​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 17 August 2017

சித்தன் அருள் - 718 - அருள் சுகம் தந்த சுந்தரகாண்ட அனுபவம் - 3

​​
அகத்தியப் பெருமானின் வார்த்தைகளில் ஸ்ரீராம சரிதத்தை ருசித்த எனக்கு இருப்புக் கொள்ளவே இல்லை. அவரும் அதற்குப் பிறகு வந்த நாட்களில், வேறு விஷயங்களை கூறினாரே தவிர, ஸ்ரீராமா காதையை தொடர்வது பற்றி மூச்சு விடவில்லை. என் எதிர்பார்ப்போ, ஸ்ரீராம காதை. அவரோ உலக விஷயங்களை பற்றி பேசினார்.

ஒரு நாள் என் அவாவை கட்டுப்படுத்த முடியாமல் "என்ன அகத்திய பெருமானே, இப்படி பண்ணுகிறீர்களே. ஸ்ரீராம காதை அப்படியே நிற்கிறதே!" என்று கேட்டுவிட்டேன்.

"அடேய்! மானிடா! எமக்குத் தெரியாதா எப்பொழுது உரைக்க வேண்டும் என்று? ஏன் அவசரப்படுகிறாய். அனைத்தையும் உரைப்பேன். பொறுமையாக இரு. எதற்கும், காலம் நேரம் பார்க்கிற உனக்கே அது புரியவில்லையா? குருவாரம் என்பது குருவருள் கூட்டுவது. அன்று எல்லா சித்தர்களும், முனிவர்களும், மகான்களும், தன்னை வழிபடுகின்ற நல்ல உள்ளங்களை கரையேற்ற நிறைய அறிவுரைகளை தருவார்கள். அப்படிப்பட்ட நல்ல நேரத்திற்காகத்தான் உன்னை காத்திருக்க வைத்திருக்கிறேன். ஸ்ரீ ராமரையும், அனுமனையும் உன் குருவாக போற்றி வாழ்ந்து வரும் உனக்கு, அவர்கள் சாட்சியாக இது உரைக்கப்படவேண்டும், என்பதே என் அவா. இன்னும் நிறைய அதிசயங்களை போகப்போக நீ உணர்வாய். ஆகவே, வரும் குருவாரத்துக்காக காத்திரு" என்று மென்மையாக சொன்னார். ஆனால் அதுவே என்னை கடுமையாக திட்டியதாகத்தான் உணர்ந்தேன்.

[அகத்தியர் அடியவர்களே! ஏன் "சித்தன் அருள்" வியாழக்கிழமை அன்று மட்டும் வெளியிடப்பட்டது, அதுவும் சூரிய உதயத்துக்கு முன் உள்ள பிரம்ம முகூர்த்தத்தில் பதிவு செய்யப்பட்டது என்பது இப்பொழுது தெளிவாகியிருக்கும் என்று எண்ணுகிறேன். அதை வாசிப்பவர்கள் மனதில் புகுந்து சூக்ஷுமமாக விஷயத்தை தெளிவாக்குவேன் என அகத்தியப் பெருமான் ஆணையிட்டதினால்தான்.]

"சே! என்ன இது. எத்தனை முறை அடி வாங்கினாலும் என் மனது நாய் வால் போல் நிமிராமலேயே நிற்கிறது" என்று என்னையே நான் கடிந்து கொண்டேன்.

கேட்ட தவறான கேள்விக்கு அகத்தியரிடம் மன்னிப்புக் கேட்டேன்.

"போகட்டும் பாதகமில்லை! ஸ்ரீராம காதையின் மீது நீ கொண்ட அவாவால், இவ்வுலகு மேம்பட உன் சார்பாக ஏதேனும் இந்த மனித குலத்துக்கு செய்யவேண்டுமே என்கிற எண்ணத்தால் அந்தக் கேள்வி வந்தது என்று யாம் அறிவோம். இந்த ராம கதையின் "சுந்தர காண்டம்" பகுதியை விளக்கும் பொழுது நீ குறிப்பெடுத்துக் கொள்ளலாம். அந்த பதிவிற்கு "சுகம் தரும் சுந்தர காண்டம்" என பெயர் வைத்துவிடு" என்று தலைப்பையும் அவரே எடுத்துக் கொடுத்தார்.

அந்த வார வியாழக்கிழமைக்காக காத்திருந்தேன்.

வியாழக்கிழமை வந்தது. அதிகாலை எழுந்து நீராடி, பூசை அறையில் அமர்ந்து மூத்தோனையும், அனுமனையும் த்யானம் செய்து அகத்திய பெருமானின் நாமத்தை கூறி "ஸ்ரீராமரின் காதையை" அருளுமாறு வேண்டிக்கொண்டேன்.

நாடியில் அகத்திய பெருமான் வந்து அருளலானார்.

"ஒவ்வொரு மனிதருக்கும், திருமணத்தில் திருப்புமுனை அமையும். அவன் வாழ்வே சில வேளை தலைகீழாக மாறிவிடும். மனித அவதாரம் எடுத்த ஸ்ரீராமருக்கும் அதுதான் நடந்தது. அவரது திருமணம்தான் இராமாயண காவியம் உருவாக காரணமான திருப்புமுனையாக அமைந்தது. உலகுக்கே, தன் செயலால் உணர்த்த வந்த தெய்வம், அதன் பின் நடந்ததை எல்லாம் ஒரே மனநிலையில் எடுத்துக் கொண்டதினால், மிகப் பெரிய சித்தத்தன்மையை அடைந்தது. சித்தர்களாகிய நாங்களே "அடடா! எந்த தவமும், யோகமும், பயிற்சியும் இல்லாமலேயே கூட, எதையும் அதனதன் போக்குப்படி ஏற்றுக்கொண்டு, சந்தோஷ, வருத்தமின்றி வாழ்ந்தாலும், மிகப் பெரிய சித்தனாக முடியும் என்கிற பாடத்தை, அன்று அவரிடமிருந்து கற்றுக் கொண்டோம். நாங்களே எங்களை பார்த்து வெட்கப்பட்டுக்கொண்டோம் என்றால் பார்த்துக்கொள்" என்று மனம் திறந்து ஸ்ரீராமபிரானை பாராட்டி மகிழ்ந்தார்.

ரிஷிகள், முனிவர்கள், முனி புங்கவர்கள், நாரதர், தேவ கணங்கள், சித்தர்கள் புடை சூழ மங்கள நாளில், ஸ்ரீராமபிரான் சீதா தேவியை தன் துணைவியாக ஏற்றுக்கொண்ட நிகழ்ச்சியை அகத்திய பெருமான் விவரித்த பொழுது, நானே அங்கிருந்து அதை நேரில் கண்டது போல் என் மனக்கண்ணுள் அத்தனையும் விரிந்தது. அப்பப்பா! மனம் அத்தனை புளங்காகிதம் கொண்டது. யாருக்கு மறுபடியும் அப்படிப்பட்ட காட்சி கிடைக்கும். என்னே பாக்கியம்! என நினைத்து 

நாடியை ஸ்ரீராமர் பாதத்தில் வைத்துவிட்டு, எழுந்து அப்படியே சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தேன்.

"அய்யனே! இப்பிறவியின் பேற்றை பெற்று விட்டேன்! மிக்க நன்றி!" என அகத்தியருக்கு நன்றியை கூறினேன்.

"இனிமேலும் இதுபோல் அரிய நிகழ்ச்சிகள் இந்த ராமர் சன்னதியில் நடக்கும், உணருவாய், காண்பாய். நடந்தபின் அதை உரைக்கிறேன். ஒன்று தெரியுமோ உனக்கு! ராமர் தன் அபிமான அனுமனை பெருமை படுத்துவதற்காகவே, "சுகம் தரும் சுந்தரகாண்டம்" என்கிற தலைப்பை நீ பதிவு செய்யப்போகிற விஷயங்களுக்கு வழங்கினார். அவர் எடுத்துக் கொடுத்த தலைப்பு அது. இறை, தான் வெளிப்படுத்த நினைக்கிற விஷயங்களுக்கு, தானே பொருள் உணர்த்தும். அது அந்த தலைப்பில் உள்ளது. பிறகு நிதானமாக அதை உணர்ந்தது ரசித்துப்பார்" என்றார். ["சித்தன் அருள்" தலைப்பை, அகத்தியப்பெருமான்தான் எடுத்துக் கொடுத்தார். அந்த அருளைத்தான், இன்றும் நாம் அனைவரும் பருகிக்கொண்டிருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளவும்.]

நான் அசைவுற்று, அமைதியாக அமர்ந்திருந்தேன். ஒன்றுமே தோன்றவில்லை.

ஸ்ரீராமர் சீதையின் குடும்ப வாழ்க்கையின் தொடக்கத்தில்தான் பலரது விதி ஒரே நேரத்தில் தன் வேலையை தொடங்கியது என்று, தசரதன், கைகேயி, ராமர், கூனி, பரதன், லக்ஷ்மணன் போன்றோரின் வாழ்க்கை விதி முடிச்சை திறந்து காட்டினார். விதியே, ராமபிரான் இத்தனை பெரிய விஷ(ய)த்தை எப்படி எதிர்கொள்கிறார் என்று வேடிக்கை பார்த்தது, என்று அகத்தியர் உரைத்தார். ஸ்ரீராமரோ, எப்போதும் அணியும் பொறுமை என்கிற மன நிலையில் அந்த சூழ்நிலையை எதிர் கொண்டு, விதியையே ஏமாற்றினார். தெய்வமே மனித அவதாரம் இப்பூமியில் எடுத்துவிட்டால், அவர்களும் இப்பூமியின், நவகிரகங்களின், விதியின் கட்டுப்பாட்டுக்குள் அடக்கம் என்று சொல்லாமல் சொல்லி, பணிந்து காட்டினார் ஸ்ரீராமர்.

ஸ்ரீராமகாதை விதியின் விளையாட்டால் வனவாசம் சென்றது. மன்னனாக ராஜ்ய பரிபாலனம் செய்ய வேண்டிய தெய்வம், விதிக்கு பணிந்து, மரவுரி தரித்து காட்டில் வாழ்ந்ததை அகத்திய பெருமான் விவரித்தபோது, அதை கேட்ட நானும், உள்ளுக்குள் காட்டில் உணரப்படும் குளிர்ச்சி பரவுவதை உணர்ந்தேன். இதிலிருந்தே அகத்தியப் பெருமான் "ஸ்ரீராம காதையை" எப்படி உள் உணரும்படி விளக்கினார் என்பதை புரிந்து கொள்ளலாம்.

"இப்படிப்பட்ட உண்மையான விளக்கங்களை புத்தகமாக லோகஷேமத்துக்காக, மனிதர்கள் தங்கள் பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு மேம்பட வெளியிட்டால், அந்த நிலைமை எப்படி இருக்கும்?" என்ற கேள்வி என்னுள் எழுந்தது.

"என்ன மறுபடியும் கேள்வியா? பொறுமையாக இரு. நேரம் வரும்போது நீயே அதை உணருவாய்." என்றார் அகத்தியர் நான் கேட்காமலேயே.

"இன்று இங்கு நடக்கிற இன்னொரு விஷயத்தையும் கூறுகிறேன். ஸ்ரீ ராமபிரானின் வாழ்க்கை தொடக்கம் முதல் கடைசி வரை கூட இருந்து கவனித்த அகத்தியன் அவர் காதையை கூறுகிறான். அதை கேட்கவே புண்ணியம் பண்ணியிருக்க வேண்டும் என்று அத்தனை சித்தர்களும் இந்த அறையில் அமர்ந்து மெய் உருக கேட்டுக் கொண்டிருக்கின்றனர். இதை விட மிகப் பெரிய பெருமை உனக்கெதற்கடா" என்று உண்மையை போட்டுடைத்தார்.

ஒரு வினாடிக்குள் நான் அதிர்ந்து போனேன்.

"சரி! இனி அடுத்த முகூர்த்தத்தில் தொடருவோம். இன்று இத்தனை போதும்" என்று அகத்தியப் பெருமான் அன்றைய வகுப்பை நிறுத்திக் கொண்டார்.

நான் பொதுவாக "எல்லா சித்தர்களையும் ஒரு நிமிடம் நிற்கச்சொல்லுங்கள்" என்று அகத்திய பெருமானிடம் கூறிவிட்டு 

எழுந்து 

சாஷ்டாங்கமாக கீழே விழுந்து நமஸ்கரித்தேன்.

அப்படியே ஒரு பத்து நிமிடம் இருந்திருப்பேன். யாரோ முதுகில் தட்டி எழுப்புவதுபோல் தோன்ற, நாடியை ஸ்ரீராமர் பாதத்தில் வைத்துவிட்டு 

"ஓம் அகத்தீசாய நமஹ!" என்று த்யானத்தில் அமர்ந்தேன்.

சித்தன் அருள்................. தொடரும்! 

11 comments:

 1. மனம் அடங்கி அமைதி கொண்டது. வாழ்க்கை உள்ள அத்தனை அனுபவமும் சித்தர் அருள் பாதை செல்ல அருளும். என்றும் நம் இதயத்தில் குடி கொண்ட அய்யா ஹனுமன்தாஸன் பாதம் போற்றி

  அன்னை லோபமுத்திரா சமேத அகஸ்தியர் பெருமான் திருவடி சரணம்

  ReplyDelete
 2. ஓம் அகத்தீசாய நமஹ 🙏🙏🙏🙏🙏

  ReplyDelete
 3. குருவருளும் திருவருளும் கூடிய இந்த நல்ல நாளில் ராம காதை கோலாகலமான தொடக்கம் . அகஸ்திய மகரிஷி சொல்லி வருவதை பொறுமையுடன் கேட்டு தெளிவு பெறுவோம் .அவரருள் பெறுவோம் .
  ஓம் அகஸ்தீஸ்வராய நமஹ !!
  ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா சமேத அகஸ்தியர் திருவடிகள் போற்றி!!

  ஓம் அகத்தீசாய ஓம் ஸ்ரீம் லோபாமுத்ராதேவி நமஹ!
  ஓம் காகபுஜண்டாய ஓம் ஸ்ரீம் பகுளாதேவி நமஹ!
  ஓம் வசிஷ்டாய ஓம் ஸ்ரீம் அருந்ததிதேவி நமஹ!
  ஓம் பாரத்வஜாய ஓம் ஸ்ரீம் சுசீலாதேவி நமஹ!
  ஓம் ஆத்ரேய ஓம் ஸ்ரீம் அனுசூயாதேவி நமஹ!
  ஓம் கௌதமாய ஓம் ஸ்ரீம் அகல்யாதேவி நமஹ!
  ஓம் சிவவாக்கிய ஓம் ஸ்ரீம் சேடியம்மாதேவி நமஹ!!
  ஓம் நற்பவி! உரோமச மகரிஷி திருவடிகள் சரணம்!!

  பதி விரதா பத்தினிகள்: அகல்யா, சீதா ,அருந்ததி , திரௌபதி , மண்டோதரி , தாரா , .......  ReplyDelete
 4. மூத்தோனையும் என்பது கனபதியா அல்லது முருகரையா ?

  ReplyDelete
  Replies
  1. அகத்திய அடியவருக்கு வணக்கம்!

   மூத்தோன் = கணபதி

   மிக்க நன்றி
   இரா.சாமிராஜன்

   Delete
 5. நன்றிகள் பல ஐயா...

  படிக்கும் போதே அருள் பெற்றதை உணர்கிறேன்...

  ஓம் ஸ்ரீ லோபமுத்ரா சமேத அருள்மிகு அகத்தியர் அய்யா துணை

  ReplyDelete
 6. Om Agasthiyar Ayyane thunai... Coming Sunday 20th... சதுர்த்தசி திதியில் பூசம் நட்சத்திரத்தில் ஓதியப்பர் முருகப்பெருமான் பிறந்த திருநாள் வருகிறது.

  If anyone wants to go... please go and get Odhiyappar arul.

  ReplyDelete
 7. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ

  ReplyDelete
 8. Jai Sri Ram Om Agatheesaya namaga

  ReplyDelete
 9. அடுத்த பதிவுகாக காத்திருக்கிறேன் .. என் அருள் உனக்கு நிச்சியம் உண்டு என்று அகத்தியர் கூறியது எவ்வளவு அர்த்தமுள்ளது என்று இன்றுதான் நான் உணருகிறேன் ......

  ReplyDelete