கலியுகம் ஒரு விசித்திரமான காலம். நன்றாக நல்ல மனநிலையுடன் வாழவேண்டிய மனிதர்கள் கூட அதன் பாதிப்பினால் கெட்டுப் போவார்கள். அதுவும் இறைவன் நமக்கு நடத்தும் ஒருவித சோதனைதான், என்று உணர்பவர் மிக குறைவே..
எளிய அன்பு நிறைந்த வாழ்க்கை, .பிறருக்கு கெடுதல் செய்யாத மன நிலை, பிறர் பொருளுக்கு ஆசை படாத மனம், நேர்மையான வாழ்க்கை முறைகள் போன்றவற்றை மனிதன் உணமையிலேயே தொடர்கிறானா என்று அறிய இறைவன் நடத்தும் ஒரு சோதனை என்றுதான் பெரியவர்கள் எப்போதும் அதை சொல்வார்கள்.
மனிதன் தவறு செய்தால் முன் காலத்தில் பின்னர் வேறு ஒரு ஜென்மத்தில் அதற்கான தண்டனையை அனுபவித்து வந்தான். ஆனால் கலியுகத்தில் தவறின் ஆதிக்கம், வீர்யம் போன்றவை போகிற போக்கை பார்த்து இறைவனே, இந்த ஜென்மத்திலேயே அதன் பலனை அனுபவித்துவிடு என்று பலமுறை மாற்றி விதிக்கிறான். நாம் அனைவரும் ஒரு செயலை செய்யும் முன் ஒரு முறை நன்றாக யோசித்து, இது தர்மத்துக்கு முரணானதா என்று தீர்மானித்து அதை விலக்கி வாழ்ந்தால், நிம்மதியாக வாழலாம். பிறர் சொத்துக்கு ஆசைப்பட்டு, அதனால் "பிரம்மஹத்தி" தோஷம் அடைந்த ஒரு நிகழ்ச்சியையும், அதே சூழ்நிலையில், பாதிக்கப்பட்டவர்களை, மனம் கனிந்து அகத்திய பெருமான் இறங்கி வந்து காப்பாற்றியதையும் இன்றைய தொகுப்பில் படிக்கலாம்.
ஒரு நாள், ஒரு தம்பதியர் நாடி பார்க்க வேண்டும் என்று என் முன் வந்து அமர்ந்தனர். அவர்கள் முக பாவத்திலேயே, இருவரும் மிகுந்த வேதனையில் இருக்கிறார்கள் என்று உணர்ந்தேன்.
"திருமணமாகி ஏழு வருஷம் ஆயிற்று. மூன்று குழந்தைகள் குறை ப்ரசவத்தில் போயிற்று. எங்களுக்கு குழந்தை பாக்கியம் தங்குமா? என்று அகத்தியரிடம் கேட்டுச் சொல்லுங்கள்" என கணவர் கேட்டார்.
பார்ப்பதற்கு கிராமப்புறத்திலிருந்து வந்திருப்பது போல் தோன்றினாலும், ஓரளவுக்கு எல்லா விஷயமும் தெரிந்தவர்களாக இருந்தனர்.
எல்லாக் குழந்தைகளும் எட்டாவது மாதத்தில் தான் இறந்திருக்கிறது என்பதைக் அவர்கள் கூறிய போது, கேட்க மனதுக்கு கஷ்டமாக இருந்தது.
அவர்கள் குடும்பத்தைப் பற்றி விசாரித்தேன். வருத்தப்படும் விஷயங்கள் தான் தெரிய வந்தது. கூடப்பிறந்தவர்கள் சிலருக்கு குழந்தையே இல்லை. ஒரு சிலருக்கு குழந்தை பிறந்திருக்கிறது. ஆனால் "மூளை" வளர்ச்சியே இல்லை. ஒருவருக்கு மாத்திரம் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருக்கிறது. ஆனால், அதுவும் பிறக்கும் பொழுதே, இதயத்தில் சிறு ஓட்டை இருந்திருப்பதால் அந்தக் குழந்தை மருத்துவச் சிகிர்சையில் வளர்ந்து கொண்டிருக்கிறது, என்று தெரிய வந்தது.
"வாரிசு" அவர்கள் குடும்பத்தில் சரியாகத் தங்கவில்லை என்பதும் "ஆண்" குழந்தையே அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு கடந்த முப்பது ஆண்டு காலமாக இல்லை என்பதையும் வைத்துப் பார்க்கும் பொழுது ஏதோ ஒரு "கர்மவினை" அந்த குடும்பத்தாருக்கு இருக்கிறது என்பது உண்மையாகிறது.
அகத்தியரிடம் இது பற்றி கேட்ட பொழுது "இப்போது சென்று இன்னும் மூன்று மாதகாலம் கழித்து வரட்டும். பின்பு இது பற்றி யாம் உரைப்போம்" என்று சொல்லி மேற்கொண்டு எதுவும் சொல்லாமல் நிறுத்தி கொண்டார்.
பொதுவாக ஏதாவது ஒரு காரண காரியத்தைக் கூறி அதற்கு சில பிரார்த்தனைகளைச் சொல்லி அனுப்பிவைக்கும் அகத்தியர், இந்த தம்பதிகளை "பிறகுவா" என்று சொன்னபோது எனக்கே ஒரு மாதிரியாக போய்விட்டது.
நிறைய எதிர்ப்பார்த்து வந்த அந்த தம்பதிகளுக்கு அகத்தியரின் இந்த பதில் ஏமாற்றத்தைத் தந்தது. மனம் நொந்து போய்த் திரும்பியது மட்டும் உண்மை என அவர்கள் நடவடிக்கை எடுத்துக் காட்டியது.
மூன்று மாதம் கழிந்தது.
திரும்பி வர மாட்டார்கள் என்று நினைத்த எனக்கு அவர்கள் இருவரும், சொன்னபடியே அகத்தியர் நாடி பார்க்க வந்தது ஆச்சரியமாக இருந்தது.
"அகத்தியன் சொன்னபடி வந்தனை. இது அகத்தியனுக்கு மகிழ்ச்சி. எனினும் இன்னும் நான்கு அமாவாசைக்குப் பின்பு வரின் உங்களது வாரிசு பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைத்து விடலாம். கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு நிச்சயம் "ஆண் வாரிசு" இருக்கிறது" என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார். முன்பு சொன்ன வாக்குறுதியை விட பரவாயில்லை என்றாலும், ஏன் சரியான பதிலைத் தர மறுக்கிறார் என்பது எனக்குப் புரியவில்லை. ஒரு திருப்தியோடு நாடி படித்து முடித்தோம் என்று இல்லாமல் போய் விட்டது.
ஆனாலும், "அகத்தியர் மீது வைத்த பற்றால் நான்கு மாதம் வரை நாங்கள் காத்திருக்கிறோம். எப்படியோ எங்களுக்கு குழந்தைப் பாக்கியம் கிட்டினால் சரி" என்று சொல்லிவிட்டுச் சென்று விட்டனர் அந்த தம்பதியினர்.
அவர்கள் சென்ற பிறகு அகத்தியரிடம் நான் கேட்டேன். "எதற்காக இப்படி இழுத்தடிக்கிறீர்கள். அவர்களுக்கு வாரிசு உண்டா? இல்லையா? இல்லை என்றால் என்ன பரிகாரம் செய்தால் அவர்களுக்கு குழந்தை தங்கும்? என்று அருள் வாக்கு கொடுத்திருந்தால் எனக்கும் மகிழ்ச்சி, வந்திருந்தவர்களும் சந்தோஷமாகச் சென்று இருப்பார்களே" என்று . கேட்டேன்.
"காரணம் இல்லாமல் யாம் வாய் திறக்க மாட்டோம். சிலருக்கு உடனடியாக அருள்வாக்கு கொடுப்பதில்லை. சிலருக்கு அவர்களது ஊழ்வினைக்கு ஏற்றவாறு பதில் சொல்வேன். சிலர் அருள் வாக்குப் பெற்றும் காரியம் நடக்கவில்லை என்று சொல்வதும் உண்டு. இன்னும் பலரோ காரியம் நடக்கவில்லை என்பதற்காக பொறுமை இழந்து உன்னையும், என்னையும் தரக் குறைவாக எண்ணி திட்டவும் செய்வார்கள். எனினும் நான் வாக்கு கொடுக்கும் வரை அனைவருக்கும் படி. யார் யார் எப்படி எல்லாம் உன்னிடம் வேஷம் போடுகிறார்கள் என்பதையெல்லாம் நானறிவேன். அப்படிப்பட்ட நபர்களை அடையாளம் காட்டுகிறேன். அவர்களிடமிருந்து ஒதுங்கிவிடு" என்று ஒரு சிறிய விளக்கத்தை அளித்தார்.
அகத்தியர் இந்த செய்தியை சொல்வதற்கு பல காரணங்கள் உண்டு. நாடி பார்க்கும் போது இருக்கின்ற வேகம், நாடி பார்த்த பிறகு இல்லை. எப்போதும் நல்ல வாக்கு சொல்லவேண்டும், வந்தவுடன் காரியம் ஆக வேண்டும் என்று எண்ணுகிறார்கள். இல்லையென்றால் வெறுத்துப் போகிறார்கள், இதுதான் உண்மை.
எனினும் அந்த தம்பதிகள் நான்கு மாதம் கழித்து வரும் பொழுது அகத்தியர் என்ன சொல்லப் போகிறார் என்று நானும் ஆவலோடு காத்திருந்தேன்.
நான்காவது மாதம் கடைசியில் அந்த தம்பதிகள் வந்தனர்.
நாடியைப் பிரித்துப் படித்தேன்.
"ஈன்றோர் செய்திட்ட புண்ணியத்தால் இப்பொழுது கருவொன்று உருவாகி மாதம் மூன்று ஆகிறது. இக்கரு நிலைத்து தங்க தினமும் கந்தர் சஷ்டி கவசத்தை மூன்று முறை படிப்பதோடு யார் எதைக் கொடுத்தாலும் இனி கையால் வாங்கி உண்ண வேண்டாம். ஏனெனில் இதுவரை நடந்த கருக்கொலைக்கும் காரணம் இருக்கிறது.
உங்களுக்கு "வாரிசு" வருவதை பலர் விரும்பவில்லை. வேண்டுமென்றே இனிப்பாக பேசி, இனிப்புப் பலகாரத்திற்குள் "கரு" வை கொல்வதற்காக மருந்து வைத்துக் கொடுத்திருக்கிறார்கள். அதன் காரணமாகத்தான் மூன்று ஆண் சிசுக்கள் கொல்லப்பட்டிருக்கிறது.
இனியும் அம்மாதிரி யாரேனும் இனிப்பு பலகாரத்தை வலுக்கட்டாயமாக வாயில் ஊட்டினால் அவர்களுக்குத் தெரியாமல் வெளியே துப்பி விடுக" என்று லேசாகக் கோடிட்டுக் காட்டினார் அகத்தியர்.
இதைப் படித்ததும் அவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
அகத்தியர் சொன்னபடி அந்த பெண் மூன்று மாத கர்ப்பம் என்பதையும் சந்தோஷமாகச் சொன்னார் அந்த புருஷன்.
"எப்படி விரோதிகளை சமாளிப்பது?" என்று அவர்கள் யோசித்தனர். ஏனெனில் அவர்களுக்கு குறைந்த பட்சம் நூறு ஏக்கர் நிலம் இருக்கிறது. உறவினர் பலருக்கு அந்த நில விஷயத்தில் ஒரு கண். இவர்களுக்குப் பிள்ளை பிறந்து விட்டால் அந்த நிலத்தை அபகரிக்க முடியாதே, என்ற பேராசையால் இந்த பெண்ணுடன் பாசத்தோடு பழகுவதுபோல் பழகி கருக்கலைப்பு மருந்தை ஊட்டியிருக்கிறார்கள்.
அதன் காரணமாகத்தான் இந்தப் பெண்ணுக்கு மூன்று ஆண் குழந்தை கருவிலேயே கொல்லப்பட்டிருக்கிறது.
அவர்களிடம் நான் சொன்னேன் "உங்களால் முடியுமானால், இப்பொழுது முதலே வெளியூரில் சில காலம் தங்குங்கள். பிறகு ஊருக்குத் திரும்புங்கள். யாரேனும் ஏதேனும் கேட்டால் வயிற்றில் கரு சரியாக வளரவில்லை, ஒன்பது மாதம் வரை ஒன்றும் சொல்ல முடியாது என்று எல்லோருக்கும் ஒரே மாதிரி பதில் சொல்லுங்கள்.
மருத்துவத்தை சொந்த ஊரில் இல்லாமல் வெளியூரில் பார்த்துக் கொள்ளவும். ஆனால் நீங்கள் மருத்துவ சிகிர்சைக்கு போகும் விஷயம் வேறு யாருக்கும் தெரிய வேண்டாம்.
அதே சமயம் யார் எந்த இனிப்பு பலகாரத்தையோ அல்லது வேறு பலகாரத்தைக் கொடுத்தாலும் அதைச் சாப்பிடாமல் மறைத்து வைத்து விடுங்கள். உங்களுக்கு ஆரோக்கியமான வாரிசு பிறக்கும்" என்று ஏதோ எனக்கு தெரிந்த வழியைச் சொன்னேன்.
"இப்படி பயந்து பயந்து கருவைக் காப்பாற்ற வேண்டி இருக்கிறது. ஒரு வேளை நல்லபடியாக குழந்தை பிறந்தாலும் பின்னாளில் இந்தக் குழந்தைக்கு ஆபத்து வராதா?" என்று கேட்டார், அந்த பெண்ணின் கணவர்.
"நியாயம் தான். அதற்குள் அகத்தியர் ஏதாவது ஒரு நல்ல வழியை காட்டுவார். சற்று பொறுமையுடன் இருங்கள்" என்றேன்.
இடையில் நான்கு மாத காலம் அவர்கள் என்னைத் தேடி வரவும் இல்லை. நானும் அதை பெரியதாக நினைக்கவும் இல்லை.
திடீரென்று ஒரு நாள் அந்த தம்பதிகள் வந்தனர்.
வெளியூரிலே வீட்டை வாடகைக்கு எடுத்து மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டிருப்பதாகவும் இப்பொழுது வயிற்றில் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாகவும், இன்னும் ஓரிரு மாதங்களில் "குழந்தை" நல்ல படியாகப் பிறந்து விடும்" என்று சொன்னவர்கள்
கூடவே இன்னொரு அதிர்ச்சியான தகவல் ஒன்றையும் சொன்னார்கள்.
"மிக நெருங்கிய உறவினர்கள் இருவர், வெளியூரில் இவர்கள் தங்கியிருப்பதைக் கண்டு, அங்கேயே நேராகச் சென்று இருக்கிறார்கள். இரண்டு இனிப்புப் பொட்டலங்களை இந்தப் பெண்ணிடம் கொடுத்து தங்கள் கண் முன்னே சாப்பிடச் சொல்லி வற்புறுத்தி இருக்கிறார்கள். நல்ல வேளை இந்தப் பெண் அதனைச் சாப்பிடவில்லை. வந்தவர்கள் சில மணி நேரம் இருந்து விட்டு பின்பு சென்று விட்டார்கள். அவர்கள் பேசிய விதம் இனிப்பு கொடுத்த விதம் மீது சந்தேகம் வந்ததால் அவர்கள் கொடுத்த இனிப்புப் பலகாரத்தை அப்படியே தூக்கிக் கொண்டு இதில் ஏதேனும் மருந்து கலந்திருக்கிறதா" என்று தகுந்த நபரிடம் கொடுத்து சோதித்து பார்க்க சொல்லியிருக்கிறார்கள்:.
சோதனை செய்து பார்த்தவர்கள், "இதை உட்கொண்டால் கருச்சிதைவு ஏற்பட்டு விடும். அத்தகைய "கள்ளிப் பால்" கலந்து இந்த இனிப்பு தயாரிக்கப்பட்டிருக்கிறது", என்று உணமையைச் சொல்லி விட்டனர்.
அதிர்ச்சியில் உறைந்து போன அந்த தம்பதிகள் "இதே நபர்கள்தான் முன்பும் இப்படி இனிப்பு பலகாரம் கொடுத்தனர். அதை உண்ட பின்புதான் கருச்சிதைவு ஏற்பட்டது. இப்போது அதே தவறை செய்கிறார்களே" என்று வருந்தியிருக்கிறார்கள்.
இதே நிலை எதிர்காலத்தில் குழந்தை பிறந்த பின்பும் வந்து விடக்கூடாதே" என்ற பயத்தில் அகத்தியரை நாடி வந்திருப்பதாகச் சொன்னார்கள்.
"பகவானே" என்று அவர்களுக்காக பிரார்த்தனை செய்து விட்டு, அகத்தியரிடம் வேண்டினேன்.
"இவர்களுக்கும் புத்திர தோஷம் இருந்தது. அது மூன்று ஆண் குழந்தைகளைப் பறிகொடுத்ததினால் அந்த கர்மவினை தீர்ந்தது. இனி பிறக்கப்போகும் வாரிசு ஆரோக்கியமாகவும் நீண்ட நாட்கள் வாழ்கின்ற அதிர்ஷ்டத்தைப் பெற்றதாகவும் இருக்கும் பயப்பட வேண்டாம்.
மூன்று கரு சிசுக்களைக் கொன்றதால் இவர்களது உறவினர்கள் இருவரும் சித்தப்பிரம்மை பிடித்து அலையப் போகிறார்கள். அவர்களது மரணம் கூட இயற்கையானதாக இருக்காது என்பது விதி. இதை மாற்ற யாராலும் முடியாது" என்றார் அகத்தியர்.
"குழந்தை பிறந்த பிறகு குழந்தைகள் இல்லாத தம்பதிகளுக்காக என்னென்ன உதவி செய்ய வேண்டுமோ, அதை ஆண்டு தோறும் தொடர்ந்து செய்துவரின் வம்சம் தழைக்கும். யாரும் இனிமேல் எந்த வித உபத்திரவத்தையும் தர மாட்டார்கள்" என்றும் வாக்குறுதி கொடுத்தார்.
"இந்த நல்ல அருள்வாக்கு பெற ஒரு வருடகாலம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. சிலர் இதை அறியாமல் அருள் வாக்கு கேட்டு பரிகாரம் செய்து முடித்து உடனடியாக நடக்கவில்லை என்று ஆதங்கப்படுகிறார்களே" என்று அகத்தியரிடம் கேட்டேன்.
"அப்படிப்பட்டவர்களை விட்டு விடு. யாமும் நல்வாக்கு மறுபடியும் தரமாட்டோம்" என்று ஆணித்தரமாகக் கூறினார்.
இன்றைக்கு...........
அந்த தம்பதிகளுக்கு மூன்று வாரிசுகள் பிறந்து வெளிநாட்டுக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அதே சமயம் இந்த தம்பதிகளுக்கு துரோகம் செய்தவர்கள் சித்தபிரம்மை பிடித்து அலைந்து கொண்டிருப்பதாக தகவல்.
நடப்பதெல்லாம் அவன் செயல்தான். இருப்பினும் அவனே நமக்கு நல்ல வாய்ப்பை தந்து நன்றாக வாழு என்று சொல்லாமல் சொல்லி, பல முறை பெரியவர்கள் வழி நல் வழி காட்டி, நமக்கும் அறிவை கொடுத்தும், மேலும் மேலும் தவறை செய்யும் போது, இந்த ஜென்மத்தின் தவறுக்கு, இப்போதே அனுபவி என்று தண்டனையை கலியுகத்துக்கு வேண்டி இறைவனே மாற்றியது கூட, சரிதான் என்று ஆணித்தரமாக கூற முடியும். ஒருவருக்கு கிடைக்கும் தண்டனை மற்றவருக்கு ஒரு பாடமாக அமையும், அமையவேண்டும்.
சித்தன் அருள் ................. தொடரும்!