​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 13 August 2015

சித்தன் அருள் - 232 - "பெருமாளும் அடியேனும் - 16 - முனிவருக்கு வந்த சோதனை!


நாரதமுனிவர் பரபரப்போடு, கோனேரிக் கரையில் அமர்ந்திருக்கும் வேங்கடநாதன் முன்பு வந்தார்.

"என்ன நாரதா?" என்றார் பெருமாள்.

"கலிபுருஷன் தங்களை மிரட்டிவிட்டுப் போனானாமே! காற்று வழியாகச் செய்தி வந்தது" என்று பீடிகை போட்டார்.

"அதெல்லாம் இருக்கட்டும். அவனை நான் பார்த்துக் கொள்கிறேன், வந்த விஷயத்தைச் சொல்" என்றார் பெருமாள்.

"ஒன்றுமில்லை. ஆதிசேஷன் இங்கு எழுமலையாக அவதாரம் எடுத்தாலும் ஒவ்வொரு மலைக்கும் ஏதேனும் பெயர் சூட்டினால் நன்றாக இருக்குமே என்று மனதில் தோன்றியது. எந்தெந்த மலைக்கு என்னென்ன பெயர் வைக்கலாம், என்று யோசித்தேன். ஒன்றுமே புலப்படவில்லை, நாராயணா!" என்றார் நாரதர்.

"நீ என்ன நினைத்தாய்? அதை முதலில் சொல்" என்றார்.

"நான் நினைத்து என்ன பயன்? தாங்கள் அதனை நிறைவேற்றப் போகிறீர்கள் என்று என்ன நிச்சயம்?" என்றார் நாரதர்.

"ஏன்? என் மீது அவ்வளவு அவநம்பிக்கையா?" என்றார் பெருமாள்.

"நாராயணா! நாராயணா! தங்கள் மீது அவநம்பிக்கையா! எனக்கா? என்ன சுவாமி இது?"

"நாரதப் பெருமானே! மனம் நொந்து போகவேண்டாம்! உங்களிடம் சில வினாடி விளையாடிப் பார்க்கலாம் என்ற ஆசை, அவ்வளவுதான்!" என்றார் பெருமாள்.

"அப்பாடி! தப்பினேன். ஒன்றுமில்லை. வரும் வழியில் பிருகு முனிவரைக் கண்டேன். திருமலையில் ஸ்ரீநிவாசன் திருவிளையாடல்களை ஆரம்பிக்க வில்லையா? என்று கேட்டார்!"

"ம்ம்!  பிறகு?"

"கலிபுருஷன் ஹயக்ரீவரைத் தூண்டிவிட்ட கதையைச் சொன்னேன். வேங்கடவன் அவரை வராஹமித்திரராக மாற்றி அருள் பாலித்த திருவிளையாடல்தான் முதல் திருவிளையாடல் என்றேன். மிக்க மகிழ்ச்சி அடைந்தார். தங்கள் அடுத்த திருவிளையாடல் என்னவோ?" என்று கேட்டார் நாரதர்.

"இதை என்னிடம் ஏன் கேட்கவேண்டும்? கலிபுருஷனிடம் கேட்பது தானே முறை?" என்றார் வேங்கடவன்.

"அவன் யார்? எங்கிருக்கிறான்? இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறான்? என் கண்ணில் படவே இல்லையே நாராயணா!" என்று விழித்தார் நாரதர்.

"இதோ பார். இந்த மலையின் அடியில் நதித் துவாரத்தில் மல்லிகைச் செடிப் பந்தலுக்குப் பக்கத்தில் வட்டமான பாறையில் அமர்ந்து, என்னை நோக்கித் தவம் புரிந்து கொண்டிருக்கிறாரே ஓரு முனிவர்! அங்கு சென்று அவர் அறியாத வண்ணம் மறைந்து நின்று வேடிக்கைப்பார், கலிபுருஷன் என்ன செய்யப் போகிறான் என்பது தெரியும்!" என்றார் வேங்கடவன்.

மலைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்ற நப்பாசையினால் திருமலைக்கு வந்த நாரதருக்கு பகவான் தப்பித் தவறி தன் பெயரைச் சூட, திருவாய் மலர்ந்து அருளமாட்டாரா? என்று நாரதருக்கு ஆசை வந்தது என்னவோ உண்மை.

ஆனால் எல்லாவற்றையும் விட்டுவிட்டு கோனேரிக் கரையில் தவம் செய்யும் முனிவனுக்குப் பின்னால் நின்று பார் என்று திசை திருப்பிவிட்டாரே என்ற ஏமாற்றத்தில் இறைவன் இட்ட கட்டளையை ஏற்று, நாரதர் கோனேரிக் கரைக்கு சென்றார்.

மறைந்து நின்று அந்த வட்டப்பாறையில் நாராயணனை நோக்கித் தவம் செய்யும் முனிவரையே பார்த்துக் கொண்டிருந்தார்.

திடீரென்று அந்த முனிவர் அமர்ந்திருந்த பாறை படிப்படியாக தண்ணீருக்குள் மூழ்க ஆரம்பித்தது.

முனிவர் இதை, ஞான திருஷ்டி மூலம் உணர்ந்தாலும், தண்ணீரில் பாறை மூழ்குவதையோ தானும் அதனோடு சேர்ந்து தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருப்பதைப் பற்றியோ சிறிதும் கவலை கொள்ளாமல் "கோவிந்தா! கோவிந்தா!" என்று விடாமல் சொல்லிக் கொண்டிருந்தார்.

இடுப்பிலிருந்து, கழுத்து, பின்பு தலை ஜடாமுடி வரை தண்ணீரில் மூழ்கினாலும், அந்த முனிவர், இறை த்யானத்தை சிறிதும் விடவே இல்லை! சில மணி நேரம் தண்ணீரில் மூழ்கினாலும், அந்த முனிவர் மூச்சைப் பிடித்துக் கொண்டு, தன் தவவலிமையினால் கோவிந்தனையே த்யானித்துக் கொண்டிருந்தார்.

இதைக் கண்டதும் கலிபுருஷனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.

இவ்வளவு தூரம் இம்சை படுத்துகிறோம், தண்ணீரில் மூழ்க வைத்தோம். அத்தனையும் தாண்டி, இந்த முனிவன் திருமாலையே ஜபம் செய்து கொண்டிருக்கிறானே, இவனிடமிருந்து பக்தியைப் பறித்து அயோக்கியனாக மாற்றி திருமாலுக்கு எதிராகத் தூண்டிவிட்டு, கோனேரிக் கரையிலுள்ள முனிவர்களை எல்லாம் விரட்டி விட எடுத்த முயற்சி சிறிது கூட பலிக்கவில்லையே என்று, எரிச்சல் பட்டான்.

மீண்டும் அந்த முனிவனைத் தண்ணீரிலிருந்து எழுப்பினான். முன்பு எப்படி இருந்தாரோ அந்த நிலையை விட, மிகவும் பிரகாசமாகவே இருந்தார் முனிவர்.

வேரென்ன செய்தால் அந்த முனிவரையும் மற்ற முனிவர்களையும் விரட்டி பக்தி, த்யானத்தையும் கெடுக்க முடியும்? என்று யோசித்தான் கலிபுருஷன்.

அவன் கண்ணில் மிகப் பெரும் பாறை ஒன்று தென்பட்டது.

"இதை மேலிருந்து உருட்டி விட்டால், இதனைக் கண்டு அந்த முனிவரும் மற்ற ஞானிகளும் அங்கிருந்து ஓடிவிடுவார்கள்" என்று நினைத்தான்.

அடுத்த வினாடியே மலையிலிருந்து பாறையை உருட்டிவிட்டான். அது இடி முழக்கம் போல் மலைக்குன்றிலிருந்து வேகமாக அந்த முனிவரை நோக்கி உருண்டு விழுந்து கொண்டிருந்தது.

இதை சற்றும் எதிர்பார்க்காத நாரதர், அதிர்சியில் உறைந்து போய் "நாராயணா!" என்று அலறினார்.

கலிபுருஷன், பாறை உருண்டு முனிவரை நோக்கி செல்வதை பார்த்தபடி, மலையே அதிரும்படி, சிரித்தபடி நின்றான்.

சித்தன் அருள்...................... தொடரும்!

3 comments:

 1. எந்தை தந்தைதந் தைதந்தை தந்தைக்கும்
  முந்தை வானவர் வானவர் கோனொடும்
  சிந்து பூமகி ழும்திரு வேங்கடத்து
  அந்தம் இல்புகழ்க் கார்எழில் அண்ணலே.

  நித்தியசூரிகள் சேளை முதலியாரோடும் வந்து தூவி வணங்குகின்ற பூக்கள் வாசனை வீசுகின்ற திருவேங்கடத்து எழுந்தருளியிருக்கின்ற, முடிவில்லாத புகழையுடைய, நீலமேகம் போன்ற அழகையுடைய அண்ணல் என் குலத்திற்கு முதல்வன் ஆவான்.

  ReplyDelete
 2. "சேளை" maybe corrected as "சேனை"

  ReplyDelete
 3. அன்புள்ள வேலாயுதம் கார்த்திகேயன் அவர்களுக்கு வணக்கம் ,

  தாங்கள் "அந்த நாள் இந்த வருடம் " பற்றி சித்தன் அருளில் வெளியிட்டதை குறித்து வைத்து திருக்குறுங்குடி , நம்பி மலை , பாபநாசம், பொதிகை மலை, திருசெந்தூர் முதலான இடங்களுக்கு சென்று இறை, அகத்தியர் அருளை பெற்று வந்ததை ஒரு கட்டுரையாக புகைப்படங்களுடன் அனுப்பி வைக்கிறேன். அதற்கு தங்கள் ஈமெயில் முகவரி வேண்டும் . ஈமெயில் கிடைத்தவுடன் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். அகத்தியர் அடியவர்கள் அனைவரும் அவரது அருளை பருகிட, இந்த கட்டுரை உதவும் என நினைக்கிறன். நன்றி, வணக்கம்.எனது ஈமெயில் முகவரி :venkatrajlakshmanan@yahoo.com

  அன்புடன் ,
  எல்.வெங்கட்ராஜ் .

  ReplyDelete