இந்த வார சித்தன் அருளை தொடரும் முன் சமீபத்தில் அகத்தியர் அருளால் நடந்த ஒரு விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றுகிறது.
ஒவ்வொரு வாரமும் சித்தன் அருளை உங்களுக்கு தருகிற போது எங்கிருந்தாவது ஒரு அகத்தியர் படம் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் அல்லது அவர் கை தூக்கி ஆசிர்வதிக்கிற படத்தை தேடி ஓடுவேன். நிறைய படங்களை வலை பூவில் இருந்துதான் எடுத்து தந்திருக்கிறேன். ஒரு நிலைக்கு மேல் நான் தேடுவது கிடைக்காமலே போய் விட்டது. உங்களுக்கெல்லாம் ஒரு முக்கியமான விஷயத்தை தெரிவிக்க வேண்டும் (அது பின்னர் வரும்) என்று நினைத்து இரு மாதங்களாக "அகத்தியரும் அனுமனும்" சேர்ந்து இருக்கிற படம் கிடைக்குமா என்று ஆவலுடன் வலைப்பூவை துழாவியதுதான் மிச்சம். கிடைக்கவில்லை. மனம் தளர்ந்து போய் ஒரு நாள் அகத்தியரிடமே வேண்டிக் கொண்டேன்.
"ஒரு நல்ல விஷயத்தை சொல்ல, முத்தாய்ப்பாக நீங்களும் அனுமனும் சேர்ந்திருக்கும் ஒரு படத்தை கொஞ்ச நாட்களாக தேடுகிறேன். எப்படி தேடியும் அது என் மனதுக்கு திருப்திகரமாக அமையவில்லை. யாராவது ஒருவர் வழியாக அதை ஏற்பாடு பண்ணித் தந்தருளக்கூடாதா? ஏன், இந்த ஓரவஞ்சனை! வேலையை தந்தால் அதை செவ்வென செய்யும் விஷயங்களையும் தந்தால்தானே முடியும். என்னால் ஆவது எதுவும் இல்லை என்பது உங்களுக்கே தெரியும். ஏதோ பார்த்து செய்யுங்க" என்று கூறிவிட்டு விஷயத்தை அவர் பாதத்தில் போட்டுவிட்டு, நான் அமைதியாக ஒதுங்கிக் கொண்டேன். உண்மையிலேயே ஒரு பதிலையும் காணவில்லை.
இரு வாரம் கழிந்தது. "கூகிள் சாட்டில்" சித்தன் அருளை வாசித்த ஒன்றிரண்டு நண்பர்கள் தினமும் பேசுவார்கள். அவர்களில் ஒரு அகத்தியர் அடியவர் திரு.சரவணன். இவர் மலேசியாவில் வசிக்கிறார். ஒரு நாள் பேசும் பொழுது என் ஈமெயில் தொடர்பை கேட்டார். கொடுத்தேன். ஐந்தே நிமிடத்தில் அவர் அகத்தியரை தன் கற்பனையில் வரைந்த ஓவியத்தை அனுப்பித் தந்து, "உங்கள் எண்ணத்தை சொல்லுங்கள்" என்றார்.
பார்த்தவுடன் அந்த படம் என்னை மிகவும் கவர்ந்தது. அகத்தியர் ஆசிர்வதித்தபடியே மலையை நோக்கி நடந்து செல்வது போல் வரைந்திருந்தார்.
உடனேயே அவரை வாழ்த்திவிட்டு, "சித்தன் அருளில்" ஒரு வேலை தந்தால் ஏற்றுக் கொள்வீர்களா?" என்று கேட்டேன்.
அவருக்குத் தெரியாது, அவரை உசுப்பிவிட்டு தன் படத்தை காட்ட வைத்தது அகத்தியப் பெருமான் என்று. அதையும் சொன்னேன். அவரால் நம்ப முடியவில்லை. அந்த படம் கூட சூழ்நிலைக்கு சரியாக, தகவலை தேடுகிற திரு சுரேஷின் வேண்டுதலுக்கு ஏற்றாற்போல் அமைந்துள்ளது.
இருப்பினும் "என்னால் முடியுமா என்று தெரியவில்லை, முயற்சி செய்கிறேன்!" என்று கூறினார்.
எல்லாம் நலமாக நடந்திட, எனக்கு தெரிந்த ஒரு எளிய வழியை சொல்லிக் கொடுத்தபின், தொடங்குங்கள் என்றேன்.
"என்ன வரைய வேண்டும்?" என்றார்
சூழ்நிலையை சித்தரித்தேன். அது என் உள்ளில் இருந்து தெளிவாக வந்தது.
"புல் நிறைந்த தரை. தூரத்தில் ஒரு மரம். அதன் அடியில் அனுமன் அமர்ந்திருக்கிறார். அவர் கையில் ஓலைச்சுவடி. அதை பிடித்தபடியே கனிவுடன் நிமிர்ந்து பார்க்கிறார். எதிரே அகத்திய பெருமான் பவ்யமாக குனிந்து கைகூப்பிய படியே அனுமனை பக்தியுடன் பார்க்கிறார். சற்று தூரத்தில் மரங்கள் காடாக தெரிகிறது. அதற்கு பின்னால் உயர்ந்த மலை." அவ்வளவு தான்.
எத்தனையோ தனிப்பட்ட வாழ்க்கையின் தேடல்கள் இருந்தும், இரண்டே நாளில் அந்த படத்தை வரைந்து அனுப்பினார்.
அதை பார்த்ததும் அசந்து போய் விட்டேன். அத்தனை தத்ரூபமாக, நான் நினைத்தது போல் வந்துள்ளது.எல்லாம் அவர் செயல். அந்தப் படம், "சித்தன் அருளை" வாசிக்கும் அடியவர்களுக்காக, அந்த குறிப்பிட்ட விஷயத்தை தெளிவுபடுத்தும் பொழுது தருகிறேன். இனி, ஒவ்வொரு வாரமும் திரு.சரவணன் அவர்கள் "சித்தன் அருளில்" சூழ்நிலைக்கு ஏற்றார் போல் வரைந்து தருகிறேன் என்று கூறியுள்ளார். அவர் வரைந்த படங்கள் இனி சித்தன் அருளை அலங்கரிக்கும். எல்லோரும் அவர் நலமாக வாழ வேண்டும் என வாழ்த்தி வேண்டிக் கொள்ளுங்கள் என்று கூறி இந்த வார சித்தன் அருள் அனுபவத்திற்கு செல்வோம்.
[புகைப்பட நன்றி - திரு சரவணனுக்கு]
அகத்தியப் பெருமானை நம்பி வந்தவரை அவர் ஒரு போதும் கை விடமாட்டார். எத்தனை கொடிய பாபம் செய்திருந்தாலும், கொடிய கர்ம வினையினால் நோய் வந்து வருத்தினாலும், அவர் பார்த்து பின், "நான் பார்த்துக் கொள்கிறேன், இப்படி செய்யவும்" என்று கூறி, அதை சிரம் மேற்கொண்டு அதே போல் பிழை இன்றி செய்தால், நிச்சயமாக நாம் கரை ஏறிவிடலாம். இப்படி அவரிடம் அருள் பெற்று தங்கள் வாழ்க்கையை செம்மை படுத்திக் கொண்டவர்கள் ஏராளம். அப்படித்தான் அன்று ஒருநாள், யாரும் நாடி வசிக்க இல்லாத பொழுது, அமைதியாக அமர்ந்திருக்கையில் ஒருவர் வந்தார்.
"வாருங்கள். என்ன வேண்டும்?" என்றேன்.
"எனக்கு நாடி படிக்க வேண்டும்" என்றார்.
"எந்த பிரச்சினைக்கு நாடி படிக்க வேண்டும்?" என்றேன்.
அவர் கூறியதை கேட்டு அதிர்ந்தே போய் விட்டேன்.
"எனக்கு ஒரு வியாதி இருக்கிறது. எல்லா டாக்டரிடமும் சென்று பார்த்தாயிற்று. எல்லா நாடிகளையும் படித்து பரிகாரம் செய்து பார்த்தாயிற்று. இன்னமும் எனது நோய் குணமாகவில்லை. இதாவது பரவாயில்லை. இந்த நோய் என் மனைவிக்கும் என் குழந்தைகள் இரண்டு பேருக்கும் வந்து விடுமோ என்று பயப்படுகிறேன். அகத்தியரை நம்பித்தான் வந்திருக்கிறேன். நீங்கள் தான் என்னையும், என் குடும்பத்தினரையும் காப்பாற்ற வேண்டும்" என்று அந்த நடுத்தர வயதுடைய நபர் கையெடுத்துக் கும்பிட்ட படியே நின்று கொண்டே வேண்டினார்.
அவரை சமாதானப்படுத்தி என் எதிரே உட்கார வைப்பதிற்குள் போதும் போதும் என்றாயிற்று.
எல்லா டாக்டர்களும் கைவிட்ட கேஸ் என்று சொல்லும் போது என் மனதில் தோன்றியது புற்று நோயாக இருக்குமோ என்பதுதான். ஆனால் அவரிடம் பேச்சுக் கொடுத்து கேட்ட பொழுது அது புற்று நோய் அல்ல, வந்திருப்பது "எய்ட்ஸ் நோய்" என்று தெரிந்தது
"என் மனைவியும் பயந்து போய் மருத்துவரிடம் "செக்-அப்" செய்த போது அவளுக்கும் இந்த நோய் ஆரம்பக்கட்டத்தில் இருப்பது தெரிந்தது. இதை விடக் கொடுமை எனக்கு பிறந்த இரண்டு முழந்தைகளுக்கும் "எய்ட்ஸ்" நோய் கிருமிகள் இருப்பது தெரிய வந்தது. பதறிப்போன நான், எல்லோருக்கும் விஷத்தைக் கொடுத்து விட்டு தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தேன். "
"நான் செய்த தவறுதான் இதற்கு மூல காரணம். இதற்காக இறைவன் என் குடும்பத்திற்கே இத்தகைய கொடுமையான தண்டனையைக் கொடுத்து விட்டானே என்று துடித்தபோது, கடைசியாக அகத்தியர் அருள்வாக்கை கேட்டு விட்டு பின்பு முடிவெடுக்கலாம் என்று நினைத்து "நாமக்கல்" ஊரிலிருந்து ஓடோடி வந்திருக்கிறேன்" என்று வந்தவர் தன் கதையை என்னிடம் சொன்னார்.
இவருக்கு அகத்தியர் எப்படி அருள்வாக்கு தந்து காப்பாற்றப் போகிறார் என்பது என்னைப் பொறுத்த அளவில் ஓர் கேள்விக்குறி. ஏனெனில் கடந்த முப்பது ஆண்டு காலத்தில் எய்ட்சுக்கு மருந்து கேட்டு யாரும் அகத்தியரிடம் நாடி படிக்க என்னிடம் வந்ததில்லை. பிரார்த்தனை செய்துவிட்டு அகத்தியரிடம் வாக்கு கேட்டேன்.
"அகத்தியனை விட போகனே இத்தகைய வியாதிகளுக்கு அருமையான மருந்து வைத்திருப்பான். கொஞ்சம் இரு. நானே போகரிடம் இதற்குரிய வைத்தியத்தைக் கேட்டுச் சொல்கிறேன்" என்றார் அகத்தியர்.
அவரை அமைதியாக அமரச் சொல்லிவிட்டு, நானும் சற்று ஆசுவாசப் படுத்திக் கொண்டு அமர்ந்தேன்.
ஒரு மணி நேரம் கழிந்தபிறகு நாடியைப் பிரித்தேன்.
"மனித உடம்பில் 4128 வியாதிகள் உண்டு. "அச்" என்று தும்முவது முதல் கண்டமாலை என்னும் கொடிய வியாதி வரை இதில் அடங்கும். அதில் 3798வது வியாதிதான் இந்த நபருக்கு வந்திருப்பது. இது உதிரத்தை பலவீனப் படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக உயிர் மூச்சை நிறுத்தி விடும்.
இருப்பினும், இதற்கொரு மருந்து சதுரகிரியிலும், பொதிகை மலையிலும் இருக்கிறது. அந்த மருந்தை முறையாகப் பக்குவப்படுத்தி காய்ச்சி வேப்பமரப் பொந்துக்குள் ஒரு மண்டலம் மூடி வைத்து, பின் அதை ஓர் அமாவாசை அன்று விடியற்காலையில் தேன், தினைமாவுடன் கலந்து மூன்று வேளை உண்டு வந்தால் போதும்.
ஆரம்ப வியாதியாக இந்த "எய்ட்ஸ்" இருப்பின் அந்த மருந்தை உண்ட 18 நாட்களில் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். "வியாதி" வந்து சில மாதங்களாக இருப்பின் அவற்றில் மாதுளம்பழ தோல் சாறு கலந்து சில விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் உண்ண வேண்டும்.
நோய் சற்று முற்றியதாக இருந்தால் வேறு சில விஷ மூலிகைகளோடு "வால் மிளகு" பொடி செய்து ஒரு கவளம் உண்ண வேண்டும். இதை உண்ட பின்பு அன்று முழுவதும் வேறு எந்த உணவையும் உண்ணக் கூடாது. தண்ணீருக்குப் பதிலாக "செவ்விளநீர்" மட்டுமே மூன்று வே ளை உண்ண வேண்டும்.
இந்த மருந்தை உண்ட பதினெட்டு மணி நேரத்தில் திடீரென்று "ஜன்னி ஜுரம்" வருவது போல் உடல் தூக்கிப் போடும். அப்பொழுது நான்கு பேர்கள் அந்த நபரை அழுத்திப் பிடித்துக் கொள்ளவேண்டும். சுமார் ஒரு மணி நேரம் இந்த நிலை நீடிக்கும். பிறகு பயப்பட வேண்டியதில்லை. அந்த நபருக்கு வந்த நோய்க் கிருமிகள் வந்த இடம் தெரியாமல் போய் விடும்" என்றார் அகத்தியர்.
இதை செய்வதற்கு முன்பு அவனுக்கு கர்மவினை, ஆயுள்பாவம், திருமணமாகி இருந்தால் அவனுடைய மனைவியின் களத்திர தோஷம் நிலை, குழந்தைகள் இருந்தால் அந்த குழந்தையின் தர்ம கர்மநிலை ஆகியவற்றை அறிந்து அதற்குத் தக்க பரிகாரமும் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் எப்பேர்ப்பட்ட மனிதனும் இந்த "எய்ட்ஸ்" நோயிலிருந்து பிழைத்துக் கொள்ளலாம்" என்று மூலிகை பலவற்றின் பெயரையும் சொன்னார்.
அகத்தியர் சொன்ன போகரின் மருத்துவக் குறிப்பை வெகு வேகமாக குறிப்பெடுத்தார் வந்தவர்.
"இந்த மருந்துகள் நாட்டு மருந்துக் கடையில் கிடைக்குமா?" என்றார்.
"முயற்சி செய்து பாருங்கள், இல்லையெனில் மலைப்பகுதிக்கு சென்று வாருங்கள். அகத்தியர் உங்களுக்கு நிச்சயம் உதவுவார்" என்றேன்.
கண்களில் நீர் ததும்ப வணங்கிவிட்டு வெளியேறினார் ஒரு விதத்தில் அவரைப் பார்க்க எனக்கே பரிதாபம் ஏற்பட்டது.
45 நாட்கள் கழிந்திருக்கும்.
சதுரகிரி மலைக்கு வந்திருந்த ஒருவர் மூலம் எனக்கு தபால் கொடுத்து விட்டு வேண்டியிருந்தார்.
"சதுரகிரி மலையில் பதினைந்து நாட்களாக தங்கியிருக்கிறேன் நான் மட்டுமல்ல என் மனைவியும், என் இரு குழந்தைகளும் இங்கேதான் இருக்கிறோம். அகத்தியர் நாமத்தை நாங்கள் நான்கு பேரும் ஜெபித்து, யாரேனும் எய்ட்ஸ் நோயை குணப்படுத்தும் மூலிகைகளைத் தருவார்களா? என்று எதிர் பார்த்து காத்திருக்கிறோம் கையிலிருந்த பணமெல்லாம் கரைந்துவிட்டது. பாதி பட்டினியோடு தான் இருக்கிறோம். எப்படியும் அகத்தியர் சொன்ன போகரின் மருந்தை வாங்காமல் சதுரகிரியிலிருந்து திரும்புவதில்லை என்ற முடிவோடு காத்திருக்கி றோம் நாங்கள், ஒருவேளை உயிரை விட்டாலும் விடுவோமே தவிர மருந்தை வாங்காமல் சதுரகிரியிலிருந்து இறங்க மாட்டோம். எங்களது உயிர் நீடிக்க எங்களுக்காக அகத்தியரிடம் வேண்டிக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் என்னால் எழுத முடிந்தது. நோயின் கொடுமை உச்சக்கட்டத்தில் இருக்கிறது. எங்களது நிலைமையைத் தாங்கள் புரிந்து கொள்ளுங்கள்", என்று மரணத்தின் விளிம்பிலிருந்து கடிதம் எழுதப்பட்டிருந்தது.
ஐந்து நிமிடம் அவர், அவரது குடும்பத்திற்காக குறிப்பாக அவரது குழந்தைகள் படும் கஷ்டத்திற்காக இங்கிருந்தவாரே அகத்தியரிடம் வேண்டினேன். என்னால் அதுதான் அப்போது செய்ய முடிந்தது.
இருபத்தி ஐந்து நாட்களுக்கு மேல் ஆயிற்று. எந்த ஒரு தகவலும் சதுரகிரியிலிருந்து எனக்கு வரவில்லை.
ஒரு வேளை......... அந்த குடும்பமே எய்ட்ஸ் நோயால் மடிந்து விட்டதோ என்று கூட எண்ணத் தோன்றிற்று.
அகத்தியர் நாடியைப் பிரித்துப் படிக்கலாம் என்று பலமுறை நினைத்தேன் ஆனால் ஏதோ ஒன்று என்னைப் படிக்க விடாமல் தடுத்தது. இந்த சகுனம் கூட நல்லதாக இல்லையே என்று அப்படியே வைத்து விட்டேன்.
அன்று மாலை............
சதுரகிரியிலிருந்து வந்த ஒருவர் 'சார் சதுரகிரியில் ஓர் அதிசயம் நடந்தது தெரியுமா?" என்று ஓர் செய்தியைச் சொன்னார்.
"ஒன்றரை மாதமாக ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், ஏதோ ஒரு மருந்தைச் சொல்லி அது கிடைக்குமா? என்று வருவோர், போவோரிடம் பிச்சையெடுக்காத குறையாகக் கேட்டுக் கொண்டிருந்தார். யாரும் அவர் குரலுக்குச் செவி சாய்க்காமல் போகவே, நேராக மலையிலிருந்து அந்த நான்கு பேரும் தற்கொலை செய்ய முடிவு எடுத்தனர்.
அச்சமயம் அகத்தியரைப் போல ஒருவரும், போகர் சித்தரைப் போல ஒருவரும் அந்த நான்கு பேர் முன் வந்து , 'என்னுடன் வாருங்கள்" என்று அதிகார தோரணையில் வலுக்கட்டாயமாக அழைத்து சென்றனராம்.
இதற்குப் பிறகு அவர்கள் நான்கு பேரும் சுந்தரமகாலிங்கம் கோவிலில் இருந்தார்களாம்.
என்னவென்று கேட்டதற்கு அகத்தியப் பெருமானும் போகரும் தங்களை ஒரு இருண்ட காட்டிற்கு அழைத்துச் சென்று மருந்து, மூலிகைச்சாறு, தேன் தினைமாவு கலந்து கொடுத்தார்கள் என்றும்., அதை உண்ட பிறகு எங்கள் நான்கு பேருக்கும் இருந்த நோய் நீங்கிவிட்டது போல் தோன்றிவிட்டது என்றும், கண் விழித்துப் பார்க்கும் பொழுது தாங்கள் அனைவரும் சுந்தரமகாலிங்கம் கோவிலில் இருப்பதாக சொன்னார்களாம். இது ஆச்சரியமாக இல்லை?" என்று சொன்ன அந்தத் தகவல் எனக்கு ஆனந்தத்தைத் தந்தது.
இந்தத் தகவல் உண்மையாக இருந்தால், அகத்தியரே வந்து அவர்களைக் காப்பாற்றி இருக்க வேண்டும் என்று எண்ணினேன்.
மூன்று மாதம் கழித்துதான் நான் அவர்களை மீண்டும் சந்திக்க கூடிய வாய்ப்பு ஏற்பட்டது.
அவர்களது வேண்டுகோளை அகத்தியரும் போகரும் ஏற்று, அந்தக் குடும்பத்தை மரணத்தின் பிடியிலிருந்து காப்பாற்றி இருக்கிறார்கள்.
ஏதோ ஒரு மருந்தை வாயில் ஊற்றிய பின்னர் பல்வேறு பத்தியங்களுடன் மேலும் சில மூலிகைகளைக் கொடுத்ததாக சொன்னார்கள்.
எப்படியோ இப்போது அவர்களுக்கு எய்ட்ஸ் நோயின் பாதிப்பு இல்லை. இதை அகத்தியரைத் தவிர எவராலும் செய்திருக்க முடியாது என்பது எனது கணிப்பு.
ஒரு வேளை சதுரகிரி மலையில் வாழும் வேறு சித்தர்கள் கூட இப்படி ஒரு அதிசயத்தை சுந்தரலிங்கத்தின் ஆணைப்படி செய்திருக்கலாம்.
இன்னும் சொல்லப் போனால் உண்மையிலேயே அவர்களுக்கு எய்ட்ஸ் நோய் ஆரம்பக் கட்டமாக இருந்து. சதுரகிரி மலையின் மூலிகை வாசத்தால் கூட கரைந்து போயிருக்கலாம்.
ஆனால் ஒன்றே ஒன்றை மட்டும் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. யாருக்கு இந்த பாக்கியம் கிட்டுகிறதோ அவர்கள் அதிர்ஷ்டசாலிகள்தான். அகத்தியரை சரண் அடைந்தால் அவர்களுக்கு அகத்தியப் பெருமான் நிச்சயம் உதவுவார், இதில் சந்தேகமில்லை.
ஓம் லோபாமுத்ரா சமேத அகத்தீசாய நமக!
சித்தன் அருள்.................... தொடரும்!