​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 22 March 2012

சித்தன் அருள் - 64

செய்வினை என்பது இருக்கிறதா இல்லையா என்பதை கேட்கப்போய் அது எங்களை ஆவியைப் பார்க்கும் அளவுக்கு மாற்றிவிட்டதே! இது மேலும் எங்கெங்கு கொண்டு போய் விடுமோ? என்ற பயம் அடிமனதில் கவ்வியிருந்தது.

நண்பர் பொதுவாக தைரியசாலிதான். ஆனால் அமாவாசையன்று பேயைப் பார்க்கப் போகிறோம் என்று நினைத்தவுடன் அவரது கையும் காலும் லேசாகப் பதறத்தான் செய்தது.
அகத்தியர் மூலம் கிடைக்கும் இந்த அமாவசைப் பேய் தரிசனம் நிச்சயம் எந்தவிதக் கெடுதலையும் செய்யாது என்று நம்பியிருந்தாலும், செய்வினைக்கும் இப்படி ஆவியாகத் திரிவதர்க்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கும். இல்லையெனில் அகஸ்தியர் இப்படி ஒரு வாய்ப்பை எனக்கு நல்க முன் வரமாட்டார் என்று எனது உள்மனம் சொல்லியது.

மூதாதையர்களே ஆவியாகத்தான் திகழ்கிறார்கள். அவர்களை அமாவாசை அல்லது அவர்கள் இந்த பூவுலகில் மறைந்த திதியன்று தெவசம் மூலம் ப்ர்ரர்த்தனை செய்யும் போது அவர்கள் அக்னி ரூபமாக வந்து ஆசிர்வதித்து விட்டுச் செல்கிறார்கள் என்பது இந்து மதத்தின் நம்பிக்கை.

இங்கிலாந்து நாட்டில் வாழும் கிறிஸ்துவப் பெருமக்கள் சிலர் கூட பேய் அல்லது ஆவி நடமாடும் வீட்டில் சென்று ஆவியைக் கண்டிருக்கிறார்கள். ஆனால், அதனை படமெடுக்க முயன்று தோற்றிருக்கிறார்கள் என்பது சில ஆண்டுகளுக்கு முன்பு பத்திரிகையில் ஒரு அற்புதமான செய்தி வந்தது. இஸ்லாம் சமூகத்தினர்கள் பெரும்பாலும் இந்த "ஆவி" விஷயத்தில் பயங்கர நம்பிக்கை கொண்டவர்கள். அவர்களில் பலர் இன்றைக்கும் தங்களுடைய சக்தியால் நல்ல ஆவியைக் கொண்டு நிறைய நல்ல காரியங்களைச் செய்து வருகிறார்கள். கெட்ட ஆவியை விரட்டவும் செய்கிறார்கள்.

எனவே "ஆவி" என்பது இன்றைக்கு எல்லாச் சமூகத்தினராலும் முழுமையாக ஏற்றுக் கொள்ளப் படாவிட்டாலும் நிழல் ரூபமாக அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது என்பதால் அகஸ்தியர் சொற்படி கேட்கத் தயார் ஆனேன்.

அன்றைக்கு அமாவாசை!

சிலர் ஆவலோடு நேரில் வந்துவிட்டு 'என்ன ஆவியைப் பார்க்கப் போகிறீர்களாமே எதற்கும் இரும்புத் துண்டு அல்லது கத்தியை எடுத்துக் கொண்டு போங்கள். பிறகு என்ன நடந்தது என்பதை நாளைக்குப் பகலில் சொல்லுங்கள்" என்றனர்.

இன்னும் சிலரோ "சார்! நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீர்கள். அகஸ்தியரை நான் பெரிதும் மதிக்கிறேன். ஆனால் அவரே இப்படி ஆவி, ஏவல் என்று சொல்வதை ஏற்க முடியவில்லை. அவர் சித்தர் தான். ஆனால், ஜீவநாடியில் வந்து எங்களைப் பித்தராக்கிப் பயமுறுத்துவது கூடாது" என்று அரை குறை பகுத்தறிவு வாதியாகப் பேசிவிட்டுப் போனார்கள்.

வழக்கத்தை விட அன்றைக்கு என்னைத் தேடி வந்தவர்கள் கூட்டம் மிக அதிகம்தான். அன்றைக்கு வேறு யாருக்கும் நாடி பார்க்கவில்லை என்றாலும் எல்லோரும் என்னை "பலிகடா" மாதிரி பரிதாபமாகப் பார்ப்பதாகவே எனக்குத் தென்பட்டது. "கண்டிப்பாக வருகிறேன்" என்று சொன்ன நண்பர் அன்று இரவு ஏழு மணி ஆகியும் வரவில்லை. அதோடு நான் என்ன செய்ய வேண்டும் என்பதை அவருடைய ஓலைச்சுவடியப் பார்த்தால் தான் தெரியும் என்பதால், அகத்தியப் பெருமானை பிரார்த்தனை செய்து கொண்டு ஓலைச்சுவடியைப் பிரித்தேன்.

"வேங்கடவன் பெயர் கொண்டிட்டோன் இனி இங்கு வரமாட்டான். மனதளவில் பயந்திட்டான். மங்கை நல்லாள் போட்ட தூபத்தால் இந்நேரம் அவன் திருவள்ளூர் திருமாலின் சன்னதியில் தரிசனம் செய்கிறான். நாற்பது கல் தொலைவில் நடுவீதியில் அய்யனார் சிலை நிற்கும். அங்கு நின்று ஐயனை வேண்டினால் நாயொன்று அங்கு வரும். அந்த நாயின் பின்னே சில தூரம் செல்க. ஆங்கோர் அரைகுறைப் புதிய கட்டிடம் தெரியும். அதன் தெற்குப்புறம் உள்ள மரத்தடியில் நில். பின் மேற்கொண்டு யாம் அங்கு வந்து உரைப்போம். சட்டெனப் புறப்படு. நடு சாம நேரத்தில் கட்டாயம் நீ அங்கு நிற்க வேண்டுமென அருளாசி" என்று வழி காட்டினார் அகஸ்தியர்.

நண்பர் சமீபத்தில் தான் திருமணமானவர். அமாவாசையன்று ஆவி பார்க்கப் போவதாகப் பெருமையுடன் தன் மனைவியிடம் சொல்லியிருக்கிறார். தன் கணவருக்கு எதாவது ஆகிவிடக் கூடாதே என்று பயந்த அவரது மனைவி, குய்யோ முறையோ என்று வீட்டில் உள்ள பெரியவர்களை எல்லாம் கூட்டி, அவரை மிரட்டி திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் சன்னதிக்கு அழைத்துச் சென்று இருக்கிறார்.

ஆவியைப் பார்ப்பதைவிட ஆண்டவனைத் தரிசனம் செய்வதுதான் சிறந்தது. அதிலும் திருவள்ளூரில் அமாவாசை தரிசனம் விசேஷம் ஆயிற்றே என்று கட்டாயப்படுத்தி இழுத்துச் சென்றதை அகஸ்தியர் அப்படியே எனக்கு ஜீவநாடியில் புட்டுப் புட்டு வைத்துவிட்டார்.

இதை பின்னர் நண்பரும் ஒப்புக் கொண்டார் என்றாலும் என் கூட வராதது அவருக்கு வருத்தம்தான்.

இனியும் தாமதிப்பதில்லை என்று உடனடியாக ஜீவ நாடியை மாத்திரம் தூக்கிக் கொண்டு அகஸ்தியர் சொன்ன வழியில் நான் மட்டும் தனியாகப் பயணம் செய்தேன்.

என்னை காரிலோ அல்லது இரு சக்கர வண்டியிலோ கூட அங்கு வந்து விடுவதற்கு யாரும் முன் வரவில்லை என்பது ஆச்சரியம்தான்.

அகஸ்தியர் சொன்ன ஊர் வந்தது. பஸ்ஸிலிருந்து இறங்கினேன். அந்த நடு ரோட்டில் மூச்சுவிடும் நபராக நான் ஒருவன். மூச்சுவிடாத ஆனால் கம்பீரமாக மீசையும், அரிவாள், கத்தி, கதை சகிதம் மிக உயரமான இடத்தில் அசையாமல் அய்யனார் சிலையும்தான் இருந்தது.

சுற்று முற்றும் பார்வையைச் செலுத்தினேன்.

அது ஒரு சாதாரண கிராமம். தனித்தனியாக தள்ளித் தள்ளி குடிசைகள் இருந்தன. வயலை பிளாட்டிர்க்காக கூறுபோட்டு வைத்திருந்ததற்கு அடையாளமாகச் சதுர மூலைகளில் வெண்கற்கள் ஒன்றிரண்டு அந்த அமாவாசை இருட்டிலும் கண்ணில் தெரிந்தது.

மின்மினிப் பூச்சிகள் வட்டவட்டமாக சுற்றிப் பறந்தது மனதிற்கு லேசான உற்சாகத்தை வரவழைத்தது. நான் இறங்கிய "பஸ்" கண்ணுக்கெட்டிய தூரம் சென்று மறைந்தது. அதுதான் அந்த கிராமத்திற்குச் செல்லும் கடைசி பஸ் என்பதால் வேறு யாரும் என் கண்ணில் தென்படவில்லை.

கையோடு கொண்டு சென்ற டார்ச்சை அடித்து என் கடிகாரத்தில் மணி என்ன என்று பார்த்தபொழுது அது இரவு மணி பதினொன்று நாற்பது என்பதை காட்டியது. இன்னும் அரைமணி நேரத்தில் நாம் ஆவியைப் பார்க்கப் போகிறோம். இது ஒரு புது அனுபவமாக இருக்கும் என்று படபடப்புடன் நின்ற பொழுது என் முன்னால் வெகு நேரமாக படுத்துக் கொண்டிருந்த ஒரு கருப்பு நாய் சட்டென்று எழுந்தது. காதுகளைக் கூராக்கி நிமர்த்திக் கொண்டு செல்ல நானும் அந்த நாயைப் பின் தொடர்ந்து சென்றேன்.

வழியில் நத்தை ஓடுகள், சிறு சிறு சரளைக் கற்கள், உடைந்த மண்பானைச் சட்டிகள், முள் செடிகள், மேடு பள்ளங்கள், சீரான ரோடு இல்லாததால் சில சமயம் சின்னச் சின்னக் கற்களும் கடுமையாகப் பாதத்தைப் பதம் பார்த்தது.

திடீரென்று.............

பத்து ஆந்தைகள் ஒன்றாகச் சேர்ந்து அலறியதுபோல் சப்தம். என் திடமான மனதையும் உறைய வைத்தது. ஒரு சமயம் "இப்படியே திரும்பிவிடலாமா" என்று கூட மனம் பயத்தால் சஞ்சலப்பட்டது.

சற்று பிரார்த்தனை செய்ய ஓலைச் சுவடியை அங்கேயே திருப்பிப் பார்த்தேன்.

"அஞ்சற்க, அடியேன் துணையிருக்க பயமேன்? தடங்கலின்றி நடக்கும் உன் பயணம்" என்று ஓளி ரூபமாக அருளினார் அகஸ்தியர்.

தாகம் நாக்கை வாட்டியது.

பக்கத்தில் வயலுக்கு நீர் இறைக்கும் ஒரு கிணறும், அருகிலே தண்ணீர் தொட்டியும் கட்டப்பட்டிருந்தது. தப்பித் தவறிக் கிணற்றில் விழுந்துவிடக் கூடாது என்பதற்காக மார்பு படபடக்க மெதுவாக அந்தத் தண்ணீர்த் தொட்டி அருகே நின்றேன்.

இருட்டாக இருப்பதால் அதில் தண்ணீர் இருக்கிறதா இல்லையா என்பது கூடத் தெரியவில்லை. மெதுவாக அதன் நடுவே கையால் துழாவினேன்.

தண்ணீர் இருந்தது!

தண்ணீரை இரு கைகளாலும் எடுத்து நன்றாகக் குடித்தேன். முகத்தையும் அலம்பிக் கொண்டேன்.

மீண்டும் டார்ச் ஒளியில் நடைபாதைக்கு வந்தபோது அந்தக் கருப்பு நாய் எனக்காகவே காத்திருப்பது போல் அங்கேயே நின்று கொண்டிருந்தது. நான் அதனருகே வந்ததும் வழி காட்டுவதைப் போல் எனக்கு முன்பு வேகமாகச் சென்றது.

ஏதோ ஒரு சக்திக்குக் கட்டுப் பட்டு இழுத்துச் செல்வது போல் நான் போனேனே தவிர என் சுய சிந்தனையோடு செல்வதாக அப்போது எனக்குத் தோன்றவில்லை. "நான் யார்? எதற்காக அந்த நாயின் பின் சென்று கொண்டிருக்கிறேன்? இப்படி ஒரு சூழ்நிலை அவசியமா?" என்று நினைக்கத் தோன்றாதது இப்பொழுது நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது.

அந்த கருப்பு நாய் அறையும் குறையுமாகக் கட்டப்பட்டு அப்படியே போடப்பட்டிருந்த ஒரு கட்டிடத்தின் முன் நின்றது தான் தாமதம்,

எங்கிருந்து தான் அந்த நாய்க்கூட்டம் வந்ததோ தெரியவில்லை. எல்லாமே ஒன்று சேர்த்து ஒரே குரலில் அந்த கட்டிடத்தை சுற்றி பெருமளவில் ஊளையிடத் தொடங்கின. ஆனால், அந்த கருப்பு நாய் மட்டும் குறைக்கவில்லை. அப்படியே நின்றது. இதுவரைக்கும் என்னை அந்தக் கட்டிடத்திற்குள் அழைத்துச் சென்றதாக எண்ணிக் கொண்டிருந்த அந்தக் கருப்பு நாய் இதற்குப் பிறகு என் கண்ணில் தட்டுப்படவில்லை. இது எனக்குப் பெருத்த ஆச்சரியத்தை உண்டு பண்ணியது. ஆனால், அந்த ஊரே நடுங்கும் படி இருபது அல்லது இருபத்தைந்து தெரு நாய்களின் கூட்டம் ஊளையிட்டுக் கொண்டே எதையோ ஒன்றைத் துரத்துவது என் கண்ணில் பட்டது.

"அந்த ஏதோ ஒன்று" எந்த எந்த திசையை நோக்கிச் செல்கிறதோ அந்த திசையை நோக்கி அந்தத் தெரு நாய்கள் துரத்தும், ஊளையிடும். சட்டென்று அந்த உருவம் நின்றால் அந்த நாய்களும் நிற்கும். ஊளைச் சத்தம் மட்டும் அந்த இருட்டையே கிழித்துக் கொண்டு அலறும்! பயந்து கொண்டே பின் வாங்கும். சுமார் ஏழு நிமிடம் இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டு, அந்த கட்டிடத்தின் தெற்கேயும், வடக்கேயும் நடந்தது.

"இது தான் ஆவியா? இதைப் பார்க்கத்தான் நான் இங்கு வந்தேனா?" என்று நினைத்து அங்கேயே அகத்தியரின் ஓலைச் சுவடியைப் புரட்டினேன்.

"பொறுத்திருந்து பார். அருகிலுள்ள மாடிப்படிகளில் ஏறும் வரை பைரவர்களின் ஊளைக் குரல் தொடரும். பின் அந்த மாடிப்படியில் நீயும் ஏறுக" என்று சொல்லி மறைந்துவிட்டார் அகஸ்தியர்.

நாய்களின் இத்தனை ஊளைகள், அங்கு குடிசை போட்டு இருப்பவர்களை எழுந்திருக்கச் செய்யவில்லை. எனவே ஒருவர் கூட கையில் டார்ச், கம்போடு அந்தக் கட்டிடம் பக்கம் வரவே இல்லை.

கட்டிடத்திற்கு காவல்காரர் என்று யாரும் இல்லை. இருந்திருந்தால் என்னைக் கண்டதும் "யாரது" என்று கையில் டார்ச்சோடு அல்லது லைடோடு வந்திருப்பார்.

அனால் யாரும் எட்டிக் கூடப் பார்க்கவே இல்லை.

அல்லது இந்த ஊளையிடும் நாய்களை விரட்டவாவது குரல் கொடுத்திருப்பார். ஆனால் குரலே கேட்கவில்லை.

அச்சமயம் பார்த்து என்னருகே, ஒரு உருவம் மெதுவாக நடந்து வெளிப்புறமாக இருந்த மாடிப்பக்கம் செல்வது போன்று உணர்வு. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மெதுவாக என் சட்டைப் பையிலிருந்த டார்ச்சை எடுத்து அந்த உருவ நிழல் மீது அடித்தேன்.

ஆனால்,

என்னதான் அமுக்கி பார்த்தும் "டார்ச்சிலிருந்து" வெளிச்சம் வரவே இல்லை. எவ்வளவோ தட்டிப் பார்த்தேன். "பாட்டரி" புதியதாக வாங்கிப் போட்டது.

இன்னும் சொல்லப் போனால் "டார்ச்சும்" புதுசுதான். ஆனால் என்னதான் முயற்சி செய்தும் "டார்ச்" வேலை செய்யவில்லை.

ஒரு நிமிடம் திக்கு முக்காடிப் போனேன். திரும்பி செல்ல வழியை எப்படிக் கண்டுபிடிப்பது என்ற பயமும் இப்பொழுது ஒட்டிக் கொண்டது.

"சரி" அகஸ்தியர் பார்த்துக் கொள்வார். எது நடக்கிறதோ அது நடக்கட்டும் என்று என் மனச் சஞ்சலத்திற்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்துவிட, அந்த உருவம் நின்ற மாடிப் படியைப் பார்த்தேன்.

"அது" மாடிப்படியில் ஏறுவதும் பின்னர் இறங்குவதுமாகத் தோன்றிற்று. மாடிப்படி ஏறினால் நாய்கள் ஊளையிடுவதை நிறுத்திவிடும். திரும்பவும் மாடிப்படியிலிருந்து இறங்கினால் வெளியே சுற்றி இருக்கும் நாய்கள் அதனை துரத்தும். இது ஒரு சமயம் வேடிக்கையாகவும் இருந்தது. அதே நேரத்தில் வயற்றில் புளியையும் கரைத்துக் கொண்டு இருந்தது.

சுமார் பத்து நிமிடங்கள் இந்த அபூர்வமான காட்ச்சியைக் கண்டு வியந்து கொண்டிருந்தேன்.
பிறகு நாய்கள் மெல்ல விலகத் தொடங்கின. ஊளைச் சத்தம் குறைந்ததும் நான் மெள்ள மாடிப்படியில் கால் வைத்தேன்.

அடுத்த நிமிடம்.

யாரோ அசுர வேகத்தில் என்னைத் தூக்கி மொட்டை மாடி கொண்டுவிட்டது போல் உணர்ந்தேன்.

ஏதோ, அகஸ்தியர் ஜீவநாடியை வைத்து நிறையப் பேர்களுக்கு நல் வழியைக் காட்டிக் கொண்டிருந்த எனக்கு, "இப்படிப்பட்ட விவகாரத்தில் மாட்டிக் கொண்டது எந்த விதத்தில் லாபம்?" என்று அப்போது எண்ணத் தோன்றியது.

ஆனால்.....

இந்த "ஆவி" விவகாரம் காணாமல் போன ஒரு இளம் பெண்ணைப் பற்றியது. செய்வினை என்றால் என்ன? என்பதற்கு அடையாளமாக அவள் இருக்கிறாள் என்பதும், அகஸ்தியர் எனக்கு எடுத்துக் காட்டவே இங்கு வரவழைத்தார் என்பதும் புரிந்தது.

மொட்டை மாடியில் என்னை அசுர வேகத்தில் தூக்கிவிட்ட சக்தியை நான் நினைத்துப் பார்க்கும்முன் என் கண்ணிற்கு நேர் எதிரில் மங்கலான பாவாடை சட்டை தாவணியோடு ஒரு பெண் உருவம் மிக நன்றாக, அந்த அமாவாசை நள்ளிரவு ஒரு மணியில் தெரிந்தது.

இப்போது நானும் அதுவும் - நேருக்கு நேர் மிக அருகில் நின்று கொண்டிருந்தோம்.

சித்தனருள் ........... தொடரும்!

5 comments:

  1. அகத்தியர் சொன்னார் என்ற ஒரே காரணத்திற்காக இவர் இந்த கட்டிடத்திற்கு தனியாக சென்று இருக்கிறார் என்பது மிகபெரிய விஷயம். இவர் எப்பேர்பட்ட சரணாகதியை அகத்தியரிடம் கொண்டுள்ளார் என்பதிற்கு இதுவே சான்று. சரணாகதி ஒன்றே சித்தர்களின் தரிசனத்திற்கு வழி.

    ReplyDelete
  2. I was married on 2000.Till now no child.I want to see jeevanadi. please send your address. My mail id.minashi1972@gmail.com.I am eagrly waitting for your reply.

    ReplyDelete
  3. அகஸ்தியர் அருள் கிடைக்க எனக்கும் அருள் புரிய வேண்டும் உங்கள் முகவரி தெரிந்து கொள்ளலாமா my mail..veeramanishanmugam30@gmail.com

    ReplyDelete
  4. எனக்கு கடன் நிறைய உள்ளது. இதற்க்கு பரிகாரம் இருக்கா. mail jsindhu31@yahoo.com

    ReplyDelete