​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 31 August 2015

சித்தன் அருள் - 236 - அந்த நாள் இந்த வருடம் - 09-09-2015 - புதன் கிழமை - ஓதியப்பர் நட்சத்திரம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

"அந்த நாள் - இந்த வருடம்" என்கிற தொகுப்பில், ஓதியப்பரின் ஜென்ம நட்சத்திரம் இந்த வருடம் 09-09-2015 (புதன் கிழமை) அன்று வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த நாளின் மகத்துவத்தை (ஏற்கனவே தெரிவிக்கப்பட்டதை) மீண்டும் கீழே தருகிறேன்.

"ஒதிமலை ஓதியப்பர் பிறந்த நாள்:- (போகர் கூற்றின் படி, ஓதியப்பர் ஆவணி மாதம் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தார். ஓதியப்பரின் பிறந்த நாளை அபிஷேக ஆராதனைகளுடன் கொண்டாடுகிற நாள். சித்தர்கள் அனைவரும் அன்று அங்கே ஒன்று கூடி, ஓதியப்பரை தரிசனம் செய்து, பின்னர் 90 நாட்களுக்கு அங்கேயே தங்கி இருக்க தொடங்குகிற நாள்.) 

09/09/2015, புதன் கிழமை, ஆவணி மாதம், த்வாதசி திதி (காலை 07.31 வரை), பூசம் நட்சத்திரம் (காலை 07.03 முதல்) சித்தயோகம்."

ஓதியப்பர், அகத்தியர் அடியவர்களின் ஏற்பாட்டில், அன்றைய தினம் ஓதியப்பருக்கு அபிஷேக ஆராதனை செய்வதாக வேண்டிக் கொள்ளப்பட்டுள்ளது! அனேகமாக புதன்கிழமை அன்று காலையிலேயே (மதியம் 11 மணிக்கு முன்னரே), அபிஷேகம் நடக்க வாய்ப்பு உள்ளது. அடியவர்கள் அனைவரும் அங்கு சென்று, ஓதியப்பர், சித்தர்கள் அருள், அனுபவம் பெற்று, எல்லா நலமும் அடைந்து சிறப்பாக வாழ வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

ஓம் ஓதியப்பர் திருவடிகள் போற்றி!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகள் போற்றி!

Thursday, 27 August 2015

சித்தன் அருள் - 235 - "பெருமாளும் அடியேனும் - 18 - கலிபுருஷனின் தாண்டவம்!


"நாரதரே! இப்பொழுதே உம் கலகத்தை ஆரம்பித்து விட்டீர்களே! இனி நீர் என்ன சொன்னாலும் என் காதில் விழாது. அதே சமயம் என்னை வெற்றி பெற யார் வந்தாலும் நடக்காது" என்ற கலிபுருஷன் 

"அந்தரத்தில் நிறுத்திய அந்தப் பாறையை நான் இப்போது கீழே தள்ளப்போகிறேன். உங்களது சக்தியால் முடிந்தால் அந்த முனிவரைக் காப்பாற்றிக் கொள்ளும்" என்றான்.

"முனிவரே! முனிவரே! என் பக்கத்தில் வாரும்" என்று அங்கே ஜபம் செய்து கொண்டிருந்த முனிவரை நாரதர் அழைத்தார். ஆனால் அவரோ "கோவிந்தா! கோவிந்தா!" என்று த்யானித்துக் கொண்டிருந்தாரே தவிர நாரத முனியின் குரலுக்குச் செவி சாய்த்துக் கண் திறக்கவும் இல்லை, பதைபதைத்துப் எழுந்திருக்கவும் இல்லை.

கலிபுருஷன் அட்டகாசமாகச் சிரித்தான்.

கடுமையான முயற்சியின் பேரில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த பாறையை அந்த முனிவரை நோக்கி உருட்டிவிட்டான், கலிபுருஷன்.

மிகப் பயங்கரமான சப்தத்தோடு அந்தப் பாறாங்கல் கோனேரிக் கரையில் விழுந்து நொறுங்கியது. அப்போது கிளம்பிய புழுதி கோனேரிக் கரையையே மறைத்தது.  இதனால் கோனேரிக் கரையெல்லாம் நீர் பொங்கி எழுந்து, நதிக்கரையோரம் அமைந்திருந்த பர்ணசாலைகள், குடிசைகள், நந்தவனங்கள், அத்தனையும் அழிந்தது, தூள் தூளானது.

இதைக் கண்டு அங்கு தபசு செய்து கொண்டிருந்த அத்தனை முனிவர்களும் ஏதோ ஒரு பெரும் பிரளயம்தான் வந்துவிட்டதோ என்று நடுங்கி, பதறியடித்துக் கொண்டு அங்குமிங்கும் ஓடினார்கள்.

சில நாழிகையில் எல்லாம் அடங்கியது.

ஒருவருக்கொருவர் என்ன நடந்தது என்று தெரியாமல், சைகையால் பேசிக்கொண்ட பொழுது அவர்கள் எல்லோரும் கேட்கும் வண்ணம் கலிபுருஷன் கர்ணகடூரமாகச் சொன்னான்.

"முனிபுங்கவர்களே! இப்போது நடந்தது கண்டே மிரண்டு போயிருக்கிறீர்களே! இது என்னுடைய ஆரம்ப விளையாட்டு. என் மொத்த விளையாட்டும் காண இன்னும் பல ஆயிர வருஷங்கள் ஆகும். நீங்கள் அத்தனை பேரும் இங்கிருந்து ஓடிப்போங்கள்! இனிமேல் யாரும் இங்கிருந்து தவம் புரிய அனுமதிக்கமாட்டேன். அப்படி இங்கு இருக்க விரும்பினால், இனிமேல் "கலிபுருஷாய நமஹ!" என்றுதான் த்யானம் செய்து என்னை ஜபிக்கவேண்டும். இதைத் தவிர வேறு எந்த இறை த்யானத்தை ஜெபித்தாலும் அவர்கள் அனைவருக்கும், அதோ அந்த வட்டப்பாறையில், பல நூறு ஆண்டுகளாகத் தினம் திருமலையில் ஜபித்துக் கொண்டிருந்தானே, உங்கள் ரிஷிகளின் தலைவன், அவனுக்கு நேர்ந்த கதிதான் உங்களுக்கும். இது என்னுடைய முதல் எச்சரிக்கை" என்று முழங்கினான்.

அந்த வட்டப்பாறையில் மௌனமாக அமர்ந்திருந்த தலையாய முனிவரைக் காணவில்லை. வட்டப்பாறையும் நொருங்கிக் கிடந்தது. இதைக் கண்டு நாரதர் உட்பட அத்தனை முனிவர்களும் பீதி அடைந்தனர்.

அப்பொழுது.........  

நாரதருக்கு ஒரு நாழிகை ஒன்றுமே ஓடவில்லை.  பயந்து நடுங்கியபடி நாராயணனை வேண்டி, பின்பு தன் கண்ணை மெல்லத் திறந்தார். எதிரே கலிபுருஷன் ஏகப்பட்ட திமிர் கலந்த சிரிப்போடு கேட்டான்.

"என்ன நாரதரே! எங்கே உங்கள் முனிவர்?"

நாரதர் இதற்கு பதில் சொல்லவில்லை.

"அநியாயமாக இவன் ஒரு உயிரை கொன்றிருக்கிறான். இவனை என்ன செய்வது?" என்று மனமும், உடலும் வெம்பிப்போய் வெறுத்துப் போனார்.

"என்ன நாரதரே! என் பலத்தைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. பாவம் அந்த முனிவரின் உயிரை நீங்களாவது காப்பாற்றி இருக்கலாம். ம்ம். உங்களுக்கு அந்த சக்தி இல்லை போலும்.  சரி, விட்டுத் தள்ளுங்கள். நீங்கள் எல்லாம் தெய்வம் என்று சொல்கிறீர்களே, அந்த வேங்கடவனாவது சட்டென்று வந்து தன் பக்தனை காப்பாற்றி இருக்கலாம். பாவம் அவர்தான் கல்லாக இருக்கிறாரே. பின் அவர் எப்படி வந்து காப்பாற்ற முடியும்?" என்று கொக்கரித்தான்.

"கலிபுருஷா! நீ செய்தது மகா பிரம்மஹத்தி தோஷம் தெரியுமா?" என்றார் நாரதர்.

"எப்படி? எப்படி? எப்படி?" என்றான்.

"அநியாயமாக ஒரு தவசீலரின் உயிரை கொன்றிருக்கிறாய். இறக்கும் பொழுது அவர் என்ன சாபம் இட்டாலும் அது உன்னை அடியோடு நசுக்கி விடும் தெரியுமா?"

"அப்படியா! கேட்கவே ரொம்ப சுவாரசியமாக இருக்கிறதே! இன்னொருமுறை சொல்லும். அதாவது அந்த பூலோக தபசி, பாறை விழுந்து நசுங்கி உயிரை விடும் பொழுது எனக்கு சாபம் இடுவாராம். அந்த சாபம் என்னை அடியோடு நசுக்கி விடுமாம். பேஷ்! பேஷ்! அது சரி! அவர் தான் நசுங்கி, ஜாலத்தோடு ஜலமாய் காணாமல் போய்விட்டாரே! இதற்கு, என்ன பதிலை சொல்லப் போகிறீர்!" என்றான் கலிபுருஷன்.

"கலிபுருஷா! அநியாயம் செய்பவனை கொல்வது நல்லது. தர்மத்தை கொன்றவனுக்கு தெய்வம் தண்டனை கொடுத்திருக்கிறது. போயும் போயும் ஒரு அப்பாவி தவசியிடமா உன் வீரத்தை காட்ட வேண்டும்? இது உனக்கே கேவலமாக இல்லை?" என்றார் நாரதர்.

"இனிமேல், என் வேலையே இதுதானே.  அப்பாவிகளைத்தான் நான் கொல்லுவேன்.    குறிப்பாக யார் யார் வேங்கடவனை நித்தம் நித்தம் தொழுகிறார்களோ, அவர்களை, அவர்கள் குடும்பத்தினரை, வம்சத்தை, வாரிசுகளை, சுக்கு நூறாக்குவேன். வேண்டுமெனில் திருமால் வந்து அவர்களை காப்பாற்றட்டுமே. நானா குறுக்கே நிற்கிறேன்?" என்று மீண்டும் முழங்கினான்.

பின்னர் சிறிது நேரம் கழித்து " உயிர் போனாலும் உடலாவது மிஞ்சும் என்று பார்த்தேன். உடலும் கிடைக்கவில்லை. என் பலத்தை இப்பொழுதாவது புரிந்து கொண்டீர்களா நாரதரே!" என்று அட்டகாசமாக சிரித்துச் சொன்னான். 

"இது பலமல்ல கலிபுருஷா! பிரம்மஹத்தி தோஷத்தின் முதல் பகுதி. அநியாயமாக ஒரு தவசீலரை கொன்றுவிட்டாய். இந்த பாபம் உன்னை சும்மாவிடாது" என்றார் நாரதர்.

"என்ன நாரதரே! எனக்கே சாபமிடுகிறீர்! ஏன் உங்கள் தெய்வீக சக்தியால் அந்த முனிவரை காப்பாற்றி இருக்கலாமே!" என்றான்.

"என்னுடைய சக்தி அவரை காப்பாற்றவில்லை என்றாலும், அவருடைய கடும்தவம் முனிவரை காப்பாற்றி இருக்கும்.  உண்மையிலேயே முனிவர் மரணமடைந்திருந்தால், அவரது பூத உடல் இங்கிருந்திருக்கும்.  இப்போது உடலும் இல்லை என்பதால், அவர் உயிரோடுதான் இருக்கிறார் என்று அர்த்தம்" என்ற நாரதர் தொடர்ந்து கூறினார்.

"இனிமேல் உன்னோடு எனகென்ன பேச்சு? என்னை இங்கு அனுப்பிய வேங்கடவனிடமே நேரிடையாக சென்று உனது அக்ரமமான செயலைச் சொல்லிவிடுகிறேன்.  அப்புறம் உன் பாடு, பெருமாள் பாடு. எனக்கு எதற்கு பொல்லாப்பு" என்று முடித்துவிட்டு திருமலைக்கு ஏகினார்.

நாரதர் போனதை வேடிக்கை பார்த்த கலிபுருஷன், அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தான்.

சித்தன் அருள்................ தொடரும்!

Sunday, 23 August 2015

சித்தன் அருள் - 234 - எட்டு போட்டு எட்டிப் போடுங்கள் நோயை!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

"எட்டு" போடுகிறவனுக்கு "நோய்" எட்டிப் போகும் என்பது ஒரு பழமொழி. மனித மன, உடல் பிரச்சினைக்கு காரணம் அவன் கர்மா, அந்த கர்மா வழி உடலுக்கு வருகிறது "நோய்". நோய் வருத்தும் பொழுது, வருந்தும் உடல், அதிலிருந்து விடுபட்டு நிரந்தர நிம்மதியை தேடிக் கொள்ளவே விரும்பும்.

சித்தர் வழி என்பது அனைத்துக்கும் தெளிவான விடைகளை தருகிறது. சமீபத்தில் ஒரு பெரியவரிடமிருந்து எனக்குத் தெரிய வந்த ஒரு பயிற்சி முறையை இங்கு விளக்குகிறேன்.

அவரை கண்டதும் எதோ ஒன்று கேட்கவேண்டும் என்று தோன்ற, நான் வாய் திறப்பதற்குள் அவரே,

"எட்டுப் போடு! எல்லாம் பறந்தோடும்!" என்றார்.

எட்டுபோடு என்ற வார்த்தையை விலகிச்செல் என்று அர்த்தம் தரித்துக் கொண்டு, என் கேள்வியை விரிவாக கேட்டேன்.

அப்பொழுதும், அதே பதில் தான், ஆனால் இந்தமுறை சற்று புன்சிரிப்புடன்.

நம்மில் பலரும், நீரிழவு நோய், உயர் அல்லது தாழ்ந்த ரத்த அழுத்தம், மார்புச்சளி போன்றவைகளால் மிக பாதிப்படைந்திருப்போம். எத்தனைதான் மருந்து சாப்பிட்டாலும் (சாப்பாட்டில் கட்டுப்பாடு இல்லாமல் போவதால்) மறுபடியும் இவை தாக்கும். இந்த நோய்களை, கொல்லாமல் கொல்லும் நோய்கள் தரவரிசையில் வைத்துள்ளனர் சித்தர்கள். இதிலிருந்து விடுபட்டு, நாம் மனிதர்கள், நலமாக வாழ வேண்டும் என்பதற்காக இந்த முறையை வகுத்துக் கொடுத்துள்ளனர். அதை கீழே தருகிறேன்.

காலை நேரத்திலோ, அல்லது நேரம் கிடைக்கும் பொழுதோ, ஒரு அறையிலோ அல்லது வெட்டவேளியிலோ (குறைந்தது 15 அடி நீளம் வேண்டும்) எட்டு போடுகிற வடிவத்தில் குறைந்தது 30 நிமிடங்கள் நடை பயிற்சி செய்ய வேண்டும். முதல் 15 நிமிடங்கள் தெற்கிலிருந்து வடக்காக நடந்தால், அடுத்த 15 நிமிடங்கள் வடக்கிலிருந்து தெற்காக நடக்க வேண்டும். இதை ஒரு நாளைக்கு இருமுறை செய்ய வேண்டும். காலையும், மாலையும் வேளைகள் மிக வசதியாக இருக்கும்.

இதை செய்வதால் என்ன நடக்கும்! அதையும் அவரே கூறினார்.

  1. பயிற்சி தொடங்கிய அன்றே மார்பு சளி கரைந்து வெளியேறுவதை காணலாம்.
  2. இந்த பயிற்சியை இருவேளை செய்துவந்தால், உள்ளங்கை கை விரல்கள் சிவந்திருப்பதை காணலாம். அதாவது ரத்த ஓட்டத்தை சமன்படுத்துகிறது என்று அர்த்தம்.
  3. நிச்சயம் நீரிழவு நோய் (சர்க்கரை வியாதி) குறைந்து முற்றிலும் குணமாகும். (பின்னர் மாத்திரை, மருந்துகள் தேவை இல்லை).
  4. குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி, மலச்சிக்கல் போன்றவை தீரும்.
  5. கண் பார்வை அதிகரிக்கும். ஆரம்ப நிலை கண்ணாடி அணிவதை தவிர்க்கலாம்.
  6. கேட்கும் திறன் அதிகரிக்கும்.
  7. உடல் சக்தி பெருகும்- ஆதார சக்கரங்கள் சரியாக செயல்படும்.
  8. குடல் இறக்க நோய் வருவதை தடுக்கும்.
  9. ரத்த அழுத்தம் நிச்சயமாக கட்டுப்பாட்டில் வரும்.
  10. பாத வலி, மூட்டுவலி மறையும்.
  11. சுவாசம் சீராகும் அதனால் உள் உருப்புக்கள் பலம் பெரும்.
சரி! இதெப்படி நடக்கிறது என்று உங்களுக்குள் கேள்வி ஏழும். "8" வடிவில் நடை பயிற்சி செய்யும் பொழுது நீங்களே உணர்வீர்கள், அந்த வடிவம் "முடிவில்லாதது" மட்டுமல்ல, நமது ஆதார சக்கரங்களை தட்டி எழுப்பி, சம நிலை படுத்துகிறது. இதை நமக்கு உடல் பயிற்சியாக சொல்லித்தந்த சித்தர்கள், இதையே "வாசி யோகத்தில்" (மூச்சு பயிற்சியில்) உள்ளுக்குள்ளே சுவாசத்தை விரட்டி எட்டு போடுவார்கள் என்பது தெரியுமோ?

விருப்பம் உள்ளவர்கள், முயற்சி செய்து பலனடையுங்கள்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திர சமேத அகத்தியர் திருவடிகள் போற்றி!

Thursday, 20 August 2015

சித்தன் அருள் - 233 - "பெருமாளும் அடியேனும் - 17 - நாரதரும் கலிபுருஷனும்!


ஒரு அப்பாவி முனிவர் மீது பெரும் பாறையை உருட்டி கலிபுருஷன் கொல்ல முயற்சி செய்வதைக் கண்டு, நாரதருக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை.

சதாசர்வகாலமும் ஸ்ரீமன்நாராயணனையே தியானித்துக் கொண்டிருக்கும் இந்த முனிவருக்கு கலிபுருஷன் எதற்காக இப்படியொரு தொல்லையைக் கொடுத்துப் பழிவாங்க வேண்டும் என்பதற்கான காரணமும் புரியவில்லை.  திருமால் இதையெல்லாம் பார்த்துக் கொண்டு அமைதியாக இருப்பதன் காரணத்தையும் நாரதர் தெரிந்து கொள்ள முடியாது போயிற்று.  இருப்பினும் தன் கண் முன் ஒரு கொடிய பாதகச் செயல் நடப்பதை எப்பாடு பட்டேனும் தடுத்தே ஆகவேண்டும், என்று எண்ணினார்.

உடனே தன்னுடைய தெய்வீக பலத்தால், மலையிலிருந்து வேகமாக வரும் பாறையை அப்படியே தடுத்து நிறுத்தினார்.  நாரதரின் தெய்வீக சக்தியால், ஒரு சிறு மலைபோல் காணப்பட்ட அந்தப் பெரும் பாறை விழாமல் அப்படியே அந்தரத்தில் அசையாமல் நின்றது.

இதைக் கண்டு கலிபுருஷனுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.

"யாரது இந்தச் செயலைச் செய்தது?" என்று ஆக்ரோஷத்தோடு, பெருங்கோபம் கொண்டு இங்கும் அங்கும் தேடினான்.

அப்போது, மறைந்த இடத்திலிருந்து நாரதர் வெளியே வந்தார்.

நாரதரைக் கண்டதும், "இவருக்கு இங்கென்ன வேலை? ஒரு வேளை வேங்கடவனே நாரதரை இங்கு அனுப்பி இப்படிப்பட்ட திருவிளையாடலை செய்யச் சொல்லி இருப்பாரோ?" என்று சந்தேகப்பட்டான் கலிபுருஷன்.

கலிபுருஷன் எப்படி இருப்பான் என்று நாரதர் எண்ணியிருந்தாரோ அதைவிடப் பன்மடங்கு அதர்மத்தின் மொத்த உருவமாக இருக்கிறான் என்று அவனைக் கண்டதும் நாரதர், புரிந்து கொண்டார்.

"இதெல்லாம், நாரதருக்கு எதற்கு?" என்று நேரடியாகவே கலிபுருஷன் நாரதரிடம் கேட்டான்.

"ஏன்? இது தர்மம்தானே?" என்றார் நாரதர்.

"எது தர்மம், எது அதர்மம் என்பது எனக்குத் தெரியும். என் விஷயத்தில் எப்படி நீங்கள் தலையிடலாம்?" என்றான் கலிபுருஷன்.

"எது உன் விஷயம்? ஓர் அப்பாவி முனிவரை தண்ணீரில் அமுக்கிக் கொல்ல முயன்றாய். அது முடியாத பொழுது பாறையை உருட்டிக் கொல்ல முயற்சிப்பது, இது உன் விஷயமாக இருந்தால், வேங்கடவனின் பக்தனைக் காப்பாற்றுவது என் பொறுப்பு" என்றார் நாரதர்.

"நாரதரின் இந்த செய்கை எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது?"என்றான் கலிபுருஷன்.

"ஏன்?" என்றார் நாரதர்.

"பொதுவாக, கலக்கம் ஏற்படுத்துவது என்பது நாரதருக்குக் கைவந்த கலை. அதைச் செய்து கொண்டிருக்கும் நாரதர், முதன் முறையாக தன் தெய்வீக சக்தியால் ஓர் உயிரைக் காப்பாற்றுகிறார்............ என்றால் அது இதுதான் முதல் முறை என்று எண்ணுகிறேன். இல்லையா நாரதரே!" என்றான் கலிபுருஷன் கிண்டலாக.

"நீ சொன்னதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் ஒன்றை மட்டும் மறந்துவிட்டாய். நான் கலக்கம் செய்தாலும் அது நன்மையில்தான் முடியும் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. அது உனக்கு மட்டும் தெரியாமல் போனதுதான் எனக்கு ஆச்சரியம்" என்று பதில் சொன்னார் நாரதர்.

"ம்ம்! இன்னும் என்ன நடக்கப் போகிறதோ! யார் அறிவார்?" என்றான் கலிபுருஷன்.

"ஆமாம்........... ஆமாம், இது உன்னுடைய சாம்ராஜ்ய காலம், ஏன் அதை கலிகாலம் என்று கூடச்சொல்லலாம். நீ என்னென்ன அநீதிகளை செய்ய நினைக்கிறாயோ, அத்தனைக்கும் கலி உருவாக அவதாரம் எடுத்திருக்கும் வேங்கடவன் தக்க பதிலடி கொடுக்கப் போகிறார், என்பதை மட்டும் மறந்து விடாதே கலிபுருஷா" என்று எச்சரிக்கை விடுத்தார் நாரதர்.

"அதிருக்கட்டும் நாரதரே! இப்போது அந்தரத்தில் தொங்கும் பாறாங்கல்லை என் அசுரபலத்தால், அந்த முனிவரின் தலை மீது விழச்செய்யப் போகிறேன், முடிந்தால் தடுத்துப் பாரும்" என்று சவால் விட்டான் கலிபுருஷன்.

"வேண்டாம்! கலிபுருஷா! அந்த முனிவரால் உனக்கென்ன கெடுதல்?" என்றார் நாரதர்.

"நிறையச் சொல்லலாம். அவர் சதா சர்வகாலமும் ஸ்ரீமன்நாராயணனைத் தியானம் செய்து கொண்டிருக்கிறார்!" என்றான் கலிபுருஷன்.

"இதில் என்ன தவறு இருக்கிறது?" என்றார் நாரதர்.

"கூடாது. இந்த முனிவர் இப்படிச் செய்வதால் இவரைத் தலைமையாகக் கொண்டு பல ஆயிரக்கணக்கான முனிவர்கள் இங்கு வந்து ஜபிக்கிறார்கள்."

"நல்லதுதானே! இந்த பூமி புண்ணிய பூமியாக மாறுகிறது என்பது சந்தோஷம்தானே!" என்றார் நாரதர்.

"இல்லை எனக்கு இதில் உடன்பாடு இல்லை. இதுவரை "துதி" செய்து வந்தது போதும். இனிமேல் இந்த பூலோகம் என்னுடைய பூமி. நான்தான் சர்வாதிகாரி. என் சொற்படிதான் இங்குள்ள அனைவரும் நடக்கவேண்டும். இதற்கு முதலாவதாக யாரும் "பக்தியோடு" இருக்கக் கூடாது. அப்படி யார் பக்தியோடு தினம் தியானம் செய்கிறார்களோ, அவர்கள் உயிரை எடுப்பேன்" என்றான் கலிபுருஷன்.

"இது பாபமில்லையா?" என்றார் நாரதர்.

"நாரதரரே! இனிமேல் நான் செய்யும் ஒவ்வொரு செயலும் உங்கள் கண்ணுக்குப் பாபமாகத் தெரியும். இந்த முனிவரை பாறையால் கொல்வதைப் பார்த்து இங்குள்ள மற்ற முனிவர்களும் பயந்து நடுங்க வேண்டும். அதோடு பக்தியை அறவே மறந்து முனிவர்கள் ரிஷிகள் பொதுமக்கள் உட்பட, அனைவரும் பகுத்தறிவுவாதிகளாக மாற வேண்டும்" என்றான் கலிபுருஷன்.

"பகுத்தறிவுவாதி என்றால் எப்படி?"

"நாரதரே! உமக்கு தெரியாததா? இருந்தாலும் சொல்கிறேன். கேளும். யாரும் இறைவழிபாடு செய்யக் கூடாது. கோயிலுக்குச் செல்லக்கூடாது. தர்மம், சாஸ்திரம், நியாயம், நேர்மை, உண்மை என்று சொல்லுகிற பாதையை அறவே மறந்து அவரவர்கள் தங்கள் இஷ்டப்படி சுதந்திரமாகச் செயல்பட வேண்டும்."

"இதென்ன அநியாயமாக இருக்கிறதே!" என்றார் நாரதர்.

"என்ன அதற்குள் வாயைப் பிளக்கிறீர்? இன்னும் நிறைய இருக்கிறது. அதையும் சொல்லிவிடுவேன். ஆனால்...."

"என்ன ஆனால்..?" என்றார் நாரதர்.

"அதை நீங்கள் எல்லோரிடமும் சொல்லி எழுச்சியை உண்டாக்கி என் திட்டத்தைக் கெடுத்துவிடுவீர்" என்றான் கலிபுருஷன்.

"நாராயணா! நாராயணா! எனக்கெதற்கு வீண் பழி? நீ என்னை நம்பி தாராளமாகச் சொல்லலாம்" என்றார் நாரதர்.

"நாரதரே! உம்மை நான் அவ்வளவு எளிதில் நம்பி விடுவேனா? என்ன இருந்தாலும், நீரோ நாராயணன் பக்தர். அதுமட்டுமல்ல. எனக்கெதிராக சதியும் செய்திருக்கிறீர், உங்களை எப்படி நம்புவேன்?" என்றான் கலிபுருஷன்.

"கலிபுருஷா இன்னும் பல ஆயிரம் வருஷங்கள் இந்த பூலோகம் உன் கையால் சிதறி பக்தியை மறந்து அநியாயங்களின் வடிவமாகத் திகழப் போகிறது. உன்னை அசைக்க யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் முன் வர மாட்டார்கள் என்பதும் எனக்கு இப்போது கொஞ்சம் கொஞ்சமாகத் தெரியவருகிறது. அப்படியிருக்க நீ என்னென்ன திட்டங்கள் வைத்திருக்கிறாயோ. யாரையெல்லாம் எப்படி மனசால், புத்தியால், செய்கையால் கெடுக்கப் போகிறாயோ, நானறியேன். ஆனாலும் இதையெல்லாம் தெரிந்த திருமால் உன்னை அந்த அளவுக்கு விட்டு வைப்பாரா? என்பதுதான் எனக்கேற்பட்ட சந்தேகம்" என்றார் நாரதர்.

சித்தன் அருள்............... தொடரும்!

Thursday, 13 August 2015

சித்தன் அருள் - 232 - "பெருமாளும் அடியேனும் - 16 - முனிவருக்கு வந்த சோதனை!


நாரதமுனிவர் பரபரப்போடு, கோனேரிக் கரையில் அமர்ந்திருக்கும் வேங்கடநாதன் முன்பு வந்தார்.

"என்ன நாரதா?" என்றார் பெருமாள்.

"கலிபுருஷன் தங்களை மிரட்டிவிட்டுப் போனானாமே! காற்று வழியாகச் செய்தி வந்தது" என்று பீடிகை போட்டார்.

"அதெல்லாம் இருக்கட்டும். அவனை நான் பார்த்துக் கொள்கிறேன், வந்த விஷயத்தைச் சொல்" என்றார் பெருமாள்.

"ஒன்றுமில்லை. ஆதிசேஷன் இங்கு எழுமலையாக அவதாரம் எடுத்தாலும் ஒவ்வொரு மலைக்கும் ஏதேனும் பெயர் சூட்டினால் நன்றாக இருக்குமே என்று மனதில் தோன்றியது. எந்தெந்த மலைக்கு என்னென்ன பெயர் வைக்கலாம், என்று யோசித்தேன். ஒன்றுமே புலப்படவில்லை, நாராயணா!" என்றார் நாரதர்.

"நீ என்ன நினைத்தாய்? அதை முதலில் சொல்" என்றார்.

"நான் நினைத்து என்ன பயன்? தாங்கள் அதனை நிறைவேற்றப் போகிறீர்கள் என்று என்ன நிச்சயம்?" என்றார் நாரதர்.

"ஏன்? என் மீது அவ்வளவு அவநம்பிக்கையா?" என்றார் பெருமாள்.

"நாராயணா! நாராயணா! தங்கள் மீது அவநம்பிக்கையா! எனக்கா? என்ன சுவாமி இது?"

"நாரதப் பெருமானே! மனம் நொந்து போகவேண்டாம்! உங்களிடம் சில வினாடி விளையாடிப் பார்க்கலாம் என்ற ஆசை, அவ்வளவுதான்!" என்றார் பெருமாள்.

"அப்பாடி! தப்பினேன். ஒன்றுமில்லை. வரும் வழியில் பிருகு முனிவரைக் கண்டேன். திருமலையில் ஸ்ரீநிவாசன் திருவிளையாடல்களை ஆரம்பிக்க வில்லையா? என்று கேட்டார்!"

"ம்ம்!  பிறகு?"

"கலிபுருஷன் ஹயக்ரீவரைத் தூண்டிவிட்ட கதையைச் சொன்னேன். வேங்கடவன் அவரை வராஹமித்திரராக மாற்றி அருள் பாலித்த திருவிளையாடல்தான் முதல் திருவிளையாடல் என்றேன். மிக்க மகிழ்ச்சி அடைந்தார். தங்கள் அடுத்த திருவிளையாடல் என்னவோ?" என்று கேட்டார் நாரதர்.

"இதை என்னிடம் ஏன் கேட்கவேண்டும்? கலிபுருஷனிடம் கேட்பது தானே முறை?" என்றார் வேங்கடவன்.

"அவன் யார்? எங்கிருக்கிறான்? இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறான்? என் கண்ணில் படவே இல்லையே நாராயணா!" என்று விழித்தார் நாரதர்.

"இதோ பார். இந்த மலையின் அடியில் நதித் துவாரத்தில் மல்லிகைச் செடிப் பந்தலுக்குப் பக்கத்தில் வட்டமான பாறையில் அமர்ந்து, என்னை நோக்கித் தவம் புரிந்து கொண்டிருக்கிறாரே ஓரு முனிவர்! அங்கு சென்று அவர் அறியாத வண்ணம் மறைந்து நின்று வேடிக்கைப்பார், கலிபுருஷன் என்ன செய்யப் போகிறான் என்பது தெரியும்!" என்றார் வேங்கடவன்.

மலைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்ற நப்பாசையினால் திருமலைக்கு வந்த நாரதருக்கு பகவான் தப்பித் தவறி தன் பெயரைச் சூட, திருவாய் மலர்ந்து அருளமாட்டாரா? என்று நாரதருக்கு ஆசை வந்தது என்னவோ உண்மை.

ஆனால் எல்லாவற்றையும் விட்டுவிட்டு கோனேரிக் கரையில் தவம் செய்யும் முனிவனுக்குப் பின்னால் நின்று பார் என்று திசை திருப்பிவிட்டாரே என்ற ஏமாற்றத்தில் இறைவன் இட்ட கட்டளையை ஏற்று, நாரதர் கோனேரிக் கரைக்கு சென்றார்.

மறைந்து நின்று அந்த வட்டப்பாறையில் நாராயணனை நோக்கித் தவம் செய்யும் முனிவரையே பார்த்துக் கொண்டிருந்தார்.

திடீரென்று அந்த முனிவர் அமர்ந்திருந்த பாறை படிப்படியாக தண்ணீருக்குள் மூழ்க ஆரம்பித்தது.

முனிவர் இதை, ஞான திருஷ்டி மூலம் உணர்ந்தாலும், தண்ணீரில் பாறை மூழ்குவதையோ தானும் அதனோடு சேர்ந்து தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருப்பதைப் பற்றியோ சிறிதும் கவலை கொள்ளாமல் "கோவிந்தா! கோவிந்தா!" என்று விடாமல் சொல்லிக் கொண்டிருந்தார்.

இடுப்பிலிருந்து, கழுத்து, பின்பு தலை ஜடாமுடி வரை தண்ணீரில் மூழ்கினாலும், அந்த முனிவர், இறை த்யானத்தை சிறிதும் விடவே இல்லை! சில மணி நேரம் தண்ணீரில் மூழ்கினாலும், அந்த முனிவர் மூச்சைப் பிடித்துக் கொண்டு, தன் தவவலிமையினால் கோவிந்தனையே த்யானித்துக் கொண்டிருந்தார்.

இதைக் கண்டதும் கலிபுருஷனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.

இவ்வளவு தூரம் இம்சை படுத்துகிறோம், தண்ணீரில் மூழ்க வைத்தோம். அத்தனையும் தாண்டி, இந்த முனிவன் திருமாலையே ஜபம் செய்து கொண்டிருக்கிறானே, இவனிடமிருந்து பக்தியைப் பறித்து அயோக்கியனாக மாற்றி திருமாலுக்கு எதிராகத் தூண்டிவிட்டு, கோனேரிக் கரையிலுள்ள முனிவர்களை எல்லாம் விரட்டி விட எடுத்த முயற்சி சிறிது கூட பலிக்கவில்லையே என்று, எரிச்சல் பட்டான்.

மீண்டும் அந்த முனிவனைத் தண்ணீரிலிருந்து எழுப்பினான். முன்பு எப்படி இருந்தாரோ அந்த நிலையை விட, மிகவும் பிரகாசமாகவே இருந்தார் முனிவர்.

வேரென்ன செய்தால் அந்த முனிவரையும் மற்ற முனிவர்களையும் விரட்டி பக்தி, த்யானத்தையும் கெடுக்க முடியும்? என்று யோசித்தான் கலிபுருஷன்.

அவன் கண்ணில் மிகப் பெரும் பாறை ஒன்று தென்பட்டது.

"இதை மேலிருந்து உருட்டி விட்டால், இதனைக் கண்டு அந்த முனிவரும் மற்ற ஞானிகளும் அங்கிருந்து ஓடிவிடுவார்கள்" என்று நினைத்தான்.

அடுத்த வினாடியே மலையிலிருந்து பாறையை உருட்டிவிட்டான். அது இடி முழக்கம் போல் மலைக்குன்றிலிருந்து வேகமாக அந்த முனிவரை நோக்கி உருண்டு விழுந்து கொண்டிருந்தது.

இதை சற்றும் எதிர்பார்க்காத நாரதர், அதிர்சியில் உறைந்து போய் "நாராயணா!" என்று அலறினார்.

கலிபுருஷன், பாறை உருண்டு முனிவரை நோக்கி செல்வதை பார்த்தபடி, மலையே அதிரும்படி, சிரித்தபடி நின்றான்.

சித்தன் அருள்...................... தொடரும்!

Thursday, 6 August 2015

சித்தன் அருள் - 231 - "பெருமாளும் அடியேனும் - 15 - கலிபுருஷனின் சவால்!


"என்னைச் சரணடைந்தால் அவர்களைக் கடைசிவரை காப்பாற்றுவேன்" என்பது ஸ்ரீமன் நாராயணனின் அருள்வாக்கு!

இதனால் எல்லோருமே பெருமாளை நித்தம் நித்தம் சரண் அடைந்தனர். அவர்கள் அத்தனை பேருக்கும் வேங்கடவன் அடைக்கலம் தந்து கொண்டிருந்தார்.

"என்னுடைய பிரார்த்தனைக்கும் பலன் கிட்டுமா?" என்று கலிபுருஷனே பகவானிடம் கேட்டபொழுது, அங்கிருந்த எல்லோருக்கும் அதிர்ச்சி.

ஆனால், வேங்கடவன் மட்டும் மௌனமாக அதே சமயம் அர்த்தபுஷ்டியோடு சிரித்தார்.

"உன்னுடைய பிரார்த்தனை நல்லபடியாக இருந்தால் நிச்சயம் பலன் கிட்டும்" என்றார்.

"எது நல்லது, எது கெட்டது என்பதை எதிர்காலம்தான் முடிவு செய்யவேண்டும். இப்போது என் பிரார்த்தனை  என்பது இந்த "கலியுகம்" வெகு விரைவாக விருட்சம் போல் வளரவேண்டும். ஆத்திகம் அழிந்து நாத்திகம் செழிக்கவேண்டும்".

"பிறகு?"

"இந்த நாத்திகம் பூலோகம் எங்கும் பரவி வியாபித்து ஓங்கி வளர வேண்டும். அது மட்டுமல்ல என் ஆதிக்கம், இன்னும் பத்தாயிரம் ஆண்டுகளாக இருக்க வேண்டும். அதற்கு எந்த விதமான இடையூறும் இல்லாமல் தாங்கள்தான் அருள்பாலிக்க வேண்டும்" என்றான் கலிபுருஷன்.

பகவான் இதைக்கேட்டு தனக்குள் சிரித்துக் கொண்டார்.

"கலிபுருஷா! இதை உன்னைப் படைத்த பிரம்மாவிடம் கேட்கலாமே! எதற்காக என்னை நோக்கி வந்தாய்?" என்றார் பெருமாள்.

"தாங்கள் தானே கூறினீர்கள்! தங்களைச் சரண் அடைந்தால் கடைசிவரை காப்பாற்றுவதாக,  அதனால்தான் கேட்டேன்" என்றான்.

"நியாயம்! ஆனால் இது உன்னைத்தவிர மற்ற அனைவருக்கும் தான் பொருந்தும். இது உனக்கே தெரியுமே?" என்றார் பெருமாள்.

"தாங்கள் பகவான், அதுவும் என்னை அழிப்பதற்கென்றே புதிய அவதாரம் எடுத்திருக்கிறீர்கள். அப்படியானால் என்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டாமா?" என்றான் கலிபுருஷன்.

"ஓ! அப்படி சொல்கிறாயா? அப்படியானால் நல்ல எண்ணத்தோடு என்னை நோக்கியோ அல்லது பிரம்மாவை நோக்கியோ அல்லது சிவபெருமானை நோக்கியோ, கடுந்தவம் புரிந்திருக்க வேண்டும். அப்படியொன்றும் செய்யாமல் "வரம்" போல் கேட்கிறாயே, இது என்ன அநியாயம்?" என்றார் வேங்கடவன்.

"நியாயம், அநியாயத்தைப் பற்றிப் பேச வரவில்லை. தங்களிடம் என் வேண்டுகோளை வைத்துவிட்டேன்.  அவ்வளவுதான்!" என்றான் கலிபுருஷன்.

"கலிபுருஷா! நீ உன் கடமையை நல்லவிதமாக செய்தால் அதற்கேற்ற பலனை தருவேன். கெட்டவிதமாக நடந்து கொண்டால் அதன் பலனை பெறுவாய். இதற்குப் போய் என்னிடம் வருவானேன்?" என்றார்.

"வேங்கடநாதா! நான் கேட்டதற்கு சரியான பதிலைத் தரவில்லை. ஆகவே, நீங்கள் சொலவதொன்று, செய்வதொன்று எனத் தெரிந்து கொண்டேன். என் பலம் பற்றி நானே என் வாயால் கூறவேண்டாம். தாங்களே தெரிந்து கொண்டிருப்பீர்கள்" என்றான் கலிபுருஷன்.

"ஒ! மிக நன்றாகத் தெரியுமே! இதுவரை நான் எடுத்த ஒன்பது அவதாரங்களிலும் எனக்கு எதிராகச் செயல்பட்ட அசுரன் நீதான்." என்றார் பெருமாள்.

"இங்கேதான் தாங்கள் என்னைத் தவறாக எடை போட்டுவிடீர்கள்! தாங்கள் எடுத்த அவதாரங்கள் எல்லாம் அசுர ரூபத்தைக் கொண்ட என்னை வதம் செய்யத்தான் என்றாலும், இப்பொழுது நான் எடுத்திருக்கும் இந்தக் கலிபுருஷ அவதாரம் அந்த ஒன்பது அசுர பலத்தையும் கொண்டுதான் என்பதைத் தாங்கள் புரிந்து கொண்டீர்களோ என்னவே?" என்று மீசையை முறுக்கி, தோளில் தட்டி அலட்சியமாகச் சொன்னான், கலிபுருஷன்.

"அதற்கென்ன இப்போ?" என்றார் பெருமாள்.

"நான் ஒன்பது அசுர பலத்தைப் பெற்றிருக்கிறேன். ஆனால் தாங்கள் அந்த ஒன்பது அவதாரங்களையும் கொண்டு ஒரே அவதாரமாக இல்லை, இன்னும் சொல்லப் போனால்........"

"சொல்" என்றார் பெருமாள்.

"இப்பொழுது எடுத்த அவதாரம் கலி அவதாரம். மற்ற அவதாரத்திலாவது மிகப் பெரும் சக்தி இருந்தது. இப்பொழுது "வெறுங்கல்" அவதாரம்தான். ஒன்பது அவதாரங்களின் மொத்த சக்தியாக விளங்கவில்லை" என்று சொல்லி நகைத்தான் கலிபுருஷன்.

"கலிபுருஷா! உன்னால் தூண்டிவிடப்பட்ட ஹயக்ரீவர் இப்பொழுது வராஹமித்ரராக எம் பாதத்தில் பணிபுரிகிறார். இதுபோல் தான் உன்னால் வக்கிரமாக தூண்டிவிடப்பட்ட அத்தனை பேருமே என் காலடியில் தான் விழப் போகிறார்கள். கடைசியில் நீயும்தான் என் பாதத்தில் விழப்போகிறாய். ஏன் அவ்வளவு தூரத்திற்குப் போவானேன்? இப்பொழுதே என்னிடம் கருணை மனு போட்டு என் முன்னே நிற்கிறாய், வேறு என்ன வேண்டும்? இதைத்தவிர?" என்றார் வேங்கடவன்.

இதைக் கேட்டு வாய்விட்டு அட்டகாசமாகச் சிரித்தான் கலிபுருஷன்.

"தங்களை சோதிப்பதற்காகவே நான் இந்த நாடகமாடினேன். இனிமேல் பாருங்கள் என் விளையாட்டுகளை. அதில் ஜெயிக்கப் போவது நான்தான்" என்று ஆவேசத்துடன் சொன்ன கலிபுருஷன் அங்கிருந்து நகர்ந்தான்.

அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றனர்.

பெருமாளும், அகத்தியப் பெருமானும் அமைதியாக நின்றனர்.

"அனைத்தையும் அறிந்தவருக்கு கலக்கமேது" என்றபடி, பெருமாள் மட்டும் ஒரு புன்னகையுடன் கல் அவதாரமாக நின்றுகொண்டிருந்தார்.

சித்தன் அருள்................. தொடரும்!