அடுத்த வார வியாழக்கிழமைக்காக காத்திருந்து, காத்திருந்து, வெகு தூரம் நடந்த களைப்புதான் வந்தது. "ஸ்ரீராம சரித" தாகத்தில் இருப்பவனுக்கு தருவதெல்லாம் போதாது என்பார்கள் பெரியவர்கள். அதை, அன்று நான் உணர்ந்தேன். அகத்தியப் பெருமான் ஸ்ரீராம சரிதத்தை அருளுவது மிக மிக குறைந்ததாக போய்விட்டது என்று என் எண்ணம். இருந்தாலும், இந்தவாரம் ஏதேனும் ஒரு புது தகவல் தரமாட்டாரா, என்ற ஏக்கத்துடன், மூத்தோனை, அனுமனை வணங்கி, அகத்தியரை வணங்கி, ப்ரம்மமுகூர்த்தத்தில் ராமர் சன்னதி முன் அமர்ந்தேன்.
அகத்தியப் பெருமான் வந்த வேகத்தில் நல்ல திட்டுதான் கிடைத்தது.
"எதை கூறவேண்டும், எப்போது கூறவேண்டும் என்று எமக்குத் தெரியாதா? அதற்குள் என்ன அவசரம். ஸ்ரீராம சரிதத்தை அப்படியே வாங்கி ஒரே அடியாக ருசித்துப் பார்க்கவேண்டும் என்கிற உன் அவா புரிகிறது. சரி! கேட்டுக்கொள்" என்று ஒரு புது தகவலை கூறினார்.
"கம்பநாட்டான், தன் கவிதைகளில் மிக எளிமையாக உணர்ந்து, ஸ்ரீராம சரிதத்தை வெளிப்படுத்தினான் என்று கூறினேனே! அவனே, ஒரு பழக்கம் தொடங்கி வைத்தது அனுமன்தான் என்று உரைத்தது உண்மை. மனிதர்கள் கோவிலுக்கு சென்றால், பிரகாரத்தில் மூன்று முறை வலம் வந்து கீழே சாஷ்டாங்கமாக விழுந்து இறைவனை வணங்குகிறார்கள், அதை முதன் முறையாக "சீதா தேவியை" இறைவியாக நினைத்து, அனுமன் தான் செய்தான். அதிலிருந்துதான் அந்த முறை மனிதர்களால் பின்பற்றப்படுகிறது. அதுவே சரியும் கூட. இந்த காலத்து மனிதர்கள், அதை பின்பற்றுவது மிக அரிது. கோவிலுக்கு வெளியே நின்று அல்லது சென்று கொண்டே, "என்ன! இறைவா சௌக்கியமா!" என்கிற பாணியில் செல்கிறார்கள். சரி! இந்த கலியுகத்தில், இவன் இவ்வளவாவது என்னை நினைக்கிறானே என்று இறைவனே, தன்னை மறந்து அருள்கிறது. நின்று செல்வதற்கே, இத்தனை அருள் புரிய இறை காத்திருக்கும் பொழுது, ஒருவன்/ஒருவள் தன்னையே இறைவனிடம் கொடுத்துவிட்டால், இறைவன் என்னவெல்லாம் அருளுவான் என்று என்னால் கூட யோசித்துப் பார்க்க முடியவில்லை. ஹ்ம்ம்! மனிதனுக்கு சிந்திக்க, மனதை இறைவனிடம் கொடுக்க, நேரம் வரவில்லை போலும்!" என்று நீண்ட விளக்கத்துடன் தன் ஆதங்கத்தையும், ஒரு சாதாரண தகப்பன் நிலையிலிருந்து கூறினார்.
நான் அமைதியாக அமர்ந்திருந்தேன். அவர் கவலை மனிதனை பார்த்து, அவன் போகும் ஆபத்தான வழியைப் பார்த்து. "குழந்தைகள், கீழே விழுந்து அடிபட்டுவிடக்கூடாதே" என்கிற தகப்பனின் மனம்.
"சரி! ஸ்ரீராம சரிதத்துக்கு வருவோம்" என்று தொடரலானார்.
அவர் போன வேகத்தை பார்த்த பொழுது, அனுமன் இலங்கையை அழித்ததை, கூறுவதில் அதிக விருப்பம் இல்லாமல் இருந்தது போல் இருந்தது. ஆம்! அழிவு என்பதை அகத்திய பெருமான் ஒரு பொழுதும் விரும்பியதில்லை.
"நாற்பத்தி மூன்று முதல், நாற்பத்தி ஆறுவரை உள்ள சர்கங்களை, பட்டாபிஷே சர்க்கத்தோடு படித்து, பாயாசம் நிவேதனம் செய்து வந்தால் அனுமன் போல் பிரகாசிக்கலாம்" என்றார்.
அவை "ராகு, கேது தோஷம், அஷ்டம சனி, அஷ்டம குரு, கேது இவர்களால் பீடிக்கப்பட்டவர்கள், எதிரிகளால் நிம்மதி இல்லாமல் இருப்பவர்கள், எப்பொழுதும் வாழ்க்கையில் தோல்வி அடைந்து கொண்டு இருப்பவர்கள், வாழ்க்கையில் வெற்றி பெற, சாதனை படைக்க, எதிராளியின் கொட்டத்தை அடக்க, இந்த சர்கங்கள் பெரிதும் உதவியாக இருக்கும்" என்றார்.
"துர்தேவதைகளால் பீடிக்கப்பட்டவர்கள், எதையோ கண்டு மிரண்டு, தினம் தினம் பயந்து, பயந்து வாழ்கிறவர்கள், சந்திர தசையில் ராகு, கேது புக்தி நடந்து கொண்டிருப்பவர்கள், சூரிய தசையில் கேதுவும், கேதுவோடு சந்திரனும் அஷ்டமத்தில் ராசியாக அமையப்பெற்றவர்கள் , கொடும் குணத்திற்குரிய நபர்களோடு வாழ்க்கை, தொழில் நடத்துகிறவர்கள், சந்திராஷ்டமம் வந்த நாளில் அவதியுறுகிறவர்கள், அனைவரும் இந்த நான்கு சர்கங்களை (47-50) படித்து வந்தால், ஆஞ்சநேயர் வந்து அவர்களுக்கு உதவுவார், வாழ்வு கொடுப்பார், எப்பேர்ப்பட்ட துன்பத்திலிருந்தும் விடுதலை, கிடைக்கும்" என்றார்.
இலங்கையின் பெரும்பகுதியை, தான் ஒருவனே, தனியாக நின்று அழித்த அனுமனின் வாலில், தீ வைத்து எரிக்க தண்டனை வழங்கிய பொழுது, சீதாபிராட்டி அக்னி பகவானிடம், அனுமனுக்காக வேண்டிக் கொண்டாள். சீதாப்பிராட்டியின் வேண்டுதலுக்கு மனமிரங்கி, அக்னி பகவானும், அனுமனை தீண்டாமல் காத்தருளினார். இங்கு தான் ஒரு விஷயத்தை நீங்கள், மனிதர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
"ஒரு சுத்தமான ஆத்மா, மற்றவர்கள் கஷ்டமடையும் பொழுது, அவர்களுக்காக பிரார்த்தனை செய்தால், அந்த பிரார்த்தனை உடனேயே பலனளிக்கும்" என்ற பிரார்த்தனையின் பலத்தை தெளிவுபடுத்தினார்.
திருடர் பயம், எதிரிகளினால் பயம், போக்கிரிகளால் பயம், அக்னியினால் பயம், ஆகியவற்றினால் தினம் அவதிப்படுகிறவர்களும், கஷ்டத்தினால் மாட்டிக்கொண்டவர்களும், செய்யாத தப்புக்காக தண்டனை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களும், செவ்வாய், கேது இரண்டும் சேர்ந்து எட்டாமிடம், ஆறாமிடத்தில் இருக்கும் ஜாதகர்களும், அஷ்டம திசையாக செவ்வாய் தசை நடந்து கொண்டிருப்பவர்களும், ரசாயனம், அடுப்படியில் வேலை செய்பவர்களும் 51 முதல் 54 வரையுள்ள சுந்தரகாண்ட சர்கத்தை படித்து வந்தால், அவர்களுக்கு, எந்தவித உயிர் ஆபத்தும், ஏற்படாது, தீயால் பாதிக்கப்பட மாட்டார்கள், பயமும் விலகிவிடும்" என்றார்.
"இறைவனுக்கு அருகில் இருப்பவர்களைத்தான் பகவான் சோதிக்கிறார். தள்ளி நிற்பவர்களை பகவான் கண்டுகொள்வதில்லை, என்று மனிதர்கள் கூறுகிறார்கள். ஆனால் அதுவல்ல உண்மை. இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்தால் எளிதான பாதிப்பு வரும். சற்றே வேகமான வாகனத்திலிருந்து விழுந்தால் கொஞ்சம் பலமான பாதிப்பு வரும். ஆனால் உயரமான இடத்திலிருந்து விழுந்தால், உயிருக்கே அபாயம் தான். அது போல் தான், கெடுதல் செய்பவர்கள், பகவானை துதிப்பது போல் நாடகமாடி பெரும் பொருள் சம்பாதித்தாலும், மிக விரைவில் அவர் உயரத்திலிருந்து விழப்போகிறார் என்று அர்த்தம். இறைவன் அப்படிப்பட்டவர்களுக்கு எளிதான பாதிப்பை கொடுக்காமல், உயரமான இடத்திற்கு ஏற்றிக்கொண்டிருக்கிறார் என்பது, சித்தர்களுக்கும், மகான்களுக்கும், ஞானிகளுக்கும் மட்டும்தான் தெரியும். மூன்று உலகத்தையும் ஆண்ட ராவணனுக்கு, ஒரு சாதாரணப் பெண்ணான, பதிவிரதையான சீதாபிராட்டியால் அழிவு ஏற்பட்டதைத்தான் சுந்தரகாண்டம் எடுத்துக்காட்டுகிறது, என்கிற முக்கியமான செய்தியை, இவ்வுலக மனிதர்கள் புரிந்து கொள்ளவேண்டும்" என்கிற நீதி போதனையுடன், அன்றைய வகுப்பை முடித்துக் கொண்டார்.
குறிப்பெடுத்த புத்தகத்தையும், அகத்தியர் ஜீவநாடியையும், ராமர் பாதத்தில் வைத்தபின், சாஷ்டாங்கமாக கீழே விழுந்து நமஸ்காரம் செய்த என் மனது மிக நிறைவாக இருந்தது. அப்படியே "ஓம் அகத்தீசாய நமக!" என்கிற என்கிற ஜபத்தில் மனம் சுருண்டு அமர்ந்தது.
சித்தன் அருள்................. தொடரும்!