விடை தேடி முக்கண்ணனிடம் செல்லலாம் என்றவுடன், பத்மநாபர் கோவிலின் ஒருவிஷயம் அடியேன் கவனத்துக்கு வந்தது. அடியேன் கேள்விப்பட்டவரை, இங்கு போல் எங்குமே இல்லையே என்று உணர்ந்தேன்.
பெருமாள் கோவில் இருக்கும் எந்த ஊரிலும், சிவபெருமான் கோவில் இருக்கும். சிவபெருமான்தான், பெருமாள் கோவிலின் ஷேத்ரபாலகர். பெருமாள் கோவிலின் மொத்த உரிமையும், நடக்கிற விஷயங்களை கட்டுப்படுத்துவதும், காவல் காப்பதும், ஒரு க்ஷேத்ர பாலகரின் கடமை. இது இறை விதி.
பத்மநாபா சுவாமி கோயிலின் நான்கு திசைகளிலும், சிவபெருமான் கோவில்கொண்டு அமர்ந்திருப்பது, யோசிக்க வேண்டிய விஷயம். இதை யாரும் கவனிப்பதில்லை என்பதே உண்மை.
மறுபடியும், எங்கு செல்வது, எங்கு தொடங்குவது என்கிற கேள்வி சுழன்றது.
ஒருநாள்,
மாலையில், தெற்கு வாசலில் உறையும் சிவன் கோவிலுக்கு சென்றேன். நான்கு கோவில்களில், தெற்கு வாசல் கோவிலே அருகில் என்பதால், அடிக்கடி செல்கிற பழக்கம் உண்டு. கேள்வி கேட்டால், பதில் கிடைக்கும். அதுவும் எதிர்பாராத நேரத்தில், ஆச்சரியப்படும் விதமாக இருக்கும்.
உள்ளே பூசாரியும், கோவிலின் நிர்வாக ஊழியரும் இருந்தனர். மாலை தீபாராதனை முடிந்துவிட்டபடியால், யாரும் இல்லை. உள்ளே சென்று இறைவன் முன் நின்று அடியேனின் வேண்டுதலை கொடுத்தேன்.
பிரசாதம் வழங்கப்பட்டது. பெற்றுக்கொண்டு திரும்பும் பொழுது, ஒரு எண்ணம் உதித்தது. சிறிது நேரம் கோவிலுக்குள் அமர்ந்து செல்லலாமே என்று. ப்ரதக்ஷிணம் செய்து முன் புறம் வந்து இறைவனின் இடது புறம் தரையில் அமர்ந்தேன். அமர்ந்த இடத்திலிருந்து இறைவனின் லிங்கத்திருமேனி தெளிவான காட்சி. அப்படியே அதை கண்மூடி உள்வாங்கிட, ஓம் நமசிவாய என்கிற ஜபம் உள்ளில் உதித்தது.
எவ்வளவு நேரம் த்யான ஜெபத்திலேயே இருந்தேன் என தெரியவில்லை. யாரோ கடந்து உள்செல்வதும், சற்று நேரத்தில் வெளியே செல்வதும் உணரப்பட்டது.
மனதுக்கு திருப்தி வந்ததும், த்யானம் கலைந்தது. எழுந்து வணக்கம் கூறிவிட்டு கோவிலுக்கு வெளியே வந்தேன்.
மனம் ஒன்றி நடக்கத் தொடங்கியவுடன், "திருச்சிற்றம்பலம்" என்ற சப்தம் கேட்டது.
நிமிர்ந்து பார்க்க வயதான ஒருவர் நின்று கொண்டிருந்தார். மார்பில் கை விரல்களை வைத்து, தலை தாழ்த்தி "சிவசிதம்பரம்" என்றேன்.
"இப்ப போனா பத்மநாபரை தரிசனம் செய்ய முடியுமா?" என்றார் கோவில் தெற்கு வாசலை சுட்டி காட்டியபடி.
"ஹ்ம்ம்! இப்ப போனா தரிசனம் கிடைக்கும்" என்றேன்.
வெள்ளை வேஷ்டி, வெள்ளை அங்கவஸ்திரம் அணிந்திருந்தார். நீண்ட நரைத்த தாடி. வாசியோகியாக இருக்கவேண்டும் எனத்தோன்றியது.
"கேள்விக்கான பதில் கிடைத்ததா?" என்றார்.
"இல்லை!" என்றேன்.
"ஏன் ரொம்ப அலையணும்! சிவபுராணம், குறிப்பாக சிவபெருமான்-பார்வதியம்மை திருமண கட்டத்துக்கு முன் பாருங்க. பதில் கிடைக்கும். சிவசிந்தனை என்னவென்று புரியும்!" என பதில் கூறி, வேகமாக கோவிலை நோக்கி நடக்கத் தொடங்கினார்.
தலையசைத்து நன்றி கூறி, அவர் போவதை பார்த்து நின்றேன்.
யார் இவர் என்று கூட யோசிக்க தோன்றவில்லை. "கேள்விக்கான பதிலை இறை தரவேண்டும் என நினைத்தால், ஏதேனும் ஒரு வழியை திறக்கும்" என்ற அகத்தியரின் வாக்குதான் நினைவுக்கு வந்தது.
அடுத்தவாரம், நண்பரின் உதவியுடன், சிவபுராணம், பெரியபுராணம், சிவமஞ்சரி, ருத்ரப்ரச்னம் போன்ற நூல்களில் ஆராய்ச்சி தொடர்ந்தது. நிறைய உண்மைகள் புரியத்தொடங்கியது. அவற்றை சுருக்கி அடியேனுக்கு தெரிந்த எளிய மொழியில் கீழே தருகிறேன்.
பாரத கண்டத்தை "கர்மா பூமியாக" விவரித்து தீர்மானம் நிறைவேற்றியதே சிவபெருமான்தான். கைலாசத்தில், பாரதத்தின் வடகிழக்கு என்கிற "ஈசானத்தில்" தான் அமர்ந்தார். தனக்கு சரி நிகரான ஒருவர் பாரதத்தின் தென்மேற்கு பகுதியான கன்னிமூலையில் அமர வேண்டும் என விரும்பினார். கர்மபூமி, வளர்ச்சியை கர்மம் வழியாகத்தான், மெதுவாக அடையும். அப்படிப் பட்ட நிலையில், எதிர் வினையாற்றும் சக்திகள், ஈசான மூலை வழியாகவும், கன்னிமூலை வழியாகவும் உள்புகுந்து அழிக்க நினைக்கும். அந்த முயற்சியை தடுத்து நிறுத்த சிவபெருமான் எடுத்த தீர்மானத்துக்கு, நாராயணன் தான் அமர்ந்தார். கைலாசத்திலிருந்து அகத்தியப் பெருமான், நிறய வேலைகளுடன் தென்புலம் நோக்கி அனுப்பி வைக்கப்பட்டார். நாராயணனுக்கு அனந்தன்காட்டில் கோவில் கட்டுவது, தாமிரபரணி நதியை உருவாக்குவது, இறைவன் அமர நினைத்த இடங்களில் எல்லாம் கல்யாணக்கோலத்தை காட்டி கோவில் கட்டி அமர்ந்தது, விந்திய மலை தடங்கலை விலக்கியது, என பலவிஷயங்களும் அதில் அடங்கும். பஞ்சேஷ்டி வந்து ஐந்து விதமான யாகங்களை செய்து இறைவன், இறைவியின் ஆசிர்வாதத்துடன் பொதிகை வந்தடைந்தார்.
திருவட்டாறில் ஆதிகேசவப் பெருமாளை ஆராதனை செய்து, பத்மநாபபுரத்தில் இருந்து சேர நாட்டை ஆண்டு வந்த மன்னருக்கு இறைவனின் தீர்மானத்தை எடுத்துரைத்து, அனந்தன் காட்டில் கோவில்கட்ட வைத்ததே அகத்தியர்தான். அனந்தன்காட்டில் பத்மநாபர் வந்துறைந்த பொழுது, கலியுகமும் ஆரம்பமானதாக புராணங்கள் கூறுகிறது. இறைவனின் மிக உன்னதமான தீர்மானத்தை நிறைவேற்றும் பொழுது, தங்கத்தால் ஸ்ரீசக்ரமும், சுதர்சன சக்கரமும் செய்து, அகத்தியப்பெருமான் தன் தவவலிமையை பெருக்கி அந்த சக்கரங்களில் பகிர்ந்து, பத்மநாபாருக்கு கீழே பதித்து, தன் சமாதியாக்கினார். அன்று அகத்தியர் பகிர்ந்து கொண்ட தவவலிமையும், இறைவனின் தீர்மானமும் இன்றுவரை பாரத கண்டத்துக்கு அரணாக நின்று காத்து வருகிறது.