​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 16 August 2012

சித்தன் அருள் - 85

தலைவர் விதித்த கட்டுப்பாடுகளை மீறுவதில் அவனுக்கு விருப்பமில்லை.  அவை நிலுவைக்கு வரும் முன்னரே பார்க்க வேண்டிய இடங்களுக்கு சென்று அனுபவங்களை வாங்கி வந்து விட்டதால், அமைதியாக இருப்பதில் ஒன்றும் சரமம் தோன்றவில்லை.  வந்த வேலையை பார்த்து விட்டு இறங்கி செல்ல தொடங்கினான்.  அவனுக்கும் அங்கிருக்கும் சிவ பெருமானுக்கும் இடையில் ஏதோ ஒரு திரை விழுந்து விட்டது போல் தோன்ற, ஒரு நாள் இரவு அனைவரும் உறங்க சென்ற பின் அவர் சன்னதியின் முன் தனிமையில் நின்று மனத்தால் பேசினான்.

"இறைவா! எதற்கு இங்கு வரவழைத்தாயோ, அது நான் இங்கிருந்து போகும் முன் நடக்க வேண்டும்.  பிறருக்கு கொடுக்கும் மதிப்பை, அவர்கள் சொல்லும் சொல்லை அதுவரை தாங்குகிற சக்தியை நீ கொடு.   இன்று முதல், இனி எவர் ஒருவர் சொல்ல தகாத வார்த்தைகளை கூறுகிறார்களோ, அதை கேட்கும் நேரத்தில் உன்னை தான் என் மனதில் நினைப்பேன்.  அவர்கள் சொன்னது உன்னிடம் வந்து சேர்ந்துவிடும்.  உன்னை சொன்னதாக மாறிவிடும்.  நீ பார்த்துக்கொள்.  நான் கேட்பதாக நினைக்க போவதில்லை" என்று சத்தியம் செய்துவிட்டு விலகினான்.

ஆடி அமாவாசை வந்தது.  அந்த மலையில் மக்கள் திரளாக, லட்சம் லட்சமாக கூடும் ஒரு நிகழ்ச்சி. அந்த நேரத்தில் அங்கிருந்தால், நல்ல மனநிலையில் இருப்பவன் கூட பைத்தியக்காரனாக மாறிவிடும் சூழ்நிலை தான் நிலவும்.  வரும் பக்தர்கள் அடிக்கும் கூத்துக்கு ஒரு அளவே இருக்காது.  அந்த நேரத்தில் மலையில் இருப்பதை தவிர்த்து விடலாம் என்று தீர்மானித்தான் அவன். இதை அறிந்த பூசாரி வீடு தேடி வந்து விட்டார்.

"நீங்கள் கண்டிப்பாக ஆடி அமாவாசைக்கு கோவிலுக்கு வரவேண்டும்.  உங்களை பூசாரியாக்கி, அப்பன் சன்னதியின் கட்டுப்பாட்டை உங்கள் கையில் தருகிறேன்.  எனக்கு உதவி செய்ய வேண்டும்" என்றார்.

"இது என்ன புது விளையாட்டு" என்று நீண்ட நேரம் யோசித்தவன், அவர் மேலும் மேலும் வற்புறுத்தவே "சரி" என்று தலையாட்டினான்.  அதிலிருந்து தான் பிரச்சனைகள் பூதாகரமாக வரப்போகிறது என்று அறியாமலே.

ஆடி அமாவாசை நாளும் வந்தது.  தலைவரிடம் "பூசாரியாக நிற்கவா" என்று அனுமதி கேட்க, அவர் "நிற்காதீர்கள் என்று நான் சொல்ல மாட்டேன்.  நில்லுங்கள் என்றும் நான் சொல்ல மாட்டேன்.  உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்யுங்கள்" என்று கூறி நழுவினார்.

அந்த சிவ பெருமானை சித்தர்களும், முனிவர்களும், பிரம்மச்சாரிகளும் தான் தொட்டு பூசை செய்யலாம் என்ற விதி இருந்தது.  ஏன் என்றால், அந்த சுயம்புலிங்கத்தை இறைவன் சித்தர்களிடம் கொடுத்தபோது கண்டிப்பாக கூறியது இது தான்.

"இகபர வாழ்க்கையில் இருப்பவர்கள் என்னை தொட்டு பூசை செய்தால், அவர்கள் மனதை மோக்ஷ பாதைக்கு மாற்றிவிடுவேன்.  ஆகவே மேற் கூறியவர்கள் மட்டும் தான் அந்த லிங்கத்தை பூசை செய்யலாம்".

இருதலை கொள்ளி நடுவே எறும்பின் கதையாக அவன் மனது ஆகிவிட்டது.  என்ன செய்வது என்று தெரியவில்லை.  ஏன் என்றால் அவனுக்கு குடும்பம் இருந்தது.  அவருக்கு பூசை செய்து தொட்டு விட்டால் மனதை மாற்றிவிடுவார்.  குடும்பத்தின் கடமைகளை யார் கவனிப்பது?

சற்று நேரம் பொறுமையாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்து, நேராக இறைவன் சன்னதி முன் சென்று நின்று, மனத்தால் உரைத்தான்.

"உன்னிடம் இருந்து விலகியே இருந்து அருள் பெற வேண்டும் என்ற அவா தான்.  ஆனால் உன் திரு விளயாடல்களுக்கு அளவேது.  குழந்தையிடம் மிட்டாயை காட்டி ஆசை மூட்டுவதுபோல், பூசாரி யோகத்தை காட்டி வளைக்க பார்க்கிறாய்.  சரி! உன்னை நம்பி இதை ஏற்றுக்கொள்கிறேன்.  ஒரு வேண்டுதல்.  குடும்பம் என்று ஒன்று இருக்கிறது.  நீ என்னை என்ன வேண்டுமானாலும் செய்துகொள்.  ஆனால், குடும்பத்துக்கு என் கடமைகளை செய்ய வழி விடு." என்று கூறிவிட்டு உள்ளே சென்று பூசாரி என்கிற பதவியில் நின்றான்.

எங்கும் எல்லா கோவில்களிலும் இருக்கிற தகிடுதத்தம் அங்கும் இருந்தது.  பூசாரியின் உறவினர்களே, பூசாரிக்கு தெரிந்தவர்களே, பூசாரிக்கு தட்டில் விழும் பணத்தை கொள்ளை அடிப்பதை அறிந்து, அனைவரையும் வெளியே போக சொன்னான்.

"நேர்மையாக இருப்பவர்கள் மட்டும் இருக்கலாம்.  அல்லாதவர்கள் வெளியே சென்று விடுங்கள்.  தட்டில் விழும் அத்தனை பணமும் என் கட்டுப்பாட்டில் இருக்கும்.  யாரும் கை போடக்கூடாது.  அது பூசாரிக்கு சென்று சேர வேண்டும்" என்று கடுமையாக கட்டுப்பாட்டை விதித்தான்.

மற்றவர்களோ, "ஹும்! இவன் எவாளவு நேரம் நிற்கிறான் என்று பார்ப்போம்.  சற்று நேரம் ஓய்வெடுக்க போய் தானே ஆகவேண்டும், அப்பொழுது பார்த்துக்கொள்ளலாம்" என்று பேசினர்.

இதை கேட்ட அவன், "அப்பனே! எனக்கு அசதி வரகூடாது! ஓய்வு, உறக்கம், உணவு எதுவுமே தேவைபடகூடாது.  நீ என்ன செய்வாயோ தெரியாது.  நான் இங்கிருந்து போகக்கூடாது.  பார்த்துக்கொள்" என்று சொல்லிவிட்டு தன் வேலையை கவனித்தான்.

அவனுக்குள் நிறையவே மாற்றங்கள் வந்தது.  அசதி அவனை அண்டவே இல்லை.  சொன்னவர்கள் தான் அங்கிருந்து குறுகிய நேரத்தில் அசதியுடன் விலகி போக வேண்டி வந்தது.  ஒன்றரை நாட்கள் பூசாரியாக தொடர்ந்து நிற்க வேண்டி வந்தது.

அன்று முதல் ஜாமம். மணி அதிகாலை இரண்டு முப்பது.  என்னவோ தோன்றவே, நேராக சிவ பெருமான் அமர்ந்திருக்கும் மேடையில் ஏறி அமர்ந்து, அவருக்கு பூசை செய்தான்.  மிக சந்தோஷமாக இருந்தது.  மங்கள ஆரத்தி காட்டி மற்றவர்களுக்கு அதை காண்பிக்க, கையில் ருத்ராட்ச்ச மாலையுடன் ஒரு கரம், சூட தட்டை நோக்கி நீண்டது.  இது என்ன வித்யாசமாக இருக்கிறதே என்று நிமிர்ந்து பார்க்க, அன்று அவனை சந்தித்து பேசிய பெரியவர், கற்பூர ஆரத்தியை எடுத்துக்கொண்டபின், அர்த்த புஷ்டியுடன் சிரித்து தலையாட்டி விட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

"அவன அருள் இருந்தால் நாம் என்றேனும் சந்திக்கலாம்" என்று கடைசியாக கூறி சென்றது அவன் மனதுக்குள் எதிரொலித்தது.

எதற்கோ ஒரு தொடக்கம் இன்று ஆரம்பமாக போகிறது என்று அவன் உணரவும், கூட்டத்தில் யாரோ "எல்லாம் நடக்கும்.  பொறுமையாக வேடிக்கை பார்" என்று இன்னொருவரிடம் கூறியது அவன் காதில் விழுந்தது.  அதை தான் நிமித்தம் என்பார் போலும்.

பக்கத்து சன்னதியில் பூசாரியாக நின்ற ஒருவர் ஏதோ தனக்கு எல்லாம் தெரியும் என்கிற வேகத்தில் மிக கோபத்துடன் இவன் முன் வந்து நின்று "யார்யா உனக்கு அப்பனுக்கு சமமா உட்கார அனுமதி கொடுத்தது?  நாங்களே உட்காரமாட்டோம்.  எங்களை ஒரு வழி பண்ணிவிடுவான்.  முதலில் கீழ இறங்குயா" என்று எல்லோரும் கேட்க சத்தம் போட்டார்.

சரேலென அப்பனை திரும்பி பார்த்தவன் "எல்லாம் உனக்கே" என்று மனதில் கூறிவிட்டு "போய் உன் வேலைய பார்.  என்ன தண்டனை வேணும்னாலும் அப்பன் எனக்கு தரட்டும்.  இங்கு நான் தான் இன்று பூசாரி.  இது எனக்கும் அப்பனுக்கும் உள்ள உடன்பாடு.  நீ யார் அதை கேட்க.  உனக்கு ஏதாவது பிரச்சனையை இருந்தா முதல் பூசாரியிடம் போய் சொல்லு.  இங்கு என் இஷ்டப்படி தான் நான் இருப்பேன்.  யாரும் எனக்கு உபதேசம் செய்ய வர வேண்டாம்" என்று சற்று கடுமையாகவே பேசினான்.  அதை பேசும் போது அவன் தன் நிலையில் இல்லை என்பதையும் உணர்ந்தான்.  அத்தனையும் அப்பெருமானின் வார்த்தைகள் போல் தான் அவனுக்கு தோன்றியது.

சத்தம் போட்ட அவன் மறுநாளே காணாமல் போய் பின்னர் இவன் இருக்கும் வரை மலை ஏறவே இல்லை என்பது வேறு கதை.

இறங்கி போன அவனும், பங்கில் கை வைக்க முடியாத பூசாரியின் உறவினர்களும், மேல் பூசாரியிடம் அவனது கட்டுப்பாடான நிலையை, சமமாக அமர்ந்ததை, சன்னதியில் நின்று சந்தனம் விற்றான் என்று போய் சொன்னதை பூசாரி நம்பி "இந்த முறை போகட்டும்! அடுத்தமுறை முதல் வேறு ஒருவரை நிறுத்திக்கொள்ளலாம்" என்று தீர்மானித்து, அவனை விலக்கினார்.  பூசாரி உண்மை எது என்று விசாரிக்காமல் மரியாதை குறைவாக நடத்தியது அவனை பாதித்தது.  உண்மை தான் கண்டிப்பாக இருந்தால், எல்லா இடத்திலும் கேட்ட பெயர் வாங்க வேண்டிவரும் என்பது அவனுக்கு உரைத்தது.  நடந்த நிகழ்ச்சிகளை விசாரித்து உண்மையை பூசாரியிடம் உரைக்க வேண்டிய தலைவரே அவன் காலை வாரினார்.  அவர் இதை கண்டு கொள்ளவே இல்லை.

"சரி! நமக்கு கொடுத்த வேலையை எம்பெருமான் மனம் குளிரும் அளவுக்கு செய்தாகிவிட்டது.  அவர் நான் நேர்மையாக இருந்ததை புரிந்து கொண்டிருப்பார்.  அது போறும்" என்று நினைத்து பழயபடி கொடுத்த வேலையை மட்டும் செய்து வரலானான்.

வளர்ச்சி பணிகளில் மும்முரம் காட்ட, இவர்கள் கைவைத்த அன்னதானம் முதல் எல்லாம் வெகு வேகமாக வளர்ந்தது.

மற்ற  குழுக்கள் ஒன்று சேர்ந்து பின்னணியில் மிகப்பெரிய திட்டம் தீட்டினர்.  கீழ் கோவில், மேல் கோவிலில் அன்னதானம் செய்யும் அனைவரும் ஒன்று சேர்ந்து இவர்களின் "வலை பூவின்" பக்கங்களை எடுத்து தங்களுக்கு சாதகமாக மாற்றி அச்சடித்து, கோவில் அதிகாரிகளிடம்

"இவர்கள் கோடிகணக்கில் பணம் புரட்டி சுருட்டி விட்டார்கள், அதை விசாரிக்க வேண்டும்" என்று குற்றம் சுமத்தினர்.  காத்திருந்த அதிகாரிகளும் இது தான் சமயம் என்று தீர்மானித்து அந்த குற்றச்சாட்டை போலீசிடம் விசாரிக்க ஒப்படைத்துவிட்டு, "இனி நாங்கள் தீர்மானிக்கும் வரை யாரும் அன்னதானம் செய்யவோ, வளர்ச்சி பணிகளை செய்யவோ கூடாது" என்று ஆர்டர் போட்டு அனைவரையும் இறங்கி போக சொன்னார்கள்.  அனைத்தும் நின்று போனது.

குற்றச்சாட்டை எழுதி கை எழுத்து போட்டு கொடுத்தது, ஒரு அன்னதானக்குழுவை தலைமை வகித்து நடத்தி கொண்டு வந்த ஒரு பெண்மணி.  பெண்மணியாக இருந்தும் இத்தனை சிறப்பாக இந்த நடுகாட்டில் அன்ன தானம் செய்கிறார்களே என்று அவன் பெருமையாக நினைத்து வந்தான்.  ஒரு போதும் மற்றவர்கள் நடத்திய அன்னதானத்தை குறை கூறியது இல்லை.  குறை இல்லாத மனிதர் யார்?  என்னவோ அவனுக்குள் எப்போதும் ஒரு உணர்வு.

"கண்டிப்பாக பெரியவர்கள், இங்கு நடக்கும் அத்தனை நிகழ்ச்சிகளையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.  அதனால், எதையும் குறை கூற கூடாது" என்ற திட வைராக்கியம் அவனுக்குள் இருந்தது.  இது உண்மை என்று பின்னர் தெளிவாயிற்று.

அந்தப் பெண்மணி, ஒரு காரணமும் கண்டு பிடிக்க முடியாத படி, குற்றம் சாட்டி எழுதி கொடுத்த மறுநாளே, இறந்து போனார்.

இவன் நேரம், சரி இல்லை போல்.  வாய்ப்புக்காக காத்திருந்தவர்கள் அனைவரும் ஒரே குரலில் 

"பார்த்தீர்களா.  நாங்கள் அன்றே சொன்னோம். அவன் ஒரு பெரிய மந்திரவாதி என்று.  யாரும் நம்பவே இல்லை.  இப்போது பாருங்கள், குற்றம் சாட்டிய மறுநாளே அவங்க செத்து போய்ட்டாங்க.  எல்லாம் அவன் செய்கிற மந்திர வாதம் தான் காரணம்.  அந்தாள் இனி மலை ஏறி வந்தா உயிரோட திரும்பி போக மாட்டான்" என்று செய்தி பரப்பினர்.

இந்த செய்தி அவனுக்கு பேரிடியாக இறங்கியது. 

இனி மலைக்கு செல்வது நல்லது இல்லை என்று தீர்மானித்து "இறைவா! இனி நீ அழைத்ததாக நான் உணர்ந்தால் மட்டும் தான் மலை ஏறுவேன்.  இனி எந்த மனிதர்கள் அழைத்தாலும் வரமாட்டேன்.  எப்போது என்று நீர் தீர்மானித்துக்கொள்" என்று கூறி மலையை மறக்க தொடங்கினான்.

போலீஸ் குற்றச்சாட்டை வைத்துக்கொண்டு விசாரணையை தொடங்கியது!

சித்தன் அருள்.......... தொடரும்!

9 comments:

  1. தாங்கள் அற்புதமாக சதுரகிரியை பற்றி கூறுகிறீர்கள் என்பது தெரிகிறது. தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும். அன்புடன் - சிவஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. நாடியில் வந்ததைதான் இங்கு உரைக்கிறேன். அதற்கு மேல் என்னிடம் விஷயங்கள் இல்லை. எப்படி தெளிவு படுத்த?

      Delete
  2. Eagerly Waiting for Next Thursday....
    Om Agathiyeswaraya Namaha..
    Sairamchellappan

    ReplyDelete
  3. அகத்திய பெருமான் தான், துருவ நட்சத்திரமாய் உள்ளார் என்கிறார்கள். தங்கள் கருத்து என்ன? இதை பற்றி அந்த நாடி ஜோதிட பெரியவர் எங்கேயாவது கூறி உள்ளாரா? நன்றி.

    ReplyDelete
  4. agathiyaperuman aasi anaivarukkum kidaikkattum - om akatheesaaya namaha - anbudan agathiyar dasan aranthanki sankar

    ReplyDelete
  5. tamil mozhiyil eppadi type seivathu? I want to type in tamil . cxan you put tamil type pad? -aranthanki sankar

    ReplyDelete
    Replies
    1. Dear Bro.

      Please install "Epic" Internet browser in your computer then you can select Tamil and type easily.

      http://www.epicbrowser.com/

      Delete
  6. Go to http://www.google.com/transliterate and choose tamil font.
    Start typing what you think in tamil, in english, it will convert automatically. Its very simple.

    ReplyDelete