இனி வியாழக்கிழமை மட்டும்தான் ஸ்ரீராமசரிதை அகத்தியரால் உரைக்கப்படும் என்று அறிந்தபின் மனம் அடங்கிப்போனது. அடுத்த வார வியாழக்கிழமைக்காக காத்திருந்தேன்.
இருபது வருடங்களுக்கு முன்னால் அனுமனை தொழுதபோது வேண்டிக்கொண்டதை, இங்கு நினைவு கூறுகிறேன். அப்பொழுதே, அனுமன் கொடுத்த உத்தரவு இதுதான்.
"தலையாய சித்தாராம் அகத்தியன் தானிருக்க - அன்னவரே உனக்கு வழிகாட்டுவார்" என்று வாழ்த்தி மறைந்தார் அனுமன். அது இப்பொழுது நடக்கிறது. அகத்தியர் வழிகாட்டுதலில், ஸ்ரீராம சரிதை முழுதும் எனக்கு உரைக்கப்பட்டாலும், அதில் ஒரு சிறு துளிதான் "சுகம் தரும் சுந்தரகாண்டம்" என்கிற தலைப்பில் வெளி வரப்போகிறது என்பதிலிருந்து, இறைவனின் சூட்ச்சுமம் ஓரளவுக்கு எனக்கு புரியத் தொடங்கியது. இன்ன வியாதிக்கு இன்ன மருந்து என வைத்தியன் பார்த்துப் பார்த்துக் கொடுப்பது போல, உலக மக்களின் கர்ம வினைக்கு என்ன தேவையோ அதை மட்டும் இறைவன் அருளுகிறார் என்பதே உண்மை.
வியாழக்கிழமை அன்று பிரம்ம முகூர்த்தத்தில் உடலையும், மனதையும் சுத்தப்படுத்திக் கொண்டு மூத்தோனையும், அனுமனையும் பிரார்த்தித்து, ஸ்ரீராமர் சன்னதியில் வைத்திருந்த நாடியை எடுத்து, அகத்தியரை மனதார பிரார்த்தித்து, காத்திருந்தேன்.
அகத்தியப் பெருமான் நாடியில் வந்து உரைக்கலானார்.
"வனவாசம் சென்ற சீதை ஸ்ரீராமபிரானின் அனைத்து தேவைகளையும், அரண்மனையிலிருந்தால் எப்படி கவனித்துக் கொள்வாளோ அப்படியே ஒரு பத்தினியின் மன நிலையில் அமர்ந்து கவனித்துக் கொண்டாள். ஸ்ரீராமரின் தேவைகள் மிக மிக குறைந்து போனதால், அவர் அனுமதியுடன் பர்ணசாலையை சுற்றியுள்ள வனங்களில் தனியே புகுந்து, காய், கனிகளை பறித்து, பூக்களை பறித்து மாலையாக உருவாக்கி, ஸ்ரீ ராமரின் பாதத்தில் சமர்ப்பித்து, மகிழ்ந்து போவாள். முதலில் இலக்குவனை துணையாக அனுப்பி வைத்த ராமன், சில நாட்களில் சீதையை வனத்தில் தனியாக போக விட்டது இலக்குவனுக்கே வருத்தமாக இருந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், ஸ்ரீ ராமன் இட்ட ஆணையை சிரம் தாழ்த்தி ஏற்று வந்தான். விதி தன் வேலையை நேரம் பார்த்து தொடங்குவதை ஸ்ரீ ராமனும் உணர்ந்திருந்தால், அனைத்தும் அதன் போக்கிலேயே செல்லட்டும் என்று தான் சீதையின் பாதுகாப்பை ஸ்ரீராமன் விலக்கியதாக" அகத்திய பெருமான் உரைத்த பொழுது, அதைக் கேட்ட எனக்கே, உள்ளுக்குள் எங்கேயோ வலித்தது.
தெய்வமே மனித அவதாரம் எடுத்திருக்க, விதி பலம் பெறட்டும் என்று ஸ்ரீராமனே அமைதியாய் இருக்க, அந்த விதியின் சக்தி சூர்ப்பணகை, மாரீசன், ராவணன் உருவில் வந்து ஒரு சில நாடகத்தை நடத்தி, சீதையை கைது செய்து லங்காபுரியில் சிறைவைத்தது என்று அகத்தியர் கூறினார்.
"இப்படிப்பட்ட விதியின் விளையாட்டுதான் இன்னொரு உருவில், காலகாலமாக ஸ்ரீராமனையே நினைத்து தவம் செய்து காத்திருக்கும் வாயு புத்திர அனுமனை ஸ்ரீராமரிடம் கொண்டு சேர்த்தது."
"அனுமனுக்கு தன் பிறப்பின் அர்த்தம் விளங்கத்தொடங்கியதும் அந்த நேரத்தில் தான். இங்கு ஒரு விஷயத்தை கவனி மைந்தா! ஒரே நேரத்தில் ஒரு விஷயத்தில், விதியானது இரு விதமாக, சிறப்பானதாகவும், சிரமம் தருவதாகவும் அமைந்திருக்கிறது. விதியின் விளையாட்டே இப்படித்தான். அதை மனிதர்களால் புரிந்து கொள்ளவே முடியாது." என்றார்.
ஸ்ரீராமரும், இலக்குவனும் சீதையை தேடித் தேடி மனம் உடல் இரண்டும் சோர்ந்து போனதை தெரிவித்த பொழுது எனக்குள்ளேயே ஒரு அசதி பரவியது. மனத்தால், அகத்தியர் உரைப்பதை அப்படியே உணர்ந்து, ஸ்ரீராமபிரானுக்கு ஒரு சிரமம் என்ற பொழுது அதன் வீச்சம் என்னுள் பரவியதினால், என்னுள்ளும் அந்த சோர்வு வந்ததை நன்றாக உணர முடிந்தது.
ஸ்ரீ ராமகாதை வனத்தினுள் புகுந்தபின், அனுமனுக்கு ஸ்ரீராம இலக்குவனின் தரிசனம் கிடைத்தவுடன், என் மனது தன் இயல்பு நிலைக்கு வந்தது. அடடா! அனுமன் வந்து சேர்ந்ததும் என்னவோ ஒரு பாதுகாப்பு உணர்வு என்னுள் புகுந்து, என் மனதையும் நேர்படவைத்தது, என்பதே உண்மை.
இந்த பகுதியிலிருந்து "சுந்தரகாண்டம்" துவக்கம் என்று புரிந்த பொழுது மனம் சந்தோஷப்பட்டது.
"என்ன? அனுமனின் சக்தி உன் மனதையும் சமன்படுத்தி, புத்துணர்ச்சியை தருகிறதோ? யாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். உனக்குமட்டுமல்ல, இவ்வுலகத்தில் உள்ள எல்லா உயிர்களுக்கும், பாத்துகாப்பு உணர்வை கொடுப்பதே அனுமனின் நாமம். அவரை நினைத்த மாத்திரத்திலேயே மனதுக்கு பிடிக்காத பிரச்சினைகள் விலகிவிடும் என்பதை இன்னும் மனிதர்கள் புரிந்து கொள்ளவில்லை. அனுமனுக்கு பிடித்ததோ "ராமநாமம்". அதை ஜெபித்துக் கொண்டிருந்தாலே தானாக பிரியப்பட்டு அனுமன் அதை ஜெபிப்பவர்களுக்கு பாதுகாப்பை கொடுத்து விடுவான். இதை முதல் குறிப்பாக எடுத்துக் கொள்" என்று அகத்திய பெருமான் கூறிய பொழுது, நானே என் கனவு மெய்படப்போகிறது என்கிற சந்தோஷத்தில் திளைத்துப் போனேன்.
கிடைத்த வாய்ப்பை விடக்கூடாது என்று தீர்மானித்து உடனேயே ஒரு புத்தகத்தை எடுத்து முதலில் மூத்தோனை வணங்கி, அனுமனை வணங்கி, அதன் மேல் புறத்தில் "ஸ்ரீ ராமஜெயம்" என்று எழுதி, அகத்தியர் அடுத்து "எழுதிக்கொள்" என்று கூறப்போகிற தகவலுக்கு காத்திருந்தேன்.
அகத்தியர் கூறலானார்.
"கம்பனும், வால்மீகியும் எழுதிய ஸ்ரீ ராமா சரிதையில் அனைத்து ஸ்லோகங்களும் இரு மொழிகளில் இருந்தாலும், வால்மீகி எழுதிய ராமாயணத்தில் "ஸ்ரீ ராம சரிதையின்" சக்தி மிகுந்த ஸ்லோகங்களை சுட்டிக்காட்டி, எந்த எந்த சர்கங்கள், எப்படிப்பட்ட பிரச்சினைகளை கடந்துவர ஒரு மனிதனுக்கு உதவி செய்யும் என்பதை தெளிவாக கூறவும். இதை நம்பி பாராயணம் செய்பவர்கள் நிச்சயமாக தங்கள் கர்மாவை கடந்துவிடுவார்கள். இது ஸ்ரீராமர், ஸ்ரீ அனுமன் அருளால் அடியேன் அகத்தியனுடைய வாக்கு. அதுதான் இறைவன் சித்தம். அதை சிரம் மேற்கொண்டு இட்ட பணியை செவ்வனவே செய்வதே என்னுடையவும், உன்னுடையவும் வேலை. புரிந்ததா?" என்று ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.
என் கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை. என்னையே ஒருமுறை கிள்ளிப்பார்த்துக் கொண்டேன். நான் காண்பது, கேட்டது உண்மைதானா? "அடடா! அகத்திய பெருமான் எப்படிப்பட்ட வேலையை எனக்கு வாங்கி கொடுத்திருக்கிறார். யாருக்கு இப்படிப்பட்ட யோகம் அமையும். இது ஒன்று போதுமே, இப்படிப்பட்ட ஒன்று போதுமே. நேராக இறைவன் பாதத்தில் சென்று அமர்ந்து விடலாமே" என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தேன்.
"என்ன? குறிப்பெடுக்க தயாராகிவிட்டாயா? கூறத்தொடங்கலாமா?" என்று ஒரு கேள்வியை கேட்டார்.
இப்படியெல்லாம் ஒரு ஆசிரியனின் குணத்தோடு அகத்திய பெருமான் ஒரு பொழுதும் என்னிடம் பேசியதில்லை.
மிகுந்த பக்தியுடன் முதலில் அகத்திய பெருமானுக்கு நன்றி சொல்லிவிட்டு
"அடியேன்! தயாராக காத்திருக்கிறேன்" என்றேன்.
சித்தன் அருள்......... தொடரும்!