​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 7 February 2019

சித்தன் அருள் - 794 - அகத்தியப்பெருமான் அருளிய ஒரு பாடம்/அனுபவம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியப் பெருமான் அருளிய எத்தனையோ அனுபவங்களில், வேறு ஒரு அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!

இது நடந்து ஒரு ஐந்து ஆண்டுகளாகியிருக்கும்.

அடியேன் வேலை பார்க்கும் அலுவலகத்தில் ஜனவரி மாதம், ஒரு தொகையை, அடியேன் விண்ணப்பித்தால், மருத்துவத்துக்கு செலவு செய்ததற்காக திருப்பித் தருவார்கள். எல்லோரும் இதை, தங்களுக்காகவோ, அல்லது தங்களை சார்ந்திருக்கும் குடும்பத்தார் பெயர் சொல்லியோ வாங்குவார்கள். மற்றவர்களுக்கு எப்படி என்று தெரியாது. அடியேனை பொருத்தவரை, அந்த பணத்தை வாங்கிய பின் பார்த்தால், யார் பெயரை சொல்லி வாங்குகிறேனோ, அவர்கள் மருத்துவ சிகிர்சைக்கு, அதை செலவு பண்ணுகிற சூழ்நிலையை, அந்த பணம் பண்ணிவிடும். இப்படி ஒவ்வொரு வருடமும், தகப்பனாரோ, அடியேனோ அல்லது என் மனைவி, மகளோ, யாராவது ஒருவர் மாட்டிக்கொண்டு விடுவார்கள்.  எவ்வளவோ முயற்சி செய்தும் அதை தடுக்க முடியவில்லை. சரி! இனிமேல் அந்த பணத்தை வாங்க வேண்டாம், என தீர்மானித்தேன்.

அலுவலகத்தில், இந்த பணத்தை தருகிறவர்கள், இருக்கிற பக்கமே போவதை நிறுத்திவிட்டேன். அங்கு சென்றால்தானே, ஞாபகம் வரும், ஏதேனும் எண்ணம் மாற்றம் வந்துவிடும், என்கிற உணர்வு இருந்தது.

ஒரு வியாழக்கிழமை, அகத்தியரை தரிசித்துவிட்டு, வீட்டுக்கு வரும் வழியில், ஒரு உணவு விடுதி முன் நின்று காப்பி சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பொழுது, வயதான ஒருவர் வந்து, "அய்யா! உடல் நலமின்றி வாழ்கிறேன். மருந்து வாங்க வேண்டும், கொஞ்சம் காசு தந்து உதவ முடியுமா?" என்றார்.

அவரை கூர்ந்து கவனித்தேன். காலம் அவருள் மிகப் பெரிய பாதிப்பை கொடுத்திருந்தது. மிகுந்த சிரமத்துடன் நின்று கொண்டிருந்தார். உடல் படும் வேதனை, அவர் மூச்சில் தெரிந்தது.

அந்த வருடம், அலுவலக நிர்பந்தத்தால் விண்ணப்பித்து வாங்கிய பணம், கையில் இருந்தது.

அதை எடுத்து அவரிடம் நீட்டி "இந்தாருங்கள். இதை வைத்து மருந்து வாங்கிக்கொள்ளுங்கள்" என்றேன்.

"மிக்க நன்றி! ஆனால் எனக்கு இவ்வளவு பணம் வேண்டாம்!" என மறுத்தார்.

"பரவாயில்லை, வாங்கிக்கொள்ளுங்கள்! ஒரு மாதத்திற்கு நீங்கள் யாரையும் தேடி போகவேண்டாம். அவ்வளவுக்கு மருந்து வாங்கிக் கொள்ளுங்கள்" என்று கூறி வழியனுப்பி வைத்தேன்.

இதை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர், அவர் சென்றபின் "நிறைய ஏமாற்றுகிறவர்கள் இருக்கிறார்கள். நீங்க ஏன் இவ்வளவு கொடுக்கிறீங்க! என்ன தேவையோ அவ்வளவுக்கு கொடுத்தால் போதுமே" என்றார்.

"கொடுக்க வேண்டும் என தீர்மானித்தபின், அதை பற்றி யோசிப்பதில்லை. வாங்கியவன் தவறு செய்தால், அவன் சுமக்கும் என் கர்மா, அவனுக்கு மிக பாரமாகும். ஆதலால், நல்லதே நடக்கிறது என்று நினைத்துக் கொள்வோமே" என்று பதில் கூறி விலகினேன்.

அந்த வருடம், எந்தவிதமான உடல் பாதிப்பும், அடியனின் வீட்டில் யாருக்கும் வரவில்லை. பொறுமையாக நடப்பதை கவனித்துக் கொண்டிருந்த அடியேனுக்கு, சில விஷயங்கள் புரிய ஆரம்பித்தது.

"அடுத்தவர் பிரச்சினை தீர உதவுகிறவன் பிரச்சினையை, இறைவன் இறங்கி வந்து, தீர்த்து வைப்பான்" என்கிற அகத்தியப்பெருமானின் அருள் வாக்கு உண்மை என்று உணரத்தொடங்கினேன்.

உடனேயே சித்த மார்கத்தில் அகத்தியப் பெருமான் வேறு என்னென்ன அறிவுரைகளை அளித்துள்ளார் என்று தேடத் தொடங்கிய பொழுது, அடியேன் அசந்து போகிற அளவுக்கு, அடியேனால் நினைவில் சுமக்க முடியாத அளவுக்கு அறிவுரைகள் உள்ளது என தெரிய வந்தது. உண்மையாக சொல்வதென்றால் அடியேனுக்கு ஒரு ஜென்மம் போதாது, அனைத்தையும் சோதித்துப்பார்த்து அனுபவப்பட.

"இங்கிருப்பது அனைத்தும் உண்மை. நம்புகிறவர்கள் நம்பட்டும், அவர் அருளால் முடிந்தவரை நாள் விஷயங்களை நம் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தி பார்த்துவிடுவோம்" என்று தீர்மானித்தேன்.

அடுத்தவருடம், அதே ஜனவரியில், அந்த பணம் கைக்கு வந்ததும், ஒரு குழந்தையின், பள்ளிக்கூட செலவுக்கு வைத்துக்கொள்ளுங்கள் என புத்தகம், ஆடை, என படிப்புக்குத் தேவையான விஷயங்களை நோக்கி அந்த பணத்தை திசை திருப்பினேன். அடியேனின் வாழ்க்கையில், அது ஒரு தெளிவு பெறும் தருணமாக மாறியது. அதன் பின் குடும்பத்தில் நிறையவே நல்லது நடந்தது.

ஒரு வருடம், ஜனவரியில் பணம் வந்தும், அதைப் பெற்றுக்கொள்ள யாரும் வரவில்லை. அடியேனும் யாரையும் தேடிப் போவதில்லை, என்று தீர்மானித்து அமைதியாக இருந்தேன். மார்ச் மாதம் வந்தும் யாரும் வரவில்லை.

"சரி! அப்படியே இருக்கட்டும்! நேரம் வரும்பொழுது பார்த்துக்கொள்ளலாம்" என தீர்மானித்தேன்.

அந்த வாரம் வியாழக்கிழமை, பலராமபுரத்திலுள்ள, அகத்தியர் கோவிலுக்கு சென்றேன். எப்பொழுதும் போல, விளக்குபோட்டு, சுலோகம் சொல்லி, "அவர் ஏதேனும் சொல்வாரா!" என ஆவலுடன் அவர் முன் எட்டிப்பார்த்து காத்திருந்தேன்.

அமைதி........................... நீண்ட அமைதி!

உத்தரவு எதுவும் இல்லாத நிலை. 

சட்டென அடியேன் அறியாமல், உள்ளிலிருந்து ஒரு பிரார்த்தனை அவரை நோக்கி வந்தது. என்ன நடக்கப்போகிறது என்றறியாமல் அவர் முன் சமர்ப்பித்தேன்.

"அய்யனே! பணம் கைக்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது. அது அப்படியே உள்ளது. யாரேனும், தேவை உள்ளவர்களை அனுப்பிவைத்தால், உங்கள் அருளால், அவர்கள் குடும்ப படிப்பு செலவுக்கோ, மருத்துவ செலவுக்கோ, இது போய் சேரும். ஏதேனும் ஒரு நல்ல விஷயத்தை செய்திட, உங்கள் அருள் வேண்டும்!" என பிரார்த்தித்தேன்.

இப்படிப்பட்ட எளிய பிரார்த்தனை, அத்தனை வேகமாக, அடுத்த நாளே நிறைவேற்றப்படும் என அடியேன் எதிர்பார்க்கவில்லை.

"அப்படிப்பட்டவர், நம் குருநாதர்" என அடியேன் உணர்ந்த நாளாக அது அமைந்தது.

சித்தன் அருள்.................. தொடரும்!

8 comments:

 1. ஓம் லோபாமுத்ரா சமேத அகஸ்தியர் அய்யா திருவடிகள் போற்றி போற்றி. ஓம் ஓதியப்பர் திருவடிகள் போற்றி போற்றி. ஓம் விநாயக சித்தனே மூத்தோனே போற்றி போற்றி . ஓம் பதினெண் சித்தர்கள் திருவடிகள் போற்றி போற்றி .

  ReplyDelete
 2. Ayya nama muluvadumaga ayyanai nambinal namaku kidakum anupavoma thani ayya.yariyo annupi atarkana mudivai aruluvar.om agatisya namaha.sri lopamudra samade agatisya potri.

  ReplyDelete
 3. ஓம் அருள்மிகு மூத்தோனே போற்றி போற்றி போற்றி

  ஓம் அருள்மிகு ஓதியப்பர் முருகப்பெருமான் போற்றி போற்றி போற்றி

  ஓம் அருள்மிகு ஸ்ரீ மனோன்மணி அம்பாள் சமேத அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் போற்றி போற்றி போற்றி

  ஓம் அருள்மிகு ஸ்ரீ லோபமுத்ரா தாய் சமேத அருள்மிகு அகத்தியர் அய்யன் போற்றி போற்றி போற்றி

  ஐயா தாங்கள் சொல்வது முற்றிலும் தெய்வவாக்கு. என் மகளுக்கு தினமும் இரவு தூங்கும் முன் இறை நடத்திய செயல் ஒன்றை கதையாக சொல்வது வழக்கம். அதேபோல் அன்றும் கூறினேன். இறைவன் அல்லது மகான்கள் அல்லது சித்தர்கள் நம் அருகில் இருக்கிறார் என்பதை எப்படி உணர்வது அவர்கள் நம் கண்களுக்கு தெரிய வேண்டும் என்பாள். பல முறை நான் என் குழந்தைக்கு காமித்துள்ளேன் பெரியவர்கள் அருகில் இருக்கும் போது நறுமணம் கமழும், எழுமிச்சை மணம் வரும். ஆனால் அன்று எனக்கு இப்பொழுதே புரிய வேண்டும் என்றால். நான் அய்யனை வணங்கி விட்டு அவளை சமாதானம் செய்தேன். அடுத்த கணமே அம்மா எழுமிச்சை பழம் மணம் வருது உங்களுக்கு தெரியுதா என்றால். என் அருகில் மணம் அடிக்கவில்லை....அவள் தலைப்புரம் சென்றால் அப்படி ஒரு மணம் வேறு எந்த பக்கம் சென்றாலும் மணம் இல்லை. வந்திருப்பது யாரென்று தெரியவில்லை,யாராக இருந்தாலும் ஆசிர்வாதம் செய்யுங்கள் என்று வேண்டிக்கொண்டோம். பிறகு என் மகளுக்கு நன்றாக புரிந்தது கூடவே பயமும் வந்தது.இறையின் அருள் கிடைப்பது மிகவும் பாக்யம் சந்தோஷமாக இருக்கனும் பயப்பட கூடாது என்று கூறி உறங்க வைத்தேன். எல்லாம் வல்ல ஈசன் திருவிளையாடல்.

  ReplyDelete
 4. அகத்தியருக்கு ருத்ராக்ஷ மாலையுடன் உள்ள ஸ்படிகமணி லிங்கம் மிகவும் அருமை. தங்களுக்கு நன்றிகள் பல.

  ReplyDelete
 5. பல ஜென்மங்களில் செய்த புண்ணியம்தான் சித்தன் அருள் மூலம் எங்களுக்கு படிக்கும் பாக்கியமும் மற்ற நன்மைகளும் கிடைத்து வருகிறது

  ReplyDelete
 6. குரு பாதங்கள் சரணம்
  உங்கள் உள்ளம் தங்கம் ஐயா...
  மறுநாள் வந்து பணம் வாங்கி கொண்டு சென்றவர் மகான் தானே ஐயா???!!!

  ReplyDelete
 7. ஒம் லோபமுத்ரா சமேத அகத்தீசாய நமக!

  ReplyDelete