ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகள் போற்றி!
["கிரௌஞ்சகிரி ஓதியப்பர் பால் கட்டி பிரசாதம்" அகத்தியர் அடியவர்களுக்கு வந்து சேர்ந்திருக்கும் என நினைக்கிறேன். மேலும் ஒரு சிலருக்கு இனிமேல்தான் வந்து சேரும். தூரத்தில் உள்ள அடியவர்கள் பலரும், இன்னும் கிடைக்கவில்லை என்று மெயில் அனுப்பியிருந்தனர். கிடைக்காதவர்கள், மெயிலில் தெரிவித்தால், மறுபடியும் அவர்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்கிறேன்.
இந்த பிரசாதமானது ஓதியப்பர், அகத்தியர் அருளினால், உங்களுக்கு கிடைத்திருக்கிறது. அடியேன், உங்கள் இருவருக்கும் இடையில் நின்று பிரசாதத்தை வாங்கி உங்களிடம் கொடுக்கிற வேலையை செய்தேன் என்பது மட்டும் உண்மை. அந்த வேலையையும், அவர்களே செய்வித்தார்கள், என்பதுதான் சரி. "இதை செய், இதை கொடு" என்று உத்தரவு வந்து புரிந்துவிட்டால், பின்னர் ஒரு பொழுதும் எதையும் எதிர்பார்ப்பதில்லை அடியேன். எதிர்பார்ப்பது என்பதே வாழ்க்கையில் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். செய்வதை செய்துவிட்டு, போய்க்கொண்டே இருக்கவேண்டும் என்கிற எண்ணம், அடியேனுடையது.
பிரசாதம் அனுப்புவதற்கான செலவை, திருப்பி தருவதாக பலரும் அடியேனிடம் கூறி இருந்தார்கள். மிக உயர்ந்த பரம்பொருள், உங்கள் அனைவருக்கும், ஒரு அருளை தர விரும்பியது உண்மை. அதற்கு பிரதி உபகாரம் என்பது என்றுமே இல்லை. மனிதன், இறையை உணர்ந்து மேலேறவேண்டும், உள்ளிருக்கும் வாசனைகள், நீர்த்துப்போய், விரைவாக வாழ்க்கையை கடந்து செல்லவேண்டும். அதற்காக, இறைவன் ஏற்பாடு செய்து தந்த ஒரு சிறு பரிசு என இதை வைத்துக்கொள்ளுங்கள்.
சரி! ஏதேனும் ஒரு நல்ல விஷயம் செயலில் கொண்டு வரவேண்டி விழைபவர்களுக்கு, அடியேன் ஒன்று கூறிக்கொள்கிறேன். ஒரு வேளை உணவு, ஏதேனும் சாதுக்களுக்கோ, பசிப்பவர்களுக்கோ வாங்கி கொடுத்து உங்கள் மனதை திருப்தி படுத்திக் கொள்ளுங்கள். இதுவன்றி, அடியேனுக்கு எதுவும் வேண்டாம்.
இந்த பிரசாதத்தை, உள்ளுக்கு சாப்பிட்டு, அம்பாளின் அருளையும், ஓதியப்பரின் ஞானத்தையும் பெற்றுக்கொள்வதற்காக, உங்களுக்கு அளிக்கப்பட்டது. இறை உள்புகுந்து, அனைத்தையும், உங்களுக்கு புரியவைக்கும். இனி, கோடகநல்லூர் அகத்தியர் பூசையை தொடருவோம்.]
அகஸ்தியர் பூஜைக்காக நிறையவே சாமான்கள் வாங்கவேண்டி இருந்தது. திருநெல்வேலி டவுண் சென்று, ஒவ்வொன்றாக பார்த்துப் பார்த்து வாங்கிட, நேரம் போனதே தெரியவில்லை. சரியான நேரத்தில், மழை பலமாக பிடித்துக் கொண்டது. எங்கும் நகர முடியாதபடி, வெள்ளப்பெருக்கு. திடீரென்று நினைவுக்கு வர, நாளையும் இதே போல் மழை பெய்தால், அகத்தியர் அடியவர்கள் எப்படி வருவார்கள். பூஜை நல்ல படியாக நடக்க வேண்டுமே! என்ற எண்ணம் உதித்தது. பெருமாளிடம் முறையிடுவதை விட, நம் குருநாதரிடமே சொல்லிவிடுவோம், எனத்தோன்றியது. மனதுள் அகத்தியப் பெருமானை தியானித்து, "அய்யனே! நீங்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். ஏற்கனவே பிரச்சினைகள் நிறைய ஓடிக்கொண்டிருக்கிறது. இதனுடன், வருண பகவானும், தன் பங்குக்கு மிரட்டுகிறார். சரி போகட்டும், நீங்கள் நடத்தும் பூஜை மிக சிறப்பாக இருக்க பார்த்துக்கொள்வீர்கள் என அடியேனுக்கு தெரியும். இருந்தாலும் நீ ஏன் பிரார்த்தனையை வைக்கவில்லை என உங்களிடம் ஒரு கேள்வி எழக்கூடாது என்பதற்காக, இந்த பிரார்த்தனையை சமர்ப்பிக்கிறேன். இப்பொழுது பெய்கின்ற மழை பெய்யட்டும். ஆனால், நாளை காலையில், இந்த மழை கோடகநல்லூருக்கு வரும் அகத்தியர் அடியவர்களுக்கு சிரமத்தை கொடுக்கக்கூடாது. அதை நீங்கள் அருள வேண்டும்" என பிரார்த்தித்துவிட்டு, வாங்கிய பூசை சாமான்களுடன், இரவு 11 மணிக்கு கோடகநல்லூர் வந்து சேர்ந்தோம்.
அடியேன் குழுவுடன் தங்கியிருந்த வீட்டில், அகத்தியர் அடியவர் திரு ஸ்வாமிநாதன் காத்துக்கொண்டிருந்தார்.
"என்ன? கல்லிடைகுறிச்சியில் தங்கிவிட்டு, காலை பூஜைக்கு முன் வருவதாக கூறி சென்றீர்கள்! இப்பொழுது, இந்த நேரத்தில் இங்கிருக்கிறீர்களே!" என்றேன்.
"அங்கு சென்றதும் என்னவோ தோன்றியது! இந்த மழை நீடித்து, காலையில் நான் வர தாமதித்துவிட்டால், நினைத்தது நடக்காது. ஆதலால், அகத்தியர், லோபாமுத்திரை விக்கிரகத்தை இங்கு கொண்டு வந்துவிட்டேன்." என்றார்.
"என்ன? விக்கிரகங்களை எங்கே வைத்தீர்கள்?" என்றேன்.
"இங்கு உள்ளே, பூஜை அறையில் வைத்திருக்கிறேன். நீங்கள் ஒன்று செய்துவிடுங்கள். காலையில், நீங்கள் நீராட செல்லும் பொழுது, இவர்கள் இருவரையும் அழைத்துச்சென்று, அபிஷேக ஆராதனைகளை நீங்கள் நதிக்கரையில் செய்துவிடுங்கள். கோவிலில் பூஜை முடிந்து, திரும்பி செல்லும் பொழுது நான் வாங்கிக்கொள்கிறேன்!" என்றாரே பார்க்கலாம்.
"இல்லை! அது நீங்கள் தினம் அபிஷேக பூசை செய்து வந்த விக்கிரகம்! அடியேன் அதை தொடுவது சரியல்ல. நீங்களே நேரத்துக்கு வந்து அபிஷேக பூஜையை செய்துவிடுங்கள்" என்றேன்.
ஒரு பஞ்சலோக விக்ரகமானது, தனிப்பட்ட ஒருவரின் பராமரிப்பில், அவர் கைப்பட தொட்டு பூசை செய்யும் பொழுது, அவரின் அதிர்வலைகளை உள்வாங்கி , அவரின் மனநிலைக்கு ஏற்ப, அது பிறருக்கு, நல்ல அதிர்வலைகளை கொடுக்கும். புதிதாக ஒருவரின் ஸ்பர்சம் படும்பொழுது, அதன் தன்மையில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். அது எவ்வளவு தூரம் நல்லதாகவே செய்யும் என அடியேனால் உணர முடிவதில்லை, இன்று வரை. அதனால் வேண்டாம் என மறுத்தேன்.
அவர் விடுவதாக இல்லை.
நிறைய வற்புறுத்தியத்தின் பேரில், சரி என சம்மதிக்க வேண்டி வந்தது.
அவரும் நிம்மதியாக கல்லிடைக்குறிச்சி புறப்பட்டு சென்றார்.
அந்த வீட்டு மாமி வந்து "யாரோ ஒருவர், உங்கள் நண்பர் எனச்சொன்னார். அகஸ்தியர், லோபா முத்திரை விக்கிரகத்தை பூசை அறையில் வைத்திருக்கிறார். உங்களுக்கு தெரியும் என்று சொன்னார். எனக்கும் ரொம்ப பிடித்துப்போனது. ஆதலால், விளக்கேற்றி வைத்து, பால், பழம் நிவேதனம் செய்தேன். அதிலொன்றும் தவறில்லையே?" என்றார்.
"உங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் என நினைத்துக்கொள்ளுங்கள். செய்ததெல்லாம் சரிதான்" என்றேன்.
அடுத்தநாள் (22/10/2018), அதிகாலையில் 4 மணிக்கு எழுந்து, டவுனுக்கு சென்று பூமாலை, பூக்கள், போன்றவை வாங்கி வராகி சென்றேன். அதற்கு முன், இரு அகத்தியர் அடியவர்களிடம் சிவபெருமான் கோவிலில் அன்றைய தினம் ஸ்வாமிக்கு அபிஷேக ஆராதனைக்கான விஷயங்களை கொடுப்பதற்கு ஏற்பாடு செய்தேன். எல்லா வருடமும், அகத்தியப்பெருமானின் இந்த பூஜை நாளில், சிவபெருமானை ஒரு பொழுதும் மறந்ததில்லை. ஏன் என்றால், பெருமாள் கோவில் இருக்கும் எந்த ஊரிலும், சிவபெருமான் கோவில் இருக்கும். சிவபெருமான்தான், பெருமாள் கோவிலின் ஷேத்ரபாலகர். பெருமாள் கோவிலின் மொத்த உரிமையும், நடக்கிற விஷயங்களை கட்டுப்படுத்துவதும், ஒரு க்ஷேத்ர பாலகரின் கடமை.
பூஜை சாமான்களை கொடு கொடுத்ததும், சிவபெருமான் கோவில் பூசாரி "வாங்க! உங்களைத்தான் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன்!" என்றார்.
அடியவர்கள் பூஜை சாமான்களை கொண்டு வந்த காரணத்தை கூற முற்பட, அவர்களை கை கட்டி நிறுத்தி, "எனக்கு தெரியும். இன்று பெருமாள் கோவிலில் அகத்தியர் அடியவர்களின் பூஜை! முதல் மரியாதையாக, அப்பனுக்கு பூஜை சாமான்களை அகத்தியர் சார்பாக கொண்டு வந்திருக்கிறீர்கள்!" என பூசாரி கூறிவிட்டு, ஒரு சிறு புன்னகையுடன் வாங்கிக்கொண்டார்.
நடந்ததை பின்னர் கேட்ட பொழுது "ஹ்ம்ம்! எல்லாம் அவர் ஏற்பாடுதான்! நடக்கட்டும்" என்று தோன்றியது.
கோடகநல்லூர் பெருமாள் கோவில் அர்ச்சகரை வெளி பிரகாரத்தில் சந்தித்து, பெருமாள், தாயார், அனைத்து தெய்வ மூர்த்தங்களும் வாங்கின வஸ்திரங்களை கொடுத்து, "எல்லோருக்கும் சார்த்திவிடுங்கள், அடியேன் போய் ஸ்நானம் செய்து வருகிறேன்" என்றபடி, வெளியில் நின்றே பெருமாளை தரிசனம் செய்தேன்.
சட்டென பெருமாளிடம் கூற வேண்டும் என்று தோன்றியது.
மனதுள் கூறினேன்.
"சென்ற வருடம், அடியேன் ஒரு வேஷ்டி வாங்கி தந்த பொழுது, அதை கருடாழ்வாருக்கு உடுத்தி அழகு பார்த்தீர். கடைசி நேரத்தில், தான் அடியேன் தவறை உணர்ந்தேன். ஆதலால், இந்த முறை உங்களுக்கும், கருடாழ்வாருக்கும் ஒரே போல வேஷ்டி வாங்கியிருக்கிறேன். இப்ப என்ன விளையாடறீர்னு பார்க்கிறேன்" என்று கூறினேன்.
சென்ற வருடம் (2017)இல் என்ன நடந்தது?
பெருமாளுக்கென, தேடித் தேடி பெரிய நூல் ஜரிகை போட்டு, சங்கு, சக்கரம், திருமண் போட்ட வஸ்திரத்தை வாங்கி அர்ச்சகரிடம், கொடுத்திருந்தோம்.
முதல் நாள் இரவு, ஒரு பக்தரின் கனவில் தோன்றி, "இன்று கோடகநல்லூரில் எனக்கு திருவிழா. உன் சார்பாக, எனக்கு வேஷ்டி வாங்கித்தா!" என பெருமாள் உத்தரவிட, அதிகாலை ப்ரம்ம முகூர்த்தத்தில், உதறிப்போட்டபடி, தூக்கத்தை கலைத்தார், அந்த திருநெல்வேலிக்காரர். இதில் ஆச்சரியம் என்னவென்றால், கோடகநல்லூர் எங்கிருக்கிறது என அவருக்கு தெரியாது . யாரிடமோ விசாரித்து, இடத்தை அறிந்து, ஒரு கடைக்காரரை வீட்டில் சென்று விஷயத்தை கூறி, காலை 7 மணிக்கே கடையை திறக்க வைத்து, வஸ்திரத்தை வாங்கி, கோவில் வந்து சேர்ந்தார்.
கோடகநல்லூர், வந்தவர், "இங்கே யார் இருக்கப் போகிறார்கள் இந்த நேரத்தில்" என நினைத்து உள்ளே கால் வைத்ததும், அங்கு நிறைய பேர், ஒரு திருவிழா கூட்டமே இருந்திருக்கிறது.
எதுவும் புரியாமல், மெதுவாக உள்ளே சென்று கடைசி தூண் பக்கத்தில் பெருமாளை பார்த்தபடி, காத்திருந்தார்.
அர்ச்சகர், அடியவர்கள் குழு வாங்கிக் கொடுத்த வேஷ்டியை கையில் எடுத்து உள்ளே பெருமாளை நோக்கி நடக்கவும், முதல் முறையாக கைதவறி கீழே விழுந்தது, முதல் தூண் அருகில். சரி, போகட்டும் என, அதை கீழிருந்து எடுத்து மறுபடியும் நடக்க, மூன்றாவது தூண் அருகில் வந்ததும், மறுபடியும் கைதவறி விழுந்தது.
நன்றாக நடக்கிற விஷயங்களை உணர்ந்த அவர், பெருமாளை ஏறிட்டு பார்த்தபடி, ஒரு அடி எடுத்து வைக்க, நான்காவது தூணுக்கு பின் இருந்து வெளிப்பட்ட அந்த பக்தர், "அய்யா! இந்தாருங்கள் வேஷ்டி! பெருமாள் கொண்டுவந்து கொடுக்கச் சொன்னார்! அவருக்கு சார்த்தி விடுங்கள்!" என்று அர்ச்சகர் முன் நீட்டினார்.
அவர் கொடுத்த வேஷ்டியையும், ஜரிகை போட்ட வேஷ்டியையும், பெருமாள் முன் கொண்டு சென்று காட்டி, என்ன செய்ய? என அர்ச்சகர் வினவ, அவருக்கு உத்தரவு வந்தது. அந்த உத்தரவை அறிந்த அந்த நொடியில், "அந்த நாள் >> இந்த வருடம்" அகத்தியர் பூசையின் உண்மையான விஸ்வரூபம், அடியேனுக்கு தெரிவிக்கப்பட்டது, உண்மையை உணர்ந்தேன்.
சித்தன் அருள்................. தொடரும்!