என்னிடம் இருக்கும் ஜீவநாடியில் இருந்துதான் அகஸ்தியர் அருள் புரிந்து வருகிறார் என்று இதுவரையில் நினைத்திருந்தேன். ஆனால் வேறு சில நாடிகள் மூலமும் அகஸ்தியர் அருள் புரிகிறார் என்பதை அகஸ்தியர் சொல்ல நான் கேட்ட பொழுது அதிசயித்துப் போனேன்.
முதலில் இந்தக் கிராமத்தில் அடியெடுத்து வைத்தபோது அந்த கிராமத்தின் பெருமை, மலைக்கோயிலின் பெருமை தெரியாமலிருந்தது. கடந்த இரண்டு நாட்களாக எனக்கு அகஸ்தியர் மூலம் கிடைத்த அனுபவத்திற்குப் பின் என்னையும் அறியாமல் அந்தக் கோயிலின் மீது ஓர் ஈர்ப்பு தன்மை ஏற்பட்டது.
இரவில் மட்டும் தேவர்களையும், சித்தர்களையும் ஒலிவடிவாக கண்டு வந்த நான் இப்பொழுது பகலிலும் வழிபடத் தொடங்கினால் என்ன? என்று தோன்றியது. கீழே இறங்கி குளித்து, பூசையை முடித்துவிட்டு மற்றவர்களோடு வீண் அரட்டை அடிப்பதை விடப் பேசாமல் இங்கு வந்து பகல் முழுவதும் த்யானம் செய்வது நல்லது எனத் தோன்றியதை குருக்களிடம் சொன்னேன்.
அவர் "திருவாதிரை" நட்சத்திரத்தைச் சொன்னதும் நேற்றிரவு சாம்பார் சாதமும் தயிர் சாதமும் திருவாதிரைக் களியாக மாறியதற்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கும் என்று என் உள்மனம் சொன்னதால் பகலிலே சிவபெருமானை தரிசனம் செய்ய ஏற்பாடுகளைச் செய்தேன்.
இதற்கிடையில்,
நோய்வாய்ப்பட்ட கர்ணத்தின் தம்பி மனைவி இறைவனடி சேர்ந்துவிட்டதாகவும் மற்ற காரியங்கள் அங்கேயே நடப்பதாகவும் தகவல் கிடைத்தது. எப்படியோ "கர்ணம்" தப்பிவிட்டார். அவர் தம்பிக்கும், அவர் மனைவியிடமிருந்து விடை கிடைத்து விட்டது. இனிமேல் தன் இரண்டாம் மனைவியோடு குடித்தனம் நடத்த காஷ்மீரத்திருக்குப் புறப்பட்டுச் செல்லலாம்.
கர்ணத்தின் தம்பியின் சொத்துக்கள் இனி இந்த மலைக் கோயிலுக்கு சேர்ந்து விடும். அதை வைத்து, ஆகம விதிப்படி விமரிசையாக கோயில் கும்பாபிஷேகம் செய்துவிடலாம். கோயிலுக்குரிய தோஷம் விலகிவிடும் என்று இப்படியெல்லாம் மனதிற்குள் எண்ணிக் கொண்டேன்.
கிராமத்திற்கு சென்று என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு பின்னர் சிற்றுண்டி தண்ணீர் சகிதம் மதியத்திற்கு மேல் மலைப்படி ஏறினேன். விளக்கு, டார்ச் லைட் எதுவும் கொண்டு வராதே. நடு வழியில் படுக்காதே, நந்திக்கு பக்கத்தில் அமர்ந்து கண்ணை மூடிக் கொண்டு த்யானம் செய். தப்பித் தவறிக் கூட கண்ணைத் திறக்காதே - இதெல்லாம் இன்று நள்ளிரவில் நான் கடைபிடிக்க வேண்டிய விதிகள்.
இரண்டு நாள் இரவில் எனக்குக் கிடைத்த அனுபவம் அலாதிதான். இதைவிட மூன்றாவது நாளான இன்று என்ன அதிசயத்தை அகஸ்தியர் எனக்குக் காட்டப் போகிறார் என்ற ஆர்வம் சாயங்காலத்திலிருந்தே ஏற்பட்டது. மலைக்கு வருகிறவர்கள் பலர், சுவாமியைப் பார்க்கிறார்களோ இல்லையோ, நந்தி பக்கத்திலிருந்த என்னை, வினோதமாய்ப் பார்த்தார்கள். மிருகக் காட்சி சாலையில் வினோதமான மிருகத்தைத் தள்ளி நின்று பார்ப்பது போல்தான் என் மனதில் தோன்றியது.
கொஞ்ச நேரம் த்யானம். கொஞ்ச நேரம் மலையை சுற்றி வருதல். கொஞ்ச நேரம் அந்த மலையை சுற்றி உள்ள காட்ச்சிகளை ரசித்தல். கோயிலில் ஏதாவது கல்வெட்டு தென்படுகிறதா? என்று கோயில் மதில் சுவற்றை தடவிப் பார்த்தேன். இப்படியாகச் சாயங்காலம் வரை பொழுதைக் கஷ்டப்பட்டு கழித்தேன். முழுமையாக "த்யானம்" செய்யச் சூழ்நிலை இடம் தரவில்லை.
சாயரட்ச்சை ஆனதும் குருக்கள் கோயில் கதவைப் பூட்டிவிட்டுக் கீழே இறங்கினார். அவரை வழியனுப்பிவிட்டு அமைதியாக நந்தி பக்கம் அமர்ந்தேன்.
திடீரென்று ஒரு குளிர்ந்த காற்று வேகமாக வீசியது. உடம்பை நன்றாகப் போர்த்திக் கொள்ளலாம் என்றால் - ஒரு துண்டைத் தவிர என்னிடம் வேறு எதுவும் இல்லை. இந்த குளிர்காற்று தொடர்ந்து வீசினால் ஒன்று நான் ஜுரத்தால் அங்கேயே படுத்திருப்பேன், அல்லது போனால் போகட்டும் போடா என்று விறு விறு என்று மலையிலிருந்து கீழே இறங்கி, கிராமத்தில் எங்கேயாவது அடைக்கலாமாகியிருப்பேன்.
எனினும் தட்டுத் தடுமாறி என் கைபெட்டியைத் திறந்து அந்தத் துண்டை எடுத்து முண்டாசு போல் கட்டிக் கொண்ட போது என் பெட்டியிலிருந்த அகத்தியர் நாடியை, மறுபடியும் வீசிய காற்று எங்கேயோ தூக்கிச் சென்றுவிட்டது.
எனக்கு உயிர்காத்த அந்த நாடியைத் தொலைத்தது துரதிஷ்டம்தான். பெட்டியை ஒரு ஓரமாகக் காற்றுபடாமல் சாய்த்துவிட்டு அந்த சந்தியாகால இருட்டில் தேடியபொழுது என் கைக்கு எங்குமே கிட்டவில்லை. மாறாக அந்தக் குளிரிலும் நான் வியர்த்துப் போனதுதான் மிச்சம்.
சில சமயங்களில் இக்கட்டான சூழ்நிலையில் நான் மாட்டிக் கொண்டு முழித்தபோது "இந்த நாடியைத் தூக்கி எறிந்துவிட்டால் என்ன?" என்று நினைத்தது உண்டு. ஆனால் இன்றைக்கு உண்மையில் அந்த ஓலைச்சுவடி காற்றினால் தூக்கிச் செல்லப்பட்டபோது ஒரு நிமிடம் ஆடித்தான் போனேன்.
"சரி. எப்படி என் கைக்கு வந்ததோ அப்படியே கை மாறிவிட்டது. எல்லாம் அகத்தியர் இஷ்டம் என்று கஷ்டப்பட்டு என்னை நானே சமாதானப் படுத்திக் கொண்டேன். மேலும் நேரத்தை வீணாக்க கூடாது என்பதால் அலைந்து திரிந்து பார்த்துவிட்டு மறுபடியும் அந்த நந்தியின் காலடியில் அமர்ந்தேன்.
நந்தியின் காலடியில் அமர்ந்ததால் அடிக்கடி அப்போது வீசிக்கொண்டிருந்த குளிர்ந்த வேகமான காற்று இப்பொழுது என் மீது படாமலே சென்றது. அந்தக் காற்றிலிருந்து என்னைக் காப்பாற்ற நந்தி பெருமானே தன் இரு கரங்களுக்கு இடையில் என்னை மிக நன்றாகக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பது போல் ஓர் உணர்வு தலை தூக்கியது.
இப்பொழுது எனக்குக் குளிர் காற்று தெரியவில்லை.
ஒரு உஷ்ணமான மூச்சு என்னைச் சுற்றி வீசியதால் தலையில் கட்டிய முண்டாசுவைக் கழற்றி விட்டேன். நேரமாக நேரமாக என் சட்டை, பனியன் இவற்றையும் கழற்றி விட்டேன்.
காற்று பலமாக வீசிய போதும் நான் வெறும் மார்புடன் இருந்தேன். குளிர்வாடை தெரிய வில்லை. ஆனால் ஒரு உஷ்ணமான காற்று மட்டும் என்னைச் சுற்றி வீசிக் கொண்டிருந்ததை உணர முடிந்தது. அது எப்படி எங்கிருந்து வருகிறது என்பது தெரியவில்லை. அப்படியே விட்டு விட்டேன்.
நேரமாக நேரமாக நான் கண்ணை மூடிக்கொண்டு த்யானத்தில் ஈடுபட்டேன். இடை இடையே ஜீவநாடி காணாமல் போனதால் மனம் சஞ்சலப்பட்டது. முழுமையான த்யானம் எட்டவில்லை. பசியும் என்னைவிட்டு விலகிவிட்டதால் கொண்டு வந்திருந்த சாப்பாடு அப்படியே கிடந்தது.
கண்ணை மூடிக்கொள்ளச் சொல்லியிருந்ததால் அப்படியே மூடிக் கொண்டு தியானத்தை செயல் படுத்த ஆரம்பித்தேன். எவ்வளவு நேரம் இப்படியே இருந்திருப்பேனோ தெரியாது. திடீரென்று மெட்டி ஒலிச் சத்தம் கேட்டது.
சட்டென்று கண்ணைத் திறந்தேன். மெட்டிச் சப்தம் காணவில்லை.
மறுபடியும் அகத்தியரை வேண்டி த்யானம் செய்து கண்ணை மூடிக் கொண்டேன். இப்போது பல மெட்டிகளின் சப்தங்கள் கேட்டது. நறுமணப் புகை நாசியில் நுழைந்தது. மேளம் துந்துபிகள் முழக்கம், ஆலயமணி ஓசை, மங்கலமான வேத கோஷம் காதில் விழ ஆரம்பித்தது.
சர்வ வியாபியான சிவ பெருமானும் பார்வதி தேவியும் நடுவில் அமர்ந்திருக்க மலர்களால் வாசனைத் திரவியங்களால் சித்தர்கள், தேவர்கள், அர்ச்சனை அபிஷேகங்களைச் செய்கிறார்கள்.
விஷ்ணு - சிம்ம முகத்தோடு லெட்சுமி தேவி சகிதம், சிவபெருமானுக்கு மங்கள ஸ்நானம் செய்கிறார்.
பிரம்மன், சரஸ்வதி தேவியோடு வந்து சிவபெருமானுக்கு அர்ச்சனைகள், அபிஷேகம் செய்கிறார்.
பிறகு இந்திரர்கள் - முனிவர்கள் - சித்தர்கள் - அபிஷேக ஆராதனை செய்கிறார்கள். எங்கும் மங்கள கோஷம்.
இவையெல்லாம் பத்து நிமிடத்திற்குள் முடிந்துவிட பின்பு பெரும்காற்று ஒன்று வேகமாகக் கருவறையிலிருந்து வெளியேற, அங்கிருந்த அத்தனை பேர்களும் ஒரு நொடி நேரத்தில் மறைகிறார்கள்.
பின்பு வெகுநேரம் எந்தவித சப்தமும் பரிமள வாசனையும் என்னில் படவில்லை. கண்ணை திறந்தேன்.
அமைதியான சூழ்நிலை கண்ணில் தெரிந்தது. நந்தி பெருமான் தன் பிடியிலிருந்து என்னை விட்டுவிட்டது போன்று தோன்றியது. நேற்றைய இரவு போல் என்னைப் பயமுறுத்தும் சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை.
நள்ளிரவு நேரம் என்பதை வானத்து நட்சத்திரங்களும் கிராமத்திலிருந்து அவ்வப்போது குரைக்கும் நாய்களின் சப்தமும் மட்டும் மெல்லியதாக உணர்த்தின.
சற்று முன்னர் நான் கண்டது கற்பனையா? இல்லை நடந்ததா? என்பதை அறியும் முயற்சியில் இறங்கவில்லை.
இதை வெளியில் சொன்னால் அளவுக்கு மீறிய கற்பனை என்று ஒரே பேச்சில் என்னைப் பைத்தியக்காரனாக்கி விரட்டி விடுவார்கள். இல்லையென்றால் கற்பனைக்கும் ஒரு எல்லை உண்டு. அதையும் தாண்டி நான் பேசுவதாக எண்ணி, இந்த சமுதாயத்திலிருந்தே விலக்கி வைத்தாலும் வைக்கலாம். மொத்தத்தில் என்னை நம்பவே மாட்டார்கள். எனவே இதைச் சொல்லாமல் அகத்தியருக்கு நன்றி சொல்லி, அமைதியாக இருப்பதுதான் நல்லது என்ற முடிவுக்கு வந்தேன்.
நேற்று இரவை விட இன்று எனக்குக் கிடைத்த அனுபவம் புதிதுதான். கண்ணை மூடிக் கொண்டு சிவபார்வதியையும் லெட்சுமி நரசிம்மரையும், பிரம்மா சரஸ்வதியையும் இன்னும் பல்வேறு தேவர்களையும் ஒன்று சேர தரிசனம் செய்தது அதைவிட இவர்கள் சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் அபிஷேகம் செய்வதை மானசீகமாக தரிசனம் செய்தது எனக்குக் கிடைத்தது, என் பெற்றோர் செய்த புண்ணியம் தான். இதுதான் உண்மை.
இத்தகைய அபூர்வமான பாக்கியத்தை எனக்கு மூன்றாம் நாள் இரவு அன்று தந்த அகத்தியர், என்னிடமிருந்த நாடியைக் காற்றில் பிடிங்கிக் கொண்டது நான் செய்த பாபம் என்று எண்ணினேன்.
எப்படி எனக்குக் கிடைத்ததோ அப்படியே அதுவும் என் கைவிட்டுப் போயிற்று என்று ஒரு வகையில் திருப்தியாக இருந்தாலும், நிறையப் பேர்கள் எதையும் நம்ப மாட்டார்கள். பொய் சொல்கிறான் என்று தான் பெயர் சூட்டிவிடுவார்கள்.
பல்வேறு மிக முக்கியமான பெரிய பதவியில் நாட்டை ஆளுகின்ற பதவியில் இருப்பவர்கள் எல்லோரும் ரகசியமாகத் தங்களது எதிர் காலத்தைப் பற்றியும், நாட்டின் எதிர்காலத்தைப் பற்றியும் விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் கேட்டுக் கொண்டு சென்ற நேரம்.
நாட்டிற்காகவும் சில காரியங்கள் அப்போது செய்ய வேண்டியிருந்தது. அதற்கெல்லாம் நல்ல வழியைக் காட்டுவதாக அகஸ்தியர் ஏற்கெனவே சொல்லி இருந்தார். இதெல்லாம் இப்போதுதான் என் நினைவுக்கு வந்தது.
அப்படிப்பட்ட நேரத்தில் என் கையிலிருந்து வலுக்கட்டாயமாகப் பிடுங்கிக் கொண்டு சென்று விட்டது மலை காற்று என்று நான் உண்மையைச் சொன்னால், சத்தியமாக ஒருவர் கூட நம்பமாட்டார்கள்.
இந்த நேரத்தில் அப்படி ஒரு சம்பவம் நடந்துவிட்டதை நினைத்து துக்கம் தொண்டையை அடைக்கத்தான் செய்தது. யாருக்கும் கிடைக்காத சில பாக்கியங்களைக் கொடுத்துவிட்டுப் பிடுங்கவும் வேண்டாமே என்று நினைத்து வருந்தினேன். இதனால் பகவான் காட்டிய அந்த அருமையான "காட்சி" முழுமையான சந்தோஷத்தை அனுபவிக்க முடியாமல் போயிற்று.
மறுநாள் விடியற்காலை.
பொல பொலவென்று விடியத் தொடங்கிய காட்சி மனதைக் கொள்ளை கொண்டது. இரவில் சாப்பிடாமல் இருந்த சாப்பாட்டு பொட்டலத்தைப் பக்கத்தில் வைத்துவிட்டு வெற்று வயிற்றில் தண்ணீரை மட்டும் குடித்து முடித்தேன்.
காலையில், குருக்களும் வேறு சிலரும் வேகமாக மலையேறி வந்தார்கள். என்னைக் கண்டு "நேற்றைக்கு என்ன நடந்தது சொல்லுங்கோ" என்று ஆவலாகக் கேட்டார்கள். அவர்களது வேகத்தை சட்டென்று மாற்றக் கூடாது என்பதை உணர்ந்து "எல்லாம் நல்லபடியாக முந்தாநாள் மாதிரி தரிசனம் கிடைத்தது. அதை அப்புறமாகச் சொல்றேன்" என்று கூறவிட்டு மௌனமானேன்.
குருக்களுக்கு என்ன தோன்றியதோ, தெரியவில்லை. "கொஞ்சம் இருங்கோ, கருவறைக்குச் சென்று பார்த்துவிட்டு வருகிறேன். முந்தாநாள் மாதிரி ஏதாவது விசேஷம் நடந்திருக்கிறதா" என்று சொல்லிவிட்டு, கோவில் கதவைத் திறந்தார்.
அடுத்த இரண்டாவது நிமிடத்திலேயே கையில் எதையோ எடுத்துக் கொண்டு பரக்கப் பரக்க என்னை நோக்கி ஓடி வந்தார்.
"என்ன சுவாமி அப்படிச் செய்திட்டேளே. இது ரொம்பத் தப்பாச்சே" என்றார் குருக்கள். அவர் முகத்தில் எள்ளும் கொள்ளுமாக கோபம் வெடித்தது.
"என்ன செஞ்சுட்டேன் விளக்கமாகச் சொன்னா நன்னாயிருக்கும்"
"உங்களை கோயில்ல தங்கச் சொன்னதே ரொம்பத் தப்பு. கர்ணம் இடம் கொடுத்திட்டார். ஊர் மக்கள் சொல்றதும் சரிதான்" என்றார், இன்னும் கடுமையாக.
நேத்திக்கு மிகுந்த மரியாதையோடு சாப்பாட்டுப் பொட்டலம் கொடுத்து வாய் நிறைய உபசரித்த குருக்களா இப்படி பேசுகிறார்? என்று எண்ணி நான் "ஹ்ம். நமக்கு நேரம் சரியில்லை. இல்லைனா அகத்திய நாடி கைவிட்டுப் போகுமா? அல்லது குருக்கள் தான் இப்படி மாறி பேசுவாரா?" என்று மனதில் சொல்லிக் கொண்டேன்.
"செய்யற தப்பையும் செய்திட்டு இப்படி குத்துக்கல் மாதிரி நிக்கறேளே. இது ஊர் மக்களுக்குத் தெரிஞ்சா என்ன நடக்கும்னு தெரியுமோ........... உங்களை மாத்திரம் இல்லை, என்னையும் சேர்த்து மரத்திலே கட்டி உசிரை எடுத்துடுவா!" என்று மேலும் பொருமினார்.
குருக்களோடு மலைமேல் வந்திருந்த இரண்டொருவரின் முகம் மாறியது. என்னை முறைத்துப் பார்த்தார்கள். ஏதோ மிகப் பெரிய விபரீதம் கருவறைக்குள் நடந்திருக்கிறது. இதற்கு மூல காரணம் நான்தான் என்பதை குருக்கள் கண்டு பிடித்து விட்டதாக எண்ணினார்கள் போலும்! ஏற்கனவே இவர்களுக்கு கர்ணத்தின் மீது ஆத்திரம் இருந்தது. இப்போது குருக்களே, கர்ணத்தைப் பற்றிச் சொல்லும்போது அவர்களுக்கு படு குஷியாகி விட்டது.
"என்ன சாமி - என்ன நடந்தது?" கேட்டார்கள் அவர்கள்.
"என்ன நடக்கக் கூடாதோ அது நடந்திருக்கு. நேத்திக்கு திருவாதிரை ஆச்சேன்னு சொல்லி, சிவனுக்குப் பிடித்தமான களியைப் பண்ணி பகவானுக்கு எடுத்து வச்சேன். நைவேத்தியம் பண்ணிட்டு எடுத்துண்டு வரலாம்னு நெனச்சு மறந்துட்டேன். இப்போ வந்து பார்த்தா, இந்த மனுஷன் ராத்திருக்கு உள்ளே போய் அந்த நைவேத்தியத்தை கபளீகரம் பண்ணிட்டு இவருக்கு நான் கொடுத்த தயிர் சாதத்தை அரையும் குறையுமாகச் சாப்பிட்டுவிட்டு அப்படியே எச்சிலோடு கருவறையிலே போட்டுட்டு வந்துட்டார். இப்படிச் செய்யலாமா?" என்றார் குருக்கள், மிகுந்த வருத்தத்துடன்.
எனக்கு இது ஒரு அதிர்ச்சி தகவலாக இருந்தது.
"குருக்களே! அவசரப்பட்டு ஏதாவது சொல்லாதீர்கள். நேத்திக்கு ராத்திரி பூராவும் நான் நந்தி பக்கத்திலேதான் உட்கார்ந்திருந்தேன். இன்னும் சொல்லப்போனால் நீங்க கொடுத்த சாப்பாட்டுப் பொட்டலத்தை அங்கேதான் வெச்சிருந்தேன். சாப்பிடக்கூட இல்லை. வேணும்னா பாருங்கோ" என்று திரும்பிப் பார்த்தேன்.
அங்கே சற்றுமுன் எடுத்து வைத்திருந்த சாப்பாட்டுப் பொட்டலத்தைக் காணவில்லை.
"இதைத்தானே தேடறேள். அது எப்படி அங்கிருக்கும்? பாதி சாப்பிட்டும் சாப்பிடாமல் பொட்டலம் பிரிஞ்சு உள்ளே கிடக்கிறதே" என்று தன் கையிலிருந்த அந்தச் சாப்பாட்டுப் பொட்டலத்தை தூக்கிக் காண்பித்து, தூர எறிந்தார். பின்னர் கை கழுவி வருவதாகச் சொல்லிச் சென்றார். குருக்களது இந்த செய்கை எனக்கு வியப்புக் கலந்த வருத்தத்தைத் தந்தது.
குருக்கள் திரும்பி வந்ததும் அவரிடம் கேட்டேன்.
"குருக்களே - நீங்க ரொம்பக் கோபமாக இருக்கேள். நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுங்கோ. கோயில் கருவறைச் சாவி உங்ககிட்டே தானே இருக்கு? பின் நான் எப்படிக் கோயிலுக்குள் போயிருக்க முடியும்!" என்றேன்.
"என்னது எப்படிப் போயிருக்க முடியுமா? அதற்கு ஆதாரம் இருக்கு - கொண்டு வந்து காட்டட்டுமா" என்றவர் சட்டென்று மறுபடியும் கோவிலுக்குள் நுழைந்தார்.
திரும்பி வரும் பொழுது அந்தக் குருக்களின் கையில் நேற்றிரவு காற்றினால் தூக்கிச் செல்லப்பட்ட காணாமல் போன, அகத்தியரின் ஜீவநாடி இருந்தது.
சித்தனருள்............... தொடரும்!