​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 21 June 2012

சித்தன் அருள் - 77 - இரண்டாம் நாள் அர்த்தஜாம பூசை!


மலைகோயிலை அடைந்ததும் கையில் கொண்டு வந்திருந்த அரிக்கேன் லைட்டை சின்னதாக்கி கோயில் திண்ணையின் ஒரு ஓரத்தில் வைத்தேன்.  கூஜாவை என் கைப் பக்கம் வைத்துக் கொண்டேன். குருக்கள் கொடுத்த சாப்பாட்டுப் பொட்டலத்திலிருந்து மசாலா ஊறுகாய் வாசனை மூக்கைத் துளைத்தது.

உடனே சாப்பிட வேண்டும் என்றது நாக்கு. சாப்பிட்டு தூங்கி விட்டால் நள்ளிரவு சித்தர்கள் தரிசனம் கிடைக்காமல் போகுமே என்ற கவலை.  பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று மனத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டேன்.

உடனே ஜீவநாடியைப் பார்க்கும் பொழுது -என்ன சொல்வதென்றே புரியவில்லை.  நேற்றைக்கு அப்படி ஒரு தரிசனத்தைக் கொடுத்து என்னை உச்சாணிக் கொம்பில் ஏற்றி இருக்கவும் வேண்டாம். இன்று காலையில் கிராமத்து மக்களிடம் மாட்டிவிட்டுத் திண்டாடிக் கொண்டிருக்கவும் வேண்டாம். இந்த அனுபவத்தால் என்ன பலன் எனக்குக் கிட்டப் போகிறது என்று நினைத்தால் மனது வெற்றிடமாகத்தான் இருந்தது.

இந்த சமயத்தில் பார்த்து தான ஆந்தை அலற வேண்டும்.

இந்த ஆந்தை நேற்றைக்கு இல்லை.  அதுவும் படுபயங்கரமாக அலற மனதில் "கிலி" ஏற்படத்தான் செய்தது. விரட்டிப் பார்த்தேன்.  நான் கத்தினதுதான் மிச்சம்.  அது நகரவே இல்லை.

மனபயத்தை போக்க சுதர்சன மந்திரத்தைச் சொல்லலானேன்.

அப்பொழுது எங்கிருந்தோ ஒரு ஓநாய் ஊளையிட்டது. அதுவும் கர்ண கடூரமாக இதைக் கேட்டதும் மந்திரமே என் வாயிலிருந்து வர மறுத்தது.  உடலும் வியர்க்க தொடங்கியது.

ஓநாய் தனியே வந்தால் இருக்கிற கல்லை எடுத்து வீசி விரட்டி விடலாம்.  பல ஓநாய்கள் வந்தால் அவ்வளவு தான் என் உடம்பு எனக்கு இல்லை.  இந்த "பயம்" எதுக்காக வந்தது என்பதும் தெரியவில்லை.

எதுக்கும் அரிக்கேன் லைட்டை அசைத்துக் காட்டுவோம், உதவிக்கு ஜனங்கள் வந்தால் வரட்டும். இல்லையேல் "போதுமடா சாமி" என்று கையெடுத்துக் கும்பிட்டு ஊரைப் பார்க்கப் போய்ச் சேருவோம்.  அகஸ்தியர் கோபப்பட்டு என்னை விட்டு விலகினாலும் சரி, இல்லை சித்தர்களின் தெய்வ தரிசனம் எனக்குக் கிட்டாமல் போனாலும் சரி என்ற முடிவுக்கு வந்தேன்.

அரைமணி நேரம் இந்த மௌனப் போராட்டம் எனக்குள் நடந்தது.  அதே சமயம் நான் நினைத்தபடி ஒரு ஓநாய் அல்ல, பல ஓநாய்கள் ஒன்று சேர்ந்து ஊளையிடிடுகின்ற சப்தம் என்னை நடுங்க வைத்தது.  மலைக்குக் கிளம்பு முன்பு ஒரு கிராமத்தான் சொன்னானே "இவன் மலைக்குப் போறான்.  இன்னிக்கு என்ன நடக்கப் போகுதுன்னு பொழுது விடிஞ்சா தெரிந்து போகும்" என்று சொன்ன வார்த்தை சம்மட்டி போல் என் நெஞ்சில் அடித்தது.

அவன் நினைத்தபடி ஏதாவது நடந்து விடுமோ? என்ற பயம் ஒட்டிக்கொண்டது.

இரவு மணி பதினொன்று இருக்கும்.

தொடர்ந்து ஓநாய்களின் ஊளைச்சத்தம்.  இதையொட்டி ஆந்தையின் அலறல் விட்டு விட்டுக் கேட்டுக் கொண்டிருந்தது.  இன்று ஒருநாள் மட்டும் இங்கிருந்து பார்த்து விடுவோம்.  நாளைக்குக் காலையில், முதல் வேலையாக ஊருக்குப் போய் விட வேண்டியதுதான் என்று மறுபடியும் எண்ணம் வந்தது.

அப்போது ---

விறு விறுவென்று பலர் காற்றோடு காற்றாக கோயில் கருவறைக்குள் நுழைவது போன்று ஒரு பிரம்மை.  அரூபமாக இப்படி பலர் இரண்டு அல்லது மூன்று பேராக நுழைவது தெரிந்தது.

அவர்கள் உள்ளே நுழைந்த பின்னர் -- ஆந்தையின் அலறல் ஓநாய்களின் ஊளைச் சப்தம் கேட்கவில்லை. ஆனால் என் கண்ணுக்கெட்டிய தூரத்தில் நாலைந்து ஓநாய் அப்படியே அப்படியே ஒன்று சேர்ந்து என்னை நோக்கி ஒரே பார்வையாகப் பார்த்த பொழுது "தொலைந்தோம்" என்று தீர்மானித்து விட்டேன்.

அவைகள் அப்படியே நின்று கொண்டிருந்தன.  ஆனால் ஊளையிடவில்லை.  அரிக்கேன் லைட்டை எடுத்து அரைகுறை தைரியத்தில் ஏதேதோ சொல்லி அவற்றை விரட்டிப் பார்த்தேன்.  கையில் கிடைத்த சிறு சிறு கற்கள், காய்ந்து விழுந்த மரத்துண்டுகள், குச்சிகள் ஆகியவற்றை எடுத்து அவற்றின் மீது வீசிப் பார்த்தேன்.  இருந்தாலும் அவைகள் அசையவில்லை.

இந்தச் சயமத்தில் அகஸ்தியர் ஜீவநாடியை எடுத்து அகஸ்தியரிடம் உதவி கேட்க நினைக்கவும் முடியவில்லை. கை, கால்களில் நடுக்கமும் பயமும் அதிகமாகிக் கொண்டிருந்ததே தவிர இயல்பான நிலைக்கு நான் திரும்பவில்லை.

ஒரு வேளை நான்தான் பிரம்மை பிடித்து ஒன்றுமில்லாததை ஓநாய்கள் என்று பிதற்றிக் கொண்டிருக்கிறேனா? என்று கூடச் சந்தேகம் வந்தது. இனியும் அவற்றை விரட்ட எனக்குப் பலமில்லை.  விட்டுவிட்டேன்.

காற்றே வீசாத அந்த நள்ளிரவு நேரத்தில் திடீரென்று காற்று லேசாக வீசியது.  இது உடம்பெல்லாம் பயத்தால் வெளிவந்த வியர்வைக்கு அருமருந்தாக இருந்தது.  சந்தன வாசனை மூக்கில் தெரிந்தது.

பயந்து கொண்டிருந்த என் தலையில் "ஜில்" என்று குளிர்ந்தநீர் ஊற்றியது போன்று உணர்வு.

ஓநாய்ப் பக்கம் கவனம் செலுத்தாமல் - பார்வையை கோயிலின் கர்ப கிரகத்தை நோக்கிப் பதிவு செய்தேன். அடுத்த சில வினாடிகளில் வேத கோஷம், சிவநாம அர்ச்சனை, ருத்ரம், சமகம், புருஷ சூக்தம், ஸ்ரீ சூக்தம் தொடர்ந்து உள்ளிருந்து கேட்டது; ஆலய மணியோசை துந்துபி முழக்கம், பேரிகை சப்தம், மேள சப்தம் போன்று பல்வேறு கருவிகளைக் கொண்டு எழுப்பும் ஓசை காதில் சன்னமாகக் கேட்டது. கையைத் தலைக்கு மேல் தூக்கிக் கொண்டு அந்தக் கருவறைக் கதவின் முன்பு சாஷ்டாங்கமாக வணங்கினேன். ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் அந்த அற்புதமான மங்களச் சப்தம் முடிந்தது.  பதினாறு வகை அபிஷேகங்கள் நடப்பது போல் ஓர் கனவு.  பின்பு தூபம், தீபம் காட்டுதல் பின்னர் மலர்களைச் சிவ பெருமானின் மீது தூவி "புஷ்பவான்" என்று மங்கள வார்த்தை சொல்லும் காட்சி மனக்கண்ணில் தெரிந்தது.

"அப்பாடா! இதுக்குத்தான் இத்தனை கஷ்டப்பட்டேனா?" என்று மனம் ஆரோக்கியமாகக் கேட்டது.

அகஸ்தியர், முதல் நாள் எனக்குச் சித்தர்களின் தரிசனத்தை அரூபமாகக் காட்டிய பொழுது எந்தவிதப் பதற்றமும் இல்லை.ஆச்சரியம் கலந்த ஆனந்தத்தோடு அகமகிழ்ந்து போனேன்.

ஆனால்,

இன்றைக்கு எனக்கு பயமுறுத்தும் சூழ்நிலைதான் அதிகம் தோன்றியது.  ஓநாய்களும், ஆந்தையும் என்னைப் படுத்தியபாட்டால் இன்றைக்குக் கிடைத்த அந்த அபூர்வமான காட்ச்சியைச் சரியாக அனுபவிக்க முடியவில்லையே என்ற வருத்தம் இருக்கத்தான் செய்தது.

அகஸ்தியப் பெருமானை முழுமையாக நம்பி பயப்படாமல் சுதர்சன மூல மந்திரத்தைச் சொல்லி, த்யானம் செய்து கொண்டிருந்தால் இன்னும் கொஞ்சம் சித்தர்களது அபிஷேக ஆராதனையைக் கேட்டு சந்தோஷத்தின் உச்சிக்கே சென்றிருப்பேன்.

எப்படியோ அரை மணி நேரம் கழிந்தது.

இப்பொழுது அந்த ஓநாய்களையும் காணவில்லை.  ஆந்தையையும் காணவில்லை.  கோயில் கருவறையில் கேட்டுக் கொண்டிருந்த மந்திர சப்தங்கள், மங்கள வாத்தியங்கள் கேட்கவில்லை. ராக்கால பூசையை முடித்துவிட்டுச் சித்தர்கள் போயிருக்கக் கூடும் என்றுணர்ந்தேன்.

பசி வயிற்றைக் கிள்ளியது.கொண்டு வந்திருந்த சாப்பாட்டு பொட்டலங்களைப் பார்த்தேன்.  அதை எடுத்து வாயில் போட்ட பொழுது, அது சாம்பார் சாதமாக இல்லை.  மாறாக "திருவாதிரை" அன்று சிவபெருமானுக்கு படைக்கும் "திருவாதிரைக் களியாக" மாறியிருந்தது.

எனக்கு குருக்கள் மீது வந்தது கோபம்.  நாளைக்கு பேசிக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன்.

பின்பு அகஸ்தியரை வேண்டி நாடியைப் பிரித்தேன்.

"ஆந்தையும் - ஓநாய்களும் வந்ததைக் கண்டு பயந்து போயிருப்பாய்.  இவைகள் முன் ஜென்மத்தில் மனிதர்களாக இருந்து பாவத்தின் காரணமாகத் தற்கொலை செய்து கொண்டவை.  சிலர் கொலை செய்யப்பட்டனர்.  மறுபிறவியில் ஆந்தையாக - ஓநாய்களாக மாறி, ஆத்ம சாந்தி அடையாமல் அலைந்து கொண்டிருக்கின்ற துஷ்ட தேவதைகள்.  இவைகளுக்கு தேவர்கள், சித்தர்கள், ரிஷிகளைக் கண்டால் பிடிக்காது.  நாங்கள் இங்கு வருவதை அறிந்து அப்படி அலறியதற்கு இதுதான் காரணம்.  இறைவன் சந்நிதி அருகே அவைகள் வராது.யாமும் உனக்கு பாதுகாப்பு வளையம் போட்டுக் காப்பாற்றினோம்.

இது பற்றி அறியாத மனிதர்கள் பலர், இந்த துஷ்ட தேவதைகளால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதனால் தான் யாரும் இரவில் இங்கு வந்து தங்குவதில்லை. இக்கோயிலில் ஆகம விதிப்படி சாந்தி பண்ண வேண்டும்.  அதுவும் செய்யவில்லை.துஷ்ட சக்திகள் அப்படிச் செய்யாவண்ணம் கெடுக்கின்றன. ஆனால் சித்தர்கள் நாங்கள் சிவபெருமான் அனுமதி பெற்று, கருவறையில் புண்ணிய வாசனம் செய்து ஆராதிக்கின்றோம்.  நூற்றி இருபது வருடங்களுக்கு ஒருமுறை செய்யும் இந்த அபிஷேக ஆராதனையைச் சிவபெருமானும் ஏற்றுக் கொள்கிறார்.

நாளை இரவும் எங்களது ஆராதனை தொடரும்.  அப்பொழுது பெருமளவு தேவர்கள் இங்கு வருவர். அந்தக் காட்சியைக் காணக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அகத்தியன் மைந்தனாகிய உனக்கும் அப்படிப்பட்ட பாக்கியம் கிடைக்கவே யாம் உன்னை இங்கு வரச் சொன்னோம். ஆனால் நீயோ என்னை நிந்திக்கிறாய்.  என்ன ஞாயம்?" என்று ஒரு கேள்வியைக் கேட்டார்.

நான் மௌனமானேன்.

பின்பு அகஸ்தியரே தொடர்ந்தார்.

"நாளைக்கு இக்கோயிலின் நடுவழியில் நிற்காதே.  வெளிச்சத்திற்கு எதுவும் கொண்டு வராதே.அந்த நந்திக்குப் பக்கத்தில் சிவலிங்கத்தை நோக்கி கண்ணை மூடிக்கொண்டு நள்ளிரவு வரை தொடர்ந்து ஜெபித்துக் கொண்டே இரு.  வேறு எதைப் பற்றியும் நினைக்காதே.

மனித வடிவைச் சேர்ந்தவர்களுக்கு இறைவன் தரிசனம் நேரடியாகக் கிட்டது.

கண்ணை மூடிக் கொண்டால் காட்சி தெரியும். தப்பித் தவறிக் கண்ணைத் திறந்துவிட்டால் உனக்கு தரிசனம் கிடைக்காது.  யாம் நுமக்கு முன்பு காட்டிய ராகவேந்திரர், அனுமன் தரிசனம் போல் இந்த தெய்வீக தரிசனம் தரக் காரணம், சென்ற ஜென்மத்தில் என்னையே சர்வகாலம் நினைத்து எனக்கொரு கோயிலைக் காட்டிக் கடைசி வரை பூசித்ததால் தான்.

பூமியில் இதுபோல் பல்வேறு தரிசனத்தை உனக்கு மட்டுமின்றி பலருக்கும் காட்டி வருகிறேன்.  அவர்கள் எல்லோரும் மானிட வடிவில் சித்தராக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.  அவர்களை நீயும் விரைவில் சந்திப்பாய்.  இம்மாதிரியான அனுபவங்களை மேலும் பெறுவாய்" என்று நிதானமாக அந்த மலைக் கோயிலைப் பற்றியும் எனக்கு எதனால் இந்தக் காட்ச்சியைத் தருகிறார் என்பதைப் பற்றியும் விளக்கினார் அகஸ்தியர்.

மறுநாள் காலையில் --

நான் மலையிலிருந்து கீழே இறங்காமல் அங்கேயே காத்துக் கிடந்தேன்.  சாதாரணமாகக் காலையில் இறங்கி வரும் என்னை நோக்கி காத்திருந்த குருக்களும் இன்னும் சிலரும், என்னை காணாமல் பதறி அடித்துக் கொண்டு மலைக் கோயிலுக்கு ஏறி வந்தனர்.

அசந்து தூங்கி இருக்கலாம் என்ற நம்பிக்கையோடு சிலர், "ஏதாவது ஒன்னு ஆகியிருக்கும்" என்ற நப்பாசையில் ஓரிருவர்.  நேற்று ராத்திரி என்ன நடந்தது என்று என்னிடம் நேரிடையாக கேட்கத் துடித்து வந்தவர்கள் ஒன்று சேர்ந்து வந்தனர்.

கோவிலின் வாசற்கதவு பக்கம் அமைதியாக உட்கார்ந்து த்யானம் செய்து கொண்டிருந்த என்னைத் தொந்தரவு செய்யாமல் பக்கத்தில் சுற்றி நின்றனர்.  தியானத்தை முடித்த பின்னர் எல்லோரும் என்னிடம் நிறையக் கேள்விகள் கேட்டனர்.

அவர்களிடம் என்ன நடந்தது என்பதைப் பற்றி முழுமையாகக் கூற விரும்பவில்லை.

நான் உயிருடன் இருப்பது கண்டு நொந்து போனவர் "நேத்து ஒரே ஓநாய்ச் சப்தம் கேட்டது.  அது ஏதாவது உங்களைத் தொந்தரவு பண்ணி கை காலைக் கடிச்சுப் போட்டதோன்னு பயம்.  ராத்திரிப் பூரா தூக்கமில்லை.  மலைக்கும் வர முடியாதே.  அதனால் தான் வேகமாக குருக்களை எழுப்பி ஓடியாந்தேன்" என்றார்.

இதைக்கேட்டு " ஆமாம்! ஆமாம்! நாங்களும் ரொம்பத்தான் பயந்து போயிட்டோம்" என்று துதிபாடினார்கள் சிலர்.

அவர்களது பேச்சில் ஒரு உண்மை மட்டும் தெரிந்தது.  அதாவது ராத்திரி மலைக் கோயிலில் தங்கினால், அவர்களுக்கு ஏதாவது ஒரு பெரிய தண்டனையை பகவன் கொடுத்திருக்க வேண்டும்.  அப்படிக் கொடுக்கவில்லை என்றால் அது தெய்வ சக்தி குறைந்து விட்டதாக எண்ணிக் கொள்வார்கள்.  இதனால் அந்த தெய்வத்தின் மீது நம்பிக்கையே இல்லாமல் போய் விடும்.

எனக்கு அப்படிப்பட்ட தண்டனை கிடைத்திருக்கும் என்ற நம்பிக்கையோடு ஓடி வந்த சிலர், என்னைக் கண்டு வெறுப்படைந்து முகத்தைத் திருப்பிக் கொண்டதையும் பார்த்தேன்.

குருக்களை அழைத்து "கருவறையில் ஏதேனும் மாற்றமிருக்கிறதா" என்று பார்க்கும்படி கேட்டேன்.

அவர் பதிலொன்றும் சொல்லாமல் விறு விறு என்று கோயில் கதவைத் திறந்தார்.  சுற்றும் முற்றும் பார்த்தவர் சட்டென்று வெளியே வந்தார்.

"சுற்றிலும் யாரோ தண்ணீர் விட்டுத் தெளித்தமாதிரி இருக்கிறது.  அப்புறம் சுவாமி மீது நாகலிங்கப் பூ இருக்கிறது" என்றார்.

'வேறு ஏதாவது தெரிந்ததா?"

"இல்லை.  எனக்கு இதுவே ஆச்சரியமாக இருக்கிறது.  ராத்திரி நான் கோயிலை மூடிண்டு திரும்பறப்போ சுவாமிக்கு பவளமல்லி மாலையும், வில்வ இலையும் தான் போட்டிருந்தேன்.  இப்போ அதன் மேல் நாகலிங்கப் பூ வைத்திருக்கிறது ஆச்சரியமா இருக்கு"

"ம்ம்"

"அதுமட்டுமில்லை, நேத்திக்கு கருவறையிலே, யாரோ புகுந்து நன்னா தண்ணீர் விட்டுச் சுத்தமா அலம்பிவிட்ட மாதிரி இருக்கு.  எனக்கு ஒண்ணுமே புரியல்ல" என்றார் குருக்கள்.

அவரின் சந்தேகத்தை அப்புறம் தீர்த்து விடலாம் என்ற எண்ணத்தோடு " அது சரி. நேத்திக்கு எனக்குச் சாப்பிட என்ன கொடுத்தீர்" என்றேன்.

"சாம்பார் சாதம், தயிர் சாதம் - இரண்டு பொட்டலம்"

"திருவாதிரை அன்னிக்கு பண்ணுவாளே - அந்தக் "களி" பண்ணிக் கொடுத்தீரா?" என்றேன்.

"இல்லையே" என்று கையைப் பிசைந்தார்.

"பரவாயில்லை நான் ராத்திரிச் சாப்பிட்டது திருவாதிரைக் களி மாதிரி இருந்தது.  அதனால் கேட்டேன்." என்று சமாளித்தேன்.

"அப்புறம் என்ன செய்வதாக உத்தேசம்" என்று கேட்டார், குருக்கள்.

"கீழே போய் இறங்கிக் குளிச்சிட்டு நேராகக் காலையிலேயே இந்த சந்நிதானத்திலே நந்திக்குப் பக்கத்தில் உட்கார்ந்து பகல் பூரா த்யானம் செய்யப் போகிறேன்" என்றேன்.

அவர்களுக்கு ஆச்சரியமாகப் போய் விட்டது.

ஆனாலும் குருக்கள் எதையோ நினைத்துக் கொண்டு "ஒ! இன்னிக்கு திருவாதிரை நட்ச்சத்திரம்.நேத்திக்கு ராதிரியிலிருந்தே வந்துவிட்டது.  அதற்காக ஜபம் பண்ணப் போறேளா" என்றார். இதில் ஒரு சூட்ச்சுமம் அடங்கியிருப்பது பின்னர்தான் தெரிய வந்தது.

சித்தனருள்.................. தொடரும்!

10 comments:

  1. தங்களின் வரிகளை படிக்கும்பொழுது, நான் நானாக இல்லாமல், தாங்கள் உணர்ந்தவற்றை, அரூபமாக தங்கள் மூலம் உணர்ந்ததற்கு தங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  2. _/\_ஓம் சிவசிவ ஓம்_/\_
    ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!

    காலையில் எதிர் பார்த்து இருந்தேன். பதிவு வரவில்லை, இன்று வராதோ என்று மனது ஏங்கியது. என் வேலை டென்ஷன்-ல் மறந்தும் விட்டேன்.
    தாமதமாக வந்தாலும் "தங்கமான" பதிவு. ஐயா, எப்படி அனுபவத்திருப்பார் என்று தெரியவில்லை, ஆனால், நமக்கும் இந்த மாதிரி தரிசனம் கிடைக்காத என மனம் ஏங்குகிறது.

    தயிர்சாதம் திருவாதிரை களியாக மாறியதை சொல்ல வார்த்தைகள் இல்லை. ஆந்தைகளும் ஓநாய்களுமா, சித்தர்களையும் முனிவர்களையும் விரும்புவதில்லை, மனித உருவில் அலையும் சில ........................ளும் விரும்புவதும் இல்லை. நாம் வணங்குவதும் அவர்களுக்கு பிடிப்பது இல்லை. ஆனால் எல்லாம் அவன் கருணை மழை.

    அகத்திய சித்தரின் அடுத்த அருளுக்காக காத்து இருக்கிறோம். ஐயன் எங்களுக்கும் அருளட்டும்.

    _/\_ஓம் சிவசிவ ஓம்_/\_
    ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!

    ReplyDelete
  3. ஸ்ரீ அகஸ்திய குரு சமர்ப்பணம்

    முன் ஜெனமத்தில் நம்முடைய பாவ புணியங்கள் பற்றி அவ்வபோது அரைகுறை மனதோடும் முழு நம்பிக்கை இல்லாமலும் யோசிப்போம்.
    மனதில் தோன்றும் அனைத்திற்கும் கருணையோடு விளக்கம் அளிக்கும் ரிஷியை துதித்து நாம் அனைவரும் நலவழி நோக்கி பயணிபோம்.

    வழிகாட்டல் தொடர,
    வேண்டும்......
    ஜோதிமுருகன்

    ReplyDelete
  4. சூட்ச்சுமம் நிறைந்த பகிர்வுகள்..

    ReplyDelete
  5. _/\_ஓம் சிவசிவ ஓம்_/\_
    ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!

    எல்லாம் அவன் கருணை மழை. அபரிதமான அனுபவம். ஐயாவின் அனுபவங்களை படிக்கும் போது எனக்கு அவர் மீது பொறாமையாக இருக்கிறது.
    என்ன ஒரு தரிசனம். அவரையும் இப்போது நம்மால் தரிசிக்க முடியாது என நினைக்கும் போது என் ஊழ்வினையே நினைத்து வருத்தம்தான் வருகிறது
    சாம்பார் சாதம் திருவாதிரை களியாக மாறியது...... என்னே அவன் திருவிளையாடல்.. ஆந்தைகளும் ஓநாய்களுமா, நம்மில் எத்தனயோ மிருகங்களும்தான் சித்தரையும் முனிவர்களையும் விரும்புவதும் இல்லை.

    அவனுக்கு நிகர் அவனே..

    _/\_ஓம் சிவசிவ ஓம்_/\_
    ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!

    ReplyDelete
  6. thangal padhivugalai padithukkondu varugiren, agathiyarin arulai ninaikkum podhu manathil avarin mel miguntha nambikkai uruvagirathu. nandrigal. Neengal, maraintha thavathiru hanumath dasan avargal sarbaga ezhudhi varugirirgala or ungaludaya anubavangala enbadhai theriya virumbugiren. nandriagal - Ravi, Agathiyar adimai.

    ReplyDelete
  7. ஓம் சிவசிவ ஓம்_/\_
    ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!

    ReplyDelete
  8. ஓம் சிவசிவ ஓம்_/\_
    ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!ஓம் சிவசிவ ஓம்_/\_
    ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!ஓம் சிவசிவ ஓம்_/\_
    ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!ஓம் சிவசிவ ஓம்_/\_
    ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!

    ReplyDelete
  9. ஓம் சிவசிவ ஓம்_/\_
    ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!

    ReplyDelete
  10. நன்றி ஐய்யா நான் தவறான பொருளில்google,லிள் தேடிவந்த எனக்கு நம் குரு அருளையும் என் தவறான புரிதலையும் நன்கு புரியும்படி எழுதிய நீங்களும் என் நிகழ்கால குருவே

    ReplyDelete