​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 26 April 2018

சித்தன் அருள் - 754 - சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்!


[வணக்கம் அகத்தியர் அடியவர்களே! இந்த தொடரில் தெரிவிப்பதெல்லாம், சித்த மார்கத்தில் சிறந்து விளங்குகின்ற, அனுபவத்தால் பழுத்த பெரியவர்களின் வாக்கு! யார் மனதையும் திருப்திப்படுத்துகிற அளவுக்கு, அடியேனால், எழுத முடியும் என்று தோன்றவில்லை. நம்முள் பல கேள்விகள் இருக்கலாம். எல்லா கேள்விகளுக்கும், நாம் விரும்புவதுபோல் பதில் இருக்கும் என்று அடியேன் நம்பவில்லை. உரைத்த உண்மையை அது போல் தெரிவிப்பது மட்டும் தான் அடியேனின் வேலை. இங்கு கூறுபவைகளை, நடை முறைப்படுத்திக் கொள்ளுங்கள் என்று யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. குளத்தின் ஆழத்தை புரிந்து கொள்ள கரையிலிருந்தால் முடியாது. நீரினுள் இறங்கித்தான், அவரவர் உணரவேண்டும். அதற்கு, முதலில், "அகம்பாவம்" என்கிற ஆடையை கரையில் கழட்டி வைத்து, இறங்கி, ஆழம் அறிந்தபின், "அக்கரை" ஏறும் பொழுது, கௌபீனம் கூட வேண்டாம் என தோன்றும். அப்படித் தோன்றினால், அந்த ஆத்மா உணர்ந்துவிட்டது என்று அர்த்தம். இனி, இந்த வார தொடருக்கு செல்வோம்.]

"இந்த உடல் பஞ்ச பூதங்களால் ஆக்கப்பட்டது தானே! அப்படியிருக்க, பஞ்ச பூதங்கள் துணையின்றி ஒரு பிரார்த்தனையை சமர்ப்பிக்க முடியுமா? அனைத்திலும் அந்த பஞ்ச பூதங்களின் குணம் என்னவோ அதன் படித்தானே பிரார்த்தனையும் அமையும். உதாரணமாக இங்கிருப்பவர் பிரார்த்தனை உடன் பலனளிக்கும், வெளி நாட்டில் இருந்தால் எந்த கர்மா செய்தாலும் பலன் கிடைப்பதில்லை என பெரியவர்கள் கூறுவதின் அர்த்தம் என்னவோ?

நீ பிரார்த்தனையை கூறுகிறாயா? அல்லது கர்மா செய்வதை கூறுகிறாயா?

இரண்டும் வேறாகினும், ஒன்றுக்கொன்று தொடர்புள்ளது தானே!

ஆம்! இரண்டும் வேறு வேறு தான். ஆயினும் ஒன்று இல்லாமல் மற்றொன்று இல்லை. உன் கேள்வி புரிகிறது. பாரத கண்டத்தை கர்ம பூமி என்கிறார்கள். அங்கு செய்யப்படும் கர்மாக்கள், பிரார்த்தனைகள் எளிதில், விரைவில் நிறைவேறிவிடும். இந்த வித்யாசத்தோடு, ஏன் இறைவன் படைத்தான் என்று கேட்க வருகிறாய்! அப்படித்தானே!

அந்த படைப்பு ஒரு தெய்வ ரகசியம். ஏன், பாரத கண்டத்தை "கர்ம பூமி" என இறைவன் வரையறுத்து, மிச்ச இடங்களை போக பூமி என்று பிரித்தாளுகிறான் என பலருக்கும் புரியவில்லை. ஒரு வீடு கட்டினால், மனிதன், வாசல், திண்ணை, நடு அறை, மாடி, பின்புறம் என பல இடங்களாக பிரித்துக் கொள்கிறான்? அவன் வசதிக்காக, மேலும் சொல்லப்போனால், சமூகம் ஒப்புக்கொண்ட ஒரு முறை. அல்லவா. ஒரே கல் தான், ஒன்று படியாகிறது, இன்னொன்று தெய்வம் குடிகொள்ளும் சிலையாகிறது. ஏன் என்று, அந்த சிற்பியிடம் கேட்டால் என்ன சொல்வான். அது சிலைவடிக்கும், பக்குவம் கொண்டது. ஒன்று போதும், இன்னொன்று பக்குவம் இருப்பினும் படியாகட்டுமே என்று தீர்மானித்தேன், என்பான். அது போல், இறைவன் தேர்ந்தெடுத்த இடங்கள், ஒவ்வொரு குறிப்பிட்ட பக்குவம் உடையது. தெரிவு செய்வது, இறைவன் உரிமை. அதில் கேள்வி கேட்க்கும் உரிமை நமக்கில்லை, என்பதே உண்மை. இருப்பினும், மனிதனுக்கு சிந்திக்கும் அறிவு, கேள்வி கேட்க்கும் உரிமை இருக்கும் வரை, இந்த கேள்விகள் இருந்து கொண்டுதான் இருக்கும். இப்போதைக்கு, இந்த விஷயத்தில், இது வரை தெரிந்து கொண்டால் போதும்.

பிரார்த்தனையை சமர்ப்பிக்க கோவில்கள், மகான்களின் சமாதிகள், பல புண்ணிய இடங்கள் இருக்கிறது. எந்த அளவுக்கு நம் பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன, என எப்படி புரிந்து கொள்வது?

"தனிப்பட்ட வாழ்வின், பிரார்த்தனைகள் என்றால், அதை புரிந்து கொள்ள காலங்கள் ஆகும். பிறருக்கென என்றால், ஒரு சில வேளை உடனேயே நம் கண் முன் நடப்பதை காணலாம். இதிலிருந்தே, எதற்கு, இறைவன் முக்கியத்துவம் கொடுத்து, உன்னை வழி நடத்துகிறான் என்று உணரலாம். பிரார்த்தனையை, மிக சிறந்த விஷயம் எனக் கூறக் காரணமே, பிறருக்கு பிரார்த்திக்கும் நிலைமையில், ஒரு மனிதன் தன் தேவைகளை மறக்கிறான். அந்த தன்னை மறந்த நிலையில், இறைவனே இறங்கி வந்து அவன் தேவைகளை பூர்த்தி செய்து விடுவான். லோகம் க்ஷேமமாக இருக்கட்டும் என பிரார்த்திக்கிற பொழுது, அந்த பன்மையான பரந்த நிலையில், நீயும் இந்த உலகத்தில்தானே இருக்கிறாய். உன் தர்மத்துக்கு உட்பட்ட பிரார்த்தனைகளும், காலப்போக்கில் நிறைவேற்றப் படும்.

ஒரு விஷயத்தை கூறுகிறேன். சரியாக புரிந்து கொள். கர்ம பாரத்தை குறைத்துக் கொள்ளத்தான் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும். ஒரு மனிதனுக்கு எத்தனையோ உடல்கள் உள்ளது. இனி உள்ள ஜென்மங்களுக்கான சூக்ஷும உடல்கள் அனைத்தும் தயாராக உள்ளது. இங்கு நாம் பார்க்கும் பௌதீக, பஞ்ச பூத உடலுக்கு "ஸ்தூல" உடல் என்று பெயர். பஞ்ச பூத கலப்பில்லாத உடல்கள் அதனதன் இடத்தில் உள்ளது. இந்த உடலால் செய்யப்படுகிற விஷயங்களின் கர்ம பலனுக்குண்டான நிகழ்வை, இனி எந்த ஜென்மத்தில் அந்த ஒருவன்/ஒருவள் அனுபவிக்க வேண்டும் என இறைவன் தீர்மானித்து அந்தந்த சூக்ஷும உடலில், பதித்து விடுவார். நல்லது செய்தால் நல்ல பலன், தீயது செய்தால், தீய பலன். மறுபடியும், மறுபடியும் பிறவித் தளை. இது எதற்கு என்று மனிதன் யோசிப்பதில்லை. இந்த பிறவித்தளையிலிருந்து விடு பட என்ன செய்ய வேண்டும் எனக்கூட மனிதன் யோசிப்பதில்லை. நல்லது செய்தாலும், தீயது செய்யாமல் இருக்க வேண்டும். நன்மை, தீமை போன்றவற்றின் கர்ம பலனை இறைவனிடமே சமர்ப்பித்து விடவேண்டும். "எனக்கு நன்மையையும் வேண்டாம்/ தீமையும் வேண்டாம், இறைவா நீயே அனைத்தையும் எடுத்துக்கொள்" என்று வேண்டிக்கொள்ளவேண்டும். அவனிடமே, கொடுத்துவிடவேண்டும். இதை எத்தனை பேர் செய்கிறார்கள் என கவனித்துப் பார். அப்போது, நமக்கென காத்திருக்கும் உடல்கள் என்னவாகும் என்ற யோசனை வரும். என்ன செய்தால், அந்த உடல்களையும் தாரை வார்த்துக் கொடுத்து, பிறவித்தளையை விட்டு வெளியே வரமுடியும்? என்று யோசிப்பாய். அதற்கும் விடை, மிக எளிய ஆத்மார்த்தமான பிரார்த்தனையை இறைவனிடம் வைத்தாலே போதும்! அனைத்தையும் கழித்து விடலாம், எனக் கூறி நிறுத்தினார்.

பிரார்த்தனை வழி உடலை தாரை வார்த்து, பிறவித்தளை விலகி இறைவனோடு கலந்துவிடலாமா? தாங்கள் கூறுவது ஆச்சரியமாக இருக்கிறது, என்றேன்.

இந்த மாதிரி, எத்தனையோ எளிய வழிகள், சித்த மார்கத்தில் எங்கும் பரவிக் கிடக்கிறது. அதை புரிந்து கொள்ளத்தான், யாருக்கும் மனம் இல்லை! நேரம் இல்லை, என்றார்.

சித்தன் அருள்.......................... தொடரும்!



Thursday, 19 April 2018

சித்தன் அருள் - 753 - சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்!


நாம் கண்டுகொள்ள தவறுகிற எளிய விஷயங்கள் இவ்வுலகில் எத்தனையோ கோடி உண்டு. எப்படியெல்லாம் ஒரு விஷயத்தை நாம் அணுகுகிறோமோ, அதற்கு ஏற்றார் போல் நடக்கும் விஷயங்கள், விஷயங்களின் முகம் மாறுவதை நாம் காணலாம். சற்று முன் கூறினேன், பிரார்த்தனை என்பது இறைவன் மனிதனுக்கு அளித்த வரம், அதன் வழி தன் கர்மாவை கழித்து, உடலை தூய்மையாக்கி, ஆத்மாவை உயர் நிலைக்கு அழைத்து செல்ல ஒரு மனிதன் உபயோகப் படுத்திக் கொள்ளலாம் என. ஏன், இதே பிரார்த்தனையை, இறைவன் ஒருவனுக்கு கொடுக்கிற தண்டனையாக கூட எடுத்துக் கொள்ளலாம். இல்லையா? எனக்கூறி ஒரு இடைவெளி விட்டார்.

ஏதோ ஒன்று புரிகிற மாதிரி இருந்தது. தெளிவாக இல்லாததால் பதில் கூறாமல் அவர் தொடரட்டும் என்று காத்திருந்தேன்.

எத்தனையோ ஜென்மமாய் ஒவ்வொரு ஆத்மாவும் கரையேறி தன்னை வந்து அடையட்டும் என்று விரும்பி, பல சூழ்நிலைகளை கொடுத்து, அங்கேயே பிரார்த்திக்க தொடங்குகிறானா? என்று இறை காத்திருந்து பார்த்து, அது நடக்காமல் போகவே, மறுபடியும் பரீட்ச்சை வைத்து தேர்வடைகிறானா என்று பார்க்கிறது. பள்ளிக்கூடத்தில் வாத்தியார் 100 முறை எழுது என்று தண்டனை கொடுப்பது போல், இறையும். இன்னும் ஒரு முறை எழுது என ஜென்மத்தை கொடுத்து காத்திருக்கிறது. இனி ஒரு ஜென்மம் என்பது எவரும் விரும்பாதது தானே. தேர்வில் வென்றால் தானே கைலாச வாசம்/வைகுண்ட வாசம்.

சரி! நீ கேட்ட விஷயத்துக்கு வருவோம். உன் கண் முன் விரிந்த, உனக்கு புரிந்த பிரார்த்தனை பண்ண வேண்டிய சூழ் நிலைகளை, நீ கவனித்த படியே கூறு, என்று கேள்வியை அடியேனிடம் திருப்பி போட்டார்.

சற்று நேரம் யோசித்து, முன் ஜாக்கிரதையுடன் சொல்லத் தொடங்கினேன்.

அடியேன் கூறுவது சரியா, தவறா என்று தெரியவில்லை. இருந்தும் கூறுகிறேன்.

உடல் நலக்குறைவால் வாடுபவர்கள், வேறு வழியின்றி உயிர் வாழ யாசகம் செய்பவர்கள், பசியால் வாடுபவர்கள், குடும்ப பாரத்துடன் அதன் பிரச்சினைகளை சுமப்பவர்கள், என பல மனித சூழ்நிலைகளை அடியேன் எதிர் கொண்டுள்ளேன், எனக் கூறி நிறுத்தினேன்.

சபாஷ்! அப்படியென்றால், உன் பிரார்த்தனையை மனிதர்களுடன் நிறுத்திக் கொண்டாய் அல்லவா, என ஒரு புன்சிரிப்புடன் கேட்டார்.

இந்த கலந்துரையாடல் எங்கு செல்கிறது என்று உணர்ந்த மற்ற மூவரும், சற்று சத்தமாகவே சிரித்து, அர்த்த புஷ்டியுடன் ஒருவருக்கொருவரை பார்த்துக் கொண்டனர்.

ஒருவர், "இன்னிக்கு மாட்டிண்டார்! சரியா ஆணி அடிக்கப் போறார், பெரியவர்" என கூறினார்.

"எங்களுக்குள் பெரியவர் சின்னவர்  எல்லாம் இங்கு கிடையாது. அனைவரும் சமம். அது இருக்கட்டும். மனிதனை தவிர வேறு ஒரு சூழ்நிலையும் இங்கு கிடையாதா?"

பிற உயிரினங்கள், இயற்கை, நதி, பூமி, ஆகாயம், காற்று,அக்னி, இப்படி எத்தனையோ விஷயங்களை மனிதன் உபயோகப் படுத்திக்க கொள்கிறானே, அவற்றுக்கு உயிர் கிடையாதா? ஏன், அவை பேசாது என்று நினைக்கிறாயா? 

இல்லை, அவை பேசும் மொழி மனிதனுக்கு கேட்பதில்லை, கேட்டாலும் புரியாது. புரிய வேண்டுமானால், அதெற்கென ஒரு நிலையை அடைய வேண்டும். அந்த நிலையை அடைய அவனுக்குள் ஒரு கனிவு எப்பொழுதும் சுரந்து கொண்டே இருக்க வேண்டும். அந்த கனிவு, வற்றாத ஜீவ நதியாக எல்லாவற்றையும் தழுவும் பொழுது, அவன் மாறும்பொழுது, அனைத்தும் கேட்கும், புரிந்து கொள்ள முடியும்.  ஆனால் மனிதனுக்கு எங்கே நேரம் இருக்கிறது? தன் சுய ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள, எதையும் அழித்து, எதையும் கீழடக்கி, தனதாக்கி கொள்ளத்தானே நினைக்கிறான். இதுதான் நான் முதலில் கூறிய 95%. இங்கிருக்கும் நாம் ஐந்து பேரும் 5% என்று ஒரு உதாரணத்துக்காக வைத்துக் கொண்டால், இந்த நிலை என்று 100% ஆகிறதோ அன்று 95% வென்று விடுவோம். ஆனால் அது என்று? சித்தர்களும்/முனிவர்களும், சித்த மார்க்க யோகிகளும் இன்றும், என்றேனும் 100% ஆகி, பின்னர் அந்த 100லேயே இருந்து மனிதனை மேலே எடுத்து செல்ல காத்திருக்கின்றனர். அதற்கான முதல் படியாக பிரார்த்தனையை கூறலாம்.

நீ சொன்ன சூழ்நிலைகளுடன், இனி கூறுகிற சூழ்நிலைகளையும் சேர்த்துக்கொள். விரைவில் உன் கர்மா கரைந்துவிடும், உடல் சுத்தமாகும், ஆன்மா மேல் நிலைகளை அடையும்! ஆனால் பொறுமை தேவை. இன்று அரச மரத்தை சுற்றிவிட்டு, நாளை காலை வயிற்றை தடவி பார்க்கக்கூடாது. அவசரமும் கூடாது. இயல்பாக அந்த சூழ்நிலையாகவே எப்பொழுதும் மாறிவிடவேண்டும். ஒரு சில சூழ்நிலைகளை கூறுகிறேன்.

பயணிக்கும் பொழுது, அவசர ஊர்தி சென்றால் "இறைவா! யார் என்றறியேன்! போதும் அவர்கள் கர்ம வசத்தால் வேதனை அடைவது. ஒன்று, குணப்படுத்திவிடு, இல்லையேல், மோக்ஷத்தை கொடுத்துவிடு" என வேண்டிக்கொள். மற்றவை இறைவன் தீர்மானத்துக்கு விட்டுவிடு.

போகும் வழியில் ஏதேனும் ஒரு ஜீவன் உடலை நீத்திருந்தால் "இந்த உடலில் இருந்த ஆத்மாவுக்கு மோக்ஷத்தை கொடுத்துவிடு. போதும் மறுபடியும் பிறப்பை கொடுத்து விடாதே! உன் பாதத்தில் பிடித்து வைத்துக் கொள்!" என வேண்டிக்கொள்.

ஏதேனும் இடத்தில் உயிரினங்களை வதைத்து உணவு வியாபாரத்துக்காக வைத்திருந்தால் "இறைவா! இந்த மனிதர்களுக்கு நல்ல புத்தியை கொடு. இங்கு உயிரிழந்த அனைத்து ஆத்மாவுக்கும், இனி மறு பிறப்பை கொடுக்காதே! இவர்கள் செய்கிற தவறுகளை மன்னித்து, திருத்தி, காத்தருள்!" என வேண்டிக்கொள்.

இயற்கையை, பஞ்ச பூதங்களை அழிக்கிற சூழ்நிலையை கண்டால், "இறைவா! காப்பாற்று! மனிதர்களுக்கு நல்ல புத்தியை கொடு!" என வேண்டிக்கொள்.

மருத்துவமனையை கடந்து செல்லும் பொழுது, அனைவரையும் சீக்கிரம் குணப்படுத்தி விடு, இறைவா" என வேண்டிக்கொள்.

பேராசை படுகிற மனித சூழ்நிலையை கண்டால், "இறைவா! சீக்கிரமே நல்ல புத்தி கிடைக்கட்டும் இவர்களுக்கு" என்று வேண்டிக்கொள்.

கோவில்களுக்கு, புண்ணிய ஸ்தலங்களுக்கு, மகான் சமாதிகளுக்கு சென்றால் "லோகம் க்ஷேமமாக இருக்கட்டும்" என்று வேண்டிக்கொள்.

இப்படி, தன்னலம் கருதாமல், எப்பொழுதும், பொது நலம் கருதி பிரார்த்தனை செய்யச்செய்ய, உன் கர்மா வேகமாக கரையும், உடல், மனம் சுத்தமாகும், இந்த உலகில் மனிதனாக பிறக்க விதிக்கப் பட்ட தண்டனை காலத்தை விரைவில் கடக்கலாம், ஆத்மா வேகமாக பல நிலைகளை கடந்து மிக, மிக சுத்தமாகும். அப்படிப்பட்ட நிலையில், ஒரு சூழ்நிலையை கண்டு, "ஓம்" என மனதுள் நினைத்தாலே, உடனேயே இறைவன் அந்த பிரார்த்தனையை நிறைவேற்றி விடுவான். இதுதான் எளிய வழி, என கூறி நிறுத்தினார்.

மனிதர்கள், இந்த சூழ்நிலைகளை, இறைவன், அவர்கள் முன் கொண்டு போட்டாலும் புரிந்து கொள்வதில்லை, என்பதே நிதர்சனம்.

மற்ற மூவரும் "மிகத் தெளிவாக, இயல்பாக சித்த மார்கத்தை விவரித்தீர்கள்" என அவருக்கு புகழாரம் சூட்டினார்.

"இன்னும் கேள்வி இருக்கா?" என்பது போல் அந்த பெரியவர் அடியேனை பார்த்தார்.

"இருக்கிறது! அவற்றை நான் தெரிந்து கொள்வதற்கா மட்டுமல்ல, எத்தனையோ பேர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு உதவ வேண்டும்" என்றேன்.

"சம்மதம்! வெளியே கூறு" என்று சரியாக என் எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்டு அனுமதியை, பதிலளித்தார்.  

அடியேன் அடுத்த கேள்வியை கேட்க தயாரானேன்.

சித்தன் அருள்................... தொடரும்!

Thursday, 12 April 2018

சித்தன் அருள் - 752 - சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

மறுபடியும், உங்கள் முன் ஒரு தொகுப்பை சமர்ப்பிக்க வாய்ப்பு (அது ஒன்றுதான் இத்தனை நாட்களாக இல்லாமல் போனது) கொடுத்த குருநாதர் அகத்தியப் பெருமான், ஸ்ரீ லோபாமுத்திரை தாய் பாதங்களை வணங்கி இந்த வாரம் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

சமீபத்தில், சித்த மார்கத்தில் சிறந்து விளங்கும் ஒரு சில "வாசி யோகிகளை" சந்தித்து, மிக நீண்ட கலந்துரையாடலில் பங்கு பெரும் வாய்ப்பு கிடைத்தது. மனித வாழ்வின் அத்தனை நிகழ்வுகளுக்கும், அவர்களிடம் மிகத்தெளிவான விடை இருந்தது. அகத்தியர் அருள்வாக்கில் நிறையவே கற்ற விஷயங்களை கேள்வி கணைகளாக்கி அவர்களிடம் சமர்ப்பித்தேன். அத்தனை கேள்விகளையும் எதிர் கொண்டு அவர்கள் பதில் அளித்த விதம், பிரமிப்பாக இருந்தது. இவைதான் உண்மை! புரிந்துகொள்! என உச்சி மண்டையில் ஒரு குட்டு வைத்து வகுப்பெடுத்தனர்.

அடியேன் என்னவோ, நாம் அனைவரும்தான் "அகத்தியர் அய்யன் பைத்தியங்கள்" என்று நினைத்திருந்த நேரத்தில், "பைத்தியத்தில்" கூட பல நிலைகள் உண்டு, அதுவும் இவர்களைப்போன்றவர்கள், "மிகத் தெளிவான பைத்தியங்கள்" என்கிற நிலையை அடைந்தவர்கள், என உணர்ந்தேன்.

கலந்துரையாடல் நடந்த பொழுதே, அரிய விஷயங்களை மிக எளிதாக அவர்கள் விளக்கிய பொழுதே, "சரிதான்! நாம் புரிந்து கொண்டது ஒன்றுமில்லை, இவர்கள் நம்மை இன்று ஒரு வழி பண்ணப்போகிறார்கள்" என்றுணர்ந்து, ஒவ்வொரு தலைப்பையும் மனதுள் உருப்போட்டு, கேள்வியாக மாற்றி அவர்கள் முன் சமர்ப்பித்தேன். வந்த பதில்/சரியான வழி காட்டுதலை ஒவ்வொன்றாக (வாரம் ஒரு தலைப்பாக) சித்தன் அருளில் தருகிறேன்.

இந்த வார தலைப்பு "பிரார்த்தனை"

அடியேனின் கேள்வி: "அய்யா, அகத்தியப் பெருமான் "பிரார்த்தனையை" விட மிகச்சிறந்த, உயர்வான விஷயம் இந்த உலகில் இல்லை" என்று உரைத்துள்ளார். இதை விரிவாக கூறுங்களேன்!" என்றேன்.

அவர்கள் அனைவரின் பதிலையும் ஒன்று சேர்த்துள்ளேன்.

"இறைவன், ஒரு மனிதன் தன்னை, தன் கர்மாவை சுத்தப்படுத்திக் கொள்வதற்காக அளித்த வரம்தான் "பிரார்த்தனை". இதை இரு வகையாக பிரிக்கலாம். 1.பிரார்த்தனை - தனக்காக; 2. பிரார்த்தனை - பிற ஆத்மாக்களுக்காக. இந்த கலியுகத்தில், 95% பேரும் தனக்காக வேண்டித்தான் பிரார்த்திக்கிறார்கள். மீதி 5% பேர்கள்தான் சித்தர்கள் சொன்ன பிரார்த்தனையை புரிந்து கொண்டு, அதன் படி செய்கிறார்கள். இப்படி, ஒரு மிகப் பெரிய ஒரு குறை இருக்க, இரண்டாவது குழுவில் இருக்கிற மனிதர்களை மட்டும் கூட்டு சேர்த்துக் கொண்டு, எப்படியப்பா இந்த உலகை காப்பது. இன்று இங்கு நடக்கும் அத்தனை துர் நிகழ்ச்சிகளுக்கும் காரணம், மனிதனின் பேராசை. சரி அதை விடு, இறைவன் பார்த்துக்கொள்வார்.

பிரார்த்தனை எப்படி இருக்கவேண்டும்? மிக இயல்பாக, எளிதாக, ஒரு குழந்தை தன் தகப்பனிடம் தனக்கு பிடித்த இனிப்பை கேட்பது போல், (குழந்தைக்கு தெரியும், தன் தகப்பனிடம் உரிமை இருக்கிறது என்று) பற்றின்றி, தனது உறவாக இருந்தாலும், "இவர்கள் அனைவரும் உன் குழந்தைகள், கர்மபலனால் உறவாக, நட்பாக பிறவி எடுத்துள்ளார்கள்" என ஒரு முகமறியாத ஆத்மாவுக்கு வேண்டுவதுபோல், உறவாக இருந்தாலும், வேண்டிக்கொள்ளவேண்டும். மிக  சிரமமான நிலையில் இருப்பவர்களுக்கு வேண்டிக்கொள்கிற பொழுது, "எது அந்த ஆத்மாவுக்கு நல்லது என்று உனக்கு தோன்றுகிறதோ, அதை செய், அதையும் உடனேயே செய்" என வேண்டிக்கொள்ள வேண்டும்.

பிறருக்காக சமர்ப்பிக்கப்படும் பிரார்த்தனையினால், ஒருவன் தன் கர்மாவை கரைத்துக்கொள்கிறான், ஆத்மாவை சுத்தப்படுத்திக் கொள்கிறான், உயர் நிலையை நோக்கி நடக்கத் தொடங்குகிறான். அந்த ஒருவனின் பிரார்த்தனை நாள் செல்லச் செல்ல உடனேயே பலனளிக்கத் தொடங்கிவிடும். இந்த நிலைக்கு ஒரு ஆத்மா முன்னேறுவதற்கு தினசரி வாழ்க்கையிலேயே இறைவன் எல்லோருக்கும் வாய்ப்பளிக்கிறான். ஆனால், ஆரறிவு பெற்றவன் நான் என்று வாழ்கிற மனிதன் அந்த வாய்ப்புகளை புரிந்து கொள்வதில்லை/பிடித்துக் கொள்வதில்லை. உயர்ந்த நிலையை அடைகிற வாய்ப்பை இழப்பது மனிதர்கள், இத்தனை தெரிவித்தும் புரிந்து கொள்ளாததினால், வருத்தப்படுவது சித்தர்களும்/இறைவனும்.

கேள்வி: தினசரி வாழ்க்கையில் கோவில்களில், புண்ணிய ஸ்தலங்களில் பிரார்த்தனைகள் நடந்து கொண்டு தானே இருக்கிறது. ஏதோ மனிதன் அவனுக்கு தெரிந்ததை இறைவனுக்கு செய்கிறானே? அது போதாதா?

பதில்: நல்ல கேள்வி. மிகுந்த தாகத்தில் இருப்பவனுக்கு, ஒரு சொட்டு நீர் எப்படி போதவில்லையோ, அது போல் மனிதர்கள் செய்து கூட்டுகிற பாபங்களை கரைக்க போதுமான பிரார்த்தனைகள் இல்லை. 5% எப்படி 95% கடந்து முன்னேறும்?

உண்மைதான். தினமும், பிரார்த்தனையை இறைவனிடம் வைக்க என்ன செய்ய வேண்டும்? அது எப்படி இருக்க வேண்டும்? அப்படி சமர்ப்பிக்கப் பட்ட பிரார்த்தனைகள் எப்படி ஒரு ஆத்மாவை சுத்தம் பண்ணும்? சற்று தெளிவாக கூறுங்களேன் என்றேன்.

பதில்: இதுவும் நல்ல கேள்விதான்! இருப்பினும் ஒன்றை கேட்க விட்டுவிட்டாய். அது என்ன என்று யோசி, பார்ப்போம்.

சற்று நேர அவகாசம் கொடுத்தார்கள். எத்தனை யோசித்தும் என்ன விட்டு போனது என்று அடியேன் சிற்றறிவுக்கு புரியவில்லை.

"தெரியவில்லையே!" என்றேன்.

"தினமுமே இறைவன் பிற ஆன்மாக்களுக்காக பிரார்த்திக்க பல வாய்ப்புகளை தருகிறான்" என்றேனே! அந்த வாய்ப்புகளை, அனைத்தும் இல்லையென்றால், ஒரு சிலவற்றவையாவது உதாரணம் காட்ட, கேட்டிருக்கலாமே!' என்றார் ஒரு பெரியவர்.

"அட! ஆமாம்! இதை யோசிக்கவே இல்லையே!' என்று வெட்கி தலை குனிந்தேன்.

பின்னர் சுதாகரித்து "அதையும் சேர்த்தே கூறிவிடுங்களேன்" என்று பணிய,

அவர் விவரிக்கலானார். மற்றவர்கள் கூர்மையாக அவரையும், அவர் கூறுவதையும் கவனிக்கத் தொடங்கினர்.

அடியேனும்!

சித்தன் அருள்............ தொடரும்!