​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 30 August 2012

சித்தன் அருள் - 87


அந்த மலை சுமார் மூவாயிரம் அடிக்கும் மேல் இருக்கும்.  பக்கத்தில் கண்ணுக்கெட்டிய தூரத்தில் எங்கும் ஒரு வீடோ, மனிதர் வசிக்கும் இடமோ இல்லை.  எங்கும் விளை நிலங்கள்.  எல்லா மறைவிலிருந்தும் விலகி தனித்து நின்றது.  அடிவாரத்தில் ஒரு சிறிய விநாயகர் சந்நிதி.  அவருக்கு பின்னால் இருந்து மேல் நோக்கி செல்லும் படிகள், சுமார் ஒரு ஆயிரத்து எண்ணூறு இருக்கும். மலையின் உடலெங்கும் முள் செடிகளும், மூலிகை செடிகளும் இன்னும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத சிறிய மரங்களும்.  அமைதியாக சிறிது தூரம் நடந்தவுடன் களைப்பு மேலிட ஒரு இடத்தில் அமர்ந்து எங்கிருந்தோ வரும் காற்றும் அதில் கலந்து வந்த மலையின் பச்சை இலை வாசனையும் உடலுக்குள் புகுந்து புது தெம்பை கொடுக்க, அதுவரை அமைதியாக இருந்த பக்தர் அந்த மலையை பற்றி விளக்கினார்.

இந்த மலை போகர் சித்தருக்கு சொந்தமானது.  அவர் பல காலங்களாக இங்கு தங்கி இருந்து இங்கு உறையும் இறைவனை பூசித்து வந்தார்.  இங்கு இருக்கும் போது தான் இறைவன் உத்தரவால் பழனி மலையில் நவ பாஷாண முருகர் விக்ரகம் செய்ய கிளம்பினார்.  அதற்கு முன் இந்த மலையின் நான்கு திசைகளிலும் யாகம் வளர்த்து பூசை செய்தார்.  அதோ ஒரு ஐந்து பனை மரங்கள் சேர்ந்தால் போல் தெரிகிறதே,  அந்த பூமி தான் ஈசான மூலையில் யாகம் வளர்த்த இடம்.  பாருங்கள், அந்த பூமி பக்கத்தில் இருக்கும் மற்ற நிலங்களை விட சற்று வெளுப்பாக இருக்கும்.  இன்றும் அந்த பூமியை விவசாயத்துக்கு உபயோகிப்பதில்லை.  அந்த பூமியில் எங்கு தோண்டினாலும் உள்ளிருந்து மண் சாம்பல் நிறத்தில் வெளி வரும்.  அது யாக சிஷ்டம் என்கின்றனர்.  அரு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.  அந்த இடத்தை "பூதிக்காடு"  என்று அழைக்கின்றனர்.  கீழே இறங்கி செல்லும் போது நாம் அங்கு செல்லலாம்.

போகர் பூசை செய்த காலங்களில், இங்கு உறையும் பெருமானுக்கு பன்னிரண்டு கரங்களும், ஆறு முகமும் இருந்ததாக தகவல்.  இங்கிருந்து இறங்கி சென்ற சித்தருக்கு சற்று தூரம் சென்றதும், பழனி செல்லும் வழி தெரியாமல் தடுமாறவே, இறைவனை கூப்பிட்டாராம்.  இறைவனும், ஒரு முகம், நான்கு கரங்களுடன் இறங்கி வந்து ஒரு எல்லை வரை சென்று வழி காட்டிவிட்டு, "இதற்கு மேல் நான் வர முடியாது, இனிமேல் நீ விசாரித்து சென்று விடு" என்று கூறி அங்கேயே தங்கி விட்டாராம். அதனால், அந்த இடத்தில் உறையும் இறைவன் நான்கு கரங்களும், ஒரு முகமும் கொண்டு அருள் பாலிக்கிறார்.  அந்த இடம் "வேலாயுதம் பாளையம்" என்று தற்போது அழைக்கப்படுகிறது.  வழி தெரியாமல் தடுமாறும் அனைவருக்கும், வழி காட்டும் இறையாக அங்கு குடிகொண்டுள்ளார்.

இங்கு மலை மேல் மீதும் உள்ள ஐந்து முகம், எட்டு கரங்களுடன் அபயம் என்று வருபவர்களை காத்து அருள் புரிந்து, வழி காட்டுகிறார்.  இந்த கோவிலில் ஒரு வித்யாசமான முறை ஒன்று கடை பிடிக்க படுகிறது.  இங்கு உறையும் இறைவனுக்கு அபிஷேக,  ஆராதனை, நிவேதனம், கற்பூர ஆரத்தி எடுத்த பின், பூசாரி "யாருக்காவது உத்தரவு கேட்க வேண்டுமா" என்று கேட்பார்.  அனேகமாக வந்தவர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக அவர் முன் மண்டியிட்டு அமர்ந்து உத்தரவு கேட்பார்கள். அவரவர் செய்த கர்மா வினைபடியும், நேரப்படியும், கேட்கப்படும் விஷயத்தின் தன்மையை பொருத்தும் முருகர் உத்தரவு கொடுப்பார்.  நீங்களே அதை பார்க்கலாம்.  நேரம் வரும்போது சொல்கிறேன்.  போய் அமருங்கள்.  உங்களுக்கு என்ன கேட்கவேண்டுமோ கேளுங்கள். என்ன பதில் சொல்கிறார் என்று பார்ப்போம்", என்று சற்று அர்த்த புஷ்டியுடன் சொன்னார்.

மனம் பிரச்சினைகளில் தவித்துக்கொண்டு எங்கெல்லாமோ அலைந்து கொண்டிருந்ததால் அத்தனை தகவலையும் உள் வாங்கி "சரி! நேரம் வரட்டும்! பார்க்கலாம்" என்று அமைதியானான்.

யாகத்துக்கான சாமான்களை தலையில் சுமந்து கொண்டு நான்கு பேர் மலை ஏறி சென்றனர்.  போகும் வழயில் பக்தரிடம் "வணக்கம்" சொல்லி சிறிது நேரம் பேசிவிட்டு அதில் இருந்த ஒருவர் மட்டும் தள்ளி அமர்ந்திருந்த அவனை பார்த்து "வணக்கம் சாமி!" என்று சொன்னார்.  "யார் என்றே தெரியாது! நமக்கு ஏன் வணக்கம் சொல்கிறார்" என்று யோசித்து, மரியாதை நிமித்தமாக "வணக்கம் ஐயா!" என்று பதிலுரைத்தான்.

அவர்கள் சென்ற பின் பக்தர் "உங்களுக்கு வணக்கம் சொன்னாரே, அவரை யார் என்று நினைத்தீர்கள்? பார்க்க கூலி வேலை செய்வதாகத்தான் தோன்றும்! இங்கு உறையும் இறைவனின் அடியார்.  பல முறை அந்த இறைவனை பாலகனாக இந்த படிகளில் அமர்ந்திருக்க பார்த்துள்ளார்.  நடு இரவில், அதிகாலை பூசைக்கு சாமான்களை கொண்டு ஏறும் போது "முருகா காப்பாற்று" என்ற ஒரு வேண்டுதலை வைத்துவிட்டு ஏறுகிற நாட்களில், ஒரு பத்து வயது பையன் ரூபத்தில் இந்த படிகள் ஏதேனும் ஒன்றில் அமர்ந்து இருந்து கடக்கும் போது "நிதானமா பார்த்து போ" என்று குரல் கொடுப்பான்.  இதை பல முறை அனுபவித்துள்ளவர் அவர்.  அவனை பார்ப்பதற்கென்றே யார் நடு நிசியில் கூப்பிட்டு மலை மேல் சாமான்களை ஏற்றவேண்டும் என்றாலும், எத்தனை அசதியிலும் ஓடி வருபவர்.  இன்னும் எத்தனையோ அதிசயங்கள் இங்கு உண்டு.  போக போக புரியும்.  வாருங்கள் மலை ஏறலாம்" என்று சொல்லி அழைத்துக்கொண்டு நடந்தார்.

பாதி தூரத்தில் ஒரு பிள்ளையார் சன்னதி.  வெளியே வெயில் கொளுத்தினாலும், அவர் சன்னதியில் நல்ல குளிர்ச்சி.  ஒரே ஆச்சரியம்.  அந்த மலையில் காலடி எடுத்து வைத்த பின் முதன் முறையாக அந்த பிள்ளையாரிடம் "இறைவா! அனைத்து விக்னங்களையும் விலக்கி எல்லாம் சுபமாக முடிய உன் அருள் வேண்டும்" என்று பொதுவாக வேண்டிக்கொண்டான்.  பார்த்துக்கொண்டிருந்த பக்தர், வெளியே வந்ததும், அந்த சன்னதிக்கு பக்கத்தில் கீழ் நோக்கி ஓடி செல்லும் ஒரு ஒற்றை அடிப்பாதையை காட்டி, "இது போகர் குகைக்கு செல்லும் வழி, மனதுக்குள் வைத்துக்கொள்ளுங்கள்.  பின்னர் போய் பார்க்கலாம்"  என்று கூறி செங்குத்தான மலை படிகளில் ஏறத்தொடங்கினார்.

இத்தனை நேரம் நடந்த நிகழ்ச்சிகளை, தெரிவிக்கப்பட்ட விஷயங்களை மனதுள் அசை போட, இந்த மலையில் அதிசயமான நிறைய விஷயங்கள் இருக்கும் போலிருக்கே என்று அவன் மனம் ஆராய்ச்சியில் இறங்கியது.  "போதும், ஆராய்ச்சியில் இறங்கி ஒரு முறை பிரச்சினையில் மாட்டிகொண்டது போதும்" என்று மனது சொல்லியதினால், உடனே அந்த எண்ணத்தை விலக்கினான்.

மலை உச்சியை அடைந்த போது அவனுக்குள் மிச்சம் இருந்த சக்தியும் வற்றி விட்டது.  கோவில் வளாகத்துக்குள் சென்று கை கால் கழுவி சுத்தம் செய்துகொண்டு சன்னதியின் முன் சென்று நின்றவனுக்கு ஆனந்த அதிர்ச்சி.  உலகத்தில் உள்ள மொத்த அழகையும் எடுத்து தன்னுள் அணிந்து கொண்டு சிரித்த முகத்துடன், அபய கரத்துடன் "வா பக்தனே" என்று வரவேற்பதுபோல் நின்று கொண்டிருந்தார், அங்கு உறையும் எம்பெருமானார் சுப்பிரமணியர்.  அபிஷேகம் முடிந்து, செய்திருந்த அலங்காரம் அவர் அழகை மேலும் மெருகூட்டியது.  அதில் பூசாரியின் கை வண்ணம் தெரிந்தது.

(ஒதிமலை சுப்பிரமணியர்) (நன்றி திரு வேல்முருகன் என்கிற அடியவருக்கு)

உள் சென்று, சாஷ்டாங்கமாக இறையின் கால்களில் விழுந்து நமஸ்காரம் செய்ய, பக்தர், பூசாரியிடம் அவனை காட்டி "இவர் தான் யாகம் செய்ய ஏற்பாடு செய்ய சொன்னார்.  பூசையை முடித்துவிட்டு நாம் அதை பற்றி பேசலாம்.  எல்லா ஏற்பாடும் செய்தாகிவிட்டதா?" என்றார்.

அந்த பூசாரி பொதுவாகவே ரொம்ப அமைதியானவர்.  இவனை பார்த்து வணக்கம் சொல்லிவிட்டு, "எல்லாம் வந்து விட்டது.  அபிஷேகத்துக்கான பால் மட்டும் இரவில் வரும்.  நாம் எல்லாரும் சேர்ந்து அமர்ந்து, மற்ற ஏற்பாடுகளை கவனிக்க வேண்டும்" என்றார்.

"முதலில் ஹோம குண்டத்தை தயார் பண்ணுங்கள்" என்று பக்தரிடம் சொல்ல, அவர் இவனை அழைத்து சென்று, அங்கு குவித்து வைக்கபட்டிருந்த கற்களை எடுத்து இவன் கையில் கொடுத்து "அதோ அங்கே பசுஞ்சாணம் தெளித்து இருக்கும் இடத்தில், உங்கள் கையால் வையுங்கள்" என்று கூறி கொடுத்தார்.

அதை வாங்கியவன் "இந்த முதற் கல் நல்ல தடுப்புக்கும், கவசத்துக்கும் தொடக்கமாக இருக்கட்டும்" என்று பிரார்த்தித்துவிட்டு  இறைவன் நேர் பார்வை படும் இடத்தில் கொண்டு வைத்தான், யாகம் ஓதிமலையப்பர் மேற்பார்வையில் நடக்க போகிறதென்று அறியாமலே.

சித்தன் அருள் ....................... தொடரும்!

Thursday, 23 August 2012

சித்தன் அருள் - 86!


நாடியை மூடி வைத்துவிட்டு, வந்திருந்த இருவரையும் பார்த்தேன்.  அகத்தியர் சொன்னது அத்தனையும் எனக்குள் ஒரு அதிர்ச்சியை தந்தது.  அவனை பற்றி சொன்ன வரை அவன் தவறு எதுவும் செய்யவில்லை என்று என்வரையில் புரிந்தாலும், வசமாக பிரச்சினையில் மட்டிக்கொண்டுவிட்டான் என்று உணர முடிந்தது.  அகத்தியர் ஒருவரால் மட்டும் தான் இனி அவனை காப்பாற்ற முடியும். 

"சரி! அவன் என்ன சொல்லி அனுப்பினான், என்ன கேட்டு சொல்லவேண்டும்?" என்றேன்.

வந்தவர்களில் ஒருவர், சுருக்கமாக நடந்ததை சொல்லிவிட்டு,

"சாமி! அன்னதானம் நின்று போனதில் அவனுக்கு மிக வருத்தம்.  அப்படிப்பட்ட காட்டில் வந்து தரிசனம் செய்கிற பக்தர்கள் யாரும் பசியுடன் திரும்பி போகக்கூடாது என்கிற ஒரே நோக்கத்துடன் மட்டும் தான் அன்ன தானம் செய்து வந்திருக்கிறார்கள்.  அது மறுபடியும் தொடங்கி நன்றாக நடக்க வேண்டும்.  அவன் அங்கு இல்லாமல் போனாலும் பரவாயில்லை, ஆனால் அன்னதானம் மட்டும் மீண்டும் தொடங்கி நடக்கவேண்டும்.  இந்த பிரச்சினைகளுக்கு ஒரு தெளிவான விடை வேண்டும். என்ன செய்ய வேண்டும் என்று கேட்டு வர சொன்னார்".

மறுபடியும் நாடியை படிக்க தொடங்கினேன்.

"சதுரகிரியை பற்றி உங்கள் எல்லோருக்கும் என்ன தெரியும்.  அங்கு உறையும் பெருமான் எப்படிபட்டவர் என்று தெரியுமா?  அது எங்களின் யாக சாலை.  நாங்களே அங்கு கால் அடி எடுத்து வைக்க அவரிடம் முன் அனுமதி வாங்கித்தான் செல்வோம்.  அங்கு உள்ளே கால் வைக்கும் முன்னர் காப்பு கட்டிக்கொண்டுதான் செல்வோம்.  எங்களுக்கே இப்படி என்றால், உங்களை போன்ற மனிதர்களுக்கு அது மிக மிக முக்கியம்.  இத்தனை வருடங்களாக ஒருவர் கூட, எந்த ஒரு நேரத்திலும் காப்பு கட்டிக்கொள்ளவில்லை.  போகட்டும் என்று அந்த பெருமானார் பொறுத்துக் கொண்டார். அன்ன தானம் செய்தவர்கள், அதற்கு உதவி செய்ய நின்றவர்கள்  ஒருவர் கூட இதை புரிந்து கொள்ளவில்லை.  புரிந்து கொண்ட ஒரு சிலரும் இதை நம்பவில்லை.  மிக பெரிய அளவிலும் நிறைய தவறுகள் நடந்துள்ளது. "

"அவன் நேர்மையாகத்தான் இருந்தான்.  இருந்தாலும் அவன் சேர்ந்து இருந்த மனிதர்கள் செய்த தவறினால் இன்று பிரச்சனைக்குள் மாட்டிக்கொண்டிருக்கிறான்.  இதை தான் சகவாச தோஷம் என்போம்.  தவறு செய்யவில்லை என்றாலும், தவறு செய்தவர்களுடன் இருந்த தோஷத்தினால் அவனுக்கும் பாதிப்புகள் உண்டு.  இன்னும் தொண்ணூறு நாட்களுக்கு அவன் நம் தேசத்துக்குள் எங்கு கால் வைத்தாலும் கைது செய்யப்படுவான்.  இங்கு எங்கும் வராமல் விலகி இருக்க சொல். 

அன்னதானம் கலியுகத்தில் மிக உன்னதமான பணி.  அதையும் எம்பெருமானார் சார்பாக செய்கிறோம் என்றே நினைத்து அப்படியே கூறி வந்ததினாலும், ஒரு முறை கூட நாங்கள்/நான் செய்கிறேன் என்று நினைக்காததினாலும், யாம் அவனுக்கு உதவுவோம். இனி நாம் சொல்வதை செய்யட்டும்.  உண்மையாக நல்ல மனதுடன் செய்தால் கண்டிப்பாக எல்லா பிரச்சனையும் விலகிப்போகும்.

முதலில் மலை மேல் இருக்கும் ஒரு முருகா கோவிலில், செவ்வாய் கிழமை இரவு "சத்ரு சம்ஹார யாகம்" ஒன்றை செய்ய வேண்டும். 

தினமும் ஐம்பத்து நான்கு முறை முருகனின் காயத்திரி மந்திரத்தை ஜெபித்து வரவேண்டும்.

தினமும் வெளியில் செல்லும் முன் முப்பத்தி ஆறுமுறை "பிரத்தியங்கிரா தேவியின்" மூல மந்திரத்தை சொல்லி வர வேண்டும்.

ஜபத்தை தொடர்ந்தது தொண்ணூறு நாட்களுக்கு ஜெபித்துவர, எதிரிகள் காணாமல் போய் விடுவர். மூன்று அமாவாசைக்கு பின் அன்னதானம் மறுபடியும் தொடங்கி நடந்து வரும்.

அதற்கு பின்னரேனும் தவறுகளை விலக்கி கொள்ள வேண்டும்.

எதற்கும் கவலை வேண்டாம்.  எல்லாவற்றையும் இந்த அகத்தியன் பார்த்துக்கொள்வான்":

"அவனை தொண்ணூறு நாட்களுக்கு எங்கும் செல்லாமல் இருக்கும் இடத்திலேயே இருக்கச்சொல். காவல்துறையின் விசாரிப்பு வரும்.  அதற்கு போய் தான் ஆகவேண்டிவரும்.  உண்மையை சொல்ல சொல்.  இந்த வழக்கு ஒன்றும் இல்லை என்று ஆகிவிடும்.  அதை நான் பார்த்துக்கொள்கிறேன்.  "சத்ரு சம்ஹார யாகம்" செய்ய அவன் சென்றுதான் ஆகவேண்டும்.  வேண்டிய பாதுகாப்பை யாம் தருவோம். கவலை வேண்டாம் என்று சொல்."

"ஆனால், இன்னும் சில நாட்களுக்கு அவன் மனது வருத்தப்பட்டு தான் ஆகவேண்டும்.  அவன் நம்பியவர்களே அவனை கை விடுவார்கள்.  தகாத வார்த்தைகளை பேசுவார்கள்.  எதற்கும் பதில் சொல்ல கூடாது.  பொறுமை அவசியம்.  அப்படி அமைதியாக இருந்தால், அனைத்தையும் யாம் பார்த்துக்கொள்வோம்.  விதைத்ததை என்றேனும் அறுவடை செய்துதான் ஆக வேண்டும்.  பெரிய இழப்புகள் இன்றி அவன் காப்பாற்ற படுவான்."

இந்த செய்திகள் அனைத்தும் அவனுக்கு தெரிவிக்கப்பட்டது.

கேட்டதும் ஒரு நிமிடம் ஆடித்தான் போனான்.  ஆம்.  பல காலங்களாக அவன் நம்பி வந்த சில விஷயங்களுக்கு தெளிவான விடையை அகத்தியர் நாடி வழியாக சொல்லி விட்டார். இனிமேல் தான் கண்ணாடி மேல் நடப்பதுபோல் மிக கவனமாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்தான்.

நாடி வாசிக்க சென்ற நண்பரிடமே அவர் ஊரில் ஏதேனும் மலை மேல் முருகர் கோவில் உள்ளதா, இருந்தால் "சத்ரு சம்ஹார யாகம்" நடத்த எவ்வளவு ஆகும் என்று விசாரிக்க சொன்னான்.

நண்பரும், ஒரு கோவிலை கண்டுபிடித்து, விசாரித்து, இருபது முதல் இருபத்தி ஐயாயிரம் ரூபாய் ஆகும் என்று சொன்னதாக தெரிவிக்க, அவன் மனம் தளர்ந்து போனான்.  அத்தனை பணம் அவனிடம் இல்லை.  அன்னதான குழுவில் கேட்கலாம் என்றால், அத்தனை பெறும் இவன் மீது கடுப்பில் இருந்தார்கள். என்ன செய்வது என்று தெரியாமல், தவித்திருக்கும் போது, மலைக்கு வந்து பரிச்சயமான ஒரு பக்தர் ஒருநாள் அவனை தொடர்புகொண்டு,

"என்ன சாமி! இப்படி ஆயிட்டது! இனி என்ன செய்ய போறீங்க" என்று  விசாரித்தார்.

நடந்த உண்மைகளை அப்படியே சொல்லி, அகத்தியர் நாடியில் வந்து உரைத்ததையும் சொல்லி, "அவர் யாகம் செய்ய சொல்லி இருக்கிறார், என்னிடம் இப்போது அவ்வளவு வசதி கிடையாது. அது செய்தால் இந்த பிரச்சினைகள் கண்டிப்பாக விலகும் என்று சொன்னார்.  என்ன செய்வது என்று தெரியவில்லை" என்று கூறினான்.

"இவ்வளவு தானா!  நான் கூட்டி கொண்டு போகிறேன்.  ஏற்பாடு பண்ணுகிறேன்.  எனக்கு தெரிந்த ஒரு மலை கோவில் இருக்கிறது.  அந்த பூசாரியிடம் கேட்டு சொல்கிறேன்" என்றார்.

இரண்டு நாட்கள் சென்று, அவரிடமிருந்து தகவல் வந்தது.

"கோவில் பூசாரியிடம் கேட்டு விட்டேன்.  அனைத்தையும் நான் ஏற்பாடு பண்ணி தருகிறேன். அனைத்து செலவும் என்னுடையது.  நீங்கள் வந்து யாகத்தில் கலந்து கொண்டால் மட்டும் போதும்" என்று பக்தர் சொல்ல, உண்மையில் நெகிழ்ந்து போனான்.

இப்படியும் வசதிகளை அகத்தியர் மறைமுகமாக செய்து கொடுப்பாரா?  அவருக்கு மனதார நன்றியை சொல்லிவிட்டு, கிளம்பி செல்வதற்கான ஏற்பாட்டை செய்ய தொடங்கினான்.

அவனறியாமலே அவனை சுற்றி ஒரு பாதுகாப்பு வளையம் உருவாகத் தொடங்கி இருந்தது.  திங்கள் கிழமை கிளம்பி செவ்வாய் அன்று காலையில் பக்தரை சந்தித்து, அவருடன் சேர்ந்து ஒரு பரந்த வெளியில் இறங்கி நின்று பார்க்க, 

"ஹோ! என்று பெரு மூச்சு விடும் அளவுக்கு, ஒரு மிக பெரிய குன்று தனியாக நின்று கொண்டிருந்தது.  அதன் உச்சியில் ஒரு கோவில்."

இவன் எண்ணத்தை புரிந்து கொண்ட பக்தர்,  "வாருங்கள்! இதுதான் ஒதிமலை, மேலிருந்து அருள் புரிபவன், எம்பெருமான் "ஒதிமலை சுப்பிரமணியர்"" என்று அறிமுகம் செய்து வைத்தார்.

சித்தன் அருள் .................... தொடரும்!

Thursday, 16 August 2012

சித்தன் அருள் - 85

தலைவர் விதித்த கட்டுப்பாடுகளை மீறுவதில் அவனுக்கு விருப்பமில்லை.  அவை நிலுவைக்கு வரும் முன்னரே பார்க்க வேண்டிய இடங்களுக்கு சென்று அனுபவங்களை வாங்கி வந்து விட்டதால், அமைதியாக இருப்பதில் ஒன்றும் சரமம் தோன்றவில்லை.  வந்த வேலையை பார்த்து விட்டு இறங்கி செல்ல தொடங்கினான்.  அவனுக்கும் அங்கிருக்கும் சிவ பெருமானுக்கும் இடையில் ஏதோ ஒரு திரை விழுந்து விட்டது போல் தோன்ற, ஒரு நாள் இரவு அனைவரும் உறங்க சென்ற பின் அவர் சன்னதியின் முன் தனிமையில் நின்று மனத்தால் பேசினான்.

"இறைவா! எதற்கு இங்கு வரவழைத்தாயோ, அது நான் இங்கிருந்து போகும் முன் நடக்க வேண்டும்.  பிறருக்கு கொடுக்கும் மதிப்பை, அவர்கள் சொல்லும் சொல்லை அதுவரை தாங்குகிற சக்தியை நீ கொடு.   இன்று முதல், இனி எவர் ஒருவர் சொல்ல தகாத வார்த்தைகளை கூறுகிறார்களோ, அதை கேட்கும் நேரத்தில் உன்னை தான் என் மனதில் நினைப்பேன்.  அவர்கள் சொன்னது உன்னிடம் வந்து சேர்ந்துவிடும்.  உன்னை சொன்னதாக மாறிவிடும்.  நீ பார்த்துக்கொள்.  நான் கேட்பதாக நினைக்க போவதில்லை" என்று சத்தியம் செய்துவிட்டு விலகினான்.

ஆடி அமாவாசை வந்தது.  அந்த மலையில் மக்கள் திரளாக, லட்சம் லட்சமாக கூடும் ஒரு நிகழ்ச்சி. அந்த நேரத்தில் அங்கிருந்தால், நல்ல மனநிலையில் இருப்பவன் கூட பைத்தியக்காரனாக மாறிவிடும் சூழ்நிலை தான் நிலவும்.  வரும் பக்தர்கள் அடிக்கும் கூத்துக்கு ஒரு அளவே இருக்காது.  அந்த நேரத்தில் மலையில் இருப்பதை தவிர்த்து விடலாம் என்று தீர்மானித்தான் அவன். இதை அறிந்த பூசாரி வீடு தேடி வந்து விட்டார்.

"நீங்கள் கண்டிப்பாக ஆடி அமாவாசைக்கு கோவிலுக்கு வரவேண்டும்.  உங்களை பூசாரியாக்கி, அப்பன் சன்னதியின் கட்டுப்பாட்டை உங்கள் கையில் தருகிறேன்.  எனக்கு உதவி செய்ய வேண்டும்" என்றார்.

"இது என்ன புது விளையாட்டு" என்று நீண்ட நேரம் யோசித்தவன், அவர் மேலும் மேலும் வற்புறுத்தவே "சரி" என்று தலையாட்டினான்.  அதிலிருந்து தான் பிரச்சனைகள் பூதாகரமாக வரப்போகிறது என்று அறியாமலே.

ஆடி அமாவாசை நாளும் வந்தது.  தலைவரிடம் "பூசாரியாக நிற்கவா" என்று அனுமதி கேட்க, அவர் "நிற்காதீர்கள் என்று நான் சொல்ல மாட்டேன்.  நில்லுங்கள் என்றும் நான் சொல்ல மாட்டேன்.  உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்யுங்கள்" என்று கூறி நழுவினார்.

அந்த சிவ பெருமானை சித்தர்களும், முனிவர்களும், பிரம்மச்சாரிகளும் தான் தொட்டு பூசை செய்யலாம் என்ற விதி இருந்தது.  ஏன் என்றால், அந்த சுயம்புலிங்கத்தை இறைவன் சித்தர்களிடம் கொடுத்தபோது கண்டிப்பாக கூறியது இது தான்.

"இகபர வாழ்க்கையில் இருப்பவர்கள் என்னை தொட்டு பூசை செய்தால், அவர்கள் மனதை மோக்ஷ பாதைக்கு மாற்றிவிடுவேன்.  ஆகவே மேற் கூறியவர்கள் மட்டும் தான் அந்த லிங்கத்தை பூசை செய்யலாம்".

இருதலை கொள்ளி நடுவே எறும்பின் கதையாக அவன் மனது ஆகிவிட்டது.  என்ன செய்வது என்று தெரியவில்லை.  ஏன் என்றால் அவனுக்கு குடும்பம் இருந்தது.  அவருக்கு பூசை செய்து தொட்டு விட்டால் மனதை மாற்றிவிடுவார்.  குடும்பத்தின் கடமைகளை யார் கவனிப்பது?

சற்று நேரம் பொறுமையாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்து, நேராக இறைவன் சன்னதி முன் சென்று நின்று, மனத்தால் உரைத்தான்.

"உன்னிடம் இருந்து விலகியே இருந்து அருள் பெற வேண்டும் என்ற அவா தான்.  ஆனால் உன் திரு விளயாடல்களுக்கு அளவேது.  குழந்தையிடம் மிட்டாயை காட்டி ஆசை மூட்டுவதுபோல், பூசாரி யோகத்தை காட்டி வளைக்க பார்க்கிறாய்.  சரி! உன்னை நம்பி இதை ஏற்றுக்கொள்கிறேன்.  ஒரு வேண்டுதல்.  குடும்பம் என்று ஒன்று இருக்கிறது.  நீ என்னை என்ன வேண்டுமானாலும் செய்துகொள்.  ஆனால், குடும்பத்துக்கு என் கடமைகளை செய்ய வழி விடு." என்று கூறிவிட்டு உள்ளே சென்று பூசாரி என்கிற பதவியில் நின்றான்.

எங்கும் எல்லா கோவில்களிலும் இருக்கிற தகிடுதத்தம் அங்கும் இருந்தது.  பூசாரியின் உறவினர்களே, பூசாரிக்கு தெரிந்தவர்களே, பூசாரிக்கு தட்டில் விழும் பணத்தை கொள்ளை அடிப்பதை அறிந்து, அனைவரையும் வெளியே போக சொன்னான்.

"நேர்மையாக இருப்பவர்கள் மட்டும் இருக்கலாம்.  அல்லாதவர்கள் வெளியே சென்று விடுங்கள்.  தட்டில் விழும் அத்தனை பணமும் என் கட்டுப்பாட்டில் இருக்கும்.  யாரும் கை போடக்கூடாது.  அது பூசாரிக்கு சென்று சேர வேண்டும்" என்று கடுமையாக கட்டுப்பாட்டை விதித்தான்.

மற்றவர்களோ, "ஹும்! இவன் எவாளவு நேரம் நிற்கிறான் என்று பார்ப்போம்.  சற்று நேரம் ஓய்வெடுக்க போய் தானே ஆகவேண்டும், அப்பொழுது பார்த்துக்கொள்ளலாம்" என்று பேசினர்.

இதை கேட்ட அவன், "அப்பனே! எனக்கு அசதி வரகூடாது! ஓய்வு, உறக்கம், உணவு எதுவுமே தேவைபடகூடாது.  நீ என்ன செய்வாயோ தெரியாது.  நான் இங்கிருந்து போகக்கூடாது.  பார்த்துக்கொள்" என்று சொல்லிவிட்டு தன் வேலையை கவனித்தான்.

அவனுக்குள் நிறையவே மாற்றங்கள் வந்தது.  அசதி அவனை அண்டவே இல்லை.  சொன்னவர்கள் தான் அங்கிருந்து குறுகிய நேரத்தில் அசதியுடன் விலகி போக வேண்டி வந்தது.  ஒன்றரை நாட்கள் பூசாரியாக தொடர்ந்து நிற்க வேண்டி வந்தது.

அன்று முதல் ஜாமம். மணி அதிகாலை இரண்டு முப்பது.  என்னவோ தோன்றவே, நேராக சிவ பெருமான் அமர்ந்திருக்கும் மேடையில் ஏறி அமர்ந்து, அவருக்கு பூசை செய்தான்.  மிக சந்தோஷமாக இருந்தது.  மங்கள ஆரத்தி காட்டி மற்றவர்களுக்கு அதை காண்பிக்க, கையில் ருத்ராட்ச்ச மாலையுடன் ஒரு கரம், சூட தட்டை நோக்கி நீண்டது.  இது என்ன வித்யாசமாக இருக்கிறதே என்று நிமிர்ந்து பார்க்க, அன்று அவனை சந்தித்து பேசிய பெரியவர், கற்பூர ஆரத்தியை எடுத்துக்கொண்டபின், அர்த்த புஷ்டியுடன் சிரித்து தலையாட்டி விட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

"அவன அருள் இருந்தால் நாம் என்றேனும் சந்திக்கலாம்" என்று கடைசியாக கூறி சென்றது அவன் மனதுக்குள் எதிரொலித்தது.

எதற்கோ ஒரு தொடக்கம் இன்று ஆரம்பமாக போகிறது என்று அவன் உணரவும், கூட்டத்தில் யாரோ "எல்லாம் நடக்கும்.  பொறுமையாக வேடிக்கை பார்" என்று இன்னொருவரிடம் கூறியது அவன் காதில் விழுந்தது.  அதை தான் நிமித்தம் என்பார் போலும்.

பக்கத்து சன்னதியில் பூசாரியாக நின்ற ஒருவர் ஏதோ தனக்கு எல்லாம் தெரியும் என்கிற வேகத்தில் மிக கோபத்துடன் இவன் முன் வந்து நின்று "யார்யா உனக்கு அப்பனுக்கு சமமா உட்கார அனுமதி கொடுத்தது?  நாங்களே உட்காரமாட்டோம்.  எங்களை ஒரு வழி பண்ணிவிடுவான்.  முதலில் கீழ இறங்குயா" என்று எல்லோரும் கேட்க சத்தம் போட்டார்.

சரேலென அப்பனை திரும்பி பார்த்தவன் "எல்லாம் உனக்கே" என்று மனதில் கூறிவிட்டு "போய் உன் வேலைய பார்.  என்ன தண்டனை வேணும்னாலும் அப்பன் எனக்கு தரட்டும்.  இங்கு நான் தான் இன்று பூசாரி.  இது எனக்கும் அப்பனுக்கும் உள்ள உடன்பாடு.  நீ யார் அதை கேட்க.  உனக்கு ஏதாவது பிரச்சனையை இருந்தா முதல் பூசாரியிடம் போய் சொல்லு.  இங்கு என் இஷ்டப்படி தான் நான் இருப்பேன்.  யாரும் எனக்கு உபதேசம் செய்ய வர வேண்டாம்" என்று சற்று கடுமையாகவே பேசினான்.  அதை பேசும் போது அவன் தன் நிலையில் இல்லை என்பதையும் உணர்ந்தான்.  அத்தனையும் அப்பெருமானின் வார்த்தைகள் போல் தான் அவனுக்கு தோன்றியது.

சத்தம் போட்ட அவன் மறுநாளே காணாமல் போய் பின்னர் இவன் இருக்கும் வரை மலை ஏறவே இல்லை என்பது வேறு கதை.

இறங்கி போன அவனும், பங்கில் கை வைக்க முடியாத பூசாரியின் உறவினர்களும், மேல் பூசாரியிடம் அவனது கட்டுப்பாடான நிலையை, சமமாக அமர்ந்ததை, சன்னதியில் நின்று சந்தனம் விற்றான் என்று போய் சொன்னதை பூசாரி நம்பி "இந்த முறை போகட்டும்! அடுத்தமுறை முதல் வேறு ஒருவரை நிறுத்திக்கொள்ளலாம்" என்று தீர்மானித்து, அவனை விலக்கினார்.  பூசாரி உண்மை எது என்று விசாரிக்காமல் மரியாதை குறைவாக நடத்தியது அவனை பாதித்தது.  உண்மை தான் கண்டிப்பாக இருந்தால், எல்லா இடத்திலும் கேட்ட பெயர் வாங்க வேண்டிவரும் என்பது அவனுக்கு உரைத்தது.  நடந்த நிகழ்ச்சிகளை விசாரித்து உண்மையை பூசாரியிடம் உரைக்க வேண்டிய தலைவரே அவன் காலை வாரினார்.  அவர் இதை கண்டு கொள்ளவே இல்லை.

"சரி! நமக்கு கொடுத்த வேலையை எம்பெருமான் மனம் குளிரும் அளவுக்கு செய்தாகிவிட்டது.  அவர் நான் நேர்மையாக இருந்ததை புரிந்து கொண்டிருப்பார்.  அது போறும்" என்று நினைத்து பழயபடி கொடுத்த வேலையை மட்டும் செய்து வரலானான்.

வளர்ச்சி பணிகளில் மும்முரம் காட்ட, இவர்கள் கைவைத்த அன்னதானம் முதல் எல்லாம் வெகு வேகமாக வளர்ந்தது.

மற்ற  குழுக்கள் ஒன்று சேர்ந்து பின்னணியில் மிகப்பெரிய திட்டம் தீட்டினர்.  கீழ் கோவில், மேல் கோவிலில் அன்னதானம் செய்யும் அனைவரும் ஒன்று சேர்ந்து இவர்களின் "வலை பூவின்" பக்கங்களை எடுத்து தங்களுக்கு சாதகமாக மாற்றி அச்சடித்து, கோவில் அதிகாரிகளிடம்

"இவர்கள் கோடிகணக்கில் பணம் புரட்டி சுருட்டி விட்டார்கள், அதை விசாரிக்க வேண்டும்" என்று குற்றம் சுமத்தினர்.  காத்திருந்த அதிகாரிகளும் இது தான் சமயம் என்று தீர்மானித்து அந்த குற்றச்சாட்டை போலீசிடம் விசாரிக்க ஒப்படைத்துவிட்டு, "இனி நாங்கள் தீர்மானிக்கும் வரை யாரும் அன்னதானம் செய்யவோ, வளர்ச்சி பணிகளை செய்யவோ கூடாது" என்று ஆர்டர் போட்டு அனைவரையும் இறங்கி போக சொன்னார்கள்.  அனைத்தும் நின்று போனது.

குற்றச்சாட்டை எழுதி கை எழுத்து போட்டு கொடுத்தது, ஒரு அன்னதானக்குழுவை தலைமை வகித்து நடத்தி கொண்டு வந்த ஒரு பெண்மணி.  பெண்மணியாக இருந்தும் இத்தனை சிறப்பாக இந்த நடுகாட்டில் அன்ன தானம் செய்கிறார்களே என்று அவன் பெருமையாக நினைத்து வந்தான்.  ஒரு போதும் மற்றவர்கள் நடத்திய அன்னதானத்தை குறை கூறியது இல்லை.  குறை இல்லாத மனிதர் யார்?  என்னவோ அவனுக்குள் எப்போதும் ஒரு உணர்வு.

"கண்டிப்பாக பெரியவர்கள், இங்கு நடக்கும் அத்தனை நிகழ்ச்சிகளையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.  அதனால், எதையும் குறை கூற கூடாது" என்ற திட வைராக்கியம் அவனுக்குள் இருந்தது.  இது உண்மை என்று பின்னர் தெளிவாயிற்று.

அந்தப் பெண்மணி, ஒரு காரணமும் கண்டு பிடிக்க முடியாத படி, குற்றம் சாட்டி எழுதி கொடுத்த மறுநாளே, இறந்து போனார்.

இவன் நேரம், சரி இல்லை போல்.  வாய்ப்புக்காக காத்திருந்தவர்கள் அனைவரும் ஒரே குரலில் 

"பார்த்தீர்களா.  நாங்கள் அன்றே சொன்னோம். அவன் ஒரு பெரிய மந்திரவாதி என்று.  யாரும் நம்பவே இல்லை.  இப்போது பாருங்கள், குற்றம் சாட்டிய மறுநாளே அவங்க செத்து போய்ட்டாங்க.  எல்லாம் அவன் செய்கிற மந்திர வாதம் தான் காரணம்.  அந்தாள் இனி மலை ஏறி வந்தா உயிரோட திரும்பி போக மாட்டான்" என்று செய்தி பரப்பினர்.

இந்த செய்தி அவனுக்கு பேரிடியாக இறங்கியது. 

இனி மலைக்கு செல்வது நல்லது இல்லை என்று தீர்மானித்து "இறைவா! இனி நீ அழைத்ததாக நான் உணர்ந்தால் மட்டும் தான் மலை ஏறுவேன்.  இனி எந்த மனிதர்கள் அழைத்தாலும் வரமாட்டேன்.  எப்போது என்று நீர் தீர்மானித்துக்கொள்" என்று கூறி மலையை மறக்க தொடங்கினான்.

போலீஸ் குற்றச்சாட்டை வைத்துக்கொண்டு விசாரணையை தொடங்கியது!

சித்தன் அருள்.......... தொடரும்!

Thursday, 9 August 2012

சித்தன் அருள் - 84


மனித மனது விசித்திரமானது.  தலை புகைகிற விஷயங்களுக்கு எங்கேனும் விடை கிடைக்குமா என்று எப்பொழுதும் தேடிக்கொண்டே இருக்கும்.  அப்படி தேடி கிடைத்தால், அது கிடைத்த இடத்துடனும், அதற்கு காரணமாக இருந்தவரிடமும் நிறைய பரிவும் அன்பும் ஏற்படும். அதனுடன் சேர்ந்து இருக்க எப்பொழுதும் விரும்பும். அப்படித்தான் அவனும் இருந்தான், விடை கிடைக்காத கேள்விகளை சுமந்து சென்றவனுக்கு, அங்கிருக்கும் பெருமானே விடை கொடுக்க, இவர் தான் நமக்கு சரியானவர் என்று தீர்மானித்தான். அங்கிருந்து ஏதேனும் நல்லது செய்யவேண்டும் என்று விரும்பினான்.  அவரும் ஆசிர்வதித்தார்.

அங்கே நிறைய பேர் குழுவாக அல்லது தனியாக இருந்து, வந்து போகும் பக்தர்களுக்கு அன்னதானம் நடத்திக்கொண்டிருந்தனர்.  இவனும் ஐந்து பேர் கொண்ட ஒரு குழுவில் சேர்ந்தது பணியாற்ற தொடங்கினான்.  கூடவே வளர்ச்சிப் பணிகளும் சேர்ந்து கொண்டது.  மிக குறுகிய காலத்தில், நேர்மையாக எல்லாவற்றையும் கவனத்துடன் செய்ததால், அந்த குழு வேகமாக வளர்ந்தது, மற்ற குழுக்களுக்கு போட்டியும் பொறாமையும் ஏற்படத்தொடங்கியது.  அன்னதானம் சிவ பெருமான் அருளால் நடக்கிறது, அவர் சார்பாக நாங்கள் செய்கிறோம் என்பதே குழுவின் வாக்கியமாக இருந்தது.   அன்னதானம் இல்லா மற்ற நேரங்களில் தனிமையில் இருப்பதும், த்யானம் செய்வதும், காட்டுக்குள் சென்று தனிமையில் அமர்ந்து, அல்லது நண்பர்களுடன் சென்று ஆராய்வதும் அவனது முக்கிய வேலையாக இருந்தது.

அந்த மலையும், கோவிலும் வெளி உலகுக்கு  தெரியவேண்டும். இங்கிருக்கும் இறை அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்கிற ஒரே எண்ணத்தில், குழுவின் தலைவரின் அனுமதியுடன் வலைப்பூவை உருவாக்கி, அங்கிருக்கும் தெய்வத்தின் பெருமைகளை உலகறிய செய்தான். இன்டர்நெட்டில் எங்கும் இந்த மலை விவாதிக்கப்பட்டது. இறைவன் பெயர் எங்கும் பரவ தொடங்கியது.  பக்தர்களின் எண்ணிக்கை கூடத்தொடங்கியது. பத்திரிகையாளரை கொண்டு வந்து அந்த மலையை காட்டிக்கொடுத்து, விரிவாக தொடர் எழுத, மலையின் பெருமைகள் உலகெங்கும் பரவியது.  ஒரு சில கிராமத்தாரால் பொத்தி பொத்தி பாதுகாக்கப்பட்ட மலையின் பெருமை உலகின் பல மூலைகளுக்கும் சென்று சேர தொடங்கியது.  எங்கும் அந்த குழுவின் பெயர் பேசப்பட, பிரச்சினைகள் ஆரம்பமானது.

அவன் யாரிடமும் அதிகம் பேசுவதில்லை.  யார் அன்னதானம் செய்தாலும் வரவேற்றான்.  ஆனால் மற்ற குழுவில், தனிப்பட்ட மனிதரில் இருந்த குறைவுகளால், இவர்கள் நடத்தும் அன்னதானத்திற்கு பக்தர்கள் ஆர்வம் காட்டினார்கள்.  கூட்டம் இவர்களிடம் சேர தொடங்கியது.  வந்த பக்தர்கள் ஒவ்வருவரும் அவர்களால் முடிந்த அளவுக்கு உதவி செய்தனர்.  எந்த நேரம் வந்து கதவை தட்டி "பசிக்கிறது" என்று யார் கேட்டாலும், இல்லை என்று சொல்லக்கூடாது என்பதே அனைவருக்கும் தெரிவிக்கப்பட்ட கட்டளை. 

ஒருநாள், தனிமையில் அமர்ந்து, இறைவனை அவன் சன்னதியில் கண்டு மனம் குளிர்ந்து இருக்கும் பொழுது, ஒரு பெரியவர், மெதுவாக அருகில் வந்தது அமர்ந்தார்.  அதற்கு முன் அவரை கண்டதில்லை.  யாரோ வந்து அமைதியாக அமர்ந்து இறை தரிசனம் பெற உட்கார்ந்திருக்கிறார் என்று நினைத்தான்.

அவரே மெதுவாக பேச்சை தொடங்கினார்.

"என்ன சாமி! த்யானத்தில இருக்கீங்களா?"

அவனிடம் ஒரு புன் முறுவல் மட்டும் வெளிப்பட்டது, பதில் எதுவும் சொல்லவில்லை.

"எல்லாமே நல்ல போயிட்டு இருக்குங்கிறதுல ரொம்ப மன அமைதில இருக்கீங்க போலிருக்கு?"

தொடங்கிய பேச்சு எங்கேயோ போகிறது என்பதை உடனேயே உணர்ந்த அவன், சற்று கனிவுடன்

"சொல்லுங்க! நீங்க சொல்லவந்ததை சொல்லிடுங்க" என்றான்.

சற்று தீர்க்கமாக பார்த்தவர் "எப்படி சொல்வதென்று தெரியவில்லை.  ஆனால் உண்மையை அப்படியே உரைப்பது தானே நல்லது? இல்லையா?" என்று பீடிகை போட்டார்.

சற்றே நிமிர்ந்து உட்கார்ந்த அவன் "இங்கு நடப்பதெல்லாம் அதோ இருக்கிறாரே அவர் அருளால் நடக்கிறது" என்று எதிரே இருந்த சிவ லிங்கத்தை சுட்டிக் காட்டினான்.

"உண்மை.  அவனன்றி ஒரு அணுவும் அசையாது.  அதை உணர்ந்தது தான் உங்கள் குழு அனைத்தையும் செய்கிறது.  இருப்பினும் அவன் விளையாட்டுக்கு அளவேது.  அது எங்கு இழுத்து செல்லும் என்று அவன் ஒருவனுக்கு தான் தெரியும்".  என்றார்.

"நீங்க என்ன சொல்ல வரீங்களோ, அதை அப்படியே சொல்லி விடுங்களேன்.  எதற்கு இத்தனை அச்சாரம் போடறீங்க" என்றான் சற்று எரிச்சலுடன்.

அவன் எரிச்சலை உணர்ந்தவர் "சரி விஷயத்துக்கு நான் நேரடியாகவே வருகிறேன்! அதை சரியாக எடுத்துக்கொள்வதும், விட்டு விடுவதும் உங்கள் விருப்பம்.  ஆனா, அது நடக்கும்.  அது தான் அவன் ஆடும் சதுரங்கம்".

"இப்போது அன்னதானமும், வளர்ச்சிப்பணிகளும் நல்ல விதமாக உங்கள் குழுவின் தலைமையில் நடக்கிறது.  ஆனா இன்னம் கொஞ்ச நாட்களில் இவை எல்லாவற்றையும் உங்கள் கையை விட்டு இழந்து நிற்கப் போகிறீர்கள்.  இந்த சிவ பெருமான், நாம் நினைக்கிறார் போல் இல்லை. எல்லாம் அருளவும் செய்வான், வேண்டி வந்தால் அனைத்தையும் அழித்துவிட்டு தனியாகவும் அமர்வான்.  அவனை பற்றி உங்களுக்கு தெரியாது.  திடீரென்று ஒரு நாள் எல்லாம் தலை கீழாக ஆனால் உங்கள் மனது மிக வருத்தப்படும்.  தாங்க முடியாது.  அதனால், எனக்கு தெரிய வந்ததை உங்களுக்கு தெரிவித்தேன்.  அவர் காலை பிடிங்க.  போய் கதறுங்க.  இதை இழக்காமல் இருக்க, வேறு ஏதாவது மாற்று வழி இருக்கானு கேளுங்க. அவன் ஒருத்தனால் தான் மாற்று வழியை காண்பிக்க முடியும்." என்று தீர்க்கமாக கூறியவர்

"இந்த விஷயத்தை வெளியே சொல்வது நல்லதில்லை.  சொல்லி நடந்தபின், "எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம்னு உங்க தலை மேல வெச்சுடுவாங்க.  அதனால பத்திரமா பாத்து நடந்துக்கோங்க" என்று சொல்லி,

"அவனருள் இருந்தால், என்றேனும் நாம் எங்கேனும் சந்திக்கலாம்.  நான் வரேனுங்க!" என்று சொல்லி மெதுவாக இறங்கி காட்டுப் பாதையில் நடந்து மறைந்து போனார்.

அவர் நடந்து போகிற வழியை அதிர்ந்து போய் பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு, அதிர்ச்சியை விட்டு வெளியே வரவே வெகுநேரமாகியது.   அப்படிப்பட்ட மலையில் யார் வேண்டுமானாலும் ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து செய்தி தருவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறான். வந்தது சித்தனாக இருக்குமோ என்கிற எண்ணம் கூட அவனுக்குள் நுழைந்தது.  மறுபடியும் அவர் சென்ற பாதையை நோக்க அங்கு யாருமே இல்லை.

"அவன் ஒருத்தனால் தான் மாற்று வழியை காண்பிக்க முடியும்" அவர் சொன்னது காதில் ஒலிக்க  நேராக சிவபெருமான் சன்னதிக்கு சென்று த்யானத்தில் உட்கார்ந்தான்.  கண் மூடி அமர்ந்தவனுக்கு அந்தப் பெரியவர் பேசியது எல்லாம் மனதுக்குள் ஓடியது.  

"சொல் இறைவா! அத்தனையும் இழக்க போகிறோம் என்று ஒருவர் சொல்லி போகிறார்.  இதற்காகத்தான் இத்தனை நாட்களாக உன் கோவிலில் வந்து வேலை பார்த்தோமா.  ஒன்றும் இல்லாமல் இருந்த நிலையிலிருந்து, இன்று வரும் அனைவரையும் அவர்கள் திருப்தி அடைகிறவரை உபசரிக்க நீ கொடுத்த வசதிகள் அனைத்தும் கை விட்டு போனால், எப்படி உன் உத்தரவை நிறைவேற்றுவோம்?  சரி! நடக்கப்போவதை தடுத்துவிடு.  உனக்கு உன் சன்னதியில் மூன்று குறிப்பிட்ட நாட்களுக்கு நெய் விளகேற்றுகிறேன்.  அதை ஏற்றுக்கொண்டு இழப்பிலிருந்து காப்பாற்று" என்று முறையிட்டு அமைதியானான்.

"உன் கூட இருப்பவர்களே உன்னை விளக்கு போட விடமாட்டார்கள்!" எங்கிருந்தோ யாரோ சொல்வது போல் கேட்டது.

"நீ இருக்கிறாய் அல்லவா! அதை நீ கவனித்துக்கொள்! முயற்சி செய்வது மட்டும் தான் என் செயல்." என்று கூறி மற்ற வேலைகளை கவனிக்க சென்றுவிட்டான்.

சொன்னது போல் இரண்டு முறை விளக்கு போட முடிந்தது.  மூன்றாவது முறை அந்த கோயில் பூசாரியே விளக்கு போட விடாமல் தடுத்துவிட்டார். சரி அப்பன் சொன்னது தான் நடந்தது.  அவன் தீர்மானம் செய்து வைத்திருப்பது தான் நடக்கும், என்று உணர்ந்தான்.

நாட்கள் சென்றது.  உண்மையை மறைத்து வைத்துக்கொண்டு, பொறுமையுடன் இறைபணியில் ஈடுபட்டான்.  த்யானத்தில் அமர்ந்து, அல்லது தெரிந்த ஜெபங்களை செய்யும் போது அங்கு அடிக்கடி வந்து போகும் மனிதர்கள் தாங்கள் பிரச்சனைகளை சொல்லத்தொடங்க, ஏதோ ஒரு உந்துதலில் "அப்பனுக்கு பின்னாடி போய் உட்கார்ந்தது உங்க பிரச்சனைய சொல்லுங்க.  சீக்கிரம் சரியாகிவிடும்" என்று சொல்ல அவர்கள் பிரச்சனைகள் விலகியதால், மெதுவாக செய்தி வெளியே கசிய தொடங்கியது.  அவனிடம் போய் சொன்னால் நம் பிரச்சனைகளுக்கு விடை கிடைக்கும், நல்லது நடக்கும் என்று சொல்ல தொடங்கினார்கள்.

அப்படி ஒருவனை உயர்ந்த நிலைக்கு செல்ல விடுவதா, சரி பார்த்துவிடலாம் என்று குழுவுக்கு வெளியே இருந்து எதிர்ப்பு வந்தது.  அவனை பற்றிய தவறான தகவல்கள் எங்கும் பரப்பப்பட்டது.  குழு தலைவரிடம் "அவன் பாட்டுக்கு சும்மா  காட்டுக்குள்ள   போய் சுத்திண்டிருக்கான்.  ஏதாவது நடந்தா யார் பொறுப்பு.  நாங்க தான் உதவிக்கு வரணம்.  இப்படி ஒரு பிரச்சினை தேவையா?" என்று உசுப்பி விடப்பட்டது.

தலைவரின் வார்த்தைக்கு நிறையவே மதிப்பு கொடுப்பவன் என்று தெரிந்துதான் அவரிடம் போட்டு விட்டார்கள்.  அவரும் கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கினார். 

"அங்கு செல்ல கூடாது, இங்கு போககூடாது.  அவனிடம் பேசக்கூடாது, வந்தோமா, அன்னதானத்தை பார்த்தோமா, போனோமா என்று இருக்கவேண்டும்"  என்று கண்டிப்பாக கூறிவிட்டார்.

தன்னை சுற்றி ஒரு வலை விரிக்கப்பட்டிருப்பதை, அது இறுக தொடங்கியபின் தான் அவன் உணர்ந்தான்
சித்தனருள்.......... தொடரும் 

Thursday, 2 August 2012

நாடியும் அதன் பின் விளைவும் !


சித்தன் அருள் தொகுப்பு நாடியில் வந்த விஷயங்கள் என்பது உங்களுக்கு தெரியுமே!  அந்த நாடியை வைத்து உலக நன்மைக்காக வாசித்தவர் இன்று இல்லை என்பதும் அதன் பிறகு வேறு ஒருவர் தெரிவு செய்யப்படாததினால் அந்த நாடி எங்கே போயிற்று என்பதை பலரும் அறியார்.

நாடி வாசித்தவர் உயிருடன் இருக்கும் போதே பலரும் நான் தான் அடுத்த வாரிசு என்று ஆசையை வளர்த்துக்கொண்டு அவருடன் இருந்தனர்.  ஒரு சிலர் வெளிப்படையாகவே சொல்லி திரிந்தனர்.  அப்படிப்பட்டவர்களில் ஒரு மருத்துவரும் இருந்தார்.அவருடைய மருத்துவ விஷயங்களில் நிறையவே ஆலோசனை அகத்தியரிடம் கேட்டு செய்து வர, ஒரு நிலையில், அகத்தியரே "போகர் சித்தரின்" மருத்துவ நாடியை வரவழைத்து, அந்த மருத்துவரிடம் கொடுத்து "லோக ஷேமத்துக்காக" இந்த மருத்துவ நூலை உபயோகித்துக்கொள்" என்று சொல்லி கொடுத்ததாக, அந்த நாடி வாசித்தவரே சொன்னார்.  அந்த போகர் மருத்துவ நாடி அவர் கைக்கு வந்ததிலிருந்து அவருக்கு ஏறு முகமாக வாழ்க்கை மாறியது.  மருத்துவரும் மனிதன் தானே. சற்று அதீதமாக ஆசை பட தொடங்கினார்.  மருத்துவ உதவிக்கு வாங்குகிற பணம் அவர் மனதை நிறையவே மாற்றியது.

திடீரென்று நாடி வாசித்தவர் மறைந்துவிடவே அந்த நாடி அவர் வீட்டு பூசை அறையில் வைக்கப்பட்டிருந்தது.  ஒருநாள் அந்த மருத்துவர் வந்து நாடி வாசித்தவரின் மனைவியிடம் "அம்மா! அந்த நாடி கட்டை கொடுங்களேன்! சும்மா தானே இருக்கிறது.  என் வீட்டில்வைத்து பூசை செய்த்துவிட்டு, பல கோயில்களுக்கும் கொண்டு சென்று விட்டு வருகிறேனே" என்று கூறி பெற்றுக் கொண்டு சென்றார்.  கொண்டு சென்றவர் அதை திருப்பி கொண்டு வைக்கவில்லை.  எப்பொழுது கேட்டாலும் அது தன் வீட்டு பூசை அறையில் இருப்பதாக கூறி சமாளித்தார்.  அனைத்தையும் பொறுமையாக இருந்து கவனித்துக்கொண்டிருந்த, உண்மை அறிந்த பல நண்பர்களும் அவரிடம் "இது தவறு! அகத்தியர் அனுமதி இன்றி அந்த நாடி வேறு இடத்தில் இருக்ககூடாது.  அதற்காக ஆசை படாதீர்கள்" என்று கூறினார்கள்..  அவர் யார் வார்த்தைக்கும் செவி சாய்க்கவில்லை.  அகத்தியர் ஒருநாள் நிச்சயமாக தனக்கு அருள் புரிவார் என்று நினைத்து அந்த நாடியை அதன் உரியவரிடம் கொண்டு சேர்க்கவில்லை.

அகத்தியரும் நாடி படிக்க வேறு ஒருவரை தெரிவு செய்யவில்லை.

ஒரு வருடம் ஆனதும், அந்த மருத்துவர் நோய் வாய்ப்பட்டார்.  உடலில் உள்ள பாகங்கள் ஒவ்வொன்றாக தன் செயலை நிறுத்த தொடங்கியது.  குடல், இருதயம், சிறுநீரகம் போன்றவை பாதிப்படைந்தது.  எந்த மருந்துக்கும் அவை வழங்கவில்லை.  ஒரு மருந்தும் பிரயோசனம் இல்லாமல் போயிற்று.  உடல் நிலை எதனால் கீழே செல்கிறது என்பதை அவர் உணர வெகு நாட்காளாகியது.  இதற்கிடையில் ஒரு மகானை சந்தித்து தன் பிரச்சினையை சொல்ல, எடுத்த எடுப்பில் "நீ சித்தனுக்கு பிடிக்காத விஷயத்தை செய்துவிட்டாய்.  அதற்கு நிவர்த்தி செய்த்துவிட்டு பின்னர் வா" என்று கூறி அனுப்பினார்.  தெள்ளத் தெளிவாக கூறியும் அவர் அந்த நாடியை விடுவதில் மனதில்லாமல் தன்னிடமே வைத்துக்கொண்டிருந்தார்.

மூன்று நாட்கள்  முன்னால், அவரும் மறைந்து விட்டார்.  அவருக்கு அப்பொழுது வயது ஐம்பது.  பலர் கூறியும் தகுதி இல்லாத ஒன்றுக்காக ஆசைப்பட்டு தன்னிடமே வைத்துக்கொண்டிருந்ததினால் இந்த வினையை சுமக்க வேண்டி வந்தது என்று எல்லோரும் கூறுகின்றனர்.

சரி! இங்கு இதை உங்களுக்கு சொல்ல காரணம் என்ன.  ஒன்று தான்.  நம் வாழ்க்கையில் நமக்கு என்றேனும் ஒருநாள் நாடி வாசித்தவர் போன்றவர்களுடன் தொடர்பு ஏற்படலாம்.  அந்த தொடர்பை நல் வழிக்கு உபயோகபடுத்திக் கொள்ள வேண்டும்.  தகுதிக்கு மீறி ஆசை படக்கூடாது.  புரியும் என்று நினைக்கிறேன். 

நாடியில் வந்து சித்தர் நல்லதும் செய்வார்.  அதே நாடியில் தோன்றாமல் மறைந்து நின்று தண்டனையும் கொடுப்பார் என்பதற்கு இது உதாரணம்.

சித்தன் அருள் - 83!


"அவன்" நிறையவே தேடல்களை தனக்குள் தேக்கி வைத்தவன்,  எங்கேனும் யாராவது பேசிக்கொண்டு சென்றால் கூட கவனிக்காதது போல் இருந்து அதில் உள்ள ஏதேனும் ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அலைபவன்.  மனித வாசனையிலிருந்து விலகி வெகு தூரத்தில் நம் முன்னோர்கள் வழிபட்ட பல கோவில்களும் இன்றும் எங்கெங்கோ இருக்கிறது.  அவற்றை சென்று தரிசித்து அனுபவங்களை சேர்த்துக்கொள்ளவேண்டும் என்கிற அணையாத நெருப்பு கொழுந்து விட்டு எரிகின்ற மன நிலையை உடையவன்.

மலை கோவில், மண்டபம், சிவபெருமான் சந்நிதி போன்றவை சுருக்கமாக கிடைத்த தகவலை எடுத்துக்கொண்டு, தன்னுடன் எங்கும் துணை வரும் நண்பரை கண்டு, தகவலை பரிமாறிவிட்டு  'தேடுங்கள்! எந்த இடமானாலும் நாம் போய் வரலாம்" என்றான்.

அவன் நண்பரோ உண்மையாகவே சிவனருள் பெற்றவர்.  ஒருநாள் நண்பர் வியாபாரம் செய்துகொண்டிருக்கும் போது அங்கு வந்த ஒரு நபர், அவர் ஊரிலிருந்து முப்பது கிலோ மீட்டர் தூரத்தில் மலைமேல் சிவ பெருமான் குடியிருக்கும் ஒரு தலம் உள்ளது என்று கூற, செய்து கொண்டிருந்த வியாபாரத்தை நிறுத்தி விட்டு, வீட்டிற்கு வந்து தாயிடம் வெளியூர் சென்று வருவதாக கூறி, அந்த மலை நோக்கி பயணமானார், அவனுக்கு எந்த தகவலையும் தெரிவிக்காமலே.

நான்கைந்து நாட்களாக நண்பரை காணாமல், காத்திருந்து அவர் வந்து நடந்த உண்மையை விலாவாரியாக கூற,  அவன் அசந்து போனான்.  தான் தேடிய கோயில் கிடைத்துவிட்டதோ என்று கூட அவனுக்கு தோன்றியது.

இருந்தும் எதுவோ ஒன்று பொருந்தாமல் இருக்கவே, இருக்கட்டும் சென்று பார்த்து முடிவு செய்யலாம் என்று நினைத்து

"அடுத்து வரும் அமாவாசைக்கு நாம் இருவரும் போகலாம்.  எல்லா வேலைகளையும் மூட்டை கட்டி வையுங்கள்" என்று சொல்லி விடை பெற்றான்.

அவனுக்கே தெரியாது, மலை மேல் குடியிருக்கும் சிவபெருமானார் அவனிடமிருந்து,  கடனை வட்டியுடன் சேர்த்து வாங்கிக் கொள்ளப்போகிறார் என்று, அவன் வாழ்க்கையே தலைகீழாக (நல்லதை நோக்கி) பயணிக்க போகிறது என்று.

அமாவாசைக்கு முதல் நாள், கிளம்பும் முன் "இறைவா! உன்னை நம்பி இறங்குகிறது இது!  கூட இருந்து துணை புரி" என்று சொல்லிவிட்டு நண்பருடன் பயணமானார்.  நண்பரின் நண்பர்கள் மூன்று பேரும் சேர்ந்து கொள்ள ஒரு குழுவாக மாறியது.

மலை அடிவாரத்தில் நல்ல கூட்டம்.  அமாவாசை அந்த பெருமானுக்கு விசேஷமானதால் ஒருவர் மீது ஒருவர் மோதிக்கொண்டு செல்ல வேண்டிய நிர்பந்தம்.  நடை பாதையில் இத்தனை கூட்டத்தை எதிர்பார்க்காததால், சீக்கிரமே அவன் சோர்ந்து போனான்.  கூட வந்த நண்பர் "இந்த பாதையிலேயே நேராக நடந்து வாருங்கள்.  வழி தவறி விடக்கூடாது" என்று கூறிவிட்டு வேகமாக முன்னே சென்று விட்டார்.

ஒரு நிலைக்கு மேல் நடக்க முடியாமல் போகவே, எங்கேனும் அமர்ந்து இளைபாறிவிட்டு செல்லாலாம் என்று உட்கார "சாமி! உட்காராதீங்க, அப்படியே நடங்க.  உட்கார்ந்து பின் நடந்தால் இன்னும் வலிக்கும்" என்று ஒருவர் கூறி செல்ல, உட்காருவதும் தடங்கலாயிற்று.

என்ன நடந்தாலும் பரவாயில்லை, என்று நினைத்து ஒரு இடத்தில் உட்கார்ந்தது அவர் சொன்ன கோவிலின் அங்க அடையாளங்களை நினைவுக்கு கொண்டு வர, அது ஒரு விதத்திலும், தான் செல்லும் வழிக்கு பொருந்தாமலே போக, நாம் தேடிய மலை கோவில் இது அல்ல என்று உடனே உணர்ந்தான்.  சரி! இத்தனை தூரம் வந்தாயிற்று, மேலும் எத்தனை தூரம் இருக்கும் என்று தெரியவில்லை.  தொடங்கியதற்கு கஷ்டப்பட்டாவது மேலும் நடந்து போய் இறைவனை தரிசித்துவிட்டு இறங்கி வந்துவிடலாம் என்று தீர்மானித்து மேலும் நடக்க, ஒரு வழியாக கோவில் சென்ற அடைய ஆறு மணி நேரம் ஆகியது.  மேலே சென்று சேர்ந்ததும் உடலில் உள்ள சக்தி அத்தனையும் போய் விட, ஓர் இடம் தேடி அமர்ந்து, தன் நண்பரிடம்

"முதலில் குளிக்க வேண்டும், எங்காவது தண்ணீர் இருந்தால் குளித்துவிட்டு பிறகு சுவாமியை பார்க்க போவோமே" என்றான்.

நண்பர் போய் பார்த்து வந்து அங்கு ஒரு இடத்தில் நீர் நிலை இருப்பதாக கூற எல்லோரும் சென்று குளித்து வந்த பின், கோவிலுக்கு சென்றனர்.

மாலை ஆறு மணி ஆகிவிட்டதால், கூட்டம் இல்லை. 

சந்நிதி முன் அவனை கொண்டு நிறுத்திய நண்பர் "இது தான் நான் சொன்ன கோயில்! தரிசனம் செய்துகொள்" என்றார்.

அவர், அவனை கொண்டு விட்ட கோவில் சந்நிதி "சதுரகிரி சுந்தர மகாலிங்கம்".  தான் தேடி வந்த கோவில் இதுவல்ல என்று அவனால் தீர்மானிக்க முடிந்தது.  இருப்பினும், அந்த இறைவடிவத்தின் ஈர்ப்பில் தன்னை மறந்தான், அவனுக்கு பின் மிகப் பெரிய வலை ஒன்று விரிக்கப்படுகிறது என்று அறியாமலே.

அன்றைய இரவு நடந்த பல திருவிளையாடல்களும் அவன் மனதை வெகுவாகவே மாற்றியது.  மறுநாள் காலை, சிவபெருமானிடம் உத்தரவு வாங்கி கொண்டு வெளியே வர, எங்கிருந்தோ தூரத்திலிருந்து ஒரு கோவில் மணி ஓசை கேட்டது.

இன்னும் ஒரு கோவில் இங்கு இருக்கா? என்று நண்பரிடம் வினவ, அவர் மேலும், அவனை சில தூரம் அழைத்து சென்று காட்ட அங்கே ஒரு சிவன் கோவில்.

"என்ன இது! அவர் சொன்னதில் ஒரு சன்னதி தானே இருந்தது! இங்கோ ஒன்றுக்கு மேற்பட்ட சன்னதிகள்" என்ற கேள்வி அவனுள் எழ

அதை புரிந்து கொண்ட நண்பர் "நாம் தேடும் கோவில் இதுவல்ல, ஆனால் இங்கு நமக்கு நிறையவே இறை அருள் கிடைக்கிறது.  இந்த சன்னிதியில் எழுந்தருளியிருக்கும் பெருமான் பெயர் "சந்தன மகாலிங்கம்".  இந்த சந்நிதி என்னை வெகுவாக பாதித்துவிட்டது.  எனக்குள் எதோ ஒரு குளிர்ச்சி பரவுவதை உணர முடிகிறது.  ஏன்! இதுவே நாம் இனி அடைக்கலம் அடையும் இடமாக இருக்கட்டுமே" என்றார்.

தேடினது கிடைக்காதபோது, கிடைப்பதுவரை, கிடைத்ததை  ஆட்கொள்வோமே என்று தீர்மானித்து "சந்தன மகாலிங்கம்" முன் ஒப்புதலை தெரிவித்தான், அவன்.

எங்கோ அதுவரை காத்திருந்த காற்று வேகமாக வந்து அவன் கையில் வைத்திருந்த விபூதியை தூக்கி வீசியது.  பறந்த விபூதியின் சில துகள்கள் தலையில் விழ தொடக்கம் குறிக்கப்பட்டது.

மகாலிங்கம் பகடை காயை உருட்ட தொடங்கினார்,

சதுரங்கம் ஆரம்பமானது, புதிய அத்யாயத்துடன்!

சித்தனருள்................. தொடரும்!