​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 24 February 2014

அகத்தியர் அருள் வாக்கு - நமக்கென!


  • ஆதிக்கும் ஆதியான இறைபாதம் வணங்கி போற்றி அறிவிப்பேன் சில்வாக்கு இத்தருணம், அஃது ஒப்ப அகத்தில் நுணுக்கமாய் கருத்தினை பதிய வைத்துவிடு.
  • அறிவதை தெளிவாக உள் உணர்ந்து அறியவில்லை என்றால் எமது வாக்கின் அர்த்தங்கள் விபரீதமாகுமப்பா. எஃது ஒப்ப மனதை ஒரு நிலைபடுத்தியே எமது வாக்கினை அறியவேண்டும்.
  • ஏற்றம்பெற, ஏற்றம்பெற கர்மம் தொலைய பலதடங்கள் (பல புண்ணிய ஸ்தலங்கள்) தரிசிப்பதும், தர்மங்கள் செய்வதும் என்றென்றும் சிறப்புதான். உயர் சிறப்புதான் எக்காலமும், காலகாலம் பல்வேறு மகான்கள் வழிபட்ட தடங்கள் சென்று வணங்குவதும் சிறப்புதான். 
  • அப்பனே எத்தனை தெய்வீக அருள் பெற்ற மாந்தன் ஆயினும், எஃது ஒப்ப இறையை நேரில் காணும் பாக்கியம் பெற்றவன் ஆயினும், எத்தருணமும் எக்காலமும் தடங்கள் சென்று வணங்குவது சிறப்பாம். ஏனைய குழும அமைப்பில் வழிபாடுகள் செய்தாலும், பித்ருக்கள் தோஷநிவர்த்தி செய்தாலும், தெய்வதீவிலும் (இராமேஸ்வரம்) அஃது ஒப்ப தடத்திலும் ஏற்பதும் சிறப்பாம்.
  • செப்புவேன் எம்மாந்தன் ஆயினும் இறைதடமோ, தெய்வீக வழிபாட்டு கூடமோ அமைத்து அமைத்து எத்தனைதான் சிறப்பாக வழிபட்டாலும் அத்தகைய அமைப்புதன்னிலே சதம்சதம் பிராயசித்தங்கள் எடுபடாது. 
  • அப்பனே மாந்தர்கள் எத்தனை ஞான உபதேசத்தை செய்தாலும், கேட்டாலும் மனம்கொள் சதம்சதம்.
  • அகத்தில் சத்தியமும் தெளிவும் உடைய எத்தகைய ஆன்மீக மாந்தனும் இன்றைய அண்டத்தில் இல்லையப்பா.
  • ஆட்சிவழி மாந்தர்களோடு எவ்வித தொடர்பும் எந்த நிலையில் எதற்காக வைத்தாலும், அங்கே ஆன்மஞானம் கறை படுகிறதப்பா. அதிகாரம் உள்ள மாந்தனையோ, ஆட்சிவழி மாந்தனையோ ஆன்மவழி அமைப்பில் சேர்த்தால் அஃது அமைப்பு சிதறுண்டுதான் போகுமப்பா.
  • அஃது ஒப்ப எந்த நிலையிலும் “தான்” தோன்றக்கூடாது, தோன்றினால் இறைவன் தோன்றமாட்டான்.
  • எஃது ஒப்ப குற்றமோ, பாவமோ செய்வது மாந்தர்களின் இயல்புதான் பாதகமில்லை, பாதகம் அதில் இல்லையப்பா செய்வதை உணர்ந்து திருந்தாமல் இருப்பதே பாதகமாப்பா.
  • பகருங்கால் லக்கினத்தை, ராசியை சுபர் திருட்டிக்க (நோக்க) பாலனே பொன்னன் (வியாழன்/குரு) திருட்டிக்க இத்தகு மாந்தர்கள் எம் வழி வரதக்கவர்கள். 
  • பாபம் செய்யினும் மனம்கொள் சிந்தையில் துடிதுடித்து அதற்காக வருந்தி திருந்துவார்கள்.
  • பகருவேன் ஏனையோர் இஃது ஒப்ப இருந்தால் இறைகருணை பெறலாம்.
  • பகருவேன் ஏகஏக மாந்தனுக்கும் சரியோ தவறோ தனித் தனி உணர்வு உண்டு, தனித் தனி கருத்து உண்டு. உண்டு என்பதால் அதனை ஏளனம் செய்வதில் எவருக்கும் லாபமில்லை. உணர்ந்து உரைக்க வேண்டினால் மட்டுமே அறஉரை உரைக்க வேண்டும்.
  • நல் உணர்வு அற்றோர் இறை அருளினால் மட்டுமே நன்மையை உணர இயலும் இயலும்.
  • தீமையை விலக்க இயலும்.
  • இயலும் உயர்ந்ததை பேச இயலும்.
  • இயலும் உன்னதத்தை உன்னதமாய் உரைக்க இயலும்.
  • இயலும் உள்ளத்தில் உறுதியும், திடமும், அறமும் கொண்டு வாழ இயலும்.

Friday, 21 February 2014

அகத்தியரின் அருள் வாக்கு - நம் போன்ற முட்டாள்களுக்கு!

[ புகைப்பட நன்றி: அகத்தியர் அடியவர் திரு.சதீஷ் அவர்களுக்கு]

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியப் பெருமான் ஆசியுடன் 2011ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் "சித்தன் அருளில்" அடியேனுடைய நண்பர் பகிர்ந்து கொண்டதை, உங்கள் அனைவருடன் வாரம் ஒருமுறை என்று பகிர்ந்து கொள்கிற போது என்னுள் நிறையவே கேள்விகள் உதித்தது. எத்தனையோ முறை யோசித்தும் விடை கிடைக்காத கேள்விகள். அதற்கான பதிலை அகத்தியப் பெருமானே மனம் கனிந்து தந்தால்தான் ஆயிற்று, இல்லையென்றால் வேறு வழியே கிடையாது என்று உணர்ந்து அவரிடமே வேண்டிக்கொண்டு, பொறுமையாக காத்திருந்தேன்.  அகத்தியர் அடியவர் திரு ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி என்பவர் (சித்தன் அருளை மிகச் சிறப்பாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வலை பூவில் தந்து கொண்டு இருக்கிறவர்) இன்று ஒரு நாடி வாசித்த தொகுப்பை அனுப்பித்தந்தார். படித்த உடன் மலைத்துப் போய் விட்டேன் என்றுதான் சொல்லவேண்டும். அடியேனுடைய அத்தனை வினாக்களுக்கும் அதில் பதில் இருந்தது.  யான் பெற்ற இன்பம் நீங்களும் பெறுக என்ற எண்ணத்தில், அவர் அனுமதியுடன், உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன். யாரோ கேட்டார்களே "இத்தனை அருள் பெற்றும் எல்லாரும் ஓட்டாண்டி தானா?" என்று. சாதாரண மனிதர்கள் எத்தனை அளவுக்கு சொல்லியும், தவறை திரும்பத் திரும்பத் செய்வதையும், ஒரு தாயின் மிகுந்த கனிவுடன், சித்தர்கள் மறுபடியும் மறுபடியும் மன்னித்து அருளுவதையும், எப்படி இருக்கவேண்டும் என்பதையும், தானத்தின் மகத்துவத்தையும், அகத்தியப் பெருமான் விரிவாக விளக்குவதை படித்த பின்னர் ஏனும், மனம் திருந்தி இந்த மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்றால், அதை விட ஒரு நல்ல விஷயத்தை நாம் இந்த உலகில் செய்வதற்கில்லை என்று கூறிக் கொண்டு, அகத்தியப் பெருமானின் அருள் வாக்கை, அப்படியே உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். எல்லோரும் உணர்ந்து நலம் பெறுக.      

"இறையருளால் இயம்பிடுவேன் இத்தருணம் இயம்பும்கால் பல்முனிவரோடு பிறர் நலன் தேடும் புண்ணிய ஆத்மாக்களையும் பணிந்து இயம்புவேன். காகபுஜண்டர், கும்பர், வசிட்டர் திருவடிகள் பணிந்து இத்தருணம் கருவுரார் யான் சில்வாக்கு, வாக்கும் பொதுவில் தடமாந்தருக்கும் வலுத்துவேன். என் நாமத்தில் பற்று கொண்ட சேயேனுக்கும் வலுத்துங்கால் தெய்வீகத்தை தெய்வீக நிலையிலிருந்து புரிதல் வேண்டுமப்பா.  வறிவிப்பேன் சேயே உன் ஒத்து தட மாந்தர்களும் எண்ணுகிறார்கள். வாக்கும் சித்தர்கள் யாது உரைக்கிறார்கள்? ஆகமத்தைதானே உரைகிறார்கள்.  வலுத்துவேன் முன்னர் அமரும் மாந்தனின் வதனதிரையை (முகத்திரை) கிழிக்குமாறு பகரவில்லை, பகர்ந்தாலும் அதை கூற அனுமதிப்பதில்லை.  பாலனே இது குறித்து இதழ் ஓதுபவனுக்கும் (நாடி வாசிப்பவருக்கும்), ஏனையோருக்கும் விசனம் உண்டு. பகரும்கால் எமக்கு எளிதப்பா.  எதிர் அமரும் மாந்தனின் வதனதிரையை கிழிப்பது, பகர்ந்தால் சிக்கலும், வேதனையும் எமக்கல்ல இதழ் ஓதுபவனுக்கே வந்து சேரும் என்பதால், என்பதாலும் பல உண்மைகளை கேட்கும் மாந்தராலும் ஏற்க இயலாது என்பதால்,  என்றென்றும் பட்டவர்த்தமான வாக்குகளை யாங்கள் பகருவதில்லை.  பகருவேன் உரைக்க வந்ததை பகரும்கால் பாலனே மெய்யை மெய் என ஏற்பதற்கு மெய்தன்மை கொண்டோர் வேண்டும் பாலகனே.  இஃது தடம் யாது என்று அறியாமலே பலர் வந்து போகிறார்கள்.  பகரும்கால் இதழ் ஓதுபவன் தோற்றமும் விருத்தமாக இல்லாது ஆன்மீகத்திற்கு பொருத்தமாக இல்லாது, இல்லாதும் இருப்பதாலே புஜண்டர், வசிட்டர், கும்பர் வாக்கினை அலட்சியம் செய்கிறார்கள். பகரும்கால் இஃது ஒப்ப இருப்பதால் மெய் தொண்டர்கள் வரக்கூடும் என்பதால் இவனை இஃது ஒப்ப தோற்றத்தில் இருக்க வைத்தோம், வைத்தோமப்பா ஜீவ அருள் நாடியை இவனிடம் சதம் சதம் மூடன் என்பதால். வருகிறாயே சேயே இதன் நுணுக்கத்தை ஆய்ந்துபார்.  வறியும்கால் முன்னரே அறிமுகமான ஆன்ம மாந்தனையோ, அனைவரும் அறிந்த துறவி கரத்திலேயோ வைக்காது இஃது நாடியை இவனிடம் வைத்த காரணம் பல இருந்தாலும்,  வறிவிப்பேன் ஏனையோர் உரைக்கும்கால் எம் கருத்தா, அவர்தம் கருத்தா என சிந்தனை சிதறல் வரக்கூடும்,  கூடுமப்பா இஃது ஒப்ப பல்வேறு ஆன்ம கருத்துகளை அறிந்த மாந்தன் கூறும் சமயம்,  கூறுகிறான் இவன் கருத்தினை சித்தர்கள் கருத்தா? என நினைக்க கூடும்.  கூறுகின்ற வாய்ப்பு உள்ளதால் ஆன்ம ஞானம் இல்லாத மூடனை தேர்ந்து எடுத்து,  திடம் கொண்டு நம்புகின்ற மாந்தர்களுக்கு வாக்கினை பகர்கிறோம். தெளிவுதான் இஃது இதழில் நல்கிறோம் அனைவருக்கும்.  திருப்தியும் இதில் காணாத மாந்தர்கள் அதிசயங்களை எதிர் நோக்குகிறார்கள், திருப்தியில்லை. வாழ்வுநிலை, தசநிலை, தனநிலை என எண்ணி, எண்ணி, எண்ணி தனத்தை தாராத சித்தர்கள் வாக்கை ஏன் ஏற்க வேண்டும் என எண்ணுகிறார்கள்.  இஃது ஒப்ப புஜண்டர், வசிட்டர், கும்பர் வந்து உரைப்பது எத்தனையோ பிறவிகளில் செய்த புண்ணியங்கள் ஒன்று சேர்ந்தாலும் நடவாதப்பா, என்றாலும் மாந்தர்கள் மீது கழிவு,  இரக்கம் கொண்டு இறைக்கு சமமான மாந்தர்கள் வாக்கு உரைத்தால் ஏற்காது,  எள்ளி நகையாடினால் எமக்கல்ல நட்டம். அம்மாந்தனுக்கே கட்டம்.  கட்டம் வந்த காரணம் கர்மவினை.  கர்மவினை அகற்ற கூறுகிறோம் பல்வழி.  கூறுகின்ற வழி ஏற்க இயலாது. கட்டம் தீர வேண்டும் என நினைத்தால் எங்ஙனம் சாத்தியம்.  குறிப்பேனே இத்தட மாந்தர்கள் ஆகட்டும்,  வேறு எவர் ஆகட்டும்,  கூறியபடி வாக்கு நடவவில்லை என வருந்தினால் அஃது எமது குற்றமல்ல.  கூறியது கூறியபடி ஏற்று மெய்தன்மையோடு,  திடம் கொண்டு சென்ற ஊழிலில் பாபம் செய்தோம். இனியாவது புண்ணியம் செய்வோம் என எண்ணி எண்ணி சதம் சதம் நீதியோடு வாழும் மாந்தருக்கு ஒரு போதும் பலியாமல் போகது. எத்தனை நெருக்கத்தில் வந்து வாக்கறிந்தாலும், வாக்கறியும் மாந்தர்கள் செய்யும் தவறை யாங்கள் அறிவோம் என்றாலும்,  அவன் மனநலம் கருதி சுட்டி காட்டாமல் விடுகிறோம்.  எஃது ஒப்ப இறையோ அனைவரையும் பொருத்தருளும் போது யாங்களும் பொருத்தருளுவோம், அருள்வோம் என்றாலும் அஃது தவறு என சுட்டி காட்டிய பின்னரும் தொடர்வது சரியல்ல. அறிவிப்பேன் சேயே மெய்யான வாக்கு வேண்டும் என உன் போல் பலர் வேண்டுகிறார்கள். அனைத்தையும் அறிந்த யாங்கள் மௌனமாக நகைத்து கொண்டே அனைத்தையும், அனைவரையும் கவனிக்கிறோம்.  அறிவாயே இத்தடத்தில் எவர் நாடி வந்தாலும் அமைதி காத்து வாக்கறிய வேண்டும். அகத்தில் துரிதம், துரிதம் என எண்ணுபவர்கள் அவர்கள் விரும்பியபடி வாக்கினை அறிய இயலாது.  அஃது ஒப்ப இதழ் ஓதுபவனும்,  நீயும் ஏக கருத்தை கவனம் கொள்ள வேண்டும்.  வேண்டுமப்பா பொறுமை,  பொறுமை வேண்டுவோருக்கு விளக்கங்கள் தந்தே ஆக வேண்டும். உளைச்சல் இன்றி. வலுத்துவேன் சூல முனிவரின் விருப்பமும் இறை விருப்பமே வாக்கினை பகர்வதும் பகராமல் போவதும்.  பகரவேண்டும் இன்னாருக்கு,  பகர வேண்டாம் இன்னாருக்கு என எம்மை நிர்பந்திக்க இயலாது.  பலன் அறிய வரும் மாந்தன் பக்குவமின்றிதான் இருப்பான்,  பக்குவமாக பாலகர்கள் எடுத்தியம்பத்தான் வேண்டும். பகருவேன் எதிரே அமரும் மாந்தன் சிறப்பில்லா எம் கொள்கைக்கு எதிரான மாந்தன் என்றாலும்,  இதழ் ஓதுபவனோ,  தட மாந்தர்களோ சினம் கொள்ள கூடாது.  எஃது ஒப்ப சூலமுனிவர்கள் அவர்களை கவனித்து கொள்வார்கள் என்றெண்டும்.  யாங்கள் இயம்புகின்ற கருத்தினை அறகருத்தினை தவிர ஏனைய கருத்தினை தெய்வீக சூட்சமத்தை ரகசியம் காத்திடல் வேண்டும்.  நன்றாக ஏககருத்தை கவனத்தில் கொள், கொள்ளப்பா தனத்தை எவன் விடாது பிடித்துள்ளானோ, குறிப்பேனே பிறரை எவன் அலட்சியமாக எண்ணுகிறானோ, குறிப்பேனே தானமோ, தர்மமோ அணுவளவும் செய்யாது எவன் உள்ளானோ, உள்ளானோடு அவனிடம் தெய்வீகமோ, சித்தர்களோ ஒருபோதும் இருப்பதில்லை. உரைப்பேனே உள்ளதை எல்லாம் எவன் ஈகிறானோ சித்தர்கள் உரைத்ததை சிந்தித்து பாராது சதம் சதம் ஏற்கிறானோ உணர்வாயே அவனே எங்கள் அருள் பெற்றவன், எங்கள் சேயவன்.சேயவனே சேயவனே சேயவனே என விளித்தால் மகிழ்வதும், சிறப்பாக எமது உயர் குணங்களை மட்டும் ஏற்காது இருப்பதும் அழகல்லா. செப்புவேன் எத்தனை ஆசிகள் யாங்கள் வழங்கினாலும் சிந்தையில் தனத்தையே குறிகொண்டு வாழ்பவரை யாங்கள கரை சேர்பதில்லை. சிறப்பான சிந்தை, உயர்ந்த குணம், எவருக்கும் உதவுதல், எதிரிக்கும் உதவுதல் என்ற மனம், மனதோடு நற்குணம் மனமாகி வாழ்வது, மனதால் அணுவளவும் சூது இல்லாமல் இருப்பது மறிவிப்பேன் வாரி வாரி வழங்குவது, இத்தகைய குணங்களே எம்மை அருகே சேர்க்குமப்பா. மனம் ஒன்று நினைக்க, வாக்கு ஒன்று சொல்ல, செயல் ஒன்று செய்ய இத்தடம் வரும் மாந்தர்களை யாங்கள் நன்றாக அறிவோம், அறிவோமப்பா அவர்களை பற்றி இத்தட மாந்தர்கள் விசனம் கொள்ள வேண்டாம், அவர்கள் குறித்து விமர்சனமும் ஏளன உரையும் இங்கு வேண்டாம். அறிவாய் அடுத்த மெய்யை இறை இறை ஞானம் ஞானம் எல்லாம் பகர்ந்து கொண்டு அஃது ஒப்ப ஒருவர் மீது ஒருவர் காழ்புணர்ச்சி கொண்டு, குறையும் கூறிகொண்டு அஃதோடு மமதையும் கொண்டு பவ்யம் போல் வெளிகாட்டி பகட்டை உள்ளே வைத்து வரும் மாந்தர்களும் உண்டு,உண்டப்பா என்றாலும் பக்குவம் ஆகட்டும் என்றே பொருத்துள்ளோம். உதட்டளவில் எமது நாமத்தை உச்சரித்து உள்ளே சித்தனாவது வாக்காவது உரைப்பது மெய் என்றால் அனைவர் நயனத்திலும் அச்சரத்தை காட்ட வேண்டியதுதானே. அஃது ஒப்ப ஒருவன் வருகிறான் எத்தனை சாதுரியம், வஞ்சகம் எம்மிடமே சாமர்த்தியமாக வாக்குரைப்பதாக எண்ணி பாதாளத்தில் வீழ்கிறானப்பா. அப்பனே சரணாகதி அடைந்தால்தான் தேற முடியும். இயம்புவது யாது எனில் சூழ்ச்சியாக வஞ்சமாக சாமர்த்தியமாக எம்மிடம் வாக்கறிய முயன்றால் எம்மிடம் பலன் கிட்டாது, என்றாலும் அனைவரும் எமது பிள்ளைகள் என்றே அரவணைத்து செல்வோம். எம்மை பணிந்தாலும், பணியாவிட்டாலும் இறையை பணிய வேண்டும். எம்மை ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் இறையை ஏற்கவேண்டும். ஏற்பதென்றால் வெறும் வழிபாட்டை மட்டுமல்ல.சத்தியத்தை ஏற்கவேண்டும். ஏற்பதென்றால் மந்திர உரு போடுவது மட்டுமல்ல. மனம் குன்றா தானம் அளிப்பதையும் ஏற்கவேண்டும். எம்மிடம் கணிதம் பார்த்தால் இறையிடம் கணிதம் பார்த்தால் யாங்களும் கணிதம் பார்க்க வேண்டிவரும். எத்தனைதான் இயம்பினாலும் கர்மா செவியில் ஏற விடுவதில்லை. யாது செய்ய. எஃது ஒப்ப இவற்றை உரைக்கின்ற காரணம் கேட்கின்ற நீவீர் இஃது குறை இல்லாது வாழ பழகுவீர்.  மாந்தருக்கு தோன்றுவது எமக்கு புனிதமாக தோன்றாது, எமக்கு புனிதமாக தோன்றுவது மாந்தருக்கு புனிதமாக தோன்றாது.

ஆசிகள்...    சுபம் .

Thursday, 20 February 2014

சித்தன் அருள் - 164 - பாபநாசம் - அருள் நிறைந்த ஸ்நானம்!

[ பொதிகையில் அகத்தியப் பெருமானின் இரு வேறு தோற்றம்]

ஏன் என்றால், அங்கு திருக்குறும்குடியின் பக்கத்தில் கூட, சில விந்தை மிகு மலைகள் எல்லாம் இருக்கிறது. விந்தை மிகு நீர்வீழ்ச்சிகள் எல்லாம் இருக்கிறது. இதுவரை யாருமே கண்டிராத சில அருவிகள் எல்லாம் இருக்கிறது. அந்த அருவியில் மட்டுமே ஏறத்தாழ 147 மருந்துகள் ஒன்றாக கலக்கினால் அருவி எப்படி வருமோ, அந்த மாதிரி அருவி கூட திருக்குறும்குடி பக்கத்திலே இருக்கிறது. ரகசியாமான இடம். சொட்டு சொட்டாக விழும் இடம் அல்ல. அருவி போல கொட்டாது. ஆனால் ஆனந்தமாக, ஒரு சிறு ஓலையில் பட்டு திரிந்து விழுந்து கொண்டிருக்கும். அந்த அருவியில்தான் உங்களை எல்லாம் நீராடச் சொல்லலாம் என்று எண்ணியிருந்தேன். ஆனால், அதை விட இது முக்கியம். ஏன் என்றால், எல்லா தேவதைகளும் வந்திருக்கிறார்கள். அகத்தியனும் இங்கு வந்திருக்கிறேன். முதலில் இந்தப் புண்ணியத்தை உங்களுக்கு வாங்கித் தருகிறேன். ஆகவே, இன்று மூன்று மணிக்குள் யாரெல்லாம் நீராடுகிறார்களோ, அது தான் உண்மை. இங்கு நீங்கள் மட்டுமல்லடா, மனிதர்கள் அத்தனை பேரும், யாரெல்லாம் நீராடுகிறார்களோ அவர்களுக்கு எல்லாம் அந்த புண்ணியம் கிடைப்பதோடு, பாபம் போவதோடு, அவர்களுக்காக இப்பொழுது நீராடுவதற்காக அல்ல, உங்கள் வீட்டார்களுக்காக, நண்பர்களுக்காக, உறவினர்களுக்காக, புண்ணியத்தை வாங்கி கொடுப்பதற்க்காகத்தான் உங்களை எல்லாம் வரச் சொல்லியிருக்கிறேன். இதுவரை நீங்களே புண்ணியத்தை சம்பாதித்தால் எப்படி? என்ற எண்ணம் வரக்கூடாதல்லவா. ஆகவே, வீட்டுக்குச் சென்றவுடன், உனக்கும் புண்ணியம் வாங்கித் தந்திருக்கிறேன் என்று தைரியமாகச் சொல்லலாம். கோபித்துக் கொள்ளமாட்டார்கள், நம்பினால் நம்பட்டும், நம்பாமல் போனால் போகட்டும். அந்த நல்லதொரு காரியத்தைச் செய்வதற்காகத்தான் வரச் சொல்லியிருக்கிறேன். 

ஆக இப்பொழுது 8 நதிகளைச் சொன்னேன். 8 நதிகளின் தேவதைகளும் இங்குதான் அமர்ந்து இருக்கிறார்கள். நீங்கள் நீராடும் போது மட்டும் அவர்கள் வந்து ஆசிர்வாதம் பண்ணுவார்கள். அகத்தியனும் கடைசியாக, கும்பமுனி, உங்களை எல்லாம். வாழ்த்தி, வரவேற்று, நீராடச் சொல்லி, உங்கள் மனைவிக்கெல்லாம் ஒரு புண்ணியத்தை தேடி தரவேண்டும் என்பதற்காகத்தான், நான் இங்கு வரச்சொன்னேன். நீராடி விட்டு, நீங்கள் நேராக, கரும்குளம் பற்றி ஏற்கனவே சொல்லியிருந்தேன். கரும்குளம் வழியாக என் அப்பன் முருகன் சன்னதிக்கு செல்லுக. போகின்ற வழியில் ஏதேனும் புண்ணிய தலங்கள் தென்பட்டால், நேரம் இருந்தால், அதையும் எட்டிப் பார்த்துவிட்டு, அந்த புண்ணியத்தையும் வாங்கிக் கொள்ளலாம். இனிமேல் நீங்கள் சம்பாதிப்பது எல்லாமே புண்ணியம் தான். பாவமே அல்ல. இன்றைக்கும் நாளைக்கும், அந்த புண்ணியத்தை தேடிக் கொள்வீர்கள். ஆகவே, இந்த புண்ணியங்கள், 27 ஆண்டுகள் உங்களை, எந்த வித பாபம் செய்தாலும், காக்கும். இன்றைக்கு நீராடியது, காலையில் நீராடியது, நீராடப் போவது, சேர்த்துப் புண்ணியம் தான். ஆகவே நீ எத்தனை கொடிய பாபங்களை செய்திருந்தாலும், எத்தனை பொய்களை சொல்லியிருந்தாலும், எத்தனை தவறுகளை மனித நேயத்திற்கு எதிராக செய்திருந்தாலும், அதில் அத்தனைக்கும் ஏதேனும் விட்ட குறை, தொட்ட குறை இருக்கும் என்றாலும், அந்த குறையும் விலகி, உங்களை மிக மிகப் புனிதவானாக, பிறந்த குழந்தை எப்படி பூமிக்கு விழும் போது, எப்படி புனிதமிகு குழந்தையாக விழுகிறதோ, அது போல் இங்கு நீராடி விட்டுச் செல்லும் போதெல்லாம், நீங்கள் அத்தனை பேர்களும், ஒரு புனிதமிகு பயணத்தை மேற்கொண்டு இருக்கிறீர்கள், புனிதவனாக மாற்றிக் கொண்டு இருக்கிறீர்கள் என்பது உண்மை. 

அது மட்டுமல்ல, அடிக்கடி சொல்வேனே, லோபமுத்திரை என்பது வரவே இல்லை என்று. பல முறை அகத்தியனே ஆதங்கப் பட்டிருக்கிறேன். எல்லோரும் அகத்தியனுக்கு சிலை வைக்கிறார்கள். லோபமுத்திரைக்கு சிலை வைப்பதில்லை. ஏன் லோபாமுத்திரையை எட்டிக் கூட பார்ப்பதில்லை. ஒவ்வொரு முறையும் அகத்தியன் வாய் திறந்து பேசும் போதெல்லாம், யாரேனும் ஒருவராவது, லோபமுத்திரை எப்படி இருக்கிறாள், என்று ஒரு வார்த்தை கேட்டார்களா என்பதில் ஆதங்கம் எனக்கும் உண்டடா! ஆனால் நான் சன்யாசிதான், சித்தன்தான். சித்தனுக்கு தலையாய சித்தன்தான். ஆனால் எதற்கென்றால், ஆவலோடு அல்ல. ஆதங்கத்தோடு கேட்க்கிறேன். எல்லோருமே என் அருமை குழந்தைகள் நீங்கள். நீங்கள், லோபாமுத்திரை என்ன ஆயிற்று என்றைக்காவது கேட்டிருக்கிறீர்களா?  கேட்கவே இல்லையே. என்னடா பாரபட்சம்? உன் வீட்டிற்கு ஒருவன் வந்தால், உன் மனைவி வரவில்லையா என்று கேட்கிற உலகத்திலே, எந்த திருமண நிகழ்ச்சிகளுக்கும், எந்த சுபகார்ய நிகழ்ச்சிகளுக்கும்  நீங்கள் சென்றாலும், உங்களை கண்டவுடன், "உங்கள் மனைவி வரவில்லையா?" என்று ஆதங்கத்துடன் கேட்பார்களே, அப்போது நீங்கள் எப்படி இருப்பீர்களோ, அது போலத்தான் இன்றைக்கு நான் இங்கு இருக்கிறேன். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை, தாமிரபரணியே லோபாமுத்திரை என்று சொன்னேன். காவிரியும் லோபாமுத்திரை என்று சொன்னேன். தாமிரபரணி நதிக்கரையும், நேற்று இரவு, நள்ளிரவிலே அங்கு நீராடிவிட்டு, உங்களை ஆசிர்வாதம் செய்துவிட்டு, இப்பொழுது அவளும் வந்திருக்கிறாள். ஆக, அகத்தியன் தன் குடும்ப சமேதராக எழுந்தருளியிருக்கிற இடம் இது. ஆக, தம்பதிகளை காண்பது ரொம்ப புண்ணியம், என்று பொதுவாக வரலாறு உண்டு, புராணங்களும் சொல்வது உண்டு. சிவனை தனியாக தரிசிப்பது என்பது வேறு. சிவனை பார்வதியுடன் சேர்ந்து தரிசிப்பது என்பது வேறு. வள்ளி தெய்வயானையை முருகப் பெருமானுடன் தரிசிப்பது என்பது மிகப்பெரிய புண்ணியம், கிருஷ்ணனும் அப்படித்தான், பாமா ருக்மணியோட தரிசிப்பது என்பது அவ்வளவு விசேஷம். ராமனைப் பொருத்தவரை சீதா தேவியுடன் சேவித்தால் தான் புண்ணியம் என்று கணக்கு. எல்லோருமே தம்பதிகளாக உட்கார்ந்து ஆசிர்வாதம் பண்ணும் பொழுது, அகத்தியன் என்னடா பாபம் செய்தான் என்று எனக்கே தோன்றும். ஆகவே, தெரிந்தோ, தெரியாமலோ, லோபாமுத்திரையாக, தாமிரபரணி இங்கே இருக்கிறாள். ஆகவே யாமும் குடும்ப சகிதம் இங்கே அமர்ந்திருக்கிறேன். என்னை சுற்றி 8 நதிகளும் அமர்ந்திருக்கிறது. ஆகவே, நீராடி, சற்று ஆசுவாசப் படுத்திக் கொண்டு, ஏகுக, கரும்குளம் வழியாக. வேறு புண்ணிய தலங்கள் இருந்தால், அதையும் தரிசித்துவிட்டு, இன்று இரவு என் அப்பன் முருகன் சன்னதியில் தங்குக என்று அருளாசி."

அகத்தியப் பெருமான் ஆசிர்வதித்ததும், அனைவரும் அருவியில் குளிக்கும் ஆவலில் உற்சாகமானோம். "இதை விட பெரிய பாக்கியம் யாரால் தரமுடியும்?" என்றார் ஒரு நண்பர்.

நான் சிரித்துக் கொண்டே, "இந்த முறை அகத்தியர் நிறையவே அள்ளித் தந்துவிட்டார் எல்லோருக்கும். இனி என்ன சொல்லப் போகிறாரோ?" என்பதுதான் என் மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.

அருவியிலிருந்து வழிந்த நீர் ஓடி மறையும் இடத்தில் வேகம் கூடி நதியாக மாறுகிற அருமையான காட்ச்சியை ஆனந்தமாக ரசித்தபடி அருவிக்குள், நுழைந்தோம். அருவிநீர் "சில்" என்று இருந்தது. இத்தனை வெயில் அடித்தும் குளிரின் தன்மை உடலை ஊடுருவி, மொத்த சூட்டையும் தலைக்கு ஏற்றியது. ஒரு நிமிடம் தலை சுற்றினாலும், அடுத்த நிமிடம் அந்த சூட்டையும் ஓடும் நீர் எடுத்து செல்வதை உணர முடிந்தது. சற்று நேரம் அருவியில் குளித்தவுடன், தூரத்தில் நதியாக ஓடுகிற இடத்தில் முங்கி குளிக்க வேண்டும் என்று எனக்கு தோன்றியது. நண்பர்களிடம் சொன்ன போது, "இங்கேயே சுகமாக இருக்கு! அது போதுமே!" என்றனர்.

"சரி நீங்கள் அருவியிலே குளியுங்கள்! நான் போய் நதியில் குளித்துவிட்டு காத்திருக்கிறேன். பிறகு நீங்கள் அங்கே வாருங்கள்!" என்று சொல்லி நடக்கத் தொடங்கினேன்.

ஏன் இப்படி தோன்றியது என்று புரியவில்லை. நதியாக ஓடும் இடத்தில் ஓரளவுக்கு முங்கி குளிக்குமிடத்தை தெரிவு செய்து இறங்க நினைத்தவுடன், திரும்பி பார்த்தால், அனைவரும் கூடவே வந்திருந்தனர்.

"என்ன? அதுக்குள்ளே அருவி ஸ்நானம் ஆயிடுத்தா? உடனேயே வந்துவிட்டீர்கள்?" என்றேன்.

"இல்லை சாமி! நீங்க சொன்ன அதில் ஒரு விஷயம் இருக்கும் என்று உணர்ந்தோம். அதனாலத்தான் உடனே வந்துவிட்டோம்" என்றனர்.

நான் சிரித்துக் கொண்டே, "சரி நான் முதலில் இறங்கி பார்க்கிறேன், பின்னர் நீங்கள் ஒவ்வொருவராக வாருங்கள். எல்லோருக்கும் இடம் இருக்கிறது" என்று கூறி தண்ணீரில் இறங்கினேன்.

நதி நீர் இதமாக இருந்தது. குளிர் இல்லை. எங்கு இப்படி குளிரிலிருந்து, இதமாக மாறுகிறது என்று கண்டு பிடிக்கவே முடியவில்லை. நீரில் நின்றபடியே அகத்தியரையும், எட்டு நதி தேவதைகளையும், வேண்டிக் கொண்டபின் நீரில் மூழ்கினேன். நீரிலிருந்து வெளியே வரவே தோன்றவில்லை. ஏதோ ஒரு பஞ்சு படுக்கையில் கவிழ்ந்து படுத்தது போல் ஒரு மென்மை தோன்றியது. நின்று கொண்டே குனிந்து வளைந்து மூழ்கினாலும், முதுகில் ஓடும் நீர், யாரோ தன் கரத்தால் அன்பாக வருடிக் கொடுப்பது போல் தோன்றியது. ஒவ்வொரு முறையும் ஒரு தாயின், தகப்பனின் கனிவான வருடலை உணர முடிந்தது. எத்தனை நேரம் அப்படியே இருந்தேன் என்று புரியவில்லை. மற்றவர்கள் என்ன செய்கிறார்கள், குளிக்கிறார்களா என்று தோன்ற, நீரை விட்டு வெளியே வந்தேன். அத்தனை பேரும் கரையில் நின்று கொண்டு காத்திருந்தனர்.

"என்ன சுவாமி! இத்தனை நேரம் தண்ணீருக்கடியில், மூச்சு தாக்கு பிடிக்க முடிந்ததா?" என்று ஆச்சரியத்துடன் வினவினர்.

நானும் சிரித்துக் கொண்டே "நீங்களே வந்து மூழ்கி பாருங்கள்! அப்போது புரியும்" என்றேன்.

அதற்குத்தான் காத்திருந்ததுபோல், அப்படியே ஓடி வந்து எல்லோரும் நீரில் மூழ்கினர்.

நேரம் போய் கொண்டே இருந்தது. மூழ்குவதும், வெளியே வருவதும், மறுபடியும் மூழ்குவதும், யாரும் கரை ஏறுவது போல் தெரியவில்லை. இன்னும் அகத்தியப் பெருமான் சொன்ன படி கரும்குளம் செல்ல வேண்டும் என்ற எண்ணம் என்னுள்.

"போதும் மேலே ஏறி வாருங்கள்", என்று அழைத்தாலும், சின்ன குழந்தைகள் போல், நீரில் மூழ்கி விளையாடிக் கொண்டிருந்தனர்.

நானோ போதும் என்ற திருப்தி நிலைக்கு வந்து, கரை ஏறிவிட்டேன். தலை துவட்டி உடை அணிந்து திரும்பி பார்க்க யாரும் கரை ஏறுவதாக தெரியவில்லை.

"இப்படியே குளித்துக் கொண்டிருந்தால், அகத்தியர் நாம் கரும்குளம் வரும் வரை அங்கு காத்திருக்க மாட்டார். உங்களுக்கெல்லாம் அவர் ஆசிர்வாதம் அங்கேயும் கிடைக்க வேண்டுமா இல்லையா?" என்று சற்று அதிகாரமாக சொன்ன உடன் அனைவரும் கரை ஏறி அடுத்த ஐந்து நிமிடத்தில் தயாராகி விட்டனர்.

மனதுக்குள் சிரித்தபடி, அகத்தியர் சொன்ன அருள் வாக்கை விவாதித்தபடி, கரும்குளம் கிராமத்தை அடைந்து, முருகர் சன்னதியில், தரிசனம் செய்தோம். தரிசனத்துக்குப் பிறகு, ஒரு ஓரமாக அமர்ந்து நாடியை பிரிக்க,

ஒரு தகப்பனின் அதிகாரத்துடன், அகத்தியப் பெருமானின் "செம" திட்டு வந்து விழுந்தது, எனக்கு.

[அகத்தியர் அடியவர்களே!இருவார இடைவேளைக்குப் பின் மறுபடியும் சித்தன் அருளில் உங்களை சந்திக்கிறேன்]

சித்தன் அருள்.............. தொடரும்!

Thursday, 13 February 2014

சித்தன் அருள் - 163 - பாபநாசம் - உற்றார், உறவினர், நண்பர்களுக்காக!

[பாபநாசம், திருநெல்வேலி]
விண்மீன் கேட்டை உதித்திட்ட வேளையிலே இன்று தான் அதிகாலையில் அகத்தியன் யாம் அற்புதமான வார்த்தைகளை செப்பினேன். நேற்றைய தினம் ஆங்கொரு சித்தர்கள் எல்லாம், அன்னவர்கள் துயிலும் போது பக்கத்தில் தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக, ஆங்கொரு ஒன்பது, நவசித்தர்களை அனுப்பிவைத்தேன்.  நவசித்தர்களும் சுற்றி வந்து சுற்றி வந்து காற்றாக இருந்து கொண்டு, துஷ்ட தேவதைகளை விரட்டி அடித்திருக்கிறார்கள். காலையிலேயே, இதை ஏன் சொல்லவில்லை என்றால், நீராடிய பின்பு தானே எதையும் சொல்லவேண்டும். நீராடும் முன்னாலே அகத்தியனை கேட்டதால், சில செய்திகளை மறந்து விட்டேன். ஆங்கொரு, சுற்றி வந்து காற்று மாற்றி மாற்றி அடித்ததெல்லாம் சித்தர்கள் தரிசனம் என்று எண்ணிக்கொள். பேய் காற்று என்று எல்லோரும் சொல்வார்கள், அது பேயல்ல, காற்றல்ல, சித்தர்களே காற்றாம். துஷ்ட தேவதைகள் ஏதும் வந்து உன்னை தொந்தரவு செய்யக் கூடாது என்பதற்காகத்தான், அகத்தியன் அங்கு நவதேவதைகளை அனுப்பி வைத்தது போல, நவசித்தர்களையும் அனுப்பிவைத்தேன். அவர்கள் காற்றாக சுற்றி வந்து சுற்றி வந்து உங்களை காத்தார்கள், அது தான் உண்மை. ஆகவே, அது வருண பகவான் காற்று என்றோ, மலை காற்று என்றோ எண்ண வேண்டாம். சித்தர்கள் தழுவிய காற்றுதான் நேற்று. இரவு ஒரு மணிக்குத்தான், சித்தர்கள் எல்லாம் வலம் வந்த போது தான், எந்ததொரு துஷ்ட தேவதையும் வராமல் இருப்பதற்காகத்தான், இவர்களுக்கும் சௌபாக்கியம் அளிக்க வேண்டும் என்பதற்காகத்தான், அவர்கள் சுற்றி சுற்றி வந்து மலை காற்றாக மலர்ந்தார்கள். அத்தனை அற்புதமான காரியங்களை சித்தர்களே செய்கிறார்கள் என்றால், மிக மிக அற்புதம். அகத்தியன் கூட இப்படி எதிர்பார்க்கவில்லை. துணைக்கு நில் என்று சொல்லிவிட்டு, அகத்தியன் சதுரகிரி ஏகிவிட்டேன்.

என்னப்பன் முக்கண்ணனுக்கு, கால் பிடித்து ஆசுவாசப் படுத்த வேண்டும் என்று, முருகனுக்கே அகத்தியன் என்னடா? முருகனுக்கே கால் பிடிக்க வேண்டியது அகத்தியனின் கடமை, என் குரு அவன், சிவபெருமானுக்கு நானே தான் கால் பிடிக்க வேண்டும். ஏன் என்று கேட்டேன் நான். அப்பொழுதுதான் சொன்னான் முக்கண்ணன்.

பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கிற பரந்தாமனுக்கு, ஆங்கொரு பாதத்தில் அமர்ந்து கொண்டுதான் லக்ஷ்மிதேவி கால் பிடித்து விட்டுக் கொண்டிருக்கிறாள். தனக்கும் அப்படி கால் பிடிக்க வேண்டும் என்று பார்வதி தேவியிடம் முக்கண்ணன் கேட்ட பொழுது, "நான் எதற்கு கால் பிடிக்க வேண்டும்? நான் தான் உங்கள் உடலில் பாதியாக இருக்கிறேனே. எனக்கு யார் கால் பிடிப்பார்கள், நீ பிடிக்கிறாயா?" என்று முக்கண்ணனிடம் கேட்டாள். ஆகவே பார்வதி தேவியே, சிவபெருமானை கேட்ட கேள்வியடா அது. பார்த்தேன் அகத்தியன். வேண்டாமே. இருவருக்குமே அகத்தியன் யானே கால் பிடிக்கிறேன் என்று, அன்று முதல்தான் கால் பிடித்துவிட ஆரம்பித்துவிட்டேன். அதுதான் கால் பிடிக்க போனேன் என்று சொன்னேனே, அதற்கு அர்த்தம் இதுதான். சிவபெருமான் ஆசை பட்டதுதான் உண்மை. ஒரு நாளும் சிவபெருமான் ஆசை பட்டவனல்லன். சித்தர்களுக்கு எல்லாம் தலைவனாக இருந்து சீர்படுத்தி, செயல்படுத்தி வருகிறவன். அன்னவனுக்கும், பரந்தாமன் போல் கால் பிடித்து விட வேண்டும் என்று ஆசை வந்ததே அபூர்வம் தான். சித்தனுக்கு அந்த ஆசை வரக்கூடாது. தலையாய சித்தனுக்கும், தலையாய சித்தனாக இருக்கின்ற முருகப் பெருமானுக்கும் தந்தையாக இருக்கின்ற சிவபெருமானுக்கும், இப்படி ஒரு ஆசை வரக்கூடாது தான், ஆனால், கால் பிடிக்கச் சொன்னதும் பார்வதி தேவி மறுத்துவிட்டாளே! அன்போடு தான் மறுத்துவிட்டாள். கோபத்தோடு அல்ல. சாதாரண சமயமாக இருந்தால், சிவபெருமான் ருத்திர தாண்டவமே ஆடியிருப்பார். என்னவோ நேற்றைய தினம், முக்கணன்னனுக்கு, இந்த தர்ம சங்கடமான நிலைமையை போக்குவதற்குத்தான், அகத்தியன் இருவருக்குமே கால் பிடித்துவிட்டுக் கொண்டுதான், வாக்குறுதியை கொடுத்துக் கொண்டிருந்தேன்.  அற்புதமான காட்ச்சியடா. அன்னவனுக்கு கால் பிடிக்கும் பாக்கியம் அகத்தியனுக்கு கிட்டியது. அந்த அம்பாளுக்கும் கால் பிடித்து, அவள் என்னை உச்சி முகர்ந்து, அவள் வாழ்த்தையும் பெற்று விட்டு வந்தேன்.

இப்பொழுது யாம் பாபநாசத்திலே இருக்கிறேன். என்னடா? இப்படி விந்தைமிகு செயலை செய்கிறாயே என்று கேட்காதே. பாபநாசத்திலே, முருகப் பெருமான் சன்னதியிலே, ஓரத்திலே அமர்ந்து கொண்டிருக்கிறேன். இன்னும் சில மணி நேரத்திலே அருவியோடு அருவியாக கலந்து, அன்னவர்கள் நீராடும் போது அருகில் இருந்து, நேற்றைக்கு தாமிரபரணி நதியில், லோபாமுத்ரா நதியாக வந்து நீராட வந்தவர்களை எல்லாம் அள்ளித் தெளித்து ஆசிர்வாதம் பண்ணினாளே, அந்த பாக்கியம் யாருக்கும் கிட்டவில்லை என்ற குறை எனக்கு தெரியும். பேசாமல் நீங்களும் நீராடப் போயிருக்கலாமே, ஏன் போக வில்லை என்று நான் உங்களை கேட்க்க மாட்டேன். ஆனால் அதற்கெல்லாம் சேர்த்து, எம் பெருமான் முக்கண்ணனை கால் பிடித்த கையோடு,  அந்தப் புனிதக் கையோடு வந்திருக்கிறேன். உங்களுக்கும், அருவியிலே குளிக்கும் போது, அகத்தியனே முதுகை தேய்த்து கொடுப்பது போல, நீரோடு நீராக கலந்து, என் நன்றி கடனை செலுத்த வருவேன். நீங்கள் நீராடும் பொழுது அகத்தியன் நான் அங்கிருப்பேன். உங்களை குளிர் ஊட்டுவேன், குளிப்பாட்டுவேன். ஆக, எத்தனை பாபம் செய்தாலும், சிறிதளவு புண்ணியம் கூட செய்யாவிட்டாலும், பக்தியை மேற்கொள்ளாவிட்டாலும், அவருக்கெல்லாம், இந்த பாபநாசம் நீரிலே குளித்துவிட்டால், அந்த பாபம் தொலையுமென்று,  ஏற்கனவே, எழுதப்பட்ட நியதி அது. ஏன் என்றால், பாமர ஜனங்கள், படிப்பறிவு இல்லாதவர்கள், தெய்வத்தையே நம்புகிறவர்களுக்கு எல்லாம் என்னடா திக்கற்ற கதி, எல்லோரும் உட்கார்ந்து பிரார்த்தனை செய்ய முடியுமா? செய்ய இயலாது. அப்படிப் பட்டவர்கள் இங்கு வந்து அருமையாக நீராடி, சென்றாலே, அந்த பாபம் போகும் என்று வரப்பிரசாதத்தை வாங்கிக் கொடுத்திருக்கிறேன்.  ஆக, இங்கு நீராடுகிற எத்தனை பேர்களாக இருந்தாலும் சரி, எத்தனை விகல்பமான மனிதர்களாக இருந்தாலும் சரி, ஒருமுறை இங்கு நீராடி விட்டால், பாபம் தொலைந்து விடும். பாபம் தொலைந்துவிட்டால் மறுபடியும் பாபம் செய்யக்கூடாது என்பதற்கல்ல, ஓரளவு தான் அந்த பாபம் போகும், என்பதே உண்மை.  ஆகவே, அவர்களுக்கும் அந்த பாபம் போக்கும் வன்மை, அகத்தியன் தான் அந்த முக்கண்ணனிடம் சொல்லி, வலுக்கட்டாயமாக வாங்கிக் கொடுத்த புண்ணிய இடமடா இது. 

இந்த ஓலை படிக்கிறானே, இங்கு தான், அகத்தியன் ரெண்டாவது யாகத்தை செய்தான். அகத்தியன் மட்டுமல்ல, பிரம்மதேவர் வலது பக்கத்தில் அமர்ந்து கொள்ள, நந்தியம் பெருமான் ஓரத்தில் அமர்ந்து கொண்டு, யாக மந்திரங்களை சொல்ல, அத்தனை பேர்களும் அமர்ந்து யாகம் செய்த புண்ணிய இடம் தான் இந்த இடம். அந்த இடத்தில் அமர்ந்து கொண்டு அகத்தியன் யான் உரைக்கிறேன், சுமார் 4817 ஆண்டுகளுக்கு முன்பு அகத்தியன் அமர்ந்து யாகம் செய்த புனிதமான இடம் இது. அப்படிப்பட்ட புனித இடத்தில் அமர்ந்து தான் உங்கள் அனைவருக்கும் அருள் வாக்கு தந்து கொண்டிருக்கிறேன். ஆகவே, இந்த இடம் மிகப்புனிதமான இடம் மட்டுமல்ல, பாமர மக்களுக்கும், இன்னவர் துணையாக இருக்கும் குழந்தைகளுக்கும், பாபத்தை போக்கி தருகின்ற புண்ணியத்தை வாங்கித் தருகிறேன். ஏன் என்றால் எத்தனையோ பேர்களுக்கு மனதிலே குறை இருக்கும். தான் மட்டும் புண்ணியத்தை சம்பாதிக்கிறோமே, வீட்டில் உள்ள அனைவரும் வர முடியாமல் போயிற்றே, அவர்களுக்கு எப்படியடா பாபம் கழியும்? மறு விமோசனம் உண்டா? என்று அன்னவர்கள் மனதில் நினைத்துக் கொண்டிருப்பதெல்லாம் அகத்தியன் யான் அறிவேன். அப்படிப்பட்டவர்களுக்கு, இந்த இடத்தில், அவர்கள் சார்பாக, நீராடினால் 33.1/33 விழுக்காடு புண்ணியம் அவர்களுக்கு போய் சேரும்."

இதற்கிடையில் ஒருவர் குறிக்கிட்டு "சாமி! சரியா கேட்கவில்லை! மறுபடியும் சொல்லுங்களேன்" என்றார்.

உண்மைதான்! கோவிலுக்கு வந்தவர்களினாலும், சிறு குழந்தைகள் ஓடி விளையாடுகிற சப்தத்தினாலும், அகத்தியர் சொன்ன முக்கியமான விஷயத்தை அவர்களால் கேட்க முடியவில்லை என்பதை உணர்ந்து, நான் படித்ததை சுருக்கமாக, அவர்களுக்கு மறுபடியும் சொன்னேன்.

"அதாவது, படிப்பறிவில்லாத, பாமர மக்களுக்கு, கோவிலுக்கு போகாமல் இருக்கும் சூழ்நிலையிலும், அந்த மாதிரி மக்கள், இங்கு வந்து குளிச்சா அவர்கள் செய்த பாபத்தின் 33.1/33 விழுக்காடு கரைந்து போகும்.  இதுக்காக முக்கண்ணனிடம் சண்டை போட்டு, பக்தி பண்ணினால்தான் பாபம் போகும் என்று சொல்லக் கூடாது, பக்தி இல்லாதவர்களுக்கும் அந்த பாபம் போகவேண்டும். என்று அந்த வரப்பிரசாதத்தை வாங்கிக் கொடுத்தார் அகத்தியர். ரெண்டாவது, நான் உட்கார்ந்திருக்கிறேனே இந்த இடத்தில்தான், அவர், இரண்டாவது யாகத்தை செய்தார். அதையும் காட்டத்தான் வந்தார். மூணாவது, உங்களில் யாருக்குன்னு தெரியாது, யாரோ மனசுல நெனச்சிருக்கீங்க. நமக்கு மட்டும் புண்ணியம் கிடைக்கிறதே, வீட்டில் இருப்பவர்களுக்கு இந்தப் புண்ணியம் கிடைக்கவில்லையே, என்கிற மன வருத்தம் அவர்களுக்கு இருந்திருக்கு.

"அவர்களை அழைத்து வரமுடியாது, இயலாது என்பதை அகத்தியன் நேற்றே சொன்னேன்.  அந்த புண்ணியம் கூட இப்பொழுது நீராடப் போகும் போது, நீங்கள் பண்ணுகின்ற புண்ணியம், 33.1/3 விழுக்காடு புண்ணியம் அவர்களுக்கு, இயல்பாகவே சென்று சேர்ந்துவிடும். ஆகவே, நீங்கள் எந்த புண்ணியம் பண்ணினாலும், இயல்பாகவே, உங்கள் வீட்டாருக்கும், வீட்டை சேர்ந்தவர்களுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கூட போய் சேரும். நீங்கள் அழைத்து வர முடியாதவர்களை, நினைத்து இங்கு குளித்தீர்கள் என்றால், உங்களுக்கு இதுவரை கிடைத்த புண்ணியங்கள், நேற்றைக்கு கிடைத்த புண்ணியங்கள், இன்றைக்கு கிடைக்கப் போகிற புண்ணியங்கள் எல்லாமே, 33.1/3 விழுக்காடு புண்ணியம் இங்கிருந்து அவர்களுக்கு இயல்பாகவே, பரிவர்த்தனை ஆகிவிடும். ஆதலால், நீங்கள் மட்டும் வரவில்லை, உங்கள் குடும்பத்தை சேர்ந்த அனைவருக்கும், புண்ணியத்தை வாங்கித் தருகிற வாய்ப்பு இங்கு இருக்கிறது, என்கிறார்.

"அது மட்டுமல்ல, நேற்றைய தினம் ஆங்கோர் தாமிரபரணியிலே எந்தெந்த தேவதைகள், நதி தேவதைகள் வந்து நீராடினார்களோ, அத்தனை தேவதைகளும், இன்று இங்கு வந்திருக்கிறார்கள். இன்று மதியம் மூன்று மணிவரை இங்குதான் இருக்கிறார்கள். ஆகவே, நீங்கள் எல்லாம் அமைதியாக சென்று ஆனந்தமாக நீராடினால், அகத்தியன் மட்டுமல்ல, அந்த புனித நதி தேவதைகள், யமுனை, சரஸ்வதி, துங்கபத்ரா, கோதாவரி, வைகை, தாமிரபரணி, காவேரி, கிருஷ்ணா, ஆகிய 8 நதிக்கரை தெய்வங்களும், இங்கு அமர்ந்திருக்கிறார்கள். இங்கு நீராடினால், 8 புண்ணிய தலத்தில் நீராடிய புண்ணியமும் கிடைத்துவிடும். என்னடா இது கதை விடுகிறேன் என்று எண்ணுகிறாயா? இல்லை இல்லை. ஏன் என்றால் மானிடர்கள் அப்படித்தான் நினைப்பார்கள். இதை நான் அடிக்கடி ஞாபகப் படுத்துகிறேன். நீங்கள் எல்லாம் "பகுத்து அறிவாளிகள்" ஆயிற்றே. இதெல்லாம் நடக்குமா? பொய்யா? ஏட்டிலே ஏதோ சொல்லுகிறானே என்று எண்ணாதே. இது கிடைக்காத பாக்கியம் என்று சொல்கிறேன். இல்லை என்றால் உன்னை பாபநாசத்துக்கு வரச் சொல்லி இருக்க மாட்டேன். உன்னை வேறு எங்காவது திசை திருப்பி அனுப்பியிருப்பேன்" என்றார்.

சித்தன் அருள்............ தொடரும்!

Monday, 10 February 2014

அகத்தியப் பெருமான் அருளிய விபூதியை பற்றிய தகவல்!


நெற்றியில் திருநீறு தரித்துக் கொள்வது உயர்ந்த தத்துவத்தை விளக்குகிறது. நாடாண்ட மன்னனும், மாசறக் கற்றவரும் கடைசியில் சாம்பலாகத் தான் போகப் போகிறோம். இந்த வாழ்க்கை மாயமானது என்பதை விபூதி உணர்த்துகிறது. பிறக்கும்போதும் மண்ணிலே பிறந்தோம். சாகும்போது மண்ணிலே தான் சாகப் போகிறோம். மண்ணிலே பிறந்த மரம் இறுதியில் மண்ணிலேயே மட்கி மண்ணோடு மண்ணாகத் தான் போகிறது. நம்மை முடிவில் அடக்கிக் கொள்ளப் போகிற தத்துவம் அதுதான். இதை நினைவுபடுத்திக் கொள்ளவே, நெற்றியில் விபூதி அணிகிறோம். 

மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகம், அதன் வழியாக மிக அதிக மாக சக்தி வெளிப்படும், உள்ளிழுக்கவும் செய்யும். இது ஒரு வர்ம ஸாதனம் கூட. சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீர் செவ்வனே செய்யும், அதனால்தான் நெற்றியில் திருநீறு பூசுகிறார்கள்.

விபூதி என்றதும் எல்லோருக்கும் சிவபெருமானைத்தான் நினைவுக்கு வரும். சிவனை வழிபடுவோர் அதை தங்களின் அங்கத்தில் அடையாளமாக தரித்துக் கொள்வார்.
 
விபூதியை பல பெயர்களில் மொழிவார்கள். இரட்சை, சாரம், விபூதி, பசுமம், பசிதம் என்று பல பெயர். அருகம்புல்லை உட்கொள்ளும் பசு மாட்டின் சாணத்தை சிறு உருண்டைகளாக்கி, வெயிலில் காய வைத்து, அதனை உமியினால் மூடி புடமிட்டு எடுத்தால் உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். வெண்மையான நிறமுடைய திருநீறே சிறப்பானதாக பெரியோர்களால் கருதப்படுகிறது. இதுவே உத்தமமான திருநீர் என்கிறார் அகத்தியர். 

விபூதியை இரண்டு வகையாக அணிந்து கொள்ளலாம். 

ஒன்று இடைவெளி இல்லாமல் நெற்றியிலும் அங்கத்திலும் பூசிக் கொள்ளும் முறை. இதை உள் தூளனம் என்கிறார். மூன்று விரல்களால், ஆள்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் ஆகியவற்றால் மூன்று கோடுகளாக விபூதியை ஓன்றிற்கு ஒன்று இணையாக தரித்துக் கொள்ளும் முறையை திரிபுண்டரிகம் என்பர்.  

சித்த மார்கத்தில், திருநீரை, செபம், மந்திரித்தல், யந்திரங்கள், மருத்துவம் என பல்வேறு செயல்களில் பயன்படுத்திய விதத்தை பற்றி அகத்தியப் பெருமான் பல இடங்களில் விளக்குகிறார். விபூதியை யாரிடம் இருந்து எப்படி பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது பற்றி அகத்தியர் தனது "அகத்தியர் பரிபூரணம்" என்னும் நூலில் அருளியிருக்கிறார். அந்த செய்யுளை கீழே தருகிறேன்.

ஆமப்பா சூட்சம் வெகு சூட்சமான
அருமையுள்ள மந்திரத்தைத் தியானம் பண்ணி
ஓமப்பா நல்லோர்க ளிடமாய்மைந்தா
உத்தமனே விபூதியுட நெதுவானாலும்
தாமப்பா தனதாக வாங்கும்போது
சங்கையுட நவர்கள் செய்யுந் தவமெல்லாந்தான்
வாமப்பால் பூரணத்தின் மகிமையாலே
வந்துவிடும் மனதறிவால் மனதைப்பாரே.

மனதாக நல்லோர்க ளிடத்திலிந்த 
மந்திரத்தைத் தானினைத்துப் பூரித்தாக்கால்
மனதாக அவர்கள்செய்யுந் தவப்பலந்தான்
மந்திரங்கள் தன்னுடனே வந்துசேரும்
மனதாக மூடர்வெகு வஞ்சர்கிட்ட
மணிமந்திர பூதியுட நெதுவானாலும்
மனதாக அவர்களிடம் வாங்கும்போது
மக்களே அவர்கள்குணம் வருகும்பாரே.

விபூதியை ஒருவர் மற்றவருக்கு கொடுக்கும் போது கொடுக்கிறவர் செய்த தவப் பயன் மற்றும் குண நலன்கள் வாங்குவோருக்கு போய்ச் சேர்ந்திடும். எனவே இதை உணர்ந்து தியானத்தில் சிறந்து நல்ல குண நலன்கள் உள்ளவர்களிடம் மட்டுமே திருநீற்றினை (விபூதியை) பெற வேண்டும் என்கிறார். மாறாக வஞ்சக எண்ணம் கொண்டோரிடம் இருந்து பெற்றால் அது தீய பலன்களையே கொண்டு தருமாம்.

இப்படி நல்லோரிடம் திருநீறு வாங்கிடும் போது அந்த பலனை முழுவதுமாக நாம் பெற்றிட ஒரு சூட்சும மந்திரம் இருப்பதாக அகத்தியர் கூறுகிறார்.

அது
சாற்றியதோ ருபதேசம் நன்றாய்கேளு
சங்கையுடன் ரூம் றீம் சிம்ராவென்று 
தேற்றியதோர் சித்தர்சிவ யோகிதானும்
திருநீறு தானெடுத்துக் கொடுக்கும் போது
பார்த்திபனே மந்திரத்தை நினைத்து வாங்க
பதிலாக அவர்பிலமும் வருகும்பாரே.

சித்தர்கள், சிவ யோகிகள், ஞானிகள் போன்றவர்களிடம் திருநீற்றை/விபூதியை வாங்கும் போது "ரூம் றீம் சிம்ரா" என்கிற மந்திரத்தை மனதில் நினைத்து செபித்து வாங்கிட, அவர்கள் பெற்றிருக்கும் உயர் தவப் பயனும், குணநலன்களும் நம்மை வந்து சேரும் என்கிறார்.

எல்லோரும் மேற்சொன்ன மந்திரத்தை மனப்பாடம் பண்ணி, பெரியவர்கள் அருளாசி பெற்று, சிறப்பாக வாழ்ந்திட வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

Thursday, 6 February 2014

சித்தன் அருள் - 162 - நம்பிமலை - நாகசித்தர் தரிசனம்!

[அகத்தியர் ஜீவ நாடி வாசிக்கப்பட்ட இடம். நம்பிமலை கோவில் வாசல்]

அகத்தியப் பெருமான், முக்கண்ணனுக்கு சேவை செய்ய சென்ற பின், சரி இனிமேல், சிறிது நேரத்திற்கு, அவரிடமிருந்து எந்த அருள்வாக்கும் எதிர்பார்க்க முடியாது என்று, எல்லோரும் சற்று ஓய்வெடுக்கலாம் என்று விலகி அமர்ந்தோம். இருவர் கோவிலை ஒருமுறை சுற்றி வரலாம் என்று சென்றனர்.

எங்கும் ஒரே இருட்டு. குளிர்ந்த காற்று, சிறிய இடைவேளை விட்டு, ஓடி வந்து சில நேரம் தழுவிவிட்டும், சில நேரங்களில் அறைந்துவிட்டும் சென்றது. நடு இரவில் நல்ல குளிர் இருக்கும் என்று தோன்றியது.

சுற்றி வரச் சென்ற இருவரும் வேகமாக ஓடி வந்தனர்.

"ஏன் இப்படி ஓடி வருகிறீர்கள்? ஏதாவது பிரச்சினையா? என்ன பார்த்தீர்கள் என்றேன்?"

வந்தவர் தன்னை சற்று ஆஸ்வாசப்படுத்திக் கொண்டு

"சாமி! நாடியை புரட்டிப்பார்த்து என்ன நடக்கிறது என்று கேளுங்களேன்" என்றார்.

"என்ன நடந்தது என்று தெளிவாக சொல்லுங்கள். அகத்தியப் பெருமானிடம் இப்போது கேட்க முடியாது. அவர் வேலையாக சென்றுள்ளார். எப்படிக் கேட்டாலும் பதில் சொல்ல மாட்டார். பின்னர் விசாரிப்போம். இப்போது நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று தெளிவாக சொல்லுங்கள்" என்றேன்.

"சாமி! நடந்து வரும்போது, சும்மாவேனும் அந்த புற்று இருக்கும் இடத்தை பார்க்கலாம் என்று எட்டிப்பார்த்தேன். அங்கு வெளிச்சம் போட்டபடி ஒரு நாகம் சென்றது. அதன் முகமருகே சங்கு சக்கரம் தெளிவாக தெரிந்தது. இதென்ன விநோதமாக இருக்கிறதே என்று தோன்றியது. அதையும் அகத்தியரிடமே கேட்டுவிடலாம் என்று தான், தங்களை கேட்டேன்" என்றார்.

"இப்பக் கேட்டா பதில் சொல்ல மாட்டாரே" என்ற படி நாடியை புரட்டினேன்.

நானே ஆச்சரியப்படும்படி அகத்தியர் நாடியில் வந்து பதில் சொன்னார்.

"அன்னவன் சற்றுமுன் செப்பினானே. நானும் ராகு காலம் வந்துவிட்டது என்று சொன்னேன். ராகு காலத்துக்கு அதிபதியாம், ஆதிசேஷன் அவதாரம் எடுத்த புற்று என்று சொன்னேன். அவனே தாங்கிக் கொண்டு இருக்கிறான் என்று சொன்னேன். அந்த ஆதிசேஷனை காணவேண்டும் என்ற ஆசை எல்லோருக்குமே இருக்கும். அது சீறுமா, கடிக்குமா, மயக்குமா, மெருக்குமா, அவ்வளவு பெரிய பாம்பா, என்றெல்லாம் கற்பனை செய்து கொண்டிருக்கலாம். ஆதிசேஷனுக்கு ஏழு தலை என்று பெயர். ஆனால் ஐந்து தலையுடன் ஒரு நாகம் இருப்பதாக இங்குள்ளவர்கள் சற்று முன் சொன்னார்கள். ஐந்து தலை நாகமோ, ஏழு தலை நாகமோ, சற்று முன் இன்னவன் கண்ணில் பட்டதெல்லாம், சித்த நாகமடா! அவன் நாக பாம்பல்ல, நாகப்பாம்பு சித்தன் என்று பெயர். அந்த சித்தருக்கு மறு பெயர் "பாம்பாட்டி சித்தர்" என்று பெயர். இவன் கண்டதெல்லாம் நாகப்பாம்பல்ல, பாம்பாட்டி சித்தனையே கண்டிருக்கிறான்" என்றார்.

"போதுமா?" என்றேன் நான்.

"நாடியை கையில் வைத்திருந்தால், செய்தி வந்து கொண்டே இருக்கும் போலிருக்கு. அரை மணி நேரத்துக்கு சன் டீவியில் செய்தி வருவது போல" என்றேன் நான்.

"ஏதாவது நியூஸ் இருந்தா குடுங்க சார்!, இப்படியே வெச்சிட்டு இருந்தா போறும். ராத்திரி பூரா இதுதான் எனக்கு வேலை. வீட்டிலிருந்தால் படுக்க போயிருப்பேன்" என்றேன் நான்.

இருவரில் ஒருவர் " நாம போக வேண்டாம்! என்று சொன்னேன். அப்படியும் போய் இவர்தான் எட்டிப் பார்த்தாரு. தேவையா. பயந்து போயிட்டாரு" என்றார்.

"ஒருநாள் இடைக்காடரை காட்டித்தந்தார். ஒருநாள் பாம்பாட்டி சித்தரை காட்டிவிட்டார். அழுகுணி சித்தரை பற்றி தகவல் இன்று தந்தார்" என்றேன்.

சற்று நேரம் அனைவரும் அமைதியாக இருந்தோம்.

திடீரென்று நாடியில் அருள் வாக்கு வந்தது.

"விண்மீனை பார்க்க முடியவில்லை என்று கவலைப் பட்டாயே! மூன்றாவது ஜாமத்தில் மேலே எட்டிப்பார். விண்மீன் தெரியும். விண்மீனில் ஒரு அதிசயம் நடக்கும். அதை அகத்தியன் இப்பொழுது உரைக்க மாட்டேன். நீ கண்டால், அப்புறம் கேளு, உரைக்கிறேன்."

மூன்றாவது ஜாமம்னா எப்போ? என்றேன்.

"பன்னண்டு மணி" என்று கூட இருந்தவர் சொன்னார்.

"லோப முத்திரா வேறு யாரும் இல்லை, காவிரியும், தாமிர பரணியும் தான். எனக்கு மனைவி இல்லையடா. துறவறம் பூண்டவனை வீட்டில் வைக்ககூடாது என்று சட்டம். அகத்தியனை ஒதுக்கி விடுவார்கள் என்பதற்காக அல்ல. உலக வழக்கத்துக்காக. அகத்தியனுக்கும், மற்ற சித்தர்களுக்கும் இதே நிலை தான். அத்திரி முனிவருக்கு மனைவி உண்டு, குழந்தை உண்டு. காக புசுண்டருக்கும் உண்டு. அத்திரி மகரிஷியின் மனைவி தான் அனுசூயா. அனுசூயாவுக்கு பிறந்தவர் தான் மார்க்கண்டேயன்." என்றார்.

"இன்று தான் மார்க்கண்டேயன் பிறந்த நாள். அந்த நாளும் இந்த நாளே. இந்த நாளில் சம்பந்தப்பட்ட விஷயத்தை மட்டும் தான் அகத்தியன் யான் உரைப்பேன். இப்படிப்பட்ட விஷயங்கள் அவ்வபோது வரும். நீங்கள் அனைவரும் அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து, குளித்து உடலை சுத்தம் படுத்திக் கொண்டு, பாபநாசம் செல்க. பிறகு அங்கிருந்து மேற்கொண்டு பயணத்தை தொடர்க. மேற்கொண்டு விஷயத்தை உரைக்க, பாபநாசம் நோக்கி வரட்டும். மேற்கொண்டு விஷயத்தை உரைக்கிறேன். இடையில் அகத்தியனை தொந்தரவு செய்யாதே! அகத்தியனுக்கு சற்று அவகாசம் கொடு. மூன்று நாழிகை." என்றார்.

"சரி! இனி அவரை தொந்தரவு செய்ய கூடாது" என்று கூறி நாடியை கட்டிவைத்தேன்.

எல்லோரும் உணவருந்தி விட்டு உறங்க சென்றோம்.

மறுநாள் காலை. அகத்தியப் பெருமான் சொன்னது போலவே, பிரம்ம முஹுர்த்தத்தில் எழுந்து, குளித்து உடலை சுத்தம் பண்ணிக்கொண்டு, நம்பிமலை பெருமானுக்கு அவர் வாசல் முன் நின்று நன்றி கூறிவிட்டு, நாடியை புரட்டிப் பார்க்கலாமே என்று கட்டை பிரிக்க, அகத்தியர் உடனே வந்தார், அருள் வழங்கினார், சொன்னதை கேட்ட நாங்கள் அனைவருமே, திக்கு முக்காடிப் போனோம்.

"ஒளிமறை விண்மீன் கேட்டை உதித்திட்ட வேளையிலே, ஒப்பற்ற ஆங்கொரு மாமலை மீது அமர்ந்து கொண்டு அகத்தியன்  எதிர்கால நிலைபற்றி யாம் உரைக்க, நேற்றைய தினம் எத்தனையோ செய்திகளை சொன்னேன் என்றாலும், சித்தர்கள் வழிபாடு கிடைக்கவில்லை என்ற ஏக்கம் சிலருக்கு இருக்கலாம். எட்டி எட்டி பார்த்ததில் பயனில்லை. அவர்கள் சற்று தாமதமாக வந்து, இங்கு நீங்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த போதெல்லாம், அவர்கள் முதுகை எல்லாம் தடவிக் கொடுத்து முத்தமிட்டு, நல்லதொரு வாழ்த்துக்களை வழங்கிவிட்டு சென்றார்கள். 9 சித்தர்களும் சுற்றி வளையவந்து, எந்த வித ஆபத்துகளும் இல்லாமல் இவர்களை காக்கவேண்டி, மலையை சுற்றி சுற்றி காவல் காத்ததெல்லாம் அதிசயம் தான். சித்தர்கள் தான் மனிதர்களை பார்ப்பார்கள் என்றாலும், மனிதர்களை சுற்றி வந்து பாதுகாப்பு கொடுத்ததெல்லாம் இதுதான் முதன் முறையடா. அகத்தியன் இட்ட கட்டளைக்கு இணங்கி, அவர்கள் அன்போடு வந்து மாமலையை சுற்றி விட்டு, இப்பொழுதுதான் தங்கள் இருப்பிடத்திற்கு சென்று விட்டார்கள். புளியமரத்துக்கு அடியில் இருக்கிற சித்தர்கள் கூட, சற்று எட்டிப்பார்த்து, அதிகாலை, உங்கள் கணக்குப்படி, மூன்றாம் ஜாமத்துக்கு முடிவிலும், நான்காம் ஜாமத்துக்கு முதல் ஆரம்பத்திலும் நம்பி திருமகனை சேவித்து, வரும் வழியில், இவர்களை எல்லாம் வாழ்த்திவிட்டு சென்றதெல்லாம் உண்மை தான். வானத்திலே ஆங்கொரு நட்சத்திரம் தோன்றும் என்று எட்டி எட்டிப் பார்த்த பொழுது, இடதுபக்கம் மாமலை மீது, மலை உச்சியில், அந்த அரும் பெரும் காட்சி அது கிடைத்தது.  ஆனால் யாருமே கண்டுகொள்ளவில்லை. அன்னவர்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த நேரம் அது. விடியற்காலை, உங்கள் கணக்குப் படி, என் கணக்குப் படி ஜாமம் என்றாலும் கூட, கடிகாரம் முள், மூன்றிலிருந்து, மூன்று இருபதுக்குள், அந்த அரும் பெரும் காட்சி, இடதுபக்கம் மலை உச்சியில் நடந்தது. தட்டி எழுப்பி பார்க்க வைக்கலாம் என்று எண்ணியிருந்தேன். ஆனால் அயர்ந்து தூங்கட்டுமே, அவன் அடியன் கோவிலில் தானே படுத்துக் கொண்டிருக்கிறான், அந்த காட்சி இவர்களுக்கு தானாக கிடைக்கட்டும் என்று விட்டுவிட்டேன். ஆகவே, சித்தர்கள் வந்தது, சற்று தாமதமானாலும் கூட, அருமையான அகத்தியன் சொற்படி, அத்தனை தூரத்திலிருந்து வந்து, இங்கு மாமலை மீது அமர்ந்து, படிக்கட்டில் அமர்ந்து, அந்த நம்பி பெருமான் முன் அமர்ந்து, வடக்கு நோக்கி அமர்ந்து, கிழக்கு நோக்கியும் அமர்ந்து அகத்தியன் இட்ட கட்டளை எல்லாம் அன்புற கேட்டனர். ஆகவே, அகத்தியன் உங்களுக்கெல்லாம் நல்லதொரு புண்ணியத்தை வழங்கிக் கொண்டிருக்கிறேன். ஆகவே, பிறந்த பயன், இவர்களெல்லாம் அடைந்து விட்டனர் என்றே எண்ணிக் கொள்ளலாம். இன்னும் சில பயணங்கள் இருக்கிறது என்றாலும் கூட, இந்த மாமலையில் விசேஷம் நேற்றிரவு நடை பெற்றதெல்லாம், இனிமேல் அடுத்த 200 ஆண்டுகளுக்குப் பிறகு தானே. ஆகவேதான், அந்த காட்சியை கண்கொள்ள காணவேண்டும் என்பதற்காக, அகத்தியன் இட்டதொரு கட்டளையை ஏற்று வந்ததெல்லாம், பெரும் புண்ணியமே. ஆகவே, மேற்கொண்டு எதும் உரைக்க, பாபநாசத்துக்கு வருக, மேற்கொண்டு உரைக்கிறேன் என்று அருள்."
   
அவர் உத்தரவு படி கீழே இறங்கி, பாபநாசம் நோக்கி பயணமானோம்.

பாபநாசம் சென்று, எம்பெருமான் முக்கண்ணனை தரிசனம் செய்துவிட்டு, கோவிலில் ஒரு ஓரமாக அமர்ந்து நாடியை பிரித்தேன்.

சித்தன் அருள் .......... தொடரும்!

Wednesday, 5 February 2014

பாபநாசம்-கல்யாண தீர்த்தத்தில் அகத்தியப் பெருமானுக்கு பூசை!

அகத்தியர் அடியவர் திரு ரவிக்குமார்,  பாபநாசம்-கல்யாண தீர்த்தத்தில் உறையும் அகத்தியப் பெருமானுக்கு 15/02/2014 அன்று சிறப்பு பூசை நடை பெறுவதாக அறிவித்துள்ளார். பூசை பற்றிய விவரங்களை கீழே உள்ள வலை பூவில் சென்று அறிந்துகொள்ளுங்கள். கணபதி ஹோமம், சுதர்சன ஹோமத்தில் பங்கு கொள்ளலாம். முன் பதிவு தேவை.  எல்லோரும் சென்று பங்கு பெற்று அவர் அருள் பெற்று வாருங்கள்.