சித்தர்கள்தான் இந்த உலகையே கட்டிக் காக்கிறார்கள் என்பது எனது எண்ணம். பல நேரங்களில் நடக்கிற விஷயங்களை பார்த்தால் அப்படித்தான் தீர்மானிக்க முடியும். இறைவன் சித்தர்களிடம் இந்த உலகை ஆட்சி செய்யும் உரிமையை கொடுத்துவிட்டு எங்காவது உல்லாச பயணம் போய் விட்டாரோ என்று தோன்றுகிற அளவுக்கு சில வேளை விஷயங்கள் நடக்கும். நாம் ஒவ்வொருவரும் கடவுளிடம் வேண்டிக்கொண்டாலும், பல நேரங்களில் சித்தர்கள் வழிதான் ஒரு தீர்வை இறைவன் நமக்கு அருளுகிறான்.
அன்றையதினம் நான் போகர் நாடியை புரட்டிக்கொண்டிருந்தேன். ஒரு தம்பதியர் வந்து வணக்கம் சொல்லி அமர்ந்தனர். அவர்களை கண்டால் அத்தனை வசதி உள்ளவர்கள் போல் தோன்றவில்லை. வறுமையில் வாடுகிற நிலை அவர்கள் முகத்தில் பிரதிபலித்தது.
"என்ன விஷயமாக இங்கு நாடி பார்க்க வந்தீர்கள்?" என்று வினவினேன்.
"அய்யா! எங்களுக்கு 12 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். பிறவியிலேயே அவள் ஒரு ஊமை, காது கேட்க்காது, புத்தி ச்வாதீனமும் இல்லை. நாங்கள் மிகவும் வறுமையில் வாடும் குடும்பம். எங்களுக்கு என்று உதவி செய்ய யாரும் இல்லை. எங்கள் வசதிக்கு உட்பட்ட அனைத்து மருத்துவ சிகிர்ச்சையும் செய்து விட்டோம். எந்த பலனையும் அது தரவில்லை. பணம் செலவாகி நாங்கள் கடனாளியானது மட்டும் தான் மிச்சம். நீங்க நாடி பார்த்து சித்தர்கள் அருளுடன் மருந்து சொல்கிறீர்கள் என்று கேள்விப்பட்டு வந்தோம். எங்கள் மகள் குணமாக ஏதேனும் ஒரு மருந்தை சித்தரிடம் வாங்கித் தரமுடியுமா?" என்று கண்ணீர் மல்க வினவினர்.
அவர்கள் கேட்ட விதம் மிக சரியாக இருந்ததை கண்டு நானே அசந்துவிட்டேன். ஒருவரிடம் சென்று நமக்கென்று ஒரு உதவியை கேட்க்கும் பொது அதை மிகச் சரியாக கேட்கத் தெரியவேண்டும். இவர்களுக்கு படிப்பறிவில்லை என்றாலும், கேட்க்க வேண்டியதை கேட்ட விதம் மிகச் சரியாக இருந்தது என்னை கவர்ந்தது. இவர்களுக்கு கண்டிப்பாக சித்தரிடம் இருந்து பதில் வரும் என்று என் மனம் கூற, போகரின் நாடியை எடுத்து உரிய முறையில் பிரார்த்தித்து வாசிக்க தொடங்கினேன்.
தொடங்கிய வேகத்திலேயே நாடியில் வந்த செய்தி முடிந்து போனது. ஆம்! போகர் பெருமான் ரொம்ப சுருக்கமாக எத்தனை பெரிய விஷயத்தையும் கூறிவிடுபவர். அன்றும் "மூன்று தினங்களுக்குள் உன் மகளை அழைத்துக்கொண்டு கொல்லிமலை செல். அங்கு உன் மகளுக்கு புதிய வாழ்க்கை கிடைக்கும்" என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.
இதை சொல்லி அவர்களை உடனடியாக கொல்லி மலைக்கு பணித்தபின் நானே சற்று யோசித்தேன்.
"இவர்களோ பரம ஏழைகளாக தெரிகிறார்கள். கொல்லி மலைக்கு சென்றால் எங்கு தங்குவார்கள்? யார் இவர்களை அடையாளம் கண்டுகொண்டு மருந்து கொடுப்பார்கள்? இப்படி இவர்களை அலைய விடுவதற்கு பதில் போகர் பெருமானே இவர்களுக்கு மருந்தை கூறி இருந்தால், மிக எளிதாக இருந்திருக்குமே!" என்று என் மனம் நினைத்தது.
"ஹ்ம்ம்! அங்கு போகர் என்ன அதிசயம் நிகழ்த்தப் போகிறாரோ! யாருக்கு தெரியும்? பொறுத்திருந்து பார்ப்போம்! ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்! போகர் "கொல்லிமலைக்குப் போ" என்று கூறியதே ஒரு நல்ல சகுனமாகப் பட்டது. இவர்கள் மகளுக்கு கண்டிப்பாக ஒரு நல்ல வழி பிறக்கும்." எனத் தோன்றியது.
மூன்று மாதங்கள் கழிந்தது. ஒரு செய்தியும் அவர்களிடமிருந்து வரவில்லை. நானும் மற்றவர்களுக்கு நாடி படிப்பதில் நேரத்தை கடத்தியதினால், இவர்கள் விஷயத்தை அப்படியே விட்டுவிட்டேன். திடீரென்று ஒருநாள் அவர்களை பற்றி எண்ணம் வரவே "சரி! என்ன ஆயிற்று என்று போகரிடமே கேட்டுவிடுவோமே" என நினைத்து போகர் நாடியை புரட்டினேன்.
"போகரின் உத்தரவின் படி அந்தப் பெற்றோர்களும், மகளும் கொல்லிமலை ஏறிவிட்டனர். மருத்துவ சிகிர்ச்சை நடந்து கொண்டிருக்கிறது. சிகிர்ச்சை பூரணமானதும் வருவார்கள். அதுவரை பொறுமையாக இரு!" என்று பதில் வந்தது.
"அப்பாடா!" என்று நிம்மதி பெருமூச்சு விட்டேன்.
ஆறு மாதங்கள் கழிந்திருக்கும்.
ஒரு நாள்...........
அந்த தம்பதியர் தங்கள் மகளுடன் வந்தனர். மூவரின் முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவம் ஆடியது. அவர் சொல்ல தொடங்கினார்.
"போகர் சித்தர் சொன்ன படி நாங்கள் கொல்லிமலை அடிவாரம் சென்றடைந்தோம். யாரிடம் என்ன கேட்பது என்று யோசித்துக்கொண்டிருக்கும்போது பிச்சைக்காரன் போன்று தோற்றம் கொண்ட ஒருவர் எங்களிடம் வந்து 'சிவன் கோவிலில் பூசை நடந்து கொண்டிருக்கிறது. அங்கு ஒரு சித்தர் இருக்கிறார். அவர் மனது வைத்தால் உங்கள் பிரச்சினை தீரும். அந்த சித்தர் அருகில் வரும்போது உங்கள் மகளை அவர் பாதத்தில் விழுந்து வேண்டிக்கொள்ள சொல்லுங்கள். உங்கள் மகளின் வியாதிக்கு கண்டிப்பாக ஒரு தீர்வினை உருவாகும்." என்றார்.
அவர் சொன்ன சிவன் கோவிலை தேடி சென்றோம். உள்ளே போய் பார்த்தால், "சித்த புருஷர்கள்" போல தோற்றம் அளிக்கும் நிறைய பேர்கள் இருந்தனர். யார் அவர்களில் அவர் சொன்ன சித்தர் என்பது தெரியவில்லை. என்ன செய்வது என்று திகைத்து நின்றிருந்தோம். அன்று பௌர்ணமி தினம். ஆதலால் பூசையை விமர்சையாக செய்து கொண்டிருந்தனர். பூசை முடியட்டும் என்று பொறுமையாக காத்திருந்தோம். பூசை முடிந்த பின் கூட்டத்தை விலக்கிக்கொண்டு எங்களை பார்த்து உயரமான ஒருவர் வந்தார். அவர் கண்களில் அப்படி ஒரு ஒளி! அவரை கண்டதும் எங்கள் மகள் தானாக முன் வந்து அவர் காலில் விழுந்து நமஸ்காரம் செய்தால். எங்களுக்கே ஆச்சரியமாக இருந்தது. சொல்லும் எதையும் புரிந்துகொள்ள முடியாத நிலையில் இருக்கும் இவளா தானாக நாங்கள் சொல்லாமலே காலில் விழுந்து வணங்குகிறாள் என்று. நாங்களும் அவர் பாதத்தில் விழுந்து வணங்கினோம். நாங்கள் எதையும் சொல்லாமலே அவரே "பூசை முடிந்ததும் உங்கள் மகளுக்கு மருந்து தருகிறேன் என்றார்". சரி சாமி! அப்படியே ஆகட்டும்! நாங்கள் காத்திருக்கிறோம் என்றோம்.
ஆச்சரியம் தாங்க முடியாமல் உடல் முழுவதும் புல்லரிக்க "எங்கள் மகளுக்கு விடிவுகாலம் வந்துவிட்டது" என்று இறைவனுக்கும் அவருக்கும் நன்றி சொல்லி, ஒரு ஓரமாக ஒதுங்கிநின்று அவர்கள் செய்கிற பூசையை பாத்துக்கொண்டிருந்தோம். கடைசிவரை பூசையும் அதன் முறைகளும் அதன் நேர்த்தியும் எங்களை புல்லரிக்க வைத்துக்கொண்டே இருந்தது. உண்மையிலேயே இறைவன் அங்கு வந்து அமர்ந்து அவர்கள் செய்த பூசையை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதை எங்களால் உணர முடிந்தது. அத்தனை நேர்த்தி. எத்தனையோ கோவில்களுக்கு மகளுடன் சென்று பூசையை பார்த்திருக்கிறோம். இது போல் எங்கள் உடல் புல்லரிக்க வைக்கிற ஒரு பூசையை பார்த்ததில்லை
பூசை முடிந்ததும் அவர் ஒரு மூலிகை மருந்தை ஒரு குவளையில் கொண்டு வந்து மகளிடம் தந்து குடிக்க சொன்னார். பின்னர் "நாற்ப்பது நாட்களுக்கு பின் வாருங்கள். அதுவரை ஊருக்கு சென்று சில பத்தியங்களை கடை பிடியுங்கள் என்று கூறி விரிவாக சொன்னார். கண்ணீர் மல்க நன்றி சொல்லி விடை பெற்றோம். நாற்பது நாட்களுக்கு பின் சென்ற பொது அவர அங்கேயே இருக்க மறுபடியும் ஒரு குவளை மருந்தை குடிக்க கொடுத்தார். மறுபடியும் நாற்பது நாட்களுக்குப்பின் பத்தியமாக இருந்த பின் வரச்சொன்னார்.கடந்த ஆறு மாதங்களாக பலமுறை நாற்பது நாளுக்கு ஒரு முறை ஒரு குவளை மருந்தை எங்கள் மகளுக்கு தொடர்ந்து கொடுத்து வந்தார். ஆறு மாதங்களுக்கு பின் ஒருமுறை சென்ற பின் "இத்துடன் மருந்து குடித்தது போதும். உங்கள் மகள் இன்னும் ஒரு மண்டலத்திற்குள் முழுவது சரியாகி விடுவாள். பத்தியங்களை கடை பிடியுங்கள். இனி மேல் வரவேண்டாம். உங்கள் ஊரில் இருக்கும் "வைத்தியநாத சுவாமிக்கு" எல்லாம் சரியானபின் ஒரு முறை அபிஷேகத்துக்கு ஏர்ப்பாடு பண்ணுங்கள். அதுவே நீங்கள் இறைவனுக்கு செய்யும் மரியாதை. எங்களுக்கு எதுவும் வேண்டாம்" என்று கூறி நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கருவறைக்குள் சென்று மறைந்துவிட்டார்."
"நீங்களே என் மகளிடம் பேசி பாருங்கள். எங்கள் மகள் பூரணமாக குனமடைந்துவிட்டாள்" என்று என்னிடம் கூறியபோது என்னால் நடந்ததை நம்பவே முடியவில்லை. அவள் மிக மரியாதையுடன் கை கூப்பி வந்து நமஸ்காரம் செய்தாள். என் கண்களில் கண்ணீர் வந்து விட்டது. அந்த மகளை தூக்கி எழுப்பி "அம்மா! நீ சித்தனால் அருளப்பட்டவள்! என் காலில் விழுந்து நமஸ்காரம் செய்யக்கூடாது. என்று இருகரம் உயர்த்தி ஆசிர்வதித்தேன்."
பின் அவரிடம் "சரி! வந்தது யாராக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?" என்றேன்.
"பழனியில் நவபாஷான முருகரை செய்த போகரை தவிர வேறு யாராக இருக்க முடியும்?" என்றார் மிகத்தெளிவாக. அவரது பதில் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இத்தனை தெளிவாக இருக்கும், கல்வி அறிவில்லாத ஒருவரை அன்றுதான் என் வாழ்க்கையில் முதன் முறையாக சந்திக்கிறேன் என்ற சந்தோஷத்தோடு என் இரு கரங்களையும் நீட்டி அவரிடம் கை குலுக்கினேன்.
இதிலிருந்து ஒரு விஷயத்தை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். வாழ்க்கையே தொலைந்து போகிற எத்தனை பிரச்சனை வந்தாலும் நம்பிக்கையுடன் மிகத்தெளிவாக இருந்தால்.............
அவருக்கு கிடைத்தார் போல் சித்தர் தரிசனம் நமக்கும் கிடைக்கும்.
மிக நேர்த்தியான பூசை பார்க்க, இறைவனை அவர்கள் இடையில் பார்க்க, உணர ஒரு பாக்கியம் கிடைக்கும்.
எல்லாவற்றுக்கும் மேல் நம் பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும்.
சித்தர்களால் அருளைப்பெற்றால் இந்த உலகத்தில் நம்மால் அனுபவிக்க, அடையப் பெறாத ஒன்று என்பதே இருக்காது.
சித்தன் அருள் ................... தொடரும்!