​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 23 August 2018

சித்தன் அருள் - ​766 - ஒரு வேண்டுதல்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சமீபத்தில், ஒரு இடத்தில், நாடியில் வந்து, நம் குருநாதர் அகத்தியப் பெருமான் இவ்வாறு உரைத்தார்.

"இந்த லோகமானது மிக மிக சிரமமான நேரத்துக்குள் மாட்டிக்கொண்டுள்ளது. பூமியும் அதில் ஒன்று. இறைவன் அருளால், அனைவரின் பிரார்த்தனையும் அதனுடன் சேர்ந்தால், மிகப் பெரிய சோதனைகளிலிருந்து தப்பிக்கலாம். ஆகவே, என் சேய்களிடம், எந்நேரமும் பிரார்த்திக்கச்சொல். இறைவன் சன்னதியில் விளக்கேற்றி, இந்த லோகமும், எல்லா ஜீவராசிகளும் க்ஷேமமாக காப்பாற்றப்பட்டு, கரை ஏற்றி விடவேண்டும் என வேண்டிக் கொள்ள சொல்" என்றார்.

அகத்தியர் அடியவர்களே! இதற்கு முன் ஒருமுறை எல்லோரும் வேண்டிக்கொண்டு விளக்கு போட்டது நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன். நிச்சயமாக அதற்கு பலன் இருந்ததால்தான், இம்முறையும், நம்மை அகத்தியர் அழைத்து செய்யச் சொல்கிறார் எனவும் நினைக்கிறேன். வாருங்கள்! அவரவர், வீட்டருகில் உள்ள கோவிலில், லோக ஷேமத்துக்காக ஏதேனும் ஒரு நாளில், மாலை நேரத்தில் விளக்கேற்றுவோம், வேண்டிக் கொள்வோம். இயற்கை சீற்றங்கள் மிக மிக வேகம் கொள்கிற இந்த காலத்தில், சித்தர்கள் துணையுடன், இறை அருளை பெற்று, இந்த லோகம், இப்படிப்பட்ட, சோதனை காலத்திலிருந்து விடுபட வேண்டும், என எல்லோரும் பிரார்த்திப்போம்.

ஓம் லோபா முத்திரா சமேத அகத்தீசாய நமஹ!


சித்தன் அருள்............. தொடரும்!

Thursday, 16 August 2018

சித்தன் அருள் - 765 - சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்!


உண்ணும் உணவு வழி இத்தனை பாபத்தை மனிதன் சேர்த்துக் கொள்வது கூட யாருக்கும் புரியவில்லை, என்பதே உண்மை. இன்னொன்று தெரியுமோ, மனிதர்களை ஆட்டிப்படைக்கவே இறைவன் இனிப்பு, புளிப்பு, உப்பு, காரம் போன்ற சுவைகளை உருவாக்கினான். இதற்குள் மனிதன் அடைபட்டு கிடந்தால், நவகிரகங்களுக்கு தன் வேலையை முடிப்பது எளிதாகும். அதனால், உணவில் எவனொருவன் கவனமாக, கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்கிறானோ, அவன் நவகிரகங்கள் தன் அருகில் வராமல், அவர்கள் பாதிப்பிலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்கிறான் என்று பொருள். அவனிடம் எந்த கெடுதலும் அண்டாது. உடலில் நவகிரகங்கள் பாதிப்புக்கும் அனைத்து வியாதிக்கும் காரணம், உணவு வழியாக உள் செல்லும் பாபங்கள் தான். சரி இதிலிருந்து தப்பிப்பது எப்படி என்று பார்ப்போம்.

எந்நேரமும் உணவை உண்ணும்முன் வலது கையில் நீர் எடுத்து, தனக்கு தெரிந்த ஜபத்தை செய்து, அந்த நீரை தெளித்து, உணவை சுத்தம் செய்த பின் உண்ணலாம். ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் அக்னியானது, வலது உள்ளங்கையில் கொதிப்பாக இருக்கும். மந்திர ஜபம் அதை மெருகூட்டும். அந்த அக்னி நீர் தெளிப்பதால் நிச்சயமாக உணவின் தோஷங்கள் விலகும்.

உண்ணும் முன் இறைவனை அழைத்து, நீயே என்னுள் அமர்ந்து இந்த உணவை உனக்கு படைக்கும் நிவேதனமாக ஏற்றுக்கொள் என பிரார்த்தித்துவிட்டு, முழு சரணாகதி தன்மையுடன் உண்டால், அந்த உணவின் தாத்பர்யம், இறைவனை சென்று சேர்ந்துவிடும். இவனை/இவளை எந்த உணவு தோஷமும்  அண்டாது.

மிக எளிதாக செய்ய விருப்பப்பட்டால், உணவை வாய்க்குள் இடும்பொழுது, "சர்வம் கிருஷ்ணார்ப்பணம், அல்லது சர்வம் சிவார்ப்பணம்" என்று முழு மனதாக நினைத்து உண்ணுவது கூட மிகச் சிறந்த பயனை கொடுக்கும்.

ஒருவன் உண்ணும் சூழ்நிலை அமைதியாக இருக்க வேண்டும். மிக சப்தம் நிறைந்த சூழ்நிலை, வேண்டத்தகாத வார்த்தைகளை பேசுகிற சூழ்நிலைகள் அன்னதோஷத்தை உருவாக்கும். மிக மிக அமைதியாக சூழ்நிலை கிடைத்தால், அது இறைவன் அருளியது என்று உணரவேண்டும்.

சமைப்பவர்கள், சுத்தமாக, நல்ல எண்ணங்களுடன், முடிந்தால் தனக்கு தெரிந்த நன் மந்திரங்களை கூறியபடி சமைத்தால், தெரியாமலேயே உணவில் உள்புகும் தோஷங்கள் விலகிவிடும். இன்றைய காலகட்டத்தில், இங்குதான் அத்தனை அன்னதோஷமும் ஒன்று கூடுகிறது.

உண்ணும் முன் ஒருபிடி உணவெடுத்து, அத்தனை குருவையும், பித்ருக்களையும் நினைத்து பிரார்த்தித்து, அதை பிற உயிரினங்கள் உண்ணக் கொடுத்து, பின் தான் உண்டால், அவனுக்கு அனைவரின் அருளும், ஆசிர்வாதமும் கிடைக்கும். பிற உயிரினங்கள் உண்டாலும், அவன் யாரை எல்லாம் நினைத்து அதை படைத்தானோ, அவர்களை, எங்கு எந்த ரூபத்தில் இருந்தாலும், அந்த தாத்பர்யம் சென்று சேரும். அவனுக்கு சிறப்பான வாழ்க்கை அமையும்.

பசிக்கிறவனுக்கு, புசிக்க அன்னம் கொடுப்பவன், தன் பிணியை அறுக்கிறான். அதை இறை சிந்தனையோடு செய்கிறவன், இறைவனாகவே ஆகிறான், அந்த ஒரு நிமிடத்தில். தன் பசியை புசித்து போக்கிக்கொண்டால், கிடைக்கும் திருப்தியை விட மேலானது பிறர் பசியை போக்கி கிடைக்கும் நிம்மதி. அதை செய்து உணரவேண்டும், இந்த மனித குலம்.

ஒரே ஒரு சிறு இலையை உண்டால் நீண்ட காலங்களுக்கு பசியே வராது. அப்படியும் இறைவன் இங்கு படைத்து வைத்திருக்கிறார். ஒரு இலையால், எந்த வியாதியையும் மாற்றவும் முடியும், ஒரு இலையால் எந்த உலோகத்தையும், தங்கமாகவும் மாற்றமுடியும், என்றபடியும் இறைவன் படைத்திருக்கிறான். விஷயம் தெரிந்த தவசிகள் காட்டில் ஆனந்தமாக பாபத்தை சேர்த்துக்கொள்ளாமல், த்யானத்தில் இருக்க காரணமும் அதுதான். இவைகளில், அவர்கள் கவனம் சிதறாமல் இருப்பதே காரணம். தவசிகள், ஆனந்தமாக இருக்கவும், இவைகளே காரணம்.  

"அனைத்து சித்தர்களும், தவசிகளும், ரிஷிகளும், முனிவர்களும், சித்த வித்யார்த்திகளும், தங்கள் தியானத்தின் முடிவில், மனிதர்களும் இவ்வளவு சிறப்பாக வாழ இறைவன் அருளியத்திற்கு, நன்றியை, அகத்தியப் பெருமானிடம் தான் சமர்ப்பிக்கிறார்கள் என்று உனக்குத் தெரியுமா? எந்த குருவிடம் சமர்ப்பித்தாலும், அந்த விண்ணப்பம், குருவழி அகத்தியப்பெருமானிடம்தான் சென்று சேரும். அவர் காணாத எந்த பிரார்த்தனையையும், இறைவன் ஏற்றுக்கொள்வதில்லை என்பதே உண்மை, என்று உனக்குத் தெரியுமா?" என்று அவர் கூறவும், மனத்தால், இரு கரம் கூப்பி அகத்தியரின் உயர்ந்த நிலையை நினைத்து வணங்கினேன்.

"அடடா! இப்படிப்பட்ட உயர்ந்த ஒரு சித்தரைப் பற்றி தெரிந்து கொள்ள, அவர் வழி நடக்க நமக்கு கிடைத்த மிகப் பெரிய வரமாக இந்த வாழ்க்கை அமைந்துள்ளதே" என்று பூரித்துப் போனேன்.

சித்தன் அருள்.................... தொடரும்!

Thursday, 2 August 2018

சித்தன் அருள் - 764 - சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்!


"முதலில் கர்மா என்பது ஒருவன் செய்கிற செயலினால் விளைவது. அது நல்ல செயலினாலும் உருவாகும், கெட்ட செயலினாலும் உருவாகும். பின்னர், அந்த கர்மாவின் பலனை, எப்பொழுது, எந்த ஜென்மத்தில், எப்படி அந்த ஆத்மா அனுபவிக்க வேண்டிவரும் என்பதை இறைவன்தான் தீர்மானிக்கிறார். ஒரு ஆத்மாவின் கர்மாவானது இரு விதங்களில் கரையும். ஒன்று கர்ம பரிபாலனம். இரண்டாவது கர்ம பரிவர்த்தனம்."

"கர்மபரிபாலனம் என்பது அந்த ஆத்மாவே கர்ம பலனை அனுபவித்து தீர்ப்பது. அனுபவித்து தீர்ப்பதால் கர்மா குறைகிறது. கர்ம பரிவர்த்தனம் என்பது ஒரு ஆத்மாவின் கர்மாவை இன்னொரு ஆத்மா ஏற்றுக்கொண்டு அனுபவிப்பது. இங்கும், ஒரு ஆத்மாவின் கர்மா கரைகிறது. தானே அனுபவிப்பதற்கு, உதாரணம் தேவை இல்லை. எல்லோருக்கும் சந்தேகம் வருவது இரண்டாவது முறையில். அதெப்படி முடியும்! என்கிற எண்ணம் வரும். உனக்குத் தெரிந்த எந்த பெரியவர்களின் வாழ்க்கையை பார்த்தாலும், அது புரியும். உதாரணமாக, ஒரு சிலரை கூறுவதென்றால், இராமலிங்க அடிகளார், ரமண மகரிஷி, ராம்  சூரத்குமார் போன்ற பெரியவர்களை கூறலாம். இவர்கள் இந்த மனித குலத்துக்கு என்ன செய்தார்கள் என்று யாருக்கும் புரியாது. இப்படி எத்தனையோ மஹான்கள் இந்த கர்மபூமியில். அதனால்தான் மனிதகுலம் எத்தனையோ பேரழிவிலிருந்து காப்பாற்றப்பட்டது, என்பது உண்மை" என்று நிறுத்தினார்.

"சரி! விஷயத்துக்கு வருவோம். கர்மாவின் இரண்டு வகை கரைதலை பார்த்தோம்.ஒரு மனிதனின் மொத்த கர்மாவில் 95 சதவிகிதம் பிறருக்கு கொடுப்பதினால், பிறரிடமிருந்து வாங்கிக் கொள்வதினால் வருகிறது என்று முன்னரே பார்த்தோம்.  இந்த 95இல் பாதிக்குப் பாதி உணவினால் வருகிறது. மீதி அவன் செயல்களினால். செயலும், உணவும் சிறந்தால், அவன் சிறப்படையலாம். உணவை சமைக்கிற சூழ்நிலை, உணவு பொருட்களை தருவிக்கிற சூழ்நிலை, உணவை அளிக்கும் சூழ்நிலை, உண்பவன் மனநிலை, இப்படி எத்தனையோ சூழ்நிலைகளில் உருவகப்படுகிற கர்மாவானது, உணவு வழி ஒருவனுக்கு சென்று, அவன் செயல்களை/எதிர்காலத்தை/ அவனின் புண்ணிய/பாவக் கணக்கை  தீர்மானிக்கிறது. தவறான உணவு, உதாரணமாக, அசைவ உணவு, மிருகத்தன்மையைத்தான் ஒருவனுக்கு வளர்த்தும். ஏன் எனில், எந்த உடல் சமைக்கப் பட்டதோ, அதனுள்ளும் ஒரு ஆத்மா இருந்து, தன்னால் இயன்றவரை தன்னை காத்துக்கொள்ள கடைசிவரை போராடியிருக்கும். அந்த போராட்டத்தின்/திணறலின் வீச்சத்தை அந்த உடல் பதிவு செய்திருக்கும். அப்படிப்பட்ட ஒரு உணவை ஒருவன் உண்பானேனில், அவனுக்கு சாத்வீக உணர்வு எப்படி வரும். முதலில் சாத்வீகத்தை அடைந்து, அங்கேயே நின்றால்தானே, தெய்வம், தெய்வீக உணர்வை அவனுள் புகுத்தும். பிறகுதானே அவனுக்கு வாழ்வில் முன் செல்ல இயலும்? இன்னொன்றை புரிந்து கொள்! நீ  சாப்பிடுகிற உணவானது சைவமாக இருந்தாலும், அதை சமைத்தவன் அல்லது பரிமாறுகிறவர், அசைவம் சாப்பிடுபவர்களாக இருந்தால், அவர்கள் அசைவம் சாப்பிட்ட தோஷத்தின் பங்கு, அவர்கள் தயார் செய்து, சைவ உணவை மட்டும் சாப்பிடுகிற உனக்கும் பகிர்ந்தளிக்கப்படும். இங்கு நடப்பது கர்ம பரிபாலனம்" என்றார்.

இதைக் கேட்ட அடியேன் ஒரு நொடி அதிர்ந்து போனேன். எங்கெங்கோ பயணம் செய்து, சைவ உணவை தேடிப்போய் உண்டு, புண்ணிய தல யாத்திரைகளை செய்த வேளை, தெரியாமலேயே பாபங்களை சேர்த்துக் கொண்டிருக்கலாம். அதெப்படி அவ்வளவு நுணுக்கமாக பார்த்து, இந்த காலத்தில் வாழ முடியும்? எனத்தோன்றியது. அதை கேள்வியாக்கினேன்.

"மன்னிக்கவும், அடியேனின் கேள்வியில் தவறிருந்தால். இத்தனை வளர்ந்து போய்விட்ட மனித சமூகத்துள், எவ்வளவு தூரம் இதை பார்த்து நடப்பது. சரி! அப்படியே ஒருவர் இருந்திட தீர்மானித்தாலும், பாபம் சேர்ந்த உணவா, இல்லையா என பிரித்தறிவது எவ்விதம்? நீங்கள் சொல்கிற சாத்வீக வழி, நடைமுறையில் சாத்தியமா?" என்றேன், நிதானமாக.

"நடைமுறைக்கு சாத்தியம்" என்றார் திடமாக.

என்னென்னவோ நல்ல வழிகளை ஆராய்ச்சி செய்து நடை முறைப்படுத்தி அனுபவம் பெற்றிருக்கிறார், இவர். அதனால்தான், இத்தனை திடமாக, கேள்வி முடிந்த வினாடியில், பதில் கூறுகிறார் என்று உணர்ந்தேன்.

"சரி! நம்புகிறேன்! ஆனால் அதை தெளிவு படுத்துங்களேன்!" என்றேன்.

"சித்தர்கள் மொழியில் ஒரு வாக்கியம் உண்டு. "கருவாட்டைக்கூட, கத்திரிக்காயாக மாற்றத் தெரிந்தவன், சித்தன்" என்று. அது மாயாஜாலத்தை குறிப்பதல்ல. அதை பற்றி முடிந்தால் பிறகு பார்ப்போம். "ஆசாரம்" என்கிற ஒரு வழக்கத்தை மேன்மை பொருந்திய மனிதர்கள் தொடர்வதை கேள்விப்பட்டிருக்கிறாயா?" என்றார்.

"ஆம்! இறை வழியில் செல்பவர்கள், ஒரு பொழுதும் நிலை தடுமாறாதிருப்பவர்கள் ஒரு சில முறைகளை தொடர்ந்து செல்வதை "ஆசாரமான மனிதர்கள்" என்று கூறக்கேட்டிருக்கிறேன்" என்றேன்.

"ஆ" என்றால் இறைவனை குறிக்கும். "சாரம்" என்பது "சார்ந்திருத்தலை" குறிக்கும். இறைவனை சார்ந்திருத்தல் என்பது, இறைவனின் மன எண்ணப்படி, இறைவனாகவே வாழுகிற ஒரு முறை. எப்படி வாழ்ந்தால் இறைவனுக்கு பிடிக்கும் என்று தேடி கண்டுபிடித்து, அதன் படி வாழ்வதே "ஆசார முறை" ஆகும். அப்படியாயின், எந்த உயிருக்கும் ஒரு பங்கமும் செய்யாமல் வாழ்வது கூட ஒரு ஆசார முறைதான், இல்லையா."

"ஆமாம்!"

"உண்பவன், வாங்குபவன் இருந்தால் தானே, தவறு செய்பவன்/கொடுப்பவன் வளர்ந்து கொண்டே இருப்பான். உண்பவனே, தன்னை திருத்திக் கொண்டுவிட்டால், தவறு செய்பவன், திருந்தத்தானே வேண்டும்? மனிதர்கள் ஒவ்வொருவரும், தனிப்பட்ட முறையில், தீர்மானித்து, தன்னை திருத்திக் கொள்ளாதவரை, சைவம் என்று உண்பவர்கள் கூட, தவறு செய்பவரிடமிருந்து தெரிந்தோ/தெரியாமலோ பாபத்தை பங்கு போட்டுக்கொள்ளத்தான் வேண்டும், இல்லையா?" என்று நிறுத்தினார்.

"சமூகத்தை திருத்த முடியாது! தனிப்பட்ட மனிதர் திருந்தினால் அன்றி, ஒரு சமூகம் சுத்தமடையாது. சுத்தமில்லாத சமூகம், அடுத்த நல்ல தலைமுறையை எப்படி கொடுக்கும்?" என்றேன்.

"இப்பொழுது புரிந்ததா? மனிதருடன், கை சேர்த்து வாழ்ந்த சித்தர்கள் ஏன் திடீரென அவர்களை விட்டு விலகினார்கள் என்று? மனிதருடன் சேர்ந்தாலே பாவம் என்று அவர்கள் தீர்மானித்ததினால். ஆனாலும், என்றும் நம்பிக்கையை கைவிடாமல், மனிதன் என்றேனும் ஒரு நாள் உணர்ந்து திருந்துவான் என காத்திருக்கிறார்கள்" என்றார்.

சித்தன் அருள்........................ தொடரும்!