​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Monday, 4 February 2019

சித்தன் அருள் - 793 - அகத்தியப்பெருமானுக்கு லிங்கம் சேர்ந்த ருத்ராக்ஷ மாலை!


ஓதியப்பர் கழுத்தில் இருக்கும் ருத்ராக்க்ஷ மாலையை அவர் கேட்டுவிட்டாலும், முறையாக, அதை ஓதியப்பரிடம் உரைக்காவிட்டால், இவர் கடைசி நிமிடத்தில் ஏதேனும் விளையாடிவிடுவார் என்கிற எண்ணம் வந்ததால், அன்றே வீடு வந்து சேர்ந்ததும், அகத்தியப்பெருமானின் கட்டளையை ஓதியப்பரிடம் ஒப்புவித்தேன்.

"ஓதியப்பா! என்ன விளையாட்டு நடக்கிறது என்று அடியேனுக்கு புரியவில்லை. குருநாதர் இதை கேட்டுவிட்டார். ஆதலால், அடியனின் குருநாதருக்கு, நீ உன் கழுத்தில் இருக்கும் மாலையை தந்துதான்  ஆகவேண்டும். அடுத்தவாரம் வியாழக்கிழமை, இது அவரிடம் சென்று சேரவேண்டும். பார்த்து ஏற்பாடு செய்!" எனக் கூறிவிட்டேன்.

குடும்பத் தேவைகளுக்காக சென்னை செல்ல வேண்டி வந்ததால், அந்த நேரத்தில் "மாலை" விஷயம், மொத்தமாக மனதை விட்டு சென்று விட்டது. நான்கு நாட்களுக்குப் பின் ஒரு நாள் இரவு ஓதியப்பர் முன் அமைதியாக அமர்ந்திருக்கும் பொழுது, ஸ்படிக லிங்கம் கண்ணில் பட்டது.

"அடடா! இந்த வாரம் வியாழக்கிழமைதானே, இந்த மாலையை அகத்தியப்பெருமானுக்கு கொண்டு கொடுக்க வேண்டும். ஞாபகம் கொடுத்ததற்கு மிக்க நன்றி ஓதியப்பா!" என பிரார்த்தித்தேன்.

"இறைவனுக்கு, ஏதேனும் அணிவிக்க கொடுக்க வேண்டும் என்றால், அதை வாழை இலையில் வைத்து கொடுப்பது மிக உத்தமம்" என அடியேனின் குருநாதர் ஒருமுறை உபதேசித்திருந்தார். புதன் கிழமை இரவு, அது ஞாபகம் வரும் பொழுது, மணி 9 ஆகிவிட்டது. வீட்டில் வாழை இலை இருக்கிறதா எனத் தெரியாது. மாலை ஆறு மணிக்குமேல் எந்த இலையையும் பறிக்கக்கூடாது என எண்ணம் உண்டு. என்ன செய்வது என யோசித்து, மாலை விஷயத்தை மட்டும் மனைவியிடம் கூறினேன்.

"நல்லது செய்து விடுங்கள். ஆனால், குரு கூறியதுபோல், வாழையிலையில் சுற்றி கொடுங்கள். ஒரு சிறிய வாழையிலை இன்று மதியம் தோட்டத்திலிருந்து பறித்து வைத்திருக்கிறேன். அதை காலை, சுத்தம் பண்ணி தருகிறேன். அதில் வைத்து  கொண்டு செல்லுங்கள்" என்றாளே பார்க்கலாம்.

அடியேன் மனதுள் சிரித்துக் கொண்டே ஓதியப்பரை பார்த்தேன். "இந்த ஏற்பாடெல்லாம், உன் வேலை தானா!" என மனதுள் கேட்டேன். புன் சிரிப்புதான் பதிலாக வந்தது.

மறுநாள் காலை, வேலைக்கு கிளம்பும் முன், என்னவோ ஒரு எண்ணம் வரவே, மாலையை ஓதியப்பரிடம் வேண்டிக்கொண்டு, எடுத்து, வாழை இலையில் சுற்றி, பைக்குள் வைத்து, அலுவலகம் கொண்டு சென்றுவிட்டேன். பலமுறை, அகத்தியப்பெருமான் அடியேனை சோதித்துள்ளார். அவரை தரிசிக்க புறப்பட வேண்டிய நேரம் வரும் முன், நிறைய பிரச்சினைகளை கொடுத்து, தடுத்துவிடுவார். அது அடியேனின் அனுபவம். இந்த முறை, எது தடுத்தாலும், உடலில் உயிர் இருந்தால், எப்படியாவது கோவிலுக்கு சென்று விடவேண்டும் என தீர்மானித்துவிட்டேன்.

மூன்று மணி முதல், பிரச்சினைகள் வரத்தொடங்கியது. பொறுமையாக அவைகளை கையாண்டு, 6.00 மணிக்கு வீடு வந்து சேர்ந்தேன்.

அகத்தியர் கோவிலுக்கு கிளம்பும் பொழுது, ஓதியப்பரிடம் "நீ கூட இருந்து இதை நல்லபடியாக முடித்து வை! ஆனா, உத்தரவு வாங்கித் தந்த பூஜாரி இன்று இருந்தால் நல்லது!" எனக்கூறினேன்.

"இன்று அவன் இல்லை. இருப்பவரிடம் கொடுத்தால் போதும். என் கழுத்தில் வாங்கிப் போட்டுக்கொள்வது, என் வேலை. அதை நான் பார்த்துக் கொள்கிறேன்" என வாக்கு வந்தது.

"அட! சரிதான்! ஒருவாரமாக குருநாதர் காத்திருக்கிறார் போல! அப்படி என்ன அந்த மாலையில் உள்ளது?" என மனதுள் கேள்வி வந்தது.

திரு.சிவா என்கிற நண்பர் சிற்றுண்டி கடை நடத்துகிறார். அவரையும் கோவிலுக்கு கூட அழைத்து செல்லலாம் என்று எண்ணம் வந்தது. அவர் கடைக்கு சென்ற பொழுது ஒரு காப்பி சாப்பிட்டுவிடலாமே என்ற யோசனை வந்தது. அருந்தும் அந்த நிமிடத்தில், ஒரு பழையகால நண்பர் வந்துவிட்டார். மரியாதை நிமித்தமாக பேசிவிட்டு சென்றாலும் 10 நிமிடம் ஆகிவிடும். நடக்கிற நிகழ்ச்சிகளை மனம் உற்று பார்க்கத் தொடங்கியது. என்ன செய்கிறாய் பார்ப்போம்! என அகத்தியர் சவால் விடுவது போல் தோன்றியது. அமைதியாக இருந்தேன்.

மணி 7.10. 

7.30க்கு அகத்தியர் கோவில் நடை சார்த்திவிடுவார்கள். எப்படியாயினும் 30 நிமிடங்கள் வேண்டும், சென்று சேர.

ஒரு பிரார்த்தனையை அகத்தியரிடம் வைத்தேன்.

"இன்று என்ன நடந்தாலும், இந்த மாலை உங்கள் கழுத்தில் வந்து சேர்ந்துவிடவேண்டும். அப்படி முடியாமல் போனால், ஓதியப்பர் அடுத்து என்ன விளையாட்டு நடத்துவார், எனத்தெரியாது. எல்லாம் உங்கள் அருளால், செயல்படவேண்டும்" எனக் கூறினேன்.

போன வாரத் தொகுப்பில் அகத்தியர் அடியவர்களிடம் கேட்டுக்கொண்டேன், எல்லோரும் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் என. 

எத்தனை பேர்கள் பிரார்த்தனை செய்தார்களோ, அத்தனை பிரார்த்தனையும், சக்தி ரூபமாக அடியேனுள் புகுந்தது.

பிறகு வண்டி ஒட்டியது அடியேன் இல்லை. சுய நினைவே இல்லை. பொதுவாக, போகும் வழியெங்கும் நிறைய வாகன நெரிச்சலும், கடந்து போகும் மனிதர்களும், நேரத்தை எடுத்துக்கொள்வார்கள். ஆனால் அன்றைய தினம், எல்லாமே அகத்தியரால், எற்பாடு செய்யப்பட்டிருந்தது.  எங்கள் வண்டி செல்லும் நேர்கோட்டில், வழி கிடைத்துக்கொண்டே இருந்தது. மிகுந்த வேகம். எல்லாம் சரியாக நடந்து கொண்டிருந்தது. வழியெங்கும் உள்ள போக்குவரத்தை கட்டுப்படுத்துகிற விளக்குள், போகப்போக,  பச்சை நிறமே காண்பித்தது.

பாதி தூரம் கடந்த பின் நண்பரிடம் ஒரு கேள்வி கேட்கத் தோன்றியது.

"சிவா! இன்னிக்கு அகத்தியப்பெருமானின் சித்தன் அருள் தொகுப்பை" படித்தாயா!" என்றேன்.

"இல்லீங்க! நேரம் கிடைக்கவில்லை!" என்றார்.

"என்னது! இந்த நேரம் எவ்வளவு முக்கியமானதுன தெரியாமலேயே என் கூட வருகிறாயே! எத்தனை பேருடைய பிரார்த்தனை இந்த நேரத்தில் நம்மை வழி நடத்துகிறதுன தெரியுமா! நீங்களெல்லாம், என் கூட இருப்பதே வேஸ்ட்!" என்றுவிட்டேன்.

30 நிமிடத்தில் முடிய வேண்டிய யாத்திரை, 20 நிமிடத்தில் நிறைவு பெற்றது.

கோவில் வாசல் முன் இறங்கியதும் "முதலில் அகத்தியப்பெருமானின் சித்தன் அருளை வாசித்த பின், உள்ளே வந்தால் போதும்" என்று நண்பரிடம் கூறிவிட்டு ஓடி கோவிலுக்குள் சென்றேன்.

சென்றது சரியான நேரம். அகத்தியப்பெருமானுக்கு, தீபாராதனை நடக்கப் போகிற நேரம். அதன் பின் நடை சார்த்திவிடுவார்கள்.

உத்தரவு வாங்கித்தந்த பூஜாரி இல்லை. வேறு ஒருவர் இருந்தார்.

அவரை அழைத்து, "வாழை இலையில் வைத்திருந்த ருத்ராக்க்ஷமாலையை" அவரிடம் கொடுத்து, "இதை அகத்தியர் குருநாதர் கழுத்தில் சார்த்திவிடுங்கள். கூடவே, இந்த இரண்டு பூமாலைகளும், இரண்டு பேருக்கும்!" என்றேன்.

ருத்ராக்ஷ மாலையை கையில் வாங்கி பார்த்தவர் "சாமி! இது எப்படி உங்ககிட்ட!" என்றார்.

"எல்லாம் ஒரு நாடகம்! இப்போது புரியாது. பின்னர் கூறுகிறேன்!" என்றேன்.

அவரும் சன்னதிக்குள் சென்று அந்த மாலையை அகத்தியப்பெருமானின் கழுத்தில் அணிவித்தார்.

அடியேன், பிற தெய்வ மூர்த்தங்களை பார்ப்பதற்காக விலகினேன்.

சித்தன் அருள் தொகுப்பை படித்து முடித்த நண்பர், ஆச்சரியம் தாங்காமல், அகத்தியர் சன்னதி முன் வந்து நின்றார். அங்கேயே நின்றார்.

ஒரு சுற்று ப்ரதக்ஷிணம் செய்துவிட்டு, அகத்தியர் சன்னதி முன் வர, தீபாராதனை நடந்தது. குருநாதர் கழுத்தில், ருத்ராக்க்ஷ லிங்க மாலை ஜொலித்துக் கொண்டிருந்தது.

தீபாராதனை முடிந்து, தீர்த்தம் தெளிக்கப்பட்டு, கற்பூரம் ஆரத்தி எடுத்துக்கொள்ள காட்டப்பட்டது.

அருகில் நின்ற நண்பர் "பாருங்களேன்! அவர் என்ன சந்தோஷமாக, சிரித்தபடி நிற்கிறார். இப்படி நான் அவரைப் பார்த்ததே இல்லை!" என்றார்.

 "எனக்கு என்னவோ, முருகப்பெருமானே, மாலை அணிந்து சந்தோஷமாக இருப்பது போல் தோன்றுகிறது" என்றேன்.

பின்னர் கண் மூடி தியானித்து, கீழ் வரும் பிரார்த்தனையை சமர்ப்பித்தேன்.

"அய்யனே! என்ன நடக்கவேண்டுமோ அது நன்றாக நடந்தது. மிக்க நன்றி. இதற்காக எத்தனையோ அடியவர்கள் பிரார்த்தனை செய்துள்ளார்கள். அத்தனை பேர்களும் நலமாக, நிம்மதியாக வாழவேண்டும். லோகம் க்ஷேமமாக இருக்கவேண்டும். தர்மம், நல்லபடியாக தழைக்க வேண்டும். இதே போல் எல்லா அகத்தியர் அடியவர்களுக்கும் ஏதேனும் ஒரு அனுபவத்தை கொடுத்து, இன்பத்தை அருளுக, ஆட்கொள்க. எந்த அளவுக்கு, இன்று, இது நிறைவாக இருந்தது என்று புரியவில்லை. ஏதேனும் காட்டிக்கொடுத்தால் சந்தோஷப்படுவோம்" என்றேன்.

அகத்தியப்பெருமான் சிரித்தபடியே இரு கை உயர்த்தி ஆசிர்வதிப்பது போல் காட்சி கொடுத்தார்.

பணிவாக நன்றி கூறி, குருதக்ஷிணை கொடுத்தபின், விடை பெற்றோம்.

அகத்தியர் அடியவர்களே! உங்கள் வாழ்விலும், இது போல் சூழ்நிலைகள் உருவாக்கலாம். சிக்கென அகத்தியர் உத்தரவை சிரமேற்கொண்டு பிடித்து, இனிய அனுபவங்களை பெற வேண்டும், என பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேதே அகத்தியர் திருவடிகளில், சமர்ப்பணம்!

சித்தன் அருள்............................ தொடரும்!

3 comments:

 1. ஐயா... தாங்கள் தங்களின் அருள் நிறைந்த அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது அந்த இடத்தில் அந்த நேரத்தில் நானும் அங்கு உள்ளதை போன்ற உணர்வு. இது அகத்தியர் அய்யன் ஓதியப்பர் முருகப்பெருமான் அருள் அன்றி வேறு என்ன என்று சொல்வது....
  ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் போற்றி போற்றி போற்றி
  ஓம் அருள்மிகு ஓதியப்பர் முருகப்பெருமான் போற்றி போற்றி போற்றி

  தாங்கள் சொல்வது போல் நிறைய அனுபவங்கள் நடந்துள்ளது நடந்துகொண்டிருக்கிறது... என் குழந்தைகளும் உணர்கிறார்கள்...

  ReplyDelete
 2. ஐயா

  அகத்தியர் கழுத்தில் உள்ள ருத்திராக்ஷ ஸ்படிக மாலை தெளிவாக தெரியவில்லை. நிழற்படத்தை மிக பெரிய உருவில்
  பிரசுரம் செய்யயவும் இது எந்த ஊர் கோவில் என்றும் சொல்லவும் .

  வாரத்திற்கு குறைந்தது இரண்டு முறையாவது சித்தன் அருளில் தொகுப்பை பதிவிட வேண்டுகிறேன் .

  குருவிடம் கேட்டு புதிய தொடர் ஒன்றை தொடங்கவும்

  வெண்ணைக் கடல் (அகத்தியர்) பக்கத்தில் உள்ளீர் . கடைய ( தகவலை கேட்க) தயங்க வேண்டாம்

  ReplyDelete
 3. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் போற்றி போற்றி போற்றி
  ஒம் லோபமுத்ரா சமேத அகத்தீசாய நமக

  ReplyDelete