​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 7 May 2015

சித்தன் அருள் - 221 - "பெருமாளும் அடியேனும் - 5 - பிரம்மாவும் சரஸ்வதிதேவியும்!"


​"எல்லா கலைச் செல்வத்தையும் ஒருங்கே வைத்துக் கொண்டிருக்கும் சரஸ்வதி தேவியே, இதனை மற்றவர்களுக்கும் பரவிடச் செய்ய வேண்டாமா? நீயே எல்லாவற்றையும் வைத்துக் கொண்டிருப்பதில் என்ன லாபம்?" என்று பிரம்மா கேட்டார்.

"பிரம்மதேவா! தங்களுக்குத் தெரியாத செய்தி ஏதேனும் உண்டா? யார் என்னை மனபூர்வமாக தியானித்து, வெண் தாமரை மலர்களால் அர்சித்து என்ன வரம் கேட்கிறார்களோ, அவர்கள் அத்தனை பேருக்கும் கருணையோடு வேண்டிய கல்வி வரம், ஞானவரம் தருகிறேனே. வேறென்ன செய்ய வேண்டும்? சொல்லுங்கள் செய்கிறேன்?" என்று பதிலுரைத்தாள் கலைவாணி.

"கலைக்கெல்லாம் அரசியான நீ, கோனேரிக் காட்டில் குதிரையாக அரசாட்சி  ​செய்து கொண்டிருக்கும் திருமாலின் ஓர் அம்சமான ஹயக்ரீவரைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறாயா?"

"தேவலோகத்தில் அடிக்கடி சந்தித்திருக்கிறேன். ஆனால், நேரிடையாகப் பேசியதில்லை, இப்போது அவர் பூலோகத்திற்கு சென்றிருக்கிறாரா?"

"ஆம்! தேவி! ஆம். முன்பெல்லாம் எவ்வளவுக்கெவ்வளவு அமைதியாகவும், சாதுவாகவும் இங்கு காணப்பட்டாரோ, அவர் இப்பொழுது கோனேரிக் கரையில் கட்டுக்கடங்காமல் முரட்டுத்தனமாகக் கோலோச்சிக் கொண்டிருக்கிறார், ஏன்னா ஆயிற்று அவருக்கு?"

"அவர் தனக்கும் ஒரு புராண வரலாறு எழுதப்படவேண்டும், தன்னையும் ஓர் அவதாரமாக எல்லோரும் போற்றவேண்டும் என்று விரும்புகிறார், அதற்கு கலைவாணியாகிய நீதான் உதவி புரிய வேண்டும்!"

"எப்படி?" 

"நீயோ சகலவிதமான சாஸ்த்திரங்களையும் கற்றுணர்ந்தவள், உன்னைப்போல் அறிவுஜீவி மூன்று உலகத்திலும் இல்லை. ஒருவருக்கு எந்த பலம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் வித்தை அல்லது கல்வி பலம் மட்டும் இருக்குமேயானால், அவனால் எதையும் வெல்ல முடியும். நீ தான் மனமிரங்கி, உன்னிடமிருக்கும் கல்வி, வித்தை, கலை நுணுக்கங்களை கோனேரிக் கரையிலிருக்கும் ஹயக்ரீவருக்கு, உபதேசிக்க வேண்டும்."

"பிரம்மதேவரே! தங்களது வேண்டுகோள் வித்தியாசமாக இருக்கிறது. தேவர்களுக்கும், ஏன் சிலசமயம் அசுரர்குலத் தலைவர்களுக்கும், பூலோகத்தில் வேதம் கற்க நினைப்போர்க்கும், என்னை வேண்டி, என் அருளை வேண்டி கால் கடுக்க நின்று தவம் புரிபவர்களுக்கும் மட்டுமே வித்தையைச் சொல்லி வந்தேன். ஆனால், இதுவரை நான்குகால் பிராணிகளுக்கு எந்த வித்தையும் சொன்னதும் இல்லை, அவை அந்த வித்தையைக் கேட்கப் போவதும் இல்லை" என்று சற்று ஆவேசமாகச் சொன்னாள்.

"சரஸ்வதிதேவி! சற்று பொறுமை காக்க! ஹயக்ரீவர் எல்லோருடைய கண்ணுக்கும் நான்கு  கால் பிராணியாகத் தான் தெரிவார். ஆனால் அவர் குதிரை முகம் கொண்ட திருமாலின் வம்சம், அம்சம் என்பது உனக்குத் தெரியாததா?"

"இருக்கட்டும், பூலோகத்தில் பிறந்த எந்த உயிர்க்கும் ஞானம் போதிக்கத் தயார். முன்பு கால பைரவருக்கு யாம் ஞானம் போதிக்கவில்லையா? ஆனால் இந்த ஹயக்ரீவருக்கு மட்டும்........" என்று இழுத்தாள் கலைவாணி!

"ஏன், இந்த வித்தியாசம்?"

"திருமாலின் அம்சம் என்கிறீர்கள். முரட்டுத்தனமாக கோனேரிக்கரையில், யாருக்கும் கட்டுக்கடங்காமல் சுற்றி வருகிறார் என்கிறீர்கள். பாடம் சொல்லிக் கொடுக்க சில நியதிகள் இருக்கின்றன. அவற்றை ஹயக்ரீவர் தெரிந்து நடந்து கொள்வார் என்பதற்கு என்ன உத்தரவாதம்?"

"சரஸ்வதிதேவி! ஹயக்ரீவருக்கு உன்னுடைய கலைகள், வித்தைகள் அனைத்தும் சொல்லித் தரவேண்டும். அவரும் உன்னிடம் மாணவராக இருந்து பொறுப்புடன் நடந்து கொள்வார்."

"முரட்டுக் குதிரை ஆயிற்றே என்ற பயம்!" என்றாள் சரஸ்வதி மறுபடியும்.

"கால பைரவர் கூட முரட்டு சுபாவம் கொண்டதுதான். அவற்றுக்குக் கூட நீ ஞானபாடம் சொல்லித்தரவில்லையா?" என இடைமறித்தார் பிரம்ம தேவர்!

இதைக் கேட்டபின்பு சரஸ்வதிதேவி மேற்கொண்டு பேசவில்லை. பிரம்மாவோ, தன் கணவர். அவரே, ஆணையிட்ட பின்பு அமைதியானாள். ஹயக்ரீவருக்கு பாடம் சொல்லித்தர சம்மதித்தாள்.

இந்த சமயத்தில் தான், கலிபுருஷன் ஹயக்ரீவரின் இருப்பிடத்திற்கு வந்தான்.

சித்தன் அருள்............... தொடரும்!

No comments:

Post a Comment