தலைகீழ் லிங்கத்தை பற்றி கூறும் முன் ஒரு சில விஷயங்களை தெரிவிக்க விரும்புகிறேன். இங்கு நடந்த கலந்துரையாடலை நீ வெளியிடும்பொழுது, வாசிக்கிற அனைவரும், இனி கூறப்போகிற விஷயத்தை அவர்கள் வாழ்வில் நடைமுறைப்படுத்த வேண்டும். இரண்டு வருடமாக, தூது அனுப்பிய பின்தான் உனக்கு சந்திக்கவே அனுமதியளித்தோம். முதலில், விரிவாக எதையும் கூற வேண்டாம் என்றுதான் நினைத்திருந்தோம். இருப்பினும், இந்த விஷயங்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்கிற உன் நல்ல எண்ணத்துக்கு மதிப்பளித்து, இத்தனை விரிவாக கூறினோம். சரி விஷயத்துக்கு வருவோம்.
சித்த மார்கத்தை தேர்ந்தெடுத்தவர்கள் அனைவரையும் "சித்த வித்யார்த்திகள்" எனத்தான் அழைப்பார்கள். இத்தனை தகவலை உன்னுடன் பகிர்ந்து கொண்டாலும், இன்னமும், நானும் ஒரு "வித்யார்த்திதான்". அப்படிப்பட்ட எண்ணம்தான் உயர்வை தரும். சாதாரண மனித வாழ்விலிருந்து, விலகி நின்று, சித்த மார்க்கத்தின் பாதையில், பயிற்சி செய்து, எண்ணங்களை தூய்மையாக்கி, ஒரு புள்ளியில் நின்று, தவத்தில் இருப்பவர்களை, பிறரின் எண்ண அலைகள் நிறையவே பாதிக்கும். அவர்கள் தவத்திற்கு, இடையூறாக இருக்கும். எல்லா மனிதர்களும், அவர்களுக்கு விதிக்கப்பட்ட கர்மாவில், எப்பொழுதேனும் ஒரு பெரியவரை சந்திக்க நேரலாம். அப்படி சந்தித்தபின், அவருடன் கலந்துரையாடியது, எண்ணங்களை பகிர்ந்து கொண்டது, நிறையவே மனதுக்கு இதமாக இருக்கும். தன்னையே மறந்து விடுவார்கள். பின்னர், அவரிடமிருந்து விடை பெற்று தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு வந்த பின், கிடைத்த வெளிச்சத்தை/ஞானத்தை தங்கள் வாழ்வில் நடைமுறைப்படுத்தி முன்னேற முயற்சிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, சொல்லித்தந்தவரையே, நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது. அப்படிப்பட்ட நினைப்பு, அவர்கள் தவத்துக்கு இடையூறாக இருக்கும். அவர்கள் செல்கிற சித்த மார்க்க வழியில் தடங்கலாக இருக்கும், அவர்களை பின்னுக்கு இழுக்கும். இந்த ஒரு காரணத்தினால்தான், சித்த மார்கத்தை ஏற்றுக்கொண்டவர்கள், எதுவும் பேசாமல், எல்லோரையும் விட்டு விலகியே இருக்கிறார்கள்.
இரண்டாவதாக, சித்த மார்க்கம் என்பது, பிற உயிர்களுக்கு துன்பம் விளைவிக்கக் கூடிய செயல்களை அறவே விலக்குகிற ஒரு வழி. பிற உயிர்களுக்கு/எந்த ஜீவனுக்கும் ஊறு விளைவிக்கக் கூடிய மனநிலை உடையவர்கள் யாரும், தாங்களாக நிரந்தரமாக திருந்தும் முன், எட்டிக் கூட பார்க்காதீர்கள். உதாரணமாக, அசைவ உணவு உண்பவர்களை கூறலாம். குருவின் சாபத்துக்கு, ஏதேனும் ஒரு ஜென்மத்தில் ஒரு குருவுக்கு பணிவிடை செய்து பரிகாரம் தேடிக்கொள்ளலாம். சித்தர்கள் சாபத்துக்கு, ஒரு பொழுதும், எத்தனை ஜென்மம் எடுத்தாலும், விமோசனம் கிடையாது. மிகுந்த ஆபத்தை விளைவிக்கக் கூடியது. குருவின் சாபத்தை இறைவன் ஜாதகம் வழி காட்டிக் கொடுத்துவிடுவான். சித்தர்கள் சாபத்தை மறைத்துவிடுவான். இறைவனுக்கு தெரியும் இருந்தும், இன்னொரு சித்தனால்தான் அதை கண்டு பிடிக்க முடியும். ஒருவழியிலும் கண்டு பிடிக்க முடியாத அப்படிப்பட்ட சாபத்தை, சாதாரண மனிதன் ஏன் பெறவேண்டும்? குருவை குளிரவைத்து பரிகாரம் தேடிக்கொள்ளலாம், குரு சாபம் விலகிவிடும். பற்று இல்லாத சித்தனை எப்படி குளிர வைக்க முடியும்? என்று விடுதலை கிடைக்கும்?
மூன்றாவதாக, சித்தர்கள், வாமாசாரத்தை (அதர்வண வேதத்தை) மருத்துவத்துக்காக மட்டும் உபயோகப்படுத்துவார்கள். அவர்களுக்கு எல்லா பிரயோகமும் கைவந்த கலை. எங்கு எப்பொழுது எதை செய்யவேண்டும் என்றாலும் கூட, இறைவனின் அனுமதியுடன்தான் செய்வார்கள். அவர்கள் இறைவனின் செல்லப் பிள்ளைகள் மட்டுமல்ல, இறைவனின் அபிமான கரங்கள். அவர்கள் வழிதான், இறைவன் இன்றும் பல அரிய திருவிளையாடல்களை, நடத்துகிறான். மந்திரவாதம், செய்வினை இவைகள் அவர்கள் முன் காணாமல் போய்விடும். மனிதர்கள், ஒரு பொழுதும் அந்த பாதைகளில் சஞ்சரிக்கவே கூடாது. இன்று வாமாசாரம் இத்தனை வளர்ந்து நிற்க, இந்த மனிதர்கள்தான் காரணம். ஒருவன் கர்மாவில் அது எழுதப்பட்டிருந்தாலும், அதை எதிர்த்து போராடி வாழவேண்டும், இறை அருளை பெறவேண்டுமே தவிர, எந்த ஒரு ஜீவனுக்கும் எதிராக அதை பிரயோகிக்கக்கூடாது.
நான்காவதாக, இறைவனே தமிழ் உருக்கொண்டிருக்கும் இந்த நாட்டில், அந்த தமிழை வைத்தே, இறை நிந்தனை நிறையவே நடக்கிறது. இறை நிந்தனை செய்பவனை விட்டு விலகி விடவேண்டும். நம் கண்கள் அதை பார்க்கும்படியோ, நம் செவிகள் அதை கேட்க்கும்படியோ வைத்திருக்கக்கூடாது. கொடுத்தால், வாங்கும் கரங்கள் இருந்தால்தான் கொடுத்தது போய் சேரும். அதுபோல், இறை நிந்தனையை கேட்டு உள்வாங்க ஒருவரும் அங்கிருக்க கூடாது. உன்னை நீயே விலக்கிவிடு, அந்த சூழ்நிலையை, மனதை விட்டு அகற்றிவிடு. நீ ஏன் ஒரு சாட்சியாய் இருக்க வேண்டும்?
இல்லை என்ற வார்த்தை எங்கள் அகராதியில், இல்லை என்பதே உண்மை. அத்தனை வாரி வழங்கித்தான், இவ்வுலகை, சித்தர்கள் கட்டி காத்து வருகிறார்கள். உன்னிடம் கொடுக்கப்பட்டதெல்லாம், உனக்காக மட்டும் என்று நினையாதே. அங்கு ஒரு சோதனையை இறைவன் உன் முன் வைக்கிறான் என்பதை கவனி.
உருவ வழிபாட்டை எதிர்த்தவர்கள் சித்தர்கள். அதே சித்தர்கள் நிறைய கோவில்களை கட்டி, இறைவனை உருவத்தில் பிரதிஷ்டை செய்ததும் உண்மை. ஒன்றாம் வகுப்பில் படிக்கும் குழந்தைக்கு தேவையான பாட புத்தகங்கள், அது வளர்ந்து மேல் படிப்பு படிக்கும் பொழுது காணாமல் போய்விடும். ஒன்றாம் வகுப்பு பாடம் கோவில்களில் தொடங்கும். பின்னர் படித்தது வளர்ந்து, முதிரும் பொழுது, கோவில்கள், அடுத்த தலைமுறைக்கு தேவைப்படும், வளர்ந்த உனக்கு தேவை இல்லை என்பதே உண்மை.
உள்ளவனிடம் இருப்பதெல்லாம், இறையே அவன் பாவ புண்ணியத்தை நோக்கி கொடுத்ததாகினும், அங்கும் ஒரு சோதனைதான் நடக்கிறது. உள்ளவன், இல்லாதவனை கைதூக்கி விடுகிறானா என, இறைவன் பார்க்கிறான்.
தெரியாதவன் செய்த தவறை இறைவன் மன்னிக்கலாம், எல்லாம் அறிந்தவன் செய்தால், மன்னிப்பே கிடையாது, தண்டனை உடனேயே.
உனக்குள்ளேயே, உன் அனைத்து கேள்விகளுக்கும் பதில் உண்டு. தேடு, அவை கிடைக்கும், தொலைந்து போகமாட்டீர்கள்.
அந்த பெரியவர், வேகமாக அறிவுரைகளை அடுக்கி கொண்டு போகவே, ஆச்சரியத்துடன் கவனித்துக் கொண்டிருந்தேன்.
சுருக்கமாக சொல்வதில் எல்லாம், மிக உயர்ந்த, விரிவான சித்த மார்க அறிவுரைகள் இருந்ததுதான், என்னை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது.
அதை உணர்ந்த பெரியவர், "கடுகு சிறுத்தால் ; காரம் போகுமோ" என்று புன்னகைத்தபடியே ஒரு இடைவேளை விட்டார்.
சித்தன் அருள்................. தொடரும்!