில் வாழ்ந்துவரும் எனக்கு, அந்த இடத்தின் சூழ்நிலை, சன்னமான குளிர்ந்த காற்று, சுற்றிலும் இருக்கும் காடு போன்ற அமைப்பு, பறவைகளின் சப்தம்,  தூரத்தில் புழுதியை கிளப்பிக்கொண்டு செல்லும் மாட்டு மந்தைகள், நேர் எதிரே உயர்ந்து வளர்ந்திருந்த மலை, இவை அனைத்தும் ஓர் அமைதியை உள்ளே நுழைத்தது. எதுவும் யோசிக்கவோ, பேசவோ தோன்றவில்லை. இயற்கையின் இயல்பே இதுதான் என்றால், மலையை தவிர மற்ற அனைத்தும் நான் வசிக்கும் இடத்தருகில் இருந்தும், ஏன் இந்த அமைதி வருவதில்லை? இரைச்சலான சூழ்நிலைதான் காரணமா?" என்று யோசித்தபின், சிறிது நேரம் த்யானத்தில் அமர்ந்தேன். எங்கோ இழுத்துச் சென்றது. நினைவு மழுங்கிப்போனது.

யாரோ தூரத்திலிருந்து "நமச்சிவாய" என்று கூப்பிடுவதை கேட்டு உணர்வு வந்து விழித்தெழ, நான்கு பேரும், என் முன்னே அமர்ந்திருந்தனர்.

"என்ன! த்யானத்துல ரொம்ப தூரம் போயிட்டேங்க போல? ஒரு நாழிகை என்றுவிட்டு, 45 நிமிடமாயிற்று நாங்கள் வர. மேலும் 15 நிமிடங்கள் பொறுத்து பார்த்துவிட்டுத்தான், உன்னை கலைத்தோம்!" என்றார்.

"எப்படி இருந்தது, த்யான சூழ்நிலை?" என்றார்.

"மிக அமைதியாக இருந்தது" என்றேன்.

"ஏன் நகரத்தில் இது அமைவதில்லை என்று தோன்றியிருக்குமே!" என்று அவரே கொக்கி போட்டார்.

"ஆமாம்!"

"மனித உடலில் இருக்கும் ஒரு ஆத்மா உணர்ந்தால்தான் உண்மை புரியும். இயற்கை என்று ஒன்று இருப்பினும், அதை இறைவனாகவே பாவித்து, தினமும் சில நேரம் த்யானத்தில், நல்ல எண்ணங்களை கதிர்வீச்சாக மனிதன் கொடுத்தால் தான், அதை வாங்கி பன் மடங்காக்கி, கேட்பவருக்கெல்லாம் அது கொடுக்கும். அதை உணர்ந்து வாங்கிக்கொள்கிறவன், தன்னையும், தன் சுற்றுப்புறத்தையும், தன் அருகே இருக்கும் அனைத்து ஆத்மாக்களையும் சுத்தம் செய்கிறான். இறைவனை அடைய நாங்கள் செய்கிற பயிற்சியாகட்டும், த்யானமாகட்டும், அனைத்தையும் இயற்கைக்கே தானம் செய்துவிடுகிறோம். எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. அனைவருக்கும் போய் சேரவேண்டும் என பிரார்தித்துக் கொள்வோம். நகரத்தில் வாழும் மனிதருக்கு, வாழ்க்கையின் இரைச்சல் நிறைந்த அவசரத்துக்கு, இந்த உண்மையெல்லாம் உணர்வதே கடினம். பின்னர் எப்படி தியானம் செய்ய மனம் வரும். இந்த சூழ்நிலையை வித்யாசமாக, மனதுக்கு இதமாக நீ உணரக்காரணமே, இயற்கைதான். ஒவ்வொரு ஆத்மாவும், தான் அமைதியாக இருக்க வேண்டும் என்று விரும்புவது இயற்கை. ஆனால், தன் அமைதியை, எங்கிருந்து எடுத்துக் கொள்வது, என்று தீர்மானிப்பதில்தான், மிகப் பெரிய தவறு நடக்கிறது. அதில் மாட்டிக்கொள்வது, பிற ஆத்மாக்களும், பஞ்ச பூதங்களும். இவைகளை தோண்டித் துருவுவதை விட்டு, அவனவன் உள்ளே சென்று தோண்டித்துருவினால், உள்வெளிச்சம் கிடைக்குமே. நிறைய உண்மைகளை புரிந்து கொள்ளலாமே!" என்றார்.

"உண்மைதான்! ஆனால், மனிதன் வாழவேண்டிய வாழ்க்கைக்கான, தேடலில், இதை மறந்து விடுகிறான் போலும், எனக் கொள்ளலாமே" என்று கூறவும்,

"தேடுகிற பொருள் என்ன என்பதை அவன் தானே தேர்ந்தெடுக்கிறான். தேடுவது அனைத்தும், பௌதீக பொருளாக இருப்பதால், அவன் இந்த அளவுக்கு தன்னை வருத்திக்கொள்ள வைக்கிறது.  பசிக்கு இட்லி  சாப்பிட்டு பசியடக்குபவனும் இங்குதான் இருக்கிறான். காற்றை மட்டும் உண்டு உயிர் வாழ்கிற தவசியும் இந்த பூமியில்தான் இருக்கிறான். இதில் இவர்கள் இருவருக்கும் உள்ள ஒரு மிகப் பெரிய வித்யாசம் என்னவென்றால், உணவு உண்டு வாழ்பவன், நிறைய பாப கர்மாக்களை சேர்த்துக் கொள்கிறான். தவசி, காற்றை உண்டு, வெறும் நீரை குடித்து இயற்கையோடு வாழ்ந்து, இயற்கையை சுத்தம் செய்கிறான்" என்றார்.

"இது என்ன! புது தகவலாக இருக்கிறதே! உயிர் வாழ இயற்கை கொடுக்கிற உணவை உண்கிறவன் பாபகர்மாவை சேர்த்துக் கொள்கிறானா? ஆச்சரியமாக இருக்கிறதே! சற்று விளக்குங்களேன்" என்றேன்.

"சொல்கிறேன்! நிதானமாக கேட்டு புரிந்து கொள்!" என்றார்.

சித்தன் அருள்............. தொடரும்!

7 comments:

 1. குரு வாழ்க! குருவே துணை! !

  ReplyDelete
 2. ஓம் நமசிவாய

  ReplyDelete
 3. ஓம் நமசிவாய

  ReplyDelete
 4. ஓம் நமசிவாய

  ReplyDelete
 5. குருவடி சரணம்!

  வணக்கம் அய்யா! உலக நன்மைக்காக தங்களின் நலனுக்கு உங்கள் குருவின் அனுக்கிரகம் கிடைக்கும் அய்யா! அனைத்தையும் தானம் செய்வது சிறப்பு அய்யா! என்னுள் கடந்த ஒரு வாரமாக இதை நான் செய்து கொண்டிருக்கிறேன். கடந்த வாரம் முதல் நான் செய்கிறேன்,, இந்த வாரம் நீங்கள் செய் என சொல்றீங்க! இதுவே குருவின் கருணை! குருவடி சரண் சரணம்

  ReplyDelete
 6. ஓம் அகத்தீசாய நம

  ReplyDelete
 7. பிரதிபலன் எதிர்பார்க்காமல் இயற்கை உணவு உண்டால் பாவம் வராதே! அல்லவா?

  ReplyDelete