​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 25 April 2013

சித்தன் அருள் - 121


"மிகப் பெரிய அறுவை சிகிர்ச்சை ஒன்றைச் செய்யப் போகிறேன்.  இதற்கு அகத்தியர் அருள் வேண்டும்" என்று கேட்டார், வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு இளம் மருத்துவர் ஒருவர்.

"நல்ல விஷயம்தான் செய்யப் போகிறீர்கள்.  நல்ல படியாக வெற்றி பெறும்.  கவலைப்பட வேண்டாம்" என்று பொதுவாக அந்த மருத்துவரை நான் வாழ்த்தினேன்.

"உங்கள் வாழ்த்து எனக்கு உற்சாகத்தை தந்தாலும், அகத்தியர் நாடியையும் ஒரு தடவை படியுங்களேன்" என்று மறுபடியும் கேட்டுக் கொண்டதின் பேரில், அகத்தியரின் நாடியைப் புரட்டினேன்.

சில பிரார்த்தனைகளைச் செய்யச் சொல்லி "இதைச் செய்து விட்டு கீறல் வைத்தியத்தைச் செய் வெற்றி பெறுவாய்" என்று அகத்தியர் நாடியில் உரைத்தார்.

சந்தோஷப்பட்டாலும், "நான் தைரியமாக இறங்கிச் செய்யலாமா?" என்று மீண்டும் கேட்ட பொழுது அவர் மீது எனக்கே எரிச்சல் வந்தது.

"எத்தனை தடவைகள், எத்தனை முறைகளில் கேள்வி கேட்டாலும், அகத்தியர் பதில் ஒன்றுதான்" என்று சட்டென்று நானே பதில் கூறினேன்.

இந்த பதில் என்னிடமிருந்து வந்ததால், அந்த மருத்துவருக்கு என் மீது சற்று வருத்தம்தான்.  பதில் பேசவில்லை.  மௌனமானார்.

"என்னைத் தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.  அந்த நாட்டில் இந்த ஆபரேஷன் வெற்றி பெற்றால் நான் பணிபுரியும் அந்த மருத்துவமனைக்கு பெயரும், புகழும் அதிகமாகும்.  உலகத்திலிருக்கும் பலரும் அங்கு ஓடி வருவார்கள். அது தோல்வி அடைந்தால், எனக்கு பெருத்த அவமானம்.  அந்த மருத்துவமனையின் பெயரும் கெட்டு விடும்.  அதனால் தான், அகத்தியரிடமிருந்து மறுபடியும் நல்ல வரத்தை வாங்கித் தாருங்கள்" என்று நிதானமாகக் கேட்டார்.

ஏதோ பிரச்சினை இருக்கிறது.  இல்லையென்றால் மறுபடியும் அதே கேள்வியை இவர் கேட்க மாட்டார் என்று அப்போதுதான் எனக்கு தெளிவாக புரிந்தது.

ஆதலால் மறுபடியும் அகத்தியர் நாடியைப் புரட்டி படிக்க ஆரம்பித்தேன்.

"அகத்தியன் அருள்வாக்குத் தந்தாலும் கீறல் வைத்தியம் செய்யும் பொது ஏதேனும் தடைகள் வராமலிருக்க யாமே பக்க பலமாக இருந்து அந்த மருத்துவச் சிகிர்ச்சையை வெற்றி பெற வைப்போம்.  இன்று முதல் காலையிலும், மாலையிலும் தப்பாது ஐம்பத்து நான்கு முறை வைத்தீஸ்வரம் புகழ் பாடும் காயத்ரி மந்திரத்தை சொல்லி வா" என்று அகத்தியர் அழுத்தம் திருத்தமாக உத்தரவு போல் அருள் வாக்கு சொன்னார்.

இந்த வார்த்தைகளைக் கேட்ட பிறகு தான் அந்த மருத்துவர் முகத்தில் மகிழ்ச்சியே ஏற்பட்டது.  சந்தோஷமாக புறப்பட்டுப் சென்றார்.

லண்டனில் அறுவைச் சிகிர்ச்சை முறையை மூன்றாண்டுகள் கற்றதோடு பிற நாடுகளுக்கும் சென்று கீறல் ச்கிர்ச்சையை சிலகாலம் தங்கிக் கற்றவர் எதற்காக என்னிடம் வந்து அருள் வாக்கு கேட்க வேண்டும் என்று எனக்கு அப்போது புரியவில்லை.

மருத்துவர்கள் யாரும் ஜோதிடத்தில் முழு நம்பிக்கை வைப்பது கிடையாது.  விஞ்சான வளர்ச்சியை அன்றாடம் கற்றுக் கொண்டு அதுவே உண்மை என்று ஆராய்ந்து கொண்டிருப்பவர்கள்.  தங்கள் மீது மக்களுக்கு முழு நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்ற கருத்துக்கே முக்கியத்துவம் கொடுப்பவர்கள்.

அப்படிப்பட்ட அறிவியல் துறையை சேர்ந்த மருத்துவர் ஒருவர், வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து அகத்தியர் அருள் வாக்கைக் கேட்டு, மிகப் பெரிய அறுவை சிகிர்ச்சையை செய்யப் போகிறார் என்றால், அவருக்கு அகத்தியர் மீது அளவு கடந்த பக்தி இருக்கும் என்றே எண்ணத் தோன்றியது.

சொந்த நாட்டிற்கு சென்றதும் அந்த மருத்துவரிடமிருந்து ஒரு செய்தி எனக்கு வந்தது.

"சார்! இன்னும் மூன்று நாளில் அந்த ஆபரேஷன் நடக்கப் போகிறது.  இன்று எனக்கு திடீரென்று கை, கால்கள் நடுங்க ஆரம்பித்திருக்கிறது.  விரல்களில் நடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.  இந்த நடுக்கம் பயத்தால் இல்லை.  நரம்பு சமபந்தமான பிரச்சினையால் ஏற்பட்டிருக்கிறது.  மற்ற டாக்டர்களிடம் காட்டி மருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்.  நாளை காலைக்குள் எனக்கு குணமாக வேண்டும்.  அகத்தியரிடம் எனக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்" என்றார்.

அகத்தியர் சாதாரணமாக வாக்கு கொடுக்கமாட்டார்.  ஏற்கனவே நல்ல வாக்கு கொடுத்திருக்கும் போது ஏன் இப்படி பயப்படுகிறார்.  மனுஷனுக்கு தன்னம்பிக்கை கொஞ்சம் கூட இல்லை போலிருக்கு என்றுதான் என்னால் எண்ண முடிந்தது.

நான் தைரியம் சொல்லி, அகத்தியரை வேண்டி  "தைரியமாக காரியத்தில் இறங்குங்கள் எப்படியும் நல்லபடியாக ஜெயித்து விடுவீர்கள்" என்று வாயளவில் உற்சாகத்தை ஊட்டினேன்.  இருந்தும், என்னவோ நடக்கப் போகிறது என்று உணர்ந்தேன்.

மூன்றாம் நாள் காலை.

என் மனதிற்குள் ஒரு எண்ணம்.  அந்த இளம் மருத்துவரின் நரம்புத் தளர்ச்சி சரியாகி இந்நேரம் ஆபரேஷன் நடந்து கொண்டிருக்கும்.  அது வெற்றி பெற்றதும் அந்த மருத்துவர் நிச்சயம் எனக்கு செய்தியைச் சொல்வார் என காத்திருந்தேன்.

மாலை வரை ஆகியும் அவரிடமிருந்து எந்த விதமான செய்தியும் வரவில்லை.  பொதுவாக இப்படி நான் யாருக்காகவும் எதற்காகவும் காத்திருந்து பழக்கமில்லை.  எது நடந்தாலும் அகத்தியர் பார்த்துக் கொள்வார் என்று விட்டு விடுவேன்.

ஆனால்....

இந்த மருத்துவர் விஷயத்தில் மட்டும் மனதிற்குள் ஒரு பரபரப்பு ஏற்பட்டது.  எதற்கும் அகத்தியரிடம் என்ன நடந்தது என்பதைப் பற்றிக் கேட்கலாம் என்று உந்துதல் ஏற்பட்டது.

நாடியைப் பிரித்தால், அங்கு அகத்தியரைக் காணவில்லை.  எத்தனை முறை பிரார்த்தித்தும் அவர் அருள் வாக்கு சொல்ல வரவே இல்லை.

பொதுவாக நாடி பார்க்கும் முன்பு பிரார்த்தனை செய்து கொள்வேன்.  ஒளி வடிவமாக நாடியில் ஏதாவது பதில் சொல்வார்.  அதை அப்படியே யார், நாடியைப் படிக்க வந்திருக்கிறார்களோ, அவர்களிடம் மறைக்காமல் கூறிவிடுவேன்.

ஆனால் இப்போது நாடியைப் பிரித்தால் வெறும் பனை ஓலைச்சுவடி மட்டும் இருந்தது.  அகத்தியரின் ஒளி வடிவான தமிழ் வார்த்தைகளைக் காணவில்லை.

என்ன ஆயிற்று அகத்தியருக்கு? ஏன் வரவில்லை என்பதை விட அந்த மருத்துவர் ஆபரேஷன் செய்து வெற்றி பெற்றாரா? இல்லை அங்கு ஆபரேஷன் நடக்கவில்லையா? என்ற கவலைதான் எனக்கு அதிகமாகியது.

அகத்தியர் இப்படி காணாமல் போவது எனக்கு ஆச்சரியமில்லை.  ஏனெனில் பல சம்பவங்கள் இதே போல் நடந்திருக்கிறது.  காரணம் நானும் சில சமயம் தவறைச் செய்திருக்கிறேன்.

இன்றைக்கு நான் எந்த விதத் தவறும் செய்யவில்லை.  ஜீவனாக இருந்து என்னுடன் தினமும் பேசியவர், இப்போது வரவில்லை என்கிறபோது ஏதோ ஒன்று அங்கு நடந்திருக்கிறது என்று மட்டும் தெரிந்தது.

நாளைய பொழுது நல்லபடியாக விடியட்டும் என்று பிரார்த்தனையை செய்து விட்டு நாடிக்கட்டை மூடிவிட்டேன்.

அன்றிரவு முழுவதும் அந்த மருத்துவரை பற்றியே பலத்த சிந்தனை இருந்ததால் கொஞ்ச நஞ்ச தூக்கமும் போயிற்று.

மறுநாள் விடியற்காலை............

காலை ஐந்து மணி இருக்கும்.  வெளிநாட்டிலிருந்து அந்த மருத்துவர் பேசினார். "நல்லபடியாக ஆபரேஷன் முடிந்து விட்டது.  ஆனால் நான் ஆபரேஷன் தியேட்டருக்குள் போனதுதான் தெரியும்.  எட்டு மணி நேரம் ஆபரேஷன் நடந்தது.  யார் யாரோ வந்து உதவி செய்தார்கள்.  நான் ஆபரேஷன் செய்ததாக என்னுடன் இருந்த மற்ற டாக்டர்கள், நர்சுகள் சொன்னார்கள்.  ஆனால், அங்கு நான் நானாக இல்லை.  ஏதோ ஒரு "சக்தி" என் உடலுக்குள் புகுந்து கொண்டு விறு விருப்பாக செயல்பட்டது.  அவ்வளவுதான்.  ஆபரேஷன் வெற்றி அடைந்து விட்டது.  இது என்னவென்று துளியும் எனக்கு விளங்கவில்லை.  அகத்தியரைக் கேட்டுச் சொல்லுங்கள்" என்றாரே பார்க்கலாம்.

இதைக் கேட்டதும் எனக்கு உடலெங்கும் வியர்த்து விட்டது.

"உங்கள் கை நரம்புகள் எப்படி இருக்கிறது?"  நான் கேட்டேன்.

"இன்னும் நடுக்கம் இருக்கத்தான் செய்கிறது.  இதுவரை இப்படியொரு விரல் நடுக்கம் எனக்கு வந்ததில்லை.  இப்போதுதான் வந்திருக்கிறது.  இந்த நடுக்கத்தோடு எந்த டாக்டரும் இவ்வளவு பெரிய அறுவை சிகிற்சையை செய்ய முடியாது.  என்னால் எப்படி முடிந்தது என்று தெரியவில்லை.  கேட்டு சொல்லுங்கள்" என்றார் அவர்.

இந்த செய்தி எனக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சியை தந்தது.

இனியும் தாமதிக்கக் கூடாது என்பதால் அவசர, அவசரமாக அகத்தியர் ஜீவநாடியைப் பிரித்தேன்.

"வெளிநாட்டில் கீறல் வைத்தியம் செய்து கொண்ட அவன், முற்பிறவியில் கொல்லிமலைக் காட்டில் எனக்கு அன்றாடம் பால் அபிஷேகம் செய்து மனம் குளிர வைத்தவன்.  அவன் இப்போது கர்மவினையால் கஷ்டப்படுகிறான்.  அவனது உடல் நோய் தீர வேண்டும் என்றால் கீறல் வைத்தியம் அவசியம் தேவை என்பதை உணர்ந்தேன்.

வெளி நாட்டிலிருந்து எனது ஜீவநாடி பார்க்க வந்த இளம் மருத்துவனுக்கும் அன்றைக்கு யாம் வாக்குறுதி கொடுத்தோம்.  அந்த வாக்குறுதியை யாம் காப்பாற்ற வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டோம்.

அதே சமயம் நரம்புத்தளர்ச்சி ஏற்பட்டு ஆபரேஷன் செய்ய முடியாத அந்த இளம் மருத்துவனையும் காப்பாற்றினால் தான் அவனுக்கு வேலை நிரந்தரம் ஆகும்.  மருத்துவமனைக்கும் பெயர், புகழ் அதிகமாகும்.

எனவே இதெல்லாம் வைத்து திட்டமிட்டேன்.  திருமூலரைத் துணைக்கு வைத்து, அந்த மருத்துவர் உடலில் யாம் புகுந்தோம்.  கீறல் வைத்தியம் செய்தோம், வெற்றியாயிற்று.

திருமூலர் என்னை மிக பத்திரமாக அந்த இளம் மருத்துவன் உடலில் இருந்து மீட்டான்.  அதுவரை அந்த மருத்துவனது ஆன்மாவை திருமூலர் தன கையில் பத்திரமாக வைத்து மீண்டும் அவனிடமே கொடுத்து விட்டான்.  இது தானடா நடந்தது அங்கு" என்று அதிர்ச்சி வைத்தியத்தை எனக்குத் தந்தார்.

அந்த இன்ப அதிர்ச்சியிலிருந்து நான் மீளவே வெகுநாளாயிற்று..

(இதை படித்த நீங்களும் தானே?)

சித்தன் அருள்.................. தொடரும்!

Friday, 19 April 2013

சித்தன் அருள் - ஒதிமலையை பற்றி அகத்தியரின் அருள்!


அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம்!

ஒதிமலை பற்றிய சில குறிப்புகளை முன்னரே ஒரு பதிவில் பதித்திருந்தேன்.  சமீபத்தில் ஒரு நாள் என்னவோ யோசனை வர மறுபடியும் அதை ஒரு முறை படித்துப் பார்த்தேன்.  அப்போது ஒரு எண்ணம் உதித்தது.  அகத்திய பெருமான் ஒதிமலையை பற்றி என்ன சொல்லுவார்.  தற்போது அவர் யாருக்காகவும் நாடியில் வந்து சொல்வதில்லையே.  நம் அனைவருக்கும் ஒதிமலையின் மகத்துவத்தை பற்றி அகத்தியரின் அருள் வாக்கினால் அறியும் வாய்ப்பு கிடைக்குமா?  என்றெல்லாம் தோன்றியது. எப்போதும் போல அவரிடம் வேண்டிக் கொண்டேன்.

"சித்தன் அருள்" தொடரை வாசிக்கும் அகத்தியர் அருள் பெற்ற ஒரு அடியவர், திரு குரு மூர்த்தி என்பவர் அகத்தியர் நாடியில் வந்து ஒதிமஅலையின் புகழை சொன்னதாக சொல்லி எனக்கு ஒரு மெயில் அனுப்பியிருந்தார்.  அதை படித்ததும், அந்த மலையின், ஒதிப்பரின் புகழை படித்து யான் பெற்ற இன்பத்தை நீங்களும் அனுபவிக்கவேண்டும் என்கிற நோக்கில் கீழே தருகிறேன்.  அதற்கு முன் திரு.குருமூர்த்திக்கு மிக்க நன்றியுடன்......... அகத்தியரின் அருள் வார்த்தைகளை கீழே தருகிறேன்.

சங்கரனுக்கு, சரவணகுகன் ஓதிய கிரி
சங்கடப்பட்ட பல்மாந்தர்கள் தலைவிதி மாறிய கிரி
சபலங்கள்,சலனங்கள் விட்டு ஓடிடும் கிரி
சிறப்பில்லா முன்வினை ஊழ்பயன் சிறப்பாக மாற்றித் தரும் கிரி
சிந்தனையில் அணுவளவும் கட்டமில்லா தன்மையை நல்கிடும் கிரி
சிறப்போ,சிறப்பில்லையோ,பேதம் பார்க்கா வாழ்க்கையை ஏற்க வைக்கும் கிரி
சப்த கன்னியர்கள்,அன்னையோடு,அன்னை அருளால் அருளும் கிரி செப்புங்கால்,
பஞ்சமும் அடங்க, பஞ்சவதனத்தோன் அருளும் கிரி
சிறப்பாக எத்தனை குன்றுகள் இளையவன் அருளால் இருந்திட்டாலும்,குன்றுக்கெல்லாம் உயர் குன்றாய் இன்றும் சான்றாய் அருளும் கிரி
அன்னையோடு,ஐயன் அமர்ந்து அன்றும்,இன்றும்,என்றும் அருளும் கிரி
நீறு வேறு, நாமம் வேறு என்று அறியாமையால் எண்ணும் மாந்தனுக்கு,
நீறு பூத்த அக்னிபோல் நீரோடு நாமமும் கலந்து வேங்கடகிரியாய் அருளும் கிரி
கட்டிய கணவன் காதில் ரகசியமாய் மனையாள்ஓதினாலும்,
கட்டிய மனைவி ஒதுகிறாளே என்று தாய்ஓதினாலும்,
உபயத்தையும் தாண்டி பிள்ளைகளுக்கு எதைஓதினாலும்
மாந்த குரு சிஷ்யனுக்கு ஓதினாலும்
அனைத்திலும் பேதமுண்டு.சுயநல நோக்குண்டு
பேதமில்லா தாண்டிய நிலையில் வேதமெல்லாம் ஓர் உருவாக 
ஓம்கார நாத வெள்ளம் ரூபமாக,
நேத்திரத்தில் கருணை வெள்ளம் பிரவாகமெடுக்க,
அறுவதனமும் ஐவதனமாகி,
எழு பிறப்பும் எட்டென விரட்டி,
உபயவினையும் இல்லாது ஒழித்து,
சூல நேத்திரத்தோன் திரு மைந்தன் சதுரத்தை நவரசமாய் பிழிந்தெடுத்து,
அதனையும் தாண்டி பல்வேறு நுட்பத்தை பேதமில்லா ஓதி
ஒருமுகமாய், திருமுகமாய், ஒரு நினைவாய் மாந்தன் வாழ அருளும் கிரி.

ஞானத்தை நல்கும் கிரி
அஞ்ஞானத்தை அடியோடு அழிக்கும் கிரி
பேதத்தை நீக்கும் கிரி
வேதத்தை உணர்த்தும் கிரி
சீரற்ற குணங்களை சீராக்கும் கிரி
நிலைத்த செல்வத்தை நல்கும் கிரி
வாழ்வின் தடைகளை நீக்கும் கிரி
எதிர்பார்த்த விடைகளை நல்கும் கிரி
கர்ம நிலைகளை மாற்றும் கிரி
அக உளைச்சல் ஒழிக்கும் கிரி
பேதம் காட்டா வேத கிரி
ஓம் எனும் பிரணவம் ஒலிக்கும் நாத கிரி
இளையவன் திருவடி பாதம் படிந்த கிரி
அன்னை நிரந்தரமாய் அருளும் கிரி
ஐயனோடு இன்று அனைவரும் இருக்கும் கிரி
ஓதும் கிரி அது ஓதிய கிரி
பேதம் தவிர்த்து பிரணவநாதம் கலந்து ஒலிக்கும் கிரி

ஓம் நமகுமாராய !

Thursday, 18 April 2013

சித்தன் அருள் - 120


அகத்தியரின் அருள்வாக்கை  சோதிடமாக எண்ணித்தான் நாடி பார்க்க வருகிறார்கள் என்பதை வெளிநாட்டில் நான் காண நேரிட்டது.  அங்கு பக்தி உள்ளவர்கள் நிறைய பேர் இருந்தாலும் பகுத்தறிவுவாதிகளும் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பது தான் உண்மை.

எந்தப் பெண்ணைத் தூண்டிவிட்டு அகத்தியர் நாடி ஜோதிடத்தை பொய்யாக்க வேண்டும் என்று நினைத்தார்களோ அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளே நுழைந்ததும் அவர்களையும் முக மலர்ச்சியுடன் வரவேற்றேன்.

வந்தவுடனே அவர்களில் ஒருவர் கேட்ட முதல் கேள்வி இதுதான்.

"இந்த ஓலைகட்டில் என் பெயர், என் பெற்றோர் பெயர் வருமா?"

என்ன பதில் சொல்வதென்று அகத்தியரிடம் கேட்டேன்.

"வராது என்று சொல்" என்று எனக்கு உத்தரவிட்டார் அகத்தியர்.

அப்படியே நானும் அவர்களிடம் சொன்னேன்.

"அப்படி என்றால் இதை நாடி ஜோதிடம் என்று எங்களால் ஏற்க முடியாது" என்றார் வந்தவர்களில் ஒருவர்.

"அதனால் என்ன? விருப்பம் இல்லை என்றால் விட்டு விட்டுப் போங்கள்" என்றேன்.

"இல்லை, சிலர் பார்க்கும் நாடி ஜோதிடத்தில் எங்கள் பெயர், எங்களது பெற்றோர் பெயர், பிறந்த நட்சத்திரம் எல்லாம் வருகிறதே?"

"அதற்கு நான் என்ன செய்ய முடியும்?  இது ஜீவநாடி.  அகத்தியராக நினைத்தால் சொல்லுவார்.  இல்லையென்றால் இல்லை" என்றேன்.

அவர்கள் சில நிமிடம் மவுனமாக இருந்தார்கள்.

கடைசியாக ஒருவர் கேட்டார்.

"எனக்கு அகத்தியர் மீது நம்பிக்கை இருக்கிறது.  எனக்கு என்ன நடக்கும் என்று அகத்தியரிடமே கேட்டுச் சொல்லுங்களேன்" என்றதும் நாடியைப் பிரித்து படிக்க ஆரம்பித்தேன்.

"உனக்கு பதினெட்டு வயதில் மகன் ஒருவன் இருக்கிறான்.  ஒன்றரை வருடகாலமாக புற்று நோயால் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான்.  மருத்துவர்கள் அவனை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள்.  புற்றுநோயின் உச்சகட்டம் என்று சொல்லிவிட்டார்கள்.  அவனைப் பற்றி தானே அகத்தியரிடம் கேட்க வந்திருக்கிறாய் இல்லையா?" என்று ஒரு கேள்வியைக் கேட்டார்.

இதனை அவர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.  அதிர்ந்து போனார்.  கண்களில் நீர் ததும்பியது.

"ஆமாம்.  இன்னும் 72 மணிநேரம் தான் உயிரோடு இருப்பான் என்று சொல்லி வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள்" என்றார்.

பதிலொன்றும் சொல்லாமல் மேற்கொண்டு நாடியைப் புரட்டினேன்.

"அந்த மகன் உயிர் பிழைப்பானா, மாட்டானா என்று தானே துடிக்கிறாய்?  இதை நேரடியாக வாய் திறந்து கேட்டிருந்தால் நல்ல பதிலை அப்போதே சொல்லியிருப்பேன்.  ஆனால் நீயோ இங்குள்ள சிலரோடு சேர்ந்து அகத்தியனை சோதிக்கவே நினைத்தாய்.  நீ எப்படி நடந்து கொண்டாயோ அப்படித்தான் அகத்தியரிடமிருந்து பதிலும் கிடைக்கும்.  முனிவனை சோதிப்பதற்கு உனக்கு என்ன ஆசை?" என்று ஒரு கேள்வியைத் தூக்கி போட்டார்.

கேட்டவருக்கு சப்த நாடியும் ஒடுங்கி இருக்க வேண்டும்.  நான் மவுனமாக இருந்து விட்டு மேற்கொண்டு நாடியைப் புரட்டினேன்.

"உன் பெயரை சொல்வதாலோ, உன் பெற்றோர் ஜாதகத்தைச் சொல்வதாலோ என்ன லாபம்? உன் பெயர் இதுவல்ல, உன் பெற்றோர் இவர்கள் அல்ல என்று சொன்னாலும் நீ நம்ப மாட்டாய்.  அகத்தியன் தவறுதலாக சொல்கிறான் என்று என்னையும் சபிப்பாய், என் மைந்தனையும் திட்டுவாய்.  பெயரைச் சொல்லிவிட்டால், எல்லாமே உண்மையென்று நம்புவதால், பின் என்ன சொன்னாலும், அவை பலிக்காவிட்டால் திட்டுவாய்" என்று எதை எதைஎதையோ சொன்னவர் -----

"உன் மனைவி பித்துப் பிடித்தவளாக இருந்தாள்.  இரண்டு மாதத்திற்கு முன்பு ஒருநாள், தானாகவே, ஒரு நள்ளிரவு மாடி ஜன்னலிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாள் இல்லையா?" என்று அதிர்ச்சி தரும் நிகழ்வைச் சொன்னார்.

இதைக் கேட்டதும் அந்த மனிதர் அழ ஆரம்பித்தார். சிறிது நேரம் அவரையே பார்த்துக் கொண்டிருந்த பின்னர் மேலும் நாடியைப் புரட்டினேன்.

"அதனையும் விட்டுவிடு.  இங்கே இந்த அகத்தியன் முன்பு அமர்ந்திருக்கும் இந்த நால்வருக்கு எத்தனை பிரச்சினைகள் என்று சொல்லட்டுமா? அவர்களில் ஒருவர் ஈன்றெடுத்த மகள், வேறொரு இனத்தைச் சேர்ந்தவனோடு ஓடிப்போகவில்லையா?  அதோ அந்தப் பக்கம் அமர்ந்திருக்கும் பணக்காரப் பெருமகனின் மைந்தனோ கடற்கரையில் பிணமாகக் கிடக்கவில்லயா? இதோ என் முன் நேரடியாக அமர்ந்திருக்கும் நாற்பது வயதான மாதரசியின் கணவன், இவளை கைவிட்டு போனதால் வேறொரு மனிதனோடு திருட்டுத்தனமாக இல்வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறாளே, இது எந்த விதத்தில் நியாயம்?" என்று பட படவென்று பொரிந்து தள்ளி விட்டார், அகத்தியர்.

இதை நான் படிக்க............... என் எதிரில் இருந்தவர்கள் வாயடைத்துப் போனார்கள்.  தலை குனிந்து கொண்டார்கள்.

அதை படிக்கும் பொழுது எனக்கே தர்மசங்கடமாகத் தான் இருந்தது.  இதுவரை எதையும் இலை மறை காயாக சொன்னவர், இன்றைக்கு ஏன் இப்படி மாறி மாறி பேசுகிறார் என்பது எனக்கே புரியவில்லை.

இப்படி நாடியில் அருள்வாக்கு வரும்பொழுது பிடிக்காதவர்கள் எழுந்து சென்று விடுவார்கள்.  அல்லது எரிச்சலோடு பல்லைக் கடிப்பார்கள்.  ஆனால், என் முன் அமர்ந்த இவர்களோ மவுனமாக இருந்தனர்.  அகத்தியர் சொல்வதை ஏற்கிறார்களா அல்லது வெறுக்கிறார்களா என்பதை என்னால் உணர முடியவில்லை.  ஐந்து நிமிடம் மவுனம் நிலவியது.

பிறகு முதலில் பேசிய நபர் எழுந்து கை கூப்பி "அகத்தியர் சொன்னது அத்தனையும் உண்மை.  இதற்கு முன்பு வந்த சில ஜோதிடர்கள் நல்ல விஷயம் நடக்க பத்தாயிரம் ரூபாயை எங்களிடம் வாங்கி, பரிகாரம் செய்வதாக சொல்லி ஏமாற்றி விட்டனர்.  அதனால் எனக்கும், இவர்களுக்கும் நாடி ஜோதிடம் என்றால் அலர்ஜி.  அதனால் நம்பிக்கை இழந்து ஏதேதோ பேசி விட்டோம்.  இது போன்று அந்த நாடியில் வரவில்லை.  எங்களை மன்னித்து விடுங்கள்" என்று கண்ணீர் மல்க வேண்டினார்.  நான் மவுனமானேன்.

பின்பு அவரே தொடர்ந்தார்.

"என் மகன் கான்சர் நோயிலிருந்து பிழைப்பானா?"

அகத்தியரிடம் வேண்டி அவருக்காக நாடியைப் படித்தேன்.

"புற்று நோயின் நான்காவது நிலை என்று சொல்லி உன் மகனை வீட்டிற்கு அனுப்பிவிட்டனர்.  உண்மையில் அவனுக்கு புற்று நோய் அல்ல.  ஆனால், அதன் தொடர்பாக உள்ள ஒரு வியாதிதான் வந்தது.  மருத்துவர் கொடுத்த மருந்தால் பின்னர் அதுவே கான்சராக மாறிவிட்டது.  இது தான் உண்மை.

உடனே இவனுக்கு மாற்று சிகிட்ச்சை செய்ய வேண்டும்.  அதற்கு முன்பு யாரேனும் ஒருவர் இந்தியாவுக்குச் சென்று, திருக்கடையூர் கோவிலில் ம்காம்ரித்யுஞ்ச யாகம் ஒன்றை உடனே செய்ய வேண்டும்.  அதோடு நாற்பத்தெட்டு நாட்களுக்கு தினமும் விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் மிருத்யுஞ்ச யாகத்தையும், ஆயுஷ்ஹோமம் ஒன்றையும் உடனே செய்ய வேண்டும்.  அவன் பிழைப்பான்.  கவலைப்படாதே" என்று அகத்தியர் சொன்னதும் தான் தாமதம், அவர்கள் அனைவரது முகத்திலும் மகிழ்ச்சி அதிகமாயிற்று.

"இப்போது செய்கிறோம்.  மறுபடியும் டாக்டரிடம் மாற்று சிகிற்சைக்கு வேண்டிய ஏற்ப்பாடு செய்ய முடியுமா என்றும் பார்க்கிறோம்.  ஆனால் டாக்டர்கள் இதனை ஏற்றுக் கொள்வார்களா என்றுதான் தெரியவில்லை" என்றனர்.  பின்பு நமஸ்காரங்களைச் சொல்லி விட்டு புறப்பட்டு சென்றனர்.

மாற்று சிகிர்ச்சையா? அதற்கு வழியே இல்லை என்று முதலில் மறுத்த டாக்டர்கள் பின்பு, மறுபடியும் கடைசி நேரத்தில் மருத்துவர் குழுவைக் கூட்டியிருக்கிறார்கள்.  அந்தக் குழு தீர விசாரித்தபின் ஒரு முடிவுக்கு வந்தது.

"இந்தப் பையனுக்கு எதற்கும் குடல் பகுதியில் அறுவை சிகிர்ச்சை செய்து கட்டியை எடுத்து விடுவோம்.  இதில் பிழைத்தாலும் சரி, பிழைக்காவிட்டாலும் சரி" என்று முதலில் முடிவெடுத்து அவசர அவசரமாக அறுவை சிகிர்ச்சை செய்திருக்கிறார்கள்.

எல்லோருடைய பிரார்த்தனையும் பலித்திருக்க வேண்டும் என்று தான் சொல்ல வேண்டும்.  அந்த அறுவைச் சிகிர்ச்சை வெற்றி பெற்று விட்டது.

பையன் பிழைத்துக் கொண்டான்.

இருந்தாலும் இன்னும் 48 மணி நேரம் கழித்துதான் எதுவும் சொல்ல முடியும் என்று டாக்டர்கள் சொன்னதால் எல்லோருக்கும் ஒருவித பயம் ஏற்பட்டிருக்கிறது.

அதே சமயம், இந்தியாவுக்கு வந்து திருக்கடையூர் கோவிலில் அந்த பையனுக்காக மிருத்யுஞ்ச யாகமும் செய்திருக்கிறார்கள்.  அதோடு, தொடர்ந்து தினம் ஜெபம் செய்யவும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

எப்படியோ, பின்னால் நல்ல செய்தி எனக்குக் கிடைத்தது.

மிகப் பெரிய பொல்லாத நோயிலிருந்து அந்த பையன் தப்பித்துக் கொண்டான்.  அந்த குடும்பமும் இப்பொழுது சந்தோஷத்தில் மிதக்கிறது.

இந்த மாதிரி அதிசயங்களை அகத்தியர் எல்லோருக்கும் செய்துவிட்டால் மிகப் பெரிய மகிழ்ச்சிதான்.  சிலருக்கு எல்லாமே உடன் நடந்து விடுகிறது.  பலருக்கு சில காலம் தள்ளி நடக்கிறது.  இன்னும் ஒரு சிலருக்கு எத்தனையோ பரிகாரங்கள் செய்தாலும் நடப்பது இல்லை.

இதற்கு என்ன காரணம்?

இது பற்றி பலதடவை நானும் யோசித்தேன்.  அகத்தியரிடமே கேட்டேன்.

"எல்லோருடைய விதியையும் நான் மாற்ற வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டு ஒவ்வொருவருக்கும் அருள்வாக்கு கொடுத்து வருகிறேன்.  ஆனால் வரிசை வரிசையாகத்தான் நடக்கிறது.  ஒருவேளை நிறைய பேர்களுக்கு அருள்வாக்கினை அள்ளித் தருவதால் ஏற்பட்ட விளைவாக இருக்கலாம்.  அல்லது "பிரம்மா" என் வேண்டுகோளை தாமதமாக நிறைவேற்றலாம்.  சிலசமயம் அவர் விஷயத்தில் நான் தலையிடுவதை அவர் விரும்பாமலும் தடுக்கலாம்.  இன்னும் சொல்லப் போனால் எங்களுக்குள் சில கருத்து வேறுபாடுகளும் இருக்கலாம்.  அதனால் ஏற்பட்ட விளைவுதான் இது" என்றார்.

இதைக் கேட்டதும் என் மனதுக்கு வருத்தமாக இருந்தது.

சித்தன் அருள்................. தொடரும்!

Saturday, 13 April 2013

சித்தன் அருள் "விஜய வருட புத்தாண்டு வாழ்த்துக்கள்!"

அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம்!

விஜய வருட தமிழ் புத்தாண்டில் அனைவரும் எல்லா நலமும் அகத்தியர் அருளால் பெற்று வாழ பிரார்த்தித்து மேலும் நிறைய நல்ல விஷயங்களை அறிந்து அதை நம் வாழ்க்கையில் நடை முறை படுத்தி மேன்மை பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.  அடியேன் வரையில் தெரியவந்த சில நல்ல விஷயங்களை (பெரியவர்கள் பலரும் சொன்னது) விரைவில் தொகுத்து வழங்க வேண்டும் என்று ஒரு ஆவல்.  அது அகத்தியர் அருளுடன் நடக்கும் என்று என்னுள் ஒரு எண்ணம்.

சமீபத்தில் என் நண்பர் ஒரு சிறிய ஒலி நாடாவை என்னுடன் பகிர்ந்து கொண்டார்.  கேட்ட பொழுது மிக இனிமையாக இருந்தது.  அது "ஓம் அகத்தீசாய நாம!" என்கிற மந்திரம்.  நான்கு நிமிடம் வரையில் உள்ளது. அதை கீழே உள்ள தொடுப்பில் வைத்துள்ளேன்.  த்யானத்துக்கு  அது மிகவும் உதவி புரியும் என்று நினைத்ததால் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.  ஒலி நாடாவின் நேரத்தை நீட்ட வலைப்பூவில் நிறைய உதவிகள் கிடைக்கின்றது. பிரியப் படுபவர்கள் கீழே தந்துள்ள தொகுப்பிலிருந்து தரவிறக்கி (download) உபயோகித்துக் கொள்ளவும்.

அகத்தியரே உங்களுக்கு தந்த புத்தாண்டு பரிசாக நினைத்துக்கொள்ளுங்கள்.  அது போதும்.

http://www.mediafire.com/?tf6ixibvwvtwqbe

அல்லது 

http://www.mediafire.com/file/tf6ixibvwvtwqbe/Agatheesaya_Namaha_chanting.mp3

மறுபடியும் வாழ்த்துக்களுடன்,

ஓம் அகத்தீசாய நமஹ!

கார்த்திகேயன்!

Thursday, 11 April 2013

சித்தன் அருள் -119


அகத்தியரின் அடியவரும் என் நண்பருமான ஒருவர் வெளிநாட்டில் வசிக்கிறார்.  ஒரு முறை என்னை அகத்தியர் நாடியுடன் அங்கு அழைத்து சென்று அங்கே வாழும் தமிழர்களுக்கும் அகத்தியரின் பெருமையை விளக்கி அவரின் ஆசிர்வாதத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று விரும்பினார்.

இதற்கு அகத்தியரின் உத்தரவு இருந்தால் தான் என்னால் எதுவும் செல்ல முடியும் என்று அவரிடம் பதில் சொன்னேன்.

அகத்தியரிடம் பவ்யமாக கேட்ட பொழுது இந்த வேண்டுகோளை அவர் ஏற்கவில்லை, மறுத்துவிட்டார்.

மேலும் "அகத்தியன் என்ன வியாபாரப் பொருளா? விற்பனை செய்வதற்கு? கடல் கடந்து காலடி வைக்க மாட்டேன்" என்றவர் "என்னை அன்றாடம் துதிபாடும் பலர் வெளிநாட்டில் இருக்கிறார்கள்.  அவர்களுக்கு அவசியம் ஏற்பட்டால் மூத்தவர்களுடைய உத்தரவுபடி நான் சட்டென்று வாய் வழியாகச் சென்று அருளாசி வழங்கிவிட்டு வருவேன்.  ஆனால் என்னை வைத்து பணம் சம்பாதிக்க நினைத்தால் வரமாட்டேன்" என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

நான் அகத்தியரின் இந்த வார்த்தைகளை அவரிடம் சொல்லிவிட்டு அமைதியாகிவிட்டேன்..

என் நண்பரோ "அகத்தியர் உத்தரவு கொடுத்தால் என்ன பிரார்த்தனை செய்ய வேண்டுமோ அதை அப்படியே செய்திட எங்க ஊர் பக்தர்கள் தயாராக இருக்கிறார்கள்.  தயை கூர்ந்து எங்களுக்காக பிரார்த்திக்கவேண்டும்" என்று மேலும் கட்டாயப்படுத்தினார்.

உடனே இதை கேட்க முடியாது, நேரம் வரும்போது கேட்கிறேன் என்று கூறி தற்காலிகமாக அவரை அனுப்பிவிட்டு  இதை மனதில் வைத்துக் கொண்டு, சமயம் பார்த்து, மூன்று மாதம் கழித்து, அகத்தியரிடம் நான் கேட்டேன்.

"வெளி நாட்டில் வாழும் மக்களும் நம் மனிதர்கள் தானே.  யாம் அங்கே வருகிறோம்" என்றவர், சில கட்டுப்பாடுகளையும் விதித்தார்.

"அகத்தியர் ஜீவநாடியை உன் வீட்டு பூசை அறையில் வைத்துவிடு.  மற்றொரு நாடிஓலைகட்டுடன் மட்டும் அந்த நாட்டிற்கு வா.  அங்கு யார் வீட்டிலும் தங்கக்கூடாது.  ஒரு அறையை எடுத்து தனியாக தங்கு.  தங்கும் அறையில் தரையில் தான் படுத்துத் தான் தூங்க வேண்டும்.  யாருக்கு உண்மையில் தெய்வ நம்பிக்கை இருக்கிறதோ, அவர்களுக்கு மட்டும் தான் யாம் வாய் திறப்போம்" என்று நிறைய கட்டுப்பாடுகளைச் சொன்னார்.

"அப்பாடா! இப்போதாவது வெளி நாட்டிற்கு வருகிறேன் என்று சொன்னாரே" என்று சந்தோஷப்பட்டார் என் நண்பர்.  ஆனால் எனக்கு மட்டும் அதில் முழு திருப்தி இல்லை.  ஏதோ ஒன்று நடக்கப் போகிறது அதனால் தான் இத்தனை கட்டுப்பாடுகளை விதிக்கிறார் என்று மட்டும் தெரிந்தது.

என் வீட்டின் பூஜை அறையில் வைக்கப்படும் அகத்தியர் ஜீவநாடி, வெளிநாட்டில் உள்ள எனது மற்றொரு ஓலைச்சுவடியில் தெரியும்.  எனவே பொது மக்களுக்கு, அருள் வாக்கை அகத்தியர் சொல்வார் என்பது புரிந்தது.  ஆனாலும், சில பிரச்சினைகளை சந்திக்கப் போகிறன் என்பது ஏனோ எனக்கு அப்போது தெரியவில்லை.

வெளிநாட்டில், அகத்தியர் நாடியை பார்க்க வந்தவர்களில் ஒரு இளம் பெண்ணும் இருந்தாள்.

சுற்று முற்றும் பார்த்து விட்டு, "எனக்கு யாராவது செய்வினை செய்திருக்கிறார்களா?" என்று சர்வ சாதாரணமாகக் கேட்டாள்.

"செய்வினையை அகத்தியர் நம்புவதில்லை" என்றேன்.

"அகத்தியரை நம்ப வைக்கிறேன்" என்றவள், சட்டென்று எழுந்தாள்.  குறுக்கும் நெடுக்குமாக தரையை பார்த்தபடி நடந்தாள்.  எதற்காக இப்படி நடக்கிறாள் என்று எனக்குப் புரியவில்லை.

அந்த அறையில் என்னையும், அவளையும் தவிர வேறு யாரும் இல்லை.  அதோடு இல்லாமல் அப்போது இரவு மணி பதினொன்றையும் தாண்டிக் கொண்டிருந்தது.  இதற்குள் அகத்தியர் நாடியில் எனக்கு ஒரே ஒரு உத்தரவு மட்டும் வந்தது.

"உடனே உன்னைச் சுற்றி ஒரு வளையும் போட்டு பாதுகாத்துக் கொள்.  இம் மந்திரத்தை ஜெபித்துக் கொண்டிரு.  எது நடந்தாலும் பயப்படாதே, உன்னை நான் பாதுகாக்கிறேன்' என்று மீண்டும் மீண்டும் அகத்தியர் சொன்னார்.

இதுவரையில் அகத்தியர் எனக்கு இப்படியொரு முன் அறிவிப்பை தந்ததில்லை.

அப்படி என்ன தான் செய்யப் போகிறாள் அவள் என்று எண்ணிக்கொண்டிருக்கும் பொழுது,

"அங்கிள்!  நான் இந்த ஜன்னலை திறந்து கீழே குதிக்கப் போகிறேன்.  நீங்களும் என்னுடன் குதிக்க வருகிறீர்களா?" என்று கேட்டாள்.

நான் ஜன்னலைப் பார்த்தேன்.

நான் தங்கி இருந்த ஓட்டலின் எட்டாவது மாடியில் இருந்த எந்த ஜன்னலிலும் எந்தவித தடுப்புச் சுவரோ, கம்பியோ இல்லை.

ஜன்னலை திறந்தால் வெட்டவெளி.  சர்வ சாதாரணமாக "பொத்" என்று கீழே குதித்துவிடலாம்.  வீ ழ்ந்தால் அதோ கதி தான்.

வெளிநாட்டிற்கு வந்திருக்கிறோம். நள்ளிரவு நேரம்.  என் அறையில் இருந்த அந்தப் பெண் ஜன்னல் வழியாக சட்டென்று கீழே குதித்து விட்டால், இதன் விளைவு எப்படிஇருக்கும்? என்பதெல்லாம் எண்ணிப் பார்த்த பொழுது, அகத்தியர் ஏன் இப்படி சோதிக்கிறார் என்ற கவலை தான் ஏற்பட்டது.

அகத்தியர் சொன்னபடி என்னைச் சுற்றி மந்திரத்தால் ஒரு பாதுகாப்பு வலளயத்தை ஏற்படுத்திக் கொண்டு அந்தப் பெண்ணைப் பார்த்தேன்.

இங்கும் அங்கும் நடந்த அந்த பெண் திடீரென்று ஜன்னல் பக்கம் நெருங்கி ஏற ஆரம்பித்தாள்.

"சரி!  ஏதோ ஒரு விபரீதம் தான் நடக்கப் போகிறது" என்று எண்ணினேன்.

அடுத்த நிமிடம் அந்தப் பெண் தலை சுற்றி மயக்கம் போட்டு விழுந்தாள்.

பத்து நிமிடம் கழித்து, அவளே பேசினாள்.

"இங்கே என்ன நடந்தது என்று எனக்கு புரியவில்லை.  ஒரு வயதான பெரியவர் கருப்பு தாடியுடன் தோன்றினார்.  பார்க்க ரிஷி போன்று இருந்தார்.  என்னை கருணையுடன் பார்த்தார்.

தன் கமண்டலத்தில் இருந்த தண்ணீரை என் முகத்தில் தெளித்தார்.  என் மனது இலவம் பஞ்சாக மாறியது.  ஏதோ ஒரு கொடிய தன்மை என்னை விட்டு விலகிப் போனதாகத் தோன்றியது.  "கவலைப் படாதே........ இன்று முதல் எந்த விதக் கொடிய செயல்களும் உனக்கு ஏற்படாது" என்று சொல்வது போல் இருந்தது.

ஜன்னலில் இருந்து கீழே குதிக்க நினைத்த என்னை அவரே ஜன்னல் வழியாக வந்து, என் இரு கைகளையும் பிடித்து, பத்திரமாக கீழே இறக்கி "சற்று ஓய்வெடுத்துக்கொள்" என்று சொல்லி, கைத்தாங்கலாக அழைத்து படுக்க வைத்து விட்டுச் சென்றார்.

அவர் எங்கே சென்றார் என்று அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.  ஒளி ரூபமாக உங்கள் கையிலிருந்த ஓலைச் சுவடிக்குள் சென்று மறைந்துவிட்டார்.

அதற்குப் பிறகு எனக்கு உறக்க நிலை ஏற்பட்டுவிட்டது.  இதுதான் நடந்தது.  இது ஏன் ஏற்ப்பட்டது என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்" என்று மண்டியிட்டு, கைகூப்பி, கண்களில் நீர் வர அமைதியாக கேட்டாள் அந்த இளம் பெண்.

செய்வினை என்றால் என்ன என்று அகத்தியருக்கு எடுத்து காண்பிக்கிறேன் என்று சொன்ன இந்த பெண்ணா இப்படி பேசுகிறாள் என ஆச்சரியப் பட்டு போனேன்.

அகத்தியருக்கு நன்றி சொல்லிவிட்டு, "இந்தப் பெண் யார்? அவள் நிலை என்ன? என்பதைப் பற்றி சொல்லுங்கள்" என்று கேட்டேன்.

அவர் சொன்னார்

"இந்த ஊரில் உள்ள மங்கோலிய இனத்தை சேர்ந்தவர்களுக்கும், தமிழ்நாட்டின் அருகே உள்ள கேரளாவைச் சேர்ந்த சில குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே மிக நெருங்கிய பழக்கம் உண்டு.  இவர்கள் அதர்வண வேதத்தைச் சேர்ந்தவர்கள்.  இவர்களுக்கு செய்வினை போன்ற துர்தேவதைகளை வைத்து பிரயோகம் செய்யத் தெரியும்,.  ஆனால் செய்வினையை எடுக்கத் தெரியாது.

இப்படி துர்தேவதையை ஏவி விடுகிறவர்கள் அனைவரும் முதலில் தங்களைப் பாதுகாத்துக் கொள்வார்கள்.  தவறாக பிரயோகம் செய்தால் அது அவர்களது வம்சாவளியையே போக்கிவிடும்.

எனவே பெரும்பாலும் யாரும் "செய்வினையை"ச் செய்வதில்லை.  இருந்தாலும், இப்படிப்பட்ட பயம் இந்த ஊர் ஜனங்களுக்கு இருக்கத்தான் செய்கிறது.

பாதி மன பயம்.  பாதி துஷ்ட தேவதையின் காற்று.  எனவே இதைப்பற்றி ஆராய்ச்சி செய்வது நல்லதல்ல.  விட்டுவிடு" என்றார்.

"இந்தப் பெண்ணுக்கு மன உளைச்சலும், யார் எதைச் சொன்னாலும் அதை எதிர்த்து செயல்பட வேண்டும் என்ற எண்ணமும் தான் இருக்கிறது.  அதனால் தான் அவள் அகத்தியனுக்கே சவால்விட்டாள்.  இப்போது அதே அகத்தியனால் தான் அவளைக் காப்பாற்ற முடிந்தது.

ஜன்னல் வழியாகக் குதிக்கலாமா என்று அவள் கேட்ட பொழுது "சரி குதி" என்று நீ சொல்லி இருந்தால் அவள் குதித்திருக்கவே மாட்டாள்.  எனவே இதை "செய்வினை" என்று எண்ண வேண்டாம்.

யாரோ இவளை தூண்டிவிட்டு இங்கு அனுப்பி இருக்கிறார்கள்.  அவர்களும் இன்னும் சில நேரத்தில் இங்கு வருவார்கள்.

அவர்கள் போடும் ஆட்டத்தைக் கண்டு சற்றும் பயந்து விடாதே.  அவர்களை நல்வழிப்படுத்திக் காட்டுகிறேன்' என்றும் கூறிய அகத்தியர், "இந்தப் பெண் இனிமேல் அடியோடு மாறிவிடுவாள்.  தெய்வீகப் பெண்ணாக மாறி, ஆன்மீகத்தில் ஒரு பெரிய சக்தியாக மாறி அற்புதமான காரியங்களால் இந்த ஊரில் மட்டுமல்ல, தமிழகத்திலும் கொடி கட்டி பறக்கப் போகிறாள்.  இனி இவளுக்கு சுதந்திரம் தான் நல்ல வாழ்க்கை, நல்ல எதிர்காலம்" என்று அருள்வாக்கு கூறினார்.

அந்தப் பெண்ணுக்கு இதைக் கேட்டதும் ஏகப்பட்ட சந்தோஷம்.

நல்ல வார்த்தை சொல்லி அவளை வெளியே அனுப்பிய உடன், இந்தப் பெண்ணைத் தூண்டி விட்டு அகத்தியரை சோதிக்க நினைத்தவர்கள் கூட்டமாக உள்ளே நுழைந்தார்கள்.

சித்தன் அருள்..................... தொடரும்!

Thursday, 4 April 2013

சித்தன் அருள் - 118


ஓம் ஸ்ரீ கணேசாய நமஹ!

சித்தர்களின் திருவிளையாடலை பல நேரங்களில் புரிந்து கொள்வது என்பது மிக கடினம்.  ஏன்? எதற்கு இப்படி செய்கிறார்கள், இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று புரிந்துகொள்ள முயற்சிக்கும் முன்பே பல நிகழ்ச்சிகள் நடந்து நமது கவனத்தை திசை திருப்பிவிடும்.  கடைசியில், அவர்களுக்கே இது வெளிச்சம் என்று தீர்மானித்து, விட்டுவிடுவோம்.  சித்தர்களின் முறையை ஓரளவேனும் உணர்ந்தவர்கள் அவர்கள் அருகாமையை விரும்புவார்கள்.  அவர்கள் அருள் எப்போதும் கிடைக்காதா என்று ஏங்குவார்கள்.  நாம் அறியாமலே அவர்கள் அருள் பார்வை நம்மை சுற்றி அரணாக நின்று காக்கும் என்பதே உண்மை.  அதே சித்தர் அவருக்கு மட்டும் தெரிந்த ஒரு சில காரணங்களால் நம் குடும்பத்தில் ஒருவராக வந்து பிறந்தால் நம் மனநிலை எப்படி இருக்கும்?  பிறந்து வந்திருப்பது ஒரு சித்த சக்தி என்று புரியாதவரை, சாதாரண நிலை, புரிந்து விட்டால், ஆச்சரியத்துடன் அதிர்ந்து போய் இன்பத்தில் நிற்கும் நிலை தான் உருவாகும்.  அப்படிப்பட்ட ஒரு  நிகழ்ச்சியை இன்று பார்ப்போம்.

அது ஒரு மிக ஏழ்மையான, ஆனால் மிகக் குறைந்த நபர்களை கொண்ட குடும்பம்.  கணவன், மனைவி ஒரு ஆண் குழந்தை.  அவர்களுக்கு சொந்தமாக ஒரு காணி நிலம் கூட இல்லாத நிலையில், பிறரின் விவசாய நிலத்தில் நாற்று நட்டு, அறுவடை செய்து உழைத்து வாழ்ந்த வந்த குடும்பம்.

ஒரு காலத்தில், இயற்கை ஏமாற்றியதால் மழை பொய்த்தது. மழையின்றி, நீர் நிலைகள் வற்ற ஆரம்பித்தது; பூமியும் வறண்டு போக தொடங்கியது.  விவசாயம் பாதிக்கப்பட செய்து வந்த வேலையும் இல்லை என்று ஆகிற நிலை.  அந்தக் குடும்பத்தினர்,  உழைக்க வழியின்றி,  உண்ண உணவுக்கும் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.  பெரியவர்கள் தண்ணீரை குடித்து எப்படியேனும் காலம் தள்ளலாம்.  பதினெட்டே மாதம் நிரம்பிய குழந்தைக்கு ஒரு நாள் ஆறு முறையேனும் உணவளித்தால் தான் அதன் பசியை ஆற்ற முடியும்.  ஆனால், அந்தக் குழந்தையோ, பசியினால் அழாமல், ஏதேனும் தன தாய் அளித்தால் மட்டும் உண்டு மற்ற நேரங்களில் அமைதியாக படுத்தபடி கிடக்கும். 

ஒரு வாரமாக அவர்களுக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை.  உணவுக்கும் பஞ்சம் ஏற்படத் தொடங்கியது.  எத்தனை முறை தான் அக்கம்பக்கத்தினரிடம் கை நீட்ட முடியும்.  குழந்தைக்கு கொடுக்க கூட எதுவும் கிடைக்கவில்லையே என்று மன வேதனையுடன் அந்த தாய், அதை பார்க்கும் போது விரல் சூப்பிக் கொண்டிருந்த அந்த குழந்தை, விரலை எடுத்துவிட்டு அவளை பார்த்து சிரிக்க தொடங்கியது.  அந்த தாய்க்கே ஆச்சரியம்.  இந்தக் குழந்தை பசி எடுத்து ஒரு போதும் அழுததை பார்த்ததில்லை.  ஏதேனும் கொடுத்தால் கனிவுடன் சாப்பிட்டுவிட்டு அமைதியாக உறங்கிவிடும்.  சாதாரண குழந்தைகளுக்கு இருக்கும் குணங்கள் எதுவும் அந்த குழந்தையிடம் இல்லாததை கண்ட தாய் மிக விசனப்பட்டாள்.   இந்தக் குழந்தைக்கு உடல் ரீதியாக ஏதேனும் குறை  இருக்குமோ?  அப்படி ஏதேனும் இருந்தால் மருத்துவ சிகிற்சைக்கு என்ன செய்வது?

வரட்சி உச்சத்தை அடைய, பல குடும்பங்களும் கிராமத்தை விட்டு வெளியேறின.  போக்கிடம் இல்லாத இந்தக் குடும்பம் என்ன செய்வதென்றறியாமல் தவித்தது.  வேறு ஏதேனும் ஒரு கிராமத்துக்கு சென்றால் ஏதாவது வேலை பார்த்து குடும்பத்தை நடத்தலாம் என்ற நினைவு கூட வராமல், தன குழந்தைக்கு ஒரு நேரம் கூட பால் கொடுக்க முடியாத நிலையை நினைத்து வருந்தி, அந்த தாய் ஒரு முடிவுக்கு வந்தாள்.

அன்று நள்ளிரவு முடிந்து முதல் ஜாமம் தொடங்கும் நேரம்.  உறங்கி கிடந்த குழந்தையை எடுத்துக்கொண்டு தன கணவருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியே வந்து,  ஊரின் எல்லையில் இருக்கும் குளத்தை நோக்கி நடந்தாள்.  வறுமையில் போராடி இந்த குழந்தை கஷ்டப்படுவதைவிட இதை கொன்றுவிடுவதே மேல் என்று தீர்மானித்திருந்தாள்.

தெளிவான நிலா வெளிச்சம் எங்கும் பரவி நிற்க, மெதுவாக சப்தம் எழுப்பாமல் நடந்தவள், சன்னமாக யாரோ "அம்மா! அம்மா!" என்று தன்னை அழைப்பதுபோல் உணர்ந்தாள்.

சுற்று முற்றும் பார்த்தவள் யாரும் இல்லாததை கண்டு ஏதோ ஒரு உணர்வால் தன குழந்தையை நெஞ்சோடு அணைத்துக்கொள்ள, மேலும் "அம்மா!" என்று தெளிவாக ஆனால், சன்னமாக  கூப்பிடுவது அந்த தாய்க்கு கேட்டது.

நடந்து சென்றுகொண்டிருந்த அந்த தாய் அப்படியே வழியில் நின்றாள். மேலும் ஒருமுறை சப்தம் கேட்கிறதா என உன்னிப்பாக கவனித்தாள்.

மறுபடியும் "அம்மா!" என்று கேட்டவுடன் அவள் அதிர்ந்து போனாள்.  அது மார்போடு அணைத்து கொண்டிருக்கும் குழந்தையை சுற்றியிருக்கும் வெள்ளை துணிக்கு உள்ளிருந்துதான் கேட்டது.

மெதுவாக துணியை விலக்கி பார்க்க, உறங்கி கிடந்த அந்த குழந்தை விழித்திருந்தது.  அவள் பார்வை பட்டதும் சிரித்துக்கொண்டே கையை அசைத்தது.

"பதினெட்டே மாதம் நிரம்பிய இந்தக் குழந்தையா "அம்மா!" என்று கூப்பிட்டிருக்கும். இருக்காது எனக்குத்தான் சித்தப்ரம்மை பிடித்திருக்கிறது" என்று நினைத்து குழந்தையை தூக்கி முகத்தருகே கொண்டு வந்து உச்சி முகர்ந்து முத்தம் கொடுக்க நினைத்தவளுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது 

"ஆமாம் அம்மா! நான் தான் உன்னை கூப்பிட்டேன்!" என்று அந்த குழந்தை மிகத் தெளிவாக பேசியது.

ஒரு நிமிடம் அதிர்ந்து போன அந்தத் தாய் திகைப்பில், குழந்தையை நிலா வெளிச்சத்தில் தூக்கி பிடித்து உன்னிப்பாக கவனிக்க, அதன் உடல் எங்கும் ஒருவித தேஜஸ் வெளிப்படுத்துகிற ஒளி சூழ்ந்திருப்பதை கண்டாள்.

தனக்குப் பிறந்திருப்பது ஒரு சாதாரணக் குழந்தை அல்ல என்று அவள் உள்மனம் சொன்னது.

அந்தக் குழந்தை மேலும் பேசியது.

"ஏன்மா? என்னை குளத்தில் முக்கி கொன்றுவிட்டால் உன் வறுமை தீர்ந்துவிடுமா?"

அந்தச் சின்னக் குழந்தையின் இந்தக் கேள்வி அவளை அறைந்ததுபோல் உணர்ந்தாள்.

செய்வதறியாது, குழந்தையை ஒரு மரத்தடியில் கிடத்திவிட்டு, தான் செய்ய இருந்த பாபச் செயலின் வீர்யத்தை நினைத்து அழத்தொடங்கினாள்.

அழுது தீரட்டும் என்று காத்திருந்ததுபோல், மறுபடியும் அவள் குழந்தையை வாரி எடுத்து வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கிய உடன் அந்த குழந்தை பேசத் தொடங்கியது.

"நான் யார் என்று ஆராய்வதை பிறகு செய்து கொள்ளலாம்.  முதலில் நான் சொல்வதை போல் உடனடியாக செய்யவேண்டும்.  ஊருக்குள் இருக்கும் அம்மன் கோவிலுக்கு செல்.  அங்கே அம்மன் கோவிலுக்கு பின் பாகத்தில் இடதுபுறமாக ஒரு பாம்பு புற்று இருக்கும்.  அதில் ஒரு நாகம் வாழ்ந்து வருகிறது.  சூரிய உதயத்துக்கு இன்னும் இரண்டு நாழிகை இருக்கிறது.  இரவில் வேட்டைக்கு சென்ற நாகம் சூரியன் உதிக்கும் ஒரு நிமிடத்திற்குள் அந்த புற்றுக்கு திரும்பி வந்துவிடும்.  அதற்குள் நீ சென்று அந்த புற்றுக்குள் கையை விட்டு துழாவிப்பார்.  உனக்கு வேண்டிய நிதி கிடைக்கும்.  அது கிடைத்ததும் நீயும், தகப்பனாரும் என்னை தூக்கிக்கொண்டு பக்கத்தில் இருக்கும் பாக்கம் என்கிற கிராமத்துக்கு சென்று விடுங்கள்.  அதன் பிறகு நீங்கள் கடைசி வரை நிம்மதியாக வாழலாம்!" என்றது.

என்ன இது.  ஒரு குழந்தை என்னென்னவோ பேசுகிறது.  எப்படி இது சொன்னதின் பேரில் ஒரு பாம்பு புற்றுக்குள் கை விட முடியும்?  அதனுள் இந்தக் குழந்தை சொன்னதற்கு எதிராக நாகம் இருந்து கை விட்டவுடன் கடித்துவிட்டால்?...................... என்கிற சிந்தனைகள் அவள் மனதுக்குள் யோசனையை உருவாக்கியது.

"என்ன! நான் சொன்னதை நீ நம்பவில்லையா! சரி கோவிலுக்கு போய் பார். நான் சொன்ன இடத்தில் மூன்று துவாரம் உள்ள பாம்பு புற்று இருக்கிறதா என்று பார்.  அது உண்மையானால், நடுவிலுள்ள ஓட்டைக்குள் கையை விடு.  அது போதும்.  உன்கைக்கு ஒரு சின்ன துணி மூட்டை தட்டுப்படும்.  அதை எடுத்துக்கொள்.  மேலும் துழாவினால் இன்னும் இரண்டு சிறிய துணி மூட்டைகளும் கிடக்கும்.  எல்லாவற்றையும் எடுத்துக்கொள்.  ஆனால் சீக்கிரம் போ!  காலம் தாழ்த்தாதே.  உதயமாகப் போகிறது" என்று மறுபடியும் எச்சரித்தது அந்தக் குழந்தை. 

தான் கேட்டதை நம்ப முடியாமல், இருந்தும் முயற்சி செய்து தான் பார்ப்போமே என்று, குடும்பத்தின் வறுமை நிலை அவளை பிடித்து தள்ள, வேக வேகமாக சந்தக் குழந்தையுடன் கோவில் வாசலை அடைந்தாள்.

திடீர் என்று என்ன தோன்றியதோ, பாம்பு இருந்து ஏதேனும் விபரீதம் நடந்தாலும், தான் இறந்தாலும் பரவாயில்லை, குழந்தை காப்பாற்றப் படவேண்டும் என்ற எண்ணத்தில் அதை கோவில் திண்ணையில் படுக்க வைத்துவிட்டு, தான் மட்டும் அந்த குழந்தை சொன்ன கோவிலின் பின்புறத்தை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

கோவிலின் பின் புறத்தில் அந்த குழந்தை சொன்னது போலவே ஒரு பாம்பு புற்று இருந்தது.  அந்த புற்றின் உச்சியில் மூன்று ஓட்டைகள் காணப்பட்டது.  அதை கண்டவள், "என் குழந்தை சொன்னதெல்லாம் சரியாக இருக்கிறதே! அப்படியானால் கண்டிப்பாக இதில் ஏதோ ஒரு உண்மை இருக்கும்.  பார்த்து விடுவோம்" என்று திடமான எண்ணத்துடன் அந்த நடு ஓட்டைக்குள் கையை விட்டு துழாவினாள்.  ஒரு சிறிய துணியின் நுனி, விரலில் பட்டதை உணர்ந்தாள்.  எல்லா விரல்களையும் மடக்கி கொத்தாக அந்த நுனியை பிடித்து இழுக்க  புற்றை லேசாக உடைத்துக்கொண்டு ஒரு சின்ன மூட்டை வெளியே வந்தது.  அதை திறந்து பார்க்க, மூட்டைக்குள் தங்க நாணயங்கள் இருந்தது.  குழந்தை சொன்னது ஞாபகத்துக்கு வர மேலும் சற்று ஆழத்தில் துழாவ இரு சிறு மூட்டைகளும் கிடைத்தது.  அதிலும் தங்க நாணயங்கள்.

பொழுது விடியத் தொடங்க சட்டென்று கோவில் வாசலை நோக்கி நடக்கத் தொடங்கியவள்  "சர சர" வென ஏதோ ஓடும் சத்தம் கேட்டு திரும்பி பார்க்க, ஒரு மிகப் பெரிய நாகப் பாம்பு இவளை பார்த்துவிட்டு அந்த புற்றுக்குள் நுழைந்து மறைந்தது.

"இனி ஒன்றும் யோசிப்பதர்க்கில்லை" என்று உணர்ந்து, அந்தக் குழந்தை சொன்னபடியே கணவரை அழைத்துக் கொண்டு பக்கத்தில் இருக்கும் பாக்கம் என்கிற கிராமத்துக்கு சென்று குடி பெயர்ந்தனர்.  அந்த குழந்தை சொன்னபடி அவர்கள் வாழ்க்கை மிக சிறந்ததாக அமைந்தது.  பின்னர் ஒரு போதும் இன்னொருவரிடம் கை நீட்டி சேவகம் செய்கிற நிலை அவர்களுக்கு ஏற்படவே இல்லை.

அந்தக் குழந்தைக்கு "பரமானந்தன்" என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். பரமானந்தான் பள்ளிக்கு செல்வதை விரும்பவில்லை.  நேரம் கிடைக்கும் போதெல்லாம் யோகாசனம், த்யானம், மருத்துவம் போன்றவையில் நிறைய கவனம் செலுத்தினான்.  தனிமையை அதிகம் விரும்பினான்.  நோயினால் வருந்தும் மனிதர்களை கண்டால் வலிய சென்று அவர்களுக்கு மருத்துவ உதவி செய்வான்.  மற்ற மருத்துவர்களிடம் சென்று குணமாகாத எப்படிப்பட்ட நோயும் "பரமானந்தன்" ஒரு முறை மருந்து கொடுத்து உண்டால், விலகியது.  மெதுவாக பரமானந்தனின் புகழ் பரவத் தொடங்கியது.  அதே நேரத்தில் அவனுக்கு எதிர்ப்பும் வலுக்கத் தொடங்கியது.  முறையாக வைத்தியத்தை படிக்காமல் சிகிர்ச்சை செய்கிறான் என்கிற குற்ற சாட்டை, மற்ற மருத்துவர்கள் கூறி வர, அனைத்தையும் பதில் பேசாமல் கேட்டுக் கொண்டான்.  இருப்பினும் மிகக் கொடிய விஷம் ஏறிய நிலையில் இருந்த ஒருவரை "பரமானன்தனை" தவிர வேறு யாராலும் காப்பாற்ற முடியவில்லை.  இதுவே அவனை எதிர்த்த மற்ற வைத்தியர்களை வாய் அடைக்க செய்தது.

ஒருநாள் பரமானந்தன் யாரிடமும் சொல்லாமல், கொள்ளாமல் எங்கோ சென்று விட்டான்.  அவன் பெற்றோர் எங்கு தேடியும் கிடைக்காமல் போகவே, இனி அவனை நாம் சந்திக்கப்போவதில்லை என்று நினைத்து வருந்தினர்.

புண்ணிய ஸ்தல யாத்திரை மேற்கொண்ட ஒருவர் பழனியில் தாம் ஒரு இளம் துறவியை சந்தித்ததாக கூறி அங்க அடையாளங்களை கூற, அந்த தாய் "இவர் சொல்வதெல்லாம் நம் மகனுக்கு பொருந்துகிறதே" என்று உணர்ந்து பழனிக்கு சென்று பார்க்க, அந்த துறவி மிகப் பெரிய ஜடாமுடியுடன், தீர்க்கமான கண்களுடன், அமைதியாக தேஜசுடன் இருப்பதை கண்டார்.  கண்ட நொடி பொழுதில் அது தன் மகன் பரமானந்தன் தான் என்று உணர்ந்து பாசம் பொங்க "மகனே" என்று அழைத்து அருகில் சென்றார்.  ஒரு அளவுக்கு மேல் அந்த தாயால் அவர் அருகில் செல்ல முடியவில்லை.  எதுவோ ஒன்று அவரை சுற்றி நின்று அனைவரையும் அகற்றி நிறுத்தியது.  வந்திருப்பது தன்னை பெற்ற தாய் என்று அறிந்தும் அந்த சாதுவின் மனது எந்த வித சலனமும் இன்றி இருந்தது.  "தன் மகன் இனி தனக்கிலான்"  என்றுணர்ந்த அந்த தாய் வெறும் கையுடன் வீடு திரும்பவேண்டி வந்தது.  தன கணவரின் மறைவுக்குப் பின் "பரமானன்தனை" நோக்கி வந்த தாய், அவனுடனே பழனியில் தன் இறுதி காலம் வரை தங்கி இருந்தார்.

தாயின் மறைவுக்குப் பின் பல இடங்களுக்கும் அலைந்து நடந்த பரமானந்தன் பலரின் வாழ்விலும் நோய் விலகி அமைதி வரவும், ஆன்மீக சக்தி பெருகவும் பலவிதமான செயல்களை செய்து வர, பழனியில் அவரை சந்திக்க பெரும் கூட்டமே எப்போதும் காத்திருக்கும்.  எல்லோரையும் பார்த்துக் கொண்டே பக்கத்திலிருக்கும் தூணுக்கு பின் மறைந்து விலக, சற்று நேரமாகியும் அவர் வராததை கண்டு எட்டிப் பார்த்தால் அங்கே அவர் இருக்கமாட்டார்.  இப்படி சித்து விளையாட்டையும் தொடங்கிய பரமானந்தன் கடைசியில் ஒருநாள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்க தன் உடலை காற்றோடு காற்றாக கரைத்து நிரந்தரமாக மறைந்து போனார்.

இன்றும் அவரை வேண்டிக்கொண்டு பழனி சென்றால், மருத்துவத்தில் எந்த உதவியையும் ரூபமாகவோ அரூபமாகவோ வந்து அவர் செய்வதாக பலரும் கூறுகின்றனர்.

இந்த தொகுப்பை படித்து முடித்தவுடன், ஆங்காங்கே ஒரு தொடர்பில்லாமல், நூலிழைகள் விட்டுப்போனது போல் தோன்றும்.  =ஒருமுறை நண்பரிடமே நேரடியாக இதை பற்றி கேட்டவுடன் புன் சிரிப்புடன் "அது தான் சித்தன் போக்கு சிவன் போக்கு என்று சொல்வார்கள்.  இன்னும் தெளிவாக சொல்வதென்றால் வருவார்கள், செய்வார்கள், செல்வார்கள். புரிஞ்சுதா?" என்று திருப்பி ஒரு கேள்வியை போட்டு மாட்டினார்.

எனக்குள் சில கேள்விகள்.

1. சித்தன் கருவில் ஊறி பிறவி எடுக்க வாசனை காரணமா? சோதனை காரணமா?
2.  உதவ வேண்டும் என்றால், சித்தனுக்கே அதற்காக ஒரு பிறவி தேவையா?
3.  ஏன் இந்த நாடகம்?

இன்றுவரை பதில் கிடைக்கவில்லை.  காத்திருக்கிறேன்! பொறுமையுடன்.

சித்தன் அருள்................... தொடரும்!

அகத்தியர் நமக்கென அருளியவை:-

சித்தன் அருள் - 20 - பத்ராசலத்தில் ராமர் தரிசனம்!

"ராம பக்தர் ராமதாஸ் பற்றி அறிந்து இருப்பாய்.  அரசாங்க கஜானாவைக் கொள்ளைஅடித்து ராமபிரானுக்கு, ராமதாஸ் கட்டிய கோவில் இது.  இதனால் ராமதாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  அவர் செய்தது தவறு என்பதால் அதற்குரிய தண்டனையைப் பெற்றாலும், அவர், தன் மீது கொண்ட பக்தியைக் கண்டு மெச்சினார் ராமர்.  ராமதாஸ் இருந்த சிறைக்கு ராமர் வந்து மங்களகரமாக காட்சி கொடுத்த நாள் இன்று தான்."

ராமார் காட்சி கொடுத்த அந்த புனித நாளன்றும் கோதாவரியில் வெள்ளம் வெகுண்டோடியது.  அதே போல் இன்றும் எதிர்பாராத விதமாக வெள்ளம் ஓடுகிறது.  ராமதாசுக்கு காட்சி கொடுத்த பின்னர், சீதா, லட்சுமணன், அனுமன் சகிதம் அவர் இந்தக் கோவிலுக்கு வந்ததும் இதே தினத்தில் தான்.  அந்த புனிதமான நாளன்று உனக்கும் அந்த பாக்கியம் கிடைக்கட்டும் என்று தான் இங்கு வரவழைத்தேன்."

இன்னும் ஒன்றை நாழிகையில் இங்குள்ள கர்ப்ப கிரகத்திற்குள் ராமார் அரூபமாக வருவதால், கண்ணை மூடிக் கொண்டு த்யானம் செய்.  எந்த விதக் காரணம் கொண்டும் கண்ணைத் திறக்காமல் ராமரையே நினைத்திரு.  உன் நினைவலையில் ராமார் வருவதைக் காணலாம்.

ஒரு நாழிகையே அவரது தரிசனம் இங்கு கிடைக்கும், பின்பு, படி வழியாக இறங்கும் ராமர், கோதாவரி தாய்க்கு பூக்களால் நமஸ்காரம் செய்வார்.  தீப ஆரத்தியும் கட்டுவார்.  அதையும் உன் த்யானத்தில் பார்க்கலாம்.  அந்த தீப வழிபாடு முடிந்த பின்னர், கோதாவரி அன்னையின் ஆவேசம் தணியும். நான்கு மணி நேரத்தில் வெள்ளமும் வடியும்.  பிறகு, நீ இறங்கிச் செல்லலாம்.

சித்தன் அருள் - 21 - தவறு செய்திருந்தாலும் மன்னித்தருளும் சித்தர்!

"உயர் குலத்தில் பிறந்து உன்னதமான ஆன்மீகப் பணி செய்யவே இவனுக்கு இந்த ஜென்மம் தரப்பட்டது. செய்கின்றத் தவறைச் சுட்டிக்காட்டி, இவனது எதிர்காலம் நல்லபடியாக மாற, வழியும், வாய்ப்பையும் காட்டினோம். ஆனால், எதையும் அலட்சியம் செய்யும் நோக்கிலேயே இவன் செயல்படுகிறான்.  ரத்தம் நன்றாக இருக்கும் வரையில் தான் எல்லாம் பேசலாம், நடக்கலாம். அது சுண்டிவிட்டால் அடுத்த வினாடி அவன் கதி என்ன? என்பதை இவனுக்கு உணர்த்த இப்படி நடந்துள்ளது. இந்த படிப்பினையை தந்தவர் இப்போது இங்கு வந்து சென்ற ராமர் தான். இன்னும் நாற்பது நிமிட நேரத்துக்குள் இவன் மறுபடியும் இயல்பான நிலைக்கு வந்துவிடுவான்.

அதற்குள், இவன் ஒரு காரியம் செய்ய வேண்டும். அதாவது, ஒரு பக்தர், ராமருக்கு சில நகைகளைக் கொடுத்துள்ளார். அதை இவன் கோவிலில் சேர்க்காமல் தனது அறையில் உள்ள பீரோவில் வைத்துள்ளான். அதை எடுத்து உடனே கோவில் உண்டியலில் போட வேண்டும். அப்படி செய்தால் எல்லாம் சரியாகிவிடும்" என்று முடித்தார் அகத்தியர்.