வெளியே வந்து, அங்கு நின்றவர்களிடம் "இன்று ஓதியப்பர் பிறந்தநாள் என்று தெரிந்த நீங்கள் யாராவது அவருக்கு "ஹாப்பி பர்த்டே" சொன்னீங்களா?" என்று விசாரித்தேன். ஒரு சிலர் நான் அப்பொழுதே சொல்லிவிட்டேன் என்றனர். மறந்து போன சிலர் ஒன்று சேர்ந்து அப்பொழுது சொன்னார்கள். அதை கேட்க விநோதமாக இருந்தது.
இரவு நெருங்கியது. பூசாரி அனைவரையும் அழைத்து உணவருந்த சொன்னார். அனைவருக்கும் உணவளித்துவிட்டுத் தான் அவர் நடை சார்த்தி மலை விட்டு கீழிறங்க வேண்டும்.
அனைவரும் உணவருந்தினோம். தேவாமிர்தமாக இருந்தது. அவர் பிறந்தநாள் அன்று அவர் பரிமாறுகிற உணவு. அதை ஒரு சிறு பருக்கையெனும் அருந்த ரொம்ப கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
பின்னர் சிறிது நேர சத்சங்கம் போல் ஒருவருடன், ஓதியப்பரின் திருவிளையாடல்களை, ஒதிமலையின் மகத்துவத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தோம். கடந்த 5 வருடங்களாக ஓதியப்பரின் பிறந்த நாளை இங்கு கொண்டாட அனுமதியளித்த ஓதியப்பருக்கும், அதை மிகச் சிறப்பாக நடத்திக் கொடுக்கிற பூசாரிக்கும் நான் எங்கள் சார்பாக நன்றியை தெரிவித்தேன். இன்றைய பூசை மிகச் சிறப்பாக நடந்தது, ஓதியப்பருக்கு அனேகமாக கண் பட்டிருக்கும், அத்தனை அழகு என்றேன். அப்போது தான் ஏதோ யோசனை வந்தது போல், பூசாரி எழுந்து சன்னதிக்குள் சென்றார்.
சரி! வீட்டுக்கு கிளம்பும் முன் உத்தரவு கேட்கப் போகிறார் என்று நினைத்து கவனித்துக் கொண்டிருக்க, உள்ளே பூசை செய்த பூசாரியின் நண்பர்களும், பூசாரியும் கைகூப்பி சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து கொண்டிருந்தனர். நினைத்தது சரிதான் என்று எண்ணிய பொழுது, நமஸ்காரம் செய்துவிட்டு எழுந்த பூசாரி, முருகருக்கு திருஷ்டி சுத்தினார்.
உள்ளே ஓதியப்பருக்கு திருஷ்டி சுத்திப் போட்டவர், அப்படியே வெளியே வந்து, அங்கிருந்த பக்தர்களை ஓதியப்பருக்கு முன் உள்ள மண்டபத்தில் அமரச்செய்து, அனைவருக்கும் திருஷ்டி சுத்தினார். பக்தர்களுக்கும் திருஷ்டி சுத்தி போடுவதா? அதுவும் ஓதியப்பருக்கு சுத்திய அந்த எலுமிச்சை பழம், கற்பூரத்தாலா? அட! அதிசயமாக இருக்கிறதே! கோவில் சன்னதிக்கு வந்து தரிசனம் செய்கிற பக்தர்களுக்கு, திருஷ்டி சுத்திப் போடுகிற முறை இந்த கோவிலில்தான் பார்க்கிறேன். இதை தினமும் செய்வார்கள் என்று பிறகு புரிந்து கொண்டேன். ஒதிமலயில் ஓதியப்பர் அனைவரையும் அவர் குடும்பத்தாராகவே ஏற்றுக் கொள்கிறார் என்பதற்கு இதைவிட என்ன அத்தாட்சி வேண்டும்.
சன்னதிக்குள் இருக்கும் விளக்குகளை குளிரவைத்து, ஒரு விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருக்கும் நிலையில் வைத்துவிட்டு, திரையை போடப் போனார். ஒரு நிமிடம் ஓதியப்பறை உற்றுப் பார்த்த எனக்கு, நெஞ்சுக்கூட்டுக்குள் ஏதோ ஒன்று அதிர்ந்தது. கண்கள் குளமாகிவிட்டது. இத்தனை அருகாமையை தந்து, கேட்டவர்கள் அனைவருக்கும் அருளாசி வழங்கிய "ஓதியப்பரை" இனி எப்பொழுது காணப் போகிறோம் என்ற உணர்வுதான் காரணம். ஹ்ம்ம்! நானும் மனிதன் தானே. தகப்பனை காணவில்லை என்று தேடும் குழந்தையின் மன நிலையில் தான் நான் இருந்தேன் அப்பொழுது.
மலைவிட்டு கீழே இறங்க தொடங்கிய பூசாரி, என்னிடம் "நீங்க என்ன பண்ணப் போறீங்க?" என்றார்.
"இன்று இரவு இங்கு தங்கிவிட்டு, நாளை மதியம் மலைவிட்டு இறங்கலாம் என்று இருக்கிறேன்" என்றேன்.
"சரி! நீங்கள் கீழே உள்ள அறையில் தங்கிக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை தருகிறேன்" என்று விட்டு வணக்கம் கூறி விடை பெற்றார். அவருடன் உதவிக்கு நின்ற அனைவரும் கிளம்பி சென்றனர்.
அனைவரும் சென்ற பின் எங்கள் குழுவில் நாங்கள் எட்டு பேர் மட்டும் இருந்தோம். சட்டென்று ஒரு நினைப்பு வந்தது. ஓதியப்பரிடம் எங்கள் குழுவில் 18 பேர்கள் மலை ஏறி உன் பிறந்த நாளை கொண்டாடவேண்டும் என்று முதல் நாள் வேண்டிக் கொண்டது நினைவுக்கு வர, வந்தவர்களை மனதில் நினைத்து எண்ணிப்பார்த்தால், சரியாக 18 பேர்கள் வந்திருந்தனர். அட! அதெப்படி என்ற ஆச்சரியம். சின்ன சின்ன வேண்டுதல்களையும் நிறைவேற்றிக் கொடுத்துள்ளார் என்று புரிந்தது.
எங்கும் மிகுந்த அமைதி. ஒரு சிறு சப்தமும் இல்லை. காற்று கூட சப்தமின்றி, ஆரவாரம் இன்றி வீசிக் கொண்டிருந்தது. சிறிது நேரம் அவர் சன்னதி கோபுரத்தை உற்றுப் பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்து விட்டு, பின்பு உறங்கச் சென்றேன்.
ஞாயிற்றுக்கிழமை காலை, அமைதியாக விடிந்தது. இரு நண்பர்களை அழைத்து, ஒரு மூலிகை கீரையை காட்டிக் கொடுத்து "இதை நிறைய பறித்து வாருங்கள்! சிறந்த மூலிகை" காலை உணவுடன் எல்லோரும் அருந்த வேண்டும்" என்றேன். சற்று நேரத்தில் நிறைய பறித்துக் கொண்டு வந்த நண்பர்களை வைத்து "கீரை கூட்டு" ஆக அதை தயார் செய்து, காலை டிபன் "உப்புமா" தயார் செய்து அதனுடன் அருந்தினோம். அந்த வகை மூலிகையை ஒதிமலையில் தான் கண்டிருக்கிறேன். உடலுக்குள் மிகச் சிறப்பாக செயல் பட்டு, சுத்தம் செய்யும். அதை சித்த மார்கத்தில் செல்பவர்கள், தங்கள் உடலை உள்ளிருந்து சுத்தம் செய்ய உபயோகிப்பார்கள். அதை உண்ட நண்பர்கள், பின்னர், மிக ஆனந்தமாக இருந்தது என்றனர்.
நான் குளித்துவிட்டு, ஓதியப்பர் கோவில் முன் மண்டபத்தில் வடக்கு நோக்கி அமர்ந்து த்யானத்தில் ஈடுபட்டேன். என்ன கேட்பது என்று யோசனை.
மனதில் ஒன்று தோன்ற "ஓதியப்பா! ஏதாவது உபதேசம் பண்ணேன்!" என்று கூறிவிட்டு த்யானத்தில் அமர்ந்தேன்.
மனம் சில நொடிகளில் நன்றாக பணிந்தது. ஒரு முனையில் ஓதியப்பர் பாதத்தில் மனதை வைத்து அமர்ந்திருக்க, வலது காதின் பக்கம் "ஓம்" என்கிற மந்திரம் போல் சப்தம் ஒலித்தது, கண் திறந்தால், சப்தம் நின்றுவிடக் கூடும் என்று நினைத்து அப்படியே அமர்ந்திருந்தேன். வலது காதிலிருந்து சப்தம் சுழிமுனை நோக்கி நகர்ந்தது, பின்னர் இடது காதை நோக்கி சென்றது, மறுபடியும் சுழிமுனை, பின்னர் சஹஸ்ராரம். மிகுந்த ஆனந்தத்துடன் கண் திறந்த எனக்கு, சுழுமுனைக்கு வெகு அருகில் ஒரு தேனீ பறந்து நின்றுகொண்டே அந்த சப்தத்தை கொடுப்பதை உணர்ந்தேன். அதை ஒரு தேனீயாக பார்க்கத் தோன்றவில்லை. விண்ணப்பித்தபடி ஓதியப்பர் தான் இந்த பாக்கியத்தை கொடுத்துள்ளார் என்று அந்த தேனியை பார்த்துக் கொண்டிருந்தேன்.
சுழுமுனையிலிருந்து இரு கண்களின் பக்கமும் சுழன்ற தேனீ, சஹாஸ்ராரத்தில் (அதாவது, தலையின் உச்சி) சென்று அமர்ந்துவிட்டு பறந்து சென்றது. அது சென்ற பின்னரும், பல மணி நேரங்களுக்கு அந்த சப்தம் என்னுள் புதைந்து இருந்தது. பிரணவத்தில் நின்று த்யானத்தில் அமர்ந்துகொள் என்று "ஓதியப்பர்" கூறுவதாக புரிந்து கொண்டேன். இது போதும், இதற்குத்தான் இத்தனை தூரம் வந்தேன். ஓதியப்பருக்கு நன்றியை கூறிவிட்டு, எல்லோரும் மலை இறங்கி, ஊர் வந்து சேர்ந்தோம்.
இனி அடுத்த தரிசனம் எப்பொழுது கிடைக்கும் என்று ஆவலுடன் காத்திருக்கிறேன்.
இதுவரை பொறுமையாக ஒதிமலை அனுபவத்தை வாசித்த அனைத்து அடியவர்களுக்கும் நன்றியை கூறிக் கொள்கிறேன். இத்துடன் ஒதிமலை பயணம் நிறைவு பெற்றது.