நாடியை மூடி வைத்துவிட்டு, வந்திருந்த இருவரையும் பார்த்தேன். அகத்தியர் சொன்னது அத்தனையும் எனக்குள் ஒரு அதிர்ச்சியை தந்தது. அவனை பற்றி சொன்ன வரை அவன் தவறு எதுவும் செய்யவில்லை என்று என்வரையில் புரிந்தாலும், வசமாக பிரச்சினையில் மட்டிக்கொண்டுவிட்டான் என்று உணர முடிந்தது. அகத்தியர் ஒருவரால் மட்டும் தான் இனி அவனை காப்பாற்ற முடியும்.
"சரி! அவன் என்ன சொல்லி அனுப்பினான், என்ன கேட்டு சொல்லவேண்டும்?" என்றேன்.
வந்தவர்களில் ஒருவர், சுருக்கமாக நடந்ததை சொல்லிவிட்டு,
"சாமி! அன்னதானம் நின்று போனதில் அவனுக்கு மிக வருத்தம். அப்படிப்பட்ட காட்டில் வந்து தரிசனம் செய்கிற பக்தர்கள் யாரும் பசியுடன் திரும்பி போகக்கூடாது என்கிற ஒரே நோக்கத்துடன் மட்டும் தான் அன்ன தானம் செய்து வந்திருக்கிறார்கள். அது மறுபடியும் தொடங்கி நன்றாக நடக்க வேண்டும். அவன் அங்கு இல்லாமல் போனாலும் பரவாயில்லை, ஆனால் அன்னதானம் மட்டும் மீண்டும் தொடங்கி நடக்கவேண்டும். இந்த பிரச்சினைகளுக்கு ஒரு தெளிவான விடை வேண்டும். என்ன செய்ய வேண்டும் என்று கேட்டு வர சொன்னார்".
மறுபடியும் நாடியை படிக்க தொடங்கினேன்.
"சதுரகிரியை பற்றி உங்கள் எல்லோருக்கும் என்ன தெரியும். அங்கு உறையும் பெருமான் எப்படிபட்டவர் என்று தெரியுமா? அது எங்களின் யாக சாலை. நாங்களே அங்கு கால் அடி எடுத்து வைக்க அவரிடம் முன் அனுமதி வாங்கித்தான் செல்வோம். அங்கு உள்ளே கால் வைக்கும் முன்னர் காப்பு கட்டிக்கொண்டுதான் செல்வோம். எங்களுக்கே இப்படி என்றால், உங்களை போன்ற மனிதர்களுக்கு அது மிக மிக முக்கியம். இத்தனை வருடங்களாக ஒருவர் கூட, எந்த ஒரு நேரத்திலும் காப்பு கட்டிக்கொள்ளவில்லை. போகட்டும் என்று அந்த பெருமானார் பொறுத்துக் கொண்டார். அன்ன தானம் செய்தவர்கள், அதற்கு உதவி செய்ய நின்றவர்கள் ஒருவர் கூட இதை புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொண்ட ஒரு சிலரும் இதை நம்பவில்லை. மிக பெரிய அளவிலும் நிறைய தவறுகள் நடந்துள்ளது. "
"அவன் நேர்மையாகத்தான் இருந்தான். இருந்தாலும் அவன் சேர்ந்து இருந்த மனிதர்கள் செய்த தவறினால் இன்று பிரச்சனைக்குள் மாட்டிக்கொண்டிருக்கிறான். இதை தான் சகவாச தோஷம் என்போம். தவறு செய்யவில்லை என்றாலும், தவறு செய்தவர்களுடன் இருந்த தோஷத்தினால் அவனுக்கும் பாதிப்புகள் உண்டு. இன்னும் தொண்ணூறு நாட்களுக்கு அவன் நம் தேசத்துக்குள் எங்கு கால் வைத்தாலும் கைது செய்யப்படுவான். இங்கு எங்கும் வராமல் விலகி இருக்க சொல்.
அன்னதானம் கலியுகத்தில் மிக உன்னதமான பணி. அதையும் எம்பெருமானார் சார்பாக செய்கிறோம் என்றே நினைத்து அப்படியே கூறி வந்ததினாலும், ஒரு முறை கூட நாங்கள்/நான் செய்கிறேன் என்று நினைக்காததினாலும், யாம் அவனுக்கு உதவுவோம். இனி நாம் சொல்வதை செய்யட்டும். உண்மையாக நல்ல மனதுடன் செய்தால் கண்டிப்பாக எல்லா பிரச்சனையும் விலகிப்போகும்.
முதலில் மலை மேல் இருக்கும் ஒரு முருகா கோவிலில், செவ்வாய் கிழமை இரவு "சத்ரு சம்ஹார யாகம்" ஒன்றை செய்ய வேண்டும்.
தினமும் ஐம்பத்து நான்கு முறை முருகனின் காயத்திரி மந்திரத்தை ஜெபித்து வரவேண்டும்.
தினமும் வெளியில் செல்லும் முன் முப்பத்தி ஆறுமுறை "பிரத்தியங்கிரா தேவியின்" மூல மந்திரத்தை சொல்லி வர வேண்டும்.
ஜபத்தை தொடர்ந்தது தொண்ணூறு நாட்களுக்கு ஜெபித்துவர, எதிரிகள் காணாமல் போய் விடுவர். மூன்று அமாவாசைக்கு பின் அன்னதானம் மறுபடியும் தொடங்கி நடந்து வரும்.
அதற்கு பின்னரேனும் தவறுகளை விலக்கி கொள்ள வேண்டும்.
எதற்கும் கவலை வேண்டாம். எல்லாவற்றையும் இந்த அகத்தியன் பார்த்துக்கொள்வான்":
"அவனை தொண்ணூறு நாட்களுக்கு எங்கும் செல்லாமல் இருக்கும் இடத்திலேயே இருக்கச்சொல். காவல்துறையின் விசாரிப்பு வரும். அதற்கு போய் தான் ஆகவேண்டிவரும். உண்மையை சொல்ல சொல். இந்த வழக்கு ஒன்றும் இல்லை என்று ஆகிவிடும். அதை நான் பார்த்துக்கொள்கிறேன். "சத்ரு சம்ஹார யாகம்" செய்ய அவன் சென்றுதான் ஆகவேண்டும். வேண்டிய பாதுகாப்பை யாம் தருவோம். கவலை வேண்டாம் என்று சொல்."
"ஆனால், இன்னும் சில நாட்களுக்கு அவன் மனது வருத்தப்பட்டு தான் ஆகவேண்டும். அவன் நம்பியவர்களே அவனை கை விடுவார்கள். தகாத வார்த்தைகளை பேசுவார்கள். எதற்கும் பதில் சொல்ல கூடாது. பொறுமை அவசியம். அப்படி அமைதியாக இருந்தால், அனைத்தையும் யாம் பார்த்துக்கொள்வோம். விதைத்ததை என்றேனும் அறுவடை செய்துதான் ஆக வேண்டும். பெரிய இழப்புகள் இன்றி அவன் காப்பாற்ற படுவான்."
இந்த செய்திகள் அனைத்தும் அவனுக்கு தெரிவிக்கப்பட்டது.
கேட்டதும் ஒரு நிமிடம் ஆடித்தான் போனான். ஆம். பல காலங்களாக அவன் நம்பி வந்த சில விஷயங்களுக்கு தெளிவான விடையை அகத்தியர் நாடி வழியாக சொல்லி விட்டார். இனிமேல் தான் கண்ணாடி மேல் நடப்பதுபோல் மிக கவனமாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்தான்.
நாடி வாசிக்க சென்ற நண்பரிடமே அவர் ஊரில் ஏதேனும் மலை மேல் முருகர் கோவில் உள்ளதா, இருந்தால் "சத்ரு சம்ஹார யாகம்" நடத்த எவ்வளவு ஆகும் என்று விசாரிக்க சொன்னான்.
நண்பரும், ஒரு கோவிலை கண்டுபிடித்து, விசாரித்து, இருபது முதல் இருபத்தி ஐயாயிரம் ரூபாய் ஆகும் என்று சொன்னதாக தெரிவிக்க, அவன் மனம் தளர்ந்து போனான். அத்தனை பணம் அவனிடம் இல்லை. அன்னதான குழுவில் கேட்கலாம் என்றால், அத்தனை பெறும் இவன் மீது கடுப்பில் இருந்தார்கள். என்ன செய்வது என்று தெரியாமல், தவித்திருக்கும் போது, மலைக்கு வந்து பரிச்சயமான ஒரு பக்தர் ஒருநாள் அவனை தொடர்புகொண்டு,
"என்ன சாமி! இப்படி ஆயிட்டது! இனி என்ன செய்ய போறீங்க" என்று விசாரித்தார்.
நடந்த உண்மைகளை அப்படியே சொல்லி, அகத்தியர் நாடியில் வந்து உரைத்ததையும் சொல்லி, "அவர் யாகம் செய்ய சொல்லி இருக்கிறார், என்னிடம் இப்போது அவ்வளவு வசதி கிடையாது. அது செய்தால் இந்த பிரச்சினைகள் கண்டிப்பாக விலகும் என்று சொன்னார். என்ன செய்வது என்று தெரியவில்லை" என்று கூறினான்.
"இவ்வளவு தானா! நான் கூட்டி கொண்டு போகிறேன். ஏற்பாடு பண்ணுகிறேன். எனக்கு தெரிந்த ஒரு மலை கோவில் இருக்கிறது. அந்த பூசாரியிடம் கேட்டு சொல்கிறேன்" என்றார்.
இரண்டு நாட்கள் சென்று, அவரிடமிருந்து தகவல் வந்தது.
"கோவில் பூசாரியிடம் கேட்டு விட்டேன். அனைத்தையும் நான் ஏற்பாடு பண்ணி தருகிறேன். அனைத்து செலவும் என்னுடையது. நீங்கள் வந்து யாகத்தில் கலந்து கொண்டால் மட்டும் போதும்" என்று பக்தர் சொல்ல, உண்மையில் நெகிழ்ந்து போனான்.
இப்படியும் வசதிகளை அகத்தியர் மறைமுகமாக செய்து கொடுப்பாரா? அவருக்கு மனதார நன்றியை சொல்லிவிட்டு, கிளம்பி செல்வதற்கான ஏற்பாட்டை செய்ய தொடங்கினான்.
அவனறியாமலே அவனை சுற்றி ஒரு பாதுகாப்பு வளையம் உருவாகத் தொடங்கி இருந்தது. திங்கள் கிழமை கிளம்பி செவ்வாய் அன்று காலையில் பக்தரை சந்தித்து, அவருடன் சேர்ந்து ஒரு பரந்த வெளியில் இறங்கி நின்று பார்க்க,
"ஹோ! என்று பெரு மூச்சு விடும் அளவுக்கு, ஒரு மிக பெரிய குன்று தனியாக நின்று கொண்டிருந்தது. அதன் உச்சியில் ஒரு கோவில்."
இவன் எண்ணத்தை புரிந்து கொண்ட பக்தர், "வாருங்கள்! இதுதான் ஒதிமலை, மேலிருந்து அருள் புரிபவன், எம்பெருமான் "ஒதிமலை சுப்பிரமணியர்"" என்று அறிமுகம் செய்து வைத்தார்.
சித்தன் அருள் .................... தொடரும்!
மிக அருமை.அகத்தியரின் அன்பை பெற்ற பின்பு,துன்பத்திற்கு என்ன வேலை.
ReplyDeleteஓதிமலை என்பது அகத்தியரின் பிரதம சீடரான போகர் தவம் செய்த இடங்களில் ஒன்று.
போகர் பற்றிய சூட்சும தகவல்களுக்கு,
ombhogar.blogspot.com
superb information - kappu kattu before going to sathuragiri as told by sage agasthiar is an important information to all the people in this world.
ReplyDeleteDear Sir,
ReplyDeleteIt would be helpful to lot of people who take pilgrimage to Sathuragiri if you can provide the information on what is Kappu kattu and how to do the same. What are the procedures to be followed by kappu kattu etc