​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 15 February 2018

சித்தன் அருள் - 748 - பெருமாளும் அகத்தியரும் உலகுக்கு அளித்த பரிசு!


அன்று மாலை கோடகநல்லூர் புறப்பட்டு சென்றேன். பேட்டை என்கிற வழிய கடந்து செல்ல வேண்டும். ஆனால் பேட்டைக்கு முன்னரே, ஒரு இடத்தில் சாலை பராமரிப்பு நடந்ததால், வழி திருப்பி விடப்பட்டேன். சரி ஏதேனும் ஒருவழி செல்லலாம் என நினைத்து வண்டியில் சென்றால், சென்ற பாதை போய்க்கொண்டிருந்ததே தவிர எங்கும் திரும்பவில்லை. வழி தவறி வெகுதூரம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு வந்துவிட்டோம் என உணர்ந்து செல்போனில் நேரம் பார்க்க மணி 6 என்று காட்டியது.

அடடா! 6 மணிக்கு கோடகநல்லூரில் சுற்று விளக்கு போட்டிருக்க வேண்டுமே. இன்று ஏன் பெருமாளே, என்னை சுற்ற விடுகிறாய்., என நினைத்து, அவ்வழி வந்த ஒருவரிடம் நிறுத்தி வழி கேட்க, அவரும், சற்று தூரம் சென்றால், ஒருவழிப்பாதை வலது பக்கம் வரும். அதில் தொடங்கி நேராக சென்றால், சுத்தமல்லி என்கிற ஊர் வரும். அங்கு கேட்டு மேலும் செல்லுங்கள் என்றார்.

சுத்தமல்லி வந்து, விசாரித்து, கோடகநல்லூர் வந்து சேருவதற்குள் மணி 6.30 ஆகிவிட்டது. வேகவேகமாக உள்ளே சென்று அர்ச்சகரிடம் பூசைக்கான சாமான்களை கொடுத்துவிட்டு, "விளக்கு போட்டுவிட்டு வருகிறேன்" என்று கூறி வெளியே வந்து பார்த்தால், "இன்னிக்கு விளக்கு போடலியா சாமி!" என்று கேள்வி கேட்டபடி ஐந்து சிறு குழந்தைகள் நின்று கொண்டிருந்தனர்.

"வாருங்கள், நாம் அனைவரும் சேர்ந்து வேகமாக விளக்கு போடுவோம்" என்று கூறி ஒவ்வொருவரிடமும் ஒரு பொருளை கொடுத்து தூக்கிவரச்சொன்னேன்.

குழந்தைகள் அனைவரும் மிக திறமையாக உதவி புரிந்ததில் 20 நிமிடத்தில் அனைத்து சுற்று விளக்கும் போட்டுவிட்டு, பெருமாள் சன்னதிக்கு வந்து பார்த்தால், பூசை முடிந்துவிட்டிருந்தது. பெருமாளின் பள்ளியறை பூசைக்காக திரை போட்டிருந்தனர்.

பள்ளியறை பூசையின் முடிவில், தீபாராதனை காட்டுவார்கள். சரி அப்பொழுது என் விண்ணப்பத்தை கொடுத்துவிடலாம் என்று தீர்மானித்தேன்.

தீபாராதனைக்காக திரை விலக்கியதும், பெருமாளின், தாயாரின் மனதை கவரும் உருவம் வெளிப்பட, விண்ணப்பத்திற்கு பதில், மந்திரம் தான் வந்தது. அருமையான தரிசனம். மந்திரம் முடியவும், திரை போட்டு மூடவும் நேரம் சரியாக இருந்தது. பெருமாள், அடியேனின் விண்ணப்பத்தை கொடுக்க விடவில்லை.

"எல்லோரும் சேர்ந்து என்னவோ விளையாடறீங்க. சரி! ஏற்றுக்கொள்கிறேன். அடியேன் மனநிலை உங்களுக்கு தெரியும். நாளை காலை அந்த ஷேத்ரத்தில், உங்கள் தரிசனம், அருள், தீர்த்தம் இவை அடியேனுக்கு கிடைக்க வேண்டும். அடியேன் கேள்விப்பட்ட செய்தி உண்மையாயின், நாளையே தரிசனம் கிடைக்க வேண்டும். அதற்கு அருளுங்கள்," என மனதுள் கூறி சமர்ப்பித்துவிட்டு வீடு வந்து சேர்ந்தேன்.

மறுநாள் காலை, ஏழு மணிக்கே சீவலப்பேரி பெருமாள் கோவிலை தேடி சென்றேன்.

சீவலப்பேரியில், மூன்று தெய்வங்களின் கோவில்கள் உள்ளது. ஒன்று துர்கை அம்மன் கோவில். இரண்டு காசி விஸ்வநாதர் கோவில். மூன்றாவதாக சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோவில். இந்த பெருமாள் கோவில் துர்கை அம்மன் கோவிலுக்கு நேர் எதிரில், நதிக்கரையில் அமர்ந்துள்ளது. இதில் அருமை என்னவென்றால், பெருமாள் கோவிலுக்குப்பின் முக்கூடல் சங்கமம் என்கிற நிலையில் மூன்று நதிகள் ஒன்று சேருகிறது.

இந்த மூன்று கோவில்களிலும், அகத்தியப் பெருமான் பல ஆண்டுகள் தங்கியிருந்து, நித்தய பூசை செய்துள்ளார். மூன்று கோவில்களிலும், மிக மிக சக்தி வாய்ந்த "திருவருள்" நிறைந்துள்ளது.

கோவிலை தேடி சென்ற பொழுது, முக்கூடல் சங்கமம் என்கிற பெயரை மட்டும் வாசித்துவிட்டு, சற்று தூரம் சென்றுவிட்டேன். பின்னர் வழியில் சென்ற ஒருவரிடம் விசாரிக்க, அவர் முக்கூடல் சங்கமம் என்கிற பெயர் பலகை உள்ள இடத்தில் நின்று பார்த்தால், உள்ளே சற்று தள்ளி பெருமாள் கோவில் தெரியும் என்றார்.

சென்ற வழியிலேயே திரும்பி வந்து பார்த்தால், கோவில் சற்று உள்வாங்கி இருந்தது. சென்ற நேரத்தில் மிகுந்த அமைதி எங்கும் நிறைந்திருந்தது. கோவில் வெளி கதவு மூடி இருந்ததால், கோவிலுக்கு பின்னே அப்படி என்ன இருக்கிறது! இத்தனை இருட்டாக இருக்கிறதே என்று எட்டிப்பார்த்தால், மிகுந்த அடர்த்தியான வனம். ஆஹா! நம் ருசிக்கு ஏற்ற இடம்தான் போல என்று சற்று தூரம் நடந்த பொழுது, வனம் இப்போது தேவை இல்லை என்ற நினைப்பு வந்தது. பிறகு பார்த்துக்கொள்கிறேன் என்று தீர்மானித்து வாசலுக்கு வந்து, அங்கு வந்திருந்த ஒருவரிடம், "அர்ச்சகர் இப்போது வருவாரா?" என்று வினவிட.

"கோவிலுக்கு முன் இருக்கும் இந்த வீடுதான் அவர் இடம். போய் கூப்பிடுங்கள், அவர் வருவார்" என்றார்.

அவர் வீட்டின் முன் நின்று "சுவாமி! கோவிலுக்கு வாருங்களேன், பெருமாளை தரிசனம் பண்ணனும்" என்றேன்.

உள்ளிருந்து ஒரு கனமான குரல் "சற்று பொறுங்கள், இதோ வருகிறேன்" என்று விட்டு 10 நிமிடத்தில் வந்தார்.

வெளியே வந்தவரை பார்த்த பொழுது, "வணக்கம் சுவாமி! தரிசனத்துக்காக வந்திருக்கிறேன்!" என்று மேலோட்டமாக கூறிவிட்டு உன்னிப்பாக கவனித்தேன்.

"மிகப் பெரிய கண்கள். தீர்க்கமான பார்வை. மிகுந்த அமைதி, நம் அனைவர் மனதில் இருக்கும், அகத்தியர் போன்ற குள்ளமான உயரம். பேச்சு என்பது மிகக்குறைவு! நெற்றியில் பெரிய திருமண்!

வந்து கோவில் கதவை திறந்தவர் "வாருங்கள் உள்ளே போகலாம்" என்று மட்டும் கூறிவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் நடந்தார். மெதுவாக அவர் பின்னாடி நடந்து சென்று உள் பிரகாரத்து கம்பி வேலி அருகே நின்ற என்னை, "வாங்கோ! நீங்க அந்த சன்னதியின் வாசல் அருகில் வரை வந்து நிற்கலாம்" என்று கூறிவிட்டு, கையை பிடித்து அழைத்து செல்லாத குறையாக வார்த்தைகளால் இழுத்து சென்றார்.

எனக்கோ எல்லாம் மலைப்பாக இருந்தது. சன்னதி வாசல் அருகில் சென்றவுடன் தான் புரிந்தது, அடியேனுக்கும் மூலவருக்கும் இடையில் ஒரு பத்து அடிதான் இருந்தது. அப்படியே கைகூப்பி, மனத்தால் நமஸ்காரம் செய்தேன்.

என்னடா! இது! இப்படி நடக்கிறதே. நேற்று எங்கெல்லாமோ சுற்றவிட்டார்! இன்னிக்கு அவர் பாதத்துக்கு பக்கத்தில் நிற்கவைத்துவிட்டாரே! என்று யோசித்தபடியே, உற்சவ மூர்த்தியின் பாதத்தை பார்த்து பின், அவர் முகத்தை பார்க்க, அருமையான தரிசனம்.

மனமும் கண்களும் எதையோ தேடி துழாவ, அடியேன் பார்க்க விரும்பிய, பெருமாளும், அகத்தியரும் சேர்ந்து இந்த உலக மனிதர்களுக்காக கொடுத்த பரிசு, சுந்தரராஜ பெருமாள் பாதத்துக்கு அருகில் அமர்ந்திருந்தது!

சித்தன் அருள்.................. தொடரும்!  

6 comments:

 1. ஓம் அருள்மிகு மூத்தோனே போற்றி போற்றி

  ஓம் ஸ்ரீ மனோன்மணி அம்மா சமேத அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் போற்றி போற்றி

  ஓம் அருள்மிகு ஓதியப்பர் முருகப்பெருமான் போற்றி போற்றி

  ஓம் ஸ்ரீ லோபமுத்ரா தாயே சமேத அருள்மிகு அகத்தியர் அய்யன் போற்றி போற்றி

  ReplyDelete
 2. கும்ப மாதம் என்னும் மாசி மாதத்தில் சதய பூசை நாளை நடைபெற உள்ளது. இது மிக மிக முக்கியமான பூசை ஆகும். முன்னோர்களின் ஆசி, பித்ருக்களின் ஆசி தந்து கர்ம வினைகளை நாளை நடைபெறும் சதய பூசை தர வல்லது. 16/02/2018 வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணி முதல் 7:30 மணி வரை நடைபெறும் இப்பூசையில் கலந்து கொண்டு அகத்தியர் ஆசி, நவகோடி சித்தர்களின் ஆசியும் பெறும்படி கேட்டுக் கொள்கின்றோம்.

  மேலும் விபரங்களுக்கு - http://tut-temple.blogspot.in/2018/02/16022018.html

  நன்றி,

  ரா.ராகேஷ்
  கூடுவாஞ்சேரி

  ReplyDelete
 3. அன்னை லோபாமுத்திரை ஸமேத அகஸ்தியர் திருவடி சரணம் அற்புதமான இறை அநுபவம். குருநாதர் நம் தந்தை திரு உருவத்தை வர்ணனை செய்தவுடன் மெய் மறைந்தது வாழ்க உங்கள் தொண்டு

  ReplyDelete
 4. Iyya. Came to Kodaganallur this week Wednesday 14th. Had a nice darshan. Enquired about you with the archakar. Sathish from avadi

  ReplyDelete
 5. குரு வாழ்க! குருவே துணை!!

  ReplyDelete