​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 14 May 2015

சித்தன் அருள் - 222 - "பெருமாளும் அடியேனும் - 6 - ஹயக்ரீவரும் கலிபுருஷனும்!

முரட்டுத்தனமாக கலிபுருஷனைப் பார்த்தார் ஹயக்ரீவர்.

"என்ன விஷயம்? யார் நீ?" என அதிகாரமாகக் கேட்டார்.

"தங்களுடைய சிஷ்யன். என் பெயர் கலிபுருஷன். தர்மங்களை செய்துவரும் பலர், அதர்மங்களையும் இந்தக் கானகத்தில் செய்து வருகிறார்கள். அவர்களை தாங்கள் அடையாளம் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்பதற்காகத் தேடி வந்திருக்கிறேன்" என்றான் கலிபுருஷன் பவ்யமாக!

ஒரு நாழிகை யோசித்த ஹயக்ரீவர். "அது சரி, நீ எப்படி இங்கே நுழைந்தாய்? என்னைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?" என்றார் ஹயக்ரீவர்.

"இந்த கொனேரிக் கானகத்தின் அரசனாக தாங்கள் வீற்றிருக்கிறீர்கள். தங்களது துணிவு, தைரியம், பலம் ஆகியவற்றை இந்த பூலோகமே தினமும் கேட்டு வியந்து போகிறது. தாங்கள் என் கோரிக்கையை ஏற்று உதவுவீர்கள் என்று கஷ்டப் பட்டுத் தேடிச் சரண் அடைந்திருக்கிறேன்" என்று காலில் விழுந்தான்.

"என்ன வேண்டும் உனக்கு?"

"எனக்கு என்ன வேண்டும் என்பதல்ல ஹயக்ரீவரே! தங்களுக்குள்ள செல்வாக்கு புகழ், வீரம், தங்களுக்கு உரிமையான இடம், இந்த கானகம் எல்லாம், தங்களை விட்டுப் போய் விடக்கூடாது என்ற பயம். அதனால் தான் தங்களிடம், நேரிடையாக வந்தேன்" என்று ஹயக்ரீவர் மனதில் தனது விஷ எண்ணத்தைப் புகுத்தலானான் கலிபுருஷன்.

"என்ன சொல்கிறாய் நீ?" என்றார் ஹயக்ரீவர்.

"ஆமாம், பிரபு! தாங்கள் சுதந்திரமாகச் சுற்றி வந்த இந்த கானகத்தின் தெற்குப் பக்கம் கோனேரி நதி ஓடுகிறதல்லவா? அந்த நதிக்கரையில் புதியதாக "ஏழுமலை" ஒன்று தோன்றியிருக்கிறது. அதை, "ஆதிசேஷன்" என்று சொல்கிறார்கள். அங்கே, தேவர்களும், ரிஷிகளும், ஞானிகளும் இன்று கூடி, ஏதோ அவதாரம் நடந்து விட்டதாகப் பேசிக் கொள்கிறார்கள்!" என்றான்.

"அப்படியா?"

"அந்த இடமும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள இடம்தான். தங்களைக் கேட்காமல் ஓர் ஈ, எறும்பு கூட இந்தக் கானகத்தில் நுழைய முடியாது. அப்படி இருக்க, எப்படி தங்கள் அனுமதி இல்லாமல் "ஏழுமலை" வந்தது? இதை தடுக்க வேண்டாமா?" என்றான்.

"ஆதிசேஷன்தானே! வந்துவிட்டுப் போகட்டும்" என்றார் ஹயக்ரீவர்.

"இல்லை ஹயக்ரீவரே! இப்படியே விட்டு விட்டால், நாளைக்கு வானுலகத்திலிருந்து ஒவ்வொரு தேவரும் இந்த இயற்கைச் செழிப்பு மிக்க கோனேரிக் கானகத்தைப் பங்கு போட்டு விடுவார்கள். அதைத்தான் சொல்ல வந்தேன். அதுமட்டுமல்ல, ஹயக்ரீவரே! தாங்கள் வானுலகத்திலும் நிம்மதியாக இருக்கவில்லை. பூலோகத்திற்கு வந்தாலும் தங்களை நிம்மதியாக இருக்க விடமாட்டார்கள் போலிருக்கிறது. யோசித்து செயல்படுங்கள்" என்று மேலும் தூண்டிவிட்டான் கலிபுருஷன். 

இதைக் கேட்டு ஹயக்ரீவர் மெல்ல யோசிக்க ஆரம்பித்தார்.

விஷ்ணுவின் ஒரு அவதாரமாக கருதப்பட்ட "ஹயக்ரீவர்" ஓர் சூழ்நிலையில் வானுலகத்திலிருந்து பூலோகம் வந்தார். எல்லா இடத்தையும் விட்டுவிட்டு தெற்காக முன்னூறு யோசனை பரப்பளவுள்ள கோனேரிக் கரையில் தங்கி தன் சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்து ஆனந்தமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை பார்ப்பதற்கும் முன்னர், பகவான் விஷ்ணு திருமலையில் கல் அவதாரம் எடுத்த இடத்திற்க்குச் செல்வோம்.

கலிபுருஷன் என்பவன், கம்சனைவிட, ராவணனைவிட, பிரம்மாவிடம் வரம் பெற்று பொதுமக்களை வாட்டி எடுத்து, பல்வேறு அரக்கர்களைவிட மிகக் கொடிய குணம் கொண்டவன். எந்த சமயத்தில் எப்படி எல்லாம் மாறி மக்களின் மனதைத் திருப்புவான் என்பதைச் சொல்ல முடியாது.

கலியுகம் என்பது அவனுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரு வரம். இதில் அவன் வைத்ததுதான் சட்டம். குறிப்பாக பூலோகத்தில் பிறந்த அனைவரையும் தீய நெறிக்குள் தள்ளி, அவர்களால் பூலோகத்தை ஆட்டிவைப்பது, தெய்வ நினைப்பை அடியோடு ஒழிப்பது, அதர்மத்தை உச்சகட்டத்தில் வைத்து ஞானிகளை ஆட்டி வைப்பது, என்பது போன்ற பலவகையான தீய எண்ணங்களுக்குத் தீனி போடுவதுதான். இதை திருமாலும் அறிவார்.

அன்றைக்கு எதிர் பாராத விதமாக நாரதரும், அகஸ்தியரும் ஒன்றாக இணைந்து திருமலையில் உள்ள பெருமாளை தரிசிக்க வந்தனர்.

"ஏன்ன ஆச்சரியம்? இருவரும் சேர்ந்து என்னைத் தரிசனம் செய்ய வந்த காரணம் என்னவோ?" என்று சிரித்துக் கொண்டே திருமால் கேட்டார்.

"பூலோகத்திற்கு வந்ததால் நாங்கள் இருவருமே ஒருவருக்கொருவர் கருத்து வேற்றுமைக்கு உள்ளாக வேண்டியதாயிற்று. இப்போது நாங்கள் ஒன்றாக இணைந்து விட்டோம்" என்றார் நாரதர்.

"இதுவும் கலிபுருஷனுடைய வேலைதான் பாருங்களேன்! எப்படி இருந்த நீங்கள் இடையில் மாறிவிட்டீர்கள். எனினும் இப்போது சேர்ந்து வந்திருப்பது எமக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது" என பதில் தந்தார் திருமால்.

"பெருமாளே! முற்றும் அறிந்த தங்கள் திருவடிக்கு எனது சிரந்தாழ்ந்த வணக்கம். தாங்கள் இங்கு கல்லாக அவதாரம் எடுத்ததைப் பற்றி முன்பு சிறிய விளக்கம் தந்தீர்கள். அந்த கலிபுருஷன் என்னென்ன செய்வான்? அவன் ஆட்சி எத்தனை நாளைக்கு இங்கு நீடிக்கும்? அவனுக்குப் பின் தாங்கள் "கல்கி" அவதாரம் எடுக்கப் போகிறீர்களா? அதைப் பற்றி தங்கள் திருவாயால் கேட்டு மகிழவே நானும் நாரதரும் இங்கு வந்திருக்கிறோம். அருள் கூர்ந்து கூறியருள வேண்டும்" என்று குருமுனியாம் அகத்தியர் பவ்யமாக திருமாலின் பாதம் பணிந்து கேட்டார்.

"அமருங்கள் சொல்கிறேன்" என்று நாரதரையும் அகஸ்தியரையும் தன் முன்னே உட்கார வைத்தார்.

பிறகு தன் அமுதவாய் திறந்து சொல்ல ஆரம்பித்தார்.

சித்தன் அருள்.................. தொடரும்!

4 comments:

 1. ஓம் அகத்தீசாய நம...
  ஓம் அகத்தீசாய நம ...
  ஓம் அகத்தீசாய நம ...
  முற்றும் அறிந்த மாமுனிவர் பதம் போற்றி...
  நன்றி: திரு. அக்னி லிங்கம் அருணாச்சலம் ஐயா & திரு.வேலாயுதம் கார்த்திகேயன் ஐயா...
  சிவாய நம...

  ReplyDelete
 2. Thank you sir for sharing this wonderful episode.
  Om Agatheesaya Namaha
  Om Agatheesaya Namaha
  Om Agatheesaya Namaha

  ReplyDelete
 3. om lopamutra samedha agatheesaya namaha ,
  om lopamutra samedha agatheesaya namaha ,
  om lopamutra samedha agatheesaya namaha.

  ReplyDelete
 4. Om Agatheesaya Namaha !!!
  Om Agatheesaya Namaha !!!
  Om Agatheesaya Namaha !!!

  ReplyDelete