"முகம் மறக்க வேண்டும்" அட! நல்ல வார்த்தைகளாக இருக்கிறதே, இதுவரை கேள்விப்பட்டதே இல்லையே! அதை சற்று தெளிவு படுத்துங்களேன்" என்றேன்.
தமிழில் அனைத்துமே நல்ல வார்த்தைகளாகத்தான் இருக்கிறது. அவற்றை எப்படி தொடுத்து மாலை ஆக்குகிறோம் என்பதில்தான், மனிதன் தன் கவனத்தை செலுத்தவேண்டும். எளிமையாக, அழகாக வார்த்தைகளை பேசினாலே, இறை சாந்நித்தியம் எங்கும் நிறைந்து நிற்கும். அதை பற்றி பின்னர் உரைக்கிறேன்.
"முகம் மறக்க வேண்டும்" என்பது ஒரு தவம். அதை எத்தனை எளிதாக விளக்க முடியுமோ, அப்படி கூறுகிறேன். முதலில், என் கேள்விக்கு பதில் கூறு. ஒரு மனிதனுக்கு எத்தனை முகம் இருக்கிறது? என்று நிறுத்தினார்.
மனிதனுக்கு ஒரு முகம் தானே இருக்கும், என்றேன்.
முகம் என்பது பௌதீகமாக பார்த்தால், மூக்கு, வாய், கன்னம், கண்கள், இரு செவி, நெற்றி, போன்றவைகள் சேர்ந்து இருக்குமிடம் என்று கூறலாம். ஆனால் ஒரு மனிதனுக்கு, நிறைய முகங்கள் இருக்கிறது. அவன் மனது, எண்ணங்கள், அவன் இருக்கும் நிலை, இவைகள் பல முகங்களை கொடுக்கும். இவற்றின் உந்துதலால், எதிரொலிக்கும் விதமாக அவன் தன் முகத்தை அவ்வப்போது மாற்றிக்கொள்கிறான். உதாரணமாக, அவன் சேய் "அப்பா" என்றழைத்தால், தகப்பனாக, மனைவி அழைத்தால், கணவனாக, தாய் தந்தை அழைத்தால் மகனாக, சகோதர, சகோதரிகள் அழைத்தால், சகோதரனாக, இன்னும் மாமனாக, சித்தப்பானாக, தாத்தாவாக, இப்படி எத்தனையோ முகங்களை அவன் பல சந்தர்ப்பங்களில் அணிய வேண்டி உள்ளது.
"முகம் மறப்பதென்பது" இந்த முகங்களை மட்டும் மறக்க வேண்டுமென்பதல்ல. அனைத்து வித, அவன் அணிந்து கொள்கிற முகங்களை மறக்க வேண்டும். முகமறியாதவர்கள் முன் கூட ஒரு முகத்தை (பாவத்தை) ஒருவன் அணிகிறான். அதையும் மறக்க வேண்டும். சுருங்கக்கூறின், அனைத்து ஆத்மாக்களையும் ஒரே பாவத்தில் பார்க்க வேண்டும் என்பதே இதன் தாத்பரியம். ஒருவனுக்கு உள்ள அனைத்து உணர்வுகளும், அனைத்திற்கும் உண்டு என்பதை உணர்ந்து, அதன் கூட, அனைத்தும் இறை தீர்மானத்தால் நடக்கிறது என்று உணர்ந்து, அமைதி காத்து, தேவையான பொழுது, யாரேனும் கேட்டால் நல்வழி காட்டி, நல்லதை செய்து, பலன் எதிர்பார்க்காமல், போய்க்கொண்டே இருக்க வேண்டும். அனைத்து ஆத்மாக்களுக்காகவும், ஒருவன் வாழவேண்டும். வெற்றி, தோல்வி, லாபம், இழப்பு போன்ற உணர்வுகளுக்கு ஆட்படாமல், நடப்பதை அதன் படியே ஏற்றுக்கொண்டு, முன்னேறவேண்டும். இப்படிப் பட்ட அனைத்து சூழ்நிலைகளிலும், தன்னை பரிசோதித்துக் கொண்டு, அதையே ஒரு தவமாக ஏற்று செய்பவனுக்கு, மனம் வசப்படும், சித்தம் கலங்காது, சித்த மார்க்கத்தின் தொடக்க நிலைகள், மிக எளிதாக மாறும். இதை கடந்து செல்பவர்களுக்கு, அடுத்த நிலைகளை, சித்த பெருமக்களே, கூட இருந்து காட்டுவார்கள். இப்போது கூறியதை, தூரத்திலிருந்து பார்த்து, எங்கு நம்மை திருத்திக்கொள்ளவேண்டும் என்று, ஒருவன் சரியாக தீர்மானிக்கிறானோ, அவனுக்கு "முகம் மறப்பதென்பது" மிக எளிதாகும். அந்த ஒருவனுக்குள் ப்ரம்மத்துவம் உருவாகும். அவனே "ப்ராமணனாகிறான்".
ஆத்மாவுடன், உணர்ந்து, சேர்ந்து இருப்பவனுக்கு, உயர்ந்த நிலையை தவிர வேறு எதுவும் இவ்வுலகில் கிடைப்பதற்கில்லை. உடலோடு சேர்ந்து விழைபவனுக்கு, அத்தனை கர்மாவும், வாசனையும் கடை வரை கூட வரும். அடுத்த ஜென்மத்திலும் தொடரும்.
"நீங்கள் கூறுவது உண்மை! ஆனால், உலக வாழ்க்கையில் சிறைப்பட்டு கிடக்கும் மனிதருக்கு, அதன் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறத்தான் வேண்டியுள்ளது! அப்போது, நீங்கள் மேற் கூறிய விஷயம் சாத்தியமா?" என்றேன்.
"ஏன் முடியாது? உலகியல் விஷயங்களை, கடமைகளை செய்ய வேண்டாம் என்று யாரும் கூறவில்லையே. அதற்கான முயற்சிகளும் தவறில்லையே. முயற்சி என்பது தர்மத்துக்கு உட்பட்டதாயின், பெரியவர்கள் ஆசிர்வாதம் எப்பொழுதுமே கூட நின்று கரை ஏற்றும். அதர்ம வழி கூடாது என்று தான், மனிதர்களை தடுத்து நிறுத்துகிறார்கள். அதர்மத்தின் வழி சென்றால், வெற்றி நிச்சயம் என்று நினைக்கிற மனித மனதுக்கு, மிகப் பெரிய பாபத்தை சம்பாதித்துக்கொள்கிறோமே! நிறைய ஆத்மாக்களின் மனதை வருத்துகிறோமே, என்ற எண்ணம் கூட வருவதில்லையே.
இன்றும், தன் கடமையை சரிவர செய்து கொண்டு, நடப்பவைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு, இறை வழியில், சித்தர் வழியில் நின்று விலகாமல், குடும்ப வாழ்க்கையையும் சுமந்து கொண்டு, வாழ்கிற எத்தனையோ நல்ல ஆத்மாக்கள், இங்குள்ளனர். அவர்கள் விகிதம் மிகக் குறைவு என்பதே உண்மை. அதற்காக இல்லை என்று ஆகிவிடுவதில்லை.
இவைகளிலிருந்து விடுபட, சித்தம் நிலைக்க வேண்டும். சித்தம் நிலைத்தால், எது சேர்ந்தாலும், இழந்தாலும் ஒரே மனநிலையுடன் இருந்து, கர்மாவை சேர்த்துக்கொள்ளாமல் இருக்கலாம். முகம் மறக்கலாம்.
சித்தன் அருள்.................. தொடரும்.